“மச்சான் கைய குடு உன் ஹிட்லர் அப்பா ஒரு வழியா உன்னோட ட்ரீம்க்கு பச்சைக்கொடி காட்டிட்டாரு.
இனி ஒரு கலக்கு கலக்குகிரு டா!” என்று தன்னை கட்டி பிடித்து ஆரவாரம் செய்யும் நண்பனை கூட ஏறிடாமல், வேதிகா செல்லும் வழியெல்லாம் தன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த அதிரதனின் அருகில் வந்தாள் அப்சரா.
“ஆல் தி பெஸ்ட் ரதன். இனி உன்ன கொஸ்டின் பண்ணவங்க முன்னாடி ஒரு எக்ஸாம்பிளா நீ வரணும். ஐ அம் சோ ஹாப்பி ஃபார் யூ மேன்!” என்று அவள் மனம் கவர்ந்தவனிடம் உரைத்து நின்றாள்.
ஆனால் ரதனிற்கோ சுற்றும் உலகம் நின்று போய் அவன் காரிகையவளின் பின்னேயே சுற்றுவதை போலவே ஒரு தோற்ற பிம்பம்.
அந்நேரம் அந்த இடத்தை தென்றலாய் தழுவி சென்ற காற்றில், முடிக்கற்றைகளும் துப்பட்டாவும் பறக்க, மஞ்சள் வண்ண உடையில் தன் தோழியை நோக்கி சிறுபிள்ளை போல் ஓடி சென்ற வேதிகாவின் தோற்றம், காலத்திற்கும் அழியா வண்ணம் ரதனின் மனதில் பதிந்து போனது.
‘யார் இவள்?
என்றோ ஒரு நாள் சாலையில் தன் கண்களில் விழுந்தாள்.
காரணமே இன்றி அவளுடனே தன் இதயத்தையும் தூக்கி சென்றாள்.
நேரம், காலம், இடம், பொருள் என்று ஏதும் உரைக்க விடாது, தன் சிந்தையையும் மனதையும் சிறை பிடித்தாள்.
காலங்களாய் தன் தந்தையின் மன மாற்றத்திற்காக மட்டுமே தடைப்பட்டிருந்த தன் கனவை அடைய, முற்றும் முதல் காரணமாகி நிற்கிறாள்!’
ஒரு ஆணின் வாழ்வில் நுழையும் ஒவ்வொரு பெண்களும், அவனில் ஏதோ ஓர் மாயத்தை நிகழ்த்துவது உறுதி.
இதில் வேதிகா, ரதனின் வாழ்வில் நுழைந்த ஓர் தேவதை என்றே அவன் உணர்ந்தான்.
அந்த நொடி அவன் மனதில் இருந்த ஈர்ப்பு, அவள் மேல் காதலாய் பூத்ததை உணர்ந்து கொண்டான் ரதன்.
நெஞ்சம் தன் ஓட்டத்தை அதிகரிக்க, சுற்றிலும் கேட்கும் சத்தங்கள் யாவும் காதை அடைத்து கொண்டு வர, உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் தன் துடிப்பை காண்பித்து, ரதனை மூச்சுமுட்ட வைத்தது.
சிறுவயதில் இருந்து இதுவரையிலும் தனக்கானது எது என்று அறிந்து அதை மட்டுமே செய்தும் வாழ்ந்தும் பழகிய ஆணவனுக்கு, முதல் முறை ஒரு உணர்வு அவனையும் அறியாது உள்நுழைந்து, அவனை அதற்கு அடிமையாக்கியது என்றால் அது வேதிகாவின் மீது அவன் கொண்ட ஆகர்ஷணம் தான்.
தற்போதைய நவீன ஆண்களை போல் பார்ப்பதற்கு ஒரு பெண், பேசுவதற்கு ஒரு பெண், பழகுவதற்கு ஒரு பெண், வாழ்வதற்கு வேறு பெண் என்று பல கப்பல்களில் பயணிக்கும் ரகம் ஒன்றும் நம் நாயகன் அதிரதன் அல்லவே.
நடப்பு உலகில் தன் கனவிற்காகவும் இலட்சியத்திற்காகவும் தங்களை செதுக்கி, கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் வளம் வரும் ஆண்கள் வெகு சிலர்தான்.
அந்த வகையில் தன் கனவும் கை கூட வேண்டும், தன் தந்தையின் மனம் கோணாமலும் நடக்க வேண்டும் என்று வருடங்களை விரயமாக்கியவன், முதன் முதலில் அவன் மனதில் ஒரு பெண்ணை நிறுத்தி பார்த்தது வேதிகாவை மட்டுமே.
பிரபஞ்சம் நமக்கான மனிதர்களையும், உரித்தான விடயங்களையும் அடைய சிறுசிறு அறிகுறிகளை மட்டுமே தூது விடும்.
அதில் கிடைத்த வாய்ப்பை தக்க வைப்பதும், தவற விடுவதும் தான் ஒவ்வொருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது.
அப்படி தனக்கு கிடைத்த சமிங்கையை தவறவிடக்கூடாது என்று தோன்றுவது வெகு சிலருக்கு வெகு சிலதில்தான்.
ரதனுக்கு வேதிகாவை போல்.
‘இதைவிட அவளுக்கும் தனக்கும் இருக்கும் ஈர்ப்பு விசையை உணர்த்தி விட முடியாது’ என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டான் அதிரதன்.
ஆம், ரதனின் மனதில் வேதிகாவின் மேல் காதல் என்னும் ரோஜா மலர் மலர்ந்து விட்டது.
தன்னை அழுத்தும் எதையும் என்றும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளாத அதிரதனோ, அடுத்த நொடி அவள் மேல் தனக்கு இருக்கும் அபிப்பிராயத்தை அவளிடமே சொல்லிவிட நினைத்து பறந்துவிட்டான்.
தங்கள் இருவருக்கும் பதில் அளிக்காது வேகவேகமாக எங்கோ செல்லும் அதிரதனை கண்ட ரஞ்சன், “இத்தன நேரம் மந்திருச்சு விட்ட கோழி மாதிரி நின்னுட்டு இருந்தான். இப்ப எங்க இவ்வளவு வேகமா போறான்?” என்று கேட்டபடி ரஞ்சனும் ரதனை பின் தொடர்ந்தான்.
முதலில் நடையிட்ட ரதனின் கால்கள், பின்னர் வேகம் எடுத்து ஓட்டம் எடுக்க, அவன் பின்னாலேயே ரஞ்சனும் அப்சராவும் பின் தொடர்ந்தனர்.
மறுபுறம் இத்தனை ஆட்களுக்கு முன்னால் மேடை ஏறியதில், சற்று பதட்டமான வேதிகாவோ, வேகமாக தன் தோழி இருந்த திசை பக்கம் சென்றாள்.
அங்கு இசையோ மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் தோழியை வளைத்து வளைத்து மென்பேசியில் கிளிக்கிக் கொண்டிருந்தவள், வேதிகா அவள் அருகில் வர வரவே, ஓடி சென்று அணைத்துக் கொண்டாள்.
“சூப்பர் மச்சி. நினைச்சத விட அவுட் கம் வேற லெவல்ல வந்திருச்சில்ல? இங்க எத்தனை பேர் நீ ஸ்டேஜ்ல நிக்கும் போது, ‘இந்த பொண்ணு தான் டெகரேஷன் பண்ணதா’ அப்படினு ஆச்சரியமா பாத்தாங்க தெரியுமா?
ஒவ்வொரு தடவையும் உன்னோட நிதானம் மட்டும் தான் நம்ம எடுக்கிற வேலைய சரியான நேரத்துக்கு செஞ்சு முடிக்க வைக்குது.
இப்ப அதோட பிரதிபலன்தான் இந்த வாய்ப்பு. இனி பாரு, எவனாவது ‘பூவ வச்சு என்ன கோலமா போட போறீங்கனு’ கேட்கட்டும், அப்புறம் வச்சுக்கிறேன் கச்சேரிய” என்று வாய் ஓயாமல் வளவளத்து படியே சென்ற தோழியை வேதிக்காகவும் ஆர்வமாக தான் கண்டிருந்தாள்.
“அருள்ராஜ் சார் திடீர்னு மேல கூப்பிடவும், எனக்கே கை காலெல்லாம் நடுங்கிருச்சுடி. அவர் நம்மள தனியா கூப்பிட்டு கூட பாராட்டி விட்டிருக்கலாம்.
ஆனா இத்தனை பேருக்கு முன்னாடி நம்ம திறமைய வெளியே கொண்டு வந்துட்டாரு பாத்தியா? சச் எ கிரேட் மேன்” என்று கூறினாள்.
அந்நேரம் பார்த்து இசையின் தொலைபேசி சிணுங்கவும், “மச்சி வேலை செஞ்சவங்களுக்கெல்லாம் செட்டில் பண்ணி அனுப்பனும்.
இந்த கேப்ல யாராவது நம்ம காண்டாக்ட்ஸ் தேடி வந்தாலும் வரலாம். அதனால நீ இங்கிருந்து பாத்துக்கோ. நான் போயிட்டு வந்துடறேன்” என்று கூற, வேதிகாவும் தலையசைத்து அவளை அனுப்பி வைத்தாள்.
திறமையை சோதித்துப் பார்க்கும் பரிட்சை முடிந்த மன நிலையில் இருந்த வேதிகா, அப்போதுதான் அந்த வீட்டை சுற்றியும் நோட்டமிட்டாள்.
அவள் இருந்த பக்கம் விருந்தினர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சற்று தள்ளி நீச்சல் குளம் ஓரம் நடந்து வந்து, அந்த சூழலை ஆழ்ந்து அனுபவித்தபடி நின்றிருந்தாள்.
முகம் பார்க்கும் கண்ணாடிக்கு நிகராக ஜொலித்த நீரில், அமைதியாக தன் உருவத்தை பார்த்திருந்தவள், தன்னோடு தோன்றிய மற்றொரு உருவத்தில் திடுக்கிட்டு சட்டென்று திரும்பினாள்.
அவளுக்கு வெகு நெருக்கமாக, உடலும் உடலும் விட்டால் மோதிக் கொள்ளும் இடைவெளியில் நின்றிருந்த ரதனை கண்டதும், வேதிகாவின் இதயம் ஒரு நொடி நின்றே விட்டது.
பின்னே, திடீரென்று ஒரு ஆண்மகன், அதுவும் இவ்வளவு நெருக்கத்தில், எதிர்பாரா நேரம் வந்து நின்றால் பெண்ணவள் பதறத்தானே வேண்டும்.
அவள் படபடத்த இமைகளுடன் அவனை அதிர்ச்சியாக காண, அவன் நிதானமான விழிகளில் அவளையே உருத்து விழித்தான்.
அவன் நெருக்கத்தை காட்டிலும், அவனின் ஆளை விழுங்கும் பார்வை தான் வேதிகாவை அச்சுருத்தியது.
அவனை விட்டு விலக நினைத்து பின்னால் ஒரு அடி எடுத்து வைக்க, படக்கென்று அவள் இடை வளைத்து பெண்ணவளை தன்னோடு நிறுத்தி கொண்டான் அதிரதன்.
அவன் நெருக்கத்திற்கே பதறியவள், அவன் ஸ்பரிசத்தில் மேலும் இமை விரிய அவனை கண்டு வைக்க, அவனோ மெல்லிய சிரிப்புடன் அவளையே கண்டிருந்தான்.
முதுவேனிற்காலத்தின் மெல்லிய தென்றல் காற்று இருவரையும் தழுவி செல்ல, அந்த வெப்பமான சூழலும் இருவருக்கும் குளுமையை தான் தந்தது.
ரதனின் பார்வை அழுத்தமாக, ஆழமாக, ரசனையாக, ஆராய்ச்சியாக என்று பல்வேறு பரிமாணங்களில் வேதிகாவையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.
அவளுக்கோ அதிர்ச்சி எல்லாம் தாண்டி ‘யார் இவன்? இப்படி தன்னை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறானே!” என்ற திகைப்புதான் மேலோங்கி இருந்தது.
“ஹலோ முதல்ல கைய எடுங்க” என்று இருவரின் ஏகாந்த நிலையையும் கலைத்து, முதலில் வாய் திறந்த வேதிகாவிற்கு, அதிரதனின் ஸ்பரிசம் நிச்சயம் ஏதோ ஒரு நடுக்கத்தை தந்திருக்க வேண்டும்.
அவளின் குரல் கூட, முதல் முறை கேட்கும் மயக்கத்தில், சற்று சன்னமாகத்தான் அவன் செவிகளில் விழுந்தது.
அதற்குள் பொறுமை இழந்த வேதிகா, அவள் இரண்டு கையையும் வைத்து அவனை தள்ளிவிட்டு அவனிடம் இருந்து பிரிந்து கொண்டாள்.
அந்த அதிர்வில் தான் காதல் தேவனின் பிடியிலிருந்து வெளிவந்த அதிரதன், சுற்றியும் விழிகளை சூழற்றி பார்த்துவிட்டு, மீண்டும் அவளில் பதித்தான்.
ஆனால் வேதிக்காகவோ அவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை தெளிவாக மறைத்துக்கொண்டு முகத்தை கோபமாக வைத்து நின்றிருந்தாள்.
என்ன ஒரு ஆச்சரியம்?
காதலில் மட்டும் தானே அழுகை, கோபம், சிரிப்பு என்ற அனைத்து உணர்ச்சிகளும் ரசிக்கப்படுகிறது.
தன் கேள்விக்கு பதில் வராது போனதும் அவன் முன் சொடக்கிட்ட வேதிகா, “ஹலோ உங்கள தான். யார் நீங்க? எதுக்கு என் பின்னால வந்து நின்னு பாத்துட்டு இருந்திங்க?” என்று அவள் சற்று சீற்றமாக கேட்டாள்.
அதற்கு ரதன், “அது…நீங்க பூல் கிட்ட நின்னுட்டு இருந்திங்க. ஸ்லிப் ஆகி விழுந்துட்டா என்ன பண்றதுன்னு தான் உங்கள புடிச்சுக்கிட்டேன்” என்று மிக மொக்கையாக சமாளித்து வைத்தான்.
அவன் கூறியதில் புருவம் இடுங்க வேதிகா அவள் நின்றிருந்த இடத்தையும் குளத்தின் விளிம்பையும் மாறி மாறி பார்த்தாள்.
உண்மையில் அவள் குளத்திற்கு சற்று தள்ளி தான் நின்றிருந்தாள். அவள் உருவம் மட்டும் தான் மின்விளக்குகளின் உதவியுடன் நீரில் அருகில் இருப்பது போல் தெரிந்தது.
கால் இடறி தண்ணீரில் விழவெல்லாம் வாய்ப்பில்லை என்றே அவள் நினைத்தாள்.
அதை பார்த்ததும் அறிந்தும் கொண்ட வேதிகாவின் பார்வையில் ஏனோ, ரதன் தவறாகவே விழுந்துவிட்டான்.
பெண்மைக்கே உரிய பாதுகாப்பு உணர்வு, ‘அவன் எதற்காக தன் பின் அவ்வளவு நெருக்கத்தில் வந்து நிற்க வேண்டும்?’ என்று கேள்வி கேட்டது.
அவனை ஏகத்திற்கும் முறைத்து வைத்தவைள், “பார்க்க இவ்ளோ டீசன்ட்டா இருக்க. ஆனா பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாதா?
தப்பான எண்ணத்துல என் பின்னாடி வந்து நின்னுட்டு, இப்போ கேவலமா காரணம் சொல்லி தப்பிக்க பாக்குறியா?” என்று அவள் அவனை சுத்தமான பொறுக்கியாகவே முத்திரை குத்தி தாம் தூம் என குதிக்க தொடங்கிவிட்டாள்.
ரதன் முதலில் வேதிகா பேசியதில் அதிர்ந்தாலும், “ஹலோ நிறுத்துங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு ஒன்னும் நான் கேவலமானது கிடையாது.
எனக்கும் கூட பிறந்த தங்கச்சி இருக்கு. ஒரு பொண்ணு கிட்ட எந்த அளவு இடைவெளில பழகணும்னு எனக்கும் தெரியும்” என்று சற்று குரலை உயர்த்தி கூறினான்.
பின்னே, அங்கு பேச பொருளாகியது அவன் நடத்தை அன்றோ.
“அப்புறம் எதுக்கு அவ்ளோ நெருக்கத்துல வந்து நின்ன? இவ்வளவு பேர் இருக்க இடத்திலேயே தைரியமா உன் வேலைய காட்டுறேன்னா, வெளி இடத்துல சும்மாவா இருப்ப?
பொறுக்கி. உன்னை எல்லாம்..” என்று சாமி ஆடிக் கொண்டிருந்த பெண்ணவளை நேருக்கு நேர் கண்டு “ஐ லவ் யூ!” என்ற மூன்றே வார்த்தைகளில் அவளை அடக்கி விட்டான் அதிரதன்.
நிற்காமல் ஓடும் ரயில் வண்டியை போல் வெளிவந்த அவள் வார்த்தைகளில் அப்படியே நின்று விட்டது.
-தொடரும்.
