தன் அக்காவின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து பார்த்தாள் தாரணி..
அறையின் விளக்கொளி மட்டும் மங்கலாக எரிந்தது.படுக்கையின் ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் அனன்யா.அவள் கண்களில் இன்னும் கண்ணீர் துளிகள் வர,அவள் அருகில் மெதுவாக வந்து உட்கார்ந்தான் விக்ரம்.
சில நொடிகள் இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ,பிறகு விக்ரம் மெதுவாக அவளது கையை பிடித்தான்.“அனன்யா…” என்று அவன் மெதுவாக அழைத்தான்.அவள் அவனை பார்த்தாள்.அந்த பார்வையில் ஒரு பயம்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க…?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.
விக்ரம் சற்றே சிரித்து கொண்டு
“நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்…” என அவன் மெதுவாக தொடர்ந்தான்.
“தாரணி சொன்ன விஷயம் உன்னை இப்படி தனியா உக்காந்து அழ வெச்சுருச்சா, நீயும் உன் தங்கச்சியும் பேசுனது எல்லாமே எனக்கு தெரியும்…”என அவன் சொல்ல
அனன்யா கண்கள் நனைந்தது.
“அவள் என்னக்காக,நமக்காக இதெல்லாம் செய்யணும்னு நினைக்கிறா விக்ரம், சின்ன பொண்ணா இருந்தா கூட எவ்வளவு பக்குவப்பட்டு பேசுறா தெரியுமா,
அவள் கிட்ட நான் என்ன சொல்லணும்…? மறுக்கணும்னு நினைச்சா கூட மனசு ஒத்துக்க மாட்டேங்குது…”என சொல்லும் போதே
அவள் குரல் உடைந்து போனது.
“அவளோட அன்பை நான் எப்படி மறுக்குறது…?”விக்ரம் மெதுவாக அவளது கையை சற்று இறுக்கமாக பிடித்தான்.
“அது தான் பிரச்சனை அனன்யா…”
அவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.
விக்ரம் அமைதியாக, ஆனால் தெளிவாக சொன்னான்.அன்புக்கு எல்லை இருக்கணும்,அந்த வார்த்தை அவளை சற்றே அதிரச்செய்தது.
விக்ரம் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“நம்ம வாழ்க்கை, நம்ம இருவருக்கும் மட்டும் சொந்தமானது.அதுல யாரையும் இழுக்கக்கூடாது…”என அவள் சொல்வதை அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“தாரணி உன் தங்கச்சி அவளுக்கு உன்ன மேல ரொம்ப அன்பு இருக்கு,அது எனக்கு புரியும்.ஆனா அதுக்காக அவள் வாழ்க்கையை இப்படி மாற்றிக்கணும்னு நான் ஒத்துக்க மாட்டேன்”
இதெல்லாம் உங்க அம்மா அப்பா க்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்கன்னு தெரியுமா? அவங்களுக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும் முடிவு எடுக்கிறது எவ்வளவு பெரிய தப்பு என அவன் சொல்ல
அனன்யா மெதுவாக கேட்டாள்நமக்கு குழந்தை…?” என சொல்லும் போதே அவள் குரல் மீண்டும் நடுங்கியது.
விக்ரம் அவள் கையை மெதுவாக தடவி,
“நமக்கு குழந்தை இல்லன்னா… அது நம்ம விதி,ஆனா அதுக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அது கூட உன் தங்கச்சி வாழ்க்கையை நம்ம கையால மாற்றக்கூடாது…”என சொல்லி
அவன் சற்று நெருங்கி அவளது கண்களை பார்த்தான்.நான் உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணேன் அனன்யா, உன்ன பொண்ணு பார்க்க வரும்போது ரொம்ப புடிச்சி அதுக்கப்புறம் உன்னைய காதலிச்சு கல்யாணம் பண்ணினேன்.இதை மத்தவங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ் இருக்கலாம் ஆனா எனக்கு காதல் கல்யாணம் தான் அந்த காதல் உன் மேல மட்டும் தான்..நீ இருக்கிறதாலே என் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் என்று அவன் சொல்ல
அந்த வார்த்தை கேட்டவுடன் அனன்யாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.நமக்கு குழந்தை இருந்தா சந்தோஷம்இல்லன்னா… அதுவும் பரவாயில்லை,ஆனா நம்ம வாழ்க்கையை நாம் தான் வாழணும்…”
“யாரோட தியாகத்துல இல்ல…”
அனன்யா அழுதபடி அவன் தோளில் சாய்ந்தாள்.
“நான் அவளுக்கு என்ன சொல்லுறது…?”
அவள் மனசு உடைந்து போயிடும் என்று சொல்ல விக்ரம் மெதுவாக சிரித்தான்.
அது உடைந்து போகட்டும் ஆனா அது தற்காலிகம்,அவள் வாழ்க்கை காப்பாத்தணும்… அது தான் முக்கியம் என அவன் மெதுவாக சொன்னான்.
நீ அவளிடம் சொல்லணும் இந்த முடிவு தவறு அவள் தன்னோட வாழ்க்கையை வாழணும் இதை நீ சொல்லி புரிய வைக்கணும்..
அந்த இரவு அனன்யா ஒரு முடிவு எடுத்தாள்.தங்கையின் அன்பை ஏற்றுக்கொள்வதா…அல்லது அவள் வாழ்க்கையை காப்பாற்றுவதா…
அவள் கண்ணீரை துடைத்தாள்.
“நான் அவளிடம் பேசுறேன்…” என்று மெதுவாக சொன்னாள்.
அந்த அறையில் கணவன் மனைவியின் அன்பு மட்டும் இல்லை,ஒரு வாழ்க்கையை காப்பாற்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மறுபக்கம் இதை நினைத்து பார்த்த தாரணி மனதில் மட்டும் ஒரு புயல் அடித்துக் கொண்டிருந்தது.
ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்தாள். வெளியில் மழை மெதுவாக விழுந்துக் கொண்டிருந்தது. அந்த மழை துளிகள் ஒவ்வொன்றும் அவளது கண்ணீரை போலவே இருந்தது.
அவள் கண்களை மூடியாள்.
தீரன் முகம்,அவன் சிரிப்பு,அவன் குரல்…
எல்லாம் தெளிவாக நினைவுக்கு வந்தது.
ஆனால் அந்த நினைவுகளுக்குள் இப்போது ஒரு புதிய உண்மை நுழைந்துவிட்டது.அவனுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு,
அந்த ஒரு எண்ணம் அவளது இதயத்தை நசுக்கியது.அவள் மெதுவாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள்.இனி அவன் எனக்கு இல்லை,அவன் வாழ்க்கை வேற பாதை போயிடுச்சு…என்று நினைக்கும் போது அவள் கண்ணீர் துடைக்க கூட மனம் இல்லாமல் அழுதாள்.
நான் தான் அவனை விட்டேன்,அதுக்காக இப்போ இவ்வளவு வலி உணரணுமா…?”
அவள் தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
அந்த நேரத்தில் மீண்டும் அவளது நினைவுகள் மெதுவாக கடந்த காலத்துக்குள் சென்று விட்டது.
கல்லூரி முடிந்த நாள்,அனைவரும் சிரித்தபடி, புகைப்படம் எடுத்தபடி இருந்தார்கள்.ஆனால் தாரணி மனதில் ஒரு கனமான முடிவு.
அவள் நேராக அக்கா வீட்டுக்கு சென்றாள்.அங்கே அவளது அக்கா,அனன்யா அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.முகத்தில் ஒரு வலி.மாமியார் சொன்ன வார்த்தைகள் இன்னும் அவளது மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“இவ்வளவு நாளாச்சு… இன்னும் குழந்தை இல்லை…”அந்த வீட்டின் சுமை அனன்யாவை தினமும் உடைத்துக் கொண்டே இருந்தது.அதை பார்த்த தாரணி மனம் உடைந்தது.
அந்த இரவு தாரணி மெதுவாக அனன்யா அருகில் உட்கார்ந்தாள்.
“அக்கா…”என அழைக்க,
அனன்யா சிரிக்க முயன்றாள்.
“என்னடி…?”
தாரணி கண்ணீர் அடக்கிக் கொண்டு கேட்டாள்.
“உனக்கு குழந்தை வேணுமா…?”என்று
அந்த கேள்வி கேட்டவுடன் அனன்யாவின் கண்கள் நனைந்தது.எனக்கு மட்டும் இல்ல… இந்த வீட்டுக்கு,என் வாழ்க்கை காப்பாத்த அது தான் வேணும் என்று சொல்லஅந்த வார்த்தை தாரணியின் மனதை கிழித்தது.அந்த இரவே
அவள் ஒரு முடிவு எடுத்தாள்.
நான் தான் என் அக்காவுக்கு குழந்தை கொடுக்கணும்,அடுத்த நாள் இதை
அவள் அந்த விஷயத்தை விக்ரம் கிட்ட சொன்னாள்.விக்ரம் அதிர்ச்சியாக,என்ன பேசுறே நீ தாரணி…?இது சாதாரண விஷயம் இல்லை என சொல்ல.
தாரணி அமைதியாக சொன்னாள்.
“எனக்கு தெரியும் மாமா,ஆனா அக்கா இப்படி தினமும் அழுறது நான் பார்க்க முடியல…”விக்ரம் சற்றே கோபமாகிவிட்டான்.
அதுக்காக நீ உன் வாழ்க்கையை இப்படி தியாகம் பண்ணணுமா…?உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, உனக்கு கல்யாணம் ஆகணும்… குடும்பம் இருக்கணும்…” என்று சொல்ல தாரணி மெதுவாக சிரித்தாள்.
எனக்கு அவ்வளவு அவசியமில்லை மாமா,அக்கா சந்தோஷமா இருந்தா போதும் என்று சொல்ல
விக்ரம் அதை கடுமையாக மறுத்தான்.
“இது நான் ஒத்துக்க மாட்டேன்,நீ இந்த முடிவை மாற்றிக்கோ…”ஆனால் தாரணி உறுதியுடன் சொன்னாள்.
இது நான் எடுத்த முடிவு,நான் அதை மாற்ற மாட்டேன்…”என்று
அந்த நேரத்தில் அவள் மனதில் இன்னொரு விஷயம் மட்டும் இருந்தது.
தீரன்.அவன் முகம் அவள் கண்முன் வந்தது.
அவன் காதல்…
ஆனால் விக்ரமிடம் தாரணி பேசியது எதுவுமே அவள் அக்காவிற்கு தெரியாது விக்ரம்க்கு தாரணி காதலும் கூட சேர்ந்து தெரியும் அதனால் தான் தன் குழந்தைக்காக அவர்கள் வாழ்க்கை கெடக்கூடாது என்று அவன் நினைத்தான்.. இதை தாரணி இடம் நேராக சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று தான் தன் மனைவியிடம் அவள் மூலமாக குழந்தை வேண்டாம் என்று விக்ரம் சொன்னான்
இதை எல்லாம் நினைத்து அவள் கண்கள் நனைந்தது.நான் அவனை இழக்கப் போறேன்,ஆனா இது தான் சரி…”அதன் பிறகு தான் அவள் தீரனை விட்டு விலக நினைக்க,
அவனை காயப்படுத்தி அவள் மனத்தையும் உடைத்து…
இப்போது அந்த எல்லா முடிவுகளின் விளைவு அவள் முன் நின்றது.
அவள் மெதுவாக கண்ணீருடன் சொன்னாள்.நான் செய்தது சரியா… தவறா…?”எனக்கு தெரியல…”
ஜன்னல் வெளியே மழை இன்னும் விழுந்துக் கொண்டிருந்தது.
அந்த மழை போலவே…தாரணியின் கண்ணீர் நிற்கவில்லை.ஆனால் அவளுக்குத் தெரியவில்லை,
அவள் எடுத்த அந்த முடிவு…
அவள் இழந்த அந்த காதல்…
இப்போது மீண்டும் அவள் வாழ்க்கைக்குள் திரும்பி வரப் போகிறது.
தாரணி சமையலறையில் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் ஒரு அமைதி இருந்தாலும் அது ஒரு முடிவின் அமைதி.
அவள் மனதில் ஏற்கனவே தீர்மானம் இருந்தது..
“நான் என்ன செய்தாலும்… அக்கா சந்தோஷமா இருக்கணும்…”
“தாரணி…” என்று அனன்யா மெதுவாக அழைத்தாள்.அவள் திரும்பிப் பார்த்து
“என்ன அக்கா…?”என கேட்க
அனன்யா சற்று தயங்கினாள்.
“என்னோட ரூமுக்கு வா… கொஞ்சம் பேசணும்…”அறைக்குள் இருவரும் மட்டும் இருக்க,கதவு மெதுவாக மூடப்பட்டது.சில நொடிகள் யாரும் பேசவில்லை.தாரணி சிரித்தபடி கேட்டாள்.“என்ன அக்கா… இவ்வளவு சீரியஸா இருக்கே…?”
அனன்யா அவளை பார்த்தாள்.
அந்த பார்வையில் அன்பும் வலியும்.
“நேத்து நீ சொன்ன விஷயம்…”
அவள் மெதுவாக ஆரம்பித்தாள்.
“அதை நான் யோசிச்சேன்…”
தாரணி கண்கள் ஒளிந்தது.
“அக்கா, நான் ரெடி நீ ஒத்துக்கிட்டா போதும் எனக்கு ஒரு பிரச்சனை இல்லை…”அதான் கல்லூரி முடிந்தது..அம்மா கிட்ட கூட சொல்ல வேண்டாம் என சொல்ல
அனன்யா உடனே தலையசைத்தாள்.
“இல்ல தாரணி…அது”.
அந்த ஒரு வார்த்தை அவளை நிறுத்தியது.“இது நடக்காது…” என்று சொல்ல
தாரணி அதிர்ச்சியாக பார்த்தாள்.
“ஏன் அக்கா…?”நீ தான் வேணும்னு சொன்னே…” என கேட்க
அனன்யா கண்ணீரை அடக்கிக் கொண்டு சொன்னாள்.
“ஆமா… எனக்கு குழந்தை வேணும்…”
ஆனா அதுக்காக நான் உன்னை இழக்க முடியாது,நீ என்னக்காக உன் வாழ்க்கையை தியாகம் பண்ணணும்னு நான் நினைக்கல,
“நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்…” என்று சொல்ல தாரணி மெதுவாக சிரித்தாள்.
என்ன அக்கா,இது தியாகமா…?”இல்ல,
நான் சந்தோஷமா தான் இதை செய்யறேன்…”
அனன்யா அவள் கையை பிடித்தாள்.
“இல்ல… இது சந்தோஷம் இல்ல…”
இது… தியாகம்…”என சொல்லும் போது
அவள் குரல் உடைந்து போனது.
நீ உன் காதலை கூட விட்டுட்டு இருக்கே தாரணி…”என சொல்ல அந்த வார்த்தை தாரணியை நிமிடமே உறைய வைத்தது.
“எனக்கு எல்லாம் தெரியும்…”
நீ தீரனை விட்டது ஏன் என்று அனன்யா சொல்ல தாரணி கண்களில் கண்ணீர் பெருகியது.
அவள் பேச முடியவில்லை.
அனன்யா அவளை கட்டிப்பிடித்தாள்.
“நீ என்னக்காக இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கே,ஆனா நான் அதை ஏற்றுக்க மாட்டேன்,நான் ஒரு நல்ல அக்காவா இருந்தா நான் உன்னை இந்த பாதையில் போக விட மாட்டேன்…”என. சொல்லவும் தாரணி அழுதாள்.
“அக்கா… தயவு செய்து நான் இதை செய்யணும்…”என சொல்ல
அனன்யா கடுமையாக சொன்னாள்.
“இல்ல!”
அந்த ஒரு வார்த்தை அறையில் முழங்கியது.
இந்த விஷயம் இங்கேயே முடிஞ்சு போகணும்,நீ உன் வாழ்க்கையை வாழணும்…” என்று சொல்லவும்
தாரணி மெதுவாக தலை குனிந்தாள்.
அவள் மனம் உடைந்து போனது.
அந்த நேரத்தில் கதவு அருகில் நின்று கொண்டிருந்தான் விக்ரம்.அவன் இதை எல்லாம் கேட்டு கொண்டு மெதுவாக உள்ளே வந்தான்.அனன்யா சரியா சொல்றா,நாங்க இருவரும் இதை ஒத்துக்க மாட்டோம்…” என சொல்ல
தாரணி அவனை பார்த்தாள்.
அவள் கண்களில் ஒரு கேள்வி.
விக்ரம் மெதுவாக சொன்னான்:
“நீ எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்,நீ சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம்…”
அந்த அறையில் மூன்று பேரின் மனமும் கனமாக இருந்தது.ஆனால்…
அவர்களுக்கு தெரியவில்லை…
இந்த முடிவு இங்கேயே முடிவாகாது.
ஏனென்றால் வாழ்க்கை அவர்கள் எடுத்த முடிவுகளை விட வலிமையானது.
