அங்கு பிரகாஷும் இல்லை. அவனும் இரவே சென்று இருந்தான். விக்னேஷ் கௌரி இடம் வந்து கௌரி சொன்னா கேளு. எழுந்து போய் முகம் அலம்பி கொண்டு வா. நான் உனக்கு கேன்டீனில் இருந்து காபி வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்ல, கௌரி எனக்கு எதுவுமே வேண்டாம் அண்ணா. எனக்கு வர்ஷினி திரும்பி வந்தா போதும் என்றிட, விக்னேஷ் வர்ஷினி கண்டிப்பா வருவா கௌரி. அவ வந்தா அவளை பார்க்கவாவது நீ தெம்பா இருக்க வேணாமா? என்றிட, வர்ஷினி தாண்ணா என் தெம்பு, என் சக்தி, என் எதிர்காலம், அவ கண்ணு விழிக்காம நான் இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன், உங்க பேச்சை கேட்கலைன்னு என்னை தப்பா நினைக்காதீங்க என்று அவன் ஈன குரலில் சொல்ல அவனை பார்க்கவே விக்னேஷுக்கு வேதனையாய் இருந்தது. ஒரே நாளில் அவன் ஏதோ பல நாட்கள் உண்ணாமல் உறங்காமல் போல் சோர்வாக காணப்பட்டான்.
சரி எதுவும் சாப்பிட வேண்டாம். முகத்தையாவது அலம்பி பிரெஷ் செய்துட்டு வா என்றதும், வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு அந்த விநாயகர் சிலையையே பார்த்துக்கொண்டு என் வர்ஷினியை என்னிடத்தில் கொடுத்துடு என்று மந்திரம் போல் ஜெபித்து கொண்டு இருந்தான்.
நேரம் செல்ல செல்ல வர்ஷினியிடம் எந்த மாற்றமும் இல்லை, அவள் கோமாவிற்கு சென்றுவிட்டாள் என்று டாக்டர் சொல்லிவிட அனைவருக்கும் அதிர்ச்சி தான். இரு குழந்தைகளையும் கவிதா பார்த்து கொண்டாள். அந்த மருத்துவமனையில் இருக்கும் தாய்மார்கள் இவர்களுடைய நிலையை பார்த்து அந்த இரண்டு குழந்தைகளுக்கும் அவர்களே தாமே முன்வந்து பால் கொடுத்து பசியை ஆற்றினர். மேலும் இரண்டு நாட்கள் கடந்தும் வர்ஷினி கண் விழிக்கவில்லை. கௌரியும் அங்கிருந்து நகரவில்லை. அன்று மாலை டாக்டர் விக்னேஷை அழைத்து பேசினார். விக்னேஷ், வர்ஷினி எப்போ வேணாலும் விழிக்கலாம் அல்லது கண் விழிக்காமலே இருக்கலாம். நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போறதுதான் நல்லது என்றிட, விக்னேஷ் இதை எப்படி கௌரியிடம் சொல்வது என்று யோசித்து கொண்டே கௌரியிடம் சென்று நாம
வர்ஷினியை வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் கௌரி என்று அவன் சொல்லி முடிக்கவில்லை உடனே கௌரி வேண்டாம், அவ கண்டிப்பா விழிப்பா, நான் இங்கிருந்து வரமாட்டேன் என்று சொல்ல, விக்னேஷ் பொறுமையை இழந்து, போதும் கௌரி, இங்கேயே இருந்து இன்னும் என்ன பண்றதா உத்தேசம், உன்னை இப்படி பாக்க முடியாம, குழந்தைகளையும் பார்க்க முடியாம அம்மா, அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா? என்றதும், நீங்க எல்லோரும் குழந்தைகளை அழைச்சிட்டு வீட்டுக்கு போங்க. நான் வீட்டுக்கு வந்தா வர்ஷினி கூட தான் வருவேன். இல்லைனா இங்கேயே என் உயிரும் அவ கூடவே போகட்டும் என்றதும் விக்னேஷ் அதிர்ச்சியாக அவனை பார்த்து, என்னடா பேசற, நாங்கல்லாம் உனக்கு முக்கியம் இல்லையா, நீ இல்லாம நாங்களும் எப்படி இருப்போம். நீ இப்படி சாப்பிடாம தண்ணி கூட குடிக்காம இருக்கறதை பார்த்த எனக்கு பயமாய் இருக்குடா. தயவு செய்து வீட்டுக்கு வாடா.வீட்டுக்கு வந்தா வர்ஷினி கண்டிப்பா கண்ணு முழிப்பா என்று அவன் எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை. ஒரு தவம் போல் அங்கேயே வர்ஷினி கண் விழிக்க வேண்டும் என்று ஓயாமல் சொல்லி கொண்டிருந்தான். இந்த மூன்று நாளும் அவன் சாப்பிடவில்லை, தூங்கவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. வர்ஷினி கண் விழிக்க வேண்டும் என்றதை தவிர வேறு எதுவும் அவன் மனம் நினைக்கவில்லை. குழந்தைகளை அழைத்து கொண்டு கவிதாவும் மாசிலாமணியும் வீட்டுக்கு போகும்படி விக்னேஷ் அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான். விக்னேஷ் கௌரியின் கூடவே தான் இருந்தான். அவனுடைய இந்த காதல் அவனுக்குமே வியப்பாய் தான் இருந்தது. அவன் கௌரியின் காலில் தான் விழவில்லை, மற்றபடி அவன் எப்படி அழைத்தும் கௌரி அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
இரவு மணி பதினொன்றை இருக்கும். வர்ஷினியின் அறையில் இருந்த செவிலியர் பதட்டத்துடன் வெளியில் ஓடி வந்தாள். டாக்டர், டாக்டர் சீக்கிரம் வாங்க என்று அங்கிருக்கும் டூட்டி டாக்டரை அழைத்து கொண்டு வர்ஷினி அறை சென்றாள். அவள் வெளியில் டாக்டரை அழைத்து கொண்டு வந்த சத்தத்தில் அங்கிருந்த இருக்கையில் அப்போதுதான் தூங்க ஆரம்பித்த விக்னேஷும் விழித்து கொண்டான். என்ன ஆயிற்று வர்ஷினிக்கு என்று அவனும் பயத்துடன் பார்க்க, டாக்டர் வர்ஷினியின் அறையில் நுழைந்தார். அவளுடைய கை லேசாக அசைந்தது. காலும் லேசாக அசைய டாக்டர் வர்ஷினிடம் வந்து வர்ஷினி, வர்ஷினி, நான் பேசறது கேக்குதா, கண் விழித்து பாரு என்று மெதுவாக அவள் கையை பிடித்து உலுக்க, வர்ஷினி கண்ணை முழுவதும் திறக்க முடியாமல் லேசாக கஷ்டப்பட்டு கண்கள் திறந்தாள். டாக்டர் அவளிடம் நான் யாருனு தெரியுதா என்று கேட்க அவள் டாக்டர் என்று கூறி சங்கர், சங்கர் என்று மெலிதாக முனக, சங்கரா, யாரது! என்று அந்த டாக்டர் மனதிலே நினைத்துக் கொண்டு வெளியில் வந்ததும், விக்னேஷ் வர்ஷினிக்கு என்னாச்சி டாக்டர் என்று பதட்டத்துடன் கேட்க, வர்ஷினி கண் முழிச்சிட்டாங்க. சங்கர்னு சொல்ராங்க, யாருங்க அவரு என்று கேட்க, என் தம்பி கௌரிதாங்க, நாங்க எல்லோரும் கௌரினு கூப்பிடுவோம் வர்ஷினி சங்கர்தான் கூப்பிடுவாங்க என்றதும் அவங்க பார்க்கணும் சொல்லறாங்க விக்னேஷுக்கு போன உயிரே திரும்பி வந்தது போல் அப்படி ஒரு ஆனந்தம். உடனே கௌரிடம் ஓடி வந்து கௌரி, கௌரி உன் வேண்டுதல் வீணா போகலடா, வர்ஷினி கண் விழிச்சி டா என்று கூறியதை கேட்ட கௌரிக்கு தன் சோர்வையை மீறி கண்கள் பளபளத்தது. உடனே அவளிடம் ஓடி வந்தான். உள்ளே வந்ததும் அவன் வர்ஷினியின் கையை பிடித்து கண்கள் பண்ணிக்க நின்று இருந்தான். வர்ஷினி மெதுவாக கண்கள் திறந்து அவனை பார்த்தாள். அவனை பார்த்து இலேசாக சிரித்து, மெதுவான குரலில் என்ன சங்கர் ரொம்ப பயந்துட்டியா என்று கேட்க அவனால் சந்தோஷத்தால் பேச கூட முடியவில்லை, ஆமாம் என்று தலையாட்டினான். அங்கே வந்த விக்னேஷ் அவன் உனக்காக கடவுள் கிட்ட சண்டை போட்டு உண்ணாவிரதமே இருந்தான்ம்மா என்றதும் வர்ஷினி அவனை கண்கள் மின்ன பார்த்து போய் சாப்பிட்டு வாங்க என்று சொன்னதும் கௌரி தலையாட்டிவிட்டு அவளை பிரிய முடியாமல் அங்கேயே நிற்க, விக்னேஷ் அவன் கையை பிடித்து. வர்ஷினி கண் விழிச்சிட்டாதானே, வாடா இப்பாவது சாப்பிட போகலாம் என்று அவனை வலுக்கட்டாயமாக அங்கிருக்கும் கான்டீன்க்கு அழைத்து சென்று சாப்பிட வாங்கி கொடுத்தான். கௌரியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவேயில்லை. என் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றிவிட்டார். ரொம்ப நன்றி கணேஷா என்று மனதிற்குள் சொல்லி கொண்டிருக்கையில் விக்னேஷ் அந்த கணேஷுக்கு மட்டும் நன்றி சொன்னா பத்தாது, இந்த விக்னேஷுக்கும் நன்றி சொல்லணும், உன் குழந்தைகளை நான் தான் இந்த மூன்று நாலா பாத்துக்கிறேன். என் குழந்தைகள் கூட என்ன இந்த பாடு படுதலைடா, உன் குழந்தைகள் இரண்டு பேரும் அந்த பாடு படுத்தீட்டாங்க, கொஞ்சம் கூட அவங்களை கீழே படுக்க வைக்க கூடாதாம் கையிலேயே அல்லது மடியிலேயே வைத்து இருக்கனும்னு உன்னை மாதிரியே பிடிவாதம், ஆனாலும் அது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா, உனக்கு சின்ன வயசில் செய்யாதது எல்லாம் உன் குழந்தைக்கு செய்யணும்னு ஆசையா இருக்குடா என்று அவனை பார்த்து சொல்ல, ரொம்ப
நன்றி அண்ணா, என்றதும் உன் நன்றி எல்லாம் வேண்டாம் அதற்கு பதிலா உங்கிட்ட ஒன்னு கேட்பேன், அதற்கு நீ மறுக்கமா ஒதுக்கணும் என்றதும்,என்ன அண்ணா என்று கௌரி கேட்க, நான் நேரம் வரும் போது சொல்லறேன் என்று இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வர்ஷினி இருக்கும் அறைக்கு வந்ததும் விக்னேஷ் சரிடா நீ வர்ஷினியை பாத்துக்கோ, நான் போய் நம்ம அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு அவங்களையும் குழந்தைகளையும் கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு சென்றான்.
உள்ளே கௌரி வந்ததும் வர்ஷினி குழந்தைகள் எப்படி இருக்காங்க? என்று கேட்க, கௌரி ஆண் ஒன்று பெண் ஒன்று, நான் இன்னும் குழந்தைகளை பாக்கல என்றதும் வர்ஷினி கேள்வியாய்அவனை பார்க்க, எனக்கு குழந்தைகளை விட நீ தான் முக்கியமா தோணிச்சு வர்ஷினி, நீ இல்லாத வாழ்க்கையை என்னாலே நினைத்து கூட பார்க்க முடியல என்று அவன் கூறியதை கேட்ட வர்ஷினிக்கு இது என்ன விதமான அன்பு, இந்த அன்பை பெற நான் எத்தனை ஜென்மங்கள் தவம் இருந்தேனோ தெரியவில்லையே என்று நினைத்து கொண்டு அவனை அருகில் அழைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
சிறிது நேரத்தில் அனைவரும் வர்ஷினியை பார்க்க ஓடி வந்து விட்டனர். கவிதாவின் கையில் இருந்த குழந்தையையும் விக்னேஷின் கையில் இருந்த குழந்தையும் அவளிடத்தில் கொடுக்க வர்ஷினி அதனை பார்த்ததும் சந்தோஷத்தில் அவள் கண்கள் கலங்கியது. என் அம்மாவே வந்து எனக்கு பிறந்திருக்காங்க என்று பெண் குழந்தையை பார்த்து சொல்ல கவிதாவும் ஆமாம் என்று ஆமோதித்தாள். ஆண் குழந்தையை பார்த்து சங்கர் அப்படியே உன்னை மாதிரியே இருக்கான் என்று அந்த குழந்தையும் உச்சி முகர்ந்தாள்.
கரணும் மருத்துவமனைக்கு வந்து வர்ஷினியை பார்த்தாள். நீ இன்னொரு ஜென்மம் எடுத்து வந்து இருக்கேம்மா. இதெல்லாம் என் மாப்பிள்ளை கௌரியாலதான். சாவித்திரி அந்த எமன் கிட்ட சண்டை போட்டு தன் புருஷனை கூட்டிட்டு வந்தது போல என் மாப்பிள்ளையும் உன்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டார் என்று பெருமையாக கூற கௌரி சங்கோஜத்தில் நெளிய, வர்ஷினி ஆமாம் அப்பா என்று தலையாட்டினாள். பிரகாஷும் வர்ஷினியை பார்க்க அங்கு வந்தான். அவனை வர்ஷினி பயத்துடன் பார்க்க, பிரகாஷ் அவளை பார்த்து சிரித்து, பயப்படாதே வர்ஷினி, நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன் என்றதும், கௌரி அவளிடம் வந்து வர்ஷினி நீ உயிரோடிருக்க பிரகாஷும் ஒரு காரணம் தான், அவரு மட்டும் சரியான நேரத்தில் அங்கே வந்து நம்மை காரில் அழைத்து செல்லலனா, நம்ம குழந்தைகளையும் நாம பார்த்து இருக்க முடியாது என்று சொன்னதும் வர்ஷினி நன்றி கலந்த பார்வையுடன் அவனை பார்த்தாள்.
நான் அப்படி பெரிய உதவி ஒன்னும் செய்யல வர்ஷினி, அந்த வழியா வந்தேன், உன்னை பார்க்க கஷ்டமா இருந்தது. உனக்கு நான் செஞ்ச செயல் நினைவுக்கு வந்தது. அதுக்கு பிராயசித்தம் செய்யற மாதிரி இருக்கட்டும்னு தான் நான் என் காரில் உங்களை அழைத்து வந்தேன். ஆனா இங்கே வந்தபுரம் தான் தெரிந்தது உண்மையான அன்பு என்ன வேணாலும் செய்யும்னு. அன்னைக்கு நடந்ததுக்கு என்னை மன்னித்து விட்டு வர்ஷினி. எனக்கு ஆறு மாதம் கழித்து தான் நினைவே வந்தது. ஆனா அதற்குள் என் அம்மா இறந்துட்டாங்க. என் அப்பாவுக்கும் தொழிலில் நஷ்டம். அப்போதுதான் என்னை நானே உணர்ந்தேன். அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு எங்க அப்பாவோட தொழிலை ஓரளவுக்கு நிலை நிறுத்தி இருக்கேன். ஆனாலும் என்னுடைய பழைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தால் கல்யாணத்திலே விருப்பம் இல்லாமே இருந்தேன். ஆனா கௌரியை பார்த்த பிறகுதான் நானும் ஒரு பெண்ணை காதலிக்கணும், அவளையே கல்யாணம் பண்ணிக்கணும் அவரை மாதிரி மனைவி மேல அன்பா இருக்கணும்னு தோணுது என்று நீளமாக பேசி முடித்தான். அவன் சொல்ல சொல்ல வர்ஷினிக்கு கௌரியின் மீது காதல் மேலும் மேலும் பெருகியது.
ஒரு வாரத்தில் வர்ஷினி வீட்டுக்கு வந்துவிட்டாள். கவிதா அவளுக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். கௌரியும் விக்னேஷுமே இரு பிள்ளைகளையும் பார்த்து கொண்டனர். வர்ஷினிக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் அவளால் எழுந்து சென்று பிள்ளைகளை பார்க்க முடியாத நிலை. அவள் பிள்ளைகளுக்கு பால் கொடுப்பதோடு சரி, மற்றபடி பிள்ளைகளை தூக்கி வைத்து கொள்வது. அவர்களுக்கு டயபர் மாற்றுவது, தூங்க வைப்பது என்று அனைத்தையுமே இரு ஆண் பிள்ளைகளும் பார்த்து கொள்ள, மதுமதிக்கு தன் பிள்ளைகளை பார்த்து கொள்ளவும், கவிதாவுக்கு இவர்கள் அனைவருக்கும் பார்த்து பார்த்து வேண்டியதை சமைத்து கொடுப்பதும் என அந்த வீட்டில் அனைவரையும் பம்பரமாக சுழல வைத்தது அங்கிருக்கும் குழந்தைகள். வீட்டில் குழந்தைகளின் சிரிப்பு ஒலியும், அதன் விளையாட்டுகளும் அந்த வீட்டை கலகலப்பாக வைத்திருந்தது.
அன்று அவர்கள் வீடே விழா கோலம் பூண்டு இருந்தது. குழந்தைகளுக்கு பேர் சூட்டும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. வீட்டு பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். குழந்தைகளை அழகாக அலங்கரித்து தொட்டிலில் வைத்ததும் கவிதா என்ன குழந்தைகளுக்கு பேர் தேர்ந்து எடுத்துடீங்களா?என்று கவிதா கேட்க, ம்ம் என்று வர்ஷினி சொல்லியவாறு ஆண் குழந்தையை தூக்கி செய்யோன், செய்யோன் செய்யோன் என்று மூன்று முறை கூற கௌரி பெண் குழந்தையை தூக்கி செவ்வி செவ்வி செவ்வி என்று மூன்று முறை கூற, அழகான தமிழ் பேர்கள், ரொம்ப நல்லாயிருக்கு என்று அனைவரும் பாராட்டி குழந்தைகளை ஆசிர்வாதம் செய்தனர். இரண்டு நாள் கழித்து கௌரிக்கு அமெரிக்கா செல்லும் நாளும் வர இருப்பதால் கௌரி ஊருக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க, அங்கே விக்னேஷ் செய்யோனை கையில் தூக்கியபடி கௌரி அருகில் வந்தான்.
கௌரி அன்னைக்கு நான் உங்கிட்ட ஒன்னு கேட்பேன், நீ எனக்கு அதை மறுக்காமல் கொடுக்கணும்னு சொன்னனே ஞாபகம் இருக்கா என்றிட , ம்ம் நல்லா ஞாபகம் இருக்கு அண்ணா என்னனு சொல்லுங்க, உங்களுக்காக நான் என்ன வேணாலும் கொடுப்பேன் என்றதும் விக்னேஷ் அவனை பார்த்து நான் இப்படி கேக்குறேன்னு என்னை தப்பா நினைக்காதே, நீயும் வர்ஷினியும் அமெரிக்காவுக்கு போக வேணாம். இங்கேயே இருந்துடுங்க. நாம எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில் இருக்கலாம். என்னால உன் குழந்தைகளை விட்டுட்டு இருக்க முடியாதுடா. எனக்கு தெரியும் உனக்கு அமெரிக்கா வேலை மிகவும் பிடிக்கும்னு. பணத்தை எப்போ வேணா சம்பாதிக்கலாம், ஆனா அன்பான உறவுகள் எல்லோருக்கும் கிடைக்காதுடா. நான் முன்னாடி இந்த உறவுகளை பிடிக்காமல் உறவுகள் இருந்தும் தனியாக தான் வாழ்வது போல் இருந்தேன். எப்போ உறவுகளின் மதிப்பு புரிஞ்சதோ அப்பவே நானும் மாறிட்டேன், அதனாலே தயவு செஞ்சு இங்கேயே இருந்துடுங்க என்று கூறியதை கேட்ட கௌரி, அண்ணா நீங்க இந்த மாதிரி என்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. நானும் இந்த முடிவில் தான் இருந்தேன். அங்கே எல்லாமே இருக்கு, ஆனா எதுவோ இல்லாத போல் பிரம்மை எனக்குள் அங்கே போனதில் இருந்தே இருக்கு அண்ணா. அது நம்ம மேல அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கிற உறவுகள் நம்ம கூட இல்லாதது தான்னு இந்த கொஞ்ச நாள்ல தான் புரிஞ்சிக்கிட்டேன். நான் மட்டும் தான் ஊருக்கு போறேன். அங்கே நான் செய்ய வேண்டிய வேலைகள், வேலையை விடுவதற்கான வழிமுறைகள் எல்லாம் முடித்துவிட்டு ஒரு மாதத்திற்குள் இங்கேயே வந்துடுறேன் அண்ணா, இதை நான் இன்னும் வர்ஷினி கிட்ட கூட சொல்லல. என்ன வர்ஷினி உனக்கு சம்மதம் தானே என்றதும் அவள் சந்தோஷமாய் சம்மதம் என்று தலையாட்ட அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
கௌரி தான் சொன்னது போல ஒரு மாதத்திற்குள் அமெரிக்காவை விட்டு விட்டு இந்தியாவிற்கு வந்தான். விக்னேஷுக்கு விவசாயம் சொல்லி கொடுத்த மாரிமுத்து ஐயா இறந்து விட அவனுடைய மகனுக்கு வேறு வேலை அமைந்து விட அந்த நிலத்தை கௌரி வாங்கி, தன் அண்ணனின் துணையோடு அவனும் விவசாயம் செய்ய தொடங்கினான்.
எபிலாக்:
மூன்று வருடம் கழித்து: கௌரி தன் அண்ணனை போல் விவசாயத்தை கற்று கொண்டு அதில் வெற்றியும் பெற்று தான் விளைவித்த உணவுகளை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்ய தொடங்கி இருந்தான். இரு குடும்பங்களும் ஓரே வீட்டில் ஒன்றாக சந்தோஷமாக வாழ தொடங்கி இருந்தனர். அன்று பொங்கல் திருவிழா. அனைவரும் காலையிலேயே எழுந்து பொங்கல் இட்டு சந்தோஷமாக பேசி கொண்டிருக்க, குட்டி செவ்வி ஓடி வந்து அம்மா இந்த கவிஷ் என் சடையை பிடித்து இழுக்கிறான்,என்று புகார் கூற, அங்கே நின்று கொண்டிருந்த மாதேஷ் , ஏன்டா தங்கச்சி சடையை இழுக்கிற என்று சண்டைக்கு போக, இருவரையும் சமாளிக்க பெரியவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. சேயோனும், மாதேஷும் தன தங்கை என்றால் அவ்வளவு பிரியம். அவள் எது கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். கவிஷ், செவ்வி கிட்ட தட்ட ஒரே வயசு என்பதால் இருவரும் நண்பர்கள் போல் கட்டி பிடித்தும் கொள்வார்கள். சண்டையும் போடுவார்கள்.
அந்த சூரிய ஒளியில் வர்ஷினி நின்று கொண்டு கரும்பை சுவைத்து கொண்டு இருக்க, அந்த சூரிய கதிரின் ஒளியால் அவள் ஜொலித்து கொண்டிருந்ததை பார்த்த கௌரி இரண்டு குழந்தை பிறந்தாலும் என் குட்டி குஷ்பூ அழகு குறையவே இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டு அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க, அதை கவனித்த மதுமதி, வர்ஷினி, மாமா உன்னையே வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்கார் பாரு என்று அவளிடத்தில் வந்து கிசுகிசுக்க , வர்ஷினி முகம் சிவந்து அவனை பார்க்க, கௌரி அருகே வா என்று கண்களால் அழைக்க, வர்ஷினி அவனிடத்தில் சென்றதும் அவளை தனியாக அழைத்து சென்று முத்தம் தர, அவள் சினுங்க,
மழையாக நீ இருந்தால் உன்னுள் கரையும் மணலாக நான் இருக்க வரம் கேட்பேன், என் உதடு வழியே புகுந்து என் உயிரை உறிஞ்சு கொள்கிறாய், உன் மனம் என்னும் கோவிலில் யாசகன் நான். உன் மனதை எனக்கு யாசகமாக கொடுப்பாயா? என் இனியவளே, கண்மணியே என் காதலில் கரைந்திட வருவாயா? என்று அவன் கூறிட அவள் வெக்கத்துடன் ஆசையாக அவன் மீது சாய்ந்து கொண்டாள். இந்த இருவரின் ஆழ்ந்த காதலும், நெருக்கமும் என்றென்றும் நிலைத்திட நாமும் வாழ்த்துவோம்.
முற்றும்
என்ன வாசகர்களே இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா? பிடிச்சி இருந்தா உங்க நிறை குறைகளை எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க. அது எனக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும். என்னை திருத்திக்கவும் உதவி செய்யும். நன்றி மக்களே! பை பை
