காதல்- 2

அத்தியாயம்- 2

எத்தனை மணிநேரம் அமிர்தாவின் கைப்பேசியை பார்த்துக் கொண்டு இருந்தானோ அது அவனுக்கே தெரியவில்லை.

அவள் அவனை விட்டு பிரிந்துச் சென்ற இந்த மூன்று மணி நேரமும் அமிர்தயாழினியின் தொடுதிரையில் தான் அவன் பெருவிரல் சுழன்றுக் கொண்டு இருந்தது.

அதில் தெரிந்த அவனின் புகைப்படமும் அவன் குழந்தையின் புகைப்படத்துடன் அவளின் புகைப்படத்தை வெட்டி அவர்களுடன் தொகுத்து வைத்தது போல் வடிவமைத்து இருந்தது அந்த தொடுதிரையில் இருந்த படம்.

அதை பார்க்க பார்க்க ஏனோ அவன் மனம் என்னவோ செய்வது போல் உணர்ந்தவன், அதன் வலியை விரும்பியே ஏற்பது போல், அந்த படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

பார்க்க பார்க்க அவன் மனம் அழுத்தமாக மாற, கரமோ இறுக்கத்தை தத்தெடுத்தது போல் மிகவும் இறுக்கமாக அவன் மற்றொரு கரத்தில் இருந்த தாலியை கெட்டியாக பிடித்தான்.

அவள் பிரிந்துச் செல்கிறேன் என்று சொல்லி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்ட அடுத்த நொடி அவன் அணிவித்த தாலியை கழட்டிக் கொடுக்க சொன்னான்.

அவளின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டு இருக்கிறோம் என்று அறிந்தவன், அதன் வலியை மேலும் அதிகப்படுத்தவே தாலியை கழட்டி கேட்டான் ருத்ரதேவ்.

அவனின் எண்ணங்கள் அவளுக்கு புரிந்ததோ என்னவோ விரக்தியான புன்னகையுடனே அவள் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து அவன் கரத்தில் திணித்தவள் “குட் பை மிஸ்டர் ருத்ரதேவ்” என்று நிமிர்வாக சொல்லிவிட்டே அவனை பிரிந்துச் சென்றாள்.

அந்த வீட்டின் கேட்டை தாண்டும் வரை தான், அவளின் அந்த துணிவு, நுழைவாயிலை தாண்டி அடுத்த கணம் தளர்ந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

கிட்டதட்ட மூன்று மணி நேரம் கடந்து இருந்தது. அறையினுள் இருந்த ருத்ரதேவ்வின் செவிகளில் மகன் அழும் சத்தம் தீண்ட, அடுத்த கணம் கைப்பேசியையும் தாலியையும் பத்திரப்படுத்தி எடுத்து வைத்து விட்டு மகனை தேடிச் சென்றான்.

அங்கே நான்கு வயது கொண்ட அவன் மகன் அத்விக் அமிர்தயாழினியின் புகைப்படத்தை வைத்து அழுதுக் கொண்டு இருந்தான்.

அதை பார்த்ததும் ருத்ரதேவ்வின் மனமும் கனத்து போனது போல் தோன்றியது.

பெருமூச்சு விட்டவன் “அத்விக்” என்று அழைத்தான்.

தந்தையின் குரலை கேட்டதும் சட்டென்று திரும்பி பார்த்த அத்விக் “அப்பா… அம்மா வேணும்” என்று அழுதுக் கொண்டே தந்தையின் அருகில் வந்து அவன் காலை பிடித்துக் கொண்டான் அத்விக்.

குனிந்து மகனை தூக்கிக் கொண்ட ருத்ரதேவ் மகனின் கன்னத்தில் முத்தம் பதித்து அவன் கண்ணீரை துடைத்து விட்டவன் “அம்மா வருவா, நீ அமைதியா தூங்கு. எதுக்கு இந்த நேரத்தில் எழுந்த?” என்று அங்கே சுவரில் மாட்டி இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.

அதுவோ விடியற்காலை நான்கரை மணி என்று காட்ட, அவனுக்குள் ஒரு பெருமூச்சு தான்.

அத்விக்கோ “எனக்கு ரொம்ப பசி எடுத்ததுப்பா. அதான் அம்மாவை தேடினேன். ஆனால் அம்மாவை காணும். அத்தை கிட்ட போய் அம்மா எங்கேனு கேட்டா, செத்து போச்சுனு சொல்றாங்கப்பா. பசி எடுக்குதுனு சொன்னேன், திட்டி அனுப்பிட்டாங்க. எப்போவும் அம்மா நான் எழுந்ததுமே பெரிய டம்ளர் நிறைய பால் கொடுப்பாங்க. அதை குடிச்சுட்டு நான் திரும்ப தூங்கிடுவேன். இப்போ ரொம்ப பசிக்குதுப்பா” என்று தன் சின்ன குரலில் அவன் சொல்ல சொல்ல, ருத்ரதேவ்விற்கு அவன் தங்கை நித்யாவை நினைத்து கோபம் அதிகமாகியது.

அதே சமயம் அமிர்தயாழினியின் எண்ணங்களும் திரும்ப திரும்ப அவனை இம்சை செய்துக் கொண்டு இருந்தது.

திருமண முடிந்த இந்த ஒரு வருடத்தில் எத்தனை பாதிப்புகளை அவனிடமும் அவன் மகனிடம் பிரதிபலித்து விட்டாள் என்று நினைத்து வியந்தான்.

“சரி வா, அப்பா பால் கலக்கி தரேன். குடிச்சிட்டு தூங்கு சரியா?” என்று கேட்டுக் கொண்டே மகனை தூக்கியபடி சமையலறைக்குள் சென்றான்.

சமையலறையில் விளக்கை போட்டவன், பால் எங்கே இருக்கிறது என்று தேடினான்.

ஆனால் அங்கே எங்கேயும் பால் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க, அதில் கோபம் எழுந்தாலும் மகன் அருகில் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன் மகனை சமையல் மேடையில் அமர வைத்து விட்டு குளிர்சாதன பெட்டியை திறந்தான்.

அதில் ஒரு பாக்கெட் பால் இருப்பதை பார்த்து, அதை எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தான்.

தந்தை செய்வதை பார்த்துக் கொண்டு இருந்த அத்விக் “அம்மா கூட என்னை இப்படி தான்ப்பா உக்கார வச்சிட்டு என் கிட்ட சிரிச்சி பேசிட்டே வேலை செய்வாங்க. எப்போ அத்தை வந்தாங்களோ அதிலிருந்து அம்மா சிரிக்கிறதே இல்லை” என்று கூறினான்.

மகன் அமிர்தாவை மிகவும் கவனித்து இருக்கிறான் என்று புரிந்தது ருத்ரதேவ்விற்கு.

“ம்” என்று மட்டும் சொன்னவன் டம்ளரை எடுத்து அதில் கொதித்துக் கொண்டு இருந்த பாலை ஊற்றினான்.

அத்விக்கோ “அப்பா சக்கரை போடலையா?” என்று கேட்க, அந்த சமயம் அவன் கவனம் மகனிடம் திரும்ப, சூடான பால் அந்த சமையல் மேடையில் ஊற்றி விட, அது அத்விக்கின் தொடையை சுட்டது.

பாலின் சூட்டில் அத்விக் “அம்மா” என்று அலறிய அந்த கணம்,

“அத்விக் குட்டி” என்று கண்களை விழித்தாள் அமிர்தயாழினி.

பயணித்துக் கொண்டு இருந்த பேருந்தில் அப்படியே அசந்து உறங்கியவளின் நினைவுகள் முழுவதும் அத்விக் மற்றும் ருத்ரதேவ் தான்.

அத்விக்கை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் அழைப்பது போன்று தோன்ற பதறி எழுந்து விட்டாள்.

பின் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு பேருந்தில் இருப்பது தெரிந்தது.

அதன் பிறகு தான் நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவிற்கு வந்து செல்ல, தெளிந்த முகம் மீண்டும் இறுக்கமாக மாறியது.

ஆனாலும் அவள் மனம் ஏனோ பிசைய ஆரம்பித்து இருந்தது. கை கடிகாரத்தை பார்த்தாள்.

அதில் ஐந்து மணியை நெருங்கிக் கொண்டு இருப்பது தெரிய, அவளின் மனமோ ‘இப்போ அத்விக் எழுந்து பால் குடிக்கிற நேரமாச்சே’ என்று தான் யோசித்தது.

தாயிற்கே உண்டான படப்படப்பு தான் அது. என்ன தான் அத்விக் அவள் சுமந்து பெற்ற பிள்ளை இல்லை என்றாலும், அவன் பிறந்ததிலிருந்து அவளிடம் தானே வளர்ந்தான்.

ருத்ரதேவ்விற்கும் அவளிற்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் தான் என்றாலும், அதற்கு முன்பு இருந்தே அவளுக்கு அவனை நன்றாகவே தெரியும்.

விரும்பியே அவன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவள்.

காதலித்தவனுக்காக அவளின் அனைத்தையும் தூக்கிப் போட்டு வந்தவள் தான் அவள்.

அவனின் ஒரு பார்வை தீண்டலுக்காக மூன்று வருடங்களாக காத்திருந்த காதல் பைத்தியக்காரி அவள்.

கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும், அவனுக்காக பிடிவாதமாக காத்திருந்தவள் அவள்.

அப்படி காத்திருந்தவளுக்கு அத்விக் மூலம் தானாக அமைந்தது தான் அந்த திருமணம்.

திருமணம் முடிந்ததும், அனைத்து பெண்கள் போல் தான் அவளும் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தாள்.

ஆனால் அவளின் எதிர்பார்ப்பில் ஒன்று கூட நிறைவேறியதில்லை
ஒன்றை தவிர.

அவள் மீது அவனுக்கு துளியும் காதலும் இல்லை அன்புமில்லை. இருந்தாலும் மகனுக்காக அமிர்தாவை திருமணம் செய்துக் கொண்டவன் அவன்.

முதல் திருமணம், தோல்வியில் முடிந்த துரோகத்தின் வலி அவனுள் பெரிய பாதிப்பை கொடுத்து விட்டுச் சென்றது.

குழந்தை பிறந்தவுடன், தனக்கு பிடித்த வாழ்க்கை வாழ போகிறேன் என்று தாலிக்கட்டியவனுக்கும் சுமந்த குழந்தைக்கும் மிகப் பெரிய துரோகத்தை பரிசாக கொடுத்து விட்டுச் சென்றாள் ருத்ரதேவ்வின் முதல் மனைவி மகாலட்சுமி.

ருத்ரதேவ்விற்கு சொந்தம் என்று யாருமில்லை. கூட பிறந்த ஒரு தங்கையை தவிர.

அவன் பெற்றோர்கள், ஒரு விபத்தில் இறந்து விட, கல்லூரி படிப்பை முடித்த கையுடன் அவன் தந்தையின் தொழிலை கையில் எடுத்து இருந்தான் ருத்ரதேவ்.

எப்பொழுதுமே தனிமையை வெகுவாக விரும்புபவன் அவன். அதனாலே அவனுக்கு நட்புகள் வட்டம் என்பதே கிடையாது.

அவனுடன் இருக்கும் ஒரே நண்பன் என்றால் அது, அவனின் பள்ளி வயது முதல் இப்பொழுது வரை தொடரும் ஒரே தோழன் சிவா மட்டும் தான்.

ருத்ரனின் மென்மையான பக்கத்தை அவன் மட்டும் பார்த்து இருக்கிறான்.

அவன் தங்கை நித்யாவுடன் கூட அவன் பெரியதாக பேசிக் கொள்ள மாட்டான். ஆனால் அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்துக் கொடுத்து விடுவான்.

பெற்றோர் இறந்தாலும், அவர்களின் சொத்தே அவர்களை நன்றாக வாழ வைக்க வசதியாக இருந்தது.

அதனால் தான் என்னவோ அண்ணணுக்கும் சரி தங்கைக்கும் சரி பணக் கஷ்டம் என்ன என்று தெரியாமலே போய் விட்டது.

ஒருவருக்கு ஒருவர் அவர்கள் வாழ்க்கையில் தலையிட்டுக் கொண்டதே கிடையாது. அவர்களின் வாழ்க்கை பயணத்தில் ஒன்றாக பயணம் செய்தாலும், அது தனி தனி இருக்கை தான்.

இருவரின் வாழ்க்கையும் நன்றாக போய் கொண்டிருந்த சமயம் சிவா தான் நித்யாவின் திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்தான்.

இல்லை பேச வைத்து இருந்தாள் நித்யா. அவளுக்கு பேசியே ஆக வேண்டிய கட்டாயம் வேறு.

பெற்றோர்களுக்கு அப்புறம் அவள் எந்த விஷயங்களாக இருந்தாலும், ருத்ரதேவ்விடம் நேரடியாக கேட்க மாட்டாள். எதுவாக இருந்தாலும் சிவா மூலம் தான் ருத்ரதேவ்விற்கு சென்று அடையும்.

ருத்ரதேவ்வும் தங்கை தன்னிடம் உரிமையாக எதுவுமே கேட்க மாட்டிகிறாளே என்றெல்லாம் கவலைக் கொண்டதில்லை.

ருத்ரதேவ்வை பொறுத்தவரை, அவனை தொந்தரவு செய்யாமல் இருக்கும் வரை அமைதியாக இருந்துக் கொள்வான்.

ஆனால் அவனை சம்மந்தப்பட்டு ஏதாவது என்றால் தங்கை என்றெல்லாம் பார்க்க மாட்டான். உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.

அதற்காகவே நித்யா பயந்துக் கொண்டே இப்பொழுது சிவாவின் மூலம் அவள் திருமணத்தை பற்றி பேச தூது அனுப்பினாள்.

“சிவா அண்ணா” என்று மெல்ல தயங்கி அமர்ந்தவள் அவனுக்கு முன் இருந்த டீ கப்பை எடுத்து புன்னகையோடு அவனிடம் நீட்டினாள் நித்யா.

அவனோ நித்யாவை யோசனையுடன் பார்த்து ‘என்ன சரவெடி தானா வந்து டீ கப்பை எடுத்து கொடுக்குது. ஒருவேளை நம்மளை பலியாடு ஆக்க போகுதா?’ என்று சரியாகவே யூகித்து இருந்தான் சிவா.

பின்னே எத்தனை முறைகள் அவனை பலியாடாக மாற்றி, தனக்கு தேவையானதை அவள் அண்ணன் மூலம் செய்ய வைத்து இருந்தாள் நித்யா.

அவன் நினைத்து போலவே அவனை பலியாடாக மாற்ற தான் சிரித்தபடி சிவாவின் முன் அமைதியான பெண் போல் அமர்ந்து இருந்தாள் நித்யா.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page