அத்தியாயம் 01
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே… அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே…
தனியார் பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இருக்கையின் முன்னிருந்த கம்பியில் கை வைத்து தலை சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த இளமதி மெல்ல உறக்கம் கலைய எழுந்தாள்.
பேருந்தில் இருந்த குட்டி தொலைக்காட்சியில் நவரச நாயகன் கார்த்திக் இரு கைகளை விரித்து ஆரஞ்சு நிற சட்டையில் பாடல் பாடிக் கொண்டிருப்பதை கண்டதும் அவள் இதழ்களில் தானாக புன்னகை பூத்தது.
பாடலில் வரும் காட்சிகள் போல் வயல்வெளி பேருந்தின் ஜன்னல் வெளியே தெரிய ரசனையோடு பார்க்கத் தொடங்கினாள்.
இன்னும் சற்று நேரத்தில் சூரியன் தன் பணியை ஆரம்பிக்க வந்துவிடுவார் என்று தெரிந்ததால் குளிர் காற்று மெல்ல குறைந்தது.
“எழுந்துட்டியா பாப்பா? குடிக்க ஏதாவது வேண்டுமா?” என்று அவள் அருகே அமர்ந்திருந்த பொன்னம்மா கேட்க, இல்லை என்று தலையசைத்தவள்,
“எனக்கு ஒன்னும் வேணாம். இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க. நைட்டு உங்க மேல படுத்துத் தூங்கினதுல நீங்க தூங்கவே இல்ல” என்று அக்கறையோடு கூறினாள்.
இரவு ஜன்னலோடு ஒட்டி கொண்டிருந்தவள் உறக்கத்தில் பல முறை பொன்னம்மாவின் தோளில் விழ இருவருக்குமே சரியாக உறங்க முடியவில்லை.
இருக்கையின் கம்பியை பிடித்துக் கொண்டு அவள் உறங்க முயற்சிக்கவும் இருவரும் தடையின்றி ஒரு மணி நேரம் நிம்மதியாக உறங்கினர்.
இன்னும் அரை மணி நேரத்தில் அவர்கள் பேருந்து பயணம் முடிவடையப் போகின்றது என்று கண்டக்டர் வந்து கூறவும் உற்சாகமடைந்தாள் இளமதி.
அவளின் பெற்றோரையும் குட்டி தம்பியையும் ஐந்து நாட்கள் கழித்துப் பார்க்கப் போகிறாள் என்பதாலா?
அது மட்டுமா அவளின் உற்சாகத்திற்கு காரணம்?
அங்கே அவளுக்காக நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் என்று அவளின் தம்பி கூறியதால் கூட இருக்கலாம்.
“அக்கா! இங்க அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, ஆதவன் அண்ணா, நில்ஸ் அத்தான்… அப்புறம் குட்டீஸ் இப்படி நிறைய பேர் இருக்காங்க.
வீட்ல எப்பவுமே நிறைய பேர் இருக்காங்க அக்கா. ஆனா அங்க நீ, நான், அம்மா, அப்பா, பொன்னம்மா மட்டும்தான். பொன்னம்மா கூட நைட்டுக்கு அவங்க பையன் வீட்டுக்குப் போய்விடுவார்கள். ஸ்கூலுக்குப் போயிட்டுச் சாயந்தரம் வீட்டுக்கு வரும்போது நீயும் நானும் மட்டும்தான் இருப்போம். வேலை முடிஞ்சுதான் அம்மா, அப்பாவும் வருவாங்க. எனக்கு அங்க வரவே புடிக்கல. நீயும் இங்க வா. இங்கே இவங்க கூடயே இருக்கலாம். எல்லாருமே ரொம்ப பாசமா இருக்காங்க” என்று அவளைப் பேசவிடாமல் தானே பேசி கைபேசியை தந்தையிடம் கொடுத்து விட்டு ஓடி இருந்தான்.
அதன் பின் அவள் அழைக்கும் நேரங்களில் எல்லாம்,
“துருவ் ஆதவன் கூட விளையாடுறான், பெரியம்மா ரூம்ல தூங்குறான், சித்தப்பா கூட கடைக்குப் போயிருக்கான், வேந்தன் கூட குளத்துக்குப் போயிருக்கான்” என்ற செய்திகள் மட்டுமே வந்தடைந்ததைத் தவிர அவள் தம்பியோடு நான்கு நாட்களாகப் பேச முடியவில்லை.
அப்படி என்ன அவர்கள் தன்னைவிடத் தன் தம்பிக்கு முக்கியமானவர்களாகப் போய்விட்டார்கள் என்ற சிறு கோபம் எழுந்தாலும், அவன் இப்படிச் சந்தோஷமாகச் சொந்தங்களோடு நேரத்தைச் செலவு செய்வது அவளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பரிட்சை முடிந்ததும் இரண்டு நாள் கழித்து ஊருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தந்தை கூறவும் சரி என்று கூறியவள், வீட்டினர் யாருக்கும் தெரியாமல் பொன்னம்மாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு இதோ அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கக் கிளம்பிவிட்டாள்.
பேருந்து நிலையத்தில் வண்டி நிற்கவும் பொன்னம்மாவோடு சேர்ந்து இறங்கியவள் காலக்கடன்களை முடித்துவிட்டுப் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்றாள்.
ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் விதம் விதமாகத் தங்களின் ஆட்டோவில் ஏறுவதற்காகப் ‘பாப்பா, கண்ணு’ என்று இளமதியையும் ‘அம்மா’ என்று பொன்னம்மாவையும் அழைக்க,
ஒரு வழியாக ஒரு ஆட்டோவில் பெட்டியை வைத்தவள் விலாசத்தைக் கூறி கட்டணத்தைக் கேட்டாள்.
“500 ரூபாய் மா” என்றான் ஆட்டோக்காரன்.
கைபேசியில் விலாசத்துக்கும் பேருந்து நிலையத்துக்கும் இருக்கும் தூரத்தைப் பார்க்க இரண்டு கிலோமீட்டர் என்று காட்டியது.
இளமதி சின்னப் பெண், பொன்னம்மா வயதானவர் என்பதால் இளிச்சவாயாக (ஏமாறக்கூடியவர்களாக) எண்ணிய ஆட்டோக்காரன் கட்டணத்தை அதிகமாகக் கூறி இருந்தான்.
ஆட்டோவில் ஏற்றிய பெட்டியைத் தானே இறக்கியவள் நகரப் போக,
“ஹேய் என்ன நினைச்சுட்டு இருக்க? நீ பாட்டுக்கு வண்டியில இருக்க பெட்டியை இறக்குற? சவாரி வரட்டியும் பரவால காசு கொடுத்திட்டுப் போ…” என்று ஒருமையிலும் அகங்காரமாகவும் பேசினான்.
அவனின் பேச்சில் பயந்த பொன்னம்மா, “கேட்ட காசைக் கொடுத்திட்டு வா பாப்பா” என்று கூறினார்.
அவரைப் பார்த்துப் புன்னகையோடு, “அவனைப் பார்த்துப் பயந்துட்டீங்களா பொன்னம்மா?”
“பயம் தான்… அவனைப் பார்த்து இல்லை. நீ என்ன செய்யப் போறியோன்னு தான் பாப்பா அப்படிச் சொன்னேன்.”
அவர்களின் உரையாடலில் கடுப்பானவன்,
“பத்திரமா வீடு போய் சேர வேணாமா? இப்ப துட்டைக் கொடுத்துட்டுக் கெளம்பு” என்றான் ஆட்டோக்காரன்.
பொன்னம்மாவோ மனதுக்குள், ‘உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லடா தம்பி’ என்று கூறிக்கொண்டார்.
பொன்னம்மாவைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தவள் ஆட்டோக்காரனிடம் திரும்பி, “எவ்வளோ கேட்ட?” என்றாள்.
”500 ரூபாய்” என்று ஐந்து விரல்களை மடக்கிக் கூறினான்.
நேருக்கு நேராக அவனைப் பார்த்து, “கொடுக்க முடியாது, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” எனத் தைரியமாகக் கூறினாள்.
இளமதி நகரும் முன் அவளின் கையை இறுக்கிப் பிடித்தவன்,
“உனக்கெல்லாம் ஒழுங்கா சொன்னா புரியாது போல” என்று கூறியவன் அவளைத் தவறான நோக்கத்தில் நெருங்க முயற்சித்தான்.
எதிர்பாராத விதமாக அவனின் காலில் ஓங்கி மிதித்தவள் கண் சிமிட்டும் நேரத்திற்குள் தன்முன் அவனை மண்டியிட வைத்தாள்.
எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையம் சலசலப்பாக மாறி இருந்தது.
தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் நெருங்கி வந்து என்ன நடக்கிறது என்று பார்க்கத் தொடங்கினர்.
பொன்னம்மா சூட்கேஸ் பெட்டியையும் பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டு ஆட்டோக்காரனை ‘உனக்கு இது தேவையா?’ என்பது போல் பார்த்தார்.
ஐந்தரை அடிக்குச் சற்று உயரமாகத் தெரிந்தாலும் பார்ப்பதற்குப் பாடசாலை படிக்கும் மாணவி போல் இருப்பவளுக்கு இத்தனை பலம் இருக்கும் என்று அவனுமே எதிர்பார்க்கவில்லை.
அவள் ஓங்கி குத்தியதில் உதடு வெடித்துக் குருதி சொட்ட நின்றவனுக்கு உதவக் கூட யாரும் வரவில்லை.
இளமதி விழிகளே ஆயிரம் கதைகள் பேசும். அதை மேலும் அழகு சேர்ப்பதற்காகப் பேருந்தில் வந்து இறங்கியதுமே ஓய்வறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கண்களுக்கு மை தீட்டி இருந்தாள்.
சிறிது நேரத்திற்கு முன்பு அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் கூட இப்பொழுது அவள் பார்வை தங்கள் மேல் திரும்பினால் என்ன ஆகுமோ என்பது போல் ஓடி ஒளிந்தனர்.
கவனத்தைத் தன்முன் நின்று கொண்டிருந்தவனின் பக்கம் திருப்பியவள் அவனின் காக்கி சட்டையை இறுக்கிப் பிடித்து, “உன்னைச் சும்மா விடப் போறதில்ல” எனக் கூறியவள் அவனை அடிப்பதற்காகக் கையை நீட்டிவிட்டாள்.
ஆட்டோக்காரன் கூடக் கண்களைப் பயத்தில் மூடி விட, சில நொடிகள் கடந்தும் அவளின் கை அவன் கன்னத்தைத் தீண்டவில்லை.
பயத்தோடு கண்களைத் திறந்து பார்த்தவன் அவளின் கரத்தை வேறு யாரோ பிடித்திருப்பதைப் பார்த்து நிம்மதியில் மூச்சு விட்டு,
இதுதான் சந்தர்ப்பம் என வண்டியை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்.
யார் என்றே தெரியாத ஒருவன் தன் கரத்தைப் பிடித்ததும்,
“எவ்வளவு தைரியம் இருந்தா என் கையை பிடிச்சிருப்ப?” என்று கோபத்தோடு அவனைப் பார்த்து கேட்டாள்.
அவளை அசராமல் ஒரு பார்வை பார்த்தவன்,
ஆட்டோக்காரன் கிளம்பியதும் பிடித்திருந்த அவளின் கையை விட்டுவிட்டு, வந்த வேலை முடிந்தது போலக் கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற திசையைப் பார்த்துக் கோபத்தில் வாய்க்கு வந்ததெல்லாம் கூறி அவனைத் திட்டினாள்.
செவிடன் காதில் ஊதிய சங்கு போல அவள் கத்துவது கேட்டும் கேட்காதது போல நடந்து சென்றான்.
இவ்வளவு நேரம் தன்னை பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் இப்பொழுது நக்கலாகச் சிரிப்பது போல் இளமதிக்குத் தோன்ற,
கோபம் எல்லாம் அந்தப் புதியவன் மீது திரும்ப, “எப்படியும் ஒரு மாசம் இந்த ஊருலதான இருக்கப் போறேன். அதுக்குள்ள உன்னைச் சும்மா விடமாட்டேன்” என மனதுக்குள் கூறியவள் கைப்பையையும் சூட்கேஸ் பெட்டியையும் இழுத்துக் கொண்டு பொன்னம்மாவோடு பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறினாள்.
ரோட்டில் ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு தந்தையின் பூர்விக வீட்டின் வாசலை அடைந்தும் ஆட்டோக்காரனையும் அந்தப் புதியவனையும் திட்டுவதை இளமதி நிறுத்தவில்லை.
பொன்னம்மா, “எனக்கென்னமோ அந்தத் தம்பி நல்ல தம்பியா தான் தெரியுதுமா. சண்ட பெருசாகக் கூடாதுன்னுதான் அப்படிப் பண்ண மாதிரி தெரியுது” என்று கூறினார்.
“அப்போ நமக்கு பிரச்சனை நடக்கும்போது அவன் வேடிக்கை பார்த்திட்டு இருந்தான்னு சொல்றீங்களா பொன்னம்மா?” என்றவள் வண்டிக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்தவள் பொன்னம்மாவிடம்,
“பஸ் ஸ்டாண்ட்ல என்ன நடந்துச்சுன்னு அப்பாகிட்ட சொல்லக்கூடாது. பிராமிஸ்?” என்று சத்தியம் செய்யச் சொல்லிக் கையை நீட்டினாள்.
இப்படி ஒரு பல சத்தியங்கள் கேட்டிருக்கிறாள் என்பதால் அதோடு சேர்த்து இதையும் ஒரு சத்தியமாகச் செய்தார்.
வீட்டில் கதவு திறந்து இருக்கவும் அவள் உள்ளே எட்டிப் பார்க்க, மகளைக் கண்ட மீரா, “நீ எப்போ வந்த?” என்று கூறி வாசலுக்கு விரைந்தார்.
அவரோடு சேர்ந்து வந்த கவிதா, “அக்கா இது யாரு?” என்று மீராவிடம் கேட்டார்.
“இதுதான் இளமதி” அவர் சொல்ல, மைக் இல்லாத குறையாக அனைவருக்கும் கேட்கும்படியாக,
“இளமதி வந்துட்டா வாங்க!” என்று வாசலில் இருந்து கொண்டு சத்தம் போட்டார்.
படையாகத் திரண்டு வருவது போல் வீட்டுக்குள் அறைகளிலிருந்து பத்து இருபது பேர் வர,
“இவ்வளவு சொந்தமா?” என வாயைப் பிளந்தாள்.
அவள் அருகே வந்த கவிதா, “இன்னும் நிறைய பேர் இருக்காங்க. மாமா, வேந்தன் ரெண்டு பேரும் வீட்ல இல்ல” என்று கூறினார்.
அதற்குள் அவர்களை நெருங்கி ரேவதி, “என் கண்ணே, இந்த அத்தையைப் பார்க்க வந்துட்டியா? அப்படியே எங்க அம்மா மாதிரி இருக்க” அவளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டார்.
தொடரும்…
