அறையை நோக்கிச் சென்று உள்ளே பார்த்தவனுக்கு மனதில் லேசாக வலிக்கத்தான் செய்தது.
மயூரி உள்ளே அவன் சென்றபோது தொய்ந்து விழுந்த இடத்திலேயே சுருட்டி படுத்திருந்தாள். அவன் அடித்து நொறுக்கியதில் சிதறிக் கிடந்த சலங்கைகளை, ஒன்று கூட்டி கையினை அதன்மேல் கூட்டி வைத்து மறுக்கையில் தலையை வைத்து சுருட்டி படுத்தபடி இருந்தாள்.கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.
ரஞ்சன் மெல்ல நடந்து சென்று அவள் அருகில் நிற்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள், கூட்டி வைத்திருந்த சலங்கைகளை கலைத்துவிட்டு,எழுந்து அறையை விட்டு விறுவிறு என வெளியே சென்றாள்.
அவளை அழைக்க நினைத்தவன் கையை மட்டும் நீட்டி,வார்த்தைகளை விழுங்கியபடி, அப்படியே சுற்றி பார்த்தவன் மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தான்.
அறைக்குள் மயூரி இல்லை, குளியல் அறையில் சத்தம் கேட்டது. அவனுக்கு லேசாக மனம் உருத்தியது. கீழே உணவு உண்ண சென்றான். அவன் தாய் மாடி ஏறி வர அவரை நின்று பார்த்தான்.
அவர் அவனை சற்றும் பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல, ‘அம்மா’ என்று அழைத்தான். அவர் எதுவும் சொல்லாமல் மேலே அவன் அறைக்கும் சென்றார்.மீண்டும் கீழே திரும்பி டைனிங்கில் வந்து அமர்ந்தான்.
சரளாவோ
“தம்பி,சாப்பாட்டு வைக்கவா..? “ என்று மீண்டும் கேட்க,
“அம்மா… அம்மா சாப்பிட வருவாங்க தானே, அவங்களோட சாப்பிட்டுகிறேன்” என்றபடி மேஜையின் மீது கையை கோர்த்தபடி அமர்ந்திருந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது.
அவனின் தாயின் குரல் கேட்டு திரும்பி பார்க்க அவர் மயூரியுடன் கீழே இறங்கி வந்தார். அவள் தோளில் சிறிய பை ஒன்று இருக்க புருவம் சுருக்கி அவளையே பார்த்திருந்தான் ரஞ்சன்.
டைனிங் அறைக்கு இருவரும் வந்து சேர,மயூரி தலையை நிமிரவே இல்லை. மரகதம் தான் அவனைப் பார்த்து முறைத்தபடி இருந்தவர்,
“சரளா.. சாருக்கு சாப்பாடு இன்னும் வைக்கலையா, ஏன் இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கார்”என்றார்.
“தம்பி.. தான், நீங்க வரட்டும்னு சொன்னாங்க”என்றார் அவர்.
“அடடா, என்ன கரிசனம்! நான் சாப்பிடலைன்னா சாப்பிட மாட்டானா..! ச்ச.. நிம்மதியா சாப்பிட கூட முடியாது இந்த வீட்ல” என்றபடி மயூரியை கையை பிடித்து அழைக்க,
அவள் அவர் முகத்தை இரைஞ்சுதலாக பார்த்து வேண்டாம் என்று தலையாட்டினாள்.
“‘உனக்காக தான் எல்லாமே செஞ்சேன் மயூரி.. வா”என்றார் அவரும் கெஞ்சுதலாக
மயூரியை பார்த்திருந்த ரஞ்சன், “அவ எங்க போறா பேக்கை எடுத்துக்கிட்டு”என்றான்.
பார்வையை அவள் மேல் இருந்து விலக்காமலே
அவனை திரும்பி முறைத்த மரகதம், “அவளை பற்றி உனக்கு என்ன? அவ என்ன பண்ணாலும் தான் உனக்கு பிடிக்காதே! அவ எங்க போனா உனக்கு என்ன?”என்றார்.
லேசாக தலையை சாய்த்து ஒற்றை உருவத்தை உயர்த்தி மரகதத்தை முறைத்த ரஞ்சன்,
“அவ எங்க போறான்னு கேட்டேன்..? “ என்றான் மீண்டும்.
“‘அவ அம்மா வீட்டுக்கு போறா, உனக்கு ஏதாவது பிரச்சனையா?”என்றார் மரகதம் எரிச்சலாக.
மயூரி இப்பொழுதும் நிமிர்ந்து பார்க்கவில்லை. ரஞ்சனின் பார்வை அவளை விட்டு விலகவில்லை. அவளை பார்த்தபடி,
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. போயிட்டு எப்ப வர்றா? “என்றான்.
‘“எப்ப வந்தா உனக்கு என்ன? ஏன் அங்கேயே கூட இருப்பா, அதனால உனக்கு என்ன?”என்றார் மரகதம்.
“நான் அவ புருஷன். நான் இருக்க இந்த வீட்ல இல்லாம அவ எப்படி அங்கேயே இருப்பா? போயிட்டு ரெண்டு நாள்ல வரணும், நானே போய் கூட்டிட்டு வரேன்”என்றான் அவளிடம் இருந்து பார்வையை விலக்காமலே.
மரகதம் அவனை திரும்பி முறைத்தவர், “நீ வா மயூரி சாப்பிடலாம்” என்றார்.
அவர் கைகளில் இழுபட்டு வந்தவள், ரஞ்சனின் எதிரே அவளை அமர வைத்து தானும் அமர்ந்தார். மூவருக்கும் சரளா உணவு பரிமாற, ரஞ்சன் தட்டில் இருந்த வகைகளை பார்த்துவிட்டு, மயூரியை நிமிர்ந்து பார்த்தான்.
அவள் தட்டை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவள் கைகள் தட்டை இறுகப்பற்றி கண்களில் நீர் கோர்க்காமல் இருக்க போராடிக் கொண்டிருந்தாள். அவளின் கஷ்டம் அவனுக்கு புரிந்தது.
மரகதம் அவள் கையை பற்றி தட்டிக் கொடுக்க, கஷ்டப்பட்டு உணவை பிசைந்தாள் மயூரி, வாயின் அருகே கொண்டு சென்றவளுக்கு உண்ண மனம் வரவில்லை. உணவை தட்டில் போட்டுவிட்டு
“அத்தை,.. க்கும்…ப்ளீஸ் எனக்கு வேணாம், நான் வீட்டுக்கு போறேன்”என்றாள் கண்கள் குளமாக.
மரகதம் அவள் நிலை கண்டு ரஞ்சனை திரும்பி முறைத்தவர், “சரளா, எல்லா சாப்பாட்டையும் டிபன்ல கட்டு, அவ வீட்டுக்கு போய் சாப்பிட்டு கட்டும்”என்றார்.
அவள் அமைதியாக எழுந்து சென்று கையை கழுவ, ரஞ்சனுக்கு ஏனோ மனம் பிசைந்தது. இத்தனை நாள் என்ன செய்தாலும், கொஞ்ச நேரத்தில் சிரித்து, கேலி பேசுபவள். இன்று இப்படி கலங்கி நிற்பது அவன் மனதை பாதித்தது.
ரஞ்சன் எழுந்து “நான் கூட்டிட்டு போறேன் “என்றான் .
“வேண்டாம் நானே கந்தசாமியை கூட்டிட்டு போய்க்கிறேன்”என்றார் மரகதம்.
திரும்பி அவரை ஆழ்ந்து பார்த்த ரஞ்சன், “நான் போறேன்னு சொன்னேன்”என்றபடி கையை கழுவியவன் வெளியே நடந்தான்.
அவன் பின்னே மரகத்திடம் தலையை அசைத்து விட்டு நடந்தாள் மயூரி. காரை எடுத்தவன் ஓட்டுநர் இருக்கையில் ஏற, மயூரி பின்னே ஏறினாள். இறுக்கையில் அமர்ந்தபடி அவளை பின் திரும்பி பார்த்தவன் எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.
ரியர் வியூ ஊடே அவளை பார்த்தவன், ஒன்றும் பேசவில்லை. மயூரி தலையை பின்னே சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.வீடு போய் சேரும் வரை அவள் எதுவும் பேசவில்லை. ரஞ்சன் அவளை அவ்வப்போது ரியர் வியூ கண்ணாடியில் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் துளியும் அசையவும் இல்லை, கண்களையும் திறக்கவில்லை.
வீடு வந்ததும் காரை நிறுத்த, அவள் கண்களைத் திறந்து எதுவும் பேசாமல் இறங்கிக் கொண்டாள் இவர்கள் காரை கண்ட பிரியா விரைந்து புன்னகையுடன் மயூரி அருகே வந்தவள், காரினுள் இருந்த ரஞ்சனை பார்த்து அமைதியாக நின்றவள்,. பின் மயூரியின் வாடிய முகத்தை கண்டாள், மயூரியின் நாடி பற்றி தூக்கினாள்
“மய்யூ “என்றாள் ரஞ்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல்,
“ஹாப்பி பர்த்டே மயூரி, வா உள்ள போலாம்”’ என்றவள் அவள் தோளோடு கை போட்டு உள்ளே திரும்ப,.
சொடுக்கிட்டு அழைத்தான் ரஞ்சன். இருவரும் அப்படியே நிற்க பிரியா மட்டும் திரும்பி பார்த்தாள்.
“இரண்டு நாள்ல வந்து கூப்பிட்டுக்கிறேன்னு சொல்லிடு”என்றவன் நிறுத்தி, ‘டேக் கேர் ஆப் ஹர்’ என்று விட்டு காரை கிளப்பினான்.
எதுவும் பேசாமல் மயூரியை உள்ளே அழைத்து சென்றாள் பிரியா.
அதை கண்ணாடி ஊடை பார்த்தவன் மனது பிசைந்தது. தான் தப்பு செய்துவிட்டோமோ..? என்று எண்ணியவன் மனது,
‘ஏன் இத்தனை நாள் எவ்வளவோ பண்ணி இருக்கேன்? அன்று கொலை பண்ற அளவுக்கு கூட போனேன், அப்ப எல்லாம் நார்மலா தானே இருந்தா? இப்ப ஒரு வார்த்தை கூட நான் எதுவும் சொல்லலையே பின்ன என்ன?’ என்று இன்னொரு மனது வாதாடியது.
அவன் மனதிற்குள் பல கேள்விகள் ஓடினாலும் எதுவும் கூறாமல் வீட்டுக்கு வந்தான்.
அமர்ந்திருந்த மரகதம். உள்ளே வந்தவன் எதுவும் கூறாமல் மாடி ஏற போக,
“இது உனக்கே சரியா படுதா ரஞ்சன்” என்று ஆதங்கமாக கேட்டார் மரகதம். எழுந்து அவன் அருகே வந்தவர் அவனை உறுத்து விழித்தார்.
ஒற்றை காலை படியில் வைத்தபடி, கைப்பிடியில் ஒரு கையை பற்றிக் கொண்டு தலையை லேசாக தாழ்த்தி அப்படியே நின்று இருந்தான் ரஞ்சன்.
அவனை முறைத்தவர்,
“ நீ என்ன பண்ணாலும் ஒரே நிமிஷத்துல, எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சுக்கிட்டு, அடுத்த நொடி சிட்டுக்குருவி போல சுற்றிக்கொண்டு இருந்தவளே இப்படி சிறகை உடைத்து போட்டுட்டியே”என்று ஆதங்கமாக கேட்டார்.
ஒற்றை புருவத்தை தூக்கி அவரை வெற்று பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.
“‘நீயும் கஷ்டப்பட்டு இருக்க தான் ரஞ்சன், ஆனா அவ…அவ என்ன தப்பு பண்ணா? எந்த தப்பும் பண்ணாதவ கிட்ட இவ்ளோ கோபம் உனக்கு எதுக்கு? கல்யாணம்னு அவ ஓடிப்போயிட்டா அதானே?”என்றார்.
ரஞ்சன் எதுவும் பேசாமல் இருக்க, “வாயை திறந்து பேசுடா! இன்னைக்கு அவ பிறந்தநாள் அதுவாது உனக்கு தெரியுமா? உன்னை இத்தனை நாள் எதுவும் பேசாமல் கேட்காமல் இருந்தா,நீ செய்த எல்லாமே சரின்னு ஆகிறாது ரஞ்சன் ”’ என்றார்.
அவரை ஆழ்ந்து பார்த்தவன் கண்களை மூடி திறந்து ஒரு நெடுமூச்சு ஒன்றை வெளியிட்டான். “இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன், அது மட்டும் தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும்” என்றவன் மாடி ஏறி சென்றான்.
அவனை முறைத்தபடி நின்ற மரகதம் தன் அறைக்கு சென்றார்.
அவன் அறைக்கு சென்று ரஞ்சன் சுற்றும் ஒரு முறை பார்த்தான். அவள் இருந்து சென்ற தடயங்கள் எதுவும் இல்லை. கண்ணாடி மேஜையில் இருக்கும் அவளது உடைமைகள் கூட இல்லை. பெருமூச்சு ஒன்றை விட்டவன் இருக்கைகளாலும் முகத்தை தேய்த்துக் கொண்டான்.
மேஜையிலிருந்து நீரை எடுத்து அருந்தினான். பின் மெல்ல நடந்து அந்த அறைக்கு சென்றான். அந்த அறை இன்னும் திறந்துதான் இருந்தது.
சிதறியை சலங்கை, உடைந்த டேப் ரெக்கார்டர்,எதுவும் துப்பரவு செய்யப்படவில்லை. அப்படியே இருக்க உள்ளே சென்றவன் மெல்ல குனிந்து சிதறிய சலங்கை முத்துக்களை எடுத்து பார்த்தான்.
பின் சுற்றிப் பார்த்தவன் கைகளில் அனைத்து முத்துக்களையும் சேகரித்து எடுத்து அங்கிருந்த மேஜை மேல் வைத்தான். பின் கதவை சாற்றிக்கொண்டு தன்னறைக்கு சென்று படுத்து விட்டான்.
காலையில் கண்விழித்தவனுக்கு அருகில் அவள் இல்லாதது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் தான் அவ்வளவு ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை என்று எண்ணியவன் அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தான்.
உணவு மேஜையில் அமர்ந்திருந்த மரகதம் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அவர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான் ரஞ்சன்.
மரகதமோ, “என்ன மயூரி.. இதுக்கு இவ்வளவு கலங்கலாமா? நான் என்ன சொல்லி…ப்ச்…சரி ஃபோன உன் அம்மாகிட்ட கொடு. “’ என்றவரை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரஞ்சன்.
ஆனால் அவர் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“‘சம்மந்தி வணக்கம், க்கும்…நான்… நான் என்ன சொல்றதுன்னு தெரியல சம்மந்தி. அவங்க அப்பாக்கு.. தெரியுமா இல்லையா?”
“ஓ.. இல்லையா..சரி அவ சாப்பிட்டாளா?”என்று கேட்க அவர் முகம் மேலும் சுருங்கியது.
“ஹ்ம்ம்..நேத்து இங்கையும் சாப்பிடல, ஏதாவது சொல்லி அவளை சாப்பிட வைங்க சம்பந்தி. ஐயோ நீங்க அழாதீங்க, எல்லாம் சரியாகிடும், நான் அவள விடமாட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. நீங்க சாப்டீங்களா?’ என்றவர்
“ப்ச்…என்ன சம்மந்தி நீங்கதானே அவள தேத்தனும், நீங்களும் இப்படி சாப்பிடாம அழுதுட்டே இருந்தா…ம்ம்..நான் வேணா அங்க வரவா சம்பந்தி’ என்றவர்,
“சரி அவளை சாப்பிட வைங்க பாத்துக்கோங்க, இனிமே இப்படி எதுவும் நடக்காது அதுக்கு நான் பொறுப்பு” என்றபடி பார்வையை மட்டும் மேலே தூக்கி ரஞ்சனை முறைத்தபடி கூறிவிட்டு அலைபேசியை அணைத்து கீழே வைத்தார்.
இருவருக்கும் உணவை சரளா வைக்க, இருவரும் அமைதியாகவே உண்டனர் . அலுவலகம் கிளம்ப எழுந்தவனை அழைத்தார் மரகதம்.
