இதயம்!
துடிப்பு – 11
தாம் தேடிடும் இதயம்,தமக்கு வெகு அருகில் இருப்பது தெரியாமல்,சலித்துக் கொண்ட இருவருக்குள்ளுமே,இந்த முயற்சி அத்தனை சாத்தியப்படும் என்று தோன்றாவிடின் தான்,அதிசயம்.
“எனக்கென்னமோ நாம டைம வேஸ்ட் பண்றோம்னு தோணுது..” அவள் காதுகளில் தார்விக்,கூறிட அவளுக்குள்ளும் அவ்வெண்ணம் இருந்த போதிலும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“ப்ச்..ஓவரா யோசிக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா..?” அதட்டியவாறு அடுத்த நபருக்கும் சாக்லேட்டை நீட்ட,அவர்கள் இருவரை புருவம் சுருக்கிப் பார்த்தவாறு,அலைபேசியை காதில் பொருத்திய படி கடந்து சென்றது,அந்த உருவம்.
இருவரும் அவ்வுருவம் எழுந்து சென்றதை கவனிக்க மறந்திருக்க,தள்ளிச் சென்றதுமே,யாரோ ஒருவர் கடந்து சென்றது,தார்விக்கின் விழிகளில் விழுந்தது.
“நாம இங்க மாங்கு மாங்குன்னு சாக்லேட் கொடுத்து கிட்டு இருக்கோம்..திடுதிப்னு நம்ம கண்ல சிக்காம அங்க ஆளுங்க எந்திரிச்சு போறாங்க..”
“ப்ச்..ஒருத்தர் தான..”
“சம்டைம் நாம தேட்றது அந்த ஒருத்தரா இருக்கும்ல..” விளையாட்டாய் உரைத்தவனுக்கு தெரியாது,அது தான் உண்மை என்பது.
“நீயும் உன் கற்பனையும்..” மெல்லிய முறைப்பொன்றை வீசி விட்டு,தன் வேலையைத் தொடரலானாள்,பவனி.
●●●●●●●
உறக்கம் விழிகளில் வழிய,கொட்டாவி விட்டவாறு இருந்த டேவிட்டின் முன்னே,அமர்ந்து இருந்தனர் தோழர்கள் இருவரும்.
உறங்கச் செல்வதாய் கூறியவனை,மடக்கி இழுத்துப் பிடித்து,அமர வைத்தது எல்லாம் வேறு கதை.
“இப்போ சொல்லு இவனுக்கு அந்த பொண்ணு மேல எப்டி விருப்பம் வந்துச்சு..?”
“ஐயோ எனக்கு சரியா தெரிலங்க..ஒரு தடவ ஏதோ ஆராய்ச்சின்னு அங்க இருந்து ஒரு டீம் வந்துச்சு..அப்போ இங்க கேரளான்னு ஒரு எடம் இருக்கு..தெரியாதுன்னு நெனக்கிறேன் உங்களுக்கு..”
“அங்க போனோம்..நா தான் கூட்டிட்டு போனோம்..அங்க ஒரு வீடெல்லாம் ரென்ட் எடுத்து உங்க ஆளுங்க அஞ்சாறு பேர் தங்கி இருந்தாங்க..அதே எடத்துல தான் இந்த பொண்ணோட காலேஜ் ஆளுங்களும் ஏதோ ரிஸர்ச் விஷயமா வந்து இருந்தாங்க..”
“ரெண்டு மூனு தடவ ஆஜ்வின் சார் இந்த பொண்ணு கூட நடந்து வர்ரத நா பாத்து இருக்கேன்..ஆனா அது எதுவும் தப்பா தோணல எனக்கு..அந்தப் பொண்ணும் நார்மலா தான் இருக்கும்..”
“ஆனா,அந்த பொண்ணு ரிஸர்ச் முடிஞ்சு போகும் போது,அது கிட்ட அவரு இங்க யூஸ் பண்ணி கிட்டு இருந்த ஃபோன் நம்பர கொடுத்தாரு..என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு..இந்த நம்பர கான்டெக்ட் பண்ணுன்னு சொன்னாரு..அப்போ நா பக்கத்துல தான் இருந்தேன்..”
“அப்றமா அந்த பொண்ணு போனதுக்கு அப்றம் நார்மலா இருக்குற மாதிரி தான் இருந்தாரு..ஆனா திரும்ப வின்னோரா வரும் போது அந்த சிம் கார்ட் என கைல தந்து இத எப்பவும் ஆக்டிவ்வா வச்சிக்கனும்..அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் உதவின்னு வந்தா உடனே மறுக்காம பண்ணி கொடுக்கனும்னு சொன்னாரு..”
“இல்ல இல்ல மெரட்டினாருங்குறது தான் உண்ம..நானும் சரின்னு தலய தலய ஆட்டுனேன்..அதுக்கப்றம் அவரு எந்த ரிஸர்ச் விஷயமா கூட பூமி வரவே இல்ல..அந்த பொண்ணு கிட்ட இருந்து கால் மெஸேஜ் எதுவும் வர்லயா..நா கூட மறந்து தான் இருந்தேன்..”
“ஆனா வந்ததும் அவரு மொத வேலயா என் கிட்ட வந்து அந்த பொண்ணு கிட்ட இருந்து ஏதாச்சும் மெஸேஜ் கால் வந்துச்சா..? இல்லன்னா ஏதாச்சும் ஹெல்ப் கேட்டுச்சான்னு தயங்கி கிட்டே விசாரிச்சாரு..அப்போ தான் எனக்குமே லைட்டா டவுட் வந்துச்சு..” தயக்கத்துடன் அவன் கூறிட,தோழர்களின் விழிகளில் மெல்லிய அதிர்வலைகள்.
“இது எப்போ நடந்துச்சு..?”
“வந்த நாள் சாப்டு நீங்க ரெண்டு பேரும் நல்லா தூங்கி கிட்டு இருந்தீங்க..அப்போ தான் வந்து என் கிட்ட கேட்டாரு..” என்றவனின் விழிகளில் பயமும் தெரிந்தது.
தான் அனைத்தையும் உளறிக் கொட்டுவது,அரிமா அவனுக்கு தெரிந்தால்,அவனின் எதிர்வினை என்னவாக இருக்குமோ என நினைக்கும் போதே,நெஞ்சுக்குள் கலவரம்.
“எனக்குன்னா இவன் சொல்றத நம்லாமானு வேணாமானு இருக்கு விஷ்..”
“இல்ல மச்சி..இவனோட டவுட் கரெக்டா தான் இருக்கும்..எப்பவுமே பூமின்னா ரிஸர்ச் விஷயமா போறதுக்கு மொத ஆளா வந்து நிக்கறது ஆஜு தான்..ஆனா இந்த மூனு வருஷமா பிரதீஷ் சார் கம்பள் பண்ணியும் முடியாதுன்னே சாதிச்சான்..”
“………………”
“எத்தன தடவ அவர் கேட்ருக்காரு தெரியுமா..? முடியவே முடியாதுன்னு தான் சொல்லுவான்..எனக்குமே தோணி இருக்கு எதுக்கு இப்டி முடியாதுன்னு ஒத்த கால்ல நிக்கறான்னு..”
“எனக்கு புரில டா!”
“அக்ஷதிய அவன் ரிஜெக்ட் பண்ண என்ன காரணம்னு நாம யோசிச்சி கிட்டு இருந்தோம்ல..நமக்கு சரியா எந்தக் காரணமும் சிக்கல..பட் அவனுக்கு இந்த பொண்ணு மேல லவ் இருக்கு..அது தான் அவ தொரத்தி தொரத்தி லவ் பண்ணியும் ரிஜெக்ட் பண்ணி இருக்கான்னு இப்போ தோணுது..அவனுக்கு ஒரு லவ் இருக்குங்குறத விட ஸ்ட்ராங்கா என்ன காரணம் வேணும்..?”
தோழனின் வார்த்தைகளில் இருந்த உண்மை,அமிதேஷை யோசிக்க வைத்தது.
“சரி எதுக்கு அவன் இந்த பொண்ண லவ் பண்ணா அத விட்டுட்டு வரனும்..? அந்த பொண்ண பாத்தா இவன் லவ் பண்றதே தெரியாத மாதிரி தான் இருக்கு..எதுக்கு இவன் அப்டி நடந்துக்கனும்..?”
“ஒன்னு அந்த பொண்ணு பூமி வாசியா இருக்குறதால இருக்கலாம்..” அவன் கூறிடவுமே,அடுத்த காரணம் பொறி தட்டியது,அமிதேஷுக்கு.
டேவிட்டை அனுப்பி வைத்தவர்களுக்கு,அரிமா அவனிடம் பேசுவதே,உசிதம் எனப் பட்டது.அவனிடம் கேட்டுத் தெளிவு பெற நிறைய விடயங்கள்,இருந்தன.
மொட்டை மாடியில் நின்று,அண்ணாந்து வானத்தை வெறித்தவாறு நின்று இருந்தவனோ,பாதச் சத்தங்கள் கேட்டும் திரும்பாது இருக்க,அமிதேஷின் முகத்தில் கடுகடுப்பு.
“திண்ணக்கம் புடிச்ச கல்நெஞ்சக்காரன்!” சத்தமாக திட்டியே விட,அது கேட்ட போதிலும்,அவன் அமைதியாகத் தான் நின்றிருந்தான்,பதில்மொழி எதுவுமின்றி.
“ஆஜு!” என்றான் அமிதேஷ்,சற்றே சூடான குரலில்.
“ம்ம்..” பதில் இயம்பியவன்,மறந்தும் அவர்களின் புறம் திரும்பிடவில்லை.
“ஏன் கால்ல விழுந்தா தான் சார் இந்தப் பக்கம் திரும்புவீங்களா..?” காரமாய் வினவிட,நுதலுரசிய அடர் கேசத்தை பின்னே ஒதுக்கியவாறு,திரும்பி நின்றவனின் வதனத்தில் இருந்து எந்த வித உணர்வுகளும் வெளிப்படவில்லை.
நிதானமாய்,நிச்சலமான முகபாவத்துடன் நின்று இருந்தான்,அடங்காத அரிமா அவன்.
“என்னடா நடக்குது இங்க..?யாரோ ஒரு பொண்ணுக்காக நீ இவ்ளோ தூரம் எறங்கி வந்து இருக்க..? மண்டபத்துல நடந்த விஷயம் அதோட ஹெவினஸ் என்னன்னு எங்களுக்கு தெரியாது..ஆனா உனக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்..தெரிஞ்சும் நீ இப்டி பண்ணி இருக்கன்னா..? உன்னோட எண்ணம் தான் என்ன..?”
“எனக்கு அப்போ அரசிய அவங்க கிட்ட விட்டுட்டு வர முடில..கல்யாணத்த நிறுத்துனாலும் அவங்க வீட்டுக்கு போனா அரசி நிம்மதியா இருக்க மாட்டா..அதான் அப்டி பண்ணேன்..”
தீர்க்கமாய் உரைத்தவனின் விழிகளில்,தான் செய்ததில் எந்த வித தவறும் இல்லை என்கின்ற உறுதி.அந்த உறுதி,தோழர்களையும் சில நொடிகள் பேச்சிழக்கச் செய்தது.
“நீ அந்த பொண்ண லவ் பண்றியா ஆஜு..?” விஷ்வின்னுக்கு,கேட்க வேண்டும் போல் இருக்க,மறைக்காது வினவியும் விட்டிருந்தான்.
டேவிட் கூறியது எல்லாம்,அவள் மீதான காதலை பறை சாற்றிட,போதுமாய் இருந்தது எனினும்,அரிமா அவனின் இதழ் வழி கேட்பது தான்,சந்தேகத்தை தாண்டிய அவனின் மன எண்ணத்தை எடுத்துக் கூறும் என்பது,அவனின் நினைப்பு.
அரிமா அவனிடம் பதில் மௌனம்.அவளைக் கண்டதும்,பிடித்ததா என்று தெரியவில்லை.
ஆனால்,முதன் முறை பேரூந்தில் ஏற,அவள் யாரோ மூதாட்டிக்கு புன்னகையுடன் வழி விட்டு நின்றது,வெகுவாய் அவனின் கவனத்தை களவாடியது.
விழியோரங்கள் கொஞ்சமாய் சுருங்கிட,இதழ்களில் மெல்லிய பிளவுடன்,அவள் புன்னகைத்தது அப்படியே துளியும் மாறாமல் அவனுக்கு இன்னுமே,நினைவிருக்கத் தான் செய்கிறது.
அதன் பின்,தவறுதலாய் கண்டால் என்றாலும்,அவன் விழிகள் கேளாமலே,அவளைத் தொட்டுத் தொடரும்.
அத் தருணம் காரணம் அறியவில்லை.மனம் தெளிந்து அடித்தளம் புரியவில்லை.
வித்தியாசமாய் தோன்றினாள்,அவன் விழிகளுக்கு.விருப்பங்கள் வித்தியாசப் படுகையில்,வித்தியாசங்களே விருப்பங்களாகலாம் என,அவன் உணரத் தவறி இருந்தான்,போலும்.
அதன் பின்,சொல்லி வைத்தாற் போல்,அடுத்தடுத்த சந்திப்புக்கள்.எதேச்சை நிகழ்வுகள் என அவன் நினைத்து கடந்து விட முயன்றாலும்,அவனுக்குள்ளும் சின்னச் சின்ன பிறழ்வுகள் அக்கணங்களில் நிகழ்ந்திடாமல் இல்லை.
இல்லை என கூறிக் கூறி,தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருந்தான்,அவன்.அவ்வப்போது,தன்னைத் தேற்றுகையில் அவனுக்குள் முளைத்திடும் சந்தேகத்தை விழுங்கியும் கொள்வான்.
அப்படி ஒரு நாளில் தான்,வெளியில் கிளம்ப தயாராகி நிற்கையில்,அவள் தோழியரின் பேச்சுக்குரல்கள் செவியோரம் தீண்டியது.
“தமிழ் மட்டும் தனியா போனா..எங்கயாச்சும் வழி தவறி மாட்டிகிட்டாலோ தெரில..ஃபோன் பண்ணி பாருங்கடி யாராச்சும்..நா பண்ணுனா ஆன்ஸர் பண்ணல அவ..”
பதட்டம் மிகுதியாய் தோழியொருத்தி இன்னொருத்தியிடம் கூறிட,அவர்களின் மனநிலை எப்படி இருந்ததோ,தெரியவில்லை.
“தமிழ்” என்று அடிக்கடி அழைப்பதைக் கேட்டு,அவள் பெயரின் முற்பாதியை மட்டுமாவது தெரிந்து வைத்திருந்தது,அந்த சூழ்நிலையில் கை கொடுத்தது.
செவியில் விழுந்த வார்த்தைகளை கேட்ட பின்,அவனால் இயல்பாக இருந்திட முடியவில்லை.
அவர்கள் தேடிக் கொள்ளட்டும் என விட்டு விடவும் இயலவில்லை.மனம் படபடக்க,அவனுக்குள் முகிழ்த்திருக்கும் உணர்வலைகள் சுழன்றடித்த தருணம் அது.
எப்படியும் இப்படியோர்,உணர்வை ஏற்று அதை வேர் விட வைத்து,விருட்சமாய் விரிய வைப்பதால் நேர்ந்திடக் கூடும் என அவன் ஊகித்த விடயங்கள் யாவும் மனதை நிரப்பிட,இருக்கையில் அமர்ந்து கோர்த்த கைகளை பின்னந்தலையில் வைத்தவாறு அண்ணாந்து பார்த்து,இதழ் குவித்து ஊதிக் கொண்டான்.
எதுவும் இல்லை என தனக்குத் தானே கூறியவாறு இருந்தவனுக்கோ,நிலை கொள்ள முடியாமல் போய் விட,சட்டென எழுந்து அவளைத் தேடிச் சென்றிருந்தான்,புத்தியின் கூற்றை மனம் பின் தள்ளவே.
விழியெங்கும் தவிப்புடன்,வழி நெடுகிலும் நடந்தவனின்,நெஞ்சாங்கூட்டில் இனம் புரியா தவிப்பொன்று துளிர்த்து கிளை பரப்பிட,அதன் ஆழத்தை ஆராய விரும்பவில்லை,அவன்.
அதன் பின்,அவளைக் கண்டான்.உடன் துணையாய் அழைத்து வந்தான்.அவளிடத்தில் வேறு பெண் இருந்திருந்தாலும்,அவன் அப்படி உதவி இருக்கக் கூடும்.ஆயினும்,இத்தகைய தவிப்பின் சாயலைக் கூட,அவன் உணர்ந்திருக்கும் சாத்தியமில்லை.
அதன் பின்,அவள் அவனைப் பார்த்து புன்னகைத்த போதிலும்,அவன் பதிலுக்கு இதழ் விரிப்பது கூட இல்லை.அதை தவிர்ப்பதே நலமென்று தோன்றிற்று.
அப்படி இருக்கையில் மீண்டுமொரு முறை,அவள் தவறி சிக்கிட,உதவிக்குச் சென்றவனோ,அவளிடம் அலைபேசி எண்ணை நீ்ட்டியது எல்லாம்,அவனை மீறி நடந்தேறியவை.
தன் நடவடிக்கையில் திகைத்தவனுக்கோ,
தன் மன உணர்வுகளில் கொஞ்சம் புரிந்திட,தனக்கு கூறிக் கொள்ளத் தான்,”தங்கை” என்ற பெயரில் அவள் கேட்டிடா கேள்விக்கு விடையளித்து விட்டு வந்தது.
அதன் பிறகான நாட்களிலேயே,அவன் உணர்வுகளின் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு புரிய ஆரம்பித்தது.
ஆழம் புரிந்த போதிலும்,அதன் பின் விளைவுகளும் தெரிய வர,பூமியில் இருக்கும் வரை தானே,எனத் தன்னைத் தானே தேற்றிக் கொள்வான்.அவனுக்கு முன்பாகவே,அவள் அவ்விடத்தில இருந்த கிளம்பிட,அப்பொழுது தான்,மனம் கேளாமல் உதவி கேட்கச் சொல்லி அவளிடம் ஒப்புவித்தது.
ஓரளவு அவளைப் பற்றி தெரிய வந்திருக்க,அந்த ஆறுதல் வார்த்தைகளை கூட, கூறாமல் அவனால் இருக்க முடியவில்லை,என்பதே உண்மை.
அதன் பின்,அவனும் தன்னுலகம் வந்து விட்டிருக்க,அனைத்தும் மறந்து விடும் என்று எண்ணி இருந்தான்.
ஆனால்,அவன் எண்ணங்கள் முற்று முழுதாய் பொய்யாவதை,உறுதிகள் சுவடுகள் கூட இன்றி சிதைவதை,அவன் கண் கூடாகக் கண்ட நாட்கள் அவை.
சில பிரிவுகள்,மறக்கச் சொல்லித் தரும்.சில பிரிவுகள் நினைக்காமலே,இருக்க முடியாத நிலைக்குள் தள்ளி விடும்.
அவன் நினைத்தது போல் இன்றி,அந்தப் பிரிவு இரண்டாம் வகை.
நிஜத்தில் அவள் தரிசனம் தந்தது சில நாட்களே என்றாலும்,அதன் பிம்பங்கள் அனுதினம் நினைவில் வந்து,வதைத்தது.
அந்தப் புன்னகை..
அந்த திருதிரு பார்வை..
அந்த விழியுருட்டல்..
அந்த அப்பாவியான முகபாவம்..
அச்சொட்டாய் அவன் ஆழம் கீறி,அகத்தில் பதிந்திட,ஈர்ப்பின் கடைநிலையில் தொற்றிக் கொண்டிருந்த உணர்வலைகள் ஒட்டு மொத்தமாய்,ஆழத்தில் இருக்கும் காதலில் வசமாய் சிக்கி மீள முடியாமல் உறைந்திட,அவனறிய அவன் கொஞ்சமாய் தொலைந்த நாட்கள் அவன் அகராதியில் இடம் கேட்டிருந்தன,அந்தப் பிரிவில்.
எங்கும் காணமல் போய் விடவில்லை.ஆயினும்,மெல்ல மெல்லத் தொலைந்தான்.தேடுவதற்கு இடம் ஒன்றும் இல்லை.ஆயினும்,தொலைக்காத இடத்தில் எல்லாம் தன்னைத் தேடி அலைந்தான்.
அவன் அகராதியில் இல்லை என்று அவன் கூறியிருந்த மாற்றங்கள்,அழகாய் அவனறிய கொண்டு சேர்ப்பிக்கப்பட்டன.அவனுக்கென,அவன் வகுத்திருந்த எல்லைகள் யாவும்,அவன் அனுமதியுடன் மெதுமெதுவாய் மீறப்பட்டன.
அதன் பின்,ஆழம் கொன்றது அவன் காதல்.சேர வாய்ப்பில்லை என்று அவன் எண்ணியிருந்த போதிலும்,கரையுடைத்த காதலை கட்டுப்படுத்த வழி தெரியாது போயினும்,அவ்வுணர்வு அவ்வளவு பிடித்து விடவே,அதன் போக்கில் விட்டு விட்டிருந்தான்.
அதுவோ,ஆழிப் பேரலையாய் எழுந்து வந்து,அவனின் இசைவுடன் மொத்தமாய் ஆள் கொன்று, ஆட்கொண்டிருந்தது அவனுயிரையும் அவனின் உணர்வுகளையும்.
அவள் மேல் இருக்கும் இந்தக் காதல், வேறு யார் மீதும் வராது என்று அவனுக்கு புரியத் துவங்கியது,அக்ஷதி அவன் பின்னே சுற்ற ஆரம்பித்த பின்னர் தான்.
பாவையவள் மீது,கொண்டிருக்கும் உணர்வது யார் மீதும் வரவே வராது,என புரிந்த பின்னர்,அவளைத் தவிர வேறு காதல் இல்லை என்று முடிவெடுத்தவனோ,அவளையும் தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ளவும் தயாராக இருக்கவில்லை.
ஆயினும்,அவள் மீதான உணர்வு மட்டும் அப்படியே இருந்தது.இரவுகளில் சயனத்தின் நிழலில், அது அதீதமாய் அவனை ஆட்டுவிக்கும்.
திடம் அதிகம் அரிமா அவனுக்கு.அது தான் அந்த வலியையும் அழகாக கையாள வைத்தது.அவள் நினைவுகளை சுமந்தவாறு இயல்பாய் அவன் வாழ்க்கை நகர்ந்திட்ட போதிலும்,அவள் எண்ணங்கள் இன்றியமையாததாய் இருந்தது,அவன் நாட்களில்.
ஏறத்தாழ இந்த மூன்று வருடங்களுக்குள்,அவள் மீதான காதலில் சிதைந்து கரைந்து மிச்சமின்றி தொலைந்து போயிருந்தான்,ஆஜ்வின் வேத்விக்.
மீண்டும் ஒரு போதும் பூமிக்கு வருவதில்லை என்பது அவனின் நிலைப்பாடே.அவனுக்குத் தெரியும்,அவளுக்கு தன் மீது இருப்பது வெறும் மரியாதை என்பது.
அப்படியிருக்க,மீளவும் வந்து அவள் விம்பம் ஏற்று,மனதை தவிக்க வைத்து,தன்னை வலிக்க வைத்திட அவன் விரும்பவில்லை.
தவறியேனும் அவளைச் சந்தித்தால்,அவன் உறுதிகள் மொத்தமாய் சிதறிடும் என்று அவன் எண்ணியிருந்தது ஒன்றும் பொய்யல்ல.
ஆயினும்,எண்ணங்களுக்கு மாறாய் விதி ஒன்றை விதைத்து வைத்திருக்க,எதை தடுக்க முடியுமாம்..?
“ஆஜு..? உன்னத் தான் டா கேக்கறேன்..என்ன பதில் சொல்லாம இருக்க..? நீ அந்த பொண்ண லவ் பண்றியா..? நீ நடந்துக்குறத பாத்தா அப்டி தான் இருக்கு..”
அவன் அமைதியை நீட்டிக்க,அமிதேஷுக்கு கோபம் எல்லை கடந்தது.
“உன்னத் தான்டா கேக்கறோம்..இந்த பூமி வாசி பொண்ண நீ லவ் பண்றியா..?”வாயத் தொறந்து ஏதாவது பேசுடா..”
“நாம வந்த வேல எவ்ளோ முக்கியம்னு தெரியும்..அவ்ளோ முக்கியமான வேலக்கி நடுவுல அவன் இந்தப் பொண்ண பத்தி யோசிக்கிறான்னா..அந்த பொண்ணுக்காக இவ்ளோ பண்றான்னா அவனுக்கு அந்த பொண்ணு எவ்ளோ முக்கியம்னு இதுலயே புரிலியா..?”
விஷ்வின் தீர்க்கமாய் கேட்டிட,அமிதேஷ் அதை ஒப்புக் கொள்வது போல் பாவம் காட்டினான்.
“என்ன இருந்தாலும் நம்மளுக்குன்னு ஒரு உலகம் இருக்கு..? அத விட்டுட்டு நீ ஒரு பூமி வாசிய விரும்புறன்னு சொல்ற..? அது எவ்ளோ ப்ரச்சனய கொண்டு வரும்னு உனக்கு புரியுதா..?”
காட்டமாக அமிதேஷ் சீறிட,அவர்களைத் தேடி மாடிக்கு வந்த ராகவியோ,முழுதாய் அவர்களின் பேச்சில் குழம்பி நின்றாள்.
“என்ன பூமி வாசி வேற உலகம்னு பேசிக்கிறாங்க..என்னாச்சு இவனுங்களுக்கு..? மண்டைல ஏதாச்சும் அடி பட்ருச்சா..?”
அடியும் புரியாது,நுனியும் விளங்காது தலையை சொறிந்தவளுக்கு,மண்டை காய்ந்தது.
●●●●●●●
சில மணி நேரங்கள் கழிந்த பின்னர்,கூட்டம் மொத்தமாய் கலைந்து போக,தலையில் கை வைத்து அமர்ந்த பவனியை நோக்கி வந்த தார்விக்கின் முகத்தில் வியர்வைத் துளிகள்.
“இந்த ஆயிரம் பேர்ல கண்டிப்பா அவன் இல்ல..ஆனா நா ஆரம்பத்துல சொன்னேன்ல..ஒருத்தர் எந்திரிச்சு வெளிய போனான்னு..ஒரு வேள அது தான் நாம தேட்ற ஹார்ட்டா இருக்குமோ..?”
“டேய் எதுக்குடா அதயே புடிச்சி கிட்டு தொங்குற..விட்டுத் தொலைடா..” என்றவளின் முகத்தில் அப்பட்டமான களைப்பு.
“இன்னிக்கி நைட் ரெண்டு மூனு க்ளப் இருக்குல..அங்க போவோம் நாம..புரியுதா..?” கேட்டுக் கொண்டே,எழுந்தவள் கலைந்து செல்லும் கூட்டத்துடன் வெளியே வந்து நடக்கத் துவங்கிட,சடசடவென மழை பெய்யத் துவங்கிட,கூட்டம் ஓட ஆரம்பித்திட,சட்டென்று ஒரு வெம்மை அவள் கரத்தில்.
அதனை உள்வாங்கி அவள் நிமிர்வதற்குள்,அவளைக் கடந்து சென்ற கூட்டம்,வெகு தூரம் சென்றிருக்க,நொடியும் யோசியாமல் அவர்களை பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்து இருந்தாள்,பவனி.
“பவனி எங்க போற..? அடியேய் சொல்லிட்டுப் போடி..” தார்விக் அவள் பின்னே ஓடி வர,ஓரிடத்தில் மூச்சு வாங்கி நின்றிருந்தாள்,அவள்.
“என்னன்னு சொல்லாம ஓடி போனா எப்டி..? என்னாச்சு..? எதுக்கு இந்த ஓட்டம்..?”
“நா ஃபீல் பண்ணேன்..அந்த ரேடியேஷன நா ஃபீல் பண்ணேன்..” மூச்சு வாங்க கூறியவளின் முகமோ,அருகே வந்ததை தவற விட்டதை எண்ணி கசங்கிப் போயிருந்தது.
“ஷிட்ட்ட்ட்” என நெற்றியை நீவிக் கொண்டவளைக் காண பாவமாய் இருந்தது,தார்விக்குக்கு.அவனுக்கும் வருத்தம் தான்.ஆயினும்,அவளிடம் கேட்டு,கலவரப் படுத்த விரும்பவில்லை.
“சரி சரி டென்ஷன் ஆகாத..ஆம்பளயா பொம்பளயா…? அத சொல்லு மொதல்ல..அதுவே நமக்கு பெரிய விஷயமா இருக்கும்..”
“ஆம்பளடா..” என்றவளின் பார்வை,மீண்டும் மீண்டும் அந்த கூட்டத்தை அலசிட,அவளிதயமோ வேகமெடுத்து துடித்தது.
துடிக்கும்.
2026.03.24
