கண்கள் 3
மரங்கள் சூழ்ந்த அந்தக் கானகத்தின் நடுவே ஒரு பிரம்மாண்டமான இல்லம். அவ்விடத்தில் தீரனின் வண்டி பாய்ந்து வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கிய பரமன், பின் கதவைத் திறக்க, அஷ்வினியைக் கையில் ஏந்தியவாறு கீழே இறங்கினான் தீரன். தீரன் அவளைத் தூக்கிக்கொண்டு முன்னே செல்ல, அவனைத் தொடர்ந்து வந்தான் பரமன்.
வாசலில் நின்ற செல்வி, “வா தீரா… இது?” என்று அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவனோ பதில் எதுவும் கூறாமல் முன்னே சென்றான்.
“கேட்கிறேன் இல்ல, தீரா! இது யாரு?” என்று அவர் மீண்டும் கேட்க, திரும்பி நின்றவன், “என் பொண்டாட்டி!” என்று கூறியபடியே அவளைத் தூக்கிக்கொண்டு வந்து அவளுக்கான அறையில் படுக்க வைத்தான்.
வெளியே வந்தவனிடம், “என்னடா இது எல்லாம்? உனக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணணும்னு நானும் அப்பாவும் நினைச்சிட்டு இருந்தோம். நீ என்னன்னா திடீர்னு ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்து பொண்டாட்டின்னு சொல்லுற?” என்று ஆதங்கத்துடன் கண்களில் நீர் கோர்க்கத் தீரனிடம் கேட்டார்.
“அம்மா, ப்ளீஸ்… உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய மனநிலையில் நான் இல்லை. அவளுக்கு மயக்கம் தெளிந்தவுடனே சாப்பிட ஏதாவது கொடுங்க. நான் இப்போ வந்துடுறேன்” என்றவன், ஹாலில் மாட்டியிருந்த தன் புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து, அவற்றைப் பரமனிடம் கொடுக்க, அவனோ தீரன் கூறியபடியே அவற்றை மறைத்து வைத்தான்.
செல்விக்கோ நடக்கும் யாவும் கனவா, இல்லை நனவா என்ற குழப்பம் மட்டுமே எஞ்சியிருந்தது. இருந்தும், தன் மகன் எது செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நம்பியவர், இந்த விஷயத்தைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.
எத்தனையோ முறை திருமணம் செய்துகொள்ளச் சொல்லியும் பிடிவாதமாக ‘வேண்டாம்’ என்று மறுத்தவன், இன்று ஒருத்தியை அழைத்து வந்து ‘என் மனைவி’ என்று கூறும்போது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும், மனதளவில் தன் மகன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை முடிவு செய்துகொண்டான் என்ற நிம்மதி இருந்தது என்னவோ உண்மைதான்.
மயக்கம் தெளிந்து மெல்லக் கண்களைத் திறந்தாள் அஷ்வினி. எழுந்தவள் தலையை உலுக்கி, ‘என்ன இடம் இது?’ என்று சுற்றிப் பார்த்தாள்.
அவளுடைய அறை முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருந்தது. சுவர்களில் ஆங்காங்கே கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு, அந்த இடமே அவ்வளவு அழகாக இருந்தது.
அதனைச் சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவளுக்கு, அது தங்களுடைய வீடு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
“கோவிலில் என்ன நடந்தது? நான் எப்படி இங்க வந்தேன்?” என்றவள், குழப்பத்துடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
அங்கே நின்றுகொண்டிருந்த செல்வி, “எழுந்துட்டியாம்மா?” என்று கேட்டபடி அவள் அருகில் பாசத்துடன் வர, இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள் அஷ்வினி.
“நீங்க யாரு? இது யாருடைய வீடு? என் கௌதம் எங்க?” என்றவள், “கௌதம்… கௌதம்…” என்று அழைத்தபடியே அந்த வீட்டைச் சுற்றி வந்தாள். செல்வியோ என்ன செய்வது என்று புரியாமல் அவளுடனேயே நடந்துகொண்டிருந்தார்.
ஹாலுக்கு வந்து நின்றவள், நுழைவாயில் கதவைத் திறக்க முயற்சிக்கவும் அது முடியாமல் போனது. உடனே தன் பின்னால் நின்ற செல்வியின் புறம் திரும்பியவள்,
“என் கௌதம் எங்க? இது யாரு வீடு? நான் போகணும். கதவைத் திறங்க!” என்றவள், திறக்காத கதவைப் பிடித்து ஆட்டினாள்.
அவள் வார்த்தைக்கு வார்த்தை ‘என் கௌதம், என் கௌதம்’ என்று கூற, செல்விக்கோ கோபம் தலைக்கேறியது.
“என்ன, சும்மா கௌதம், கௌதம்னு சொல்லுற? கல்யாணமான பொண்ணு புருஷன் பேரைச் சொல்லாமல், வேற எவன் பேரையோ சொல்லிட்டு இருக்க? இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லா இல்லை, சொல்லிட்டேன்!” என்று அவர் கண்டிப்புடன் பேசினார்.
அவரை ஆழ்ந்து பார்த்த அஷ்வினி, “இங்க பாருங்க, நான் என் புருஷன் பேரைத்தான் சொல்லிட்டு இருக்கேன். தேவையில்லாமல் என்கிட்ட குரல் உயர்த்திப் பேசாதீங்க. புரியுதா?” என்றவள், மீண்டும் கதவைத் திறக்க முயன்றாள்.
‘என்ன சொல்லுறா இவள்?’ என்று யோசித்தவர், மீண்டும் அஷ்வினியிடம்,
“உன் புருஷன் தீரன்! கௌதம் இல்லை. இன்னொரு முறை உன் வாயிலிருந்து கௌதம்னு வார்த்தை வந்தது, அவ்வளவுதான்!” என்றார்.
“வாட்?” என்று அஷ்வினி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.
“என்ன முழிக்கிற?”
“இங்க பாருங்க, ஓல்ட் லேடி! நீங்க வேற யாரோன்னு நினைச்சிட்டு என்கிட்ட தப்பா பேசுறீங்க. என் புருஷன் பேரு கௌதம்தான். தீரன் இல்லை. எங்களுக்குக் கல்யாணமாகி மூணு மாசம் ஆகுது!” என்றாள் அஷ்வினி.
“ஆமா, தாலி எங்க?” என்று செல்வி கேட்க,
அப்போதுதான் அஷ்வினி குனிந்து தன் கழுத்தைப் பார்த்தாள். அங்கே தாலி இல்லாமல் இருந்தது.
‘அப்போ இன்னிக்கு கோவில்ல எங்களுக்குக் கல்யாணம் நடக்கலையா? என்ன நடக்குது இங்க? நான் உடனே இங்கிருந்து போகணும்!’ என்று எண்ணியவள், வெளியே செல்ல வேறு வழியைத் தேடினாள்.
அவள் அங்குமிங்கும் ஓடுவதைப் பார்த்த செல்வி, “நில்லு!” என்றபடி அவள் பின்னால் சென்றார்.
ஒரு கட்டத்தில் செல்வி நின்றுவிட, “இங்க பாருங்க, என்னை இங்கிருந்து போக விடுங்க. நான் என் கௌதம் கிட்ட போகணும்!” என்று அவள் கூறினாள்.
செல்வியோ கோபமாக, “முடியாது! இதுதான் உன் புருஷன் வீடு. நீ இனி இங்கதான் இருக்கணும்!” என்று மறுத்துவிடவே,
அஷ்வினிக்குப் பயமும் கோபமும் ஒருசேர வர, என்ன செய்வது என்று தெரியாமல் செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“நானும் சொல்லிட்டே இருக்கேன்! இது என் வீடு இல்லை! நான் கௌதமுடைய மனைவி… கௌதம்…” என்று கத்தியவள், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள்.
அஷ்வினி அறைந்ததில் அவளுடைய நான்கு விரல்களும் செல்வியின் கன்னத்தில் பதிந்திருந்தன.
மயங்கிய அஷ்வினி கீழே விழாமல் பிடித்த செல்வி, “பரமா!” என்று அழைத்தார்.
அப்போது கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த பரமன், “என்ன ஆச்சும்மா?” என்று கேட்டான்.
“பரமா, இங்க வா!” என்று அவனை அழைத்த செல்வி, அவன் துணையுடன் அஷ்வினியை அவளுடைய அறையில் படுக்க வைத்தார்.
“தீரன் எங்க? யாரு அந்தப் பொண்ணு? நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை பார்த்து வச்சிருக்கீங்க? அவன் என்னன்னா இவளைப் பொண்டாட்டின்னு சொல்லுறான். இவள் என்னன்னா வேற ஒருவன் பேரைச் சொல்லி அவனைப் புருஷன்னு சொல்லுறாள். என்னடா இதெல்லாம்?” என்று பரமனிடம் விசாரித்தார்.
“எனக்கு எதுவும் தெரியாதும்மா. நீங்க எதிர்பார்க்கிற பதில் என்கிட்ட இருந்து உங்களுக்குக் கிடைக்காது. மன்னிச்சிடுங்க!” என்ற பரமன் மௌனமாக வெளியே சென்றான்.
—
இருள் சூழ்ந்த பிறகு தீரன் வீட்டை வந்தடைந்தான்.
அவன் வந்ததும் வாசலை மறைத்தபடி செல்வி நிற்க, அவனோ அவரைக் கடந்து உள்ளே சென்றவன், “அவள் சாப்பிட்டாளா?” என்று கேட்டான்.
“யாரு அந்தப் பொண்ணு?” என்று செல்வி அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, ஆழ்ந்த பெருமூச்சு விட்ட தீரனோ,
“அதைத்தான் காலையிலேயே சொன்னேனே, அவள் என் பொண்டாட்டின்னு!” என்றவன், இருக்கையில் சாவகாசமாக அமர்ந்துகொண்டான்.
“பொய் சொல்லாத, தீரா!”
“உங்ககிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன கிடைக்கப்போகுது?”
“பொண்டாட்டின்னு சொல்லுற. ஆனால், அவள் கழுத்தில தாலி இல்லையே?”
“ஓ… அதுதான் உங்களுக்குப் பிரச்சினையா?” என்றவன், அப்போதுதான் செல்வியின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.
அவன் பார்வையை உணர்ந்துகொண்ட செல்வி, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.
அவருடைய செயலில் வித்தியாசத்தை உணர்ந்தவன், அவர் அருகில் வந்து கன்னத்தைப் பார்க்க, அதில் தெரிந்த கைத் தடமே இது அஷ்வினியின் வேலைதான் என்பதைச் சொல்லியது.
“அவள் உன்னை அடிச்சாளா? சொல்லும்மா?” என்று அவன் ஆக்ரோஷமாகக் கேட்க, அவரே பயந்துபோனார்.
“இல்ல… டா, அது தெரியாமல்…” என்று செல்வி மறைக்கப் பார்க்க,
“அவளை…” என்று கோபத்துடன் கர்ஜித்தவன், அஷ்வினியின் அறையை நோக்கிச் சென்றான். அவனைத் தடுக்க முடியாமல் திகைத்து நின்றார் செல்வி.
அறைக்குள் நுழைந்தவன், மின் விளக்கை அணைத்தபடி உள்ளே செல்ல, அப்போதுதான் மயக்கம் தெளிந்து சற்று விழித்துப் படுத்திருந்த அஷ்வினி, திடீரென விளக்குகள் அணைக்கப்பட்ட விதத்தில் மெத்தையிலிருந்து துள்ளி எழுந்தாள்.
கதவைத் தாழிட்ட தீரன், கோபம் மாறாமல் அவளுடைய கூந்தலை ஒற்றைக் கையால் கொத்தாகப் பிடித்து இழுத்து, அவளது முகத்தைச் சுவரில் வைத்து அழுத்தினான்.
“ஆஆ…” என்று வலியில் அவள் அலற, அவனோ,
“எவ்வளவு தைரியம் இருந்தால் என் அம்மா மேல கை வச்சிருப்ப? அதுவும் அவங்க வயசுக்குக்கூட மரியாதை இல்லாமல் இப்படி நடந்திருக்க?!” என்றவன், கோபம் தாளாமல் அவளது முகத்தை இன்னும் சுவரில் வைத்து அழுத்தினான்.
“யாரு நீ? என்னை விடு! நீங்க எல்லாரும் யாரு? என் கௌதம் எங்க?” என்றவள், அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.
“ஓ… உன் கௌதம்! ஆஹான்… நான் யாருன்னு கேட்கிறியா? அது இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்குப் புரியும்டி!” என்றவன், ஒரு கையால் அவளுடைய கழுத்தை இறுக்கிப் பிடித்தபடியே, மறுகையால் தன் சட்டைப் பையில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்தான்.
அவள் அதனை உணரும் முன்பே அவளுடைய கழுத்தில் கட்டினான்.
அந்த இருளில் எதிரில் இருந்தவனின் முகம்கூட அவளுக்குத் தெரியவில்லை. அவன் செய்த காரியமும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு கனத்தைத் தன் மார்பில் உணர்ந்தவள், அதனைத் தொட்டுப் பார்க்க, அப்போதுதான் அவன் செய்த காரியத்தை உணர்ந்தாள்.
“ஏன் இப்படி பண்ண? நான் வேற ஒருவருடைய மனைவி!” என்று இயலாமையுடன் கூறியவள், கண்ணீருடன் கலங்கி நின்றாள்.
அவளுடைய தோளை வலிக்கப் பற்றியவன், அவளைச் சுவரில் சாய்த்தான்.
அவனுடைய உஷ்ணத்தைத் தன் காதருகில் உணர்ந்த பெண்ணவள், முகத்தைத் திருப்பிக்கொள்ள, கேலியாகச் சிரித்தவன்,
“நீ ரொம்ப எதிர்பார்க்கிற போலவே? ஆனால், என்ன பண்ணுறது? உன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி பண்ண இப்போ எனக்கு மூட் இல்லை!” என்றான்.
அவனுடைய இதழ்கள் அவளது காது மடல்களை மெல்ல உரசியதும், பெண்ணவளின் தேகம் தடுமாறத் தொடங்கியது.
ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள், அவனிடமிருந்து விலகப் போராடினாள். அவளுடைய போராட்டம் எல்லாம் அவன் முன் வீணாகிப்போனது. அவளுடைய பலவீனம் அவனுடைய பலமாகிப்போனது.
தனது வலது கரத்தால் அவளுடைய இடையை அழுத்திப் பற்றினான் தீரன்.
அவன் கொடுத்த வலியைத் தாங்கிக்கொள்ள முடியாதவள், “வலிக்குது… ப்ளீஸ்!” என்று கண்ணீருடன் கூற, அவனுடைய பிடியோ தானாகத் தளர்ந்தது.
“நான் யாருன்னு கேட்கிற, இல்ல? நம்ம உறவுக்குச் சாட்சி இந்த இருள் மட்டும்தான். ஒருநாள் அது உனக்குப் பதில் சொல்லும். நான் யாருன்னு!” என்று கூறியவன், நொடிப்பொழுதில் அவளை விட்டு விலகி நின்றான்.
வெளியே செல்லும் முன் மின் விளக்குகளை ஒளிரச் செய்தான்.
அவளுக்கோ அவனுடைய முதுகு மட்டுமே தெரிந்தது. செல்லும் அவனுடைய முதுகை வெறித்துப் பார்த்தவள், அப்படியே சிலையெனக் கீழே சரிந்து அமர்ந்தாள்.
அப்போதுதான் கண்ணீருடன் அவன் கட்டிய தாலியைத் தன் கையில் எடுத்துப் பார்த்தவள், “ஆஆ…” என்று கதறி அழுதாள்.
அவளுடைய கதறல் சத்தம் தீரனின் செவியில் நுழைந்தது. கண்களை மூடி திறந்தவன், அங்கிருந்து செல்லத் தயாரானான்.
அப்போது செல்வி அவனைக் கடந்து சென்று அஷ்வினியின் அறைக்குள் நுழையப் போனார்.
“அம்மா, வேண்டாம்!” என்று தீரனின் குரல் அவரைத் தடுக்க,
“டேய், பாவம்டா! எப்படி அழுறா பாரு! என்னடா பண்ண அவளை? அடிச்சியா?” என்று கேட்டார்.
அவனுடைய தாயுள்ளத்துக்கு, அவன் அப்படியான ஒரு செயலைச் செய்திருக்க மாட்டான் என்பது தெரியும். இருந்தும், அவளுடைய கதறலை ஏற்க முடியாமல் நின்ற செல்வி,
“பதில் சொல்லு, தீரா!” என்றார் ஆக்ரோஷமாக.
“எப்படிச் சொன்னால் உங்க மருமகளுக்குப் புரியுமோ, அப்படிச் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்!” என்றவன் கீழே சென்றான்.
செல்வியோ அஷ்வினியின் அறைக்குள் நுழைந்தார்.
அஷ்வினியோ மூலையில் மடங்கி அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
அவளுடைய நிலையைக் கண்டு ஒரு பெண்ணாக மனமுடைந்து போனார் செல்வி. மெல்ல அவள் அருகில் வந்தவர், அவளருகில் அமர்ந்து அவளுடைய தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தார்.
அவருடைய தொடுகையை உணர்ந்து அரண்டு நிமிர்ந்து பார்த்தாள் அஷ்வினி.
“பயப்படாதம்மா. உனக்கும் என் மகனுக்கும் என்ன பிரச்சினைன்னு எனக்குத் தெரியல. ஒண்ணு மட்டும் உண்மைம்மா, என் மகன் ரொம்ப நல்லவன்…” என்று அவர் கூற,
விரக்தியாகச் சிரித்த அஷ்வினி,
“நல்லவன்தான்! அடுத்தவன் மனைவியைக் கடத்திட்டு வந்து, கட்டாயப்படுத்தி அவள் கழுத்தில தாலியைக் கட்டுவானா?” என்று கண்ணீருடன் கேட்டவள், தன் கழுத்தில் இருந்த தாலியைத் தூக்கிக் காட்டினாள்.
அவளுடைய கண்ணீரிலும் கேள்வியிலும் செல்வியின் தாயுள்ளம் தவித்துப்போனது.
