அத்தியாயம் 10

எதேச்சையாக கடைக்கு வந்த அனன்யாவின் பார்வையில் அவன் பட்டுவிட, அந்த வாகனத்தை வைத்தே அவனை அடையாளம் கண்டுகொண்டாள். வேகமாக அறைக்குத் திரும்பியவள், தோழியிடம் சென்று, “ஹேய்… உன்னைப் பார்க்க அந்த நல்லவன் வந்திருக்கான்டி” என்றாள் குறும்பாக.

“யாருடி வந்திருக்கிறது? நீ யாரைச் சொல்ற?” மலர் தோழியின் முகத்தை கேள்வியாய் பார்க்க, “அதான் பா….லா…உன்னைத் தேடித்தான் வந்திருக்கான் போல” என்று இழுத்தாள் அனன்யா.

“பாலாவா வந்திருக்கான்?” என்று திகைத்தவள், வெளியே சென்று வராண்டாவில் நின்றவாறு சாலையைப் பார்க்க, அது அவனே தான். தோழிகள் இருவரும் அவனைப் பார்க்கச் சென்றனர்.

“வாங்க பாலா? எதுக்கு இங்க நிக்கிறீங்க?” என்று கேட்டவளை புன்னகையோடு ஏறிட்டவன், “உன்னை பார்க்கத்தான் மலர்… உனக்கு இப்போ எப்படி இருக்கு? ஆபீசுக்கும் வரலையே ஏன்?” கேள்விகளை அடுக்கினான்.

அவன் கேள்விகளில் அதிர்ந்தவளோ, தன்னை சமாளித்தவாறு, “இப்போ பரவாயில்ல பாலா, கொஞ்சம் டயர்டா இருந்தது, அதான் லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்தேன்” என்று கூறிவிட்டு, “இது என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அனன்யா” எனத் தன் தோழியை அவனிடம் அறிமுகம் செய்தாள்.

“ஹாய் அனன்யா…” என்று அவன் கூறியதும், தோழியின் பக்கம் திரும்பிய மலர், “இவர்…” என்று இழுக்க, “அதான் தெரியுமே… ரொம்ப நல்லவர்?” என்றாள் அனன்யா கிண்டலாக.

“ஹே… சும்மா இருடி?” என்று அவள் தோழியின் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, “மலர்… சாப்பிட்டியா? வாங்க சாப்பிட போகலாம்” அவனது கணீர் குரல் கேட்டு அவனைப் பார்த்தாள்.

“வேணாம் பாலா… நாங்க சாப்பிட இன்னும் டைம் ஆகும்” என்று அவள் மறுத்துக்கூற, “வாங்க… நான் இப்போ சாப்பிடத்தான் போறேன், நாம போய் ஒண்ணா சாப்பிடலாம்” என வற்புறுத்தி அழைத்தான். 

அவன் கார் கதவைத் திறந்துவிட, “ஹ்ம்ம்… வாங்க வாங்க… சீக்கிரமா போகலாம், பசிக்குது” என்று அனன்யா முதல் ஆளாக அதில் ஏறி அமர்ந்தாள்.

பாலா மலரையும் காவியவையும் உயர்ரக அசைவ உணவகத்திற்கு அழைத்து சென்றான். மலருக்கு உடல்நிலை சரியில்லாததால் அளவாக சாப்பிட்டாள். அனன்யாவோ பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், கிரில் சிக்கன், ஷவர்மா என அத்தனையும் வாங்கி ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிருந்தாள். 

பாலா மலர் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே உணவுண்டான். “மலர்… நீ சரியாவே சாப்பிட மாட்டியா? அடிக்கடி ஹெல்த் இஸ்யூஸ் வருதுல. உடம்பை கவனிச்சுக்கக் கூடாதா?” என்றான் அக்கறையோடு.

‘என்ன இவன் மலரை வா போனு உரிமையா பேசுறான், அக்கறையா இருக்கான்’ என்று அனன்யா பாலாவை சந்தேகமாய்ப் பார்க்க … அவனோ மலரைக் காதல் கண் கொண்டு ரசித்துப் பார்த்திருந்தான்! 

‘அடேங்கப்பா… விட்டா அவளை கண்ணாலேயே முழுங்கிருவான் போல, இவன் ஆளே சரியில்லையே’ என்று யோசித்தவாறு இருந்த அனன்யாவை கவனித்தவன்,

“சிஸ்டர்… உங்களுக்கு வேற என்ன வேணும்?” என்று கேட்க, ‘என்னது சிஸ்டரா? பயங்கரமான ஆளா இருப்பான் போலயே’ என்று முணுமுணுத்தவள், “ஒரு ஜம்போ ஃபலூடா வேணும்” எனக் கூறியதும்  பாலாவும் அவளுக்காக அதை ஆர்டர் செய்தான்.

“எதுக்குடி? வேணாம். பேசாம இரு” என்று மலர் அவளது காதினுள் கிசுகிசுக்க, “நீ வேற… ஆடு தானா வந்து சிக்கி இருக்கு. இன்னைக்கு வச்சு செஞ்சிற வேணாம்” என்று தோழியின் காதை கடித்தாள். 

மூவரும் உணவுண்ட பின் பணியாளிடம் பாலா ஏதோ பேசி அனுப்ப, அவரோ இரண்டு உணவு ரசீதுகளோடு வந்தார்.

பாலாவும் மலரும் சாப்பிட்ட உணவிற்கான ரசீது ஒன்று, மற்றொன்று அனன்யா உணவுக்கானது. 

“நானும் மலரும் ஒண்ணா ஒர்க் பண்றோம், அதனால மலர் சாப்பிட்ட பில்லை நான் பே பண்றேன். உங்களோடதை நீங்க பே பண்ணுங்க” என்று ரசீதை பாலா அனன்யாவிடம் நீட்ட, ஃபலூடா வை சாப்பிட்டு கொண்டிருந்தவளுக்கு புரையேறி விட்டது.

‘என்னது… சும்மா இருந்தவளை சாப்பிட கூட்டிட்டு வந்துட்ட, இப்போ பாதில கழட்டி விட்டா எப்படி? நான் பர்ஸ் கூட கொண்டு வரலையே, கொண்டு வந்துட்டாலும்… அதுல காசு இல்லையே!’ என மனதிற்குள் யோசித்த அனன்யா பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு, “ஏன்பா நல்லவரே… நான் பர்ஸ் கொண்டு வரலை, காசு கடனா கொடுப்பா. ஹாஸ்டலுக்கு போய் எடுத்துத் தரேன்”  என்று கூறியதும் மலர் கலகலவென வாய்விட்டுச் சிரித்தாள்.

“ஏன்டி துரோகி… அவனை ஏன் இப்படி பண்ணன்னு கேட்காம, சிரிச்சுக்கிட்டு நிக்கிற. உன்னை நம்புனது தப்புதான்டி” என்று அனன்யா தோழியை கடிந்துகொண்டதும், பாலா அவளை முறைத்தான்.

‘அய்யய்யோ… இவன் நம்மள நடுத்தெருவுல விட்டுட்டுப் போயிருவான் போலயே. உன் வாய்தான் உனக்கு எதிரி, அனன்யா குளோஸ் தி டோர்’ என்று தனக்குள்ளே 0புலம்பிக்கொண்டிருக்க,

பாலா இரண்டு ரசீதுகளுக்கும் பணம் செலுத்திவிட்டு வந்தான். தன்னை கிண்டல் செய்த அனன்யாவிடம் விளையாட்டிற்காக அப்படிச் செய்தான். வாகனத்தில் விடுதிக்கு திரும்பியதும், விட்டால் போதும் என்று அனன்யா அறைக்கு ஓடிவிட்டாள். 

மலர் பாலாவிடம் விடைபெற்று விடுதிக்குள் நுழைய, பாலா போகும் அவளை வெறிக்கப் பார்த்திருந்தான்.

அறைக்குள் அவள் நுழைய, “என்ன… உன் ஆளு இவ்ளோ தூரம் உன்னைப் பார்க்க வந்திருக்கான்” என்று அனன்யா புருவங்களைச் சுருக்கி தோழியை நோக்கியதும், 

“ஹே… அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. ஒண்ணா ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்றோம். ஒரு கார்டோசி தான்” என்றாள் சாதாரணமாக.

“அதெல்லாம் இல்லடி… அவன் உன்னைப் பார்த்த பார்வையில எவ்ளோ காதல்; மலர்… நீ… வா… போனு உரிமையா பேசுறான். நீ வேணும்னா பாரு, நாளைக்கு ரோஜாப் பூவோட ஆபீஸ்ல உனக்காக காத்துக்கிட்டு இருப்பான்” என்று அனன்யா சுட்டித்தனமாகச் சிரிக்க,

‘ஏற்கனவே ஒருதடவை நான் பாலாவை தப்பா புரிஞ்சுக்கிட்டு கஷ்டப்படுத்திட்டேன். மறுபடியும் அந்தமாதிரி பண்ணக்கூடாது’ என்ற சிந்தனையில் இருந்தாள் மலர்.

விடியல் புலர்ந்தது… 

மலர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட பாலா புன்னகையோடு அவளை வரவேற்றான். அன்று நாள் முழுக்க சிரித்த முகத்தோடு, கேபினுக்குள் அமர்ந்திருந்தவளை பார்த்துக்கொண்டே அங்குமிங்கும் நடந்தான். 

அறைக்குள் தானாக நுழைந்து அவளிடம் ஏதேதோ பேசிச் சென்றான். அவனது கேள்விகளுக்கு அவள் பதில் சொல்கையில், மும்முரமாக பேசுகையில், அவளது முகத்தையே குறுகுறுவென பார்த்திருந்தான். அவனது செய்கைகளில் தோன்றிய வித்தியாசத்தை மலர் உணரத்தான் செய்தாள். 

(ஒண்ணும் இல்ல… பாலாவுக்கு மலர் மேல லவ்ஸ் வந்திருச்சு) 

அலுவல்கள் முடிந்ததும், மலரை காரில் அழைத்துப்போக வாகன நிறுத்தத்தில் காத்திருந்தான். ‘அய்யோ… இவன் வேற ரெடியா இருக்கானே. இவனை நம்பி போகலாமா? வேணாமா? இவன் நல்லவனா? கெட்டவனா? ஒண்ணும் புரியலையே. நான் போகலைன்னா ஃபீல் பண்ணுவானோ?’ என்று மனதிற்குள் புலம்பியவாறு வாகனத்திற்கு அருகே வந்துவிட்டாள்.

“மலர்… போகலாமா?” பாலா புன்னகையோடு கேட்டதும், மறுத்து பேசாமல் காரில் ஏறிக்கொண்டாள். அவனோ விடுதிக்குச் செல்லாமல் வண்டியை வேறு பாதையில் செலுத்தினான்.

“எங்க போறோம் பாலா?” அவள் திகைப்போடு வினவியதும், 

“பீச்சுக்கு போகலாம்… எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” அவனது பதிலில் குழம்பித்தான் போனாள்.

இருவரும் கடற்கரையில் பொங்கி வரும் அலைகளில் கால்களை நனைத்துவிட்டு அங்கிருக்கும் மணல் திட்டில் அமர்ந்தனர். மலர் அலைகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.

“இந்த அலைகளோட சத்தம் எவ்வளவு புத்துணர்ச்சி தருது. சும்மா அப்படியே உட்கார்ந்து பார்த்துகிட்டு இருந்தா போதும், ரிலாக்ஸா ஃபீல் ஆகும்!” என்று அவள் ரசனையோடு பேசிக் கொண்டிருக்க, அவனோ அவளைத் வார்த்தைகளில் லயித்திருந்தான். 

“ஏதோ பேசணும்னு சொன்னீங்க பாலா…” தன் கண்களைச் சுருக்கியவள், கூர்மையாக அவனை நோக்கியதும் அதில் சுயம் மீண்டவன், “என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிற மலர்?” என்று வினவினான்.

அவன் கேள்வியில் அதிர்ந்தாலும், சட்டென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு லேசாக தலையை சாய்த்து அவனை நோக்கினாள். ஆட்காட்டி விரலால் தன் தாடையில் தட்டி யோசனை செய்தவள்,

“ஹ்ம்ம்… உங்களுக்கு ஒரு வேலை கொடுத்தா சரியா பண்ணனும்னு எஃபோர்ட் எடுத்து பண்ணுவீங்க, ரொம்ப திறமைசாலி! தப்பு யார் செஞ்சாலும் தட்டிக் கேட்பீங்க,  தைரியசாலி! யார் என்ன உதவி கேட்டாலும் மறுக்காம செய்வீங்க, சோ ஹெல்ப்ஃபுல்!

“நல்ல நட்பை மதிக்கிறவர்… உங்களை நம்பி இருக்குறவங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடாம ஆதரவா  இருப்பீங்க. நீங்க இருக்கிற இடமே கலகலனு ஜாலியா இருக்கும், எவ்ளோ கஷ்டத்துல இருக்கறவங்களையும் பேசியே, குறும்பு செஞ்சே சிரிக்க வச்சுருவீங்க” என்று அவனைப் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டவள், “ஹ்ம்ம்… ம்ம்… அப்புறம் நீங்க கொஞ்சூண்டு அழகா இருக்கீங்க” என்றாள் அவன் மீதான ரசனைப் பார்வையோடு. 

பாலா பேசும் அவள் இதழ்களையே பார்த்திருந்தவன், அதில் மயங்கியிருந்தான். ‘தன்னைப் பற்றி மலர் இவ்வளவு புரிந்து வைத்திருக்கிறாளா?’ என்று அவனுக்கே பிரமிப்பாய் இருந்தது.

“என்ன பாலா… நான் கரெக்ட்டா சொன்னேனா?” என வினவியவள் பதிலுக்காக ஆவலாக அவன் முகத்தைப் பார்க்க, “மலர்… நாம ரெண்டு கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவளது  விழிகளை நோக்கியவாறு வினவினான்.

இருவர் விழிகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டன. காதலை விழி வழியே கடத்துகிறான் போலும்… அவளால் தன் விழிகளை அசைக்க முடியவில்லை, அவனது காந்த விழிப் பார்வையில் கட்டுண்டு கிடந்தாள் பாவை! 

உடலும் உள்ளமும் அதிர்ந்திட, அதை மறைத்து சலனமின்றி அவனைப் பார்த்திருந்தாள். அவள் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்க்க, “என்ன மலர்… நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம சிரிக்கிற?” அவனோ கலக்கமாக அவளை நோக்கினான்.

“நமக்குள்ள ஏற்பட்ட இந்த கொஞ்ச நாள் பழக்கத்துல நீங்க என்னைப் பத்தி… என் லைஃப் பத்தி தெரிஞ்சுகிட்டீங்க. அதனால பரிதாபப்பட்டு இன்னைக்கு இப்படி கேட்டிருக்கீங்க. மத்தபடி இது லவ்வெல்லாம் இல்ல, ஜஸ்ட் ஒரு இன்பாக்சுவேஷன், எல்லாருக்கும் இயல்பா வர்றதுதான்” என்றவளை அழுத்தமாக நோக்கியவன் குறுக்கிட்டு ஏதோ பேச வர, கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள்.

‘உங்க லைஃப் ஸ்டைல், ஸ்டேட்டஸ் எல்லாமே வேற, என்னோட லைஃப் ஸ்டைல், ஸ்டேட்டஸ் வேற. இன்னைக்கு ஏதோ ஒரு ஈர்ப்புல இதுக்கு ஓகே சொல்லிட்டு, பின்னாடி தப்பான முடிவு எடுத்திட்டோம்னு நினைச்சு ஃபீல் பண்ணி, ரெண்டு பேருமே வாழ்க்கையைக் கெடுத்துக்கக்கூடாது.

“பாலா… நீங்க இன்னைக்கு மட்டுமில்ல, எப்பவும் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட், அதைத் தாண்டி நான் உங்களை யோசிச்சு பார்க்கலை” என்று மலர் தன் முடிவைத் தெளிவாய் உரைத்திட்டாள். 

மலரை தொந்தரவு செய்யாமல் விலகி இருக்க நினைத்தவன், ஏன் திடீரென்று அவளை நெருங்க முயல்கிறான். எதற்காக அவள் மீது காதல் கொண்டான், அதை உடனே அவளிடம் வெளிப்படுத்தினான்?

மலர் பாலாவின் காதலை ஏற்றுக் கொள்வாளா?! தொடர்ந்து வாசியுங்கள்…

🌹காதல் மலரும்🌹 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!