அறையில் இருந்த அபிராமி தன் முட்டை விழிகளை உருட்டி கொண்டிருந்தாள்.
அவளின் நெற்றி சுருங்கி இருந்தது. தங்கை சமாளித்ததை நினைத்து யோசித்து கொண்டிருந்தாள்.
ஏனோ அஸ்வந்த்திற்கு உடம்பு முழுவதும் அலுப்பாக இருப்பது போல் உணர்ந்தான். ஏதோ தன் மேல் ஒரு மூட்டை இருந்தது போல் உணர்ந்தவன் ஒரு குளியல் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற குளித்து விட்டு அப்போது தான் வந்திருந்தான்.
கையில் வைத்திருந்த டவலால் தன் முகத்தை அழுந்த துடைத்து விட்டு மனைவியை பார்க்க, அவளோ ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை போல் தெரிந்தது.
சுஜித்தை தட்டி கொடுப்பது போல் கொடுத்து கொண்டிருந்தாள். அவளின் கைகள் மட்டும் அந்த வேலையை செய்தது. அவளின் மனம் வேறு எங்கோ சென்று கொண்டிருந்தது.
அபி என்று அழைத்தான். அது அவளின் செவிகளை எட்டவில்லை போலும்.
அதை புரிந்து கொண்டவன் “ஹேய் அபி” என்று அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்தான்.
ஹான்… என்று துள்ளி விழுந்தாள் அபிராமி.
ஹேய் நான் தான் டி. என்னாச்சு உனக்கு? என்ன யோசனை? என்று கேட்டான் அஸ்வந்த்.
இல்லைங்க என்றவள் அவனின் முகத்தை பார்த்தாள்.
குளித்து விட்டு வந்தவனின் கேசம் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று ஒட்டி இருந்தது. அவன் உபயோகப் படுத்திய குளியல் சோப் நறுமணம் வீசியது. அவன் முகத்தை பார்த்து சுவாசத்தை உள்ளிழுத்தாள் அபிராமி.
அவன் இவளின் விழிகளின் மாறுபாடு பார்த்து விலகி நின்றான்.
அபிராமி தன்னை மறந்து அவனை ரசிக்க தொடங்கினாள்.
அஸ்வந்த் அவளின் முக மாற்றத்தை கண்டு நொந்து போனான்.
சுஜித் அவளின் மடியில் இருந்து தன் குட்டி கை கால்களை அசைத்தான்.
அபிராமி தான் பிறவா மகனின் அசைவில் அவன் முதுகில் தட்டி கொடுத்து தொட்டிலில் போட்டாள்.
அவன் சமத்தாக உறங்கினான்.
அபிராமி கட்டிலில் இருந்து எழுந்து அஸ்வந்த் அருகே வர, அஸ்வந்த் வேண்டும் என்றே சுவற்றில் ஓவியமாக தொங்கி கொண்டிருந்த சுகன்யாவின் புகைப்படத்தை ஆசையாக வருடினான்.
அபிராமி அவனின் செய்கையில் அவனை நெருங்கி நின்றாள்.
என்னங்க….என்று தன் கணவனை அழைத்து விட்டு பார்வையை சுகன்யாவின் ஓவியத்தின் மேல் பதித்தாள்
சொல்லு அபி.
சுகன்யா அக்கா எப்படி இறந்தாங்க? என்று தான் கேட்க நினைத்த கேள்வி மறந்து சுகன்யாவை பற்றி கேட்டாள்.
வந்த நாளில் இருந்து சுகன்யாவை அக்கா என்று உரிமையாக கூறும் அபிராமியை எப்படி எந்த விதத்தில் அவளை சேர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.
அபிராமியின் முகம் பார்த்தான். அவளின் முகம் பதிலுக்காக காத்திருந்தது.
எனக்குமே அவள் எப்படி இறந்தான்னு தெரியல அபி என்றான் கலங்கிய கண்களோடு.
என்ன என்றவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.
அன்று நடந்த சம்பவத்தை அபிராமியிடம் கூற தொடங்கினான் அஸ்வந்த்.
என் சுகிக்கு அப்போ நிறை மாதம். அஷ்…. கொஞ்சம் வயிறு வலிக்குற மாதிரி இருக்குதுன்னு சொன்னாள். அப்போ லேட் நைட். நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனோம் என்று கூறி கொண்டிருந்தவனின் கைகளை பிடித்து பஞ்சு மெத்தையில் அமர வைத்தாள் அபிராமி.
டாக்டர்ஸ் செக் பண்ணிட்டு உடனே சிசேரியன் பண்ணனும்னு சொன்னாங்க. நாங்க என்னாச்சுன்னு பதற்றத்தோடு கேட்டோம் என்றவனின் கைகள் அன்று நடந்ததை நினைத்து லேசாக நடுங்கியது.
அதுக்கு அவர் குழந்தை மூச்சு விட சிரமப்படுது. சீக்கிரம் ஆப்ரேசன் பண்ணாதான் தாய் சேய் ரெண்டு பேரும் பாதுகாப்பா இருப்பாங்கனு சொன்னாங்க.
சீசேரியன் பண்ணும் போது குழந்தைக்கோ இல்லை தாய்க்கோ எதாவது ஆனாலோ இல்லை உயிர் சேதம் நடந்தாலும் அதுக்கு நான் தான் பொறுப்பு அப்படினு தெளிவா எழுதிருந்த ரிப்போர்ட்ல நான் தான் அபி சைன் பண்ணேன் என்றவனுக்கு கண்களில் இருந்து நீர் வழிந்தது.
அபிராமி அவனின் கழுத்தை கட்டி கொண்டாள். அவனின் அழுகை இவளை உடைத்தது.
அவங்க சொன்ன மாதிரி சிசேரியன் பண்ணி என் சுகியும் என் சுஜித்தும் சேஃப். ஆனால் அதுக்கு அப்பறம் தான் அவள் உயிர் போக போகுதுனு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் அவளை போக விட்டுருக்க மாட்டேன் என்றவன் குலுங்கி அழுதான்.
என்னங்க ப்ளீஸ். உங்களால சொல்ல முடியலைனா வேணாம்ங்க. நீங்க கலங்குறத என்னால பார்க்க முடியல என்றவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.
ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்குவாள் தன் கணவனின் கண்ணீரை தவிர.
அஸ்வந்த் அழுவது இவளுக்கும் வலியை தர, முதல் முறையாக ஒரு குழந்தை போல் அவனை தன் நெஞ்சில் புதைத்து கொண்டாள் அபிராமி.
அவளின் நெஞ்சுக்குள் இருந்த அஸ்வந்த் அவளின் நெஞ்சிலிருந்து பிரிந்து வந்து அவளின் தோள்களில் புதைந்து கொண்டான்.
சுஜித் நல்ல படியா பொறந்துட்டான். ஆனால், சுகன்யா வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்தாள். அவள் வயிறு வலின்னு சொன்னதும் நாங்க டாக்டர்கிட்டே கேட்டோம். அது தையல் போட்டதால அப்படி தான் வலிக்கும். நார்மல் தான் சொல்லி ஆன்டிபையாட்டிக் கொடுத்தாங்க என்றவனின் விழிகள் சிவந்தது.
அபிராமி தன் கணவனின் கேசத்தில் தன் விரல்களை நுழைத்து அவனை இன்னும் நெருங்கி அணைத்து கொண்டாள்.
ஒரு ரெண்டு நாள் தான் போயிருக்கும். அப்போ ரொம்ப வலிக்குது அஷ்….. னு ரொம்ப அழுதாள் . எங்களால அவள் வலியில அழுறத தாங்க முடியல. நானும் அப்பாவும் உடனே டாக்டர்ஸ்கிட்டே சொல்ல அப்போவும் அவங்க அதே பதில் தான். அப்பறம் நானும் அப்பாவும் கத்தி சண்டை போட்டதும் தான் அவங்க சுகிக்கு ஸ்கேன் பண்ண அவளை தயார் பண்ணாங்க.
அஷ்…. என்னனு தெரியல டா. எதோ தப்பு நடக்க போற மாதிரி தெரியுது என்ற சுகன்யாவின் வாயை பொத்தினான் அஸ்வந்த்.
அப்படி பேசாத சுகி. உன்னைய இப்போ ஸ்கேன் பண்ண தான் போறாங்க. நீ தேவை இல்லாமல் எதுவும் கற்பனை பண்ணாத என்றவனின் குரல் உடைந்து போயிருந்தது.
இல்லை அஷ்…. எனக்கு அப்படி தெரியல. நம்ப ஆசைப்படி நமக்கு பையன் பொறந்துருக்கான். நான் இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி அவனை நல்ல மனுசனா நீ தான் அவனை வளர்க்கணும்.
அம்மாக்கும் இது எந்த மாதிரி வலின்னு புரிஞ்சிக்க முடியல. நான் என் சுகியோட கடைசியா பேசுனது அன்னைக்கு தான்.
ஆறுதல் சொல்லி ஸ்கேன் பண்ண அனுப்பி வச்சேன். ஒரு மணி நேரம்…. ரெண்டு மணி நேரம் ஆச்சு.
நேரம் போய்கிட்டே இருந்து ஆனால் என்னாச்சுன்னு தெரியல.
டாக்டர் வெளியே வந்து ஸ்கேன் ரிப்போர்ட் நாளைக்கு வாங்கிக்கோங்கனு சொன்னாங்க.
அபிராமி புரியாமல் விழிகளை சுழட்டினாள்.
எங்களுக்கு ஒன்னும் புரியல அபி. ஆனால் அடுத்த நாளை என் சுகி பார்க்கவே இல்லை என்றவன் தேம்பி அழுதான்.
அவனின் கண்ணீர் துளிகள் அபிராமியின் தோள்களில் விழுந்தது.
அபிராமி சுவற்றில் தொங்கி கொண்டிருந்த சுகன்யாவின் படத்தை பார்த்தாள். எத்தனை ஆசைகளை சுமந்து இருப்பாள் என்று தன் மனதோடு கேள்வி கேட்டாள்.
எப்படி எங்க பொண்ணு இறந்தான்னு எங்க அப்பா ஹாஸ்பிடல சத்தம் போட்டாங்க. கத்துனாங்க. ஆனால், எங்களுக்கு பதில் கிடைக்கல என்றான்.
அப்பறம் எப்படிங்க தெரிஞ்சுது?
சின்ன பொண்ணுங்க மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ் ரெண்டு பேர் ஸ்கேன் பண்ணும் போது அங்க தான் இருந்துருக்காங்க. அப்பா கத்துனதும் எங்ககிட்டே வந்தாங்க. நாங்க புரியாமல் பார்த்தோம் ரெண்டு பேரையும்.
ஆனால், அவங்க சொன்ன விஷயம் எங்களால தாங்கிக்க முடியல அபி.
சீசேரியன் பண்ணும் போது பெருங்குடல்ல கத்தி பட்டு சின்ன ஹோல்ஸ் விழுந்துருக்கு அது மூலமா என் சுகி சாப்பிட்ட சாப்பாடு ரத்தத்துல கலந்து அவளுக்கு வயிறு வலி வந்துருக்கு. அது உடனே சிகிச்சை பண்ணாததால அப்பறம் மருத்துவர்கள் அலட்சியத்தால என் சுகியோட உயிர் போயிருச்சு என்றான்.
அபிராமியின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்தது.
நாங்க பெரிய இடம் அதுனால டாக்டர்ஸ் எங்ககிட்டே மூடி மறைக்க ட்ரை பண்ணிருக்காங்க. ஆனால், மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ் சொல்லிட்டாங்க. சார் எங்க நிர்வாகிக்கு தெரிய வேணாம் எங்களால படிக்க முடியாதுனு அந்த புள்ளைங்க சொல்லிச்சு.
ஆனால் என் சுகி உயிர் அதை விட பெருசு அபி. நான் சும்மா விடல இந்த விஷயத்தை. கவெர்மென்ட் அப்ரூவ் வாங்கி ஹாஸ்பிடல் இழுத்து மூடி சீல் வச்சேன் என்றான். அவனின் விழிகளில் ஆத்திரம் தெரிந்தது.
மூணு மாசம் அப்படியே தான் இருந்தது. ஆனால் எல்லா கிராமத்துல இருந்தும் அந்த ஹாஸ்பிடல் தான் நம்பி வராங்க. என் சுகிக்கு சீசரியன் பண்ண டாக்டரை எங்கயும் வேலை பார்க்க முடியாமல் அவன் டாக்டர் சீட்டை கிழிச்சேன்.
ஆனால், அம்மா சொன்னாங்க ஒரு உயிர் போனதுக்கு எல்லாம் உயிரையும் தண்டிக்குறது தப்பு தம்பின்னு சொன்னாங்க. அதுனால அம்மா மேல கோபம். யாருகிட்டேயும் பேசல. சுஜித்தோடயும் சுகி இல்லாத வெறுமையோடும் ரூம்குள்ளயே முடங்கிட்டேன்.
இவ்வளவு நேரம் பேசி கொண்டிருந்த தன் கணவனின் விழிகளை பார்த்து வியந்து போனாள் அபிராமி.
அவனின் கை விரல்களை தன் கையோடு கோர்த்து கொண்டாள்.
அவளின் முகத்தை பார்த்த அஸ்வந்த் ” இதுக்கு தான் அபி நமக்கு சுஜித் மட்டும் போதும் சொன்னேன் ” என்று அவன் கைகளை பிரித்து எழுந்து அறையை விட்டு சென்றான்.
அவன் அறையை தாண்டுவதற்குள் அவனின் அருகில் ஓடி வந்தாள் அபிராமி.
அவளின் ஓட்டத்தில் அவன் நடையை நிறுத்தினான் அஸ்வந்த்.
இப்போவும் அந்த ஹாஸ்பிடல் சீல் வச்சி தான் இருக்குதா? என்றவளின் கண்களில் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.
அதை பற்றி பேச வேணாம் அபி என்றவன் விருட்டென்று சென்று விட்டான்.
அபிராமி சோகமாக தன் முகத்தை வைத்து கொண்டாள். இதோ இப்படி தான் 😔.
இருந்தாலும், ” அக்கா உங்க மேல அவருக்கு செம்ம லவ் தான் போங்க” என்றவள் காற்றோடு சுகன்யாவிடம் பேசினாள்.
சுகன்யாவின் மரணம் அவளுக்குள் திகைப்பை உண்டு பண்ணியது.
ஆனால், மறு நொடி சுகன்யாவின் சாயல் சுஜித்தின் முகம் முழுதும் சின்ன சின்ன தூறல்கள் போல் முத்த மழை பொழிந்தாள் அபிராமி.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
