அத்தியாயம்:42 (இறுதி அத்தியாயம்)
சக்ரபாணி தன் முடிவை சொல்லி விட்டு போனதும்…மயூரி கல்யாணியை கட்டி கொண்டு அழுதாள்.
கல்யாணி “ அழாதே பாப்பா நான் தாத்தா கிட்ட பேசுகிறேன்…அந்த பையன் ரொம்ப நல்ல பையன் உன்னை நல்லா பார்த்து கொள்வான்.
எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…ஆனா உன் தாத்தா பிடிவாதம் பற்றி தான் உனக்கு தெரியுமே…அவரையும் தப்பு சொல்ல முடியாது உன் அம்மாவை இழந்த வலி.
அது தான் இப்படி பேசி விட்டு போகிறார்…நீ கொஞ்சம் அமைதியாக இரு பாட்டி பார்த்து கொள்கிறேன்…” என்றார்.
கல்யாணி மட்டுமல்ல விஷயம் கேள்விப்பட்ட கிருபா, சாரதா எவ்வளவு பேசியும்…சக்ரபாணி தன் பிடிவாதத்தில் இருந்து மாறவில்லை…மயூரி புவனாவுக்கு கால் பண்ணி சொல்ல…
அவள் குரு, மீனாவுக்கு நடந்ததை சொல்ல…குரு பவதீப்பை அழைத்து விஷயத்தை சொன்னார்…அவர் சொன்னதை கேட்டு அமைதியாக இருந்தவன் பிறகு.
“ சார் உங்க பேத்தி எதை பார்த்து என்னை காதலித்தாங்களோ தெரியாது…ஆனால் எனக்கு அவங்க மேலே என்று இல்லை யார் மேலயும் காதல் வராது.
காரணம் என்னை பெத்தவள் காதலித்து கல்யாணம் பண்ணி…ஒரு குழந்தை பிறந்த பிறகு தான் தன் புருஷன்… ஏழை வாத்தி என அவளுக்கு தெரிந்தது.
ஒரு வசதியான ஆளு வர அவள் கண்ணுக்கு புருஷன், பையன் தென்படவில்லை… பணம், பகட்டு தான் தெரிந்தது சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போனாள்..
அவளால் என் அப்பா உறவு, ஊர் முன்னாடி.. தலை குனிந்து நின்றார்.
இருந்தும் எனக்காக வாழ்ந்து இறந்தவர் அவர்…அவளும் ஒரு தாய், பெண்ணு தானே அதனால் தான்…
இந்த காதல், கல்யாணம் மேலே எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை.
உங்க பேத்தி என்னை காதலிப்பது இப்போ தான் தெரிந்தது…அவங்க தாத்தா சொன்னது போல கண்ணில் படாதது கருத்தில் நிலைக்காது…அவங்க தாத்தா முடிவு தான் சரி.
மேம் நீங்க அவங்க கிட்ட சொல்லி விடுங்க…எனக்கு இந்த காதல், பெண்ணுங்க மேலே நம்பிக்கை இல்லை என்று…அவங்க தோகை விரிந்தாடும் வண்ண மயில் நான் சாதாரணமான ஒருவன்.
மயிலை பார்க்கலாம், ரசிக்கலாம் அதை சொந்தம் கொண்டாட முடியாது…அதன் உயரம் அப்படி அவங்களுக்கு நாட்டியத்தில்… பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.
அதை காதல் என்ற பெயரில் அழித்து விட வேண்டாம் என சொல்லுங்க…எனக்கு இந்த நாடு, சேவை தான் எல்லாமே…” என்றான்.
புவனா “ நீ சொன்னது எல்லாம் பொய் பவா…எதற்காக மயூரியை விலக்க நினைக்கிற என தெரியவில்லை…
அவளை பார்த்ததும் உன் கண்ணில் …ஒரு சலனம் வருவதை நான் பார்த்து இருக்கிறேன்.
அவள் ஆடும் வண்ண மயில் என்றால் நீ மழை…உன்னை எதிர்பார்த்து தான் அவள் தோகை விரித்தாடுவாள்…உனக்கு பணக்கார்களை பிடிக்காது என தெரியும்.
மயூரி அதில் விதிவிலக்கு பவா அவள் அன்பு பொய் இல்லை…உன் அம்மா போல எல்லா பெண்ணுங்களையும் நீ நினைத்தால் எப்படி..? கொஞ்சம் யோசி பவா…” என்றாள்.
குரு “ புவனா வேணாம் அவனை வற்புறுத்த வேணாம்…பவன் என் பேத்திக்கு சரியான புருஷன் ஆனால்…. அவனுக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும் இல்லையா…?
அதை தான் நான் இப்போ கொடுக்க போகிறேன்…அது போல மயூரி அவள் சின்ன பெண்ணு காப்பாற்றியவனை ஹூரோவாக நினைக்கிறாள்…அது கல்யாண வாழ்க்கைக்கு போதாது மா.
அது போல சக்ராவுக்கு நடந்ததை எல்லாம்… மறக்க கொஞ்சம் காலம் வேணும்…அந்த காலம் இரண்டு வருடம் ஆம் மயூரி தன் காதலில் நிலையாக நிற்கிறாளா..? என எனக்கு தெரிய வேணும்.
அது போல பவன் தன் எண்ணத்தை மாற்றி கொள்ள காலம் வேணும்..அதற்க்கு இந்த இரண்டு வருடம் தான் சரி அது மட்டுமல்ல உன் அண்ணும்…தன் தண்டனை முடிந்து வந்து விடுவான்.
நீயும் கிருபா விஷயத்தில் யோசிக்க…உனக்கு நான் தரும் காலமும் இது தான்… நான் பலதையும் யோசித்து தான்…இந்த முடிவை எடுத்தேன்.
பவன் ஒன்றை மட்டும் மனசில் வை…உறவு வேறு தொழில் வேறு நீ என் பர்ஷனல் பாடி கார்ட்…அதை யாருக்காகவும் நான் மாற்றி கொள்ள மாட்டேன்.
அது போல நீயும் என்னை விட்டு விலகி போக முடியாது…சரி நீயும் கிளம்பு இப்போ இருந்து யோசிக்க ஆரம்பி…என் பேத்தி பற்றி எனக்கு தெரியும் அவள் மனசு எப்பவுமே மாறாது…” என்றார்.
மயூரிடம் நடந்ததை எல்லாம் புவனா சொன்னதும்…கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் பிறகு.
“ நான் ஆடும் வண்ண மயில் என்றால் அவர் ஜீவன் தரும் மழை அக்கா…மழை இல்லை என்றால் மயில் தோகை விரிந்தாடாது அக்கா…அதன் அழகே தோகை விரித்து ஆடுவது தான்.
அவர் இல்லை என்றால் நான் ஜீவன் இழந்து விடுவேன்…குரு தாத்தா சொன்னது போல எனக்கு.. நானே வைத்து கொள்ளும் பரீட்சையாக தான் இதை நினைக்கிறேன்.
இரண்டு வருடம் என்ன இருநூறு வருடம் போனாலும்…அவரை தவிர என் கழுத்தில் யாருமே தாலி கட்ட முடியாது…சேர்ந்தால் தான் காதலா..?
இல்ல உண்மை காதல் எங்கே இருந்தாலும் வாழும்…இதை அவர் கிட்ட சொல்லி விடுங்க இந்த மயூரி என்னும் வண்ண மயில் பிறந்தது…பவதீப் என்னும் மழைக்காக தான்…” என்றாள்.
புவனா அதை அப்படியே பவதீப்பிடம் சொல்ல…முதல் தடவையாக அவன் இதழ்களில் சின்ன புன்னகை மலர்ந்து.
யாருக்காகவும் காத்திராது மயூரி லண்டன் கிளம்பும் நாள் வந்தது…அவளை வழி அனுப்ப இரு குடும்பமும் வந்தது…சக்ரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்கியவள்.
“ நான் சியாமளா பெண்ணு தாத்தா…அவங்க பிடிவாதம் எனக்கும் இருக்கும்…ஆனால் உங்களை காயபடுத்தி தான் அவரை…கல்யாணம் செய்ய வேணும் என்று நிலையில் உங்களை நான் நிறுத்த மாட்டேன்.
எனக்கு தெரியும் நான் எதை கேட்டாலும் நீங்க மறுத்தது இல்லை…இப்போ கூட அவரை கண்காணிக்க நீங்க எடுத்து கொள்ளும் நேரம் இது…
நிச்சயமாக அவர் நீங்க வைக்கும் பரீட்சையில் ஜெயிப்பார்…உங்க உடம்பை பார்த்து கொள்ளுங்க தாத்தா நிச்சயமாக… உங்க பேத்தியும் இந்த பரீட்சையில் ஜெயிப்பாள்…” என்றவள்.
அனைவரிடமும் விடை பெற்று கல்யாணி, கண்மணி கூட லண்டனுக்கு பயணம் ஆனாள்…பவதீப் வெளியே நின்றவன் தன் ஆடும் வண்ண மயில்…ஆகாயத்தில் பறப்பதை ஒரு வலியோடு பார்த்தான்.
உண்மை காதலுக்கு பிரிவு என்பது எது…உடலுக்கு தான் பிரிவே தவிர இதயங்கள்… பேசி கொண்டே தான் இருக்கும் அது… யுகங்கள் பல கடந்தாலும் மாற போவது இல்லை…
நிச்சயமாக மயூரிகா, பவதீப் காதல் ஜெயிக்கும்…மழையை தேடி வண்ண மயில் தோகை விரித்தாட பறந்து வரும்…
மயில் ஆட்டம் நிறைவு பெற்றது…
