பாகம் – 40
அவன் காது அருகே சென்று, “எனக்கு அன்று இரவில் இருந்தே ஒரு சந்தேகம் தான் ..உன்னிடம் கேட்டால் திட்டுவாயே என்று அமைதியாக இருந்தேன்.. வேறு வழியில்லை, இன்றைக்கு கேட்டு தான் ஆக வேண்டும் ..இல்லா விட்டால் என் மண்டை வெடித்து விடும் ..நீ போன பிறந்த நாளின் போது உன் அண்ணனோடும் ,அந்த வீணாப் போனா நவீனோடும் ஹோட்டலுக்கு போனாயே ..அங்கு ஏதாவது பார்ட்டி கொண்டாடினாயா ..உனக்கு ஒத்துக் கொள்ளாத சரக்கு ஏதாவது போட்டாயா..” என்று கேட்டதுமே அவன் அம்மாவை , ‘என்ன இப்படி அப்பட்டமாய் கேட்டு விட்டது ..என்ன செய்து இதை சமாளிக்கலாம்..,என்று பொய்க் கோபமாய் முறைக்கிறான்..
” சரி சரி கோபித்துக் கொள்ளாதடா .போன பிறந்த நாளிலிருந்து என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த கேள்வியை வீட்டில் வைத்து கேட்டால் திட்டுவாய் அடிக்க கை ஓங்குவாய்.. அதனால் தான் இங்கே வந்ததும் தைரியமாக கேட்கிறேன் .அப்பாடா இப்பொழுதுதான் என் மனம் நிம்மதியாக இருக்கிறது .. ” என்றவர் மகன் திட்டப் போகிறானோ என்று பயந்து அந்த இடத்தை விட்டு நழுவ தொடங்குகிறார் ..
அம்மாவை பிடித்து நிறுத்தியவன், “கிழவி உன் மனதில் இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்.. அதையும் முழுக்க பேசி முடித்து விடு.. அதன் பிறகு உன்னை நான் வைத்து செய்கிறேன்..”
“ம்,நீ கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொல்கிறேன் பார்.. என்னிடம் வந்து என்ன என்ன செய்ய வேண்டும் .. எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டால் நான் சொல்லப் போகிறேன்..உனக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் ..என்னை பார்த்தால் கிழவி என்று வம்பு செய்வதற்கு தானே நேரம் சரியாக இருக்கிறது..
இவ்வளவு நேரம் தான் எண்ணியதையே அம்மா கூறவும் அம்மாவின் மனதிலும் இவ்வளவு இருக்கிறது என்று என்ன நினைத்தானோ.. ” இனிமேல் நான் உன்னை கிழவி என்று சொல்ல மாட்டேன் சாரிமா.. ஏதாவது என்றால் உன்னிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் .. ” சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக செல்கிறான் ..
” ஏங்க இவன் என்னிடம் இப்பொழுது சமாதானமாய் பேசுகிறானா இல்லை கோபமாய் பேசுகிறானா.. நான் என்ன என்று நினைப்பது.. என்னை அம்மா என்று சொன்னவன் சாரி என்று வேறு சொல்லி விட்டு போகிறானே ..எனக்கு என்னவோ பெரிய கச்சேரி வைக்கப் போகிறானோ என்று பயமாக இருக்கிறது.. ” மாறனிடம் புலம்புகிறார்..
” ஏன்டி அவன் உன்னை அம்மா என்று சொல்வதும் மன்னிப்பு கேட்பதும் தான் உனக்கு கச்சேரி வைப்பதாய் அர்த்தமா .. நீதான்டி அவனை இப்படியே உசுப்பேத்தி கிளப்பி வீணடிக்கிறாய்.. அவன் நல்ல பிள்ளை தான்டி..” என்று மகனுக்கு பரிந்து பேசுகிறார்..
மேடையிலேயே பூங்குழலிக்காக கொண்டு வந்த பரிசுப் பொருளை கொடுக்க எண்ணியிருந்தான் அரவிந்த். ஆனால் அமிர்தனுக்கு ஆதி எதுவும் வைத்துக் கொடுக்கவில்லை என்றதும் இவனும் அப்படியே அமைதியாகி விடுகிறான் ..
‘ அண்ணா மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தான் முந்திக் கொண்டு செய்யக்கூடாது..ஒரு வேளை வீட்டிற்கு வந்ததும் தான் ஏதாவது செய்யப் போகிறார்களோ .. என யோசிக்கிறான்..
இவன் எதுவாக இருந்தாலுமே தன் அண்ணனை பார்த்து தானே செய்கிறான் .அதனால் வீட்டிற்கு வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறான் .தன்னுடைய சட்டை பையில் தான் மூன்று பவுனுக்கு டாலரோடு சேர்த்து செயினாகவே கொண்டு வந்திருந்தான் அரவிந்த். இதுதான் அவன் தன் மகளுக்கு கொடுக்கும் பரிசு..
வீட்டிற்கு வந்து எல்லாரும் அசந்து போய் உட்கார்ந்து விடுகிறார்கள்.. சிறிது நேரம் ஆனதும் தான் ஆதி பிறந்தநாள் கொண்டாடிய அந்த இரண்டு குழந்தைகளையும் அருகில் கூப்பிட்டு வைத்துக் கொள்கிறான்.. அதோடு இவர்களும் அருகில் செல்கிறார்கள்..
ஆதி என்ன நினைத்தானோ.. தான் முந்தி கொண்டு செய்யக்கூடாது என, ” அரவிந்த் நீ பிள்ளைக்கு என்னடா பரிசு கொண்டு வந்தாய் ..சபையில் செய்யவே இல்லையே . “
“நீங்கள் செய்த பிறகு தானே அண்ணா நான் செய்வேன் .. நான் உங்களுடைய காப்பி தானே ” சிரிக்கிறான்..
சரி நம்ம இரண்டு பேரும் ஒன்றாக செய்வோமா சொன்னதுமே ஒரே மாதிரியாக இருவருமே சட்டை பையில் கையை விடுகிறார்கள் ..ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே வெளியில் எடுக்கவும் இருவருமே சொல்லி வைத்தார் போல மூன்று பவுனுக்கு டாலரோடு கூடிய செயினை தான் எடுக்கிறார்கள்.. இருவருமே கலகலவென சிரித்துக் கொள்கிறார்கள்.. அரவிந்த் உங்களை ஜெயிக்க முடியாது தெய்வமே.. உங்களைப் பார்த்து காப்பி அடிக்காமல் செய்யலாம் என்று எண்ணினால் நீங்கள் என்னுடைய உள்ளுணர்வை கண்டுபிடித்து அதே மாதிரி செய்து விட்டீர்களே..” சொல்லிவிட்டு அவனை கட்டிக் கொள்கிறான்.. இருவருக்குமே மனம் இலகுவாகிறது..
” சரி சரி இந்த முறை அந்தப் பயல்தான் மிஸ்ஸிங். நம்ம இரண்டு பேரும் சாயந்தரம் ஹோட்டலுக்கு போய் விடுவோமா.., “
” கண்டிப்பா அண்ணா அவனுக்கு தெரிந்தால் ஊருக்கு போனதுமே என்னை அடிப்பான்.. அவனை நான் ரொம்ப பாடாய்ப்படுத்திருக்கிறேன்.. சரி ஏன் இப்பொழுது அந்த பேச்சு.. நம்ம சாயந்திரம் நிறைய பேசிக் கொள்வோம்.. இருவரும் போன வருடம் மாதிரியே மாட்டிக் கொண்டாடுவதற்கு தயாராகிறார்கள்..
போனதுமே சரக்கு தான்.. அதே போலவே அறைக்கும் சென்று தாழ் போட்டுக் கொள்கிறார்கள்..இனி சுவர்கள் என்ன பேசினாலும் இந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே முடிந்துவிடும் … சென்ற வருட பேச்சு மாதிரியே..
“டேய் அரவிந்த் இப்பொழுது உனக்கு மனம் சமாதானம் ஆகிவிட்டது தானே.. பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்கிறாயா..ஆனால் ஒன்று கவனித்தாயா.. உனக்கும் எனக்கும் அடுத்ததாய் பிறந்த பிள்ளைகளை .. எனக்கு ஆண் குழந்தை உனக்கு பெண் குழந்தை.. நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறதுதானே . “
ஒரு கணம் யோசித்தவன், ” அட ஆமாம் அண்ணா ..அதனால் தான் இப்படி ஒரு சூழல் உருவானதோ என்னமோ .. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ள வேண்டும் போல..உங்களுக்கு தான் அண்ணா தேங்ஸ்.. என்னுடைய மனசை தெளிவாக்கி விட்டதற்கு. இல்லாவிட்டால் என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாய்த மாறி இருக்கும் … “
” அட பரவாயில்லடா ஏன் அதையே பேசிக்கொண்டு. ஆனாலும் நீ சுந்த கேள்வியை கேட்டாய் பார்த்தாயா.. எனக்கு அப்படியே உயிரே போனதை மாதிரி இருந்ததடா .. “
“உங்களிடம் வேறு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. வேண்டும் என்றேதான் தனியே பேச வேண்டும் என்று அறை ஏற்பாடு..ஆனால் நம்மை வருடா வருடம் இந்த ஒரே ஒரு நாள் இப்படி என்ஜாய் பண்ணிக் கொள்வோம் ஓகேயா .. “
“ஓகேடா..”
அப்படி என்னதான் இருவரும் சென்ற வருடம் பேசிக் கொண்டார்களோ பார்ப்போம் .. இனி சென்ற வருடம் அறையில் பேசிக் கொண்ட சம்பாசனைகள் மட்டும்..
“என்னடா என்னவோ பேச வேண்டுமென்று வந்துவிட்டு இப்படி அமைதியாகவே இருக்கிறாய்.. நவீன் நீயாவது என்னவென்று
சொல்லேன் . “
அவனும் அப்படியே இருக்கவும், ” சரி ஒரு விஷயமும் இல்லை .. நம்ம வேலை முடிந்தது புறப்படுவோமா..”
” இல்லை அண்ணா இனிமேல் தான் நிறைய வேலைகள் இருக்கிறது உட்காருங்கள் ..உங்களிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அதனால் தான் அமைதியாக இருக்கிறேன். “அதற்கு பிறகு கேட்ட கேள்விகளில் அதிர்ந்து விடுகிறான் ஆதி..
” பூங்குழலி உங்கள் மகள் இல்லை என்னுடைய மகள். “ஆதி சிரித்தவன் அப்படி என்றால் அமிர்தன் என்னுடைய மகனா..” நீங்கள் கிண்டலாக பேசினாலும் உண்மை அதுதான்..
“இப்படி சொல்ல எப்படிடா உனக்கு மனம் வந்தது.. அவள் என்னுடைய ரத்தம்தான் “
“அண்ணா நான் நடந்ததை கூறிவிடுகிறேன். அதற்கு பிறகு நீங்கள் பேச வேண்டியது பேசுங்கள் “என்றதும் ஆதி அமைதியாகிறான்..
“மித்ராவின் மீது சந்தேகம் வந்து அவளை உளவு பார்க்க ஆரம்பித்து அவளுடைய மொபைல்களை எல்லாம் ஒன்று விடாமல் படித்து பார்த்ததுமே ஆரம்பம் ஆனது தான் அண்ணா இது..ஹாஸ்பிடலில் புவனா என்பவள் இவளுடைய தோழி. இருவரும் சேர்ந்துதான் இந்த வேலைகளை செய்தது..அவள் வீட்டில் ஐந்து பேரும் பெண் குழந்தைகள். அதனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்காவிட்டால் யாருக்காவது பிறந்த ஆண் குழந்தையை மாற்றி விடுவதாக திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதற்கேற்றார் போல டாக்டரும் அங்கே இல்லை .. “ஆதியின் முகத்தைப் பார்க்காமல் அரவிந்த் மூச்சு விடாமல் பேசுகிறான்..
“வள்ளி உட்பட இன்னும் நான்கைந்து நர்சுகளுக்கு பணம் கொடுத்து இருவரும் இந்த காரியத்தை செய்து இருக்கிறார்கள்.. அந்த சமயம் தான் மித்ரா தன்னுடைய பத்து பவுன் செயின் காணாமல் போய்விட்டதாக கூறினாள்.. நானும் குழந்தை பிறந்த சமயம் எதுவும் கேட்க கூடாது என்று விட்டுவிட்டேன்..அதை விற்றுதான் எல்லோருக்கும் பணம் கொடுத்து இருக்கிறார்கள்..
ஆதிக்கு இதை நம்ப முடியவில்லை. “இப்படி எல்லாம் செய்ய முடியுமா .. “
“முடியும் என்றால் முடியும் அண்ணா.. புவனா இரண்டு குழந்தைகளின் கையிலும் கட்டப்பட்டிருந்த டாகை லூசாக கட்டிவிட்டு சுலபமாக மாற்றி இருக்கிறாள்..எல்லாம் சில நொடிகள் தான்.. நொடியில் குழந்தையும் மாறி விட்டது .. “
“அவள் செய்த பாவத்திற்கு அவள் இரண்டு வருடத்திற்கு முன்பே ஆக்சிடெண்டில் செத்துப் போய்விட்டாள் அண்ணா.. மித்ரா துரோகம் செய்கிறாள் என்ற மன உளைச்சலிலே இருந்த எனக்கு அவள் குழந்தையை மாற்றியது பெரிய விஷயமாக தெரியவில்லை.. சொல்லப் போனால் இந்த விஷயத்தை படித்ததும்தான் நான் கொஞ்சம் இலகுவாகவே மாறினேன்..உங்களிடம் எப்படியாவது உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணினேன்.. அதனால்தான் போன பிறந்த நாளை இங்கே கொண்டாடலாம் என்று உங்களை வரவழைத்தேன்..”
இருந்தாலும் ஆதிக்கு இன்னமும் சந்தேகம் தீரவில்லை.. “சரி நான்தான் அந்த குழந்தைக்கு அப்பா.. அந்த ஹாஸ்பிடலில் பிரசவம் நடந்தது என்று உனக்கு எப்படி தெரிந்தது .. “
“அதுதான் நாங்கள் வரிசையாக எல்லோருடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் பெயரையும் பார்த்து விட்டோமே .. அதோடு அங்கு இருந்த மற்ற நர்சுகளிடமும் விசாரித்து தெரிந்து கொண்டோம். வள்ளி எல்லாவற்றையுமே ஒத்துக் கொண்டாள்..அண்ணா அன்று அமிர்தனைத் தவிர மற்ற குழந்தைகள் பெண் குழந்தைகள் .. உங்களுடைய பெயரை பார்த்ததுமே எனக்கு என்னவோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. கடவுள் எதற்காகவோதான் நம்மை ஒன்றாய் சேர்ந்து முடிச்சு போட்டு இருக்கிறார் என்று .. “
“இப்பொழுது எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் அண்ணா. இனி நீங்கள் சொல்லும் முடிவுதான் … ” ஆதி அவனை நிமிர்ந்து பார்க்கிறான் ..இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று..
” நீங்கள் உங்கள் மகளை ஏற்றுக் கொள்வீர்களா ..அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.. “
” அவள் என்னுடைய அம்மாடா.. என் தெய்வம்.. அவளை என் கையில் கொண்டு வந்து கொடுத்ததுமே என்னுடைய மனநிலை எப்படி இருந்தது தெரியுமா.. வானத்தில் பறப்பதைப் போல. நான் யாருமே இல்லாத அனாதை.. எனக்கு என்று அக்கா தங்கைகள் தம்பி அண்ணா என்று எதுவுமே கிடையாது..அதற்காகவே என் அம்மாவை கடவுள் எனக்கு திரும்ப அனுப்பி விட்டதை போலதான் நினைத்தேன்..”
“சரி நான் உன்னை கேட்கிறேன்.. நீ உன் மகன் அமிர்தனை விட்டுக் கொடுப்பாயா.. நீ கூட விட்டுக் கொடுத்து விடுவாயடா.. ஆனால் மித்ரா தங்கை விட்டுக் கொடுப்பாரா. மகளை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாத அந்த பெண்ணை இனி காலம் முழுக்க வதை செய்யப் போகிறாயா..”
ஆச்சரியத்துடன் அரவிந்த், “ஆண் குழந்தை பெற்ற நீங்கள் விட்டுக் கொடுக்க எண்ணுகிறீர்கள்.. அப்படி என்றால் .. “கேள்விக்குறியாய் அதோடு பேச்சை நிறுத்துகிறான் ….
“குழந்தைகளில் ஆண் குழந்தை ,பெண் குழந்தை என்னடா ..பிறந்து அடுத்த நொடியே என் கையில் வந்த பூங்குழலிதான் என் மகள்.. இதில் எந்த மாற்றமும் கிடையாது.. “
அரவிந்தன் எண்ணம் ஆதியிடம் பேசி குழந்தையை மாற்றிக் கொள்வது..
அதற்கு காரணம் ஆதிக்கு பிறந்தது ஆண் குழந்தை..அதனால் கண்டிப்பாக உண்மை தெரிந்தால் தன் குழந்தையை விட்டுக் கொடுக்க மாட்டான் .. அதற்கு முந்திக் கொண்டு தானே பேசிவிடலாம் என முடிவு செய்தான்.. இப்பொழுது பேசுவதை பார்த்தால் ஆட்டமே தலைகீழாய் மாறுவதைக் கண்டு குழப்பமாகிறது..
தம்பியின் மனநிலை அவனுக்கு நன்கு புரிகிறது.. ஆதி என்ன நினைத்தானோ அரவிந்தின் காலடியில் மண்டியிட்டு உட்கார்ந்து கையெடுத்து கும்பிடுகிறான்.. அரவிந்துக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. உடனே அவனும் அதே போல உட்கார்ந்து கைகளை பிடித்துக் கொண்டு அழுகிறான்..
” என்ன அண்ணா இப்படி செய்கிறீர்கள்.. என்ன ஆயிற்று உங்களுக்கு .. “
” நம் குழந்தைகள் நம் குழந்தைகளாகவே இருக்கட்டும் ..ஏன் நீ என்னுடைய தம்பி தானே ..நான் உன்னுடைய அண்ணன் தானே ..அண்ணன் குழந்தையை தம்பி வளர்ப்பது கிடையாதா.. அது மாதிரி இருந்து விட்டு போகட்டுமே ..என் உயிரை கேட்டு என்னை விட்டுப் பிரித்து விடாதேடா.. உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் .. “விழப்போனவனை தடுத்து நிறுத்தி அணைத்துக் கொள்கிறான் ..இதற்கு மேல் அரவிந்த் என்ன பேச முடியும்..
இதோடு பேச்சு வார்த்தை முடியவில்லை.. அதற்கு பிறகுதான் நிறைய பேசுகிறார்கள் ..என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று..
” இந்த உண்மை நம் மூவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும். எத்தனை காலமானாலும்.. இது நம் மீது சத்தியம்.. ” சத்தியம் செய்துக் கொள்கிறார்கள்.. அப்பொழுதுதான் ஆதி இந்த யோசனையை கூறுகிறான்..
” இனி வருடா வருடம் இந்த குழந்தைகளின் பிறந்த நாளை நாம் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும் .. “
“சரி அண்ணா..”
“அரவிந்த் நீ ஒன்றை யோசித்துப் பார்த்தாயா..இது கடவுளின் சித்தம் போல. உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தைகளை பார் ..உனக்கு இரண்டுமே பெண் குழந்தைகள் ..எனக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள்.. அதனால்தான் மாற்றி விட்டிருக்கிறாரோ என்னவோ..அதனால் நம் இருவருக்குமே எந்த குற்ற உணர்வும் இருக்கக்கூடாது… எதையுமே நாம் கேட்கவும் இல்லை. மனதில் பதிய வைக்கவும் இல்லை … எல்லாவற்றையும் ரப்பரைப் போட்டு அழித்து விடலாம்.. ” என்றதும் அரவிந்த் ஆதியின் பெருந்தன்மையை எண்ணி வியந்து போகிறான் ..
“அண்ணா நான் ஏதேதோ எண்ணி பயந்து கொண்டே வந்தேன் தெரியுமா.. நீங்கள் என்னை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து தண்டனை வாங்கி கொடுத்து விடுவீர்கள் என்றெல்லாம் பைத்தியம் மாதிரி யோசித்தேன்… என் மனதில் இருந்த பாரமே இப்பொழுது நீங்கி விட்டதண்ணா .. நான் நிம்மதியாக இருக்கிறேன் ..இன்றைக்கு தான் நன்றாக தூங்கப் போகிறேன்
பாருங்கள்… ” சரக்கு பாட்டிலை எடுத்தவன் கடகடவென உள்ளே இறக்குகிறான்.. இருவரும் பிடிவாதமாய் பிடுங்கி வைக்கிறார்கள்..
கையில் பாட்டிலோடு இருவரும் அன்று நடந்ததை நினைத்து பார்க்கிறார்கள்.. அரவிந்த் சிரித்த படியே , ” அண்ணா நான் உங்களைப் பார்த்து காப்பியடிப்பேனே.. அது எப்போதிலிருந்து தெரியுமா..”
“பிறந்தநாளுக்கு நான் பரிசு பொருள் கொடுப்பதிலிருந்து தானே.. “
” இல்லை அண்ணா இந்த பசங்க பிறந்ததில் இருந்தே .. “
ஆதிக்கு இந்த செய்தி புதிதாக இருக்கிறது …
” என்னடா சொல்கிறாய்..”
” ஆமாம் அண்ணா உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது என்று சொன்னதும் உங்களுடைய குரலை அப்பொழுது தான் நான் கேட்டேன்.. குதூகலமாக குதித்து கும்மாளம் போட்டு கொத்து கொத்தாய் பணத்தை அள்ளி எல்லோருக்கும் கொடுத்தீர்கள் நினைவு இருக்கிறதா..”
“அட ஆமாடா அப்பொழுது நீ அங்கேதான் இருந்தாயா.. ஆனால் நம்ம இரண்டு பேரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.. “
” நமக்கு பிரசவ பயம். அதனால் வேறு யாரையும் கவனிக்கவில்லை. உங்களைப் பார்த்து நான் வியந்தேன்.. பாரேன் பெண் குழந்தை பிறந்த இவர் பணத்தை அள்ளி கொடுக்கிறார்.. ஆண் குழந்தை பிறந்த எனக்கு இது தோன்றவில்லை என்று .அதன் பிறகு தான் நானும் அவர்களுக்கு பணத்தினை நிறைய கொடுத்தேன்.. அன்று அங்கிருந்த பெண்கள் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம்..அதனால்தான் அந்த பெண்களிடம் விசாரித்த போது சுலபமாக கண்டு கொண்டேன்.. அப்பொழுதே நான் உங்களை காப்பியடித்து இருக்கிறேன் பாருங்களேன்..” என்று சொல்லி சிரிக்கிறான்..
இனி இருவரின் குடும்பத்திலும் மகிழ்ச்சி மட்டுமே நிலவட்டும்.. அண்ணனும், தம்பியும் இது போலவே இறுதிகாலம் வரை ஒற்றுமையாய் வாழட்டும்..
முற்றும்
பின் குறிப்பு :இது உண்மை கதை . காட்சிகள் என் கற்பனையில்…
.
