அக்னி:
நீ என்னைக் காதலிக்க வேண்டும் என்பதில்லை… நீ வெறுப்பதற்காவது நான் வேண்டுமே அது போதும்…!
உன் மன்னிப்பு வேண்டாம்… உன் காதலும் வேண்டாம்… அவ்வளவு ஏன் உன் கடைக்கண் பார்வைகூட வேண்டாம்…
இருந்தும்,
ஏனோ தெரியவில்லை
உன் வெறுப்பில் தொலைந்து,
உன் கோபத்தில் கரைந்து,
மீள முடியா ஒரு தீவாய்,
உன்னில் சிறையாகிறேன் காதலே..!
மகிழருவி:
உன் கவிதைகள் அழகாக இருக்கலாம்…
உன் நேசம் ஆழமாக இருக்கலாம்…
உன் காதல் உண்மையாகக் கூட இருக்கலாம்.… ஆனால்,
நீ கொடுத்த காயங்களுக்கு மருந்தே கிடையாது…
நீ செய்த குற்றத்திற்கு என்றும் மன்னிப்பே கிடையாது… என் காதல் உனக்காக பிறவாது,
என் வெறுப்பில் நீ சிறையாவதை விட, என் நினைவிலேயே இல்லாதவனாக மறைந்து விடு…!
உன்னில் சிறையாகிறேன் – 37
(இறுதிப்பகுதி)
“ஹாய் மேடம், எப்படி இருக்கீங்க?” என்றவாறு வந்தான் ரோஹித்
“இப்ப பொய் சொல்லனுமா, இல்ல உண்மையை சொல்லனுமா” என்றாள் அருவி,
“நீங்க எது சொன்னாலும் அழகா தான் இருக்கும் மேடம், அதனால எது வேணாலும் சொல்லுங்க” என்றவனை முறைத்தாள் அருவி
“சாரி மேடம் ஏதோ ஒரு ப்ளோல வந்திருச்சு, ஓகே மேடம் நான் வந்த விஷயத்தை முதல்ல சொல்லிடுறேன், இல்லன்னா எதுக்கு வந்தேனங்கிறதையே மறந்துட்டு போயிடுவேன்,
நான் உங்கள ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போலாம்னு நினைக்கிறேன், வரமாட்டேன்னு மறுக்காம வாங்க மேடம்” என்றவனைக் குழப்பமாக பார்த்த அருவி,
“இந்த நேரத்துலயா, எனக்கு எங்கும் வர விருப்பம் இல்லை ரோஹித்” என்றாள் அருவி, ரோஹித் விடுவதாக இல்லை,
“அய்யோ மேடம், அப்படிச் சொல்லாதீங்க, நான் உங்ககிட்ட என்னைக்காவது எதாவது கேட்டுருக்கேனா, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எனக்காக வாங்க மேடம்,
நான் உங்களை ஒரு முக்கியமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்னு என் மனசாட்சிகிட்ட சத்தியம் பண்ணிருக்கேன், நீங்க மட்டும் வரலைன்னா என் மனசாட்சி அசிங்கசிங்கமா திட்டும் மேடம்” என்று சிறுபிள்ளை போல அடம்பிடித்தான் ரோஹித்,
“விளையாடாதே ரோஹித், எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, ப்ளீஸ் என்னை இம்சை பண்ணாதே,” என்று அருவி கடுகடுத்தாள்,
ரோஹித் அங்கேயே அமர்ந்து போராடுபவன் போல பாவனை செய்தான்,
“நீங்க வரலைன்னா நான் இங்கேயே உட்கார்ந்துடுவேன் மேடம், ப்ளீஸ் மேடம்… ப்ளீஸ்… ப்ளீஸ்… எனக்காக ஒரே ஒரு தடவை வாங்க மேடம்” என்று கெஞ்சினான் ரோஹித்,
ரோஹித்தின் அந்த விடாப்பிடியான பிடிவாதம், அவன் ஒரு குழந்தையைப் போல அடம் பிடிப்பது அருவிக்கு எரிச்சல் வந்தாலும்,
”சரி சரி வர்றேன், ஆனா, சீக்கிரம் வந்துரணும்” என்று வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்,
”யெஸ், தேங்க் யூ மேடம், தேங்க்யூ சோ மச் மேடம்” என்று துள்ளிக் குதித்த ரோஹித்,
அவளை காரில் அழைத்துச் சென்றான், கார் மெல்ல நகரின் பரபரப்பைக் கடந்து பயணிக்க, அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பழைய வீதியை நோக்கித் திரும்பியது,
அந்த வீதிக்குள் கார் நுழையும் போதே அருவியின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது, பழைய நினைவுகள் அவளைச் சூழ்ந்து, அவளது மூச்சைத் திணறடித்தன,
”ரோஹித், இது… இது” என திணறியவள்,
“இப்ப இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த, எனக்கு இங்க வரப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும்தானே?” என்று அருவி பதற்றத்தோடு கேட்டாள்,
ரோஹித் பதில் சொல்லாமல் காரை ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தினான்,
அது அருவியின் வீடு, அவள் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த வீடெ, குடும்பத்தின் இழப்புகளுக்குப் பிறகு அவள் காலடி எடுத்து வைக்காத அதே வீடு,
”தயவுசெஞ்சு சொன்னாக் கேளு ரோஹித்,” என்று அருவி அழத் தொடங்கினாள்,
”இது நீங்க பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு மேடம், ப்ளீஸ் ஒரு தடவை உள்ள போய் பாருங்க மேடம்” என்று ரோஹித் புன்னகையோடு சொன்னான்,
அருவி தயக்கத்தோடு காரிலிருந்து இறங்கினாள், அவளது பழைய வீட்டின் கேட்டைத் திறக்கும் போது அவளது கைகள் நடுங்கின, உள்ளே நுழைந்தவள், அங்கிருந்த மாற்றங்களைக் கண்டு வியந்து நின்றாள்,
அவளது பழைய வீடு, அவள் எப்படி வைத்திருந்தாளோ அதே போலப் புதுப்பிக்கப்பட்டிருந்தது, அவள் அம்மாவின் பூச்செடிகள்,
அண்ணனின் டூவீலர் என இருந்தன,
அருவி வீட்டின் உள்ளே மெல்ல அடி எடுத்து வைத்தாள், ஹாலில் அவளது அப்பா அமரும் அதே பழைய மர நாற்காலி, சுவரில் அதே பழைய கடிகாரம்,
சமையலறையில் அவள் அம்மா பயன்படுத்திய அதே பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அதே இடத்தில் இருந்தன, அருவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன,
“இது… இது எப்படி?” என்று அவள் வியந்து கொண்டிருக்கும் போதே, அங்கே ஒருவன் வந்தான்,
அவன் தான் அக்னி… ஒரு சாதாரண மனிதனாக, அங்கே நின்று கொண்டிருந்தான், அவள் அதுவரை பார்த்திராத அக்னி அங்கே நின்றிருந்தான்
விலையுயர்ந்த கோட்சூட் இல்லை, கையில் பல கோடி மதிப்பிலான கடிகாரம் இல்லை, அந்த மிடுக்கான நடை இல்லை, திமிரான பார்வை கூட இல்லை,
ஒரு சாதாரணமான எளிமையான உடை, கலைந்த தலைமுடி என ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனாக அங்கே நின்றிருந்தான் அக்னி, அவனைக் கண்டதும் பீறிட்டு வந்த ஆத்திரத்தை அடக்கமாட்டாதவளாக,
”நீ… நீ இங்க என்ன பண்ற?” என்று சத்தமாக கேட்டாள் அருவி, அப்போது ரோஹித் முன்னே வந்து,
“அதை நான் சொல்றேன் மேடம்” என்று தொடங்கினான்,
***********************
“என்ன அக்னி இது, அப்போ இதுதான் உன் முடிவா” என்று கேட்டார் திருவாசகம்,
“ஆமா தாத்தா, இதுதான் என் முடிவு” என்றான் அக்னி தன் கையில் இருந்த கார் சாவிகளையும், பிசினஸ் ஆவணங்களையும் தாத்தாவின் கையில் திணித்தான்,
“என்னால என் மகிழ் எதையெல்லாம் இழந்தாளோ, அதை எல்லாம் அவளுக்குத் திருப்பிக் கொடுக்கணும் தாத்தா,
அவ குடும்பத்தை என்னால திருப்பிக் குடுக்க முடியாது, ஆனா அவங்க வாழ்ந்த அந்த வாழ்க்கையையும், அந்த அன்பையும் நான் அவளுக்குக் குடுக்கணும்னு நினைக்கிறேன் தாத்தா” என்றான் அக்னி,
திருவாசகம் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதுவரை அமைதி காத்த வாசுதேவன் அக்னியின் அருகே வந்து தோளைத் தட்டிக் கொடுத்தார்,
“தப்பு பண்ணிட்டு அதுக்கு ஒரு காரணம் தேடி தப்பிச்சுப் போகாம, பண்ண தப்புக்கு தண்டனை தேடிக்கிற உன்னை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்குப்பா” என்று முதல் முறையாக தன் மகனை மனதார பாராட்டினார் வாசுதேவன்,
“நீங்களாவது என்னை புரிஞ்சுக்கிட்டீங்களே அது போதும் தேங்க்யூ சோ மச் டேடி” என்றான் அக்னி,
பல வருடங்களுப்பிறகு தந்தையும் மகனும் பேசிக் கொண்டனர், வாசுதேவன் மனம் நெகிழ்ந்து மகனை ஆரத்தழுவிக் கொண்டார்,
“இது என்ன பைத்தியக்காரத்தனம் அக்னி, நம்ம வீட்ல வேலை செயக்கூட தகுதி இல்லாத அவளுக்காக நீ ஏன் இந்த வீட்டை விட்டுட்டுப் போகனும்,
வேனும்னா அவளுக்கு எவ்வளவு பணத்தை வேணாலும் குடுத்துட்டுப் போயேன், எதுக்கு தேவையில்லாம உன் வாழ்க்கையை அழிச்சுக்கிற” என்று கத்தினாள் வசந்தா,
“சிலருக்கு சொன்னா புரிஞ்சுக்கிற தன்மை இருக்கும், சிலருக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது, பட்டா தான் புரியும், இன்னும் சிலருக்கு என்ன சொன்னாலும் என்ன பட்டாலும் புரியவே புரியாது” என்றான் அக்னி,
“நான் என்ன சொல்றேன் நீ என்ன சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுற” என்று வசந்தா கோபமாக கேட்க,
“அது ஒன்னு இல்ல நீ கொஞ்சம் பேசாம போறியா” என்று அடக்கினார் வாசுதேவன்,
தாத்தாவிடமும் தந்தையிடமும் விடைபெற்ற அக்னி திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்தான் ரோஹித்,
“ரோஹித், எனக்கு ஒரு உதவி பண்ணுவியா, எனக்காக இல்ல அருவிக்காக,” என்று கேட்டான் அக்னி,
“ஹைய்யோ என்ன சார் நீங்க உதவின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு, உரிமையா ஆடர் போடுங்க சார், உங்களுக்காகவும் அருவி மேடத்துக்காகவும் நான் எது வேணாலும் செய்வேன் சார்” என்றான் ரோஹித்,
“நீ சார்ன்னு கூப்பிடுறதுக்கு, இனி நான் உன்னோட பாஸ் இல்ல ரோஹித், ப்ளீஸ் கால் மீ அக்னி” என்று அக்னி சொல்ல,
“மரியாதைங்கிறது பணத்தால வர்றது இல்ல சார், அது மனசுல இருந்து வர்றது, பணம் இருந்தாலும் இல்லன்னாலும் எப்பவுமே நீங்க எனக்கு பாஸ் தான் சார்” என்றான் ரோஹித், மனம் குளிர்ந்து போனான் அக்னி,
நடந்தவற்றை எல்லாம் சொல்லி முடித்தான் ரோஹித், அருவி அக்னியின் முன்னால் வந்து நின்று நேருக்கு நேராக அவன் முகம் பார்த்தாள்,
“இப்படியெல்லாம் செஞ்சா நான் உன்னை மன்னிச்சிடுவேன்னு நினைச்சியா, என் அப்பாவையும், அம்மாவையும், அண்ணனுகளையும் கொன்ன உன்னை… என்னால எப்படி மன்னிக்க முடியும்” என்று ஆவேசமாக கேட்டாள் அருவி,
“நீ மன்னிக்கவே வேண்டாம், நான் அதுக்காக ஒன்னும் இங்க வரல, நான் பண்ணது தப்பு தான், ஆனா அதற்காக என் பக்க நியாயம்னு ஒன்னு இருக்கும் இல்ல,
என்னிக்காவது அதைபத்தி யோசிச்சி இருக்கியா” என்று அக்னி கேட்க, அதுவரை அங்கே இருந்த ரோஹித் தன் வந்த வேலை முடிந்ததென அங்கிருந்து நைசாக நடையைக் கட்டிவிட்டான்,
“இங்க பாரு மகிழ், எதைச் சொல்லியும் என்னை நான் நியாயப்படுத்திக்க விரும்பல, உன் இழப்பும் வலியும் பெருசு தான்,
அதை இல்லன்னு சொல்லல, உன் குடும்பத்தை மீட்டு உங்கிட்ட குடுக்க எனக்கு ஒரு பர்சன்ட் சான்ஸ் கிடைச்சாலும், என் உயிரைக் குடுத்தாவது,
அவங்களை உயிரோட மீட்டு உங்கிட்ட குடுத்துடுவேன், ஆனா அதுதான் முடியாதே, அதான் என்னால முடிஞ்ச வரைக்கும் உன் வலியை குறைக்க என்ன செய்ய முடியுமோ,
அதை எல்லாம் செய்யனும் தான் இங்க வந்தேன், இனிமே உன் கோபத்தை என் மேல காட்டு உன் ரணங்களுக்கு என்னை மருந்தா மாத்திக்கோ” என்றான் அக்னி,
“நீ சொல்றதெல்லாம் வார்த்தையா கேட்க வேணா நல்லா இருக்கும், அதே வாழ்க்கைன்னு வரும்போது தான் வலி என்னான்னு புரியும்” என்றவள்,
வலிமிகுந்த வைராக்கியத்தோடு தன்னறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்,
நெடுநாள் கழித்து தன்னவளைக் கண்ட சந்தோஷ மிகுதியில் அக்னி மெல்லச் சமையலறைக்குச் சென்றான்,
அவனுக்குச் சமைக்கத் தெரியாது என்பது அவனுக்கே நன்றாக தெரியும், அவன் ஒன்றும் கைதேர்ந்த சமையல்காரன் இல்லைதான்,
இருந்தாலும் தன்னவளுக்காக ஏதேனும் செய்து விடவேண்டும் என்ற துடிப்பு மட்டும் அவனிடத்தில் நிறைந்தே இருந்தது,
அவள் அவனை ஏத்துக் கொள்ளவில்லை தான்… ஒருபோதும் மன்னிக்கப் போவதும் இல்லை தான்…
ஆனால், அவனது இந்த மாற்றத்தை அவளால் புறக்கணிக்கவும் முடியவில்லையே,
“மன்னிக்க முடியாத அவளும்… மன்னிப்பை வேண்டிக்கொண்டே அவனும்…”
அவர்களின் காதல் இப்போது ஒரு புதிய சிறையில் அடைபட்டிருந்தது, அது வெறுப்பா? காதலா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
உன்னில் சிறையாகிறேன்
சுபம்
நிஜமான காதல் என்பது கட்டிப்பிடிப்பதிலும் முத்தமிடுவதிலும் மட்டும் இல்லை, ஒருவருக்காகத் தன்னையே அழித்துக் கொண்டு, அவர்கள் இழந்ததை மீட்டுத்தரப் போராடுவதிலும் உன்னதமான காதல் இருக்கிறது…!
காலம் ஒரு விசித்திரமான ஓவியன், சில நேரங்களில் கண்ணீரைக் கொண்டு காதலை வரைகிறான், சில நேரங்களில் காயங்களைக் கொண்டே மருந்தையும் படைக்கிறான்.
நாவலை வாசித்த வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி 🙏🏻🙏🏻🙏🏻
