https://youtube.com/watch?v=8LVvc3bgGdM&si=KdsYy_hbJIUEKalL
(இந்த நாவலை ஆடியோ வடிவில் Rhea Moorthy Novels சேனலில் கேட்டு ரசிக்கலாம்)
குமரனின் வெறுப்பு, கோடாரி போல மயிலாவின் இதயத்தை ஆழமாகப் பிளந்திருந்தது. தான் செய்த தவறு அவளை தொடர்ந்து அரித்துக் கொண்டிருந்தாலும், அவனது நிராகரிப்பினை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளது கல்யாண கனவுகள் எல்லாம் நொறுங்கித் துகள்களாய் சிதறி கிடப்பது போல உணர்ந்தாள். இனி ஒருபோதும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியாது என்ற எண்ணம் அவளை சூழ்ந்தது.
செல்வி, “இங்க பாரு மயிலா, உன் மச்சான பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது. அவன் நீ எப்படி நடந்துக்கணும்னு எதிர்பார்க்கிறானோ, அதுவும் எனக்கு தெரியாது. நான் பக்கத்து வீட்டுல இருக்குறதுனால அரசல் புரசலா எனக்கு உன் பிரச்சனை ஓரளவுக்கு தெரியும். என் வாழ்க்கையோட அனுபவத்தை சொல்றேன். அது உனக்கு தேவைப்படுமான்னு பாரு” என்று சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய வாழ்க்கை கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
“எனக்குக்கூட குமரன போல விருப்பம் இல்லாமத்தான்டி கல்யாணம் முடிஞ்சுது. என்னோட தாய் மாமாவுக்கு வலுக்கட்டாயமா என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. நானும் பொம்பளயாச்சேனு பொறுத்துட்டு வாழ ஆரம்பிச்சேன். திடீர்னு மூணு மாசம் தள்ளி, சொத்து விவகாரத்துல ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல ஒரு பெரிய சண்டை வந்துருச்சு.
என் அத்தக்காரி, ‘உன் பொறந்த வீட்டுலருந்து சொத்தையெல்லாம் எழுதி வாங்கிக்கிட்டு வா. இல்லேன்னா உனக்கு இந்த வீட்டுல எடமே கிடையாது’ன்னு சொல்லி மிரட்டிப்புடுச்சு.
எனக்கு அப்போ கல்யாணமான புதுசுங்கிறதுனால என்னால பெத்தவங்களையும் விட்டுக்கொடுக்க முடியல, புகுந்த வீட்டுக்காரங்களையும் விட்டுக்கொடுக்க முடியல. அந்த மாதிரி இக்கட்டான நேரத்துல நான் என்ன செஞ்சேன் தெரியுமா? என்னோட பெத்தவங்ககிட்ட இருந்த சொத்த அப்படியே வாங்கிட்டுப் போயி மாமியார்கிட்ட குடுத்துட்டேன்” என்று சொல்ல, மயிலா சற்று கோபத்தோடு அவரை பார்த்தாள்.
“என்னடி ஒரு மாதிரியா மொறைக்கிற? என்னடா இவ, பெத்தவங்க சொத்தையெல்லாம் புடுங்கி புருஷனுக்குக் குடுத்தத பெருமையா பேசுறாளேன்னு நெனைக்கிறியா? எந்தப் பொம்பளையும் பெத்தவங்க சொத்த நாசமாக்க நெனைக்க மாட்டா புள்ள… அந்த சொத்த வாங்கிட்டு வந்து இவங்ககிட்ட குடுத்துட்டு, அப்புறம் அந்த நிலத்துலயே நானும் இறங்கிப் பாடுபட ஆரம்பிச்சேன். அதுல என்ன வருமானம் வந்தாலும் அப்படியே என் அப்பனுக்கு அனுப்பி வச்சேன்.
சொத்தெல்லாம் அவங்க பேர்ல இருக்கிறதால நான் குடுக்கும்போது அவங்க பெருசா எடுத்துக்கல. நானும் கொஞ்சங் கொஞ்சமா என் புருஷனுக்குப் புடிச்ச மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சேன். அவனோட துணியத் துவைச்சுப் போடுறது, சமைச்சுப் போடுறது, அவன் கோவப்படாம நடந்துக்கிறதுன்னு அவனுக்கு ஏத்த மாதிரி மாறிக்கிட்டேன். அதுக்கப்புறம் மெல்ல மெல்ல இவங்க எல்லாரும் மாற ஆரம்பிச்சாங்க.
இப்ப ரெண்டு குடும்பத்துக்குள்ள இருந்த சண்டையெல்லாம் போயே போச்சு. சொத்து இங்க இருந்தாலும், அதுல வர்ற காசு என்னோட பெத்தவங்க வீட்டுக்குத்தான் போவுது. அன்னக்கி மட்டும் நான் அந்த சொத்த எங்க அப்பன் அம்மாகிட்ட இருந்து வாங்கிக் குடுக்காம இருந்திருந்தா, என் கதி என்னா ஆகியிருக்கும் தெரியுமா? இன்னி வரைக்கும் என் பொழப்பு ஒரு ஆட்டம் ஆடிட்டேதான் இருந்திருக்கும். என்ன பெத்தவங்களுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமக்கூட போயிருக்கலாம்…
அன்னக்கி, அந்த நேரத்துல நான் கொஞ்சம் புத்தியா நடந்துக்கிட்டதுனாலதான் என் வாழ்க்கை இப்ப நிம்மதியா ஓடுது. இவங்களையெல்லாம் நம்ம மாத்த முடியாது புள்ள… நாமதான் கொஞ்சம் சாதுர்யமா எதாச்சும் பண்ணனும். இப்ப என் பெத்தவங்க வயசான காலத்துல கவல இல்லாம சாப்பிட்டுத் தூங்குறாங்க. எனக்கு அது போதும்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மயிலாவுக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பது மனதுக்குள் ஓட ஆரம்பித்து விட்டது.
கண்களைத் துடைத்த மயிலா, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாரானவள் போல நிமிர்ந்து நின்றாள். அவளது மனதில் ஒருவித வைராக்கியம் குடி கொண்டிருந்தது. அன்று இரவே அவள் பாட்டியிடம் கறிக்குழம்பு எப்படி சமைக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டறிந்தாள். பாட்டியின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாக உள்வாங்கிக் கொண்டு, தன் கணவனுக்காக அன்போடும் ஆசையோடும் சமைக்கத் தொடங்கினாள். அடுப்பங்கரை புகையால் நிறைந்து இருந்தாலும், அவளது முகத்தில் ஒரு புதிய தெளிவு வந்திருந்தது.
அந்த மலைக்காற்றின் குளிர்ச்சியையும் பொருட்படுத்தாமல், அவள் சமையலில் முழு கவனத்தையும் செலுத்தினாள். ஒரு கட்டத்தில், அந்தப் புகையின் அடர்த்தியைத் தாங்க முடியாமல் செவத்தம்மா திண்ணைக்கு வந்து அமர்ந்தார்.
மூச்சிரைக்க அவர் இருமியபடி, “ஏண்டி புள்ள, இம்புட்டுப் புகையில உனக்கு மூச்சு முட்டலையா?” என்று கவலையுடன் கேட்டார். பதிலுக்கு மயிலா புன்னகைத்தாள்.
பாட்டி இருமிக் கொண்டே, “இதுக்கு மேல என்னால முடியாது தாயே. நான் செல்வி வீட்டு பக்கமா போறேன்…” என்று சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு திண்ணைக்கு சென்று படுத்துக் கொண்டார்.
வழக்கம் போல் தோட்டத்து வேலையை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பிய குமரன், அடுப்பங்கரையில் வழக்கத்திற்கு மாறாக புகை மண்டலமாக இருப்பதைப் பார்த்தான். உள்ளுக்குள் ஒரு கணம் பாட்டி மீண்டும் ஏதாவது தந்திரம் செய்கிறாரோ என்று எண்ணியவன், சந்தேகத்துடன் அடுப்பங்கரைக்கு வந்தான். அங்கே, புகைக்கு முன்னால் கண்கள் சிவந்து, இருமியபடி மயிலா சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அவளை அந்த நிலையில் பார்த்தபோது குமரனின் மனம் ஒரு கணம் தடுமாறிவிட்டது. புகையால் சிவந்திருந்த அவளது கண்களையும், இருமலால் அவள் மூச்சுவிட சிரமப்படுவதையும் பார்த்து அவனுக்குப் பாவமாக இருந்தது. அவள் கைகளில் அங்கங்கே கரி படிந்திருந்தது. இதில் விரலை வேறு சுட்டுக்கொண்டாள். அதன் பின்பும் விட்டுக்கொடுக்க மனமின்றி, அவள் அமர்ந்திருந்த அந்த தோற்றம் குமரனின் மனதில் ஒரு மெல்லிய அனுதாபத்தை உண்டாக்கி விட்டது.
எதைப்பற்றியும் யோசிக்காமல், சட்டென்று அவளருகில் வந்து அமர்ந்தான். அவள் கையில் இருந்த இரும்பு ஊதுகுழலை மெதுவாக வாங்கி, தானே ஊதி அடுப்பை பற்ற வைத்தான். பிறகு, அவளுக்கு சமையலில் உதவி செய்யத் தொடங்கினான். அந்த நொடியே, இருவருக்கும் இடையே நிலவிய கசப்பான மௌனம் மெல்லக் கரையத் தொடங்கியது போல் இருந்தது மயிலாவுக்கு.
“பாட்டி எங்க போச்சு?” என்று கேட்க,
“பாவம் அந்த கிழவி… வயசான காலத்துல எதுக்கு இந்த அடுப்பு முன்னால கஷ்டப்படணும்னுதான், இனிமே நானே சமைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று தாழ்ந்தகுரலில் அவள் சொல்ல, குமரன் அவளை அழுத்தமாய் ஒரு பார்த்து விட்டு சமையலை தொடர்ந்தான்.
குமரனின் கைகள் அவளது கைகளோடு இணைந்து சமையல் பாத்திரங்களை தொட்ட நொடியில், அந்த அடுப்பங்கரை ஒரு புதிய வேகத்தைப் பெற்றது. அவனது அனுபவம் மிக்க விரல்கள் காய்கறிகளை நறுக்குவதிலும், மசாலாக்களை சேர்ப்பதிலும் மின்னல் வேகத்தில் செயல்பட்டன. பத்து நிமிடங்களுக்குள் அந்த கறிக்குழம்பு மணக்கத் தொடங்கியது. மயிலா தனது கன்னத்தில் கையை ஊன்றியபடி அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் நம்ப முடியவில்லை. இவ்வளவு விரைவாகவும், நேர்த்தியாகவும் ஒருவரால் எப்படி சமைக்க முடியும் என்று வியந்தாள்.
அடுத்த அடுப்பில் அரிசியை கொட்டி, சரியான பதத்தில் சாதத்தையும் வடித்து எடுத்தான் குமரன். அவள் எத்தனையோ முறை சமைத்திருந்தாலும், அவளால் கூட இந்த அளவுக்கு பக்குவமாக சமைக்க முடிந்ததில்லை. அவன் சமைக்கும் விதத்தைப் பார்க்கும்போது, அவன் மேல் ஒரு புதுவித மரியாதையே தோன்றியது. இந்த முரட்டுத்தனமான மனிதனுக்குள் இவ்வளவு திறமைகள் ஒளிந்திருக்கிறதா என்று அவள் வியந்தாள். அந்த சமையலறையின் புகை கூட இப்போது அவளுக்கு இனிமையாக இருந்தது.
“ஏன் மச்சான்… நீ எப்ப சமைக்க கத்துக்கிட்ட?”
“நான் பத்து வயசுலருந்தே சமைச்சிட்டு இருக்கேன்” என்று அவன் சொல்ல, அதைக் கேட்ட மயிலாவுக்கு கிழவியின் மீதும் தன் மாமியார் மீதும் கோபம் வந்தது.
“அந்த கிழவிக்கு திறமையெல்லாம் வெறும் வாய்ல மட்டும் தான். பேரன் பேரன்னு உயிர விடுற மாதிரி நடிக்குது. ஆனா பேரனுக்காக எதுவுமே செய்யல. உன் அம்மாவையும் சேத்து தான் சொல்றேன். ஏதோ பெருசா டவுனுக்கு போயி புள்ளைய நல்லா பாத்துக்குதுன்னு நெனச்சா, பத்து வயசுலருந்து ஒரு சின்ன புள்ளைய சமைக்க வச்சு வேடிக்கை பார்த்துருக்காங்க…
ஒத்த புள்ளைய பெத்துட்டு அதை நல்லா பாத்துக்க தெரியல. இவங்கல்லாம் என்ன அம்மா? என்ன பாட்டி?… இருக்கட்டும் இருக்கட்டும். அதப்பத்தி கெழவிட்ட அப்புறமா பேசிக்கிறேன். நீ ஒன்னும் கவலைப் படாத மச்சான். இனிமே உனக்கு சாப்பாடு ஆக்கி கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு. தப்பு தப்பா செஞ்சாலும், நான் செஞ்சு தரேன்” என்று சொல்லியபடி திரும்ப, குமரன் அவளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனுடைய பார்வையில் இருக்கும் மாற்றத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“என்னாச்சு மச்சான்? ஏன் என்னை அப்படி பாக்குற? நான் ஏதாவது தப்பா பேசிப்புட்டேனா?” என்று அப்பாவியாக மயிலா கேட்க, அவன் எதுவும் பதில் பேசாமல் சாப்பாட்டை கூடத்தில் எடுத்து வைத்தான்.
தட்டுக்களையும் அவனே எடுத்து வைக்க, மயிலா ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு தட்டுக்களிலும் சாப்பாடு போட்டு கறிக்குழம்பை ஊற்றி விட்டு, “என்ன அங்கேயே நிக்கிற? வா வந்து சாப்பிடு…” என்று அவன் கூப்பிட மயிலா அதிர்ந்து போனாள்.
“நானா?” என்று அவள் சந்தேகத்தோடு கேட்டாள்.
“இங்க வேற யாராச்சும் இருக்காங்களா என்ன? நீதான், வந்து சாப்பிடு…” என்று அவன் உரிமையாக அழைத்தான்.
மயிலாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. அந்த கிராமத்தில் எந்த பெண்ணுமே கணவனுக்கு சமமாக உட்கார்ந்து சாப்பிட மாட்டார்கள். கணவன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. அதை பார்த்து வளர்ந்த மயிலாவால் உடனே அவனுக்கு பக்கத்தில் வந்து சாப்பிட முடியவில்லை. அவள் தயங்கிக் கொண்டிருந்தாள்.
“இப்ப நீ வரியா, இல்ல நான் எழுந்து போகவா?” என்று கேட்க, மறு நொடியே விருட்டென்று ஓடி வந்து அமர்ந்து கொண்டாள்.
“மச்சான்.. யாராவது பார்த்தா கேலி பேசுவாங்க. நீ வேணா மொத சாப்புடு. நான் பொறவு சாப்டுக்குறேனே!!”
“சண்டை போட்டா கேலி பேச மாட்டாங்களா?” என்ற கேள்வியில் அவள் திணறித்தான் போனாள்.
“நீயும் நானும் புருஷன் பொண்டாட்டின்னு யார் சொன்னது. எலியும் பூனையுமாத்தான இருக்கோம். ஏதோ சமைக்க கஷ்டப்படுறியேனு ஒத்தாச பண்ணேன். அவ்ளோதான், ம்… சாப்பிடு” என்று கண்டிப்பாக கூறினான்.
இப்போது அவளுக்கு சந்தோஷப்பட வேண்டுமா வருத்தப்பட்ட வேண்டுமா என்று கூட புரியவில்லை. அரை மனதோடு சாப்பிட ஆரம்பித்தாள்.அவனும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் பங்கினை சாப்பிட்டு முடித்தான். அவள் அவனை நினைத்து ஆச்சரியப்பட்டாள். பெண்களை கால் காசுக்கு கூட மதிக்காத இடத்தில், குமரன் தன்னை சமமாக நடத்துவது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
என்ன தான் கோபத்தில் சுருக்கு சுருக்கென்று பேசினாலும், அவனுக்குள் ஒரு நல்லவன் ஒளிந்திருக்கிறான் என்பதை அவளால் உணர முடிந்தது. செல்வி சொல்லித் தந்த வித்தை பலித்துவிட்டதால், பாட்டியை விட்டுவிட்டு அவளை பிடித்துக் கொண்டாள் மயிலா.
அவள் யோசனைப்படி, தினமும் குமரனுக்காக அவனுக்கு பிடித்த உணவுகளை ஆசையோடு சமைத்தாள். அவன் எதிர்பார்க்கும் படி வீட்டை சுத்தம் செய்வது, அவனைப் போலவே துணிகளை துவைத்து போடுவது, நாகரீகமாய் தன்னை மாற்றிக் கொள்வது, என இப்படியே அவளின் அடுத்த ஐந்து நாட்கள் நகர்ந்தது. அந்த வாரக் கடைசியில் மயிலா தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைத்து இருந்தாள். ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே சிகாமணியும் பேச்சியும் விருந்துக்கு வந்து விட்டார்கள்.
கமகமவென வாசனையோடு அவள் சமைத்து வைத்திருப்பதை பார்த்த சிகாமணி தன் மகளை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார். ஒரு நாளும் அடுப்பங்கரைக்கு செல்லாதவள் அவள்! இன்னும் சொல்வதென்றால் கல்யாணத்துக்கு முன்பு வரை, பால் கூட காய்ச்ச தெரியாத பிள்ளை மயிலா. அவளா இன்று நான்கு வகையான கறிகளை சமைத்து வைத்து இருக்கிறாள்?! என்று ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் பார்த்தார்.
“பார்த்துட்டே இருந்தா எப்படி? சாப்பிடுப்பா…” என்று ஆணையிட்டாள் அவள்.
உணவு பக்குவமாய் சமைக்கப்பட்டிருக்க, வயிறும் மனதும் நிறையும் அளவுக்கு சாப்பிட்டார்கள் இருவரும். நெஞ்சு வரை உணவிருக்க, ஆசுவாசமாய் திண்ணையில் அமர்ந்தனர். அப்போது மயிலா மெதுவாக பேச்சை தொடங்கினாள்.
“அப்பா, மச்சான் உங்ககிட்ட இருக்கிற வண்டி வேணும்னு ஆசைப்படுறாரு. உங்களுக்கும் இப்பல்லாம் வண்டி ஓட்டுறதால முதுகு ரொம்ப வலிக்குதுல. பேசாம அந்த வண்டிய அவருக்கு விட்டுக் கொடுத்திருங்களேன்” என்று கேட்க, அவருக்கு மறுத்துப் பேச சங்கடமாக இருந்தது.
“நீங்க எங்க நிலத்தையும் சேர்த்து பார்த்துக்கோங்க. வர்ற லாபத்துல பங்கு தர்றோம். என்ன சொல்றீங்க?”
ஏற்கனவே மகளை பிரிந்த வலியில் இருந்தவர், தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு சம்மதித்துவிட்டார். தன்னுடைய மகளும் மருமகனும் சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும் என்று நினைத்தார் அவர்.
“எப்ப வேணுமோ மாப்பிள்ளைய வந்து எடுத்துக்க சொல்லும்மா” என்று சொல்ல, அதுவரை குத்துக்கல் போல நின்று கொண்டிருந்த குமரன் அவர் அருகே வந்தான்.
அவர்களுடைய வருத்தத்தை பற்றி துளி கூட கவலைப் படாமல், “நல்லது மாமா, நான் இன்னிக்கே வண்டிய எடுத்துக்கிறேன். ஒரு பத்து நாளைக்கு என் கூட நீங்களும் வாங்க. ஏன்னா வண்டிய எங்க கொண்டு போய் விடனும், எங்கிருந்து எடுக்கணும்னு எனக்கு எதுவும் தெரியாது. நீங்க தான் என் கூட இருந்து எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணும். அதுக்கப்புறம் லோட நானே எடுக்கிறேன்!” என்று சொல்ல, பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டும் ஆட்டினார் சிகாமணி.
