“ஓகே மஃபின்” என்றவன் அடுத்து பேசும் முன் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அவன் தெளிவாக இருக்கிறான்! ருத்ராவோடு இருக்க வேண்டும் என்றால் கடைசிவரை ஆரலியாக இருப்பது மட்டுமே சாத்தியம். ஒருநாளும் நிலாவாக அவனை நெருங்க முடியாது.
‘வீண் ஆசைகளை மனசுல விதைக்காத நிலா! சீக்கிரம் இதை முடிச்சிடு’ என்று தனக்குள்ளே தைரியம் சொல்லிக்கொண்டாலும், கண்கள் கலங்கியது உண்மை.
“இரண்டு பேர் முகமும் சரியில்லையே, என்ன ஆச்சு?” என்று மகள்களிடம் கேட்டார் சோமசுந்தரம்.
மற்ற வீட்டு அப்பாக்களைப் போல அவர் கிடையாது! பொறுமையாக மகள்களிடம் பேசினார்.
“டான்ஸ் பிராக்டீஸ் அதிகம் அதான் டயர்டா இருக்கேன். வேற ஒன்னும் இல்லப்பா” என்று சிரித்தாள் திகள்விழி.
“நாளைக்கு முக்கியமான டெண்டர் பெங்களூரு போகணும் அப்பா! பெரிய லெவல்ல என்னோட முதல் ப்ராஜெக்ட். சோ, நல்லபடியா முடிக்கணும்னு டென்ஷன்” என்றாள் நிலா.
“என் பொண்ணுங்க வெளி உலகத்தைச் சமாளிக்கிற அளவுக்கு பெருசா வளர்ந்தாலும், இன்னும் எனக்கு குட்டிப் பொண்ணுங்கதான். தேவைன்னா அப்பாகிட்ட உதவி கேட்கத் தயங்கக்கூடாது. உங்களுக்கு அம்மா, அப்பா எந்தச் சூழ்நிலையிலும் நாங்க கூட இருப்போம்” என மகள்களின் தலையை வருடிவிட்டார் சோமசுந்தரம்.
அவர் அன்பில் கண்கள் கலங்கியது! “சரிப்பா” எனத் தலையை ஆட்டினார்கள் இருவரும்.
நிலா போனை பட்டென வைத்ததும் ருத்ராவுக்குக் கோபம் வந்துவிட, “நான் அவளைத் தூக்கிட்டு வரேன்” என்று கிளம்பியவனைச் சரபன்தான் அமைதிப்படுத்தினான்.
“ஏற்கெனவே நீ பண்ற டார்ச்சர் போதும் நாளைக்குப் பெங்களூரு போறோம். அங்க வச்சு நீ என்ன வேணும்னாலும் பண்ணு! இப்போ அவசரப்பட்டா அந்தப் பொண்ணு உன்னை வெறுத்துரும் ருத்ரா”
வெறுப்பு என்ற வார்த்தை அவனை நிதானப்படுத்தியது. முன்பு ஆரலியை காயப்படுத்தித் துரத்தியதில் மனம் வருந்தியவன், அமைதியாக உள்ளே போய்விட்டான்.
தங்கைக்குச் சமையல் செய்துகொடுத்து, அம்மாவிடம் கொட்டு வாங்கி, அப்பாவின் மடியில் தூங்கி என அன்றைய பொழுது நிலாவுக்கு உற்சாகமாய் கழிந்தது.
இரவு நேரம் தூங்கப் போகாமல் மாடியில் நின்றிருந்த திகள், அபிராமியிடம் வீடியோ காலில் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
“நான் என்ன தங்கம் பண்ணேன்? ஏன் கோபமா பேசுற?”
“நடிக்காத அபி! பத்ரன்னு பேரு வச்சா உன் பேரனுக்கு அந்த கடவுள் சிவன்னு மனசுல நினைப்பா? ஓவரா மிரட்டுறான் நான் மரியாதை கொடுத்துப் பேசணுமாம்!” என்று கோபத்தில் மூச்சுவாங்கப் பேசினாள்.
அத்தையிடமிருந்து போனை வாங்கிய சாம்பவி “விழி செல்லம்” என்றதும்,
“நீ பேசாத! என்ன பையன் வளர்த்துருக்க, பிடிக்கலன்னு சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கட்டாயப்படுத்துறான். என் அம்மாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாங்க பவி நான் பாவம் இல்லையா!”
“அதான் எங்க வீட்டுக்கு வந்திடுன்னு சொல்றோம்! இங்க யாரும் உன்னை அடிக்க முடியாது. மாமியார் கொடுமை இல்ல, நாத்தனார் இல்ல. என் பையன் மட்டும் கொஞ்சம் கோபக்காரன் அவனை ஈஸியா சமாளிக்கலாம்” என்ற மருமகளைக் கண்டு சிரித்தார் அபிராமி.
“இரண்டு பேரும் யார்கிட்ட பேசுறீங்க?” என்று கேட்டபடி வந்த பத்ரன் போனை எட்டிப் பார்க்க, அவன் தேவதை நைட்டியும் கொண்டையுமாக நின்றிருந்தாள்.
“ஏய் குட்டச்சி தூங்காம இவங்ககூட என்ன பேச்சு? இனி உனக்குத் தூக்கம் வரலைனா எனக்குக் கால் பண்ணு. காதல் பண்றது எப்படினு பழகலாம்”
குறும்பாக கண்ணடித்தவனை முறைத்தாள் திகள்விழி.
“போடா டபரா தலையா! உன் கூட பேச எதுவும் இல்ல. ஆளைப் பாரு நீ பெரிய மன்மதக் குஞ்சு ! இவரு கூட காதலா பேசிட்டாலும்!
இதோ பாரு நாளைக்கு ஈவ்னிங் வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன். நீ முத்தம் கொடுத்ததைப் பத்தி சொல்லுவேன் ஜாக்கிரதை!” என்று மிரட்டினாள்.
அபிராமியும் சாம்பவியும் அவனைக் கண்டு ஊமையாக சிரிக்க,
“அப்படியா மேடம்? சரி இப்பவே உங்க வீட்டுக்கு வந்து என் அத்தைகிட்ட பேசுறேன். அவங்க அனுமதியோட போலீஸ் ஸ்டேஷன் போகலாம் இதோ கிளம்பிட்டேன்!” என ஃபோனைத் துண்டித்துவிட்டான்.
“இரண்டு பேரும் சிரிச்சது போதும். விழி இங்க வந்ததும் பகல்ல அவகூட எவ்வளவு முடியுமோ விளையாடிக்கோங்க. ஈவ்னிங் நான் வந்ததும் எனக்குக் குடுத்திடணும்”
“என்னடா பொம்மை கேட்டு ஆர்டர் போடுற குழந்தை மாதிரி பேசுற!”
“என்ன பண்றது? எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு அம்மா. உங்களுக்காகக் கல்யாணம் பண்ண நினைச்சிருந்தா அவளைத் தொல்லை பண்ணியிருக்க மாட்டேன். அந்தப் பொம்மையை கைக்குள்ள வச்சுக்க ஆசைப்படுறேன்” என்றான்.
அதற்குள் அவனுக்குப் போன் செய்துவிட்டாள் திகள்.
“குட் நைட் பாட்டி, அம்மா. குட்டச்சிகூட பேசப்போறேன்”
சிரித்தபடி போகும் பத்ரனை கண்டு உள்ளம் நிறைந்து போனது. திகள் அவன் வாழ்க்கையில் வந்தால் அதை விட நிம்மதி ஏது!
“ஹலோ!”
“எங்க வீட்டுக்கு வராதிங்க ப்ளீஸ்! அம்மா அடிப்பாங்க நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டேன். சாரி…” என்று அழுதுவிடுவது போலப் பேசினாள் திகள்விழி.
“ஐயோ நான் கார்ல இருக்கேன்! கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் குட்டச்சி…”
“வேண்டாம், வேண்டாம்! திரும்பி போயிடுங்க!”
“இவ்வளவு பயம் இருக்கு ஆனா வாய் மட்டும் திமிரா பேசுது! நான் டபரா தலையனா? ஒழுங்கா மாமான்னு சொல்லிக் கூப்பிடுடி”
அவள் அழுகையைக் கண்டதும், போனால் போகிறதென விட்டுவிட்டான்.
“சரிங்க மாமா! நான் வாய் திறக்கல நீங்க வீட்டுக்கு மட்டும் வந்துடாதிங்க. டைம் ஆச்சு நான் தூங்கப்போகவா? நாளைக்கு பிராக்டீஸ் இருக்கு”
தப்பித்தால் போதும் என ஓடப்பார்த்தாள் பெண்ணவள். அவன் விட்டால் தானே!
“தினமும் பிராக்டீஸ் இருக்கும் அதுக்காக என்கூட பேசாம இருக்கப்போறியா? நைட் எத்தனை மணிக்குத் தூங்குவ?”
“ஒன்பது மணி…”
“இனி நைட் ஒன்பது மணிக்கு எனக்குக் கால் பண்ணிப் பேசணும். நான் மறந்தாலும் நீ கால் பண்ணிக் காதல் பண்ணணும்”
“ஆங் காதலா?” அதிர்ச்சியில் அவள் முழிக்க,
“ஆமாம்! கொஞ்ச நாள் காதல், அப்புறம் கல்யாணம்.
பாட்டி, அம்மா உனக்காக இங்க வெயிட் பண்றாங்க குட்டச்சி! நானும் உனக்காகக் காத்திருக்கேன். நம்ம ரூம் பக்கத்துல சின்ன டான்ஸ் ஸ்டுடியோ செட்டப் போடச் சொல்றேன் ஓகேவா?” என்றவனின் ரசனையான பேச்சில் கன்னம் சிவந்துபோனாள் திகள்.
இப்படி விடாமல் காதல் மழை பொழிபவனை எப்படி விலக்கி வைக்க முடியும். அவன் தீண்டகளை உடல் அனுமதிக்கும் போதே பத்ரன் என்பவன் மனதில் விழுந்துவிட்டான் என்று தானே அர்த்தம். முத்தம் தரும் போது அமைதியாக உடல் அவனிடம் உருகி குழைவது காதல் அன்றி என்ன சொல்வது!
“எனக்கு ரூமுக்குள்ள டான்ஸ் பண்ண பிடிக்காது! உங்க வீட்டுல தோட்டம் இருக்குன்னு அபி சொல்லியிருக்காங்க. அங்க பிராக்டீஸ் பண்ணிக்கிறேன்” என அவன் காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டாள் திகள்விழி.
“ஆனால் எனக்கு ரூம்தானே வசதியா இருக்கும் குட்டச்சி!”
இதழ் கடித்துத் தன் வெட்கத்தை மறைத்தவள், “அக்காவுக்குக் கல்யாணம் ஆகணும் மாமா, அப்புறம்தான் நமக்கு அதுவரை இந்தப் பேச்சு வேண்டாமே!” என்று மெதுவாய்ச் சொன்னாள்.
“சைவக் காதல் போர் பெண்ணே!”
“பரவாயில்ல எனக்கு இது ஓகே! இல்லைன்னா கால் பண்ணாம இருங்க. கண்டதைப் பேசி, முத்தம் கொடுத்து என்னைக் கெட்ட பொண்ணா மாத்திடாதீங்க. அம்மா தேடுவாங்க பை!” எனப் போனை அணைத்துவிட்டு கீழே ஓடினாள் திகள்விழி.
‘என்னென்ன பேசுகிறான்! கடைசில நானும் ஓகே சொல்லிட்டேன். வீட்டுல ஒத்துக்கலைன்னா என்ன பண்றது!’ என்ற பயத்தோடு தூங்கிப்போனாள்.
காலை எப்போதும் போலக் கடைசி நேரத்தில் கிளம்பி, அவசரமாக நிலா ஏர்போர்ட் போனாள். பத்ரன் அவளுக்காகக் காத்திருந்தான்.
“சாரி சார்! டிராஃபிக்!” எனக் கூசாமல் பொய் சொன்னாள்.
“இட்ஸ் ஓகே நிலா! டைம் இருக்கு வாங்க” என்று இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பிக்க,
“நாங்க இல்லாமல் எங்க போறீங்க? நில்லுடா!” என்ற சத்தம் கேட்டு பல்லைக் கடித்தான் பத்ரன்.
ருத்ரா சட்டையை போடாமல், பெயருக்கு தோளில் சட்டையை தொங்கவிட்டுக்கொண்டு நடந்து வர, சரபன், விமலோடு பெட்டியைத் தள்ளியபடி வந்தான்.
பத்ரன் முறைக்கவும் ஜெர்க் ஆன சரபன், “நாங்க வரோம்னு ஆல்ரெடி அங்கிள்கிட்ட சொல்லிட்டோம். உனக்குத் தெரியாதா?”
“எனக்குத் தெரியும் பட், டைரக்டா அங்க வந்து தொலையாம இங்கேயே உங்களோட போராடணும்னு நினைக்கும்போது டென்ஷன் ஆகுது”
“இது என்ன கருமம்? ‘என்னைப் பாரு, என் மசில்ஸைப் பாரு’ன்னு! இவனுக்கு மட்டும்தான் எய்ட் பேக் இருக்கா? சட்டை போடச் சொல்லு” என்று டென்ஷனாகிவிட்டான்.
“பேன்ட் போட்டிருக்கான்னு சந்தோஷப்படு தம்பி! உன் அண்ணன் அவசரத்துல எப்படி வருவான்னு மறந்துபோச்சா? நீயே அவன்கூட சண்டை போட்டு சட்டையை மாட்டு” எனச் சரபன் விமலோடு போய்விட, ருத்ரா போனில் விளையாடிக்கொண்டிருந்தான்.
பத்ரன் டென்ஷனாக நிற்பதைக் கண்ட நிலா, “சார் நீங்க போங்க! நான் அவரைக் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு ருத்ராவை நெருங்கினாள்.
“ஆரலி!” எனச் சிரித்தவனுக்குப் பதில் சொல்லாமல், அவன் சட்டையை எடுத்து மாட்டிவிட ஆரம்பித்தாள்.
“டிரஸ் வேண்டாம் மஃபின், உடம்பு எரியுது!”
“என்ன பண்ணுது?”
“மார்னிங் சாப்பிட்டதுக்குப் அப்புறம் எப்பவுமே இந்த ஃபீலிங் இருக்கும்”
ஏற்கெனவே சரபன் மூலமாக மாத்திரையை உணவில் கலந்து தருவது தெரிந்திருந்ததால், அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டாள் நிலா.
“இங்க பாருங்க தினமும் குடிச்சிருக்கிங்க. அதுவே நிறைய சைட் எஃபெக்ட்ஸ் உண்டாக்கியிருக்கும். இப்போ குடிக்கிறதை நிறுத்தியாச்சு கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும்.
இனி டேப்லெட்டை நீங்களே சாப்பிடணும் ஓகேவா? கொஞ்ச நாளுக்கு அப்புறம் இந்த டிஸ்கம்ஃபர்ட் இருக்காது, உள்ளே போடுற பனியன் இருந்தா போட்டுட்டு வாங்க நான் ஐஸ் பேக் வாங்கிட்டு வரேன்”
அவள் சொன்னது போலப் பனியன் போட்டுக்கொண்டு வந்தவனுக்கு, கழுத்திலும் முகத்திலும் ஐஸ் பேக் ஒத்தடம் வைத்தாள்.
“டைம் ஆச்சு போகலாம் வாங்க…”
“மஃபின் ஏன் அமைதியா இருக்க? நேத்து நான் கோபமா பேசிட்டேன். அதான் உம்முனு இருக்கியா?”
“நான் நல்லா இருக்கேன் சார், கோபம் இல்ல” என்று மென்மையாக மறுத்தவள், உண்மையில் மனதளவில் பலவீனமாக உணர்ந்தாள்.
ஆளைக் கொல்லும் அவன் காதல் வேண்டுமா, வேண்டாமா என்ற நிலையைத் தாண்டி, ‘இந்த ஆலகால விஷம் எனக்கு சொந்தமில்லையே!’ என்ற பூதம் முன்னின்று பயமுறுத்தியது.
அவள் கையை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தான் ருத்ரா! தன் அருகிலேயே அவளை அமர வைக்க, மற்ற மூவரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
“இப்போ ஓகேவா? சட்டை போடுங்க. இனி எங்கேயும் அரைகுறையா டிரஸ் போட்டுட்டு வரக்கூடாது”
“உனக்குப் பிடிக்கலையா மஃபின்?”
“ம்ச்… உங்க ஃபேமிலிக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு ருத்ரா! அதை மேல கொண்டு போகலைனாலும் பரவாயில்ல கீழ இறக்கிடக்கூடாது. எனக்குப் புரியுது, உங்களுக்குக் கம்ஃபர்டபிளா இல்ல. அப்போ தனியா இருந்துக்கோங்க பப்ளிக்ல ஒழுங்கா பிஹேவ் பண்ணணும்” என்று அறிவுரை சொன்னபடி அவன் கலைந்த தலைமுடியைச் சரிசெய்தாள்.
“என் ஆரலிக்கு இவ்வளவு பேசத் தெரியுமா? பத்தாவது ஜஸ்ட் பாஸ் ஆன பொண்ணு இப்போ என்ஜினீயர்! எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு” என்றவனை, ‘இதோ ஆரம்பிச்சிட்டான்!’ என்பது போலப் பார்த்தாள் நிலாஞ்சி.
‘நான் எங்கடா ஜஸ்ட் பாஸ் ஆனேன்?’ எனச் சொல்லத் துடித்த நாக்கைக் கடித்து அமைதியாக்கிய நிலா, அமைதியாகத் திரும்பிக்கொள்ள, அவள் தோள்களில் சாய்ந்து கண்களை மூடினான் ருத்ரா.
டெண்டர் நடக்கும் இடத்திற்குள் ஐந்து பேரும் நுழைய, அவர்களோடு போட்டியிடும் கம்பெனி ஆட்களால் அந்த அறை நிரம்பியிருந்தது.
முதல் வரிசையில் ருத்ரா, பத்ரன், சரபன் அமர, பின் இருக்கையில் நிலாவும் விமலும் அமர்ந்திருந்தனர். ருத்ராவின் கைகள் போனை எடுத்து கேம் விளையாடத் தொடங்க, விருவிருவென வந்து போனைப் பிடுங்கிக்கொண்டு போனாள் நிலா.
நிலாவைக் கவனித்த விமல், “மேடம் உங்களுக்கு அவரைப் பார்த்துப் பயம் இல்லையா?” என்று கேட்டான்.
“ஏன் இல்லாம? எந்த நேரத்துல என்ன பண்ணுவாரோனு பயம் நிறைய இருக்கு. அதுக்காக ஒதுங்கிப் போக முடியாதே! போற வரை போகட்டும்” என்று அமைதியாகிவிட்டாள்.
இரண்டு நிமிடம்கூட அவனால் அமைதியாக அமர முடியவில்லை. போய் நிலா அருகில் அமர்ந்து, தன் கால்களால் அவள் கால்களை உரசியபடி இருந்தான்.
“ருத்ரா சின்னப் புள்ளை மாதிரி பண்ணாதிங்க! அங்க பாருங்க, அமௌண்ட் சொல்லப்போறாங்க!”
“ம்ச்… எப்படியும் நமக்குத்தான் கிடைக்கும் மஃபின்! போர் அடிக்குது. வெளியே போகலாம் வா…” என்று அவள் கையைபிடித்து இழுத்தான்.
அவன் போனை ருத்ரா கையில் கொடுத்து, “கொஞ்ச நேரம் அமைதியா உட்காருங்க வேலை முடிஞ்சதும் போகலாம்” என்று கெஞ்சலாகக் கேட்க, மனமிறங்கி சரியெனத் தலையை ஆட்டினான்.
தன் பேகில் இருந்த ஸ்நாக்ஸை எடுத்து அவன் கையில் கொடுத்தவள் தண்ணீரை அருகில் வைத்தாள்.
“பேசாம அவனை இடுப்புல வச்சு ஊட்டிவிடு நிலா!” என்று சரபன் சிடுசிடுத்தான்.
“எங்க வந்து என்ன பண்றீங்க இடியட்ஸ்! இரண்டு பேரும் வெளியே போங்க!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் பத்ரன்.
“வெரி வெல் பத்ரன்! உன் அண்ணனைக் கவனிச்சுக்க ஒரு கேர்டேக்கரை ஏற்பாடு பண்ணிட்டீங்க போல!” என்ற நக்கலான வார்த்தைகளில் கோபமாகத் திரும்பினான் பத்ரன்.
அவன் ஆகாஷ். AA Group- க்கு போட்டியாக இருக்கும் SS Group- ஐ சேர்ந்தவன். ஆகாஷின் முக்கிய எதிரிகளே அண்ணன், தம்பி இருவரும்தான். ருத்ராவின் நிலைமையைச் சாதகமாக வைத்து அவனை வீழ்த்தப் பல வழிகளில் திட்டம் போட்டுத் தோல்வியடைந்ததால், இப்படி நேரில் பார்க்கும்போது வஞ்சத்தில் வார்த்தைகளை விடுவான்.
“ஆகாஷ் ஸ்டே அவே ஃப்ரம் அஸ்!” என்ற சரபனை நக்கலாகப் பார்த்தவன், “இவனுங்க குடும்பத்துக்குக் கிடைச்ச அடிமை, என்கிட்ட அதிகாரமா பேசலாமா? தப்பு போய் ஓரமா நில்லு.
அப்புறம் ருத்ரா! அழகான பொண்ணைப் பக்கத்துல வச்சுக்குற அளவுக்கு பர்ஃபெக்ட் ஆகிட்ட போல, உன்னை யாரு நெருங்குனாலும் அடிச்சு அனுப்புற குணம் மாறிடுச்சா? இல்ல மேடம் உன்னை நல்லா டிரெய்ன் பண்ணிட்டாங்களா?”
வக்கிரமான அவன் பேச்சில் ருத்ராவின் கண்கள் சிவந்தன. அவன் கைகளை அழுத்தமாகப் பிடித்த நிலா,
பத்ரனிடம், “நீங்களும் சரபன் சாரும் போய் அனௌன்ஸ்மென்ட்டைக் கவனிங்க. நாங்க வெளியே வெயிட் பண்றோம் சார்”
“இங்க அசிங்கமான நாத்தம் அடிக்குது! ருத்ராவுக்கும் சேராம போயிடும். நாத்தத்தைச் சுத்தம் பண்றேன்னு இவரு அழுக்காகிடுவாரு” என்று சொன்னவள், ருத்ராவைக் கூட்டிக்கொண்டு வெளியேறிவிட,
“அசிங்கப்படவே வரானுங்க!” என்ற நமட்டுச் சிரிப்போடு போனான் சரபன்.
ஆகாஷ் கோபத்தில் நிலாவைப் பார்த்தான்.
“கோபத்துல ஏன் தான் உங்களுக்குக் உடனே கண்ணு சிவக்குதோ! ரிலாக்ஸா இருக்கணும்” என்று அவன் நெஞ்சில் கை வைத்தவளை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்ற ருத்ரா, தன் கோபம் தாக்கும் வேகத்தைப் பெண்ணவளின் இதழ்களில் காட்டினான்.
‘கிறுக்குப் பய என்ன பண்றான் பாரு! யாராவது பார்த்தா மானம் போயிடும்’ என்று பயந்த நிலா, அவன் இதழ்களைப் பலமாகக் கடித்து வைக்க, இரத்தம் வந்தாலும் விலகவில்லை அந்த ராட்சசன்.
போராடி அவனை விட்டு விலகிய நிலா, “ருத்ரா யூ ராஸ்கல்! நினைச்ச நேரம் அத்துமீறித் தொடுற, உனக்கு வேணும்னா முத்தம் கொடுப்பியா? உனக்கு அறிவு இல்லையா இடியட்!
அவன் பேசுனதை நீ உண்மையாக்குற ஐ ஹேட் யூ!” எனக் கத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். இதழ்கள் தீயாக எரிந்தன அதைவிட உள்ளம் காட்டுத்தீயாகப் பரவி அவளை அல்லவா எரிக்கிறது!
ருத்ராவின் நினைப்பு மொத்தமும் அவள் வார்த்தைகளிலேயே தேங்கி நின்றது. ஆகாஷ் பேசிய ‘வச்சிருக்க’ என்ற சொல் அவளைக் காயப்படுத்தியிருப்பதாக அவன் நினைத்தான்.
அந்த அரைபைத்தியத்துக்குப் புரியவில்லை, அவனால் தான் நிலா காயப்படுகிறாள் என்று!
கல்யாணம் என்ற ஆப்ஷனை இரண்டாவதாக வைத்திருந்தவன், இப்போது ஊருக்குப் போனதும் முறையாக பெண்ணவளைத் திருமணம் செய்து பக்கத்தில் வைக்க நினைத்தான்.
ஒரு பெருங்காற்றைச் சூறாவளியாக மாற்றிவிட்டது தெரியாமல், டெண்டரை ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் நால்வரும் குதித்துக்கொண்டிருந்தனர்.
இரண்டு ரூபாய் வித்தியாசத்தில் கேவலமாகத் தோற்றுவிட்ட ஆகாஷைச் சரபன் கிண்டல் செய்ய, பத்ரன் நமட்டுச் சிரிப்போடு அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட்டான்.
நிலா அவனுக்கு உதவியாகப் பேப்பர்களைச் சரிபார்த்துக்கொண்டிருக்க, ஆகாஷ் கோபமாக அவர்களை நெருங்கினான்.
விமல் அவனைத் தடுக்க,
“ஜெயிச்ச திமிர்ல ஆடாத பத்ரா! உன் அண்ணன் பைத்தியமா சுத்துறான். இன்னும் கொஞ்ச நாள், அடுத்து நீயும் அவனைப் போல மாறிடுவ. என்கிட்ட ஏன் வம்பு பண்ணோம்னு நினைச்சு வருத்தப்படப்போற!”
“உன்னால முடிஞ்சதைப் பண்ணு! வெட்டிப் பேச்சுக்கு இங்க மரியாதை இல்ல ஆகாஷ். ருத்ரா திறமையில கால்வாசி இருந்திருந்தா நீ ஜெயிச்சிருப்ப யூஸ்லெஸ்!” என்றான் பத்ரன்.
“ஏய்!” என அவனை அடிக்க நெருங்கியவன், ருத்ரா உதைத்த உதையில் மூலையில் கிடந்தான்.
“ஐயோ! வருஷா வருஷம் பண்ற கூத்தை இந்த வருஷமும் ஆரம்பிச்சுட்டாங்களே!” என்று சரபன் தலையில் அடிக்க,
“என்ன சார் சொல்றீங்க? வேற வேலையே இல்லாம வருஷம் ஒரு தடவை சண்டை போடவே வருவாங்களா?”
“இந்தப் பரதேசியும் எங்ககூட காலேஜ் படிச்சவன்தான்! அப்போயிருந்தே இவங்களுக்குள்ள போட்டி, தொழிலைக் கையில எடுத்ததும் போட்டி இன்னும் அதிகமாகிடுச்சு” என நிலாவிடம் சொன்னான் சரபன்.
“ருத்ராவை ஸ்டாப் பண்ணுங்க! பாவம் அடிவாங்குறவருக்கு இரத்தம் வருது”
“ஆங், இடையில போனா எனக்கு அடி விழும்…”
“ஐயோ தள்ளுங்க!” என வேகமாக ருத்ராவைப் பிடித்துத் தடுத்தாள் நிலா.
“நிறுத்து ருத்ரா! அவருக்கு இரத்தம் வருது. செத்துரப்போறாருடா…”
“சாகட்டும்…”
‘நீ ஜெயிலுக்குப் போயிட்டா நான் என்ன பண்றது!’ என மனதில் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை.
“எனக்குத் தலை சுத்துது. மார்னிங் சரியா சாப்பிடல!” என்று தலையைப் பிடித்தாள். அவ்வளவுதான், ஆகாஷை தூக்கி எறிந்துவிட்டு நிலாவைக் கைகளில் ஏந்திக்கொண்டான்.
“மஃபின் என்ன பண்ணுது? ஃபர்ஸ்ட் அதிகமா சாப்பிட்டு ஓவர் வெயிட்டா இருந்த. இப்போ அண்டர்வெயிட்டுல இருக்க! என் தப்பு உன்னைத் தனியா விட்டிருக்கக்கூடாது.”
“போதும் ஹோட்டல் போகலாம். பசிக்குது” என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொள்ள, “இதோ போகலாம்” என வெளியே நடந்தான்.
சரபனிடம் கண்களைக் காட்டிவிட்டுப் போனாள் நிலாஞ்சி.
“டேய் ஆகாஷு! என் நண்பன் மாறிட்டு வரான் பாரு… உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்குமே! கொஞ்சம் விட்டிருந்தா செத்திருப்ப.
ஒழுங்கா வீடு போய்ச் சேரு! திருந்தாம இதே போலப் பேசிட்டு இருந்தா அந்தப் பொண்ணால்கூட உன்னைக் காப்பாத்த முடியாது”
“ஏய்…”
“அடிச்சீ! வாயை மூடிட்டு கிளம்பு ஏய், ஓய்னு… படிச்சிருக்கியே, மேனர்ஸ் இல்லாம பேசுற”
“கிளம்பலாம் சரபா! நமக்கு வேலை இருக்கு” என்று பத்ரனை அவனை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அடிபட்ட நரியாய் முணுமுணுத்துக் கிடந்தான் ஆகாஷ்! ‘உன்னைச் சும்மா விடமாட்டேன் ருத்ரா’ வஞ்சனையில் அவன் நெஞ்சம் நிரம்பிக் கிடந்தது.
