அத்தியாயம் 2

திருமணம் நின்று போன அடுத்த நாள் காலை 

 

அபிராமி நேற்று நடந்த நிகழ்வுகளை தன் எண்ண அலைகளில் இருந்து விரட்டியவள், ” தலைக்கு குளித்து காட்டன் புடவை ஒன்றை அணிந்து வந்தவள் தோள் பையை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்”. 

 

காலையிலேயே கௌரி இரு மகள்களை நினைத்து கவலையோடு உணவை சமைத்தவர் சத்தம் இல்லாமல் கிளம்பி நிற்கும் தன் பெரிய மகளை பார்த்தார். 

 

அபி சாப்பிட்டு போமா என்று அழைத்தார் கௌரி. 

 

இல்லைம்மா பசியில்லை.  நான் கிளம்புறேன் என்றவள் வீட்டை தாண்டி வெளியே நடந்தாள். 

 

எதிர் வீட்டு வாசலில் ஒரு பெரிய கார் வந்து நிற்க, அபிராமி அதை கவனிக்கும் நிலையில் இல்லை. 

 

ஒரு நிமிஷம் இருங்க மாப்பிள்ளை என்று எதிர் வீட்டு பெண்மணி அந்த காரில் இருக்கும் தன் மாப்பிள்ளையானவனிடம் கூற, காரில் இருந்து இறங்காமல் இருந்தனர் அவர்களும். 

 

அபிராமி அந்த வீட்டை தாண்டி செல்லவும் ” இப்போ வாங்க மாப்பிள்ளை” என்று அந்த பெண்மணி கூற, அவர்களும் ஜோடியாக சிறு குழந்தையை கையில் வைத்து கொண்டு இறங்கினர். 

 

அவளுக்கே கல்யாணம் பல தடவை நின்று போச்சு. இதுல கைக்குழந்தையை வச்சிட்டு முதல் தடவை நீங்க வீட்டுக்கு வரும் போது சகுனம் பார்க்க வேண்டாமா? என்று அந்த பெண்மணி கூறியது அபிராமியின் காதுகளில் நன்றாகவே விழ, 

 

துளிர்த்த கண்ணீரை மறைத்து கொண்டு நடந்தாள் அபிராமி. 

 

“என்னங்க, அபிராமி சாப்பிடாமல் கிளம்பிட்டாங்க” என்று கௌரி தன் கணவரிடம் புலம்பினார். 

 

விடு கௌரி.  வெளியே போய்ட்டு வரட்டும். அவளோட மனசு நேற்று நடந்ததை மறந்தா போதும் என்று பெரு மூச்சு விட்டார் கல்யாண். 

 

இரவு தூக்கம் வர தாமதம் ஆனதால் இப்பொழுது தான் கண் விழித்தாள் அகிலா. 

 

அவள் காதுகளில் கேட்டது ” அபிராமி சாப்பிடாமல் கிளம்பி விட்டாள் ” என்று கேட்க, மெல்லிய புன்னகையை உதிர்த்து தாயை பின்னிருந்து கட்டி கொண்டாள் அகிலா. 

 

அக்கா வேலைக்கு கிளம்பிட்டான்னா ” அப்போ அக்கா ஓகே ஆயிட்டான்னு அர்த்தம் மா ” என்றாள். 

 

சரி டி. நீயும் கிளம்பு என்று தன்னை கட்டிக்கொண்டு இருந்த மகளை பிரித்து குளிக்க அனுப்பி வைத்தார் கௌரி. 

 

அவள் குளித்து விட்டு வர, தாய் தந்தை இருவரும் குளித்து கிளம்பி இருக்க ” எங்க மா கிளம்பிட்டிங்க நீயும் அப்பாவும்? என்று கேட்டாள் அகிலா “. 

 

“கோவிலுக்கு போறோம் அகி” என்றார் கௌரி. 

 

நாடியில் விரல் தட்டி யோசித்த அகிலா, கோவிலுக்கு தான போறீங்க? அக்காக்கு அடுத்த மாப்பிள்ளை எதும் பார்க்க போகலையே? என்று சந்தேகத்தோடு புருவ முடிச்சுடன்  கேட்டாள். 

 

அவளின் கேள்வியில் மகளை கொலை வெறியுடன் பார்த்த கௌரி, “பேசாமல் சாப்பிட்டு நீயும் கிளம்பு டி ” உனக்கு தேவை இல்லாததை விஷயத்தை பேசாத என்று அதட்டினார். 

 

சரி சரி நம்புறேன் என்று தாயின் கோப முகத்தை பார்த்தவளுக்கு சிறிது பயம் வந்தது என்னவோ உண்மை தான். 

 

இங்கு அபிராமி பேருந்தில் பயணித்து வந்து அவள் வேலை செய்யும் அரசு ஆரம்ப பள்ளிக்குள் காலடி எடுத்து வைத்தாள். 

 

யார் யார் வந்து தன்னிடம் என்னன்ன கேள்விகள் கேட்பாரோ! என்று எண்ணி கொண்டு யோசனையோடு நடந்து சென்றாள். 

 

ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் யாரும் அவளிடம் வந்து கேள்வி கேட்கவில்லை. அவளுடைய திருமணத்தில் இங்கு வேலை பார்க்கும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருமணம் நின்று போனதும் அவளிடம் எந்த ஒரு ஆறுதலும் வழங்காமல் கிளம்பி விட்டனர். அபிராமி எதிர் பார்த்ததும் அது தான். 

 

யாரும் தன்னை ஆறுதல் என்று மனம் வலிக்கும் செயலை செய்ய கூடாது என்று விரும்பினாள். 

 

அவளுடைய வகுப்பிற்கு வர பிற வகுப்பறைகளை கடந்து வரும் போது பார்க்கும் ஆசிரியர்களை விஷ் பண்ணி கடந்து வர, அவர்களும் அவளுக்கு சிரிப்பையும் வாழ்த்தையும் தெரிவித்தனர். 

 

அவளுடைய இரண்டாம் வகுப்புக்கு அபிராமி நுழையவும், அவளை சுற்றி வளைத்து கட்டி அனைத்தனர் இரண்டாம் வகுப்பு மழலைகள். 

 

“ஐ டீச்சர் வந்துட்டாங்க ” என்றது ஒரு சின்ன சிறுமியின் மழலை குரல். 

 

“டீச்சர் இனிமேல் எங்கயும் போக மாட்டாங்க நம்மளோடதான் இருப்பாங்க ” என்றது இன்னொரு மழலை. 

 

“டீச்சர் இனிமேல் எங்கள விட்டு போகாதீங்க டீச்சர்” என்று அந்த குழந்தைகள் யாவரும் அவளை கட்டி கொண்டு கூற, அபிராமிக்கு தானோ கண்களில் இருந்து நீர் வழிந்தது. 

 

ஒரு ஆசிரியருக்கு தான் பெற்ற பிள்ளைகளை விட, அவர் வகுப்பு பிள்ளைகள் தான் முதலில் முக்கியம். அது போல் அந்த குழந்தைகளும் அவளை கட்டி கொண்டு இருக்க, அபிராமிக்கு தாய்மை என்ற உணர்வு பூத்தது. 

 

இந்த தருணத்தில் நேற்று நின்று போன திருமணத்தில் சுற்றி கொண்டிருந்த அபிராமியின் எண்ணங்கள் யாவும் காற்றோடு காற்றாக மறைந்து போனது. 

 

டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சுனா அப்பறம் நம்ப ஸ்கூல்க்கு டீச்சர் வரவே மாட்டாங்களாம் என்று குழந்தைகள் யாவரும் அவளின் திருமணத்தன்று அழுது கவலையில் இருக்க, இன்று காலை அபிராமியை பார்த்ததும் மொத்த குழந்தைகளும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காதது ஒன்று தான் குறை போல் இருந்தது. 

 

“இனிமேல் டீச்சர் உங்கள விட்டு போக மாட்டேன் செல்லங்களா” என்று குழந்தைகள் அனைவரையும் பார்த்து உரைத்து விட்டு, அவர்களுடன் தானும் ஒரு குழந்தை போல் சேர்ந்து கொண்டாள் அபிராமி. 

 

இனிமேல் திருமணம் ஆனால் என்ன?  ஆகாவிட்டால் என்ன?  என்னுடைய குழந்தைகள் போதும் என்று முகம், அகம் இரண்டும் சந்தோசத்தால் நிறைந்து போனது அவளுக்கு. 

 

*****

 

கடந்த மூன்று மாதங்களாக அறைகுள்ளேயே அடைந்து கிடந்தான் அஸ்வந்த். நம் கதையின் நாயகன் இவன் தான்.

 

அவனின் கண்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இருக்க, அவனின் கைகளில் பிஞ்சு குழந்தை அடைக்கலமாகி இருந்தது. 

 

கைகளில் இருந்த பிஞ்சு குழந்தை “பசிக்குது எனக்கு “என்பது போல் லேசான சிணுங்கல் வைக்க, அப்பொழுதும் அஸ்வந்த் அசையாமல் இருந்தான். 

 

அடர்ந்த தாடி, வெட்டப்படாத கழுத்து வரை வளர்ந்த கேசம் அதுவும் வாராமல் சுருண்டு கிடக்க, தன் மனைவியின் புகைப்படத்தில் இருந்து அவனால் கிஞ்சிற்றும் கண்களை அகற்ற முடியவில்லை. 

 

குழந்தையின் லேசான சிணுங்கல் சத்தம் கேட்கவும், அஸ்வந்த்தின் அறைக்கு வெளியே காதை வைத்து காத்து கொண்டிருந்த அவனின் தாய் பாரிஜாதம் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து தன் மூன்று மாத பேரனை மகனின் கைகளில் இருந்து வாங்க முற்பட, அவனோ குழந்தையை கெட்டியாக பிடித்திருந்தான் .

 

புள்ளை பசிக்கு அழுகுறான் யா என்று கலங்கிய கண்களோடு பாரிஜாதம் கூற, அஸ்வந்த்தின் கைகள் லேசாக தளர்ந்தது. 

 

இது தான் வாய்ப்பு என்பது போல் தன் பேரனை தூக்கி கொண்டு வேகமாக படி இறங்கி ஹாலுக்கு வந்த பாரிஜாதம் ” ஹேய் சரோஜா என் பேரன் பசிக்கு அழுகுறான் டி ” என்றது தான் தாமதம். 

 

சரோஜா என்ற வேலைக்காரி கையில் பால் பவுடர் கலந்த பாலை எடுத்து கொண்டு வேகமாக கிட்சனில் இருந்து ஹாலுக்கு வந்தார். 

 

சோபாவில் அமர்ந்த பாரிஜாதம் குழந்தையை வாகாக தன்னுடைய மடியில் படுக்க வைத்து பாலை புகட்டினார். 

 

தாயை இழந்து இந்த மூன்று மாதமாக இதை தான் உணவாக எடுத்து கொண்டிருக்கிறது இந்த பிஞ்சு குழந்தை. 

 

பால் குடித்து முடிந்து உறக்க நிலைக்கு சென்ற அந்த சின்னஞ்சிறு பிஞ்சை எடுத்து கொண்டு மறுபடியும் மகனின் கைகளுக்குள் தாரை வார்த்தார் பாரிஜாதம். 

 

அவனின் கண்கள் ரத்த சிவப்பாக மாறி இருந்தது. சிறிது கலங்கி போய் இருக்க, அதில் இருந்து இரண்டு மூன்று முத்து துளிகள் சிதறியது. 

 

ஆண்களின் கண்ணீருக்கு வலி அதிகம் தான் போலும். ஆனால் இவனின் அழுகைக்கு காரணமானவளோ இந்த மண்ணுலகத்தை விட்டு சென்று மூன்று மாதங்கள் கடந்து விட்டது. 

 

*****

 

கௌரியும் கல்யாணும் ஆட்டோவில் இருந்து  இறங்கினர். 

 

அவர்களை வரவேற்றது “பாம்பே ஜோதிட இல்லம் ” என்ற போர்டு வைக்கப்பட்ட சிறிய ஜாதக நிலையம். 

 

கௌரியும் கல்யாணும் கடைக்குள் சென்று ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர். 

 

வெள்ளை வேட்டி கட்டிய ஒரு பெரியவர் அங்கு வைக்கப்படிருந்த சாமி படங்களுக்கு ஆரத்தி காட்டி, தீபத்தை தொட்டு வணங்கி இப்பொழுது தான் கடையை திறந்தேன் என்பது போல் வந்து அமர்ந்தார். 

 

“அடடே வாங்க வாங்க கௌரி ” என்று இருக்கையில் அமர்ந்திருக்கும் இருவரையும் சிரிப்போடு அழைத்தார் பாம்பே ஜாதகர். 

 

அவரின் அழைப்பில் மிதமாக புன்னகை கொண்டு தம்பதிகள் எழுந்து அவர் முன் போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்தனர். 

 

பொண்ணுக்கு நல்ல படியா கல்யாணம் முடிஞ்சிருச்சா? என்று அவர் கேட்ட கேள்வியில் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து வெறுமையாக மாறியது இருவருக்கும். 

 

“இல்லை எங்க பொண்ணோட கல்யாணம் நின்று போச்சு ” என்று சோகமான குரலில் கூறினார் கல்யாண். 

 

உங்க பொண்ணோட ஜாதகத்துக்கு கண்டிப்பா ”  ஒருத்தனுக்கு ரெண்டாவது தாரமா தான் போக போறா ” என்று அவர் ஆணித்தரமாக கூற, பெற்றவர்கள் இருவரும் தான் விதிர் விதிர்த்து போனர். 

 

கௌரி முகத்தில் வழிந்த வியர்வையை தன் முந்தானை கொண்டு ஒற்றி எடுத்தார். 

 

கல்யாண் கொண்டு வந்த பையில் இருந்து சிறிய மகளின் ஜாதகத்தை வெளியே எடுத்தார். 

 

இவள் என் சின்ன பொண்ணு இவளுக்கு பார்த்து சொல்லுங்க என்றார் கல்யாண். 

 

ஜாதகத்தை வாங்கியவர்  அகிலாவின் ஜாதகத்தை திறந்து சில நிமிடங்கள் பார்த்தார். 

 

இவளோட ஜாதகம் நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருப்பாள் என்றார்.

 

தம்பதிகள் இருவரும் நிம்மதி மூச்சை விட்டனர். 

 

பெரிய பொண்ணுக்கு எப்படி ரெண்டாவது…. தாரம் என்று கௌரி தயக்கமாக கேட்டார். எந்த ஒரு தாய் தகப்பனும் தான் பெற்ற பிள்ளையை இரண்டாம் தாரமாக ஒருவனுக்கு கொடுக்க நினைக்க மாட்டார். அந்த தயக்கம் தான் இவர்களிடம் இருந்தது. 

 

உங்க பொண்ணுக்கு நான் சொன்னது போல ரெண்டாவது தாரத்துக்கு வரன் தேடுங்க. கண்டிப்பா நல்ல பையன் நல்ல குடும்பம் உங்களுக்கு கிடைக்கும். உங்க பொண்ணும் புருஷன், குழந்தை குட்டியோட நல்லா இருப்பாள் என்று அவர் கூற,  இருவரும் மனம் குழம்பி ஒரு தீர்வு இல்லாமல் அவருக்கு தர வேண்டிய தட்சணையை கொடுத்து விட்டு வந்தனர். 

 

தொடரும். 

 

என்னுடைய இந்த கதையை படித்து விட்டு நிறை குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம். 

தினமும் அத்தியாயங்கள் வரும் நண்பர்களே. 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
870 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page