அத்தியாயம் 11
பத்து லட்சம் பண உதவி வேண்டும் என்று கேட்டு வந்தவளிடம் தன் ஆசையை கூறி பேரம் பேசினான் தீரன்..!!
அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாள் அவள்..!!
உதவியென்று கேட்டு வருபவர்களிடம், ஒன்று உதவி செய்ய முடியும் என்று கூற வேண்டும் இல்லை என்றால் இல்லை என்று சொல்லி அனுப்ப வேண்டும் அதை விட்டுவிட்டு என்ன இது கொச்சையாக இப்படி பேசுகிறான்??
பார்த்தால் படிச்சவன் மாதிரி தெரியுறான்.. என்னத்த படிச்சு கிழிச்சானோ தெரியல.. இப்படித்தான் நடந்துக்கிறதா முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கிட்ட, அதுவும் முதல் முறை பார்க்கிறோம் பேசுறோம் இப்படியா பேசுறது??!!
ச்சே, என்ன மனுஷன் இவன்?? முதல்ல இவன் மனுஷனானே தெரியலையே.. என்று மனதிற்குள் அவனை சரமாரியாக திட்டிக்கொண்டு அவனிடம் எந்த பதிலும் கூறாமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள் அவள்.
உதவி என்று கேட்டு போனவள் எதற்காக இத்தனை கோபமாக அதுவும் புயல் வேகத்தில் வெளியே செல்கிறாள்?? என்ன நடந்திருக்கும் ஒருவேளை சண்டை எதுவும் வந்துவிட்டதா தன் மகனுக்கும் அவளுக்கும் ?? என்று கண்டதையும் யோசித்துக் குழம்பினார் வசுந்தரா.
பணம் வேண்டாம் என்று ரோஷமாக வீட்டுக்கு வந்து விட்டாள்.. ஆனால் தன் தந்தையின் நிலையை யோசிக்கும் போது அவளுக்கு நெஞ்சுக்குள் திக் திக் என்றிருந்தது..!!
பணத்திற்கு என்ன செய்வது என்று கைகளை பிசைந்து கொண்டு சோகமாக இருந்தாள்..
கடனாக கூட யாரும் 10 பைசா தரும் நிலையில் இல்லை.. முதலில் கடன் கிடைக்குமா என்ற கேள்விக்குறி உண்டாகிவிட்டது இப்போது..!!
எப்படி இப்போது தன் தந்தையை காப்பாற்றுவது என்று யோசித்து யோசித்து கண்ணீர் வடித்தாள்.
ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தால், பணம் ரெடி ஆகிவிட்டதா என்னை காப்பாற்றி விடுவாயா என்று கேள்வியாக கேட்டு அவளுடைய தந்தை அவளை போட்டு நோகடித்தார்.
” பெற்ற தகப்பனை காப்பாற்றக் கூட உனக்கு துப்பு இல்ல.. அப்புறம் என்னத்த படிச்சு கிழிச்ச நீ?? நீ எல்லாம் மகளாக எனக்கு பிறக்காமல் இருந்திருந்தால் கூட நான் நல்லா இருந்திருப்பேன் என்னமோ நீ பிறந்த ராசி தான் உன்னுடைய அம்மாவும் போய் சேர்ந்துட்டா இப்ப என்னையும் கொல்ல பார்க்கிறது உன்னுடைய ராசி.. உன்னால எனக்கு எந்த நல்லதும் நடக்கவே இல்ல உன்னால செலவு தான், கடன் தான் , நஷ்டம் எனக்கு எல்லாமே.. உன்னை மகளா பெற்றதற்கு ஒரு எருமை மாடு வாங்கி மேய்ச்சியிருந்தா கூட இந்நேரம் எனக்கு லாபம் வந்திருக்கும் அந்த காசிலாவது நான் உயிர் பிழைத்திருந்திருப்பேன்”, என்று வாய்க்கு வந்தபடி பேசினார் அவர்.
அவளுடைய படிப்பு செலவு சாப்பாட்டு செலவு என்று அவர் செலவு செய்ததெல்லாம் மிகவும் குறைவு தான்.. விவரம் தெரிந்த பிறகு அவளே பார்ட் டைமாக வேலைக்கு போய் தன்னுடைய செலவுகளை தானே கவனித்துக் கொண்டாள்.. போதாத குறைக்கு தன் தந்தைக்கு ஏதாவது தேவை இருந்தால் அதையும் அவள் தீர்த்து வைத்தாள்.. அவருக்கு பணம் தேவைப்படும் பொழுதெல்லாம் இவள் தான் எடுத்து கொடுப்பாள்.
அப்படி இருக்கும் பொழுது.. கொஞ்சம் கூட நாக்கில் நரம்பில்லாமல் தன் மகளை மனசாட்சியே இல்லாமல் திட்டி தீர்த்தார் திருவேங்கடம்..!!
இன்னொரு பக்கம் டாக்டர்கள் வேறு அவளுடைய கழுத்தை நெறிக்க தொடங்கிவிட்டார்கள்..
“ஒன்று சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள், பணத்தை கட்டுங்கள்.. இல்லையா, இப்போதே டிஸ்சார்ஜ் செய்து கூட்டிட்டு போயிடுங்க அப்புறம் அவருடைய உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் கிடையாது..ஒருவேளை அவர் கொஞ்ச நாளைக்கு உயிரோடு வாழ வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த முயற்சியை எடுத்து தான் ஆகணும் அப்படி இல்லன்னா நீங்க தாராளமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்..”, என்றார் அந்த டாக்டர்.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலாகிவிட்டது அவளுடைய நிலைமை..
போதாத குறைக்கு இடையில் வேறு அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட அதற்கும் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று பில்லை தீட்டி விட்டார்கள்..
என்ன செய்வது இப்போது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.. பணம் தான் அதிகமாக செலவாகிக் கொண்டிருந்தது..
ஒன்று தன்னுடைய தந்தையை காப்பாற்றுவதற்கு கொஞ்சமாவது முயற்சி எடுக்க வேண்டும் இல்லையா டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்காவது கூட்டிட்டு போகணும்..
அப்பா கண்டபடி திட்டுவாரு.. அவர் திட்டுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும்.. நமக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது.. அவர் நம்மள பாத்துகிட்டாரோ பார்த்துக்கலையோ.. ஆனா , அவர் தானே நமக்கு அப்பா.. அவரை நாம தானே பார்த்துக்கணும் கண்டிப்பா இதுக்கு ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்தே ஆகணும் என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் தீரன் நினைவுக்கு வந்தான்.
அவன் சொல்லும் சவாலை ஏற்றுக் கொண்டு அவனிடம் பணம் வாங்குவதை விட வேறு அவமானம் எதுவும் கிடையாது.. அப்படி செய்வதற்கு பேசாமல் இறந்து போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டாள் உடனே..
இந்த பக்கம்..
சிறிது நாட்களாகவே தன் மகனின் நடவடிக்கை சரியில்லை என்பதை கேள்விப்பட்டிருந்த வசுந்தராவுக்கு தூக்கமே வருவதில்லை இப்போதெல்லாம்..
நல்ல பெண்ணாக பார்த்து அவனுக்கு மணமுடித்து வைத்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தவரின் கண்ணில் தான் மித்ரா தென்பட்டாள்.
நல்ல பெண்ணாகவும் இருக்கிறாள் தெரிந்த குடும்பம் வேறு இதைவிட வேறு என்ன வேண்டும் ??
இவனுடைய குணத்தை மாற்றி நல்வழியில் அவனை நடத்த வேண்டும் என்றால் இப்பேர்பட்ட நல்ல பெண்தான் அமைய வேண்டும் அவனுக்கு மனைவியாக என்று நினைத்துக் கொண்டவர் உறுதியுடன் தன் மகனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றார்.
“ தீரா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“ என்னம்மா??”
“ நேத்து கூட ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாளே அவ பேரு கூட மித்ரா.. அவங்க அப்பாவுக்கு சிகிச்சைக்காக 10 லட்சம் உதவி கேட்டுட்டு போனா உனக்கு ஞாபகம் இருக்கா??”
“ஆமா”
” நான் ஒரு விஷயம் யோசிச்சு வச்சிருக்கேன் நீ அதுக்கு ஒத்துக்குவியா?? அம்மா எப்பவும் உன்னோட நல்லதுக்காக தான் யோசிப்பேன் என்று உனக்கு நல்லாவே தெரியும்.. அதனால தயவு செய்து இந்த விஷயத்துக்கு நீ ஓகே சொல்லணும்.. ரொம்ப நாளா எனக்கு ஒரு ஆசை இருக்குப்பா.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் எல்லார் மாதிரி நீயும் குடும்பம் குழந்தை என்று வாழனும்னு ஆசைப்படுறேன்.. அந்த ஆசைய நீ தான் நிறைவேற்றனும்.. நல்ல பெண்ணாக பார்த்து உனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தேன்.. அந்த நேரத்தில் தான் நான் மித்ராவை பார்த்தேன் எனக்கு என்னவோ அவ உனக்கு ஏற்ற ஜோடியாக இருப்பா அப்படின்னு தோணுது.. நம்ம வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பா.. பணம் காசு அந்தஸ்து இப்படி எதையும் பார்க்காமல் குணத்தை மட்டுமே பார்த்து அவளை இந்த வீட்டுக்கு மருமகளா நாம கொண்டு வந்துட்டா நிச்சயம் நாம நல்லா இருப்போம் என்று எனக்கு தோணுது நீ என்ன நினைக்கிற தீரா?? இந்த அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவியா??”, கண்களில் ஏக்கத்தோடு தன் தாய் கேட்பதை பார்க்கும் பொழுது அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது..!!
‘ என்ன இது அம்மா அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க ?? இதெல்லாம் சரி வருமா ?? கல்யாண நினைப்பே இல்லாம நான் பாட்டுக்கு சுதந்திரமா சுத்திக்கிட்டிருக்கேன் எனக்கு கால் கட்டு போட பாக்குறாங்களே.. என்னால முடியாது அப்படின்னு முகத்தில் அடிச்சாப்புல என்னால பதில் சொல்லவும் முடியல காரணம் அம்மா இதுவரைக்கும் என்கிட்ட எதையும் வாய் திறந்து கேட்டதில்லை எதுவும் ஆசைப்பட்டது கூட கிடையாது.. முதல் முறையாக அம்மா கேட்கிற விஷயம் இதுதான்.. இதைக் கூட செய்யலன்னா எப்படி ??அதுவும் இல்லாம அம்மாவுக்கு கொஞ்ச நாளா உடம்பு வேற சரியில்ல ரொம்ப சோர்ந்து போறாங்க.. அடிக்கடி படுத்து தூங்குகிறார்கள், டாக்டரை வரவழைத்து என்ன ஏதுன்னு கேட்டா மனசு தான் சரி இல்லை அவங்களுடைய மனதிற்கு தான் நோய் அதுக்கு தகுந்த மருந்தை நீங்க தான் கொடுக்கணும்னு சொல்லிட்டு போறாங்க ஒண்ணுமே புரியல.. ஒருவேளை எனக்கு கல்யாணம் நடக்கலையேன்னு கவலைப்பட்டு அம்மா இப்படி கஷ்டப்படுறாங்களோ?? பேசாம அவங்க சொல்ற மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் என்ன?? யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அவளையே கல்யாணம் பண்ணிப்போமே.. அம்மாவோட ஆசை நிறைவேறின மாதிரியுமாச்சு, அவள் மீது நான் கொண்ட ஆசையும் நிறைவேறின மாதிரியுமாச்சு, அவளுக்கும் உதவி கிடைச்ச மாதிரியுமாச்சு, ஒரே கல்லில் மூன்று மாங்காய்.. நல்ல ஐடியா தான் பேசாம மூணு முடிச்சு போட்டு பொண்டாட்டி என்கிற அங்கீகாரத்தை கொடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்து நம்முடைய ஆசைகளை அவளுடன் தீர்த்துக் கொள்ள வேண்டியது தான்.. பத்து லட்சம் பணம் தரேன் வரியா அப்படின்னு கேட்டதுக்கு தானே கோவமா போயிட்டா.. தாலியை கட்டி மனைவியா என் கூட நீ வந்து இருந்துதான் ஆகணும்னு சொன்னா அவளால மறுக்க முடியாது , நிச்சயமா ஏத்துக்கிட்டு தானே ஆகணும்..
அதுவும் இல்லாம அவளோட அப்பாவுக்கு உடல்நலம் ரொம்ப சரியில்ல அப்படின்னு ரீசண்டா தகவல் வேற வந்துச்சு விசாரிச்ச போது..
இதுதான் சமயம்.. சரியான நேரம் பார்த்து இப்போ அவளிடம் நாம அப்ரோச் பண்ணா தான் சரியா இருக்கும்.. அதுவும் நாம அப்ரோச் பண்ணாம அம்மாவை விட்டு பேச சொல்லணும் அதுக்கப்புறம் தான் நாம பேசணும் ‘, என்று மனதிற்குள் பல திட்டங்களை தீட்டினான் தீரன்.
” சரிமா நான் ஒப்புக்கொள்கிறேன்..”, என்று அவன் கூறி விடவும் வசுந்தராவிற்கு சந்தோஷம் அருவி போல் பொங்கியது..!!
அடுத்த நாளே மித்ராவுக்கு போன் செய்து.. நேரிலேயே சென்று அவளிடம் பேசினார் வசுந்தரா.
ஆரம்பத்தில் முடியாது என்று மறுத்தவள் பிறகு அவர் கெஞ்சுதலாக பேசவும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டாள்.
அவருக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாலும் இன்னொரு பக்கம் தன் தந்தைக்கு சிகிச்சை நடக்க வேண்டும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைத்தாள்..
அவன் சொன்னது போல் இது வியாபாரம் போல் இல்லாமல் முறையாக திருமணம் செய்து வீட்டிற்கு மருமகளாக அழைத்துச் செல்கிறேன் என்று இந்த பெரிய மனுஷி வந்து பேசுகிறார்.. அப்படி இருக்கும் பொழுது முடியாது உங்க மகன் செய்த காரியம் என்னன்னு தெரியுமா என்று முகத்தில் அடித்தார் போல் கேள்வி கேட்பதற்கு ஒரு நிமிடமாகாது..
ஆனால், அப்படி கேட்டுவிட்டால் அதன் பிறகு அந்த அம்மா எவ்வளவு வருத்தப்படுவார் என்று யோசிக்கும் பொழுது அவளுக்குமே வருத்தமாக இருந்தது.. அப்படிப்பட்ட மகனை பெற்றதற்கு எத்தனை வேதனையாக இருக்கும்..??
அவரிடம் போய் அவர் மகனைப் பற்றி சொன்னால் அவர் என்ன நினைப்பார்??
வேண்டாம் எதுவும் சொல்ல வேண்டாம்.. அவரைப் பொறுத்தமட்டில் அவன் நல்லவனாகவே இருந்து விட்டுப் போகட்டும்.. என்னை பொறுத்த வரைக்கும் அவன் எப்பொழுதுமே கெட்டவன் தான், பொறுக்கி தான்.. இப்படிப்பட்ட ஒருவனை திருமணம் செய்வது எனக்கு சாபக்கேடு தான்.. ஆனால் வேறு வழி இல்லை என் தந்தையை நான் காப்பாற்றியே ஆக வேண்டும்..
அதற்கு முறைப்படி தாலி கட்டிக்கொண்டு அவன் மனைவி என்ற பெயரில் அவன் வீட்டிற்கு சென்று அவனுடைய இச்சைப்படி நடந்து கொள்ளவும் வேண்டும் அதே சமயம் தந்தையை காப்பாற்றவும் செய்ய வேண்டும்.. எல்லாம் விதி என்று நினைத்துக் கொண்டு வேறு வழியே இல்லாமல் அவனுக்கு கழுத்தை நீட்ட தயாரானாள் மித்ரா..!!
அதற்கு முன்பாக தனக்கு இருக்கும் பிரச்சினையைப் பற்றி அவனிடம் தெளிவாக எடுத்து கூறி விடவேண்டும் என்று திருமணத்திற்கு முன்பாக அவனை தனியாக சந்தித்து அவளுடைய குறையை பற்றி எடுத்துக் கூறினாள்.
” கல்யாணம் பண்ணி உன் கூட குழந்தை பெத்துக்கணும்னு எனக்கு எந்த வித ஆசையும் கிடையாது சொல்ல போனால் குழந்தை பற்றி நான் யோசித்தது கூட கிடையாது அதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம்.. எனக்கு தேவை சந்தோஷம் திருப்தி அவ்வளவுதான்.. அதைப்பற்றி மட்டும்தான் நான் யோசிக்கிறேன்.. குழந்தை வரைக்கும் நான் யோசிச்சதே கிடையாது அதனால நீ குழந்தை பெத்துக்க தகுதியானவளா இல்லையா அப்படிங்கறது எனக்கு ஒரு விஷயமே இல்ல.. தகுதி இல்லாதவளாக இருந்தால் கூட எனக்கு சம்மதம் தான் இந்த கல்யாணத்தில் உனக்கு ஓகே தானே?? ஓகே சொல்லி தானே ஆகணும்.. ஏன்னா, உங்க அப்பா உயிர் இப்ப என் கையில தானே இருக்கு”, என்று விஷமமாக சிரித்து கொண்டே அவளிடம் சம்மதத்தை பெற்றான் அந்த கயவன்..!!
திருமணத்திற்கு முன்பு அவன் கெட்டவன் பொறுக்கி என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் அவனுக்கு கழுத்தை நீட்டிய பிறகு தான் தெரிகிறது..
அவன் கெட்டவன் மட்டுமல்ல பொல்லாதவனும் கூட என்று..!!
– தொடரும்..
