அத்தியாயம் 26
சில விஷயங்களை நாம எப்படி முயற்சி செஞ்சாலும் நடக்குறதை தடுக்க முடியாது. அதை அப்படியே ஏத்துகிட்டு போறதைத் தவிர வேற வழியில்லை. முடிஞ்ச அளவுக்குப் போராடணும். அப்பவும் கை மீறினா எதுவும் செய்ய முடியாது. என்னோட திருமண உறவு நீடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் முகி என்னைப் பார்க்காமல் அவாய்ட் பண்ணற அளவுக்கு என்னோட செய்கை இருந்துருக்கு.
-ஆதி.
பச்சை நிற லெதர் கொண்டு செய்யப்பட்ட மருத்துவமனை மெத்தையில் படுத்திருந்தாள் பத்மமுகி. அருகில் அவளுடைய உதவிக்கு இருக்கும் ஒருவனும், இன்னொரு பெண் அலுவலரும் நின்று கொண்டிருந்தனர். மெல்ல விழிகள் திறந்து அவர்களை நோக்கினாள்.
அவர்கள் முகத்தில் கவலைக்குப் பதில் மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டிருந்தது.
“இந்தாங்க மேம், மாதுளை ஜூஸ் குடிங்க. இந்தக் கன்டிஷனில் சாப்பிடாமல் இருந்துருக்கீங்க.”
அருகில் நின்றிருந்தவன் இனிப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
பழரசத்தை வாங்கிப் பருகியவளுக்கு பசி மெல்ல அடங்கியது.
“இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க அக்கா.”
“ஸ்வீட் எதுக்கு?”
“மேம், உங்க பிரக்னென்சி கன்ஃபார்ம் ஆகிருக்கு. பிளட் டெஸ்ட் கன்ஃபார்ம். அதோட இன்னும் டாக்டர் சில டெஸ்ட் பண்ணனும்னு சொல்லி இருக்காரு.”
முகி முகம் அப்படியே உறைந்தது. இத்தனை நாட்கள் எதிர்பார்த்த குழந்தை உருவானதை நினைத்து மகிழ்வதா? இல்லை தன்னுடைய தற்போதையை நிலையை நினைத்துத் துயரம் கொள்வதா? என அவளுக்குத் தெரியவில்லை. குழந்தை உருவான மகிழ்ச்சியை அவளால் முழுதாக அனுபவிக்க முடியவில்லை. எப்படி கொண்டாடப்பட வேண்டிய விஷயம் இது! தன் அழகிய குடும்பத்தை நிறைவு செய்ய வந்த வரத்தினை தனியாய் இப்படி வரவேற்க வேண்டிய சூழலில் இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தாள். தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படி பாராட்டி, சீராட்டி வளர்க்க வேண்டும் என அவள் கனவு கண்டு வைத்திருந்தாள். அவை எல்லாம் இப்போது கானல் நீர். பிறப்பிலேயே கைவிடப்பட்டவளுக்கு ஒரு குழந்தை. அவள் எதிர்பார்த்தபடி தந்தை இல்லை என்றாலும், தாயாக அவள் இருப்பாள். அவளுடைய வலது கை அனிச்சையாக வயிற்றைத் தடவியது.
‘நீ எப்படி இருந்தாலும் உனக்கு அம்மா இருக்கேன் பாப்பு. உன்னை நான் பார்த்துக்குவேன். எனக்குத்தான் யாருமில்லை. ஆனால் உனக்கு நான் இருக்கேன்.’ என அவள் சிறுவிதை போல் உதித்திருக்கும் சிசுவிடம் பேசிக் கொண்டாள்.
“அக்கா, ரொம்ப ஹேப்பி! இந்தாங்க ஸ்வீட்.” என அவளுடைய உதவியாளன் நீட்ட, அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
“சாப்பாடு ஆர்டர் போட்டிருக்கேன். வந்துரும். உங்க போன் அன்லாக் செய்ய முடியலை. அதோட இந்த மாதிரி நியூஸ் நீங்க எப்படி வீட்டில் சொல்லாம்னு ஏதாவது ட்ரீம் இருக்கும். உங்களுக்கு லீவ் சொல்லிட்டேன். டாக்டர் பார்த்ததுக்கு அப்புறம் ஹோட்டலில் விடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.”
“கன்கிராட்ஸ் மேம்.” உடனிருந்த பெண்மணி வாழ்த்தினார்.
“தேங்க்ஸ் மேம்.”
“நல்ல சாப்பிடணும் மேம். டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம். எங்க ஊருக்கு வந்து உங்களுக்கு இப்படி நல்ல செய்தி வந்ததில் ரொம்ப சந்தோஷம்.”
“ஓகே.”
அடுத்து உணவு வந்ததும், மூவரும் உணவை உண்டு விட்டுப் பரிசோதனைகள் செய்தனர். குழந்தை உண்டாகி இருப்பதை தெளிவாகப் பரிசோதனை முடிவுகள் காட்டியது. மருத்துவர் அவளுக்குத் தேவையான மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார்.
அவளுடைய உதவியாளனும், உடனிருந்த பெண்ணும் விடுதியில் முகியை விட்டபின்பு வெளியேறினர். தன்னுடைய மருத்துவ அறிக்கைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு நெய்தல் நிழலின் வரவேற்பில் நுழைந்தவள் மின் தூக்கி பக்கம் செல்ல, அவளைச் சட்டென்று கரம் பிடித்தான் ஆதி.
***
இரவு நேரம் மாயா அர்ஜூன் திருமணத்திற்கான இடத்தைக் கன்யா கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள். இன்னும் விளக்குகள் பாதி பொறுத்தப்பட்டும், படாமலும் இருந்தன. கடல் மண்ணில் கால்கள் புதையப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவள், திடீரென்று ஏதோ சத்தம் கேட்கவும் பயந்து தடுமாறினாள்.
அலங்காரத்திற்கு போடப்பட்ட தூணில் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டிருந்தான் சிவகார்த்திக். வந்திருப்பது அவன் என்றதும் மனதில் நிம்மதியுடன், “குட் ஈவினிங் சார்.” என அவள் வாழ்த்தினாள்.
கடற்காற்று இதமாக வீசிக் கன்யாவின் புடவை முந்தானையுடன் விளையாடிக் கொண்டிருந்தது. பாதி இருளில் அறையும் குறையுமாகத் தெரியும் முகத்தில் பழைய கார்த்தியைத் தேடிப் பார்த்தாள் பெண்ணவள்.
“இந்த நேரத்தில் என்ன பண்றீங்க?”
“மாயா மேம் லொகேஷனோட போட்டோ கேட்டாங்க. அதான் எடுத்து அனுப்பலாம்னு வந்தேன்.”
“டைம் ஆச்சே. வீட்டுக்குப் போகலையா?”
“எடுத்து முடிச்சதும் கிளம்பிடுவேன் சார்.”
“ஓகே.” என அவன் நகர, அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள்.
“சீனியர் சொல்லுங்க. நான் என்ன செஞ்சேன்? ஏன் என்னோட நம்பர் பிளாக்கில் இருக்கு? நீங்க இன்னும் அந்த நம்பர் யூஸ் பண்றீங்க?”
கன்யா மனது பொறுக்காமல் நேரடியாகக் கேட்டுவிட்டாள். அதைக் கேட்டதும் கார்த்திக்கின் முகம் கோபத்தில் இறுகுவது தெரிந்தது.
“கார்த்திக் சீனியர், நீங்கச் சொல்லணும். இல்லைன்னா நான் இந்த இடத்தை விட்டுப் போறதாக இல்லை.”
“அப்ப இங்கேயே நில்லு.”
கார்த்திக் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான். அன்னைக்கு தன் கைப்பேசியை எடுத்துக் குறுஞ்செய்தியாகத் தான் இன்று வேலை முடித்துவரத் தாமதமாகும்ம் என அனுப்பிவிட்டவள், அப்படியே சற்று தள்ளிச் சென்று கடல் அலைகளைப் பார்த்தபடி மணலில் அமர்ந்து கொண்டாள்.
இரண்டு மணி நேரம் சென்றது. கார்த்திக் தன் அலுவலகத்தில் பணிகளை முடித்தவன் அறையில் ஓடும் சிசிடிவி திரையைப் பார்க்க, தான் விட்டு வந்த இடத்திலேயே கன்யா இன்னும் இருப்பதைப் பார்த்தான். கன்யாவுக்கு சற்று பிடிவாதம் உண்டு.
“இன்னும் அதே பிடிவாதம்.” எனப் பற்களைக் கடித்தவன் தன் அறையை விட்டு வெளியேறிக் கன்யா இருக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கு இலேசாக விசும்பல் சத்தம் எழுந்தது.
கன்யாவுக்கு கண்ணீர்தான் வந்து கொண்டிருந்தது. தந்தை இறந்து போனது, தன்னுடைய நெடுநாள் காதலன் விட்டுச் சென்றது, அன்னையின் உடல் நலம், யாரும் தெரியாத ஊரில் கார்த்திக், காமினியைப் பார்த்தபோது இருந்த மகிழ்ச்சி அவர்களின் பாராமுகத்தில் அலைகடல் நுரையாய் உடைந்து போனது என எதை நினைத்து அழுகிறாளெனத் தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.
அவள் அன்னை ஏற்கனவே செத்துப் பிழைத்து வந்திருக்கிறார். அவர் இல்லையெனில் இந்த நேரம் இந்தப் பரந்த உலகில் ஆதரவற்று நின்று கொண்டிருப்பாளென நினைத்து அழுகை வேறு வந்தது. அவள் அழுததில் கார்த்திக் வந்ததைக் கவனிக்கவில்லை.
“கன்யா எழுந்திரு. வீட்டுக்குப் போலாம்.”
அவள் அருகில் ஒரு காலால் மண்டியிட்டபடி கார்த்திக் பேசினான். கடற்கரையில் குத்திட்டு அமர்ந்து, முகத்தைக் கால்களுக்கிடையில் புதைத்துக் கொண்டு அவள் அழுது கொண்டிருக்க, அவன் குரல் கேட்டதும், விழிகளைத் துடைத்தபடியே நிமிர்ந்தாள்.
“ஏம்மா இப்படி பண்ணற? கமான் கெட்டப்.” என அவன் மீண்டும் பழையபடி பேசியதில் அப்படியே கைகளைக் கோர்த்து தோளை அணைத்துக் கொண்டாள். கன்யா வளர்ந்த பக்கம் இதெல்லாம் சாதாரணம். இதற்கு முன்பு அவனையும், காமினியையும் அணைத்திருக்கிறாள்.
“நான் என்ன சீனியர் செஞ்சேன்? உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? இந்த ஹோட்டலில் உங்களையும், காமினி சிஸ்சையும் பார்த்தவுடனே எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? என்னை அவாய்ட் செய்யறதுக்கு ரீஸன் என்ன? சொல்லுங்க. எதுவுமே இல்லாமல் நானும் அம்மாவும் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தோம். உங்க…” கேவிக் கொண்டே குழந்தைபோல் கேட்பவளை கார்த்திக்கால் சமாதானம் செய்ய முடியவில்லை. அவள் கண்ணீர் அவனுடைய உடையை நனைத்துக் கொண்டிருந்தது.
“சொல்றேன் கன்யா. இப்ப எழுந்திரு. வீட்டில விடறேன். கிளம்பும்போது சொல்றேன்.” என அவளை ஒரு வழியாக எழுப்பிக் கூட்டி வந்தான்.
தன்னுடைய மகிழுந்தில் அவளை அமர வைத்தவன் அதை இயக்க, ஐந்து நிமிடத்தில் அவள் வீட்டுக்குச் சற்று முன்பு நிறுத்தி இருந்தான்.
“இப்ப சொல்லுங்க.”
அவனுடைய கைப்பேசியை உயிர்ப்பித்து அதில் இருக்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.
“நீங்க எனக்கு ப்ரப்போஸ் செஞ்சீங்களா?” என அதிர்ச்சியில் பேசிக் கொண்டே வந்தவள், அடுத்துப் பார்த்த செய்தியில் இன்னும் அதிர்ந்தாள். பிறகு வந்த அனைத்துமே கார்த்திக்கின் உருவத்தைக் ஏளனம் செய்து அனுப்பப்பட்டிருந்தன. அவனின் உருவத்தையும், அழகையும், தகுதியையும் ஏளனம் செய்திருக்கும்படி குறுஞ்செய்திகள் இருந்தன.
‘உன்னோட மூஞ்சிக்கு என்னை மாதிரி பேரழகி கேட்குதா? கண்ணாடியில் உன்னைப் பார்த்திருக்கியா? எலும்பும் தோலுமாகப் பஞ்சத்தில் அடிப்பட்ட மாதிரி. உதவி செஞ்சேன்னு நல்லபடியா பழகுனா அதுக்கு எனக்குத் தேவைதான். என்னோட காஸ்மெட்டிக் பொருளுக்குக் கூட உனக்கு மணி கிடையாது.’ இப்படி குறுஞ்செய்தி சென்று கொண்டே இருந்தது.
கல்லூரியில் காமினியும், கார்த்திக்கும் பகுதி நேர வேலை பார்த்தனர். அது சிவ பொன்னம்பலத்தின் கட்டளை. வெளியுலகைக் கற்றுவர வேண்டும். நீ ஒரு இடத்தில் வேலை செய்து பார்த்தால்தான் நிர்வாகம் செய்யும்போது பணியாளரின் துன்பத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பார். அத்தோடு சாதாரண மனிதர்களாய் நட்பை வளருங்கள் என்றும் கூறியிருந்தார்.
கைப்பேசியை விட்டு அதிர்ச்சியில் இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டாள். அந்தக் குறுஞ்செய்தி அனைத்தும் ஸ்கிரீன்ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்க கன்யா அதில் இருந்தவற்றைக் கண்டு மேலும் அதிர்ந்து போனாள்.
தொடரும்…
