நிலாவுக்கு ஏழாவது மாதத்தில் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
திகள்விழி நானே இந்தியாவிற்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்ததால், பத்ரன் வளைகாப்பு மற்றும் ரிசப்ஷன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
நிலாவின் வளைகாப்பு முடிந்த இரண்டு நாட்கள் கழித்து திகளுக்கும் பத்ரனுக்கும் ரிசப்ஷன் என்பதால், இரு குடும்பத்தினரும் ஓய்வில்லாமல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் வளைகாப்பு என்ற நிலையில், இரவு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மனைவிக்காக பொக்கேவுடன் காத்திருந்தான் பத்ரன்.
விமானம் தரையிறங்கியதாக அறிவிப்பு வந்ததும் அவனுடைய பார்வை வெளியே வரும் ஒவ்வொருவரையும் தேடியது.
பல மாதப் பிரிவல்லவா! அவளை பார்ப்பதற்காக இத்தனை நாட்களாகக் காத்திருந்தவன், இனி ஒரு நொடி கூடத் தாமதிக்க விரும்பவில்லை.
அதே ஆர்வத்துடன் வெளியே வந்த திகள்விழியும் தூரத்தில் நின்றிருந்த பத்ரனைக் கண்டதும் கண்கள் கலங்கியவள் அடுத்த நொடியே அவனை நோக்கி ஓடியவள் அவன் மீது வந்து பொத்தென விழுவதற்குள் திகள் இடுப்பைப் பிடித்து தூக்கிக்கொண்டான் பத்ரன்.
“குட்டச்சி! என்ன வெயிட் கம்மியாகிட்ட ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா?”
என்று அதட்டல் குரலில் கேட்டாலும், அவனுடைய கைகள் அவளை இறுக்கமாக அணைத்திருந்தன.
“எப்பவும் போலத்தான் சாப்பிடுறேன் மாமா! உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்” அவனுடைய கழுத்தில் முகம் புதைத்தபடி சொன்னவள், சிறிது நேரம் கழித்துத்தான் அவனை விட்டு விலகினாள்.
“சரி வா போகலாம்” என்று அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டு நடந்தவன், வீட்டிற்கு வரும் வரை திகள் கையை விடவே இல்லை.
வீட்டில் கார் வந்து நின்றதும் அனைவரும் வாசலுக்கே வந்து அவளை வரவேற்றனர்.
“அக்கா!” என்று நிலாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் திகள்விழி.
அவளுடைய பார்வை உடனே நிலாவின் மேடிட்ட வயிற்றில் பதிய, ஆசையாகக் கைவைத்துத் தடவியவள் “செல்லங்களா! நான் திகள் சித்தி. உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்று கொஞ்ச ஆரம்பித்தாள்.
அவளுடைய குரலில் இருந்த அன்பையும், கைகளின் மென்மையான வருடலையும் உணர்ந்ததுபோல, வயிற்றுக்குள் இருந்த இரண்டு குழந்தைகளும் வேகமாக உதைத்தன.
அதை உணர்ந்த திகள்விழி உற்சாகத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“அக்கா! அக்கா! அவங்க எனக்கு ரெஸ்பான்ஸ் பண்றாங்க!”
“ஆமா திகள். அவங்களுக்கு நீயும் ஒரு அம்மாதான!” என்று தங்கையின் கன்னத்தைப் பிடித்து ஆட்டினாள் நிலா.
“அபி! பவி!” என்று கத்தியபடி உள்ளே ஓடிவிட்டாள் திகள்.
உள்ளே திகள் வீட்டினரும் இருந்ததால், வீடு முழுவதும் சிரிப்பும் பேச்சுமாக சந்தோஷமாக கழிந்தது.
மனைவியைத் தனியாக அறைக்குள் தள்ளிக்கொண்டு போக முடியாமல் சுற்றிக்கொண்டிருந்த பத்ரனை விமலும், பேபியும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
அதை கவனித்த விமல், ருத்ராவிடம்
“பாஸ்… உங்க தம்பி பேண்ட்டை ஈரம் பண்ணிட்டாரா?” என்று வம்பை ஆரம்பித்து வைத்தான்.
தம்பியின் முகத்தையும், அவன் பார்வை போகும் இடத்தையும் கவனித்த ருத்ரா,
“இருக்கலாம். இரு அவன்கிட்டயே கேட்றுவோம்” என்று சாதாரணமாகச் சொல்ல, “ஐயோ விடுங்க பாஸ்! எதுக்கு அவர்கிட்ட கேட்டுட்டு? நாங்களே போய் வேற பேண்ட் எடுத்துட்டு வரோம்!”
என்று இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.
“திகள் போய் பிரெஷ் ஆகிட்டு வா” என்று நிலா தங்கையை அனுப்பிவைக்க, அண்ணிக்கு நன்றி சொல்லிவிட்டு மனைவியைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான் பத்ரன்.
கதவை அடைத்த அடுத்த நொடியே
“குட்டச்சி! உனக்கு என் மேல காதல் காணாமப் போயிடுச்சு! வந்ததிலிருந்து அவங்ககூடவே சுத்திட்டு இருக்க. என்னைக் கண்டுக்கவே இல்லை” என்று திட்ட ஆரம்பித்தவனை கண்டு திகள்விழி சிரித்துவிட்டாள்.
“போதும் வாயா! எப்போ பார்த்தாலும் புலம்பிக்கிட்டு…” என்று அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
அதே நேரத்தில், நிலாவை மெதுவாகத் தங்களுடைய அறைக்கு அழைத்துச் சென்ற ருத்ரா, வீங்கியிருந்த அவள் கால்களை தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு மென்மையாகப் பிடித்துவிட்டான்.
“ரொம்ப வலிக்குதா மஃபின்?”
“இப்போ பரவாயில்லை ஏகரா”
அவளுக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் ருத்ரா.
அழகான மறுநாள் விடிந்தது. பொன்னழகாகத் தாய்மை சூழ்ந்திருந்த நிலாவை அலங்கரித்து மேடைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அவளை அலங்கரித்துப் பட்டுச்சேலை உடுத்தி, நகைகள் அணிவித்து, பூச்சூடி அழைத்து வந்தபோது அனைவருடைய பார்வையும் அவள் மீதே இருந்தது.
ஆனால் அவள் புருஷனோ தூரத்திலிருந்து நிலாவை ரசித்துக்கொண்டிருந்தான்.
இரண்டு அண்ணன்களும், திகளும் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு மேடைக்கு அழைத்து வந்தார்கள்.
ருத்ரா பொசுபொசுவென மூவரையும் முறைத்தாலும், நிலாவின் முகத்தில் தெரிந்த பூரிப்பைக் கண்டு அமைதியாகிவிட்டான்.
தன்னைத் தாங்குவதற்கு இரு குடும்பங்களும் இருக்கும்போது அவளுக்கு என்ன கவலை?
சந்தனம் வைத்துவிடுவதற்காக அருகில் வந்த தன்னுடைய சிடுமூஞ்சி காதலனை இழுத்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள் நிலா.
“ஐ லவ் யூ ஏகரா! நீ இல்லைன்னா இந்த வாழ்க்கை முழுமை அடைஞ்சிருக்காது. இத்தனை திருப்தியும் சந்தோஷமும் எனக்குக் கிடைச்சிருக்காது. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நிலாஞ்சியா இல்லை உன்னோட ஆரலியா…” என்று உண்மையான மகிழ்ச்சியில் கண்கள் கலங்க அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ருத்ராவின் முகம் மென்மையானது.
அவளுடைய மகிழ்ச்சிதான் அவனுக்கு எல்லாமே! ஆரலி தன்னுடன் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிம்மதியோடு அவளுக்கு அருகில் அமர்ந்துகொண்டான்.
குதித்துக் குதித்து வேலை செய்துகொண்டிருந்த தன்னுடைய குட்டச்சியின் மீதுதான் பத்ரனுடைய பார்வை முழுவதும் இருந்தது.
காலையில்தான் பூஜையறையில் வைத்து வீட்டினர் முன்னிலையில் அவளுடைய தாலிக்கயிற்றை மாற்றி, வைரத்தாலியை அணிவித்திருந்தான்.
இப்போது அழகான சிவப்பு வண்ண பட்டுச்சேலையில், தொங்கித் தொங்கித் தெரிந்த தாலியைப் பெருமையோடு வெளியே காட்டியபடி சுற்றிக்கொண்டிருந்தாள் அவனுடைய மனைவி.
திகளை பார்க்கும்போதெல்லாம் அவனுடைய உதடுகளில் தன்னையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.
ரிசப்ஷன் தேதியை திகளிடம் சொன்னதோடு சரி. அவள் உடையிலிருந்து நகைகள் வரை அனைத்தையும் அவனே பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருந்தான்.
அவளைத் தொல்லை செய்யக்கூடாது என்பதற்காக முடிந்தவரை பாட்டியை உடன் வைத்துக்கொண்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.
தனக்காக அலுவலக நேரம் போக மற்ற வேலைகளையும் அவன் கவனித்துக்கொள்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட திகளும், அவன் சொல்வதற்கெல்லாம் சிரித்த முகத்தோடு தலையசைத்தாள்.
இருவருக்குமான அந்தப் புரிதலைக் கண்டு அபிராமி சிரித்தபடி, “யாரோ உன் சிடுமூஞ்சி பேரன் வேண்டாம்னு சொன்னாங்க? இப்போ அவனை விட்டு நகரவே மாட்டேங்கிறாங்க. இப்பவும் அவன் சிடுமூஞ்சிதானா?” என்று திகளை வம்பிழுத்தார்
“மாமா!” என்று சிணுங்கியபடி பத்ரனிடம் ஓடிய திகள்விழியை தன்னருகே இழுத்து நிறுத்திக்கொண்டான் பத்ரன்.
நல்லபடியாக வளைகாப்பு முடிந்தது.
நிலாவை அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்ல வந்த விமலும், பேபியும், ருத்ரா சோபாவில் அமர்ந்திருந்த தோற்றத்தைக் கண்டு எச்சில் விழுங்கினர்.
அவன் முகத்தைப் பார்த்தாலே ‘எங்க கூட்டிட்டு போறோம்னு வாயை திறந்து பாரு!’ என மிரட்டுவது போல இருந்தது.
அவர்கள் அடி வாங்குவதை நிலா விரும்பவில்லை போல, அவளாகவே வாயைத் திறந்தாள்.
“அண்ணா… நம்ம வீட்டுக்கு நான் வரல. ஏகரா கூடவே இருக்கேன்”
அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அடுத்த நொடியே நிலாவைத் தூக்கிக்கொண்ட ருத்ரா,
“என்ன பார்க்குறிங்க? போய் தூங்குங்க!”
என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடிவிட்டான்.
“ப்பூ…” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட விமல், பத்ரனிடம் “நீங்களாவது என் தங்கச்சி வளைகாப்பு முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு அனுப்புவிங்களா? இல்ல உங்க அண்ணன் மாதிரி அவளையும் தூக்கிட்டு ஓடிடுவிங்களா?” என்று கேட்டான்.
“நானே குட்டச்சியைப் பார்த்துப்பேன். உங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டுட்டு எனக்கு இங்கே என்ன வேலை இருக்கப்போகுது? போங்கடா… போய் கல்யாணம் பண்ற வேலையைப் பாருங்க!” என்று சலித்துக்கொண்டு சென்றான்.
செல்லச் செல்லச் சண்டைகளோடும், சின்னச் சின்ன ஊடல்களோடும் பத்ரன், திகள் ரிசப்ஷன் நாளும் வந்துவிட்டது.
அவன் தேர்ந்தெடுத்திருந்த பீச் வண்ண லெஹங்காவில் அப்சரஸாக மின்னினாள் திகள்விழி. அவளுக்கு அருகில் ராஜகுமாரனைப் போல நின்றிருந்த பத்ரன், அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.
அவனுடைய கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு மேடை ஏறினாள் திகள்.
“மாமா… நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ஆனால் ஒரே ஒரு குறை மட்டும்தான்…” என்று மெதுவாக முணுமுணுத்தாள்.
அங்கிருந்தவர்களிடம் சிரித்தபடி பரிசுகளை வாங்கிக்கொண்டிருந்த பத்ரன், அவர்கள் சென்றதும் “என்ன குறை விழி? உனக்கு ஏற்பாடுகள் பிடிக்கலையா?” என்று அவசரமாகக் கேட்டான்.
“நான் பங்ஷனைச் சொல்லலை… நான் படிச்சு முடிச்சு, எக்ஸ்ட்ரா ஒன் இயர் ரெசிடென்ட் வேலை பார்த்து இங்கே வர வரைக்கும் நாம பிரிஞ்சு இருக்கணுமே…” என்று பெருமூச்சு விட்டாள்.
அவளுடைய கையை மென்மையாகப் பற்றிக்கொண்டான் பத்ரன் “அதனால என்ன குட்டச்சி? நோ ப்ராப்ளம். நான் வெயிட் பண்றேன்”
“நீங்க வெயிட் பண்ணுவிங்க. என்னாலதான் வெயிட் பண்ண முடியாது. அக்காவைப் பார்க்கும்போது எனக்கும் பேபி வேணும்னு தோணுது”
என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பத்ரன் அவளை முறைத்தான்.
“மண்டையில கொட்டுனா கொம்பு முளைச்சிடும் பார்த்துக்கோ! நீயே இன்னும் பேபிதான். ஒழுங்கா படிப்பை முடிக்கிற வேலையைப் பாரு” என்று அதட்டினான்.
“போயா! நைட் விதவிதமா வாங்கும்போது நான் சின்ன பொண்ணா தெரியலையா? இனி அது இதுனு வேணும்னு கேளு கடிச்சு வைக்குறேன்!”
என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் திகள்.
அவள் அந்தரங்க பேச்சில் காதுகள் சிவக்க, தலையை வேறுபுறம் திருப்பி தன் வெட்கம் மறைத்தான் பத்ரன்.
ஒருவழியாக ரிசப்ஷன் முடிந்ததும், களைப்பில் உடைகளை மாற்றிவிட்டு உறங்கச் செல்ல முயன்றவளை “ஹனிமூன் போகணும் வா!” என்று சொல்லி கடத்திக்கொண்டு போய்விட்டான்.
திகள் பதினைந்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்தாள். மீண்டும் சீக்கிரமே திரும்பிச் செல்ல வேண்டியிருப்பதால், கிடைத்த நாட்களை சிறப்பான நினைவுகளாக மாற்ற வேண்டும் என்று நினைத்தான்.
நாட்கள் மாதங்களாகக் கடக்க ஆரம்பித்தன.
நிலாவின் ஒவ்வொரு நாளும் ருத்ராவோடு பிணைக்கப்பட்டிருந்தது. அவளுடைய உணவு, ஓய்வு, நடைப்பயிற்சி என அனைத்தையும் அவனே கவனித்துக்கொண்டான்.
குழந்தைகளின் அசைவுகளை உணரும்போதெல்லாம் அவளுடைய வயிற்றில் கை வைத்துப் பார்த்து ரசிப்பான். சில நேரங்களில் குழந்தைகளிடம் பேசவும் ஆரம்பித்திருந்தான்.
ஆனால் அவனுடைய காதலில் ஆரலிக்கான இடம் மட்டும் மாறவே இல்லை.
இதற்கிடையில் திகள் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பிவிட்டாள்.
சரியாக ஒன்பதாவது மாதம் தொடங்கியிருந்தபோதே நிலாவுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது.
இரட்டைக் குழந்தைகள் என்பதால் அறுவைச் சிகிச்சை செய்வதே சிறந்தது என்று மருத்துவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆனால் எதிர்பார்த்த தேதிக்கு முன்பாகவே வலி ஆரம்பித்துவிட, குடும்பத்தினர் அனைவரும் பதறிப்போனார்கள்.
அவர்களே அப்படியென்றால் ருத்ராவைப் பற்றி சொல்லவே வேண்டாம்!
இரும்பை உருக்கிக் குடித்தவன் போல முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
நிலா வலியை கண்டு அவனுடைய கைகள் நடுங்கியது.
அவளுக்கோ பிரசவ வலியை விட அவனை நினைத்துத்தான் அதிகக் கவலையாக இருந்தது.
“உன் முகரையை நார்மலா வச்சுத்தொலை! நான் என்ன செத்தா போகப்போறேன்?” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள்.
“டாக்டர்! இவனைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க. ஏற்கனவே எனக்கு வலிக்குது இதுல கையை வேற பிடிச்சு நெறிக்குறான்!”
“பேபி! இவனை வெளியே போக சொல்லு. மூச்சு முட்டுற அளவுக்கு இவன் முத்தம் கொடுக்கும்போதே எனக்கு வலிக்க வைப்பான்னு தெரியும்” என்று அவள் கத்திககொண்டிருக்க, அருகில் நின்றிருந்த பேபியும் ராமும் வாயை பொத்திக்கொண்டு சிரித்தனர்.
வாசலில் நின்றிருந்த அபிராமி அன்ட் கோ சத்தமாகவே சிரித்துவிட்டது.
அடுத்த நொடியே “ஏகரா… எனக்கு வலிக்குது!” என்று அழுதவளை சமாதானப்படுத்தத் தெரியாமல் நின்றான் ருத்ரா.
நிலா நெற்றியில் முத்தமிட்டவன் “ஒண்ணுமில்லை மஃபின்… நான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம்தான், தைரியமா இரு” என்றவனுடைய குரலிலேயே நடுக்கம் தெரிந்தது.
இரண்டு மணிநேரமாக அவள் வலியில் போராடிக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவள் வலியைப் பார்க்க முடியாமல் பொறுமையிழந்து,
“என்ன பண்றிங்க எல்லாரும்? இப்பவே ஆரலிக்கு வலி போகணும்! குழந்தைகளை வெளியே எடுங்க! இல்ல உங்க ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
அவனுடைய கோபத்தைச் சமாளிக்க முடியாமல் பத்ரனும் விமலும் அவனைப் பிடித்து அமரவைக்க முயன்றனர். அவனோ அவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு உள்ளே ஓடினான்.
அங்கே கத்துவதற்குக்கூடத் தெம்பில்லாமல் சோர்ந்து படுத்திருந்தவளைக் கண்டதும் ருத்ராவின் உயிர் துடித்துப்போனது.
“ஏதாவது பண்ணுங்க டாக்டர்… ப்ளீஸ்!”
என்று குரல் கலங்கக் கேட்டான்.
அரை மயக்கத்தில் அவனைக் கண்ட நிலாவின் கண்களும் கலங்கின.
“நான் இல்லாமல் போனால் வாழத் தெரியாத குழந்தையாகிப் போய்விடுவானே இவன்!” அவனுடைய கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
“ஓகே சார்! இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணுங்க. ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போறோம்” என்று பார்மை நீட்டிய மருத்துவரைப் பார்த்து, “எங்களுக்கு இரண்டு குழந்தைகள் போதும் டாக்டர். ஃபேமிலி பிளானிங் பண்ணிடுங்க” என்று உறுதியாகச் சொல்லியபடியே பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்தான்.
“ஏன்டா… குழந்தைங்க போதும்னு சொல்ற?” என்று அந்த வலியிலும் அவனைக் கேள்வி கேட்டாள் நிலா.
“உன்னை இந்த நிலைமையில் பார்த்த பிறகும் எப்படி இன்னொரு குழந்தைக்கு ஒத்துக்குவேன்னு நினைக்கிற ஆரலி? போதும்! ஒழுங்கா என்கிட்ட திரும்பி வர்ற வழியைப் பாரு” என்று அவளை முறைத்தான்.
“சைக்கோடா நீ!” என்று திட்டியவள், ருத்ராவை தன்னருகே இழுத்து அணைத்துக்கொண்டாள்.
அடுத்த நொடியே மீண்டும் வலி அதிகரிக்க, அவள் கத்திய குரலில் பயந்துபோன ருத்ரா அறைக்கு வெளியே வந்துவிட்டான்.
நல்லபடியாக அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்தார்கள்.
ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று!
இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதும், வெளியே காத்திருந்தவர்களின் முகத்தில் நிம்மதி பரவியது.
அபிராமியும் நடராஜனும் பேரனின் குழந்தைகளை ஆசையாகக் கைகளில் ஏந்திக்கொண்டனர்.
இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை.
ஆனால் ருத்ரா பார்வையோ ஆப்ரேசன் தியேட்டர் கதவிலேயே நிலைத்திருந்தது.
அவன் ஏற்கனவே மருத்துவரிடம் சொன்னபடியே, இனி குழந்தை வேண்டாம் என்ற முடிவுடன் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையும் செய்து முடித்தப் பின்னர் நிலாவை அறைக்கு மாற்றினார்கள்.
இரண்டு குழந்தைகளையும் இரு குடும்பத்தினரும் கொஞ்சிக் கொண்டிருக்க, பிள்ளைகளை பார்க்கும் ஆவலுடன் திகள் உள்ளே வந்தாள்.
நிலாவுக்கு பிரசவ வலி வந்த செய்தி கிடைத்ததும் இந்தியாவிற்குக் கிளம்பியிருந்தாள் திகள்.
குழந்தைகள் பிறந்ததும் மருத்துவமனைக்கு வந்தவள், ஆசையாக அக்காவின் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டாள்.
“மாமா! இங்க பாருங்களேன்! பையன் அக்கா மாதிரி இருக்கான். பொண்ணு ருத்ரா மாமா மாதிரி முறைக்குறா பாருங்க!” என்று பத்ரனிடம் காட்டினாள்.
திகளை பார்த்துக் காதலோடு சிரித்தான் பத்ரன்.
“அக்கா நல்லா இருக்காளா? நான் டாக்டரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்”
என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் திகள்.
அனைவரும் குழந்தைகளைக் கவனிப்பதில் மும்முரமாகிவிட, அங்கே ஒருவன் மட்டும் தன்னுடைய உலகம் விழிப்பதற்காகக் காத்திருந்தான்.
அவனுக்கு உலகமே ஆரலி தானே!
அவள் கண் விழித்து தன்னுடைய பெயரைச் சொல்லும் நொடிக்காக, நிலா அருகில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றியபடி காத்திருந்தான் அந்த பைத்தியக்காரன்.
ஒருமணி நேரம் கழித்து மெதுவாக கண்களை திறந்த நிலா! தன் அருகில் அமர்ந்திருந்த ருத்ராவை கண்டு வலியோடு மெதுவாக சிரித்தாள்.
“ஏகரா” என்று அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவ்வளவு தான்!
இத்தனை நேரம் தேக்கிவைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டான்.
“ஒன்னும் சொல்ல வேண்டாம், ரெஸ்ட் எடு” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
குழந்தைகளை தூக்கிவந்து நிலாவிடம் பெரியவர்கள் காட்டிட, அவர்கள் கன்னத்தை லேசாக தடவியவளின் கண்கள் கலங்கிப்போனது.
அவனைப்போலவே இருந்த மகள், நிலாவின் செல்லமாகிப்போனாள். மடியில் வைத்து கொஞ்சித்தீர்த்தவளை முறைத்த பெரிய குழந்தையை சொந்தங்கள் அனைவரும் கிண்டல் செய்தார்கள்.
“எல்லாரும் போங்க! என் பேரனை கிண்டல் பண்றிங்க!” என அபிராமி அவர்களை வெளியே அனுப்பி வைத்துவிட்டு இருவருக்குமான தனிமை நேரத்தை கொடுத்தார்.
“இவளை பாரேன் உன்னை போலவே இருக்கா!”
“ம்ம்ம்…”
“முகத்தை தூக்கிவைக்காதாடா! இங்க வா” என்று அவன் சட்டையை பிடித்து அழுத்தமாக இதழில் முத்தமிட்டதும் தான் ருத்ரா நார்மலானான்.
நிலாவை போல இருந்த மகனை அவன் தூக்கிக்கொள்ள விரிந்த புன்னகை செய்தாள் நிலா.
மூன்று நாட்கள் கழித்து நிலாவை வீட்டுக்கு கூட்டிவந்தார்கள். பெரும்பான்மையான நேரங்களை மகனும், மகளும் சொந்தமாக்கிக்கொள்ள சிறிது முகம் தூக்கினாலும் அவள் கூடவே இருந்து கொள்வான் ருத்ரா.
அவளை வேலை செய்யவிடுவதில்லை, பிள்ளைகளை அழகாக அவன் கையாள்வதை கண்டு விமலும், பேபியும், பத்ரனும் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
“பாஸ் உங்களுக்கு தான் வேலை செய்ய தெரியாதே! அதுவும் நிலாவை தவிர்த்து யாருக்கும் வேலை செய்ய பிடிக்காதே! அப்புறம் எப்படி இவ்வளவு அழகா குழந்தைக்கு டிரஸ் போட்டு டையப்பர் போடுறிங்க” என்று விமல் கிண்டலாக கேட்டான்.
“என் ஆரலிக்காக தான் இந்த வேலையும் செய்றேன்! அவளால குனிய முடியாது” என்று காரணம் சொன்னவனை இதுவும் அவளுக்காகத்தான? என்பது போல பார்த்தார்கள்.
அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த நிலாவோ! அவனையே காதல் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை காதல் கொள்பவனும் அவனே! காதலால் கொல்லுபவனும் அவனே!
மூன்று மாதங்கள் கடக்க, இரு பிள்ளைகளுக்கும் பெயர் வைக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆண்பிள்ளைக்கு கனலாதித்தன் என்றும், பெண் குழந்தைக்கு கனல் மதியாள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
