உருத்திரா ❤️27

“ஆரலியை கல்யாணம் பண்ணிக்க நான் முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் எல்லாரும் ஃப்ரீயா இருக்கிங்களான்னு கேட்டேன்”

“ஆரலி சிஸ்டர் அமெரிக்கா போயிட்டா, இனி இந்தியா ரிட்டர்ன் வர்றது கஷ்டம். சோ நிலா ஃபேமிலி, விமல் ஃபேமிலி, நம்ம ஃபேமிலி எல்லாரும் போயிட்டு உடனே வந்துடலாம்” என்றான்.

“இப்போ உன் கல்யாணத்துக்கும் திகள் ஊருக்கு போனதுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று பாட்டி கேட்டார்.

“இதோ, இவனுக்காக சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!” என்று தலையை ஆட்டியபடி சொல்லிவிட்டு பத்ரனை பார்த்து சிரித்தான்.

உண்மைதான். சம்பந்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறதே!

ஏற்கனவே தூக்கம் தொலைந்த விழிகளோடு கடுகடுவென அமர்ந்திருந்த பத்ரனை, ருத்ராவின் வார்த்தைகளில் வந்த ‘இனி இந்தியா வர்றது கஷ்டம்’ என்ற வரிகள் மேலும் கோபமாக்கியது.

பத்ரனின் முகத்தைப் பார்த்தாலே அவன் கோபத்தை அடக்கப் போராடுவது தெரிந்தது. ‘அமெரிக்கா போயிட்டாளா? அப்போ நானு?’ என உள்ளம் வேறு படபடக்க, ஒரு நொடி கூட அங்கே உட்கார முடியவில்லை.

நாற்காலியை பின்னால் தள்ளியவன் வேகமாக எழுந்து அறையை நோக்கி ஓடினான்.

“டேய்! சாப்பிடாம எங்கேடா ஓடுற?” என்று அபிராமி பேரனை அழைத்தார்.

பத்ரனின் காதில் எதுவுமே விழவில்லை.

அவசரமாக அறைக்குள் வந்தவனோ தன் போனை எடுத்து திகள்விழி எண்ணுக்கு அழைக்கப் போனான்.

“அப்போ உன் கோபமெல்லாம் அவ்வளவுதானா?” என்று அவனுடைய ஈகோ பிடித்த மனம் குறுக்கே வந்து நின்றது.

“அவன் பேசுறதை கேட்காத! உனக்கு குட்டச்சி வேணும்னா நீதான் தேடிப்போகணும். ஏற்கனவே அவளை காயப்படுத்தி அனுப்பிட்ட, இனியும் லேட் பண்ணாத!” என்று நல்ல மனம் அறிவுரை சொல்லியது.

என்னடா இது வாழ்க்கை என்று தோன்றிய நொடி, “கோபமாவது, மண்ணாவது!” என்று போன் செய்துவிட்டான்.

போட்டதும் கால் போக, அவன் அப்பன் வீட்டு ஊரா! அமெரிக்கா சார், பாரின் நம்பர் வேணும்ல! பழைய எண் சுவிட்ச் ஆஃப் என்று வர, கோபத்தில் போனைத் தூக்கிப் போட்டு உடைத்துவிட்டான்.

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ருத்ராவிடம்,

“நல்லபடியா சிண்டு முடிஞ்சுட்டு இப்போ எங்கே போற?” என்று மகனை முறைத்தபடி கேட்டார் மகாதேவன்.

“முக்கியமான வேலை இருக்கு அப்பா!”

என்று அப்பாவியாய் சொன்ன மகனை அவர் நம்பவில்லை.

“என்ன முக்கியமான வேலை?”

ருத்ரா சாப்பிட்டு எழுந்ததும், “மஃபினை கடத்திட்டுப் போகப்போறேன்!” என்று கண்ணடித்து சொல்லிவிட்டு அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் ஜாலியாக வெளியேறினான்.

“ருத்ரா!” என்று மகாதேவனின் குரல் வீடு முழுவதும் எதிரொலித்தது.

ஆனால் அவனோ வாசலை தாண்டி போயிருந்தான்.

அபிராமியோ சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக்கொண்டார். சாம்பவி மகனை பார்த்துவிட்டு, பின் கணவரைப் பார்த்தார்.

“ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணப் போறாங்களோ! இவங்களுக்கு நீங்களும் அப்பாவும் சப்போர்ட் பண்ணாதிங்க!” என்ற மகனை டீலில் விட்டுவிட்டார் அபிராமி.

“அடப்போடா! என் வீட்டுக்காரர் கல்யாண நாளை குறிக்கப் போயிருப்பாரு. நீ கவலைப்படாம வந்து பந்தியில உட்கார்ந்து தொந்திய நொப்பிட்டு போ!”

“காலா காலத்துல பசங்களுக்குக் கல்யாணம் பண்ணோமா, பேரன் பேத்தியைப் பார்த்தோமான்னு இல்லாம இன்னும் அவனுங்களை மொட்டைப் பையனுங்களா சுத்தவிட்டுட்டு பேச்சை பாரு” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போகும் அம்மாவை பாவமாக பார்த்தார் மகாதேவன்.

சாம்பவி வாயை மூடி சிரிக்க,

“அங்க என்னடி சிரிப்பு? சிரிச்சது போதும் லாக்கர்ல இருக்குற நகைகளை வெளியே எடுத்து, புதுசு பண்ண சொல்லு. ருத்ரா பொண்டாட்டிக்குன்னு எடுத்ததை தனியா அவங்ககிட்ட ஒப்படைக்கணும்”

“சரிங்க அத்தை! இப்பவே ஆட்களை வரச் சொல்றேன்!” என்று மாமியார் பின்னே ஓடினார் சாம்பவி.

காலை ஒன்பது மணிக்கே வந்து சோபாவில் அமர்ந்திருக்கும் தங்கள் வீட்டு மாப்பிள்ளையைக் கண்டு பார்வதியும் சோமசுந்தரமும் முழித்துக்கொண்டு நின்றனர்.

பல் தேய்த்தபடி வந்த பேபி ருத்ராவை கண்டு ஜெர்க் ஆனான்.

‘இவரு இங்க என்ன பண்றாரு?’ என்ற யோசனையோடு அண்ணனை எழுப்ப ஓடினான்.

“தம்பி காலையில வந்திருக்கிங்களே! ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்டார் சோமசுந்தரம்.

அவருக்கோ ‘தக்காளி நீங்க ஹியூமன்ஸே இல்லடா’ என்ற சந்தேகம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது.

“கல்யாண டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டோம் அங்கிள்! வீக்கெண்ட்ல மேரேஜ் வச்சுக்கலாம். நம்ம எஸ்டேட்ல இருக்குற கோவில் பெட்டரா இருக்கும். இரண்டு பேமிலி மட்டும் போதும்” என்றவனை, நான் நினைச்சது சரிதான் ‘நீ மனுஷனே கிடையாது’ என்பது போலப் பார்த்தார் சோமசுந்தரம்.

“எதே வீக்கெண்ட்ல கல்யாணமா? பாஸ் இப்போ நிலாவுக்கு அவசரமா கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது? பொறுமையா பண்ணலாம். நீங்களும் இப்போதான் ஃப்ரீயா இருக்கிங்க அதுக்குள்ள புது கமிட்மென்ட் எடுத்துக்காம டைம் குடுங்க”

என்று அட்வைஸ் பண்ணிய விமலை, ‘என்னடா சொன்ன?’ என்பது போலப் பார்த்தான் ருத்ரா.

“எனக்கு முப்பத்திரண்டு வயசாகுது விமல். கல்யாணம் பண்ற வயசை தாண்டி வருஷக்கணக்காச்சு! உன் தங்கச்சி பாசத்தை என்கிட்ட காட்டுனா, உங்களால ஆரலியை வருஷக்கணக்காகப் பார்க்க முடியாதபடி பண்ணிடுவேன்” என அப்பட்டமாக மிரட்டினான் ருத்ரா.

உயிர் கொண்டதே அவளில் விழுந்து எழந்திடத்தான் என்று நினைக்கும் பைத்தியத்திடம், கல்யாணத்துக்கு என்ன அவசரம் என்று கேட்டால் கோபம் வராதா?

அதுபோக, அவன் போகும் வேகத்துக்கு கல்யாணத்தை லேட்டாக வைத்தால் நிலா வயிற்றைத் தள்ளிக்கொண்டுதான் தாலி வாங்க வேண்டும்.

“விமல் அமைதியா இரு! நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க தம்பி. நிலாவுக்கு பிடிச்ச மாதிரி எல்லா ஏற்பாடுகளும் இருக்கட்டும். நேத்து நைட் நடராஜன் அப்பா கால் பண்ணிப் பேசினார்” என்று பார்வதி ருத்ராவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாகியும் அவன் கண்மணி வெளியே வரவில்லை என்றதும், நேராக அவள் அறைக்குள் நுழைந்தான்.

தன் பின்னாலே நிலா அறைக்குள் வந்த விமல், பேபியின் மூக்கில் அறைவது போல கதவை அடித்து சாற்றினான் ருத்ரா.

“ஸ்ஆஆ! இந்த ஆளு ஓவரா பண்றாரு அண்ணா, நிலாவை சாதாரணமா இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது”

“ஐயோ! வாயை மூடுடா. நீ பேசுறது அவரு காதுல விழுந்தா உனக்கு சாதாரணமா கல்யாணமாக முடியாதபடி பண்ணிருவாரு!” என்று தம்பியின் வாயை மூடி இழுத்துப்போனான் விமல்.

“ஏன்? எங்களுக்கு கை இல்லையா? நாங்க பதிலுக்குச் சண்டை போடமாட்டோமா?”

“சண்டை போட நீ உயிரோட இருக்கணும் தம்பி!”

“அவருக்கு நீ ரொம்ப ஜால்ரா போடாத அண்ணா. நிலா நமக்கும் முக்கியம், என்னவோ இவரு கைக்குள்ள இருந்தா மட்டும்தான் நிலா சந்தோஷமா இருக்குற மாதிரி நடந்துக்குறாரு. இத்தனை வருஷமா எங்க போனாரு? நாமதானே நிலாவைப் பத்திரமா பார்த்துக்கிட்டோம்!”

அவனுக்கு ருத்ராவின் அணுகுமுறை பிடிக்கவில்லை. தான் நேசிக்கும் ஒருத்தி எங்கிருந்தாலும் சந்தோஷமாக, நிம்மதியாக இருந்தால் போதும் என்று நினைப்பது ஒருவகை காதல் என்றால்,

தான் நேசிக்கும் ஒருத்தி என்னுடன் இருந்தால்தான் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பாள் என்று அவளைத் தன் கைக்குள் வைத்துக்கொள்ள நினைப்பதும் காதல்தான். 

என்ன ஒன்று, இது அவளை தன்னுள் அடக்கிக்கொள்ள நினைக்கும் அரக்கக்காதல்!

அவளை தன்னுடன் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சுகம் கொடுக்கும் சுத்த அசைவக் காதல்.

அவளை முழுவதும் அழித்துப்போடும் ஆன்ட்டி ஹீரோ காதல்.

“உனக்கு அவர் பண்ற அத்துமீறல் பெருசா தெரியுது பேபி. நீ யோசிச்சுப் பாரு ருத்ரா இடத்துல நீ இருந்து, நிலா போல ஒரு பொண்ணு உன் வாழ்க்கையில வந்து போனா எத்தனை நாள் காத்திருப்ப?”

விமலின் கேள்விக்கு பேபியிடம் உடனடியாக சொல்ல பதில் இல்லை.

“காதல் பண்ண பாவத்துக்கு இரண்டு வருஷம், இல்ல நாலு வருஷம், இல்ல பத்து வருஷம்…”

“அவ்வளவு வருஷம் யாரு காத்திருப்பாங்க?”

“காத்திருப்புக்கு பலன் கிடைக்கும்னு தெரிஞ்சா நீ தாராளமா வெயிட் பண்ணி பலனை அனுபவிக்கலாம். ஆனா எந்த ஒரு பிடிமானமும் இல்லாம,ஒரு வருஷம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்பட்டு, தன்னைச் சுத்தி நடந்த சதிகளைக் கண்டுபிடிச்சு, தைரியமா போராடி, அடுத்த ஆறுவருஷம் நிலாவுக்காகக் காத்திருந்த அவரோட காதலை நிச்சயமா உன்னால பண்ண முடியாது”

“ருத்ரா நிலாவை கூடவே வச்சுக்க நினைக்கிறதுக்கு ஆயிரம் காரணங்களை வெளியே சொன்னாலும், உண்மையான காரணம் வேற”

“என்ன?”

“ஆரலி திரும்ப வந்ததை அவரால இன்னும் முழுசா நம்ப முடியல. மறுபடியும் காணாம போயிடுவாளோன்ற பயம் உள்ளுக்குள்ள இருக்கு. 

நீ ஒரு டாக்டர் தானே? நீயே சொல்லு தொலைஞ்சு போன பொம்மை திரும்ப கிடைச்சா, குழந்தை மறுபடியும் அந்தப் பொம்மையை எங்கேயும் விடாம கைக்குள்ளதான வச்சிருக்கும்”

“இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பொம்மை உயிரில்லாதது, நிலா உயிருள்ள பொண்ணு. அவரோட பயத்தையும் நாம புரிஞ்சுக்கிட்டாலும், நிலாவுக்கு தனிப்பட்ட விருப்பங்கள், ஆசைகள், உணர்வுகள் இருக்குன்றதை ருத்ரா புரிஞ்சுக்கணும் இல்ல இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் வரும்” என்று விளக்கமாக தம்பியிடம் சொன்னான் விமல்.

“இவ்வளவு விஷயம் பின்னாடி இருக்குறது எனக்குத் தெரியாது அண்ணா! சும்மா சும்மா நிலாவை தூக்கிட்டுப் போயிடுறாரு அந்த கடுப்புல பேசிட்டேன். கொஞ்ச நாள்ல பயம் போனா நார்மலாகிடுவாரு. குழந்தை பொம்மையை விட்டுடும்!” என்றான் பேபி.

அவன் சொன்னதை கேட்டு சிரித்த விமல், “அந்தப் பயம் போனாகூட ஆரலியை விடமாட்டாரு ருத்ரா! முடிஞ்ச அளவு நாம தொல்லை பண்ணாம ஒதுங்கி நிற்கலாம் பேபி. அவள் எப்பவும் நமக்குத் தங்கச்சிதான், அந்த உறவு மாறாது” என்று தம்பிக்கு அறிவுரை சொல்லிவிட்டுப் போனான்.

அறைக்குள் நுழைந்த ருத்ரா அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்த தன் சாக்லேட் மஃபினை கண்டு புன்னகையோடு நெருங்கினான்.

முதல் நாள் இரவு ருத்ராவால் தூங்க முடியவில்லை. பகலில் தூங்கலாம் என நினைத்தால், பார்வதி சோகமாக இருப்பதைக் கண்டு அவரோடே பொழுதை ஓட்டினாள் நிலா.

நேற்று இரவு படுத்ததுதான் தெரியும். அப்படி ஒரு தூக்கம்! தூக்கத்துக்குப் பெயர் போனவளையே தூங்க விடாமல் காதல் செய்து கொள்கிறான் அந்த காதல் பித்தன்.

இதோ மீண்டும் தொல்லை செய்ய வந்துவிட்டான். நிலாவை நெருங்கி படுத்தவன், ஒரு கையால் அவளை தூக்கித் தன்மீது போட்டுக்கொண்டு, கன்னத்தில் மீசை முடிகளால் தேய்த்தான்.

“ஏகரா…” என்று சிணுங்கியபடி அவனுடைய கன்னங்களை தள்ளிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.

விட்டேனா பார்! என்ற குறும்புச் சிரிப்போடு அவள் கழுத்து வளைவில் அழுத்தமாக கடித்து வைக்க,

“அம்மா!” என்ற அலறலோடு எழுந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கழுத்தைத் தேய்த்தபடி ருத்ராவை அழுகை நிறைந்த கண்களோடு பார்த்தாள்.

“டைம் ஆச்சு மஃபின்! ரெடியாகிட்டு வா வெளியே போகலாம். நிறைய ஷாப்பிங் இருக்கு!” என்று சாதாரணமாக சொன்னவனை நன்றாக முறைத்தாள் நிலா.

“இப்போ ஷாப்பிங் போகத்தான் தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பினியா? வலிக்குது ருத்ரா!” என்று சோர்வாக சொன்னவளோ கோபத்தில் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

“கல்யாண ஷாப்பிங் மஃபின்! இந்த வாரமே கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்” என்ற ருத்ராவின் குரல் அமைதியாக வந்தது.

அவனுடைய கல்யாணம் என்ற வார்த்தையில் நிலா சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“எப்பவும் நீ நினைக்கிறதுதான் நடக்கணுமா ஏகரா? இந்த வாரமே நமக்கு கல்யாணம்னு நீ சொன்னா உடனே நானும் ஐ கல்யாணம்னு குதிக்கணுமா? 

இந்த தடவை நான் சொல்றேன். இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் கொஞ்சநாள் போகட்டும்” என்று சிடுசிடுத்தாள் நிலா.

நிலாவிடமிருந்த இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுக்காக இத்தனை அவசரமாக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துகொண்டு வந்திருக்க, அவளோ கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாள்.

பதில் சத்தம் இல்லை என்றதும் மெதுவாகத் திரும்பிய நிலா, ருத்ரா என்ன செய்கிறான் என்று பார்க்க,

கண்கள் சிவந்து அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த பார்வையில் பயம் எழுந்தாலும், அவன் இஷ்டத்துக்கு ஆடக்கூடாது என்ற முடிவோடு “கொஞ்ச நாள் போகட்டும்! கேப் குடு, சீரியஸா மூச்சு முட்டுது!” என்றாள்.

“மூச்சு முட்டுகிறதா?”

கண்களை மூடி கோபத்தை அடக்கிய ருத்ரா, “ஃபைன்! டேக் யுவர் டைம்!”

என்று இரும்புக் குரலில் சொல்லிவிட்டு போனான்.

கதவு அடித்துச் சாற்றப்பட்ட சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்த நிலாவுக்கு அவனுடைய கோபத்தைக் கண்டு அலுப்பாக இருந்தது.

“என்ன சொன்னாலும் கோபம் வருது!

போகட்டும்! அவன் நார்மலா பிஹேவ் பண்ற வரை கல்யாணம் ஆகாம இருக்குறது தான் பெட்டர்!” என்ற முடிவோடு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

நல்லது டைம் எடுத்துக்கோ என்று 

போய்விட்ட மகாராசாவின் செயல்களை நினைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கி கீழே வந்தாள் நிலா.

அவளுடைய முகத்தில் யோசனை அப்பட்டமாகத் தெரிந்தது. 

அவளுடைய யோசனையை கலைத்தது விமலின் குரல். “நிலா எங்க கிளம்பிட்ட? சாப்பிட வா நேரம் ஆகுது!”

என தங்கையின் கைகளைப் பிடித்து இழுத்து சென்றான்.

“நானே வரேன் அண்ணா! கையை விடு, நான் என்ன சின்னக் குழந்தையா?”

“நீ சின்னக் குழந்தை இல்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா உன் பின்னாடி சுத்துற பெரிய குழந்தையை நினைச்சாத்தான் பயமா இருக்கு!”

நிலா சட்டென்று அவனைப் பார்த்தாள்.

“யாரைச் சொல்ற?”

“வேற யாரு? உன் ஏகரா சாரைத்தான்!”

“அண்ணா!”

“சரி சரி கோபப்படாத! முதல்ல சாப்பிடு உன்னோட காதல் பஞ்சாயத்தை அப்புறம் பேசிக்கலாம்!” என அவளை நாற்காலியில் அமர வைத்தவன், தானே உணவைப் பரிமாறினான்.

சுற்றிலும் பார்வையைச் சுழற்றிய நிலா, “அம்மா, அப்பா எங்க காணோம்?” என்று கேட்டாள்.

“ருத்ரா உங்க கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டு போனாரு. நடராஜன் தாத்தாவை பார்க்கப் போயிருக்காங்க, இப்போ நான் பேச வந்தது வேற விஷயம்”

“என்ன அண்ணா?”

“இன்னும் இரண்டு நாள்ல சரபனோட விசாரணை முடிஞ்சு கோர்ட்ல ஹியரிங் வருது. ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்” சரபன் பெயரைக் கேட்டதும் நிலாவின் முகம் மாறியது.

சரபனின் வழக்கு முடிந்ததும் நிலாவின் குடும்பம் பெங்களூருக்கு கிளம்ப வேண்டும். அவளுக்காகத்தான் அனைவரும் சென்னைக்கு வந்திருந்தனர். 

வேலைகள் முடிந்ததும் மீண்டும் தங்களுடைய வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. விமல் அப்பா தனியாக மருத்துவமனையின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

“மறக்குற விஷயம் இல்லை அண்ணா! அவனுக்குத் தண்டனை கிடைக்கிறதை என் கண்ணால பார்க்கணும். தண்டனை முடிஞ்சு வெளிய வந்தாலும் அவனை அவ்வளவு ஈசியா விடமாட்டேன்”

சரபன் செய்த தவறுகளுக்கு அவனை சட்டத்தின் நிறுத்தி தண்டனை வாங்கித்தர நினைத்தாள்.

அவனை கைது செய்துவிட்டார்கள். இனி நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்துவிட்டால் தன் மனதை உறுத்தும் பாரம் கொஞ்சமாவது குறையும் என்று நம்பினாள்.

“தங்கச்சி பொறுமை. அவன் வெளிய வர்றதைப் பத்தி இப்பவே யோசிக்காத, முதல்ல உயிரோட இருந்தா வரட்டும்!”

என விமல் சாதாரணமாக சொல்ல அதிர்ந்து போய் பார்த்தாள் நிலா.

“என்ன சொல்றீங்க? அவனுக்கு…”

“ஏய் என்னை பார்க்காத தாயே! நான் எதுவும் பண்ணல” என்று பதறினான் விமல்.

“அண்ணா!” என்ற நிலாவின் அழுத்தமான குரலில்,

“உனக்கு ருத்ரா பத்தி தெரியாதா? அப்புறம் எதுக்கு என்கிட்ட கேள்வி கேட்கிற?”

தன் அரைகிறுக்கு காதலனை பற்றி நன்கு தெரிந்தும், சரபனை அவன் சும்மா விட்டிருப்பான் என நினைத்தது தவறு என்று நொந்து போனாள்.

“என்ன நடந்துச்சுனு சொல்றதுக்கு எனக்கு பர்மிஷன் கிடையாது. பட், துரோகத்தோட பலனை சரபனுக்கு இரண்டு மடங்காகக் குடுத்துட்டுத்தான் விட்டிருக்காரு உன் ஏகரா சார். ஆனாலும் மனுஷன் சரியான பிடிவாதக்காரர்!”

என விமல் பெருமூச்சு விட்டான்.

“கடவுளே! என்ன பண்ணானோ தெரியல” என்று முணுமுணுத்தவள், அடுத்த நொடியே கல்யாணக் கவலையில் சலித்தாள்.

“ஆமாம் பிடிவாதம்! கல்யாணம் உடனே வேண்டாம் கொஞ்சம் கேப் விடுன்னு சொன்னேன். அதுக்கு கோவிச்சிட்டு போயிட்டாரு” என்று புலம்பியபடியே சாப்பிட்டு முடித்தாள்.

ருத்ராவை நினைத்தாலே ஒருபக்கம் கோபம் வருகிறது, இன்னொரு பக்கம் அவன் சரபனை என்ன செய்திருப்பானோ! என்ற கவலையும் இருந்தது.

“அவருக்கு ரொம்ப கோவம் வருது, சட்டம் இருக்கு! கோர்ட் இருக்கு! போலீஸ் இருக்காங்க. அவனை கைதி பண்ணி தண்டனை வாங்கிக் குடுத்திருக்காம ஏதேதோ பண்றாரு! இப்போ கல்யாணம் வேற!”

“அதை அவர்கிட்டயே கேளு. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ருத்ரா சாதாரணமா ஒரு விஷயத்தை விட்டு குடுக்க மாட்டாரு, அதையும் மீறி அவருக்கு மறுப்பு சொல்றது ஆரலின்ற ஒரே காரணத்துக்காக சாதாரண கோவத்தோட போய்ட்டாரு போல!” என தோளை உலுக்கி விட்டு போனான் விமல்.

உண்மைதான். அவளிடம் மட்டும் கொஞ்சம் இறங்கிப் போகிறான். அதுவும் தன்னுடைய தேவைக்காகவும், காதலுக்காகவும் மட்டுமே! மற்றபடி அவனுடைய பிடிவாதத்துக்கு முன்னால் யாராலும் நிற்க முடியாது.

வீட்டில் ஆட்கள் இல்லாமல் போர் அடிக்க, ருத்ரா ஆபிஸ் கிளம்பினாள் நிலா.

பத்ரன் ஆபிஸ் போக அவளுக்கு விருப்பமில்லை. தேவையில்லாமல் அவன் ஏதாவது பேசினால், தங்கைக்காகக் கோபப்பட்டு இவளும் பேசிவிட்டால், அது அவனுக்கு சங்கடமாக இருக்கும் என்பதால் நேராக வண்டியை ஏழரை நாதனிடம் விட்டாள்.

லாபியில் இருந்த பெண்ணிடம் ருத்ராவை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டாள்.

“மேடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சார் பிசியாக இருக்கார்! ஃபிரீ ஆனதும் அவரே உங்களைக் கூப்பிடுவார்”

என நிலாவை ஒரு தனி அறையில் அமர வைத்துவிட்டுச் சென்றான்.

சரி, திருந்தி வேலை பார்க்கிறான் போல என்று மனதிற்குள் நினைத்தவள் பொறுமையாகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

அரைமணி நேரம் ஒரு மணி நேரமாகியும் அவன் வரவில்லை.

நிலா முதலில் அமைதியாக அமர்ந்திருந்தாள். பிறகு போனை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள்.

‘என்னடா இது?’ என்று சலித்தபடி அமர்ந்திருந்தவள் பொறுமை ஒரு கட்டத்தில் முற்றிலும் பறந்துவிட்டது.

நாம பேசுனதுக்கு பழி வாங்குறான் போல! என பல்லைக் கடித்தவள், யாரையும் கண்டுகொள்ளாமல் அவனுடைய அறைக்கதவை படாரென்று திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கு அவன் செய்துகொண்டிருந்த முக்கியமான வேலையை கண்டு கோவம் வெடித்து சிதறியது. பின்ன சார் தீவிரமாக கேம் அல்லவா விளையாடிக்கொண்டிருந்தார். 

“அடப்பாவி! நான் ஒரு மணி நேரமா உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அறை அதிர கத்தினாள் நிலா.

அவள் வந்ததை உணர்ந்திருந்தாலும் ருத்ரா நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுடைய பார்வை முழுவதும் போனிலே இருக்க, ருத்ரா அலட்சியம் தன்னை அவமானப்படுத்தியதை போல உணர்ந்தாள்.

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!