அத்தியாயம்-31

காலை நேரம் கதிரவன் ஒளிகள் பரப்ப, முகத்தில் அடித்த சுள்ளுன்ற வெயில் தாக்கத்தில் கண்களை மெதுவாக திறந்தவள், பஞ்சு மெத்தையில் படுத்து இருந்ததை உணர்ந்து, கைகளை தூக்கலாம் என்று பார்க்க அதுவும் முடியாமல் போக, உடலையும் அசைக்க முடியாமல் ஏதோ ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருந்ததை போல் உணர்ந்தவள் அசவுகரியமாக உணர்ந்து, கண்களை நன்கு திறந்து தன்னை சுற்றிப் பார்த்தாள்.

புது இடமாக இருந்ததால் சற்று மிரண்டவள், தன் மேல் இருந்த கையை பார்த்துவிட்டு பயந்து அருகில் பார்க்க, அவளது முகத்தின் மிக அருகில் கரன் தான் அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு படுத்திருந்தான்.

இத்தனை அருகில் அவன் முகத்தை பார்த்தவள், மனது உள்ளே இருந்த காதல் வெளியே வந்து அதை ரசிக்க சொன்னது.

அவளும் அனைத்தையும் மறந்து அவனுடைய அழகு வதனத்தில் தொலைந்தாள். ஐந்து வருடங்கள் கழிந்து முழு ஆண் மகனாக இருப்பவனை கண்டவள் மனம் சிறகில்லாமல் பறந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து அவன் அணைப்பில் படுத்திருப்பது அவளுக்கு சுகமாகத்தான் இருந்தது. ஆனால் தற்பொழுது அவள் வேறு ஒருவரின் மனைவி என்ற உண்மை சுட, உடனே வேகமாக அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்றுப் போனாள்.

அவன் பிடி அந்த அளவுக்கு இருந்தது. ஆனால் அப்பொழுதும் அவள் வயிற்றில் இருந்த மகவுக்கு எதுவும் ஆகாத வண்ணம், அவளை மட்டும் அழுத்தி பிடித்து இருந்தான். மனதிற்குள் சந்தோஷம் கொண்டவள் இருந்தாலும், இது எல்லாம் தவறு என்று அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

“கொஞ்ச நேரம் நெளியாம கம்முனு படுடி,” என்று கரகரத்த குரலில் சொன்னான் கரன்.

அதில் அவன் வதனம் காண, கண்களை இன்னும் மூடிக்கொண்டு படுத்திருந்தான்.

இது சரிப்பட்டு வராது என்பது போல், கஷ்டப்பட்டு அவனது கைகளை விளக்கி, அவன் பிடியிலிருந்து எழுந்தவள், அப்பொழுதுதான் உடையை பார்த்து மிரண்டு போனாள்.

வழுவழுப்பாக ஒரு சாட்டின் நைட்டி அணிந்து இருந்தாள். உள்ளாடை முதற்கொண்டு போட்டு இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நடந்த நினைவு அனைத்தும் வந்து போக, ஈஸ்வரனிடம் இருந்து தப்பித்ததை எண்ணி சந்தோஷம் கொண்டாலும், இவன் தற்பொழுது வந்திருப்பதை எண்ணி குழப்பம் அடைந்தாள். தக்க சமயத்தில் தன்னை வந்து காத்தவனை நினைத்து மனதிற்குள் அவனுக்கு நன்றியும் சொல்லிக் கொண்டாள்.

அப்பொழுதும் கண்களை திறக்காமல், “என்ன பார்த்து ரசித்தது போதும், சீக்கிரமா ரெஸ்ட் ரூம் போயிட்டு வா. அடுத்தது நான் போகணும்,” என்றவன் குரலில் சுயம் பெற்றவள், அவனைப் பார்த்து முறைத்துவிட்டு எழுந்தாள்.

அப்பொழுதுதான் இயற்கை அழைப்பை உணர்ந்து, அவளும் வேகமாக உள்ளே செல்ல முயன்றாள். “வேகமா போனேனா, வந்து கையில தான் தூக்கிட்டு போவேன். ஒழுங்கா, பொறுமையா, நிதானமா நடந்து போ,” என்றவன் குரலில், வேகநடை மெதுவாக மாறியது. உள்ளே நுழையும் முன்பு அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை அடைத்தாள். அந்த சத்தம் கேட்டவுடன் மெதுவாக கண்களை திறந்தவன், பெருமூச்சு விட்டான். அவள் படுத்து இருந்த தலையணையை எடுத்து நுகர்ந்து, அவள் வாசனையை தனது நுரையீரலில் நிரப்பிக் கொண்டவன், “இதே போல ஒவ்வொரு காலையும் அழகா விடிஞ்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்…” என்று மனதில் நினைத்தான்.

பின்னர் தலையணையை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

அவளோ தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, முகத்தை துடைத்துக்கொண்டே கழிவறையிலிருந்து வெளியே வந்தாள். லேசாக காலில் இருந்த தண்ணீர் டைல்ஸ் தரையில் இருந்ததால், அவள் வழுக்கி விடப் போக, நொடியில் அதை கவனித்தவன் வேகமாக ஓடி வந்து அவளை தாங்கிப் பிடித்தான்.

நொடியில் நடந்த நிகழ்வில் விழுந்துவிடுவோமென நினைத்து கண்களை மூடியவள், அந்தரத்தில் பறப்பதை உணர்ந்து கண்களை திறந்தாள். அவளை கோபமாக பார்த்துக் கொண்டே வந்து, கட்டிலில் மெதுவாக அமர்த்தியவன், அருகில் இருந்த ஜக்கிலிருந்த தண்ணீரை குவளைக்கு மாற்றி அவளுக்கு கொடுத்தான். தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அவளுக்கு அது தேவைப்பட்டதால், குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

“கால் ஈரம் இருக்குமே. ஒழுங்கா மேட்ல துடச்சுட்டு நடந்து வர மாட்டியா? நான் மட்டும் வந்து பிடிக்கலன்னா என்ன ஆகி இருக்கும்? வயிற்றுல குழந்தை இருக்கிறது ஞாபகம் இருக்கா இல்லையா? சின்ன குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்காத அபி,” என்று அவளை கடிந்து  கொண்டவன் ஒரு துணியை வைத்து அவளது பாதங்களை பிடித்து துடைத்து விட்டான். முதலில் மறுத்தவள் எதிர்ப்பை எல்லாம் கண்டுகொள்ளாமல் செய்துவிட அவனது அன்பில் உருகினாள்.

மறுவார்த்தை பேசாமல், அவனும் குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

அவன் குளியலறை விட்டு வெளியே வர, இவள் அங்கே இல்லாமல் இருப்பதை பார்த்தவன் வேகமாக பெட்ரூமிலிருந்து வெளியே வந்தான். ஹால் சோபாவில் அமர்ந்திருந்த அவளுக்கு, ஒரு பணியாள் தேவையான பால் கிளாஸை வைத்து கொடுத்தார். “அம்மா, தம்பி இதை தான் உங்களுக்கு குடிக்க சொன்னாரு,” என்று கொடுத்தார்.

“இத குடிச்சா எனக்கு வாந்தி வருது. வேண்டாம், காப்பி கொடுங்க,” என்றவுடன், “வயிற்றுல குழந்தை இருக்கிறப்போ  காப்பி எல்லாம் குடிக்க கூடாது. இதை குடி. கொஞ்ச நேரம் கழிச்சு காப்பி குடிக்கலாம்,” என்றான்.

அவளை முறைத்து பார்த்தவள் குடிக்காமல் அமர்ந்திருந்தாள். அதில் கோபம் வந்தவன் அருகில் அமர்ந்து, அதை எடுத்து அவள் வாய்க்கு அருகில் வைத்தான்.

அவனது நெருக்கத்தில் தடுமாறியவள் சற்று தள்ளி அமர, “நீ இப்ப குடிக்கலன்னா, இந்நேரம் உன்னை என் மடியில் உட்கார வைத்து தான் இதை புகட்டுவேன்… அதுவும்…” என்று அவன் சொன்னதை கேட்டு திடுக்கிட்டவள், அவனது கையில் இருந்த பால் கிலாஸை வாங்கி, கசாயம் குடிப்பது போல் கண்களை மூடி குடித்தாள்.

அதன் பின்பும் அவளுக்கு உமட்டுவது போல் இருக்க, உடனே தைல டப்பாவை அவளது கையில் கொடுத்தவன், “இதை முகர்ந்து பார், கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகும்,” என்றான்.

அவளும் அதேபோல் செய்ய, சற்று நிம்மதி அடைந்தாள். “அதுக்காக அடிக்கடி இதை முகர்ந்து பார்க்காதே. ரொம்ப முடியலன்னா மட்டும் வச்சுக்கோ,” என்று கூறியவன் எழுந்தான். “அக்கா, மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் செஞ்சு வச்சுடுங்க,” என்று சொல்லிவிட்டு, “அபி, இங்கே வா,” என்று அவளது கையை பிடித்து அழைத்துச் சென்றான்.

பெட்ரூமுக்குள் நுழைந்தவள், “என்ன வேணும்? எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.

அவளை பார்த்தவன் சிரித்து, “வேற எதுக்கும் இல்ல. ஹாஸ்பிடல் போனும். பேபி செக் பண்ணணும். போய் ஒழுங்கா குளிச்சிட்டு வா. அதுக்குள்ள பிரேக்ஃபாஸ்ட் தயாராகிடும். அப்பாயிண்ட்மெண்ட் போட்டாச்சு,” என்றான்.

அவன் தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு வைத்துவிட்டு, அவளுக்கும் தேவையான அனைத்தையும் எடுத்து கையில் கொடுத்தான். அதை பார்த்தவள் அதிர்ச்சியாக நின்றாள்.

“என்ன பார்க்கிற? நீயே குளிச்சிட்டு போட்டுட்டு வரியா, இல்ல நான் வந்து குளிக்க வச்சு எல்லாத்தையும் போட்டு விடட்டுமா?” என்றவனின் வார்த்தையில் பயந்தவள், உடனே உடைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் வேகமாக செல்ல முயன்றதும், அவளது முடியை பிடித்து இழுத்து நிறுத்தியவன், “வேகமா போகாத. பொறுமையா நடன்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” என்று கர்ஜித்தான். அதில் பயந்தவள் கண்களை இறுக்கமாக மூடி, நெஞ்சில் கை வைத்து மூச்சை சீர்செய்தாள். “சரி… பயப்படாதே. சீக்கிரமா கிளம்பிட்டு வா. மருத்துவமனை போகணும்,” என்றதும் அவளும் தலைஅசைத்து உள்ளே சென்றாள்.

சில நேரத்தில் குளித்து தயாராகி, துண்டைப் போர்த்திக் கொண்டே வெளியே வந்தாள். அவளை பார்த்தவன் சிரித்துக்கொண்டு, “புடவை கட்டுறியா? இல்ல நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டான். அவள் முகத்தை சுளித்து வேறு பக்கம் திரும்ப, “இதான்… இந்த பொண்ணுங்களுக்கு எதுவுமே நேரடியா பதில் சொல்ல வராது போல,” என்று கண்ணடித்துவிட்டு, தன்னுடைய உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான். சில நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தவன், இருவரும் காலை உணவை சாப்பிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர்.

மருத்துவமனையில், அவளைப் போன்ற பல கர்ப்பிணி பெண்கள் இருந்ததை பார்த்தவளுக்கு, தனது கணவன் ஒருமுறையாவது தன்னை இப்படி பார்த்துக்கொள்ளவில்லை என்ற ஏக்கம் மனதில் எழுந்தது.

அதை அவள் முகத்தில் கண்டவன், அவளது கையை இறுக்கமாக பிடித்து, “இனிமேல் உன் கணவனைப் பற்றி நினைக்காத. குழந்தையை மட்டும் நினைச்சு பார் இதுதான் நிஜம்,” என்று கூறினான்.

அவள் மெதுவாக தலைஅசைத்தாள்.

சில நிமிடங்களில் மருத்துவர் அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர். ஸ்கேன் பார்த்த மருத்துவர் “குழந்தை நல்லா இருக்கிறது,” என்று கூறினார்.

கரண் தனது சந்தேகங்களை கேட்டான். “நேத்து கொஞ்சம் அவங்களுக்கு ரெஸ்ட் இல்லாம இருந்தாங்க… இப்போ எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று கேட்டான்.

மருத்துவர், “குழந்தை நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இவர்களின் பிரஷர் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணணும். ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. நல்லா சாப்பிடணும், ரிலாக்ஸா இருக்கணும். இல்லனா சுகப்பிரசவத்துக்கு சான்ஸ் குறையும்,” என்று அறிவுறுத்தினார்.

அவர் தொடர்ந்து சில மருந்துகளையும் கொடுத்து அனுப்பினார். வெளியே வந்ததும், அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். கரன் அவளது கையை பிடித்திருந்தான். அதை உதறிவிட்டு, அவள் வேகமாக நடக்க தொடங்கினாள். அப்போது, எதிரே ஒரு வார்டுபாய்  ஸ்ட்ரெச்சரை வேகமாக கொண்டு வர, அது அவரின் கையில் இருந்து தவறி நேராக அவள் பக்கம் வந்தது.

எதையும் கவனிக்காமல் நடந்த அவளை பார்த்தவர் கத்த, அவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

அது நேராக தன்னிடம் வந்து கொண்டிருப்பதை கண்டு, வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் என்ன செய்வது என்று தடுமாறினாள்.

அடுத்த நொடியில், அவளை தூக்கி ஓரமாக கொண்டு சென்றான் கரண். 

அங்கு இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அவன் செயலை பாராட்டி கைத்தட்டினர்.

அவள் மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். தன்னுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்தவள் நிம்மதி அடைந்தாள். ஆனால் கரன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அவள் மெதுவாக, “சாரி…” என்று சொன்னாலும், அவன் எதுவும் பேசவில்லை.

அவளை தூக்கிக்கொண்டு மருந்தகத்துக்கு சென்று, தேவையான மருந்துகளை வாங்கி, மீண்டும் காரில் அமர வைத்தான்.

“நான் நடந்து வரேன்… எதுவும் பிரச்சனை இல்லை,” என்றாலும், அவன் கேட்காமல் அவளை கவனமாக அமர்த்தி, சீட் பெல்ட் போட்டு விட்டு தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

சில நேரத்தில் அவர்கள் வீட்டை அடைந்தனர்…

வீட்டிற்கு வந்ததும், அபி காலிங் பெல் அழுத்தினாள். கதவு திறக்க, உள்ளே தனது தாய் தந்தையை பார்த்தவுடன், “அம்மா… அப்பா…” என்று கத்திக்கொண்டு ஓடி சென்று இருவரையும் கட்டிப்பிடித்து அழுகையில் கரைந்தாள்.

கதிர்வேல் மகளை பார்த்து, “அபிமா… போதும். வயிற்றில் குழந்தை இருக்கு. ரொம்ப அழாத,” என்றார்.

அவரது மனைவி கௌரியும் கண்கலங்கியபடி நின்றிருந்தார். “கௌரி, நீயும் அவ கூட சேர்ந்து சின்ன குழந்தை மாதிரி அழுது கொண்டு இருக்கே… உனக்கு வயிற்றில் இருக்கிற குழந்தையைப் பற்றியும் நினைக்கணும்,” என்று அவர் எச்சரித்தார்.

அதைக் கேட்ட  தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மகளையும் ஆறுதல் கூறி, அவளது கண்ணீரை துடைத்தார்.

“ஆமா, நேத்து நான் கால் பண்ணினேன். அப்புறம் உன் போன் ஸ்விட்ச் ஆஃப். என்ன ஆச்சு? கரன் தம்பிதான் எங்களுக்கு போன் பண்ணி, உடனே வர சொல்லி டிக்கெட் புக் பண்ணி அனுப்பினார். நாங்களும் இன்று காலையில்தான் வந்தோம். நீங்க மருத்துவமனைக்கு போயிருந்தீங்க… என்னம்மா ஆச்சு?” என்று கேட்டார்.

அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க,

“அபி!” என்று கரன் கடுமையாக அழைத்தான். அவள் தண்ணீர் குடித்து தன்னைக் கட்டுப்படுத்தி, நடந்ததை சுருக்கமாக கூறினாள்.

அதை கேட்ட கௌரி, “அந்த சந்துருவுக்கு நல்ல முடிவு வராது… என் பொண்ணை இப்படி…” என்று சாபமிட, “அம்மா!” என்று அபி தடுத்தாள்.

“அவன் எப்படி இருந்தாலும், என் குழந்தையோட அப்பா. தயவு செய்து அப்படி சொல்லாதீங்க,” என்றாள்.

அந்த வார்த்தையை கேட்டவுடன், அருகில் இருந்த டைனிங் மேசையை கரன் பலமாக அடித்தான். அது சிதறிய சத்தம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

“உன்னோட நடத்தையை சந்தேகப்பட்டு உன்னை வீட்டில அடைத்து வைக்கிறவன்… உன்னோட முதல் குழந்தையை அவன் கையாலேயே கொன்றவன்… அவன் தான் இந்த குழந்தையோட அப்பான்னு சொல்லாத!” என்று கோபமாகக் கத்தினான்.

அதை கேட்ட அபியின் பெற்றோர் அதிர்ந்தனர். “முதல் குழந்தையா?” என்று கதிர்வேல் அதிர்ச்சியுடன் கேட்டார். அபி தலையை குனிந்து, நடந்த உண்மையை மெதுவாக கூறினாள். அதை கேட்ட கௌரி அழுகையில் உடைந்தார். “அப்பவே சொல்லி இருந்தா… உன்னை எங்களோட கூட்டிட்டு போயிருப்போம்… இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது…” என்றார். அபி அவரை சமாதானப்படுத்தி, “அம்மா… ப்ளீஸ்… நீங்க அழாதீங்க,” என்றாள்.

அதன்பின், கரன் நடந்த அனைத்தையும் விவரமாக சொல்ல ஆரம்பித்தான்.. 

ஆராத்யா, மோனா, மினிஸ்டர், எல்லாரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியைப் பற்றியும் விளக்கினான். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அபி தனது வயிற்றை பிடித்துக்கொண்டு நடுங்கி அமர்ந்தாள். கரன் அவள் அருகில் வந்து அமர்ந்து, அவளது தோளை பிடித்து தன்னிடம் சாய்த்தான்.

அவள் பயந்து அவனிடம் சாய்ந்து கொண்டாள்.

கதிர்வேல் மெதுவாக எழுந்து, கரன் முன் வந்து நின்றார். “என் பொண்ணையும், அவளோட குழந்தையையும் காப்பாத்தினது நீ தான்… நாங்கள் உனக்கு ரொம்ப கடன் பட்டிருக்கோம்,” என்று சொல்லி கண்ணீர் மல்க நின்றார்.

கரன் உடனே அவரை அமர வைத்தான். “எதுவும் கவலைப்படாதீங்க. இனிமேல் அவளுக்கு எந்த கஷ்டமும் வராது. நான் பார்த்துக்கிறேன்,” என்றான்.

சிறிது நேரம் அமைதி நிலவியது.

பின்னர், கரன் உறுதியுடன், “அபி… என் வாழ்க்கையில் இருந்த இடம் இன்னும் காலியாகத்தான் இருக்கு. நீயே அந்த இடம். நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்,” என்றான்.

அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

“இது சரியில்லை…” என்று சொல்ல முயன்றவள், வார்த்தைகளைத் தொடர முடியாமல் நின்றாள்.

“நீ இப்போ எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நான் என் முடிவை சொல்லிட்டேன்,” என்று அமைதியாக கூறினான். அவள் முகத்தை திருப்பி நின்றாள். கௌரி, கதிர்வேல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த வீட்டில் ஒரு கனமான அமைதி நிலவியது…

அந்த அமைதியை உடைத்து, கரன் மெதுவாக, “அத்தை, மாமா… நம்ம நாலு பேரும் நாளைக்கு சென்னை கிளம்பலாம்,” என்றான்.

அந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்க, கௌரி எழுந்து செல்ல முயன்றார். “நான் பார்த்துக்கறேன்,” என்று சொல்லி கரன் அவரை தடுத்தான்.

கதவை திறந்தவன், வெளியே நின்றிருந்த டிரைவர் ஒருவரிடமிருந்து ஒரு பெரிய பெட்டியை வாங்கிக் கொண்டான். அதை உள்ளே கொண்டு வந்து, அபி அருகில் வைத்து, “உனக்கு தேவையான டிரஸ்… இன்னும் உன்னோட முக்கியமான பொருட்கள் எல்லாம் இதுல இருக்கு. அந்த வீட்டிலிருந்து எடுக்க சொல்லிட்டேன்,” என்றான்.

அதை கேட்டவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் திரும்பி பால்கனிக்குச் சென்றான். அந்த பெட்டியை பார்த்தவள், அவன் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து அமைதியாக நின்றாள்.

“என்ன அபி… உன் மனசுல இன்னும் சந்துரு தான் இருக்கானா?” என்று கதிர்வேல் மெதுவாக கேட்டார்.

அதில் சற்றே திடுக்கிட்டவள், “அப்பா… என் புருஷன் சரியில்லைன்னு நான் இன்னொரு வாழ்க்கையை ஏற்றுக்க முடியாது. அது சரியாவும் இருக்காது. நான் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வரணும். நான் டிவோர்ஸ் வாங்க போறேன்,” என்று உறுதியுடன் சொன்னாள்.

அதை கேட்ட பெற்றோர் இருவரும் அமைதியாக தலையசைத்தனர்.

அவள் அங்கிருந்து எழுந்து, அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். கௌரி, கதிர்வேல் இருவரும் கரனை பார்த்தனர்.

“கடவுளே… இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைங்க,” என்று மனதில் வேண்டிக்கொண்டனர்.

அடுத்த நாள் காலை, கோவையிலிருந்து கிளம்பிய விமானம் சென்னை வந்தது.

ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவுடன், கரனின் நண்பர்கள்—தேவன், தேவி, ஸ்ரீநந்தன்,  அபியின் தோழிகள் வந்தனா, சமிக்ஷா அனைவரும் காத்திருந்தனர்.

வந்தனா, சமிக்ஷா இருவரும் அபியை பார்த்ததும் ஓடி வந்து அவளை கட்டிப்பிடித்தனர்.

“அபி… எப்படி இருக்க?” என்று கண்கலங்க கேட்டனர். அவளும் சிரித்தபடி, கண்ணீர் மல்க அவர்களை அணைத்தாள்.

மறுபக்கம், தேவன் மற்றும் மற்றவர்கள் கரனை அணைத்து வரவேற்றனர்.

“வாடா… ரொம்ப நாள் ஆகிடுச்சு,” என்று தேவன் சொன்னான்.

கரன் மெதுவாக சிரித்தான்.

அனைவரும் சேர்ந்து காரில் வீட்டிற்கு கிளம்பினர்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page