அத்தியாயம் – 5

தினமும் காலையில் அந்த வீட்டின் அக்கப்போர் அளவு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

“இட்லில உப்பே இல்ல…

சட்னியா இது? உப்பு அழுக்கா இருக்குனு கழுவி ஊத்தி வெச்ச தண்ணி மாதிரி இருக்கு.”

என்று எட்டு இட்லிகளை அசால்ட்டாக உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான் கபில்.

“இந்த மீதி இரண்டு இட்லிதான் இருக்கு, அதையும் முடிச்சிடு.” நக்கலோடு அவனுக்குப் பரிமாறிவிட்டு நகர்ந்தாள்.

இது தினமும் நடக்கும் காட்சியே…

காலையும், இரவும் முடிந்தவரை ஒன்றாகவே இணைந்து சாப்பிடுவார்கள்.

உணர்ந்து இணைந்துக் கொண்டார்களா இல்லை, இணைக்கப்பட்டார்களா தெரியவில்லை.

“ஹே, ரெண்டு பாத்திரம் தானடி இருக்கு, கழுவி வெச்சா என்னடி?”

“உன்னோட தல மேலயா கெடக்கு? பேசாம போவியா!”

“என்னடி ஓவரா பேசுற?”

“அப்படித்தான் டாப்பேசுவேன். இன்னிக்கு நான் தானே வேலை செய்யணும், தோண்றப்போ செய்வேன். உன்னோட வேலைய மட்டும் பாரு.”

“ரொம்ப பேசாத. நாளைக்கு குக்கிங் ஐயா தான். மைதா மாவு பேஸ்டாக்கி வாயை ஒட்டிருவேன், ஜாக்கிரதை!”

“தம்பி, எனக்கும் ஒரு நாள் இருக்கு…

பாயாசம் வேற டேஸ்ட்டா செய்வேன், பாத்துக்கோ!”

‘ஆத்தி, இவ செஞ்சாலும் செய்வா…’

இன்று மட்டும் இப்படி இல்லை; பல நாள், சில நாள் என்று அவர்கள் வீடு முழுவதும் இந்த ஓசை தான் நிறைந்திருந்தது.

“இத எதுக்கு இங்க வெச்ச?”

“உன்ன யார் இத தொட சொன்னா?”

“பேசாம சாப்பிடு. உனக்கு அவ்ளோதான் மரியாதை, சொல்லிட்டேன்!”

“தேவையில்லாத கேள்வி எல்லாம் கேக்காத!”

“உன்னோட வேலை என்னவோ அதைப் பாரு. என்ன யாரு பாக்க சொன்னா?”

“கண்மணி, ஹே அம்மணி!”

“கபில்… கபில்… எரும மாடே!”

“ஆஆஆஆஆஆஆஆ…..”

தாமரை இலைப் போல் வாழும் அவர்களின் அந்த இல்லம் நிறைந்த சப்தங்கள் இதுவே…

இணக்கமாக இல்லை, ஆனால் இருக்கமாகவும் இல்லை அப்படி சென்றுக் கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் ஒரு நாள்…

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.

அந்த அறையில் ஒரு நல்ல பாடல்…

(உங்கள் மனதிற்கு எந்தப் பாடல் பிடிக்குமோ அதை நினைத்துக் கொள்ளலாம்.)

அவள் அணிந்திருந்த உடை தொளதொள பிளாசோ, முட்டி வரை நீண்ட டாப், துப்பட்டாவை வலது தோள்பட்டையின் வழியே வயிற்றில் சுழற்றி கட்டிக் கொண்டிருந்தாள். நடனமாட ஆயத்தமாக இருக்கிறாள் என்று காட்டியது அவளுக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த அந்தக் கண்ணாடி. அதைப் பார்த்து,

ஒரு குரு வணக்கத்துடன் ஆடத் துவங்கினாள்.

அந்தப் பாடலுக்கு அவள் முகமும் கண்களும் அத்தனை ரசனைகளைக் காட்டியது.

தொடர்ந்து மூன்று நிமிடங்கள் அத்தனை அம்சங்களையும் கூட்டி, கண்களுக்கு விருந்தாக இருந்தது அந்த நடனம். அவள் கண்களின் பாஷைகளை அழகாய் மொழிபெயர்த்தது அவள் புருவங்கள்.

“அழகு…” அந்த அறைக்குள் மெதுவாய் நுழைந்தான் கபில்.

சற்றே மூச்சிறைக்க, மூன்று நிமிட அயர்ச்சியில் எழுந்த வியர்வையோடு அவனை நோக்கி இதழ்கள் அளவாய் விரிய,

அவள் கண்கள் அவன் கண்களைச் சந்திக்கையில், நிகழ்காலத்தை சற்று மறந்து விட்டனர் போல. அந்தப் பார்வையில் என்ன புரிந்துக் கொண்டானோ, மெல்ல அவன் கால்கள் அவளை நோக்கி நகர்ந்தது.

இடைவெளிகள் குறையக் குறைய, இதயத் துடிப்புகள் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.

இருவருக்கும் அந்த இடைவெளி குறைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை போல…

அவளின் மூச்சுக் காற்றில் பங்கு கேட்கும் அளவிற்கு அவளை நெருங்கி இருந்தான்.

அவன் விரல்கள் அவளின் நெற்றியில் பட்டும் படாமல் அவளது முடிகளை நகர்த்தி,

கன்னங்களைத் தொட்டு, எப்பொழுதும் அவனை இம்சைக்குள்ளாக்கும் அவள் இதழ்களை வந்தடைந்தான்.

அவனைத் தடுக்க எழுந்த கரங்களோடு, தன் கரங்களைப் பூட்டிக் கொண்டான்.

பட்டும் படாமல் அவள் கன்னங்களில் மென் முத்தத்தைப் பதித்தான்.

இறுக்கமாய் மூடியிருந்த கண்களை அவள் திறக்கும் போது  அவள் கைகள் விடுதலையாகி இருந்தது. 

அவன் இல்லை…

ஆனால் கன்னங்களில் ஏதோ குருகுருப்பு 

அவன் ஸ்பரிசம் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றியது.

உள்ளங்கால் வேர்த்து தரையில் ஒட்டிக் கொண்டது. அவளை நிலைப்படுத்திக் கொள்ள சற்று நேரமானது கண்மணிக்கு.

அதற்கு பின் அவளால் நடனத்தை தொடர முடியவில்லை; தலைவலியும் தொற்றிக் கொண்டது.

‘உண்மையா வந்தானா… என்னோட பிரமையா இருக்குமோ?

இல்ல கிஸ் பண்ண மாதிரி தான் இருந்துச்சு…

பேசாம அவன்டயே கேட்கலாமா?

வினையே வேணாம் பா, ரொம்ப பண்ணுவான்…

எதுக்கு எனக்கு மட்டும் இப்படி நடக்குது?’

குழப்பத்தில் குழம்பிக் கொண்டிருந்தாள் கண்மணி. 

‘என்ன இன்னேரத்துக்கு கத்தோ கத்துனு கத்தி ஒரு ஆட்டம் ஆடி இருப்பாளே… ஆளையே காணோம். இவ்ளோ அமைதியா இருக்க ஆள் இல்லையே…’

அவளின் இந்த குழப்பம் கபிலை குழப்பியது. 

இருவரும் அதன் பின் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே தவிர்த்து விட்டனர்.

அவள் வந்தால் இவன் தவிர்ப்பதும்,

இவன் வந்தால் அவள் விலகி ஓடுவதும் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது இவர்களுக்குள்.

 

அவர்களின் அன்றைய நாள்…. 

 

“வாழ்த்துக்கள் கண்மணி!” ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், விழிக்காமல் போனை காதில் வைத்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஹலோ…”

“கண்மணி, சரண்யா பேசுறேன்… தூக்கத்த கெடுத்துட்டேனா?”

“இல்லை சரண்யா, சொல்லுங்க.”

“உங்களுக்கு இன்னும் விஷயம் வந்து சேரல போலயே… கபில் ஒன்னும் சொல்லலயா?”

“இல்ல சரண்யா…”

“அட, நம்ம விளம்பரம் செம்ம ஹிட்! உங்க டான்ஸ் ஸ்டெப் தான் ஹுக் ஸ்டெப்பா வைரல் ஆகிட்டு இருக்கு. நம்ம கம்பெனி சார்பா ஒரு சக்சஸ் பாராட்டி ஏற்பாடு பண்ணிருக்காங்க. நாளைக்கு சாயங்காலம் கண்டிப்பா வந்துடுங்க கண்மணி.”

“ஓ நிஜமாவா! ரொம்ப சந்தோஷம். நான் வெளிய இருக்கேன் சரண்யா, முடிஞ்ச அளவு பாத்துட்டு வந்துடுறேன்.”

தூக்கத்தில் விழித்தவள் தன் தொலைபேசியை ஆராயத் துவங்கினாள்.

அந்த விளம்பரத்தில் வரும் நடனத்தை அதேபோல் ஆடி இணையத்தில் பதிவிட்டிருந்தார்கள் இணையவாசிகள்.

தேடி பார்த்தாள் கபிலிடமிருந்து வழக்கம் போல் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே வந்திருந்தது.

ஏன் கபில் தன்னை அழைக்கவில்லை என்று யோசித்துக் கொண்டே புறப்பட்டுக் கொண்டிருந்தாள் கண்மணி.

அவள் சென்றிருந்தது தோழி ஒருவளின் திருமண விழா. முடித்துவிட்டு நேரே சென்ற இடம் அவர்களது கம்பெனி.

அந்த குளுமையான இரவில், ஒரு அடர் கருமை நிற டிசைனர் புடவை அணிந்து,

வழக்கத்தை விட சற்று கூடுதலான அழகில் தேவதையாய் மிளிர்ந்தாள் கண்மணி.

அனைவரும் அந்த பார்ட்டியில் பிஸியாக தங்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

சிவானியும் சரண்யாவும் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருக்கையில்,

அவள் அருகில் வந்து நின்றாள் கண்மணி.

எப்பொழுதும் சாதாரண உடை அணிந்து வந்து பழக்கம் கொண்ட இடம் இன்று இந்த ஒப்பனைகள் சற்று பதட்டமான உணர்வை கொடுத்தது கண்மணிக்கு.

கண்கள் இரண்டும் அவனை தேடுவதை தடுக்கத் தெரியாமல்…

இல்லை, தடுக்க விரும்பாமல் தேடினாள்.

அவள் தேடியவனோ, அவள் தன்னை தேடுவதை ரசித்துக் கொண்டு நின்றிருந்தான்.

இரு விழி சந்தித்துக் கொண்டன.

அருகில் வருகிறார்கள்…

தொலைவுகள் குறைந்து கொண்டிருந்தது…

அவர்கள் இருவரை தவிர யாரும் எதுவும் கண்களில் அடங்காத மாயை…

“ஹே! நீங்க ரெண்டு பேரும் மட்டும் சொல்லி வெச்சு ஒரே கலர்ல டிரெஸ் போட்டு வந்திருக்கீங்க… கபில் வித் கபில் கோல்ஸ்ஸா?” எங்கிருந்து வந்தாளோ தெரியவில்லை சிவானி அவர்களை நடப்பிற்கு கொண்டு வந்தாள்.

“கோஇன்சிடன்ஸ்…”

இருவரும் ஒன்றாக கூறினர்.

சிறு முறுவல்கள் பகிர்ந்து, விழாவில் கலந்து கொண்டனர்.

“இன்னிக்கு இந்த சக்சஸ் சின்ன விஷயம் இல்ல. நிறைய பேர் உழைப்பு இதுல இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். முக்கியமா கண்மணி, இந்த கான்செப்ட் சொல்லி ஆரம்பிச்சு வெச்சது அவங்க தான்…”

அவன் தொடர்ந்து கொண்டிருக்க, கண்மணி அங்கேயே நின்றுவிட்டதைப் போல் உணர்ந்தாள்.

அதன் பின் நடந்த எந்த சம்பவமும் அவளுக்கு பதியவே இல்லை.

“எங்க டீம் தான் எங்களோட மிகப்பெரிய முதுகெலும்பு. இன்னிக்கு இந்த பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்தின எங்க பிரொட்யூசர்ஸ்க்கு ரொம்ப பெரிய நன்றி. ரெடியா இருங்க இன்னும் நிறைய பார்ட்டி கொடுக்கணும்! என்ன பிரண்ட்ஸ் சொல்றீங்க?”

கபில் சொன்னதை கேட்டு அனைவரும் கூச்சலிட்டனர்.

அவனை தொடர்ந்து அவன் நண்பர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் பேசி 

நிறைவாக முடிந்தது அன்றைய நாள்.

“ஹே, என்னடா எங்கள எல்லாம் ஒரே டீம்னு முடிச்சிட்டு கண்மணி மட்டும் ஸ்பெஷல் பண்ணிட்ட?” என்றான் வெற்றி.

“ஹே, அது கபில்ஸ் கோல் டா… சாரி சாரி கபில் கோல் டா! உனக்கு தெரியாதா?”

என்று கபிலும் கண்மணியையும் குறித்துக் கூறினாள் சிவானி.

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா, நீங்க வேற…”

கண்மணியை நோக்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கபில்… கண்மணிக்கும் உன்மேல் விருப்பம் இருக்க மாதிரி தான் தோணுது. எதையாச்சும் பண்ணுடா மச்சா…” ஜீவா மெதுவாய் கபில் காதில் கூறினான். 

“மச்சா…”

“எனக்கு தெரியும் டா… நீ நடத்து…” சிரித்து சமாளித்து, கண்மணியிடம் தனிமையில் பேச முயற்சி செய்தான் கபில்.

ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைப்பதைப் போல தெரியவில்லை. கண்மணியும் அவனிடம் பேசவே காத்திருந்தாள். 

கண்களால் தொடர்ந்து கொண்டே இருந்தாள்;

ஆனால் சந்தர்ப்பம் அமையாமல் காத்திருந்தாள்.

இருவரும் சந்திக்கும் நேரத்திற்காக காத்திருந்தனர்…

ஆனால் அந்த சந்திப்பு இதே இனிமையோடு இருக்கும் தானா?

தொடர்ந்து பயணிப்போம்…

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page