நான் என்றோ செய்தேனொரு பிழை அதன் வலியை இன்று வரை சுமக்கும் உன்னை என் உயிர்மூச்சின் கடைசிவரை கண்ணின் மணயென காப்பேனே காதலே…!
உன்னில் சிறையாகிறேன் – 25
”இப்ப எதுக்கு அவளோட பழைய கதையை என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க, இது மூலமா எனக்கு அவமேல ஒரு பரிதாபம் வரும், அதை வச்சு அவகூட என்னை வாழ வைக்கலாம்னு நினைக்கிறீங்களா தாத்தா?” என்று
அக்னி ஏளனமாகக் கேட்டான்,
தாத்தாவின் முகம் ஆக்ரோஷத்தில் சிவந்தது,
“இவ்ளோ நேரமா நான் அருவியைப் பத்தி சொன்னது அவ மேல உனக்கு அனுதாபம் வரணும்கிறதுக்காக இல்ல, நீ அவ மேல பரிதாபப்பட்டு ஒன்னும் அவகூட சேர்ந்து வாழ வேண்டாம்” என்ற
அவர் ஒரு நிமிடம் நிறுத்தி, அக்னியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கத்தினார்,
“நீ பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா அவகூட சேர்ந்து வாழுன்னு தான் சொல்றேன், உனக்கு இன்னுமா புரியல, அருவியோட குடும்பத்தை ஒட்டுமொத்தமா அழிச்ச பாவியே நீதான்டா” என்று
தாத்தா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, அக்னியின் மண்டையில் பலத்த இடி வந்து விழுந்தது போல இருந்தது, கால்கள் தள்ளாட, பின்னால் இருந்த சோபாவில் சரிந்தான,
உலகமே சுழல்வது போலவும், ரத்த வெள்ளத்தில் ஒரு கார் நொறுங்கிக் கிடப்பது போன்ற பிம்பங்கள் அவன் கண்முன்னே மின்னி மறைந்தன,
”என்னடா அப்படிப் பார்க்குற, அருவி குடும்பத்தை ஆக்ஸிடெண்ட் பண்ணி கொன்னதே நீதான் தெரியுமா” என்று தாத்தா மீண்டும் ஆக்ரோஷமாகச் சொல்ல, அக்னிக்கு மூச்சு முட்டியது,
”இல்ல… இல்ல… நான் யாரையும் கொலை பண்ணல, அந்த ஆக்ஸிடெண்ட்ட நான் பண்ணல, நீங்க பொய் சொல்றீங்க” என்று தலையை வேகமாக ஆட்டினான் அக்னி, அவனது குரலில் ஒருவிதமான பயமும், பதற்றமும் கலந்திருந்தது,
”நீங்க பொய் சொல்றீங்க தாத்தா, நான் அவ கூட சேர்ந்து வாழணும்னு தானே இப்படி எல்லாம் சொல்லி என்னை ஏமாத்தப் பார்க்குறீங்க? நான் நம்ப மாட்டேன், நான் எதுவுமே பண்ணலஉங்க சுயநலத்துக்காகப் பொய் சொல்லாதீங்க!” என்று கர்ஜித்தான் அக்னி,
அவன் உடல் நடுங்கியது, நெற்றியில் வியர்வை அரும்பியது,
தாத்தா தான் வைத்திருந்த ஒரு பழைய நியூஸ் பேப்பர் கட்டிங் மற்றும் சில போலீஸ் ரிப்போர்ட்டுகளை எடுத்து அவன் முன்னால் வீசினார்,
”இதோ பாரு அன்னைக்கு நீ காரை ஓட்டிட்டுப் போய் அந்தப் பாவப்பட்ட குடும்பத்து மேல மோதுனது உன் கார்தான், நான் தான் என்னோட செல்வாக்கை பயன்படுத்தி உன்னை அந்த கேஸ்ல இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்தே,
ஆனா, அந்த விபத்துல அனாதையா நின்ன அந்தப் பொண்ணு அருவிக்குச் செஞ்ச துரோகத்தை என்னால மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியல” என்று தாத்தா கண்கள் கலங்க சொல்ல,
அக்னி அந்தப் பேப்பர் செய்தியைப் பார்த்தான், அதில் நொறுங்கிக் கிடந்த அந்த வெள்ளை நிறக் கார் அதில் உயிரற்றுக் கிடந்த அந்தத் தாய், தந்தை, சகோதரர்கள் என அனைவரின் புகைப்படமும் இருந்தது,
அடுத்த கிடந்த போட்டோவைப் பார்த்தான் அதில் அக்னியின் கார் தலைகீழாகக் கிடந்தது, அதைக் கண்டதும் தான் அவனுக்கு உண்மை உரைக்க,
அவனது கண்கள் இருண்டிக் கொண்டு வந்தது, தாத்தா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வளவு சத்தியமான உண்மை என்பதை புரிந்து கொண்டான் அக்னி,
தான் செய்த ஒரு சிறிய தவறு, ஒரு அழகான குடும்பத்தையே அழித்து விட்டது என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை,
விதி எவ்வளவு பெரிய சதி செய்துவிட்டது, தான் யாரை வெறுத்துத் துரத்த நினைத்தானோ, அவளது வாழ்வைச் சிதைத்ததே தான் தான் என்பதை அறிந்து துடித்தான் அக்னி,
“என்னப்பா அப்படி பாக்குற, நீ அன்னைக்கு ஆக்ஸிடெண்ட்ட பண்ணிட்டு மயக்கமா கிடந்தப்ப, உன்னைப் போலீஸ்ல இருந்து காப்பாத்த நான் துடிச்சது உன் மேல இருந்த பாசத்துல மட்டும் இல்ல,
நம்ம குடும்ப மானம் போயிடக்கூடாதுங்கிற பயத்துலயும் தான், ஆனா, அன்னைக்கு நான் பண்ணது தான் நான் செஞ்ச முதல் பாவம், உன்னைப் போலீஸ் கிட்ட ஒப்படைச்சிருந்தா,
அட்லீஸ்ட் அந்தப் பொண்ணு அருவிக்கு ஒரு நீதியாவது கிடைச்சிருக்கும், ஆனா நான் உன் குற்றத்தை மறைச்சு, அருவிக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை உடைச்சு அநீதி பண்ணிட்டேன்” என்றார் தாத்தா,
அக்னி மெல்லத் தலைநிமிர்ந்து தாத்தாவைப் பார்த்தான், அவனது மனம் கலங்கிப் போயிருந்தது,
”அந்த ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்துல அருவி போட்ட அலறல் சத்தம் இன்னமும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குடா, அண்ணன், அண்ணி, அப்பா, அம்மான்னு எல்லாரையும் ரத்த வெள்ளத்துல பறிகொடுத்துட்டு,
அந்த சின்னப் பொண்ணு தவிச்ச தவிப்பு, அதை நீ பார்த்திருந்தா மனுஷனா இருந்தா உருகி உடைஞ்சுப் போயிருப்ப, அவளோட படிப்பு, கனவு, சந்தோஷம் எல்லாத்தையும் அந்த ஒரே ஒரு மோதல்ல நீ இல்லாம பண்ணிட்ட,
இப்போ சொல்லு இவ்வளவு செஞ்ச உனக்கு, அவகிட்ட மண்டியிட்டு மன்னிப்பு கேக்கக்கூட தகுதி இருக்கான்னு, கொஞ்சம் நீயே நினைச்சுப் பாருப்பா” என்று தாத்தா ஆக்ரோஷமாகச் சொன்னார்,
அக்னியின் இதயம் கனத்தது. அவன் வெறுத்த அந்த அருவி, உண்மையில் அவனால் பாதிக்கப்பட்டவள் என்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,
தாத்தா அவன் தோளைப் பற்றினார்,
“அக்னி, நீ தெரியாத செஞ்சிருந்தாலும், அது ஒரு மிகப்பெரிய பாவம் தான், அந்தப் பாவத்துக்கு ஒரே ஒரு பரிகாரம் தான் இருக்கு, அவளோட மீதி வாழ்க்கையில அவளுக்கு எந்தக் குறையும் இல்லாம,
கூடவே இருந்து அவளை நல்லபடியா பார்த்துக்கோ, இனி அவளுக்கு நீ தான் எல்லாமுமா இருக்கனும், அவளைக் கடைசி வரைக்கும் கண்ணின் மணி போல காக்க வேண்டியது உன் கடமை,
இது நான் உனக்குக் கொடுக்கிற தண்டனை இல்லடா நீ மனிதனா மாறுறதுக்கான ஒரு வாய்ப்பு, உன் பாவத்தை போக்குற வழி” என்று
தாத்தா சொல்லிவிட்டு எழுந்திருக்க, அக்னி அந்தச் சிதைந்த காரின் புகைப்படத்தின் மேல் தன் விரலை வைத்தான்,
*********************
“நீ என்ன சொன்னாலும் நீ பண்ணது தப்பு அருவி, ஹாஸ்பிட்டல்ல இருந்து சொல்லாம கொல்லாம குழந்தையை தூக்கிட்டு வந்திருக்க,
அங்க உன்னை காணும்னு தேடப் போறாங்க, முதல்ல ஒரு போன் பண்ணியாவது நீ இங்க தான் இருக்கேன்னு சொல்லு அருவி” என்றாள் தமிழினி,
“நீ நினைக்கிற மாதிரி அங்க என்னை யாரும் தேட மாட்டாங்க, தானா வந்த தொல்லை அதாவே தொலைஞ்சதுன்னு சந்தோஷம் தான் படுவாங்க, அதனால ப்ரீயா விடு தமிழ்” என்றாள் மகிழருவி,
“இப்படி எல்லாம் சொல்லாத அருவி, கண்டிப்பா இந்நேரத்துக்கு உன்னை தேடிட்டு இருப்பாங்க, என்ன தான் மோசமான புருஷனாவே இருந்தாலும்,
பொண்டாட்டியை காணோம்னா, யாரா இருந்தாலும் தேட தான் செய்வாங்க, புரிஞ்சுக்கோ அருவி, அடம்பிடிக்காம போன் பண்ணு” என்றாள் தமிழினி,
“போன் பண்ணு போன் பண்ணுன்னு டார்ச்சர் பண்றியே, எனக்கு அவரோட நம்பரே தெரியாது, அவர் பேரு அக்னி, அது மட்டும் தான் தெரியும், அதுவும் இல்லாம சின்ன குழந்தைன்னு கூட பாக்காம,
மிரட்டி அழ வச்சு பிட்ஸ் வரவச்சவன் கூட என்னால வாழ முடியாது, அவன் மனுஷனே இல்ல காட்டுமிராண்டி, அவனோட அம்மா பொம்பளையா அவ ஒரு பஜாரி,
அவங்க கூட எல்லாம் பாக்கவே பிடிக்கல தமிழ், மனுஷ தன்மையே இல்லாத மிருக கூட்டம்” என்று தன் மன ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள் அருவி,
“அந்த கூட்டத்துலேயும் ஒரு நல்லவர் இருக்காருல்ல, திருவாசகம் ஐயா அந்த வீட்ல தான இருக்காரு, நமக்கு ஒரு பணத்தேவைன்னதும்,
ஒரு செகண்ட் கூட யோசிக்காம வந்து அவ்ளோ பெரிய பணத்தை குடுத்து, நம்ம யாழினி குட்டியை காப்பாத்த ஹெல்ப் பண்ணார் இல்ல” என்று தமிழினி சொல்ல,
“அந்த வீட்லயே நல்ல மனுஷன்னா அது அவர் மட்டும் தான், எனக்காக எல்லார் கூடயும் சண்டை போட்டாரு, அவர் ஒருத்தர் தான் தப்பித் தவறி அந்த வீட்ல நல்லவரா இருக்காரு” என்றாள் அருவி
தமிழும் அருவியும் பேசிக் கொண்டிருக்க, ஒருபுறம் யாழினியும் குட்டி கவியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களுக்குள் ஏத பேசி விளையாடிக் கொண்டிருந்தனர்,
குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் தான் அருவியின் மன பாரத்தை சற்றே குறைப்பது போல இருந்தது,
அந்நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, அருவி எழுந்து போக முற்பட்டாள்,
“இரு அருவி, நீ குழந்தையைப் பார்த்துக்கோ, நான் போய் யாருன்னு பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டுத் தமிழினி கதவைத் திறந்தாள்,
வாசலில் நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் தமிழினிக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை,
“ஐயா நீங்களா, வாங்க உள்ள வாங்க,” என்று பதற்றத்துடன் வழிவிட்டாள்,
உள்ளே நுழைந்தவர் திருவாசகம், அவரது முகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாடிப் போயிருந்தது, அக்னியிடம் உண்மையைச் சொன்ன அந்த வலியும், அருவிக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அவரை உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்தது,
அருவி அவரைப் பார்த்ததும் சட்டென எழுந்து நின்றாள்,
“நீங்க எப்படி இங்க, நான் சொல்லாம வந்ததால உங்களுக்கு என்மேல கோபமா” என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டாள்,
திருவாசகம் மெல்ல நடந்து வந்து சோபாவில் அமர்ந்தார், விளையாடிக் கொண்டிருந்த கவியையும் யாழினியையும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்,
“உன் மேல கோபப்பட எனக்கு தகுதி இல்லம்மா, நம்பி வந்த பொண்ணை வாழ வைக்க முடியாம, எந்த முகத்தை வச்சுட்டு உன் முன்னாடி வந்து நிற்கிறதுன்னு தான் மனசு உறுத்துதும்மா” என்றார்,
“ஏன் அப்படி சொல்றீங்க, நீங்க எந்த தப்பும் பண்ணல, நீங்க நல்லதுன்னு நினைச்சு பண்ணீங்க, அது தான் தப்பாகிடுச்சு” என்றாள் அருவி,
“தப்பு தான்ம்மா, நான் பண்ணது எல்லாமே தப்பு தான், அதை திருத்த எனக்கு ஒரு வாய்ப்பு குடுப்பியான்னு கேட்க தான் வந்திருக்கேம்மா,
எனக்காக ஒரே ஒரு வாய்ப்பு குடும்மா, இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கறேன் ப்ளீஸ்ம்மா” என்று கெஞ்சுதலாக கேட்டார் திருவாசகம்,
பதில் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள் மகிழருவி, தமிழுக்கே தர்மசங்கடமாகிப் போனது,
“என்ன அருவி யோசிக்கிற, அவர் தான் கேட்குறார் இல்ல பதில் சொல்லு, இந்த ஒருமுறை மட்டும் நீ போ, மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்தா அப்புறம் பாத்துக்கலாம்” என்றாள் தமிழினி,
“இப்பக் கூட தாத்தா தான என்னை தேடி வந்திருக்காரு, என் கழுத்துல தாலி கட்டினவர் நான் வேணும்னு வரலையே, அப்புறம் எப்படி நான் அங்க போக முடியும்,
அதையும் மீறி போனா, அவர் எங்கூட சேர்ந்து வாழவா போறாரு, ஒரே ரூம்ல எங்கூட இருக்கிறதையே வெறுக்கிறவர் அவரோட லைஃப்ல எப்படி என்னை சேர்த்துப்பாரு” என்று நியாயமாக கேட்டாள் அருவி,
“நீ நினைக்கிற மாதிரி இனி நடக்காதும்மா, அக்னிக்கு உங்கூட வாழ்றதுல முழு சம்மதம் தான், இனிமே நீ அவனும் பிரிஞ்சு தனித்தனியா இருக்க வேணாம், ஒரே ரூம்ல ஒன்னா தான் வாழப் போறீங்க” என்று திருவாசகம் சொல்ல,
“இதை உங்க பேரன் மிஸ்டர் அக்னி வந்து சொல்லுவாரா தாத்தா, சொல்லுங்க அவர் வந்து சொல்லுவாரா” என்று அருவி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் அக்னி,
“ஏய், அங்க பாருடி, நீ கேட்ட மாதிரி உன் ஹஸ்பண்ட் வந்திருக்காரு” என்று தமிழினி சொல்ல, அருவி திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்,
கருநீல நிற கோட் சூட்டில் அத்தனை கம்பீரமாக நின்றிருந்தான், தன் கைகளை கோட்டின் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு, அக்னி மெல்ல அடி எடுத்து வைத்து அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான்,
அவனது காலணிகள் தரையில் ஏற்படுத்திய மெல்லிய சத்தம் அருவியின் இதயத் துடிப்போடு போட்டி போட்டது, அருவியைப் பார்த்ததும், தன் பார்வையை அருவியின் முகத்தில் நிலை நிறுத்தினான் அக்னி,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
