“எருமை மாடே எதுக்கு என்னைக் கடத்திட்டு வந்திருக்க? ஒழுங்கா என்னை வீட்டுல கொண்டு போய் விடு” என்று ஆங்காரமாக கத்தினாள்.
அவனோ “போகலாம் ஆரலி ஆனால் கல்யாணம் பண்ணிட்டு போகலாம். இங்கிருந்து நாம போகும்போது நீ என் மனைவியாக சம்மதம் சொல்லி கூட வரணும், ஊருக்கு போனதும் உடனே கல்யாணம்” என்று பிடிவாதமாகச் சொன்னான்.
“நீ வெயிட் பண்ணு நான் இதை சுத்தம் பண்ணிட்டு வரேன்” என முயலைச் சுத்தம் செய்யப் போனான்.
அவளால் அவன் சொன்னதைச் சுத்தமாக நம்ப முடியவில்லை. ‘கல்யாணமா?’ என்று அதிர்ச்சியில் நின்றாள்.
ருத்ரா பொறுமையாகச் சமையல் செய்துகொண்டிருக்க, அவளுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
இருந்தும் தாழ்ந்த குரலில், “ருத்ரா, விளையாடாத! நான் வீட்டுக்குப் போகணும். அம்மா, அப்பா என்னைத் தேடுவாங்க இந்நேரம் ரொம்பப் பயந்துருப்பாங்க ப்ளீஸ், உன் போனைக் குடு அட்லீஸ்ட் அவங்ககிட்ட பேசிட்டு தரேன்”
அவள் கெஞ்சலில் மனம் இளகினான் இல்லை.
“உனக்கு அவங்ககிட்ட போகணுமா?”
“ஆமாம்!” என்று வேகமாக தலையை ஆட்டினாள் நிலாஞ்சி.
“அப்போ நாளைக்கு உனக்கும் எனக்கும் இங்க கல்யாணம். அது முடிஞ்சதும் சென்னை போகலாம்” என அசால்ட்டாக சொன்னவனை,
“டேய் மெண்டல்… கல்யாணம், கல்யாணம்னு ஏன் சாகுற? நான் செத்தாலும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் உன்னால முடிஞ்சதை பண்ணு” என கத்திவிட்டு உள்ளே ஓடினாள்.
எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. சுற்றிலும் காடு! மிருகங்கள் இருக்க வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக தப்பிக்கமுடியுமா என்ற யோசனையில் உட்கார்ந்திருந்தவளின் முன்பு ருத்ராவின் போன் இருக்க, வேகமாக அதை எடுத்து தன் அப்பாவுக்குப் போன் செய்ய முயன்றாள்.
முயற்சிதான் இருந்தும் ஒரு பயனும் இல்லை.
“இங்க சிக்னல் கிடைக்காது மஃபின்! எல்லாம் சாட்டிலைட் கனெக்ஷன். நான் நினைச்சா மட்டும்தான் வெளி உலகத்தைக் காண்டாக்ட் பண்ண முடியும்.
ரொம்ப ட்ரை பண்ணாத வா, வந்து சாப்பிடு. உனக்குப் பிடிச்ச முயல்கறியும் சாதமும் பண்ணிருக்கேன்” என்றவனின் தலை முடியை கையாலே ஆய்ந்து எடுக்கும் அளவுக்குக் கோபம் வந்தது.
“நான் முயல்கறி சாப்பிட மாட்டேன்! எனக்கு வேண்டாம் ஆரலிக்குப் பிடிச்சிருந்தா அவளை வந்து சாப்பிட சொல்லு!” என்று முகம் சுளித்தாள் நிலா.
அவன் அழுத்தமான பார்வையைச் செலுத்த, அவளுக்கு பயம் வந்தாலும் அமைதியாக இருந்தாளே தவிர அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.
அவனே தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து அவளுக்கு முன் அமர்ந்தான்.
“இந்த இடம் உனக்கு ஞாபகம் இல்லையா மஃபின்? ஒருநாள் ராத்திரி யார் தொந்தரவும் இல்லாம நிம்மதியா இருந்தோம் மறந்துட்டியா?
உன் பாட்டி திட்டுனா இங்க வந்து தான் உட்கார்ந்திருப்ப. பின்னாடி அந்த சின்னக் குடிசை அப்படியே இருக்கு. அதை நான் எடுக்காம அப்படியே பக்கத்துல இந்த வீட்டைக் கட்டுனேன்” என்று கதை சொல்லியபடி அவளுக்கு உணவை ஊட்டிவிட்டான்.
‘எந்த ஜென்மத்துக் கதையைச் சொல்றானோ தெரியலையே! ஆண்டவா, உன்னை விழுந்து விழுந்து கும்பிடலைனாலும் எட்ட நின்னு மதிச்ச பாவத்துக்கு இவன்கிட்டருந்து காப்பாத்து! எனக்குத் தலைவலி வந்திடும் போல, இதே மாதிரி கதை சொல்றேனு இவன் கூடத் தனியா கோர்த்துவிட்டு என்னை மெண்டல் ஆக்கிடாத! பிளீஸ் ஹெல்ப் மீ!” என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
அவன் மீது மலையளவு கோபம் இருந்தாலும் மனதில் துளியளவு இரக்கமும் வந்தது.
‘ராஜாவைப் போல இருக்கிறான், ஒழுங்காக இருந்திருக்கக்கூடாதா?’
கடைசியில் முயல்கறி தின்பதைக்கூட மறந்துவிட்டாள். தேமே என்று எவ்வளவு நேரம் இருப்பது? வெளியே சுற்றி சுற்றிப் பார்த்தாலும் வேலியைத் தவிர ஒன்றும் தெரியவில்லை. இரவும் வந்துவிட்டது.
“ப்ளீஸ் ஒரு தடவை வீட்டுல பேசிக்கிறேன் ருத்ரா, என்னை நினைச்சுப் பயத்துல இருப்பாங்க!”
“முடியாது மஃபின். நீ என் கூடவே இருக்கணும் வேற யாரும் உனக்கு முக்கியமானவங்களா இருக்கக்கூடாது. அப்படி இருந்தா அவங்களை நீ இழக்குறதை தவிர உனக்கு வேற வழி இல்ல”
அவனுடைய பிடிவாதமான அகங்கார பேச்சில் நிலாவுக்குக் கோபம் ஏறிக்கொண்டே போனது.
“ஃபைன் ருத்ரா! நான் இங்கிருந்து போகணும் அது உயிரோடவா, இல்ல பொணமாவானு நீயே முடிவு பண்ணிக்கோ!” என்று ஆங்காரமாகக் கத்திய நிலா, அவன் அசந்த நேரம் பார்த்து எடுத்து வைத்திருந்த காய் நறுக்கும் சிறு கத்தியைத் தன் கழுத்தில் வைத்தாள்.
அவன் அசரவே இல்லை! அமைதியாக அவளைப் பார்த்தான்.
“உனக்கு யார் மேலயும் கொஞ்சம்கூட அக்கறை இல்லை. ஆனால் எனக்கு அம்மா, அப்பா, தங்கச்சினு குடும்பம் இருக்கு. என்னை விட்டுடு”
“ம்ஹூம்!” என்று காதைக் குடைந்துகொண்டிருந்தான் ருத்ரா.
“டேய் சைக்கோ நாயே! நான் செத்துருவேன்னு சொல்றேன். உனக்கென்னனு உட்கார்ந்திருக்க”
“இன்னும் எவ்வளவு நேரம் நிக்கப்போற? சீக்கிரம் கட் பண்ணு எனக்கு நிறைய வேலை இருக்கு!” என்றானே பார்க்கலாம்.
அழுகையில் துடித்த இதழ்களோடு கழுத்தில் வைத்திருந்த கத்தியை இன்னும் அழுத்தமாக நெருக்கியவள், கண்களை மூடிக்கொண்டாள். இமைக்கும் நொடியில் அவளை நெருங்கியவன் கத்தியை பிடிங்கி தூக்கி எறிய அதில் அவன் கையில்தான் காயமாகிவிட்டது.
“ஐயோ!” என்று பதறியவளை ஒற்றைக் கையால் தூக்கிய ருத்ரா, வெளியே போய் பொத்தெனப் போட்டுவிட்டு உள்ளே வந்து கதவைச் சாற்றிக்கொண்டான்.
இன்னும் ஒருநொடி அவளோடு இருந்தால்கூட நிலாவைக் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயத்தில் உள்ளே வந்துவிட்டான்.
வெளியே தெரிந்த மையிருட்டில் நிலாவுக்குப் பயத்தில் வார்த்தையே வரவில்லை.
“ருத்ரா கதவைத் திற! எனக்குப் பயமா இருக்கு…”
தன் காயத்தைச் சுத்தம் செய்தவனோ, அவள் சத்தம் கேட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
வீட்டின் உள்ளே இருந்த கதகதப்பு வெளியே இல்லை. எலும்பை உறைய வைக்கும் குளிர்! கால்களைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்துவிட்டாள் நிலா.
“கதவைத் திற… ருத்ரா… சாரி, இனி இப்படிப் பண்ண மாட்டேன்… பயமா இருக்குடா… குளிருது…”
என கத்திக் கத்தி சோர்ந்துபோனவள், அதன்பின் வாயைத் திறக்கவில்லை. தன்னைச் சுற்றியிருந்த இருட்டும், இடையிடையே கேட்ட காட்டு மிருகங்களின் சத்தமும், குளிரும் அவளை அமைதியாக்கிவிட்டன. கண்கள் விடாமல் நீரைச் சொரிந்திட, வாயோ, “ஐ ஹேட் யூ ருத்ரா!” என்று வெறுப்போடு உச்சரித்தது.
அவள் படும் அவஸ்தைகளை கேமராவில் பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தில் இரக்கம் துளியும் இல்லை! மனிதத்தன்மையை இழந்து நிற்கும் அளவுக்கா அவன் இதயம் இறுகிப்போயிருக்கிறது!
அந்த இதயத்தில் நிச்சயம் காதல் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிடலாம்.
மணிக்கணக்காக உறையும் குளிரில் அமர்ந்திருந்தவள், அப்படியே மயங்கிச் சரிந்தாள். அவள் தலை தரையைத் தொடும் முன் ருத்ரா கைகளில் அவளை அள்ளிக்கொண்டான்.
மகளைப் பற்றிய செய்தி கிடைக்காமல் சோமசுந்தரம் தவித்துப்போனார். வீட்டுக்குப் போகிறோம் என்றாலும், நடராஜன் குடும்பத்தினர் விடமாட்டோம் என்கிறார்கள்!
‘பேசிப் பேசியே இரண்டு பொண்ணுங்களையும் ஆட்டையைப் போட்டுருவாங்க போல!
அதுவும் அந்தப் பாட்டி… யாராவது அவங்களை நிறுத்தச் சொல்லுங்கடா!’ என்று சொல்லும் அளவுக்கு அபிராமி ஓவராகப் போய்க்கொண்டிருந்தார்.
சாம்பவி அதற்குமேல் பார்வதியை அண்ணி என்று முடிவே செய்துவிட்டார். திகள்விழி முகத்தைத் திருப்பினாலும், அவளையும் விடாமல் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.
“சார் நைட் ஆகிடுச்சு. நாங்க கிளம்புறோம்! நிலா பத்தி தகவல் வந்ததும் சொல்லுங்க நாங்க வரோம்!” என்று மனைவி, மகளைப் பார்த்தார் சோமசுந்தரம்.
அவர்களும் விட்டால் போதுமென அவரிடம் வர, “இருங்க தம்பி! நம்ம வீடு இங்க இருக்கும்போது உங்களுக்கு எதுக்கு சங்கடம்?” என்ற நடராஜன், வேலையாட்களிடம் அவர்களுக்கு அறையை காட்டச் சொன்னார்.
‘பெரிய மனுஷன்னு நினைச்சா, இவர்தான் பெரிய லூசா இருப்பாரு போல!’ என்று நொந்துபோனதுதான் மிச்சம்.
கணவன், மனைவி இருவரும் அறைக்குள் போய்விட, திகள் நைசாக ஓடிடலாமா என்று சுற்றிலும் பார்த்தபடி வெளியே வந்தாள்.
திடீரெனத் தன் கால்கள் அந்தரத்தில் மிதக்க, “ஹேய்!” என்று கத்தினாள்.
அவளின் இடையோடு கைவிட்டுத் தூக்கிய பத்ரன், “எங்க எஸ்கேப் ஆகப் பார்க்குற? உள்ள போகலாம்” என்று தூக்கிக்கொண்டு போனான்.
“விடு…விடுடா… நான் வரல!”
“மண்டை மேல அழுத்திக் கொட்டுனேன் இன்னும் குட்டையாகிடுவ குட்டச்சி! ‘டா’ போட்டு பேசாதனு சொல்லிருக்கேன்ல”
“அதான் நீ என் லவ்வர் இல்லையே! என்னைக் காதலிச்சது தப்புனு சொல்லிட்டு போய்ட்டியே, அதோட நின்னுக்கோ! என் புருஷனை மட்டும் மரியாதையாப் பேசினா போதும், முதல்ல என்னை இறக்கிவிடு!” என்று துள்ளினாள் திகழ்.
“திமிருடி உனக்கு நிலா இருக்கிற இடத்தை நெருங்கிட்டோம். அதைச் சொல்லலாம்னு வந்தேன் நீ திமிரா பேசுற, சரி விடு! நாளைக்குப் பார்த்துக்குவோம்” என்று கேஷூவலாக சொன்னான் பத்ரன்.
“ஆங் அக்கா எங்க இருக்கா? ப்ளீஸ், சொல்லுங்க”
“என்னைவிட்டு போகமாட்டேன்னு சொல்லு. நான் நிலா பத்தி இன்பர்மேஷன் சொல்றேன்”
“முடியாது! நீ சரியான ஏமாத்துக்காரன். உன் உண்மையை நீயே வச்சுக்கோ நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்று ஓடியவளை மீண்டும் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான்.
“ஐயோ என்னை விடுடா! சும்மா சும்மா தூக்காத!” என்று பாவமாகச் சொன்னவளின் மீது காலையில் இருந்த கோபம்கூட மறந்துபோனது.
“உன்னை தூக்கிட்டு நடக்குறது ஈஸியா இருக்கு குட்டச்சி! சாரிடி, மார்னிங் கோவத்துல பேசிட்டேன் நீ உண்மை தெரியாம பேசுன நான் டென்ஷன் ஆகிட்டேன்” என அவளிடம் மன்னிப்புக்கேட்டான்.
“உன் சாரியை நீயே வச்சுக்க” என்றவள், “இங்க பாரு!” என்று தன் தாவணியை விலக்கி இடை பகுதியைக் காட்டினாள். காலையில் அவன் தள்ளிவிட்டுக் கீழே விழுந்ததில் காயமாகியிருந்தது.
“என்னடி ஆச்சு?” என்று பதறிப்போய்க் கேட்டான்.
“உன்னாலதான்! காலைல தள்ளிவிட்டுட்டுப் போயிட்ட, யார்கிட்டையும் சொல்ல முடியாம மருந்துகூடப் போட முடியல, வலிக்குது”
“சாரிடி! கோவத்துல… வெயிட் பண்ணு நான் மருந்து எடுத்துட்டு வரேன்”
“எனக்கு மருந்து வேண்டாம் அக்காவை மட்டும் அனுப்பிடுங்களேன். அப்பா ரொம்பக் கவலையா இருக்காரு ப்ளீஸ்! சத்தியமா இனி உங்க முன்னாடி வரமாட்டோம்” என்று கெஞ்சுதலாகக் கேட்டவளை அணைத்துக்கொண்டான் பத்ரன்.
“கேரளா பார்டர்ல இருக்குற எங்க எஸ்டேட் பக்கம்தான் நிலா இருக்க வாய்ப்பிருக்கு! ருத்ராவைக் கடைசியா அங்க பார்த்ததா எனக்கு இன்பர்மேஷன் வந்தது. நான் அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன் சீக்கிரம் நிலாவை உங்ககிட்ட ஒப்படைச்சுடுவேன். என்னை நம்பு குட்டச்சி!”
“ம்ம்…” எனத் தலையை ஆட்டினாள் திகள்விழி.
“நிலாவுக்கும் என் அண்ணனுக்கும் இடையில் என்ன நடந்தாலும் நம்ம வாழ்க்கையை அது பாதிக்கக்கூடாது. நீ என்னோட மனைவி புரியுதா?” என்றவனின் பேச்சில் அமைதியாக நின்றாள்.
“At any cost நீ எனக்கு வேணும் விழி! இதை மிரட்டலாகக்கூட எடுத்துக்கோ” என்று இரும்புக்குரலில் சொன்னவன் மனதே இல்லாமல் அவளைவிட்டு விலக, இப்போது அவள் பத்ரனை அணைத்துக்கொண்டாள்.
“நானும் வரேன் மாமா, சேர்ந்து போகலாம்…”
“வேண்டாம் விழி, நீ இங்கேயே இரு!”
“இல்லை நான் வருவேன்!” என்று விழி பிடிவாதமாகக் குரல் கொடுக்க, “நாங்களும் வருவோம்!” என்று அவன் வீட்டு ஆட்கள் சத்தமும் பின்னால் கேட்டது.
‘சுத்தம்!’ என்று முணங்கியபடி திரும்பினான்.
“அவன் எக்ஸாக்டா எங்க இருக்கான்னு தெரியல தாத்தா! எஸ்டேட் போய்தான் தேடணும் அது ஹில் ஃபாரஸ்ட் ஏரியா, உங்களை கூட்டிட்டுப் போறது கஷ்டம்”
“So what? கிளம்பு பத்ரா! நாங்க எஸ்டேட்ல இருந்துக்குறோம். நீங்க போய்த் தேடுங்க!” என்று முடித்துவிட்டார் நடராஜன்.
“எனக்கு ஸ்வெட்டர் வேணும், குளிர் தாங்க முடியாது!” என்று சொன்ன பாட்டியை அனைவரும் திரும்பிப் பார்க்க, “எனக்கும் ஸ்வெட்டர் வேணும் அபி! மஃப்ளர்கூட!” என்ற தன் வருங்கால மனைவியைக் கண்டு பத்ரனுக்குச் சிரிப்புதான் வந்தது.
‘ஆகமொத்தம் பாட்டி, அம்மா, பொண்டாட்டி மூணும் ஒரே கேஸ்னு தெரிஞ்சுபோச்சு. பிள்ளையாவது அறிவா பொறக்குதானு பார்ப்போம்!’ என்று பெருமூச்சுவிட்டுக் கிளம்பினான்.
‘போற வழியில அந்த பேனர்ஜியைத் தூக்கிப் போட்டுட்டுப் போவோம்!’ என்று சரபனை அள்ளிக் காரில் போட, ‘நான் இங்க இல்ல!’ என்ற விமலையும் தூக்கி கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வண்டி ஏர்போர்ட்டுக்குக் கிளம்பியது.
‘நீங்க குடும்பமே இல்லடா!’ என ஆயிரமாவது முறையாக உள்ளே திட்டியபடி வந்தான் சரபன்.
கோயம்புத்தூர் வந்து இறங்கியதும், இரண்டு மணி நேரக் கார் பயணம். அப்பா பக்கத்தில் ஏறப்போன விழியின் ஜடையை பிடித்து இழுத்துத் தன் அருகில் அமரவைத்தான் பத்ரன்.
“ஸ்ஸ்ஆஆ… வலிக்குது மாமா! வாயால கூப்பிட வேண்டியதுதானே!
எனக்கு மலை மேல ஏறுனா வாந்தி வரும். அப்பா என் தலையைப் பிடிச்சுப்பாரு, காது பின்னாடி தேய்ச்சுக் கொடுப்பாரு. இங்க உட்கார்ந்தா உங்க மேல வாந்தி எடுப்பேன் பரவாயில்லையா?”
“நீ வாந்தி எடுக்கிறதுனாலும் இங்கேயே உட்கார்ந்து எடு!” என்று சிடுசிடுத்தவனை முறைத்தவளோ முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவள் தோள்களில் கைபோட்டுத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான் பத்ரன்.
இருவரின் காதல் நாடகத்தையும் அவளது அம்மா, அப்பா அமைதியாகக் கவனித்துக்கொண்டுதான் வந்தனர்.
நிலா நான்கு கம்பளிகளுக்குள் சுகமாக தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் கண் விழித்தால் அவனை அக்கக்காகப் பிய்த்து எடுத்துவிடுவாள்! அமைதியாக உறங்கும் அவளின் அருகில் படுத்திருந்தான் ருத்ரா.
அவன் நிம்மதியாகக் கண்களை மூடிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவன் புரியாத புதிர்தான்!
தன் போனில் வந்திருந்த மெசேஜ்களைப் படித்தவனின் முகமோ இறுகிப்போனது. அவன் வீட்டு ஆட்கள் எஸ்டேட்டுக்கு வந்துவிட்டார்கள்! ஆரலியைத் தன்னைவிட்டுப் பிரித்துவிடுவார்கள் என்ற எண்ணமே அவனை நிதானம் இழக்கச் செய்தது. தூக்கத்தில் இருந்தவளை இறுக்கமாக அணைத்தான்.
“ருத்ரா குளிருது…” என்றவளின் முணங்கலில் இன்னும் அவளைத் தன்னுள் புதைத்துக்கொண்டான்.
எஸ்டேட்டுக்கு வந்து இறங்கியவர்களை அங்கு வேலை செய்பவர்கள் வரவேற்றனர். மிகவும் குளிராக இருக்க, தன் ஷாலை எடுத்து பாட்டிக்குப் போர்த்திவிட்டாள் திகள்.
“அபி ரொம்பக் குளிருது. உடம்பு சரியில்லாமப் போயிடப்போகுது! சீக்கிரம் உள்ளே போகலாம்!” என்று அபிராமியோடு உள்ளே போனாள்.
வயதானவர் அல்லவா! குளிர் கஷ்டமாக இருந்தாலும் சிரித்தபடி வந்தார்.
“நீங்க ஆறு பேரும் ரெஸ்ட் எடுங்க, நாங்க ருத்ரா எங்க இருக்கான்னு தேடுறோம். குட்டச்சி நீ பாட்டி கூட இரு!” என்றான்.
அவளோ அனைவருக்கும் முன்னால் சுடிதாரை மாட்டிக்கொண்டு தயாராக இருந்தாள்.
“இந்தாம்மா பாப்பா நீங்க போகத் தயாரா உட்கார்ந்திருக்குறது காட்டுக்கு! பிக்னிக் போற மாதிரி ஜாலியா ரெடியாகியிருக்கிங்க… இது ட்ரெக்கிங் போற ஏரியா, கவர்மென்ட் பர்மிஷனோடதான் போகணும். டேஞ்சர்! வீட்டுல இரு” என்று உறுதியாக மறுத்தான் சரபன்.
“நானும் வருவேன் அண்ணா, கூட்டிட்டுப் போங்க!” என்று பிடிவாதம் பிடித்துக் காரில் ஏறிக்கொண்டாள் திகள்விழி.
“ஏன்டா, உன் அண்ணனுக்கு மறைஞ்சு வாழ வேற இடமா கிடைக்கல! இந்தச் சம தரை இடமெல்லாம் காதலுக்கு அடையாளமா இருக்கக்கூடாதா?” என்று மூச்சுவாங்க மலையை ஏறிய சரபன் ருத்ராவை திட்டியபடி வந்தான்.
“சார் எனக்கு மயக்கம் வருது!” என்ற விமலிடம், “அப்படியா? அங்க கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு, நாங்க போறோம்.
நாய், நரி வந்து தூக்கிட்டுப் போனா உன் பாடு!” என்றதும் பயத்தில் வேகமாக மேலே ஏறினான் விமல்.
விழி சிரமமே இல்லாமல் லகுவாக ஏறினாள்.
“குட்டச்சி உனக்குப் பழக்கமான இடம்போல ஏறுற எப்படி?”
“நான் என்.சி.சி. ஸ்டூடென்ட் மாமா! அடிக்கடி கேம்ப் வந்து பழக்கம் இருக்கு. உங்களுக்குத்தான் கஷ்டம்” என்று தன் கைகளை அவனை நோக்கி நீட்டினாள்.
“இன்னும் என்னென்ன ரகசியங்கள் இந்த அழகிக்குள்ள இருக்கு!” என்று அவளை அணைத்தவனைக் கண்டு விமல் கண்களை மூடிக்கொண்டான்.
‘கருமம், கருமம், காதல் பண்றாங்க!’ என திட்டிவிட்டு சரபன் முன்னால் போய்விட்டான்.
“யோவ் ஆட்கள் இருக்கும்போது கட்டிப்பிடிக்கிறது என்ன பழக்கம்?” என்று தன் கண்களை உருட்டி முறைத்தாள் திகள்விழி.
முன்னால் போகும் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் இதழ்களில் அவசரமாக முத்தமிட்டவன், “இதுக்கும் சேர்த்து திட்டிக்கோடி! நேத்துலருந்து ரொம்ப டெம்ப்ட் பண்ற, தனியா மீட் பண்ண வாய்ப்பு கிடைக்கல உன் அக்கா வந்ததும் என்ன மூட்ல இருப்பியோ தெரியல அதான்…” என்று கண்ணடித்தான்.
அவனுடைய பனியனை பிடித்துத் தன்னை நோக்கி இழுத்த விழி, “நான் கோவமா கண்டதை பேசினாலும், ‘போடி’னு விட்டுடக்கூடாது.
ஒருவேளை நான் உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பண்ணினாலும், ‘குட்டச்சி’னு தேடிவரணுமே தவிர, ‘ச்சீ போடி’னு சொல்லக்கூடாது.
அப்படி மட்டும் சொன்னிங்க? கடிச்சு வச்சுருவேன்” என்றவள், இப்போது அழுத்தமாக அவன் இதழில் முத்தமிட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
‘நீ மலை, கடல்னு எந்தப் பக்கம் தேடுனாலும் நான் சிக்கமாட்டேன்!’ என ருத்ரா, ஆரலியின் அணைப்பில் சுகமான நித்திரையில் இருந்தான்.
“பன்னிப்பயலே எந்திரிடா! நேத்து சாகட்டும்னுதானே வெளிய விட்ட, இப்போ மட்டும் ஏன் உள்ளே கொண்டுவந்து படுக்க வச்சிருக்க?”
அவனை தன்னைவிட்டு தள்ளிவிட்டாள் நிலா.
“அதிகம் பேசினா திரும்ப வெளியே தூக்கிப்போட்டுருவேன்!” என்றவனின் அரட்டலில் வாயை மூடிக்கொண்டாள்.
அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்திருந்தவன், அவளுக்கே உண்டான வாசத்தை ஆழமாகச் சுவாசித்தான்.
“எப்பவும் உன்மேலருந்து வர இந்தப் பச்சைப்புல் வாசம் போகவே செய்யாதாடி! என்னால கண்ட்ரோல் பண்ண முடியல மஃபின்!” என்றவன், இரத்தம் குடிக்கும் காட்டேரியாய் அவள் கழுத்தைக் கடித்து சுவைத்தான்.
அவன் உணர்வுகள் மழைக்காற்று என்றால், பெண்ணவளின் உணர்வுகள் சூறாவளியன்றோ!
அவனை அணைத்திட எழுந்த கைகளைப் பெரும்பாடுபட்டு அடக்கினாள்.
“தள்ளு ருத்ரா! தயவுசெஞ்சு இதுக்கு மேல முன்னேறாத, என்னால ஏத்துக்க முடியாது” என்று கெஞ்சினாள்.
கண்கள் மூடியிருந்தாலும், அவன் மூச்சுக்காற்று படும் இடங்கள் நெருப்பாய் அவளைச் சுட்டன.
“உன் அப்பாகிட்ட போகணுமா?” என்ற அவனுடைய ஒற்றைக் கேள்வியில் மோகம் அறுபட்டுப்போனது.
“ஆமாம் ப்ளீஸ்!” என்றாள்.
“ குளிச்சு ரெடியாகு, அவங்களைப் பார்க்கப் போகலாம்!” என்றவனை நம்பாத பார்வை பார்த்த நிலா, “சென்னை போறோமா?” என்று கேட்டாள்.
“இல்லை… உன் ஃபேமிலி உன்னைத் தேடி என் ஃபேமிலி கூட சேர்ந்து எஸ்டேட்டுக்கு வந்திருக்காங்க. கிளம்பு போகலாம் பட், ஒன் கண்டிஷன்!”
அவளை ஆழமாகப் பார்த்தபடி வார்த்தைகளை தொடர்ந்தான்.
“ நீ அப்பா, அம்மானு உறவு கொண்டாடுறவங்க கிட்ட கடைசியா சொல்லிடு.
என் கூட நீ இருக்கப்போறனு சொல்லிட்டு வரணும்! அதுக்காகத்தான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். நம்ம தனிமையை யாரும் டிஸ்டர்ப் பண்றது எனக்குப் பிடிக்கல”
அவன் அகங்கார பேச்சை பார்க்கப் பார்க்க வெறுப்புதான் வந்தது. என்ன மனிதன் இவன்! பெற்றவர்களை ஒதுக்கிவிட்டு வரச் சொல்கிறான்.
