அந்த மீட்டிங் ஹால், குண்டூசி விழுந்தால் கூட கடப்பாரை விழுவது போல சத்தம் எழும் அளவுக்கு அமைதியாக இருந்தது. AA கார்ப்பரேட் குழுமத்தின் அத்தனை முக்கியமான உறுப்பினர்களும் அந்த அறையில் இருக்க, முக்கியமானவன் மட்டும் இன்னும் வரவில்லை.
தன்னை முறைத்துக்கொண்டிருந்த மகாதேவனைக் கண்டு திருதிருவென முழித்த சரபன், “அங்கிள்! இப்போ ருத்ரா வந்திடுவான் கோவப்படாதிங்க” என அவரை சமாதானம் செய்திட,
“இதையே ஒரு மணி நேரமா சொல்லிட்டு இருக்கிங்க சரபன். ஷேர் ஹோல்டர் மீட்டிங் கூட வர முடியாத அளவுக்கு குரூப் CEO-க்கு அப்படி என்ன வேலை? ஃபவுண்டர், கோ-ஃபவுண்டர், பிரசிடென்ட் எல்லாரும் இருக்குற வேலைகளை விட்டுட்டு உட்கார்ந்திருக்குறது அவருக்கு தெரியாதா? இல்ல வேணும்னே எங்களை வெயிட் பண்ண வைக்குறாரா?”
எரிச்சலாக வந்தது பத்ரனின் குரல். மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பதில் டென்ஷன் ஏறிப்போய் இருந்தான்.
‘இவன் வேற புரியாம பேசுறான்! CEO முழுசா வந்தா போதும்னு நானே கவலைல இருக்கேன்’ என முணுமுணுத்துக்கொண்டு போனை எடுத்துக்கொண்டு வெளியே போனான் சரபன்.
“சார்! ருத்ரா சார் போன் எடுக்கல” என்று கவலையாகச் சொன்ன பி.ஏ. விமலை முறைத்த சரபன்,
“அவனைத் தனியா வெளிய அனுப்பாதிங்கனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்! உங்க எல்லார் மண்டையை அவன் உடைச்சாலும், உங்க கவனம் ருத்ரா வெளிய போனா தடுக்குறதுல மட்டுமே இருக்கணும் புரியுதா?”
“புரியுது சார் நாங்களும் அவரைத் தடுக்க நினைச்சோம். அட்லீஸ்ட் டிரஸ்ல டிராக்கிங் டிவைஸ் வைக்கலாம்னு பார்த்தா, சார்ட்ஸ் மட்டும் போட்டுட்டு வெளிய போய்ட்டாரு” எனப் பாவமாக சொன்னான் விமல்.
பாவம்… கண்ணு அவிந்து போய் வேலை பார்க்கும் பெண்மணி அலறிக்கொண்டு ஓடிய சம்பவம் மறக்குமா!
“இந்த தடவை ஜட்டியாவது போட்டுட்டுப் போனானு சந்தோசப்படு. போன தடவை துண்டோட போனவனைப் பிடிக்கப்போய், துண்டு கழண்டு பெரிய கலவரமாகிப்போச்சு! கொஞ்சம் விட்டிருந்தா அவன் அம்மணக்கட்டை போஸ் பார்த்து நான் செத்துருப்பேன்” என்ற சரபனை சார் எனப் பயத்தோடு பார்த்தான் விமல்.
“பதறாத, உனக்கு அதுபோல சூழ்நிலை வந்தா கண்ணை மூடாம ருத்ரனை தடுக்குறதுல குறியா இருக்கணும்.”
“எதே?” என்று உள்ளே அதிர்ந்தாலும், வெளியே மண்டையை ஆட்டி வைத்தான் விமல்.
தன் போனிலிருந்து ருத்ரன் எண்ணுக்கு அழைத்து சோர்ந்து போனவனோ புலம்ப ஆரம்பித்து விட்டான்.
“இவன் போனை எடுக்காம கொல்றான். உள்ள போனா அவன் முறைச்சே கொல்லுவான். பேசாம நான் எங்கையாவது ஓடிப்போய்டவா!”
சரபனின் நிலையைப் பார்த்துப் பாவமாக இருந்தது.
“சார்… சார்… ருத்ரா சார் வந்துட்டாரு!” எனக் கத்திய விமலின் சத்தத்தில் வேகமாக சரபன் திரும்பிட, அவன் நினைத்தது போல சட்டை போடாமல், பரந்து விரிந்த மார்பழகைக் காட்டியபடி, சட்டையைத் சுருட்டி தோளில் தொங்கவிட்டு, வெறும் ஜீன்ஸ் மட்டும் அணிந்து, வாயில் சுருட்டை வைத்துக்கொண்டு ஆண் சிலுக்கு போல கவர்ச்சியாக வந்தவனைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டான்.
“ஏன்டா இப்படி பண்ற? அந்தச் சட்டையைப் போட்டுட்டு வரதுல உனக்கு என்ன பிரச்சனை? உள்ள இருக்குற மொத்தக் கூட்டமும் உன் மேல கொலைவெறில இருக்காங்க. நீ வேற பத்துமணி காட்சி போல வந்திருக் ருத்ரா, முதல்ல டிரஸை ஒழுங்கா போட்டுட்டு உள்ள வா!”
அவன் எங்கே சரபன் பேச்சைக் கேட்டான்? படாரென கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான் ருத்ரா. அவன் பின்னே மூன்று பேர், பைகளையும் லேப்டாப்புகளையும் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே போனார்கள். இவன் அடங்கமாட்டான் என்று எண்ணியபடி சரபன் அவனை தொடர்ந்தான்.
ருத்ராவைக் கண்டு பத்ரனின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது. அதுவும் அவன் தோரணையைப் பார்த்துக் கடுப்பாகி கோபமாக எழுந்தவனைத் தடுத்து அமரவைத்தார் மகாதேவன்.
கம்பீரமாக சேரில் அமர்ந்த ருத்ரா, தன் ஆட்களிடம் கண்ணைக் காட்டிட, அனைத்து உறுப்பினர்கள் முன்பும் சில பேப்பர்கள் வைக்கப்பட்டது.
‘நீங்க பேசவே வேண்டாம்! டீடெயில்ஸ் முன்னாடி இருக்கு. தேவையான கரெக்ஷன்ஸை இவங்ககிட்ட சொல்லுங்க’ என்ற தோரணையில் அமர்ந்திருந்தவனை வெறிகொண்டு முறைத்தான் பத்ரன்.
அங்கு அமர்ந்திருந்த சேர்மேன் நடராஜன் ருத்ராவைப் பெருமையாய் பார்க்க, மகாதேவன் அவரை முறைத்தார்.
“சார், எனி டவுட்ஸ்? ருத்ரா சாரோட ஷேர்ஸ் இப்போ 40 சதவீதம் அதிகமாகியிருக்கு. சோ AA group சம்மந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் சேர்மேன் பத்ரன் சாரை டிஸ்கஸ் பண்ண வேண்டியது இல்லை” என்று ருத்ராவின் பி. ஏ பேசிமுடிக்க, பத்ரன் சேரை கோபமாகத் தள்ளிவிட்டு வெளியே போய்விட்டான்.
அழகாகத் திட்டம் போட்டு, இன்று ருத்ராவை எக்ஸிகியூட்டிவ் பதவியிலிருந்து கீழே இறக்கிவிடலாம் என்று 38% பங்கோடு வந்தவனை, வெறும் 2% வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமல்லாமல், அவனைக் கேட்காமல் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெற்றுவிட்டானே!
கோபமாகப் போகும் பத்ரனை சமாதானம் செய்திட மகாதேவன் பின்னாலேயே எழுந்து போனார்.
மற்ற பங்குதாரர்கள் அமைதியாகக் கலைந்து போக, “ருத்ரா…” என்று தன்னை அழைத்த நடராஜனைப் புருவம் உயர்த்தி, என்ன என்பது போல் பார்த்தான்.
“வீட்டுக்கு வந்துட்டுப் போயேன். உன் பாட்டி, அம்மா உன்னைப் பார்க்க ஆசைப்படுறாங்க!” என்று மெதுவாகச் சொன்னார்.
வயது முதிர்வால் தளர்ந்திருந்தாலும், கம்பீரமாக அமர்ந்திருப்பவரைக் கண்டால் மற்றவர்களுக்கு மரியாதை தோன்றும். அவனுக்கு அப்படி இல்லை போல!
“டைம் இல்ல…” என்று சொன்னபடி சேரிலிருந்து எழுந்தான்.
“சொந்தப் பேரனை, மகனைப் பார்க்க அவங்க ஏங்கிட்டு இருக்காங்க. உனக்கு நேரமில்லைனு அவங்களை ஒதுக்குறது சரியில்லைப்பா”
“ம்ச்…” எனச் சுருட்டை அணைத்தவனோ, உடலை நெட்டி முறித்தான்.
“நீ எங்க போற? எதைத் தேடுறனு எங்களுக்குத் தெரியும் ருத்ரா அர்த்தமில்லாத தேடல் உன் வாழ்க்கையை அழிச்சிடப்போகுது. கவனமா இருப்பா!” என்ற AA Group சேர்மேனான தன் சொந்த தாத்தாவைக் கண்டுகொள்ளாமல் வெளியே போய்விட்டான் ருத்ரா.
போகும் அவனை வேதனையோடு பார்த்தது நடராஜனின் விழிகள்.
அருமை பெருமையோடு வளர்த்த மூத்த பேரன், தங்கள் கண்முன் நிலைகுலைந்து போயிருப்பதை நினைத்து நெஞ்சில் வேதனை எழுந்தது.
பக்கத்து அறையில் பத்ரன் ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்தான்.
“அவனுக்கு என்ன தகுதி இருக்குனு இந்த சீட்ல உட்கார்ந்திருக்கான்? AA Group CEO-வோட பெயர் வெளி ஆட்களுக்கு மத்தியில் எவ்வளவு டேமேஜ் ஆகியிருக்கு தெரியுமா? நான் இந்த இடத்துக்கு வர தினமும் உழைக்கிறேன் அப்பா, இனியும் உழைப்பேன் ஆனா அவன் குடி, போதைன்னு ஜாலியா சுத்துறான். அவனைப் பார்த்தாலே ஆத்திரமா வருது”
“போதும் பத்ரா! அவன் உன்னோட அண்ணன்… உறவை மறந்துட்டுப் பேசுற!” என்றபடி கோபமாக அறைக்குள் வந்தார் நடராஜன்.
“அண்ணனா? அவனை அண்ணன்னு வெளிய சொல்ல வெட்கப்படுற அளவுக்கு உங்க பேரன் நடத்தை இருக்கு! கொஞ்சமாவது இந்த நிறுவனத்துமேல அக்கறை இருந்தா தினமும் ஆபீஸ் வரச் சொல்லுங்க. பாதி நாள் பைத்தியம் போல ரூமுக்குள்ள இருப்பான். மீதி நாள் எங்கையாவது ஓடிப்போயிருவான் ” என்று இளக்காரமாகப் பேசிய சின்ன பேரனைத் தன் தடியால் தோளில் அடித்தார் நடராஜன்.
“அப்பா கீழ விழுந்துறாதிங்க!” என மகாதேவன் அவரைப் பத்திரமாகச் சேரில் அமரவைத்தார்.
“அவன் குடிக்குறானு கவலைல நீ பேசல, குடிச்சு அழியாம இங்க ஏன் வரான்னு பேசுறியே! ருத்ரா போலத்தான உன்னையும் வளர்த்தோம். நீ மட்டும் ஏன்டா சுயநலவாதியா மாறி நிக்குற? உன் பையனை பைத்தியம்னு சொல்றான் நீ வேடிக்கை பார்த்துட்டு நிக்குற மகாதேவா!
நல்லா கேட்டுக்கோங்க உங்க மூனு பேருக்கும் 33% பங்குகள் சரியா பிரிச்சுக் குடுத்தேன். யாரைப் பைத்தியக்காரன், குடிகாரன், சோம்பேறினு சொல்றியோ அவன் எந்த இடத்திலும் ஷேர்ஸை இழக்கல. இன்னும் சொல்லப்போனா கூட ஷேர்ஸ் வாங்கி உங்களை விடத் திறமையானவனா வந்து நிக்குறான். ருத்ரா ஆபீஸ் வரல, வேலை பார்க்கலைனு அழுகுறியே!
நீ நாள் முழுக்க இங்க உட்கார்ந்து மூச்சு முட்டக் கத்துக்குற ஒரு விஷயத்தை, என் ருத்ரா இங்க வராமலே அரைமணி நேரத்துல புரிஞ்சுப்பான். அவன் என் பேரன்! என் ரத்தம்!
அவனுக்கு இருக்குற பிரச்சனையைப் பெருசாக்கி பைத்தியம்னு ஊரு முழுக்கப் பட்டம் கட்டி ரசிக்கிற ஆட்களுக்கு, நான் சிங்கம்னு தனியா நின்னு காட்டி ஜெயிப்பான். அப்போ உங்க முகத்தை எங்க கொண்டு போய் வைப்பிங்கனு பார்க்குறேன்” என்று ரோசமாகச் சொல்லிவிட்டு போனார் நடராஜன்.
“எல்லாருக்கும் அவன்தான் முக்கியம் அப்போ நான் எதுக்கு?” என ஆவேசமாகக் கேட்ட பத்ரன், “நான் கிளம்புறேன் அப்பா. உங்க பைத்தியக்காரப் பிள்ளைகிட்ட நீங்களே பேசுங்க” என்று வெளியே போய்விட்டான்.
‘அவன்கிட்ட என்ன பேசுறது? நான் பேசுனா அவன் பதிலே பேசாம உட்கார்ந்திருப்பானே!’ என நொந்து கொண்டு மீட்டிங் அறைக்குள் போக, சேரில் அமர்ந்து சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தான் சரபன்.
“எருமை! எருமை!” என்ற மகாதேவனின் சத்தத்தில் பதறியடித்து எழுந்த சரபன்,
“அங்கிள்…” என்று முழிக்க,
“எங்க நான் பெத்த எருமைய? நீ மட்டும் விளையாடிட்டு இருக்க?”
“அவன் அப்போவே போய்ட்டான் அங்கிள், பைல் வாங்கிட்டு நானும் கிளம்பிடுவேன்”
“உன் ஃபிரெண்ட் என்னதான் ஐடியால இருக்கான். வீட்டுக்கு வரச் சொல்லி நீயாவது சொல்லக்கூடாதா! ஹாஸ்பிடல் ஒழுங்கா போறானா? மாத்திரை டைமுக்கு எடுத்துக்குறானா?” என்று ஆதங்கமாகக் கேட்டாலும், உண்மையான வருத்தத்தோடு வந்தது அவர் குரல், பெற்ற தகப்பன் அல்லவா!
“போராடி மந்த்லி செக்கப் கூட்டிட்டுப் போய்டுவேன் அங்கிள்! அவனுக்குத் தெரியாம சாப்பாட்டுல மாத்திரை கலந்து குடுத்துருவோம். முன்னவிட இப்போ அடிக்கடி காணாம போய்டுறான். எங்க போறானு தெரியல! அதை நினைச்சா தான் பயமா இருக்கு, மத்தபடி அவன் நல்லா இருக்கான்”
“சரி கொஞ்சம் அவனை கவனமா பார்த்துக்கோ சரபா. எங்களை கிட்ட சேர்க்கல ஆனா உன்னைப் பக்கத்துல அனுமதிச்சுருக்கான். உன்னை நம்பி தான் அவனைத் தனியா விடுறோம்”
“நான் பார்த்துக்குறேன் அங்கிள், கவலைப்படாதீங்க… இன்னும் பத்து நாள்ல AA கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பா டெண்டர் நாம கோட் பண்ணணும்”
“எப்பவும் பத்ரன் தான போவான். இந்தத் தடவையும் அவனே போகட்டும்!” என்றவரைக் கண்டு தயக்கமாக,
“இல்ல அங்கிள், இந்த தடவை ருத்ராவும் சேர்ந்து வரதா சொல்லிருக்கான். பத்ரன்கிட்ட சொன்னா கத்துவான், அவனுக்கு எங்க இரண்டு பேரைக் கண்டாலே பிடிக்காது! சோ நீங்க அவன்கிட்ட விஷயத்தைச் சொல்லிடுங்க. நாங்க நேரா டெண்டர் விடுற இடத்துக்கு வந்திடுவோம்” என்றான்.
“சரி, நான் சொல்லிக்கிறேன் நீ கிளம்பு” என்றதும் கிளம்பிவிட்டான் சரபன்.
மகன்கள் இருவரையும் நினைத்துப் பெருமூச்சு விட்டபடி நகர்ந்தார் மகாதேவன்.
நடராஜன் நிறுவிய AA நிறுவனத்தை, அவர் மகன் மகாதேவன் திறம்பட நடத்தினார். இப்போது தலைமை ருத்ராவுக்கா? பத்ரனுக்கா? எனப் போட்டி நடக்கிறது.
நடராஜன், அபிராமி தம்பதிகளின் ஒரே மகன் மகாதேவன். அவருக்கு சாம்பவி என்ற பெண்ணைச் சந்தோஷமாகத் திருமணம் செய்து வைத்தார்கள். இத்தனை பெரிய பணக்காரக் குடும்ப மருமகளாக இருந்தாலும் சாம்பவி பொறுப்பானவர், நல்ல மருமகள்.
இருவருக்கும் முதல் மகனாகப் பிறந்தவன் ருத்ரா… ஏகதச ருத்ரா… சிவனின் பதினொரு ருத்ர வடிவங்களின் மறுபிறப்பாய் தன் பேரன் பிறந்திருப்பதாக எண்ணி மகிழ்ந்து போன நடராஜன், ஏகதச ருத்ரா என்று அவனுக்குப் பெயர் வைத்து மகிழ்ந்தார்.
ருத்ராவுக்கு அடுத்து இரண்டு வருடங்கள் கழித்துப் பிறந்தவன் பத்ரன்… ருத பத்ரன்… அண்ணனைப் போலவே கோபக்காரன். ருத்ரனாவது எதிரியின் ஆட்டத்தைப் புருவ நெளிப்போடு பார்த்துவிட்டு அழிப்பான். இவன் அழித்துவிட்டுத்தான் கண்களை திறந்து பார்ப்பான், அத்தனை கோபக்காரன்.
சிறுவயதிலிருந்து ஒற்றுமையாய் இருந்த அண்ணன் தம்பி இருவரும், கடந்த ஏழு வருடமாய் எலியும் பூனையுமாகச் சுற்றுகிறார்கள். அதில் அதிக வருத்தம் பெரியவர்களுக்கு,
32 வயதாகும் ருத்ரா ஏழு வருடங்களுக்கு முன்னால் நடந்த விபத்துக்குப் பிறகு, நரம்பியல் பாதிப்புடன் தொடர்புடைய Delusional Misidentification Syndrome-ன் ஒரு பகுதியால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை ஒன்று சொல்லும், உணர்வுகளோ அதை மறுத்து உண்மைக்கு எதிராக ஒன்றை உணரும். பெரும் போராட்டமான நிலையில், அவன் சொந்த குடும்ப ஆட்களை அடையாளம் கண்டுகொண்டாலும் நம்பிக்கை இல்லாத உணர்வு.
அவனுடைய மூளை அவர்கள் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும். ஆனால் அவர்கள் முகத்தோடு இணைந்திருக்க வேண்டிய தெரிந்தவர்கள் என்ற உணர்வு சரியாக உருவாகாமல், அவன் முன் நிற்பவர் தனக்கு பரிட்சையம் இல்லாத நபர்கள் என்ற தவறான நம்பிக்கை உருவாகும்.
கடைசியாக யாரும் வேண்டாம் எனத் தனி பங்களாவில் இருந்துவருகிறான்.
ருத்ரா ஒருவனை மட்டுமே நம்பி அருகில் சேர்ப்பான், அவன் ருத்ராவின் ஆருயிர் நண்பன் சரபன். சொந்தங்களுக்கும் ருத்ரனின் நிலை புரியாமல் இல்லை.
மாத்திரை மூலம் அவனுடைய delusion எனப்படும் பிரம்மைகளையும், பரபரப்பான நிலையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று மருத்துவர் உறுதியளித்திருந்தாலும், மாத்திரை சாப்பிட மாட்டேன், மருத்துவரைப் பார்க்க போக மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்து மறுப்பவனை சரபனால் கையாள முடிவதில்லை. தவறு எனத்தெரிந்தே அவனுக்கே தெரியாமல் தினமும் சாப்பாட்டில் மாத்திரைகளைக் கலந்து கொடுக்கிறான்.
திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவான் ருத்ரா! பத்துப் பேர் கொண்ட குழு வைத்து அவனை கண்காணித்தாலும், எளிதாகத் தப்பிவிடுவான்.
அதிகமாகக் கோபப்படுவது, கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக எதிரில் இருப்பவரைத் தாக்குவது என நாளாக நாளாக ருத்ராவின் நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறதே தவிர, முழுமையாகக் குணமடையவில்லை ருத்ரா.
ஏற்கனவே தான் நினைப்பதை மட்டுமே செய்யும் குணமுடையவன். இப்போது வந்திருக்கும் நரம்பியல் திருப்பத்தால் முற்றிலும் பெயர் கெட்டுப்போனவனாய் மாறி நிற்கிறான்.
அவனுக்குப் பைத்தியம் என ஹை சொசைட்டி மக்களுக்கு இடையே விஷயம் கசிந்துவிட, ஆசையாக மகனுக்குத் திருமணம் செய்துவைக்க நினைத்து பெண் பார்க்கப் போன சாம்பவி, ‘பைத்தியக்காரனுக்குப் பொண்ணு இல்ல’ என்று பெண் வீட்டினரின் கோபமான பேச்சில் விக்கித்து போனார்.
அவன் திருமணம் தள்ளிப்போக, 30 வயதான பத்ரனின் திருமணமும் அடுத்தக்கட்டத்தை எட்டாமல் நிற்கிறது. பழையபடி வாழ்க்கை மாறாதா? என்ற ஏக்கத்தில் இருந்தார்கள் நடராஜன் குடும்பத்தினர்.
இவர்கள் வருத்தம் துளியும் பாதிக்காமல், தன்னறையில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தான் ஏகதச ருத்ரா.
“எங்க போய்ட்டு வந்த ருத்ரா? உன்னைப் போக வேண்டாம்னு சொல்லல, அட்லீஸ்ட் எங்க போறேனு சொல்லிட்டு போ. பத்து நாள் சொல்லாம கொள்ளாம மறைஞ்சு போய்ட்ட இங்க எவ்வளவு பதட்டம் தெரியுமா!” என்ற சரபனை அழுத்தமாகப் பார்த்தான் ருத்ரா.
“மச்சி சொன்னா கேளுடா! ஆரலி செத்துப்போயிட்டா, நீ அவ சாவுக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சில உண்மையை ஏத்துக்காம ஏதேதோ பண்ணிட்டு இருக்க! குற்ற உணர்ச்சில சாவு வரைக்கும் போய்ட்டு வந்துட்ட ருத்ரா. இப்போ உனக்கிருக்கிற பிரச்சனையைச் சரி பண்ணாம, காடு மேடுனு அலைஞ்சாலும் செத்தவ திரும்பி வரமாட்டா!”
அவ்வளவுதான். சரபனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிவிட்டான் ருத்ரா.
“டேய்… டேய்… விடுடா!” என்று மூச்சுக்கு ஏங்கி நண்பன் கத்துவது காதில் விழுந்தாலும், கைகளோ அவனை இறுக்கிக் கொன்றுவிடு என உத்தரவிட்டன.
கடைசி நிமிடத்தில் பொத்தென அவனை கீழே விட, பலமாக இரும ஆரம்பித்தான் சரபன்.
“ஆரலி சாகல மச்சான்! அவ என் பொண்டாட்டி” என்றவனைப் பயத்தோடு பார்த்தான் சரபன்.
“ஏன் பயப்படுற? இங்க வா, உட்காரு” என நண்பனைத் தூக்கி அருகில் அமரவைத்த ருத்ரா,
“அவ என்னை ஏமாத்தி எங்கையோ ஒளிஞ்சிருக்கா. சீக்கிரம் கண்டுபிடிச்சிருவேன்” என்று சிரித்தபடி தன் பர்ஸில் இருந்த போட்டோவைப் பார்த்தான்.
அதில் அதிக எடையோடு, நிறம் குறைவாய், ஒரு பதினாறு வயது சிறுபெண் சிரித்த முகமாக இருந்தாள்.
அவன் சிரிப்பில் எச்சில் விழுங்கிய சரபன்,
“மச்சான், நீ கோவப்பட்டாலும் பரவாயில்ல! முதல்ல நான் சொல்ற விஷயத்தை மண்டைல ஏத்திக்கோ, ஆரலி உன் மனைவி கிடையாது நம்ம எஸ்டேட்ல வேலை பார்த்த சின்ன பொண்ணு.
இன்னொரு விஷயம், உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல. நாம கடைசியா போன டிரிப்ல உன் கூடவே இருந்த எனக்கு நல்லா தெரியும்!”
“ஓஓஓ…” என்று யோசனையாய் சொன்ன ருத்ரா,
“சரி, உங்க யாருக்கும் தெரியாம நாங்க கல்யாணம் பண்ணிருப்போம் இப்போ அவளைக் கண்டுபிடிச்சு ஊர் பார்க்க இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அசால்ட்டாகச் சொல்லிட, இன்னும் பயந்து போய் அவனை பார்த்தான் சரபன்.
இதற்கு மேல் எதிர்த்து பேசினால் உசுரு இருக்காது என்று புரிந்து வாயை மூடிக்கொண்டான். ஆரலியை இவன் மனைவியாக நினைக்கும் கொடுமையை டாக்டரிடம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டான்.
“ஆரலின்ற பொண்ணு இருந்தது உண்மையா? அந்தப் பொண்ணை நிஜமா ருத்ரா காதலிச்சாரா?”
“ஆமாம் டாக்டர்! ஆரலி 16 வயசு சின்ன பொண்ணு. எஸ்டேட் வீட்டுல பாட்டிக்கு துணையா வேலை பார்க்க வருவா! ருத்ராவுக்கு அந்தப் பொண்ணைப் பார்த்தாலே பிடிக்காது திட்டுவான், அடிப்பான்.
நாங்கதான் அந்தப் பொண்ணுக்குப் பாவப்பட்டு சாப்பாடு குடுத்து வீட்டுக்கு அனுப்பிவைப்போம். இரண்டு பேருக்கும் காதல் வர வாய்ப்பே இல்ல!”
“அதெப்படி உறுதியா காதல் இல்லைன்னு சொல்றிங்க! ருத்ராவுக்கு அப்போ 25 வயசு உங்களுக்கு தெரியாம இரண்டு பேருக்குள்ள காதல் இருந்திருக்கலாமே!”
“ஐயோ டாக்டர்! அந்தப் பொண்ணு இப்படித்தான் இருப்பா, நீங்களே பாருங்க… உருவகேலி பண்ணக்கூடாது இருந்தாலும் சொல்றேன் ஆரலிக்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுலயே அதிக எடையோட, கருப்பு கலர்ல இருக்குற பொண்ணை முகம் சுளிச்சுப் பார்த்துட்டுப் போவான்!”
“அப்போ அவர் மூளையில் ஏதோ ஒரு இடத்துல விருப்பம் இல்லாத ஆளா படிஞ்சிருந்த பொண்ணு, ஆக்ஸிடென்ட் trauma ஆனதுக்குப் அப்புறம் காதலியா இல்லாம, மனைவியா அவர் மூளை போர்ட்ரெய்ட் பண்ணிருக்கு! அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வாங்களேன் அவ மூலமா ருத்ரா சரியாக வாய்ப்பிருக்கு”
“டாக்டர் அந்தப் பொண்ணு உயிரோட இல்ல. இன்னும் சொல்லப்போனா, இவன் காரை வேகமா ஓட்டிட்டு போய் ஆக்ஸிடென்ட் பண்ணது கூட ஆரலி இறப்புக்கு அவன் காரணம் என்ற குற்ற உணர்ச்சி.
அந்தப் பொண்ணு இறக்குறதுக்கு முன்னாடி நாள் இவனை பார்த்துப் பேச வந்தா, ருத்ரா பயங்கர கோவத்துல திட்டி அனுப்பிட்டான். வீட்டுக்குப் போற வழியில மண்சரிவு ஏற்பட்டு ஆரலியும், அவளைத் தேடி வந்த பாட்டியும் இறந்துட்டாங்க!
ஒருவேளை ஆரலியை காயப்படுத்தி வெளிய அனுப்பாம இருந்திருந்தா அவள் இறந்துருக்க மாட்டானு குற்ற உணர்ச்சில இரண்டு நாள் ரூமை விட்டு வெளிய வராம இருந்தான்.
அடுத்த நாள் வெளிய போய் ஆக்ஸிடென்ட் பண்ணிக்கிட்டான். அப்போ அசிங்கம்னு விரட்டி அடிச்ச பொண்ணை, இப்போ காதல்னு கதை சொல்லிக்கிட்டு, அதுவும் இறந்துபோன பொண்ணைத் தேடி சுத்துறான். இந்த நோய் சீக்கிரம் குணமாகாதா டாக்டர்?” என்று கவலையாகக் கேட்டான் சரபன்.
“பொதுவா யாருக்கும் விபத்தால DMS வராது சரபன், அது நோயும் கிடையாது நீங்க முதல்ல சரியா புருஞ்சுக்கோங்க. ஆரலி மரணம் தந்த குற்ற உணர்வு, ருத்ராவுக்கு விபத்தில் ஏற்பட்ட traumatic brain injury இரண்டும் சேர்ந்து இந்த misidentification delusion யை ஏற்படுத்தியிருக்கு. நாம தொடர்ந்து டிரீட்மெண்ட் குடுக்கலாம் சரியாக வாய்ப்பிருக்கு, நான் குடுக்குற மாத்திரைகளை கண்டினியூ பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பினார்.
