நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன.
வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சி செய்தனர். வீட்டில் மீண்டும் பழைய பேச்சுகள் கேட்க ஆரம்பித்திருந்தாலும், நிலாஞ்சியின் மனம் மட்டும் எதிலும் நிலைக்கவில்லை.
ருத்ரா அருகில் இருந்தபோது கிடைத்த ஒருவித நிம்மதி இப்போது இல்லை… முழுக்க தூக்கம் தொலைந்த விழிகளோடு இருந்தாள்.
இப்படியே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் தன்னுடைய மனநிலை இன்னும் மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து, ஒருநாள் காலையில்
கையில் ஒரு பைல், தோளில் ஹேண்ட் பேக் என வேலைக்கு கிளம்புவது போல தயாராக நின்றிருந்தாள்.
அவளை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.
“எங்க கிளம்பிட்ட நிலாமா?” என்று கேட்டார் சோமசுந்தரம்.
“சும்மா இருந்தா மனசுல பல விஷயங்கள் ஓடுது அப்பா. அதான் வேலைக்குப் போகலாம்னு டிசைட் பண்ணேன். ஒரு புது கம்பெனில இன்னைக்கு இன்டர்வியூ இருக்கு, அதுக்குத்தான் போறேன்”
“நம்ம ஹாஸ்பிடல் எத்தனை இருக்கு நிலா! உனக்குப் பிடிச்ச பிராஞ்சுக்கு போயேன். முதல்ல தான் அந்த கம்பெனிக்கு போன இனி அட்மினிஸ்ட்ரேஷன் பொறுப்பை எடுத்துக்கோ! இனி வெளியே போய் வேலை செய்ய வேண்டாம்” என பார்வதி கண்டிப்போடு சொன்னார்.
நிலா மெதுவாக அவரருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தாள், “எனக்கு நீங்க ஏற்கனவே நிறைய பண்ணிட்டீங்க அம்மா. இந்தக் குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு எவ்வளவு பாசம் கொடுத்திருக்கிங்க, இந்த பாசம் மட்டும் எனக்குக் கடைசிவரை வேணும். வேற எதுவும் வேண்டாம், நான் வேலைக்கு போறேன் ப்ளீஸ், மறுக்காதிங்க”
அவள் குரலில் இருந்த வலியை உணர்ந்ஊ பார்வதிக்கு, நிலாவின் முடிவை மறுக்க முடியவில்லை.
“சரிம்மா உனக்கு எது சந்தோஷமோ அதைச் செய். ஆனா எப்பவும் நாங்க உன் கூடவே இருப்போம் அதை மறந்துடாத!”
என்று அவளுடைய தலையை வருடினார்.
நிலா அவரை அணைத்துக்கொண்டாள்.
ஓரமாக நின்றிருந்த திகள்விழிக்கு மட்டும் அக்கா வேலைக்குச் செல்வதில் விருப்பமில்லை, இருந்தாலும் நிலாவின் விருப்பத்துக்கு எதிராக எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டாள்.
ருத்ரா சகவாசமே வேண்டாம் என A என்ற எழுத்தே வராத கம்பெனியாக பார்த்து செலக்ட் பண்ணி இன்டெர்வியூ வந்து அமர்ந்திருந்தாள்.
‘ஆகாங்! அவ்வளவு விவரமான ஆளா நீ’ என்று கடவுள் கவுன்டர் குடுத்தது அவளுக்கு கேட்கவில்லை பாவம்.
“மிஸ் நிலாஞ்சி!” என அவளுடைய பெயர் அழைக்கப்பட்டதும் பைலை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு, அங்கே அமர்ந்திருந்தவனை கடுப்பாகிவிட்டாள்.
கையில் குச்சி மிட்டாயோடு அவள் ஆருயிர் காதலன் அல்லவா! நக்கல் புன்னகையுடன் அவளை வரவேற்றான்.
‘ச்சே! இந்த பைத்தியக்காரனே எங்க போனாலும் துரத்திக்கிட்டே வரான்” என்று மனதிற்குள் புலம்பியவள் சலிப்போடு வெளியேறப் போனாள்.
“ஹலோ மிஸஸ் ஆரலி இன்டர்வியூவுக்கு வந்துட்டு அட்டென்ட் பண்ணாம ஓடுனா எப்படி?”
என்ற ருத்ராவின் நக்கல் பேச்சில் நிலாவின் கோபம் இன்னும் அதிகமானது. வேகமாக திரும்பி அவனை முறைத்தவள்
“பைத்தியக்காரனை இன்டர்வியூ எடுக்குற HR சீட்ல பார்த்ததுக்கப்புறம், இங்க வேலைக்கு வர நான் பைத்தியக்காரி இல்லை. இந்த கம்பெனி பத்தி தனியா சொல்ல எதுவும் இல்ல சோ, ஐ டோன்ட் வான்ட் திஸ் ஜாப்!”
என்று வார்த்தைகளை அழுத்தமாக உதிர்த்துவிட்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
“என் ஜாயின் கம்பெனிக்கு உன்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்துட்ட! மரியாதையா வெளியே போடா” என்று கத்தியபடி பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்தான் ஆகாஷ்.
அவனை பார்த்த சிரித்த ருத்ரா, “சரி விடுடா. அட்லீஸ்ட் உன் கம்பெனிக்கு பைத்தியக்கார ஆபீஸ்னு நேமாவது கிடைச்சதே! நான் கிளம்புறேன் இல்லனா மஃபின் பறந்துடுவா!” என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி ஓடினான்.
அவன் எதிர்பார்த்தபடியே நிலா கோபத்தோடு நடந்து சென்றுகொண்டிருந்தாள்.
அவளுடைய வேகமான நடையைக் கண்டவன், நான்கே எட்டில் அவளை நெருங்கி நிலா சுதாரிப்பதற்குள் இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான்.
“ஏய்! விடுடா ராஸ்கல்! இல்லை கத்தி ஆட்களைக் கூப்பிடுவேன்!”
“ராஸ்கல் இல்ல மஃபின்… ஏகரான்னு சொல்லு!” என்றவன் முகத்தில் இருந்த குறும்பான சிரிப்பை கண்டு, நிலாவோ அவனை தீயாக முறைத்தாள்.
“மயிரு சொல்றேன்! ஆரலி மட்டும் சாகல, அவளோட ஏகராவும் செத்துப்போயிட்டான். இரண்டு பேரும் திரும்ப வரமாட்டாங்க ருத்ரா!”
அவள் குரலில் இருந்த கடுமை அவனுடைய சிரிப்பை ஒரு நொடி மறையச் செய்தது.
“சின்ன பையன் மாதிரி பிஹேவ் பண்ணாம என்னை இறக்கி விடு ருத்ரா, ஆல்ரெடி நான் டயர்டா இருக்கேன்”
என்று மெதுவான குரலில் சொன்னாள்.
“என்ன பண்ணுது மஃபின்? கண்ணு சிவந்து இருக்கு, நைட் சரியா தூங்கலையா?” என்று கேட்டான்.
அவன் அக்கறையான பேச்சு நிலாவின் கோபத்தை அதிகப்படுத்தியது.
“நடிக்காத ருத்ரா! இவ்வளவு நாள் உண்மையை மறைக்க உன் பாசமான நடிப்பை பார்த்து பல்லை கடிச்சிட்டு இருந்தேன், இனிமேல் அதுக்கு அவசியம் இல்லை. என்னை உதாசீனப்படுத்திப் பேசு. அதுதானே உன் பழக்கம், எதுக்கு புதுசா இந்த அக்கறை எல்லாம்!” என்றவள் வார்த்தையில் ருத்ரா இதயத்தில் சுருக்கென வலி.
உண்மையை தானே சொல்கிறாள் காரணமே இல்லாமல் வார்த்தைகளால் அவளை கொன்று போட்டவன் அல்லவா அவன். அவளுடைய அன்பை எத்தனை முறை உதாசீனப்படுத்தியிருப்பான்.
இன்று அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காரணம் அவன்தானே! அதை உணர்ந்தாலும் அவளிடமிருந்து விலகிவிடும் மனநிலை ருத்ராவுக்கு இல்லை.
முகம் இறுக, அவளைத் தூக்கியிருந்த கைகளில் அழுத்தத்தை கூட்டினான்.
“என்னடி கொஞ்சம் இறங்கி பேசுனா வாய் அதிகமா பேசுது? நான் ஏகதச ருத்ரா! என்னை மறந்து, கடந்து போக நினைக்கிறது உன்னோட முட்டாள்தனம்.
நீ என்னோட ஆரலி! என் பொருள்! என் கூடத்தான் இருக்கணும். வேற ஆப்ஷனை நான் உனக்கு தரப்போறதில்லை, நம்ம வீட்டுக்குப் போகலாம்”
அவன் குரலில் இருந்த பிடிவாதம் கண்டு அவனை முறைத்தாள்.
“நான் வரமாட்டேன்!”
“அங்கே போய் பொறுமையா பேசிக்கலாம்”
“ருத்ரா என்னை கோவப்படுத்தாத!” என்றவளுடைய கோபத்தை கண்டு சிறிதும் ருத்ரா அசரவில்லை.
அவளைத் தூக்கிக்கொண்டே காரை நோக்கி நடந்தான். அவனுடைய இந்த பிடிவாதம் நிலாவை இன்னும் ஆத்திரப்படுத்தியது.
“ஏன் பெட்ல உன் தேவைகளைப் பூர்த்தி பண்ண ஆள் கிடைக்கலையா? இல்ல இலவசமா என்னைத்தவிர வேற எவளும் வரலையா?”
ருத்ரா அவளை அழுத்தமாக பார்த்தான்.
“பணம் கொடுக்க முடியாமலோ, ஆள் கிடைக்காமலோ உன்கிட்ட வரல ஆரலி. வார்த்தைகள் முக்கியம்! நான் நாய் கிடையாது, கிடைக்கிற இடத்துல வாய் வைக்க!”
“ஓநாய் என்னோட மனைவியைத் தவிர யாரையும் பக்கத்துல சேர்க்க விரும்பாத பைத்தியக்கார ஓநாய்” என்று கர்ஜித்தான்.
அந்த அழுத்தமான குரலில் நிலாவின் விரல்கள் வியர்க்க ஆரம்பித்தன.
“எனக்குப் பிடிக்கல ருத்ரா! ஏன் என்னை ஃபோர்ஸ் பண்ற? நான் பெங்களூரு போகப்போறேன். உனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவன் முகத்தை பார்க்காமல் சொன்னாள்.
காரின் பின்பக்கக் கதவைத் திறந்து அவளை மெதுவாக இருக்கையில் அமர வைத்துவிட்டு தானும் அருகில் ஏறிக்கொண்டான்.
“பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்றது ரொம்ப கஷ்டம். பேசாம நீயே எனக்குப் பொண்ணு பாரு”
“என்ன?”
“எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது எல்லாம் உனக்குத்தானே தெரியும். நீ பார்க்கிற பொண்ணு எனக்கு சரியா இருந்தா செலக்ட் பண்ணிடு!” என்று சாதாரணமாகச் சொன்னவன், அவளுடைய காதருகே குனிந்து,
“அப்புறம் நைட் என்னோட தேவைகளோட நீளம் உன்னைவிட யாருக்கும் தெரியாது. சோ அதையும்…”
என்று முடிப்பதற்குள் அவனுடைய நெஞ்சில் அடிக்க ஆரம்பித்தாள் நிலா.
“யூ இடியட்! அசிங்கமா பேசாத!” என அவளுடைய முகம் வெட்கத்திலும் கோபத்திலும் சிவந்தது.
“நீ சரியான சுயநலவாதி ருத்ரா! உனக்கு ஆரலி பிடிச்சா தூக்கிக் கொஞ்சுவ, இல்லைன்னா கால்ல போட்டு மிதிப்ப! உன்னைப் பார்த்தாலே எரிச்சலா வருது. ஐ ஹேட் யூ!” என்று அவள் கத்துவதை கண்டு சிரித்த ருத்ரா சட்டென அவளைத் தூக்கி தன் மடியில் அமர வைத்துக்கொண்டான்.
“ஏய்! என்ன பண்ற?”
“உஸ்ஸ்…கொஞ்ச நேரம் அமைதியா தூங்கு மஃபின்”
ருத்ரா விரல்கள் மெதுவாக நிலா தலைமுடியை வருடின. இத்தனை நாட்களாகத் தொலைந்திருந்த அந்த பாதுகாப்பான உணர்வு! அவன் அருகில் இருக்கும்போது கிடைக்கும் அந்த நிம்மதி!
இரண்டும் கிடைக்க அவனுடைய மார்பில் சாய்ந்து சில நிமிடங்களில் அப்படியே தூங்கிப்போனாள் நிலாஞ்சி என்ற ஆரலி.
அவளுடைய முகத்தை பார்த்த ருத்ராவுக்கு மனம் நிறைந்தது.
நிலா நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், சிறிதாக வாயை பிளந்து குழந்தையைப் போலத் தூங்கிக்கொண்டிருந்த அவளை விட்டு பார்வையை எடுக்கவில்லை.
இருவரும் தங்கியிருந்த வீட்டில் கார் வந்து நின்றது. நிலா தூக்கத்தைக் கலைக்காமல் லேசாகப் பிளந்திருந்த அவள் இதழ்களில் மெல்லிய முத்தமிட்டான்.
‘எவ்வளவு கோபம் இருந்தாலும் என்னைப் பார்த்ததும் தூங்கிட்டியே மஃபின்!’ என்று மனதிற்குள் கொஞ்சியபடி, கவனமாக அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று
படுக்கையில் மெதுவாக படுக்க வைத்தான்.
தான் செய்த தவறுகளுக்கு காலம் முழுக்க அவளிடம் மன்னிப்பை யாசிக்கும் பக்தனாக இருக்க அவன் தயார்.
அவள் தர தயாராக இல்லாத மன்னிப்பை கேட்டு வாங்குவதை விட, இன்னமும் தவறு செய்து அவளை தன்னோட நிறுத்திக்கொள்ள நினைக்கிறது அவன் மனம்.
இறப்பிலும் அவள் தன்னோடு வரவேண்டும் என்று நினைக்கும் சுயநலக்காரன் அவன்.
தன்னை அணைத்தபடி உறங்கும் அவளைப் பார்த்தவனுக்கு அடுத்து என்ன செய்து நிலாவின் நம்பிக்கையைப் பெறுவது என தெரியவில்லை.
வலுக்கட்டாயமாக அவளைத் தன்னோடு இருக்க வைக்க முடியும். உடலோடு கலக்கந்துவிட முடியும் ஆனால் மனதளவில் தன்னைவிட்டு வெகுதூரம் விலகி நின்று வதைக்கிறாளே ராட்சசி!
அதே நேரம் பத்ரன் தன்னுடைய அறையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
மேசையின் மீது லேப்டாப், சில முக்கியமான பைல்கள் என எல்லாம் ஒழுங்காக இருந்தாலும் அவனுடைய கவனம் அங்கு இல்லாமல் தப்பும் தவறுமாக கை டைப் செய்திட லாப்டாபை தூக்கி சுவற்றில் அடித்து உடைத்தான்.
உள்ளே கேட்ட சத்தத்தில் பதறிப்போன அவனுடைய பி.ஏ வேகமாக அறைக்குள் ஓடிவந்தாள். மேசையின் அருகே தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்த பத்ரனைப் பார்த்ததும் பயத்தோடு நின்றுவிட்டாள்.
“சார்…”
அவளை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.
மாமா என்ற கொஞ்சல் அழைப்பு அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
“நடிப்புக்காரி…” என்று பத்ரன் உதடுகள் முணுமுணுத்தன.
திடீரென்று எழுந்தவன் மேசையின் டிராயரைத் திறந்து அதிலிருந்த போட்டோக்களை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தான்.
அவன் பார்த்த திகள்விழி எப்போதும் புடவை, தாவணியைத் தவிர வேறு உடைகள் அணிந்திராதவள். அவளை முதல்முறை பார்த்தபோதும் புடவையில்தான் இருந்தாள்.
பரதநாட்டியம் அவள் விரும்பி பழகியது, அதற்காக புடவை அணிந்திருந்தாலும் அவனை காதலிக்க தொடங்கியதும் பத்ரன் கண்களில் வந்து போகும் கிறக்கத்தை காணவே தாவணி அணிந்து வருவாள் திகள்விழி.
அவன் கையில் இருக்கும் படங்கள் எல்லாவற்றிலும் மார்டன் உடையணிந்து நவயுக மங்கையாக சிரித்த முகமாக இருக்கிறாள்.
அமெரிக்காவில் சுற்றும் பெண் வேறு எப்படி இருப்பாள்?
திகளை விரும்ப ஆரம்பித்த பிறகு தன்னிடம் அவள் காட்டிய அன்பையும், அக்கறையையும் நினைத்துப் பார்த்தான்.
தன் பேச்சைக் கேட்டு அவள் சிரித்த தருணங்கள்! கோபமாக இருக்கும்போது அவனைச் சமாதானப்படுத்த அவள் செய்யும் குறும்புகள்! அவன் அருகில் அமர்ந்தால் போதும் இடித்துக்கொண்டு தான் உட்காருவாள்.
இதையெல்லாம் விட அவள் மேனியிலிருந்து வரும் சந்தன மணத்தை நாசியில் ஏற்றி முத்தமிடும் நொடிகள் கந்தர்வ தோட்டத்தை இலவசமாய் சுற்றி பார்த்த போதையை அல்லவா தரும்! எல்லாமே இன்று ஒரேயடியாய் அவன் மனதை தாக்கியது.
அவளை நேசித்த அதே மனம்தான் இப்போது அவளுடைய காதலை உண்மையான காதலாகப் பார்க்க மறுக்கிறது.
கோபத்தில் இருக்கும் பத்ரனின் உள்ளம், திகள் செய்த அனைத்தையும் குற்றமாகவே பார்த்தது.
நேரம் காலம் தெரியாமல் அவன் பாட்டி போன் செய்தார்…
“ம்ம்ம்…” என்று உறுமிய பேரனின் உறுமலை தூற எறிந்துவிட்டு, “பத்ரா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் கால் பண்ணேன். உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு உன் அம்மா முடிவு பண்ணிருக்காடா. நீ என்ன சொல்ற?”
“பாட்டி…”
“என்னடா பாட்டி? முதல் தடவை நாங்க பார்த்த ஆள் நடிப்புக்காரினு தெரிஞ்சிடுச்சு. இனி சரியா பார்க்கலாம்னு சாம்பவி சொல்றா”
“என்ன இரண்டு பேரும் விளையாடுறீங்களா? ஏற்கனவே ஒருத்தி கொடுத்த ஏமாற்றம் தாங்க முடியாம இருக்கேன். மறுபடியும் பொண்ணு பார்க்க சொல்லி என்னைக் கூப்பிடுறீங்களா? அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” என கிட்டத்தட்ட எரிந்துவிழுந்தான்.
அந்தப் பக்கம் அபிராமி சிரித்தார்.
“அதைத்தான் பத்ரா நானும் நினைச்சேன். உன் அம்மா சொல்ற ஐடியா வேஸ்ட்னு எனக்குத் தெரியும். பொண்ணு பார்க்கலாம்னு சொன்னதுக்கே இப்படி கோபப்படுறியே!”
“அப்போ எதுக்கு கால் பண்ணீங்க?”
“அதான் சொல்றேனே. உனக்குப் பொண்ணு பார்க்க கூப்பிடல. ஆல்ரெடி ஒரு பொண்ணை உன் ஆபீஸுக்கு வர சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா, பேசிப் பாரு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு” என்று போனை வைத்துவிட்டார்.
இதற்கு மேல் பேசினால் பேரன் கிழி கிழியென கிழித்துவிடுவானே!
“பாட்டி… பாட்டி…” என டென்ஷனாக கத்தியவன் ‘இந்த குடும்பத்துல தெரியாம பொறந்துட்டேன்’ என நொந்து கொண்டு அமர்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து அறைக்கதவு மெதுவாகத் திறந்து உள்ளே வந்தவளைப் பார்த்ததும் பத்ரனின் டென்ஷன் இன்னும் கூடியது.
திகள்விழி! அழகான பிங்க் வண்ணத் தாவணியில் பதுமையாக வந்து நின்றாள்.
“நீ இங்க எதுக்கு வந்த?” என இரக்கமே இல்லாமல் கேட்டான்.
அவன் கேள்வியில் அவளுடைய மனம் கனக்க, ஆசையாக அழைக்கும் ‘மாமா’ என்ற வார்த்தை வருவேனா என சண்டித்தனம் செய்தது.
நாளை அமெரிக்கா கிளம்புகிறாள் விழி, கடைசியாக ஒருமுறை அவனிடம் பேசிப் பார்க்கலாம். ஒருவேளை கோவம் குறைந்து தன்னை மன்னித்துவிட மாட்டானா? என்ற சிறு நட்பாசையில் வந்திருந்தாள்.
“இல்ல… உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு…”
“நமக்கு நடுவுல நடந்தது எதுவும் உண்மையில்லைன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. இது நீ கிடையாதுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. இன்னும் ஏன் இங்க வந்து நடிக்கிற?”
அவ்வளவுதான், திகள்விழிக்கு வந்ததே கோபம்!
“நான் நடிக்க வந்தவதான்! இது நான் கிடையாது தான் அதுக்காக என் காதல், உங்க குடும்பத்துமேல நான் வச்ச பாசம் எதுவும் நடிப்பு கிடையாது. உங்களுக்கு மட்டும் தான் வாயிருக்குனு நினைச்சு வார்த்தைகளைக் கொட்டாதிங்க!”
“உண்மையை மறைச்சதைத் தவிர நான் என்ன தப்பு செஞ்சேன்? உங்க அம்மா, பாட்டி கூட நெருங்கிப் பழகுனது கூட ருத்ரான்றவரோட குடும்பத்தை பத்தித் தெரிஞ்சுக்கத்தானே தவிர, அவங்களை காயப்படுத்தி ரசிக்க இல்லை!” என திகள்விழி கண்களை துடைத்துக்கொண்டே பேசினாள்.
“என் எல்லையோட நான் பழகினேன். அவங்களா வந்து என் பேரனை கல்யாணம் பண்ணிக்கோனு வற்புறுத்துனாங்க. அப்போவும் நான் எதுவும் சொல்லல!”
பத்ரன் அவளையே அழுத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீங்க தான் என்னை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னிங்க. நீங்களாதான் என்னை நெருங்கினிங்க.
ஒருவேளை நான் தப்பு பண்ணா, என்னை விட்டுட மாட்டிங்களேன்னு ஆல்ரெடி நான் உங்ககிட்ட கேட்டேன்”
திகள் கண்களில் கண்ணீர் மீண்டும் தேங்கியது.
“அப்போ சிரிச்சு சிரிச்சு முத்தம் கொடுத்துட்டு, இப்போ என்னை நடிப்புக்காரினு சொல்றிங்க?” என கோபத்தில் பேச நினைத்தவளின் குரல் அழுகையில் முடிந்தது.
“என்னடி திமிரா? சரி, நான் கேட்கும்போது ஏன் உண்மையைச் சொல்லல? என்னைப் பார்த்தா உனக்குக் கேனையன் மாதிரி இருந்ததா? இல்ல, இவன் என்ன சொன்னாலும் கேட்டுப்பான். ரெண்டு முத்தம் கொடுத்தா நாய் மாதிரி பின்னாடி வருவான்னு நினைச்சியா?”
“மாமா…”
“எல்லாரும் நடிச்சிருக்கிங்க! இங்க ஏமாந்து நின்னது நானும் என் குடும்பமும் மட்டும்தான், ஏழு வருஷம் முட்டாளா இருந்திருக்கோம்!”
“ஆமான்டி, கோபப்பட மாட்டேன்னு சொன்னேன். அதுக்காக நீ பண்ற ஏமாத்துத்தனத்தை ஏத்துக்குவேன்னு அர்த்தம் கிடையாது!”
அவனுடைய வார்த்தைகள் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்தின. அவளுடைய முகம் வேதனையில் சுருங்கியது.
சில நொடிகள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இனி எத்தனை முறை இப்படி நின்று அவனிடம் கெஞ்சுவது? தன் குரலைச் சீராக்கிக்கொண்டு கேட்டாள்.
“கடைசியா கேக்குறேன் மாமா! நான் தப்பு பண்ணிருக்கேன் அதுக்காக உங்ககிட்ட மன்னிப்பும் கேக்குறேன். நீங்க முடிவா என்ன சொல்றீங்க?”
அவளும் எவ்வளவு தான் திட்டு வாங்குவாள், படிப்பு வேறு பாதியில் கிடக்கிறதே!
கடல்கடந்து போனாலும் அவனை மனதில் சுமக்க அவள் தயார். காதல் வேண்டாம் என்றால் வலிகளையும் சுமந்து போக தயாராகிக்கொள்ள கேட்டாள்.
பத்ரன் அவளை அமைதியாக பார்த்தான்.
அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட வேண்டும் என்று மனம் துடித்தது. அவளைத் தன்னோடு இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன. ஆனால் அவனுடைய ஈகோ அந்த உணர்வுகளை வெளியே வரவிடவில்லை.
“முடிவு தான? எல்லாம் முடிஞ்சது… நீ முதல்ல நடிச்ச, இப்போ நானும் உன்னைக் காதலிச்சு ஏமாத்துனதா நினைச்சுக்கோ!”
அவளுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
“உண்மையாவே என்னைத் தூக்கிப் போட்டுட்டீங்களா மாமா?” அந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.
அப்போது, “எக்ஸ்கியூஸ் மீ…” என்று கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தாள் ஒரு பெண்.
அந்தச் சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
பத்ரன் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.
“யாரு?”
“ஹாய் பத்ரன்! நான் விஷாலி. உங்களுக்கு வீட்டுல பார்த்திருக்கிற பொண்ணு” என்று சிரித்த முகத்தோடு அவனை நெருங்கினாள்.
நீட்டான மேல்தட்டு உடையில், அழகாகத் தயாராகி வந்திருந்தாள் விஷாலி. அவளுடைய பார்வை பத்ரனை தாண்டி திகள்விழியிடம் சென்றது.
“வாவ்! இன்னைக்கு டிரெடிஷனல் டேவா ஆபீஸ்ல? ரொம்ப க்யூட்டா இருக்கீங்க!”
என்று திகள்விழியின் தாவணியைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினாள்.
திகள்விழிக்கு கண்கள் கலங்கி, இருட்டிக்கொண்டு வந்தது. அவன் தன்னை கடந்து போக நினைப்பதை நேரில் காண்கிறாள்!
தன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியவன், தன்னைக் காதலிப்பதாகச் சொன்னவன், இன்று வேறொரு பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருப்பதை தன் கண் முன்னால் பார்க்க வேண்டிய நிலை!
