அத்தியாயம் 28

சுகன்யாவிற்கு காய்ச்சலில் உடல் கொதித்து கொண்டிருந்த போதிலும்,  அஸ்வந்த்தின் முதுகில் சாய்ந்து கொண்டு அந்த பயணத்தை ரசித்தாள். 

அஸ்வந்த் தன் குடும்பத்திற்கு தெரிந்த மருத்துவமனையில் டூ வீலரை நிறுத்தினான். 

 

அவளை உள்ளே அழைத்து சென்றான். 

சுகன்யா அஸ்வந்த்தின் கைகளை இறுக்கி பிடித்தாள். இன்னைக்கு தான் அஸ்வந்த் பர்ஸ்ட் பர்ஸ்ட் ஒரு துணையோடு ஹாஸ்பிடல் வரேன் என்றாள். 

 

இனிமேல் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன் சுகி என்று அவனின் மனதில் இருந்து கூறினான் அஸ்வந்த். 

ரிசப்ஷனிஸ்ட்  முன் சென்று டாக்டரை பார்க்கணும் என்றான். 

அவனை பார்த்த ரிசப்ஷனிஸ்ட் பெண்மணி, யாருக்கு என்னாச்சிப்பா தனியா வந்துருக்குற?  என்று கேட்டு அவனின் அருகில் நின்ற சுகன்யாவை புருவம் சுருக்கி பார்த்தார். 

இவள் நான் கட்டிக்க போற பொண்ணு. கொஞ்சம் உடம்பு முடியல. டாக்டரை பார்க்கணும் என்றான் அஸ்வந்த். 

 

பார்க்க சின்ன பையனா இருக்கிறான். கட்டிக்க போற பொண்ணுனு எவ்ளோ தைரியமா சொல்லுறான் பாரு என்று மனதில் நினைத்த அவரோ, சரி ப்பா வெயிட் பண்ணு என்று கூறி மருத்துவருக்கு அழைத்து தகவல் தெரிவித்தார். 

 

அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கையில் அஸ்வந்த், சுகன்யா இருவரும் அமர்ந்தனர். 

 

நீ என்னைய உன் தோழி தான்னு சொல்லி அறிமுகப்படுத்திவியோனு நினச்சேன் அஸ்வந்த். ஆனால், நீ அதை விட ஒரு படி மேல போய் நமக்குள்ள இருக்குற உறவை சொல்லிட்ட என்று கண் கலங்கினாள் சுகன்யா. 

ஏன் சுகி கண் கலங்குற? நான் தான் சொன்னேனே உனக்கு துணையா எப்பவும் நான் இருப்பேன் என்றான் அஸ்வந்த். 

 

சரியாக ஐந்து நிமிடம் கழித்து ரிசப்ஷனிஸ்ட் பெண்மணி இருவரையும் மருத்துவரை சந்திக்க சொல்லி அனுப்பி வைத்தார். 

 

மருத்துவரின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும். இந்த மருத்துவர் தான் அஸ்வந்த்தின் குடும்ப மருத்துவர் என்பதால் தான், அவன் சுகன்யாவை நேரடியாக இங்கு அழைத்து வந்து விட்டான். 

அஸ்வந்த்தோடு சேர்ந்து வரும் பெண்ணை பார்த்த மருத்துவர், யாரு ப்பா இந்த பொண்ணு? என்று ரிசப்ஷனிஸ்ட் கேட்டது போல் அவரும் கேட்டார். 

சார் இவள் தான் நான் கட்டிக்க போற பொண்ணு. இவளுக்கு கொஞ்சம் உடம்பு முடில. செக் பண்ணுங்க சார். காலையில இருந்து ஹை பீவர் என்று வருத்தத்தோடு கூறினான். 

 

சுகன்யா வா இந்த சேர்ல உட்காரு என்று அஸ்வந்த் அவளை அமர வைத்து அவளின் அருகில் நின்றான். 

 

உதட்டில் சிறு புன்னகையை படர விட்ட மருத்துவர் அவளை செக் செய்தார். 

சாதாரண காய்ச்சல் தான் நம் சுகன்யாவிற்கு. 

அவளை நன்கு பரிசோதித்த மருத்துவர், சாதாரண காய்ச்சல் தான் என்று கூறி சுகன்யாவிற்கும் ஒரு ஊசியும் கொஞ்சமாக மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார். 

வா…  சுகி என்று அவளை அழைத்து சென்று ஊசியும் போட்டு தேவையான மருந்து மாத்திரைகளையும் வாங்கி விட்டு மறக்காமல் பில் பே செய்து கிளம்பினான் அஸ்வந்த். 

 

உனக்கு காய்ச்சல் அதுனால நீ நம்ப வீட்டுல இரு. நான் உன்னைய அழைச்சிட்டு போறேன் என்றான் அஸ்வந்த். 

 

சுகன்யா அவன் சொன்னது கேட்டு மகிழ்ச்சியானாள். பின் புருவம் உயர்த்தி, உன் வீட்டுல என்னைய ஏத்துப்பாங்களா அஸ்வந்த்?  என்று கேட்டாள். 

 

நான் சொன்னா அம்மா கேட்பாங்க என்றான் அஸ்வந்த். 

உண்மையாவா என்று கேட்டவளுக்கு இன்னும் புது சொந்தங்கள் கிடைத்த மகிழ்ச்சி. 

எப்படியும் நம்ப வீட்டுக்கு போறதுக்குள்ள அம்மாக்கும் அப்பாக்கும் விஷயம் போயிருக்கும். அந்த டாக்டர் எங்க பேமிலி டாக்டர் தான் என்றான். 

 

சுகன்யாவுக்கு இப்பொழுது தான் நெஞ்சில் திகில் பரவியது. 

ஒரு வேலை அஸ்வந்த்தின் பெற்றோர் நம்மை ஏற்று கொள்ளவில்லை என்றாலும் நாம் நம் மனதை இறும்பு போல் வைத்திருக்க வேண்டும் என்று அவளுக்குள் கூறி கொண்டாள் சுகன்யா.  ஒரு குடும்பத்தோடு சேர வேண்டும் என்று அவளுக்கு பேராசையாக இருந்தது. 

****

சுகன்யாவை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கே வந்து விட்டான் அஸ்வந்த். 

சுகன்யா தனக்கு முன் தாஜ் மஹால் போல் தெரிந்த வீட்டை அதிசயமாக பார்த்து அசந்து நின்றாள். 

இது உன்னோட வீடா அஸ்வந்த்? என்று கேட்டாள். 

 

சுகன்யாவை பற்றி அஸ்வந்த் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டான். அவளுக்கு தாய் தந்தை இல்லை. சிறு வயதில் இருந்து தனியாக வளர்ந்தவள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தான். 

 

ஆனால், சுகன்யாவிற்கு அஸ்வந்த்தை பற்றி எதுவும் தெரியாது. நம்மை தினமும் பின் தொடர்ந்து வருபவனின் பெயர் அஸ்வந்த். நம் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான். அதனால் தான் நம் காதல் வேண்டும் என்று நம் பின்னே சுற்றி கொண்டிருக்கிறான் என்பது மட்டுமே அஸ்வந்த்தை பற்றி அவள் அறிந்த விஷயங்கள். அதனால் தான் இந்த வீட்டை பார்த்து அசந்து நிற்கிறாள். 

 

ஆமா சுகி. இது என்னோட வீடு தான். இனிமேல் இது நம்மோட வீடு என்றான் அஸ்வந்த். 

யாரலாம் இந்த வீட்டுல இருக்குறாங்க என்று ஆசையாக கேட்டாள். 

 

நான்,  அம்மா, அப்பா மூணு பேர் தான் என்றான் அஸ்வந்த். 

 

சுகன்யா முகம் சுருங்கியவள், என்ன டா மூணு பேர் தான் இருக்குறீங்களா? மூணு பேருக்கா இவ்வளவு பெரிய வீடு? எங்க ஹாஸ்டல் ஒரு ரூம்ல ஏழு பேர் இருக்குறோம். ஆனால், ரூம் சின்னது. மெம்பெர்ஸ் அதிகம். இங்க வீடு பெருசா இருக்குது. ஆனால், உறவுகள் கம்மி என்றாள். 

 

நீ வந்துட்டல்ல இனிமேல் நாலு பேர் என்றான். 

வா சுகி, அம்மாகிட்டே அழைச்சிட்டு போறேன் என்று அஸ்வந்த் கூற, இப்பொழுது லேசான பயத்துடன் அவன் பின் சென்றாள் சுகன்யா. 

 

எது நடந்தாலும் சரி என்ன கஷ்டம் வந்தாலும் சரி நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். அழுதுறக் கூடாது என்று  மனதில் அவளுக்கே அவளே ஆறுதல் கூறி கொண்டு அவனோடு சென்றாள். 

****

இருவரையும் பார்த்த சங்கரும் பாரிஜாதமும் முகத்தை கோபமாக வைத்திருந்தனர்.

அஸ்வந்த் பயத்தோடு நின்றிருந்தான். விஷயம் தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்டான். ஆனால், இவ்வளவு கோபமாக இருப்பார்கள் என்று அவன் நினைக்கவில்லை. 

 

தந்தையின் கோபமான முகத்தை பார்த்தவனுக்கு நெஞ்சில் பயப் பந்து உருண்டது. 

 

சங்கர் கோபமாக மகனின் அருகில் வந்தார். சுகன்யாவை பிடித்திருந்த அவன் கையை வேகமாக பிரித்து எடுத்தார். 

சுகன்யாவின் இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல வலித்தது. 

பாரிஜாதம் புடவை முந்தானை கொண்டு வாயை பொத்தி கொண்டு அழுதார். 

உன் வயசு என்ன டா? ஹாஸ்பிடல் போய் இவளை நான் கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்லி ட்ரீட்மென்ட் பார்த்திருக்க என்று கோபமாக கேட்டார். 

 

ஆமா ப்பா. நிஜமா இவளை நான் கட்டிக்க ஆசை படுறேன் என்றான் அஸ்வந்த். 

ஓ…. சார் என்ன வேலை பார்க்குறீங்க? என்று கேட்டார் சங்கர். 

 

சுகன்யா பயத்தோடு எச்சில் விழுங்கினாள். இது போல் கோபத்தை அவள் யாரிடமும் கண்டதில்லை. 

கேம்பஸ் இன்டெர்வியூல செலக்டாகிட்டேன் ப்பா. இன்னும் டென் டேஸ்க்கு அப்பறமா கனடா போக போறேன். அங்க தான் ஒர்க். அங்கே போய் ஒர்க் கத்துக்கிட்டு இங்க வந்து சொந்தமா கம்பெனி ஸ்டார்ட் பண்ணிட்டு அப்பறமா சுகன்யாவை கட்டிப்பேன் என்றான். 

 

கனடாவில் வேலையா என்று அதிர்ச்சியோடு பார்த்தாள் சுகன்யா. 

வேணாம் ப்பா. இது சரி பட்டு வராது. யாரு என்னனு தெரியாத பொண்ணை கட்டிக்கிட்டு நீ எப்படி வாழ போற சொல்லு. அம்மா உனக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்குறேன் என்றார் பாரிஜாதம். 

 

அம்மா எனக்கு இவளை தான் ம்மா புடிச்சிருக்கு. நான் உங்க மேல வச்சிருந்த நம்பிக்கையில தான் நான் இவளை நம்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன் என்றான் அஸ்வந்த். 

 

டேய் காதல் உன் வாழ்க்கையையே அழிச்சிரும் டா. உன்னால எதுலயும் ஜெயிக்க முடியாது. சொன்னா கேளு. இந்த பொண்ணை கூப்பிட்டு போய் எங்க இருந்து அழைச்சிட்டு வந்தியோ அங்கேயே விட்டுட்டு வந்துரு என்று கத்தினார் சங்கர். 

 

இல்லை ப்பா. என்னால அவளை விட்டுட்டு வர முடியாது. சுகன்யா இங்க தான் இருப்பாள் என்று தந்தையை விட பல மடங்கு அதிகமாய் கர்ஜித்தான் அஸ்வந்த். 

 

சுகன்யா அவனின் கத்தலில் உடம்பு நடுங்கி போனாள். 

நீயா கூப்பிட்டு போய் அந்த பொண்ணை விட்டு வர்றியா? இல்லை நான் அழைச்சிட்டு போகவா?  என்று கேட்டார் சங்கர். 

உங்களால முடிஞ்சா என்னை தாண்டி அவளை அழைச்சிட்டு போய் பாருங்க என்று தந்தையோடு மல்லுக்கட்ட தயாரானான் அஸ்வந்த். 

 

அஸ்வந்த் ஏன் அப்பாகிட்டே இவ்ளோ கோபமா பேசுற? என்று கேட்ட சுகன்யாவின் கண்களில் இருந்து நீர் அதிகமாக வெளியேறியது. 

 

அப்பா அம்மா எது சொன்னாலும் நீ கோபமா பேசாத அஸ்வந்த். அவங்க நம்ப நல்லதுக்கு தான் சொல்வாங்க. என்னைய இப்போ ஏத்துக்கலனா என்ன? அப்பறமா ஒரு நாள் புரிஞ்சி என்னைய ஏத்துப்பாங்க. அதுக்காக நீ அப்பாகிட்டே இவ்ளோ கோபப்படாத என்ற சுகன்யாவின் இதயம் மிகவும் காயப்பட்டு தான் இந்த வார்த்தையை வெளியே விட்டது. 

 

என்ன பேசுற சுகி? புள்ளைங்க ஆசைய நிறைவேற்றாத அப்பா,  அம்மா எதுக்கு நமக்கு? என்று ஆத்திரத்தோடு வார்த்தைகளை சிதறடித்தான் அஸ்வந்த். 

ஓ… சார் இந்த பொண்ணுக்காக அந்த அளவு பொய்ட்டிங்களா? என்று கேட்ட சங்கர் சுகன்யாவின் கைகளை இறுக்கி பற்றினார். 

 

சுகன்யாவின் இதயம் தடக்.. தடக் என்று அடித்து கொண்டது. 

 

சுகன்யாவை இழுத்து கொண்டு சென்று காரில் தள்ளினார் சங்கர். 

அஸ்வந்த் எவ்வளவு முயற்சி செய்தும் தன் தந்தையை அவனால் அசைக்க முடியவில்லை. 

 

சுகன்யா விழியில் வழியும் நீரோடு கொஞ்சம் பொறுமையா இரு அஸ்வந்த் எதுனாலும் பார்த்துக்கலாம்  என்று கூற, சங்கர் வேகமாக காரை ஸ்டார்ட் செய்து கிளப்பி விட்டார். 

 

அஸ்வந்த்தின் கண்களில் இருந்து அருவி போல் நீர் கொட்டியது. சுகன்யா…. சுகன்யா…. என்று அலறினான். 

 

பாரிஜாதம் மகனிடம் வந்தவர், வா ப்பா உள்ளே போகலாம் என்று அழைத்தார். 

 

தாயின் கைகளை வெடுக்கென்று உதறி தள்ளியவன், கோபமாக வீட்டிற்குள் சென்று அறைக்குள் நுழைந்து சத்தம் இல்லாமல் அழுதான். 

 

கிடைச்ச அன்னைக்கே என்னோட பொக்கிஷத்தை தொலைச்சிட்டேனே என்று கதறி அழுதவன், இதற்கு மேல் இங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணி அவனுடைய துணிகளை பேக்கில் போட்டு, கடைசியாக தன் கண்களையும் அழுத்தி துடைத்து கொண்டான். 

 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page