ஈரோடு மாவட்டத்தோட அந்த அமைதியான தெருல, காலையிலயே வெயில் கண்ணைக் கட்டுற மாதிரி அடிச்சிட்டு இருக்கு. சுத்தி இருக்கிற வீடுகள்ல எல்லாம் கோலம் போட்டு, பால்காரப் பையனோட சைக்கிள் பெல் சத்தத்தோட சுறுசுறுப்பா விடிஞ்சிருக்கு. ஆனா, அந்தப் பெரிய ஓட்டு வீட்டுக்குள்ள மட்டும் நேரமே உறைஞ்சு போன மாதிரி ஒரு அமைதி… இல்லை இல்ல, அது அமைதியல்ல, புயலுக்கு முன்னால இருக்கிற நிசப்தம்!
மணி இப்போ பத்தைத் தொட்டுடுச்சு. ஆனாலும், அந்த வீட்டுப் புள்ளைங்களுக்கு இன்னமும் தூக்கம் தெளியவே இல்லை.
சமையல் அறையிலருந்து தட்டுகளும் பாத்திரங்களும் ஒன்னோடொன்று மோதிக்கிற சத்தம் கலகலன்னு கேட்டுட்டு இருக்கு. கூடவே, ஆமினாவின் எரிச்சலான குரல் வீடு முழுக்க எதிரொலிக்குது.
“ஏய்… எந்திரிச்சு தொலைங்கடி.. மணி பத்தாகப் போகுது. இந்த காலத்துப் பொண்ணுங்களுக்கு அப்படி என்னதான் தூக்கம் வருமோ தெரியல! பெட்ல சுருண்டு படுத்துட்டாங்க. பொட்டைப் புள்ளைங்க, வெயிலடிச்சதுக்குப் அப்புறமா கண் விழிக்கிறதுதான் வேலையா போச்சு!”னு ஆமினா கத்திக்கிட்டே தன் கோபத்தை பாத்திரங்கள் மேல காட்டிட்டு இருக்காங்க.
அந்தப் பக்கத்து அறை கதவு லேசா கீச்சுன்னு சத்தத்தோட திறக்குது. சோம்பல் முறிச்சுகிட்டே, கண்களைக் கசக்கிக்கிட்டு மெதுவா வெளிய வரா ஆஸியா. அவதான் ஆமினாவோட இரண்டாவது பொண்ணு, வயது பத்தொன்பது. முகம் முழுக்க இன்னும் தூக்க கலக்கம். அவளுக்குப் பின்னாடியே தலையை வாரி விடாம, ஒரு கையால முடியை அள்ளி கோதி விட்டுக்கிட்டே வரா அஸீனா. அவதான் அந்த வீட்டுவோட மூத்த பொண்ணு, வயது இருபது. ரெண்டு பேரும் பயந்துகிட்டே கால் விரல் நுனிகளால நடந்து வராங்க.
“அய்யோ… அம்மா இன்னைக்கு எந்த மூட்ல இருக்காங்கன்னு தெரியலையேடி…”னு மெல்லிய குரல்ல ஆஸியா தன் அக்காகிட்ட முணுமுணுக்கிறா.
“வாயை மூடிட்டு வாடி ஆஸியா. ஏற்கனவே மணி பத்து ஆயிடுச்சுன்னு கத்திக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம பாடு திண்டாட்டம் தான்…”னு அஸீனா பயத்தோடயே சொல்றா.
அவங்க ஹாலுக்கு வந்ததும், அங்க சோபால கால் மேல் கால் போட்டு உக்கார்ந்து இருக்கான் அவங்களோட தம்பி பையாஸ் . அவனுக்கு வயது பதினேழு. இன்னும் முகம்கூடக் கழுவக் காணோம். கையில போனை வச்சுக்கிட்டு எதையோ நோண்டிகிட்டு இருக்கான்.
அவன் இவங்களைப் பார்த்துட்டு அலட்சியமா, “என்னக்கா… இன்னும் தூக்கம் முழிக்கலையா? அம்மா சமையல் அறையில கத்தித் தொண்டை கிழியப் போகுது. சீக்கிரமா போய் நில்லுங்க, இல்லன்னா இன்னைக்கு உங்க முதுகுல ரெண்டு விழும்!” அப்படின்னு கிண்டலாவே சொல்றான்.
“டேய் ஃபயாஸ், உனக்கு வேற வேலை இல்லையா? உக்காந்துக்கிட்டே எங்களை வச்சு செய்யாதடா…”னு ஆஸியா முறைக்கிறா.
“ஏய் ரெண்டு பேரும் என்ன அங்க குசுகுசுன்னு பேச்சு? உள்ளே வர்றதுக்கு என்ன இவ்வளவு நேரம்? மணி பத்தாகுதுங்கிற ஞாபகம் இருக்கா இல்லையா?”
சமையல் அறையிலருந்து ஆமினாவின் குரல் இவங்க மேல விழுது. மூணு பேரும் ஒரே நிமிஷத்துல வாயை அடைச்சுக்குறாங்க.
காரணம், அது ஒரு ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான, கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் குடும்பம்!
அந்த வீட்ல இருக்குற சட்டம்-திட்டங்கள் சாதாரணமானது கிடையாது. காலையில எந்த நேரத்துக்கு எந்திரிக்கணும்ங்கிறதுல ஆரம்பிச்சு, என்ன உடுத்தணும், யாரிடம் பேசணும், வெளிய எப்போ போகணும், ஏன்… எப்படி சிரிக்கணும் வரைக்கும் எல்லாவற்றிலும் ஒரு பெரிய பட்டியல் இருக்கும்.
“இதெல்லாம் ஒரு பொண்ணு பண்ற லட்சணமா? எங்க காலத்துல நாங்க சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடியே எந்திரிப்போம். ஆனா இப்போ இருக்கிறவங்க… ஹும்! போயி முகத்தைக் கழுவிட்டு வாங்க போங்க!”னு ஆமினா கோபமா கத்த, அந்தப் புள்ளைங்க ரெண்டு பேரும் தப்பிக்க வழி தேடி ஓடுறாங்க.
“அம்மா எப்ப பார்த்தாலும் இதையேதான் சொல்லுவாங்க… மூச்சு விடக்கூட முடியலடா சாமி…”னு சமையல் அறைக்குள்ள போனதும் ஆஸியா அலுத்துக்கிறா.
“அட சத்தமா பேசி தொலைக்காதடி, அப்புறம் இன்னும் ரெண்டு திட்டு எக்ஸ்ட்ரா விழும்…”னு அஸீனா அவளை அடக்குறா.
இப்படி எதுக்கெடுத்தாலும் ஒரு நீண்ட அட்வைஸ், இல்லன்னா காது கிழியற திட்டு. இதுதான் அந்த வீட்டோட அன்றாடக் காலைப் பொழுதே! சின்ன வயசுல இருந்தே இந்த அடக்குமுறைக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்துகிட்டேதான் அந்தப் புள்ளைங்க வளர்ந்து வராங்க.
சமையல் அறைக்குள் நுழைந்த ஆஸியாவும் அஸீனாவும் முகத்தைக் கழுவிவிட்டு வெளியே வருவதற்குள், ஹாலில் விறைப்பாக வந்து நின்றார் அந்த வீட்டின் எஜமானர் காஜா மைதீன். அவர்தான் அந்தக் குடும்பத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் கண்டிப்பான தந்தை!
காஜா மைதீன் பார்க்கவே ஒரு கறாரான தோற்றத்துல இருப்பாரு. ஈரோடு நகரத்துல இருக்கிற ஒரு தியேட்டர்ல மேனேஜரா வேலை பார்க்கிறார். அதுபோக, தியேட்டர் வேலை முடிந்ததும் நகரமெங்கும் சினிமா போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் ஒட்டுற வேலையும் செய்வார். வெயிலும் மழையும் பாராமல், நடுராத்திரியிலும் அடிமை வேலை மாதிரி உழைச்சாதான் அந்தக் குடும்பத்தின் அடுப்பு எரியும். இடுப்பு ஒடிய உழைக்கிற அந்த கஷ்டமான வேலையோட கோபமும், அலுப்பும் அவர் முகத்துல தெளிவாகத் தெரியும்.
வந்த உடனே சோபாவில் உட்கார்ந்த காஜா மைதீன், தன் மனைவியைப் பார்த்து உரத்த குரலில் கேட்கிறார். “என்ன ஆமினா… காலையிலயே வீடே ரெண்டா கிழிஞ்சுக்கிட்டு இருக்கு? என்னாச்சு இந்த பொட்டப் புள்ளைங்களுக்கு? மணி பத்தாகப் போகுது, இன்னும் படுக்கையைவிட்டு எந்திரிக்கலையா?”
ஆமினாவுக்கு வந்ததே கோபம். ஏற்கனவே கொதித்துப்போய் இருந்தவர், தன் கணவர் முன்னால இன்னும் சத்தமாக“நீங்க வேறங்க… இவங்களை எல்லாம் பெத்து வச்சிருக்கிற லட்சணம் இருக்கே, கேட்கவே வேண்டாம்! நீங்கதான் விடியற்காலையில எழுந்து வேலைக்கு ஓடிடுறீங்க. நான் மட்டும் என்ன இங்க ரெஸ்ட் எடுக்கிறேனா? பெத்த பிள்ளைங்களை உருப்படியா வளர்த்து வச்சிருக்கேனா பாருங்க! ராத்திரி வரைக்கும் முழிச்சுக்கிட்டு கிடந்துட்டு, காலையில பத்தைத் தாண்டினாலும் கண் விழிக்க மாட்டேங்குறாங்க. பெத்த பிள்ளையகிட்ட சொன்னா மதிக்கக் கூட மாட்டேங்குறாங்க. நீங்களே சொல்லுங்க, நீங்க பாடுபட்டு சம்பாதிச்சுப் போடுறது இவங்க தூங்கித் தின்னு கொழுக்கவா?”
ஆமினாவும் காஜா மைதீனும் சேர்ந்துக்கிட்டு அந்தப் பொண்ணுங்களை வச்சு செய்றாங்க. “உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியலையா ? அடுத்தவன் வீட்ல போய் நின்னாதான் உழைப்போட அருமை புரியும்!” அப்படின்னு காஜா மைதீன் தன் குரலை உயர்த்தித் திட்டத் தொடங்குகிறார். தந்தையின் அந்த குரலைக் கேட்டாலே அஸீனாவும் ஆஸியாவும் நடுங்கிப் போயிடுவாங்க. அந்த வீட்டுல அப்பாவோட வார்த்தையை மீறி யாருமே மூச்சுக்கூட விட முடியாது.
திட்டிகிட்டே இருந்த காஜா மைதீன், சட்டென்று தன் கைக் கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “சரி சரி, நான் பேச நேரமில்ல… வேலைக்கு நேரமாச்சு, கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியேற எழுகிறார்.
அப்போது, ஹால் மூலையில் ஒதுங்கி நின்றுகிட்டு இருந்த அவங்களோட தம்பி ஃபயாஸ், அப்பாவோடு சேர்ந்து வெளியே போகத் தயாராகுறான். அவனுக்கு வயது பதினேழுதான் ஆகிறது. ஆனால், அவனும் அப்பாவைப் போலவே அந்த வயசுக்கே உரிய சுறுசுறுப்போடு வேலைக்குப் போகணும்.
ஏன்னா, குடும்பத்தின் வறுமைச் சூழல் அப்படி! சூழ்நிலை காரணமாக ஃபயாஸை மேற்கொண்டு படிக்க வைக்க முடியல. குடும்பத்தை ஓட்ட அப்பா உடன் சேர்ந்து போஸ்டர் ஒட்டுற வேலையோட கஷ்டங்களை இளமையிலேயே சுமக்க ஆரம்பிச்சிட்டான் ஃபயாஸ்.
அந்தக் குடும்பத்தின் படிப்பு நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அந்த வீட்ல இருக்கிறவங்கள்ல அதிகமா படிச்சது மூத்த பொண்ணு அஸீனாதான். அவளால 12-வது வரைக்கும் படிக்க முடிஞ்சது. அதுக்கப்புறம் “பொம்பளைப் பிள்ளைங்களை ரொம்ப தூரம் படிக்க வைக்கக் கூடாது, ஊருல தப்பா பேசுவாங்க”னு சொல்லி படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டாங்க. இரண்டாவது பொண்ணு ஆஸியாவால 10-வது வரைக்கும் மட்டும்தான் படிக்க முடிஞ்சது. கடைக்குட்டி ஃபயாஸோ 9-வது வகுப்போட ஸ்கூலுக்குக் குட் பை சொல்லிட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டான். இவங்களை எல்லாம் படிக்க வைக்க அந்தக் குடும்பத்துக்கிட்ட பண வசதியும் இல்லை, மனசும் இல்லை!
“டேய் ஃபயாஸ்… சீக்கிரமா வண்டியை எடுடா, இன்னும் தியேட்டர் பக்கத்துல போஸ்டர் மாட்ட வேண்டியிருக்கு!” என்று கத்துகிறார் காஜா மைதீன்.
“இதோ வர்றேன்ப்பா…” என்று சொல்லிக்கொண்டே ஃபயாஸ் தன் அப்பாவைப் பின் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே ஓடுகிறான்.
அவங்க வெளியே போனதும்தான், அந்த ஹாலில் இருந்த இறுக்கமான காற்று கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்புவது போல் இருக்கிறது. அஸீனாவும் ஆஸியாவும் ஒரு நீண்ட மூச்சு விட்டுவிட்டு, அமைதியாகத் தலைகுனிந்து சமையல் அறை வேலைகளைப் பார்க்கத் தொடங்குகின்றனர்.
இந்த வறுமையும், கண்டிப்பும் நிறைந்த குடும்பத்துல பொண்ணுங்களோட எதிர்காலம் என்னவாகப் போகுது?
அடுத்தபடியா என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சிக்க தொடர்ந்து படியுங்கள் ❤️ கதையைப் படித்து உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள்..
தொடர்ந்து படித்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏼😇
