அத்தியாயம் 22

 

மயூரி கிளம்பி கீழே வர, ரஞ்சனும் கிளம்பி டீ ஷர்ட் ஜீன்ஸ் என்று வந்தான்.முதன்முதலில் பார்மல் உடையில் அல்லாமல் இருந்த கணவனை ரசித்தவளை நேராக பார்த்தான் ரஞ்சன்.

சட்டென பார்வையை தாழ்த்தி கொண்டாள்,அதை கண்ட ரஞ்சனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.. 

தலையை தாழ்ந்தி கொண்டவள், வெட்கமின்றி அவனையே நாடும் மனதை திட்டிக் கொண்டே டைனிங் அறைக்கு சென்றாள் மயூரி 

உணவை தட்டில் வைத்த மரகதத்திடம் “அத்தை.. பாலே போதும்.. “ என்று ஏதோ கூற முயன்றவளை ரஞ்சனின் அதட்டல் குரல் நிறுத்தியது.

“என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ..? எல்லாரும் உன்னை கொஞ்சி தாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கியா..? இப்போ ஒழுங்கா சாப்பிட போறியா இல்லையா..? “என்றான் கோபமாக 

அமைதியாக இரண்டு இட்லிகளை உண்டவள்,மாமியாரை இறைஞ்சுதலாக பார்த்தாள். உண்டு முடித்திருந்த ரஞ்சனோ..

“கையை கழுவிட்டு எழுந்து வான்னு.. சொல்லணுமா…? “என்று சொல்லவும் அமைதியாக கையை கழுவிவிட்டு அவன் பின்னே சென்றாள்.

செல்லும் மயூரியை பார்த்து மரகததிற்கு சிரிப்பு தான் வந்தது.ஒரு வாரத்திற்கு முன் இருந்த அதே மயூரி தான் இது என்றால் அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது.

வெளியே சென்ற ரஞ்சன் அங்கே நின்றிருந்த ஆனந்திடம்.

“ஆனந்த், நீ ஆபீஸ் கிளம்பு,மதியம் வரை என்னால வர முடியாது ..”என்றபடி கார் சாவியை அவனிடம் இருந்து வாங்கினான் ரஞ்சன்.

“க்கும்…நான் வேணா அத்தை கூட ஹாஸ்பிடல் போய்கிறேன்…நீங்க கிளம்புங்க.. “என்றாள் மயூரி.

 வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தவன்,நின்று தலையை மட்டும் திரும்பி முறைக்க அதற்கு முன் ஆனந்தோ.. 

“ஹாஸ்பிடலுக்கா..!என்னாச்சு மயூரி..? “என்று பின்னே வந்த அவளை கேட்க, அவள் ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன், ரஞ்சன் ஆனந்த் முன்னே சொடுகிட்டான்.

அவன் அவனை பார்க்க 

“அவளுக்கு ஒன்னும் இல்ல, லேசா பீவர் அவ்ளோ தான்.. அதுக்கு எல்லார் உயிரையும் வாங்கிட்டு இருக்கா.. நீ வேற விளக்கம் கேட்டு உயிர வாங்காத கிளம்பி ஆபிஸ் போற வழியை பாரு..“என்றவன் மயூரியை முறைத்தபடி முன்னே காரை நோக்கி நடந்தான்.

காரில் பின் இருக்கையில் ஏற போன மயூரியை காரில் ஏறாமல் நின்று முறைத்தான் ரஞ்சன்.மயூரி புரியாமல் விழிக்க,

“நான் உனக்கு டிரைவர்..”என்று அவன் கூறிமுடிக்கும் முன், முன்னே வந்து ஏறிகொண்டாள்.

வெளியே நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த மரகதமும் ஆனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

 காரில் சிறிது தூரம் அமைதியே நிலவியது. மயூரி அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்து இருந்தாள். ரஞ்சன் அவளைத் திரும்பி இருமுறை பார்த்தவன், குரலைச் செருமிக் கொண்டு,

 “க்கும்…உன் அண்ணன்…அவன் பெயர் என்ன? மகேந்திரன் தானே?” என்றான் ரோட்டைப் பார்த்தபடி.

​”ஆமா” என்றாள் பார்வையைத் திருப்பாமலே.

​”அவனுக்கு உன் மேல் அவ்வளவு பாசமா என்ன?” என்றான். 

ரஞ்சனைச் சட்டெனத் திரும்பிப் புரியாமல் பார்த்தாள் மயூரி. அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன், “இல்ல… என்னைப் பார்த்தாலே முறைக்கிறானே..?அதான் கேட்டேன்” என்றான்.

​”அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. உங்ககிட்ட என்னை மாட்டிவிட்டதே அவன்தான்” என்று கூறியவள், வெளியே திரும்பி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

​”ஹக்….மாட்டிவிட்டானா? சரிதான்!” என்றவன் உதட்டில் வெளியே தெரியாத லேசான புன்னகை எழும்பியது.

 அதன் பின் அமைதியாக இருவரும் பயணிக்க, மயூரிக்கு மனதினுள் பல குழப்பங்கள் ஓடிக்கொண்டே இருந்தது.

​மருத்துவமனை வந்ததும் இருவரும் இறங்கி உள்ளே செல்ல, ரஞ்சன் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் நேராக மருத்துவரைத் காண உள்ளே சென்றனர். 

மயூரிக்கு மருத்துவரைத் கண்டு ஒரே ஆச்சரியம். அவளை விட சில வயது மூத்தவளாக இருப்பாள், கிட்டத்தட்ட ரஞ்சன் வயது என்று சொல்லலாம். மிக அழகாகவும் இருந்தாள். ரஞ்சனைக் கண்டதும் முகம் மலர, 

“வாங்க ரஞ்சன் எப்படி இருக்கீங்க?” என்றாள்.

​அவனும் புன்னகையுடன், 

“யாஹ் ஐ யாம் பைன் டாக்டர்..”என்றான்.

“ம்ம்…கண்டிப்பா இருக்கணுமே… உங்க மன உறுதிக்கு நீங்க நல்லா இல்லைன்னாதான் அது கேள்விக்குறி” என்றாள். 

பின் புன்னகையுடன் மயூரியைக் கண்டு, “இவங்க?” என்றாள் மீண்டும் ரஞ்சனை கேள்வியாக.

​”என்னோட மிஸஸ்” என்று அவன் கூறியதும், அவனை முந்திக்கொண்டு,

 “ஏதாவது குட் நியூஸ் எதிர்பார்த்து வந்திருக்கீங்களா?” என்று ரஞ்சனை பார்த்துக் கேட்டாள். 

அவள் கேள்வியில் முதலில் அதிர்ந்தது மயூரிதான். எவ்வளவு அதிர்ச்சி எனில், “சச்ச… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்றாள் அவசரமாக.

​ரஞ்சன் சட்டென அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்தான். அதன் பிறகே மயூரிக்கு நிதர்சனம் புரிந்து நாக்கைக் கடித்துக்கொண்டு தலையைக் குனிந்தாள். 

நிலவிய அமைதியை டாக்டரே கலைத்தார். “இட்ஸ் ஓகே,ஐயம் சாரி… என்ன விஷயம் சொல்லுங்க மிஸ்டர் ரஞ்சன்?” என்றாள்.

​மயூரியைப் பார்த்து, “இவளுக்கு ஃபீவர், அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் ரஞ்சன்.

 “ஓ” என்றபடி மயூரியைப் பரிசோதிக்கத் துவங்கினார் டாக்டர். சில பல கேள்விகளின் பின்,

 “மிஸ்டர் ரஞ்சன், இவங்க ஏன் இவ்வளவு வீக்கா இருக்காங்க? அப்புறம் மேரேஜ் ஆகி சிக்ஸ் மன்த்ஸ் ஆகப்போகுது தானே, இன்னும் இவங்க உங்க வீட்ல செட் ஆகலையா?” என்றாள் ரஞ்சனைக் கேள்வியாகப் பார்த்து.

​ரஞ்சன் பதில் கூற முன், “இல்லை,..அத்தை நல்லாத்தான் கவனிச்சுக்கிறாங்க. நான்தான் கொஞ்சம் ஹோம் சிக்கா இருக்கேன். த்ரீ மந்த்ஸ் காலேஜ் போய்க்கிட்டு இருந்ததால ஒன்றும் பிரச்சனை இல்லை, இப்ப வீட்ல இருக்கறதுனால கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்றாள் மயூரி.

​”மரகதம் அம்மாவைப் பிடிக்கலைன்னாதான் ஆச்சரியம். அப்போ.. ரஞ்சன் உங்களைச் சரியா பார்த்துக்கலை போலயே!” என்றாள் டாக்டர் புன்னகையுடன் ரஞ்சனை கேலியாக பார்த்து. 

தயங்கியபடி, “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை” என்றாள் மயூரி, ரஞ்சனை ஓரப்பார்வை பார்த்தபடி.

“சில்…சும்மா கேட்டேன்…” என்றவள் “ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கலாம் ரஞ்சன்,  ஷி வில் ஃபீல் பெட்டர்.. “என்று 

​நர்ஸை அழைக்க, மயூரி கண்களை விரித்துப் பீதியுடன் டாக்டரைப் பார்த்தாள். 

அவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி ரஞ்சன் அமர்ந்திருக்க, நர்ஸ் வருவதைப் பீதியுடன் பார்த்திருந்தாள் மயூரி. நர்ஸ் அவள் அருகே வந்து அவள் கையில் துணியை வைத்துத் துடைத்தவுடன், கண்களை இறுக மூடி ரஞ்சன் பக்கமாக லேசாகச் சாய்ந்து அவன் கையை மறுக்கையால் இறுகப் பற்றிக் கொண்டாள்.

 கிட்டத்தட்ட தன் தோளில் சாய்ந்து கைகளைப் பற்றி இருந்தவளை திரும்பிப் பார்த்தவன், புன்னகையுடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

​இதனைக் கண்ட டாக்டரும் புன்னகையுடன்,

 “அவ்வளவு பயமா மயூரி? நர்ஸ் இன்ஜெக்ஷன் போட்டுட்டுப் போயிட்டாங்க” என்றாள் சிரிப்புடன்.

சட்டென்று திரும்பிப் பார்த்த மயூரி, பின் ரஞ்சனை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையில் விழிகளைத் தாழ்த்தியவள்.மெல்ல அவன் கைகளில் சிக்கி இருந்த தன் கைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டாள்.

 ரஞ்சன் மென்முறுவலுடன் டாக்டரிடம் பிற ஆலோசனைகளைக் கேட்டவன், அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.

​கொஞ்சம் தூரம் சென்றவன், 

“மூன்று நாள் முன்ன வரை தெரியாத அம்மா அப்பா பாசம் இப்ப தோணுதா உனக்கு?” என்று கேள்வியாக ரோட்டைப் பார்த்தபடி கேட்டான்.

​அவள் ஒன்றும் பேசாமல் இருக்க, 

“ நான் கேள்வி கேட்டா எனக்கு பதில் வரணும்.. “ மயூரி என்றான் சற்று கடுமையாக

 அவள் அப்பொழுதும் அமைதியாகவே இருக்க, அவன் திரும்பி அவளை பார்த்தான் அவள் அமைதியாக கண்ணீர் உகுப்பது தெரிந்தது.

“ஹ்ம்ம்…ஆரம்பிச்சுட்டா.. “ என்றான் சலிப்புடன்.அதன் பிறகு அமைதியே நிலவியது.

கார் வீட்டை அடைந்ததும் ரஞ்சன் இறங்கப் போக மயூரி பேசினாள்,

“மனசுக்கு பிடிச்சத செஞ்சா எங்க இருந்தாலும் சந்தோஷம் கிடைக்கும், அது இல்லைனா அது சொர்க்கமாக இருந்தாலும் நரகம்தான்” என்றவளை அவன் திரும்பிப் பார்க்க, சட்டென இறங்கி நடந்தாள் மயூரி. 

இன்னும் காய்ச்சலின் வீரியம் இருக்க, லேசான தடுமாற்றத்துடன் நிதானமாக நடந்து உள்ளே செல்பவளைப் பார்த்திருந்தவன், இருபுறமும் தலையை ஆட்டிப் பெருமூச்சு ஒன்றை விட்டவன். அவனும் இறங்கி உள்ளே சென்றான்.

​உள்ளே சென்ற மயூரி, மரகதத்துடன் தன் தாயும் தந்தையும் அமர்ந்திருப்பதை கண்டு லேசான புன்னகையுடன் அவர்கள் அருகே சென்று அமர்ந்தாள்.

 மாலினி அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, “காய்ச்சல் குறைந்து இருக்கு சம்பந்தி?” என்றார் மரகதத்தைப் பார்த்து.

“இன்ஜெக்ஷன் போட்டாங்க அம்மா” என்றபடி தாயின் மடியில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். 

சரியாக அந்த நேரம் ரஞ்சன் உள்ளே வர, முத்து எழுந்து அவனைக் கண்டு புன்னகைத்தார். “வாங்க” என்றவன் மயூரியை நக்கலான புன்னகையுடன் பார்த்தான். 

அவனைப் பார்த்தவள் சலிப்பாகக் கண்களை மூடிக்கொண்டாள்.

​”நீங்கள் உட்காருங்க,”என்று முத்துவை பார்த்து கூறியவன் “நான் ஆபீஸ் கிளம்புறேன் அம்மா” என்றபடி அவன் திரும்ப, 

முத்து அழைத்தார். “மாப்பிள்ளை” என்றவர்,அவன் அருகில் வந்தார். 

“மயூரியைக் காய்ச்சல் குணமாகிற வரை அங்க..எங்க வீட்ல இருக்கட்டுமே” என்றார்.

​மயூரி கண்களைத் திறந்து அவனைப் பார்க்க, அவளைப் பார்த்தவன் விழிகளை எடுக்காமலே, “அதெல்லாம் வேண்டாம், எதுக்கு வீண் அலைச்சல்? அதோட…அங்க உங்கள ஏமாத்தி.. க்கும்.. ஒழுங்கா சாப்பிட மாட்றா..ரொம்ப வீக்கா இருக்காளாம். இங்கே நான் சொல்றதைக் கேட்டுச் சாப்பிடறா, அதனால இங்கேயே இருக்கட்டும். வேணும்னா…நீங்க அவ கூட இங்கே ரெண்டு நாள் இருந்துட்டுப் போங்க” என்றான்.

​முத்து ஏமாற்றமாக மகளைத் திரும்பிப் பார்த்தவர், “சரிங்க மாப்பிள்ளை” என்றபடி மீண்டும் இருக்கையில் சென்று அமர்ந்தார். 

மயூரிக்குத் தந்தையைக் கண்டு பாவமாக இருந்தது. அவளை ஒரு பார்வை பார்த்தவன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

​முத்து, ரஞ்சன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட, மாலினி மட்டும் மறுநாள் கிளம்புவதாக இருந்தது. 

ரஞ்சன் மாலை வீட்டிற்கு வந்த நேரம் மரகதம் அறையில் பேச்சு குரல் கேட்டது. “அது சம்பந்தி, மனசுக்கு பிடிச்ச விஷயத்தைச் செய்யக்கூடாதுன்னு ரஞ்சன் சொன்னதும் அவளால் தாங்க முடியல” என்று மரகதத்தின் குரல் கேட்டது.

​அவன் அப்படியே நிற்க, மாலினி பேசினார்

 “ப்ச்…எதுக்கு சம்பந்தி, அவருக்குப் பிடிக்காததைச் செய்யணும்?” என்று அவர் கூறும் முன் மயூரி இறுமும் குரல் கேட்க, 

“அம்மா ,கொஞ்சம்…சூடா பால் வேணும். சரளா அக்கா கிட்ட நீங்க மிளகு எல்லாம் போட்டுத் தருவீங்களே அந்த மாதிரி பால் தயாரிக்கச் சொல்லுங்க” என்றாள்.

​”இதோ வர்றேன்” என்று மாலினி வெளியே வந்து, அங்கு நின்ற ரஞ்சனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு அடுக்களையை நோக்கி நடந்தார். 

மயூரியின் குரல் கொஞ்சம் தாழ்வாகக் கேட்க, ரஞ்சன் அறைவாயிலை நெருங்கிச் சென்றான்.

​உள்ளே மயூரி,

 “ஐயோ அத்தை! அம்மாவுக்கு எதுவும் தெரியாது, நீங்களே கோர்த்து விட்றுவீங்க போல. அப்புறம் அவ்வளவுதான், அங்கிருந்து வந்துடுவாரு பெரிய ஹிட்லர்! ஏற்கனவே இங்க ஹிட்லர்…” என்றவள், வாயிலில் நின்ற ரஞ்சனைப் பார்த்து அமைதியானாள்.

​அவளைப் பார்த்து முறைத்தவன், அவள் தலை குனிந்ததும் உதட்டின் ஓரம் புன்னகை பூத்தது, 

மரகதம் மயூரியைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி,

 “ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே மயூரி?” என்றார்.

​மயூரி அமைதியாக அவரை முறைக்க, ரஞ்சன் உள்ளே வந்து அவள் அமர்ந்திருந்த பக்கம் வந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் பின்,

“ மாத்திரை எல்லாம் கரெக்டா போட்டியா?” என்றான்.

​கண்களில் வெளியேறத் துடித்த கண்ணீரை அடக்கியபடி “ம்” என்று மட்டும் கூறினாள். அவள் கண்ணீரைப் பார்த்தவனுக்கு மனதில் சுருக்கெனத் தைத்தாலும், 

‘எதற்கு இப்படி ‘ம் ‘ எனும் முன் கண்ணீர் விட வேண்டும்?’ என்று கோபமே வந்தது. அதே சமயம் மாலினி காபி கோப்பைகளுடன் உள்ளே வர, மயூரி கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்தாள். 

ரஞ்சனுக்கு அவளின் மனம் படும் வேதனை கஷ்டமாகத்தான் இருந்தது.

​ரஞ்சனுக்கும் காபியைக் கொடுத்த மாலினி, 

“மயூரி, சும்மா என்கிட்டப் பேசுற மாதிரி மாப்பிள்ளைகிட்டயும் விதண்டா வாதமா பேசக்கூடாது புரியுதா? அவர் உன் நல்லதுக்குத்தான் சொல்வார், புரிந்து நடந்துக்கோ” என்று கூற,

 “ம்… புரிந்து நடந்துக்கிட்டா சரி” என்றபடி எழுந்து தன் அறையை நோக்கி நடந்தவனை முறைத்தாள் மயூரி.

​இரண்டு நாட்களில் மயூரியின் காய்ச்சல் நன்றாகக் குணமாகிவிட, மாலினி வீடு சென்றார். முத்து வந்து மகளைப் பார்த்துவிட்டு நிறைய அறிவுரைகளைக் கூறிவிட்டு மனைவியை அழைத்துச் சென்றார்.

 ரஞ்சனும் அவளை ஏதும் கூறாமல் அமைதியாகவே இருக்க, மேலும் ஒரு வாரம் சென்றது. இன்னும் மயூரி சரியாகப் பேசாமலே இருக்க ரஞ்சனுக்குக் கோபமே வந்தது. 

ஆனாலும் அந்தச் கோபத்தைக் காட்ட அவனுக்கு மனம் வரவில்லை; அவள் மனதைக் காயப்படுத்த விரும்பவில்லை என்றே கூற வேண்டும்.

​அன்றைய நிகழ்வின் பின் மயூரி எதற்கும் செல்லவில்லை. வானொலி நிலையத்திற்கும்ச் செல்லவில்லை. மரகதம் கூட, 

“ரஞ்சனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம், அவன் இப்பொழுது எவ்வளவோ மாறிவிட்டான்” என்று கூறிப் பார்த்தார். 

ஆனால் மயூரி எதற்கும் அசையவில்லை.

​அவள் மனது ஏனோ அலைபாய்ந்தது. அது ஏன் என்று அவளுக்கே புரியவில்லை. 

ரஞ்சன் மீது ஏற்பட்ட காதலா? தன் சுதந்திரம் உடைந்த கோபமா? இல்லை அவன் மனம் புண்படுமாறு நடந்து கொண்ட தன் மீதுள்ள ஆற்றாமையா? எது என்று அவளால் வகுத்துக் கூற முடியவில்லை.

​இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்க, இதற்கிடையில் சோனாவிடமிருந்து மயூரிக்கு விடாமல் அழைப்புகள் வந்து கொண்டுதான் இருந்தது. அவளை மீண்டும் வானொலியில் பேச தினமும் ஒருமுறையேனும் அழைத்து விடுவாள் சோனா. 

மயூரிதான் அது இது என்று காரணங்கள் கூறிக்கொண்டு இருந்தாள்.​அன்றும் அப்படித்தான் சோர்வாகப் படுத்திருந்தவள் அருகே இருந்த அலைபேசி சிணுங்கியது. திரையில் சோனாவின் எண்ணைப் பார்த்தவளுக்குச் சலிப்புதான் வந்தது. வெறுப்பாக அதை எடுத்து காதில் வைக்க,

 “ஹல்லோ மயூரி..! எப்படி இருக்க?” என்று கேட்டாள் சோனா.

​”அவ்வளவு ஒன்றும் சிறப்பு இல்லை” என்றாள் மயூரி சோர்வாக.

​”சரி சரி சீக்கிரம் வாம்மா. உன் வாய்ஸுக்காக விசிறிகள் அதிகமா கால் பண்றாங்க. சில பேர் கொலை மிரட்டல் கூட விடுறாங்க..!” என்றாள் சோனா கெஞ்சலாக.

​”என்னால் முடியாது சோனா” என்றாள் மயூரி.

​”ப்ச்..அப்படி என்ன பிரச்சனை? நான் வேணா உன் ஹப்பிகிட்ட பேசவா?” என்று கேட்டாள் சோனா.

​”கெட்டுச்சு போ..! என்னை உயிரோட விட மாட்ட போலயே நீ!” என்றாள் மயூரி.

​”பின்ன என்ன? நீ இந்த வாரம் வரலைன்னா…” என்று சோனா ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போதே, அலைபேசியைத் துண்டித்துத் தூக்கிப் போட்டாள் மயூரி.

 ‘இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு இவ வேற!’ என்று சலித்துக் கொண்டு படுத்திருந்தவள் அலைபேசி மீண்டும் அழைக்க, திரையில் தெரிந்த எண்ணைச் சலிப்புடன் பார்த்தாள். 

மீண்டும் சோனாதான். எடுக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவள், முன் ஒரு வலிய கரம் அந்த அலைபேசியை எடுத்து “ஹலோ” என்றது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page