கண் கொண்டு பாரடா (டி ) என்னை

மங்கள வாத்தியங்கள் முழங்கி கொண்டிருந்தது. மணவறையில் அமர்ந்திருந்தாள் நம் நாயகி அபிராமி. மிதமான ஒப்பனையில் தேவதை போல் ஜொலித்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்தான் அபிராமிக்காக அவளின் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை.

கடவுளே இந்த முறையாவது திருமணம் நல்ல படியா நடக்கணும் என்று வேண்டி கொண்டு இருந்தனர் அபிராமியின் பெற்றோர்கள். 

அக்காவின் அருகில் தூண் போல் நின்று இருந்தாள் நம் மற்றுமொரு நாயகி அகிலா.

அகிலாவின் வேண்டுதல் யாவும் அக்காவிற்கு நல் வாழ்க்கை அமைய வேண்டும் என்பது மட்டுமே. 

மந்திரங்கள் யாவும் ஐயர் அழகான முறையில் ஓதி கொண்டிருக்க, அபிராமியின் முகத்தில் திருமண கலை என்று ஒன்று இல்லவே இல்லை.

அவளின் இதயத்தில் உனக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் என்ற ஒன்று நடக்கவே நடக்காது என்பது போல் அவளின் காதுகளில் ஆசரீரி ஒலித்தது போல் இருந்தது. அபிராமியின் கண்களில் இருந்து நீர் சுரந்தது. 

மாப்பிள்ளையான் இந்த மாங்கால்யத்தை வாங்குங்கோ என்று ஐயர் கூற, மாப்பிள்ளையானவன் மாங்கல்யத்தை அவனின் கைகளில் வாங்கிய நொடி, அவனின் காதுகளில் ஏதோ கிசு கிசுப்பாக அவனின் தாயார் வந்து ஏதோ கூற அவனுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம். கையில் உள்ள மாங்கால்யத்தை தூர வீசினான்.

இவன் படித்து என்ன செய்ய, மாங்கல்யத்திற்கான மதிப்பு தெரியவில்லையே!

அபிராமியின் தாய் தந்தை இருவரும் அரண்டு போய் நின்றனர்.

அபிராமி முகத்தில் அதிர்ச்சியை காட்டாது எழுந்து நின்றாள்.

ஐயோ என்னாச்சி தம்பி? என்று கதறினார் அபிராமியின் தந்தை கல்யாண்.

அகிலா தன் அக்காவின் தோள்களை ஆதரவாக பற்றினாள்.

வந்திருந்த விருந்தினர்களும் ஊர்காரர்களும் என்ன பிரச்சனை என்று விழிகள் பெரிதாக பார்த்தனர்.

உங்க பொண்ணுக்கு குழந்தை பெத்துக்குற தகுதி இல்லைனு ஏன் எங்ககிட்டே சொல்லவே இல்லை என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாயார்.

எங்க பொண்ணுக்கும் எந்த குறையும் இல்லை மா. தயவு செய்து கல்யாணத்தை மட்டும் நிறுத்திராதீங்க என்று கண்ணீரோடு கதறினார் கௌரி. அவரே அபிராமியின் தாய்.

அதான் கூட்டத்துல பேசுறாங்களே இது போதாதா என்றார் மாப்பிள்ளையின் தந்தை.

வாக்கு வாதங்கள் இரு குடும்பத்திற்கும் பெறுகியது. ஊர் மக்கள் சில பேர் வேதனையோடும் சில பேர் முகத்தில் சந்தோசத்தோடும் பார்த்து கொண்டிருந்தனர்.

இது சரி பட்டு வராது என்று மாப்பிள்ளை குடும்பமும் அவர்கள் அழைத்து வந்த சொந்த பந்தங்களும் கிளம்பினர்.

மண்டபமே காலி ஆனது. கல்யாண் வெறும் தரையில் மண்டியிட்டு அழுதார்.

தந்தை வெறும் தரையில் சாய்ந்தது அகிலாவிற்கு வலியை தந்தது. அக்காவை விடுத்து தந்தையின் நெஞ்சில் தஞ்சம் கொண்டு அவளால் முடிந்த வரை கதறினாள்.

தன் குடும்பம் அழுது கொண்டிருப்பதை பார்த்த அபிராமி அவள் எதிர்பார்த்தது போல் நடந்த விஷயத்தால் மண்டபத்தில் இருக்கும் மணமகள் அறைக்குள் சென்று கதவை உட்புறமாக தாழிட்டாள்.

வெறும் மூன்று நிமிடத்தில் நார்மல் சுடிக்கு மாறி அறையை விட்டு வெளியே வந்தவள் வாங்க மா வாங்க ப்பா கிளம்புவோம் என்றாள்.

தாய் தந்தை இருவரும் மகள் கூறிய பின் இதற்கு பிறகும் அழுதால் நன்றாக இருக்காது என்று அவள் கூறியதும் உடனே கிளம்பினர்.

காலையில் அவர்கள் வந்த கார் மட்டும் இருக்க அதில் டிரைவரும் அமர்ந்திருந்தார்.

அவருக்கும் அபிராமியை பார்த்ததும் மனது கலங்கியது.

நீங்க ஏண்ணா இன்னும் கிளம்பாம இருக்குறீங்க? என்று கேட்டாள் அபிராமி. அவரும் தன் தந்தை வயதை உடையவர்.

அவரால் பதில் ஏதும் கூற முடியவில்லை. வாம்மா கிளம்புவோம் என்று கார் கதவை திறந்து விட, நால்வரும் காரில் ஏறி அமர்ந்தனர்.

வீடு செல்லும் வரை பலத்த அமைதி நிலவியது.

யாரும் யாரிடமும் பேசவில்லை.  அகிலா அக்காவின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

கார் வீடு வந்தது. டிரைவர் அவர்களை இறக்கி விட்டு சென்றார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் பெயருக்கென்று கூட சொந்தம் இல்லாமல் வரவேற்றது அந்த வீடு.

மண்டபத்திற்கு செல்லும் வரை இருந்த சொந்த பந்தங்கள் ஒருவரும் இப்பொழுது இல்லாமல் வெறுமையாக வரவேற்றது அவர்களின் இல்லம்.

இருக்கும் இந்த  வீடு, மனைவி மற்றும் தங்கம் போல் இரண்டு மகள்கள் இதை தவிர கல்யாணிற்கு வேறு எதுவும் இல்லை.

இவர்கள் மூவரும் தான் இவரின் உயிர் மூச்சு.

அகிலா போ போய் புடவையை மாற்று என்றாள் அபிராமி.

சரி அக்கா என்று உடை மாற்ற சென்றாள் அகிலா.

ஏங்க நம்ப பொண்ணுக்கு மட்டும் இப்படி நடக்குது. பாவங்க அவள். எவ்வளவு வருத்தம் இருந்தாலும் அதை நமக்காக மறச்சிட்டு இருக்குறா என்றார் கௌரி.

இருவரும் கை கோர்த்து கொண்டு மகளுக்காக கண்ணீர் வடித்தனர். 

 

ஒரு டைம் கல்யாணம் நிச்சயமாகி நின்று போச்சு. இன்னொரு டைம் பத்திரிக்கை அடிச்சி அப்படியே நின்று போச்சு. இப்போ… என்று தழு தழுத்த குரலில் கூறினார் கல்யாண்.

அழுகணும்னு தோணிச்சினா அழுதுரு டா தங்கம் என்றார் கல்யாண். 

 

இல்லை ப்பா சுத்தமா அழுகை வரல என்றாள் விரக்தியான குரலில்.

எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்துட்டிங்க நீங்க? படிச்சிருக்கணும். நல்ல வேலைக்கு போகணும். கை நிறைய சம்பாதிக்கணும். மகள் கஷ்டப்படாம இருக்கணும்னு நினைச்சீங்களே தவிர, எனக்கு வர போறவன் என்னைய நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சீங்களா ப்பா என்று கேட்டாள் அபிராமி.

அகிலா வேறு உடை மாற்றி வந்தாள். அக்காவின் வார்த்தையில் விதிர் விதிர்த்து நின்றாள்.

அக்கா அப்பாகிட்டே நீ என்ன பேசிட்டு இருக்குற என்று சற்று கோபமாகவே கேட்டாள் அகிலா

ஏன் அகி கோபப்படுற. நான் அப்பாகிட்டே பேசுறேன். நீ அமைதியா இரு என்றாள் அபிராமி.

எனக்கு மூணு டைம் கல்யாணம் நின்றுச்சு. இனிமேல் எனக்காக நீங்க மாப்பிள்ளை பார்க்காதீங்க என்றாள் தந்தையை பார்த்து..

என்ன மா இப்படி பேசுற? அப்பா மேல கோபமா டா?

இல்லை ப்பா. உங்க மேலேயும் அம்மா மேலேயும் எனக்கு கோபம் இல்லை. என்மேல தான் ப்பா கோபம் என்றாள் அழுகையாக.

மகளின் கண்ணீரை துடைத்தார் தந்தை கல்யாண்.

அகிலாக்கு மாப்பிள்ளை பாருங்க. நல்லா படிச்சிருக்கணும். வேலை பார்க்கணும்னு நினைச்சி மாப்பிள்ளை பார்க்காதீங்க. நம்ப அகிலாவை நல்லா பார்த்துக்குற பையனா பாருங்க ப்பா என்றாள் அபிராமி.

அக்கா என்ன பேசுற நீ? நீ கல்யாணம் பண்ணாம நான் எப்படிக்கா கல்யாணம் பண்ண முடியும் என்றாள் அகிலா.

அக்காவின் மன தைரியமே இந்த திருமணத்தால் உடைந்து விட்டதே என்று கவலையோடு பேசினாள்.

எனக்கு இனிமேல் கல்யாணம் நடக்கும்னு தோணல. அதுக்காக உன் லைஃப் ஸ்பாயில் ஆக நான் விரும்பல அகி.

உனக்குன்னு ஒருத்தன் பொறந்துருப்பான் அக்கா. ப்ளீஸ் நீ மனசு உடைஞ்சிராத என்று சிறியவள் ஆதரவு கூற, பெரியவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

கௌரியும் கல்யாணும் தன் இரு மகள்களின் வாழ்க்கையை எண்ணி நிலை குலைந்து நின்றனர்.

சரி வாங்க சாப்பிடலாம் என்று கௌரி நிலைமையை உணர்ந்து கணவரையும் பிள்ளைகளையும் இயல்பு நிலைக்கு மாற்ற எண்ணி உணவை எடுத்து வைக்க, அவர்களும் மனம் இல்லாமல் உண்டனர்.

காலை அழகாக விடிந்தது. ஆனால  இரவு யாரும் விரும்பாத இருட்டாக மாறியது.

அபிராமி இந்த நாளை நினைத்து மனம் உடைந்து கட்டிலில் சிறு கண்ணீரோடு புரண்டு கொண்டிருந்தாள்.

யாருக்கும் துரோகம் நினைக்காத நம் அக்காவிற்கா இந்த நிலை என்று கண்ணீரோடு தூக்கம் வராமல் இருந்தாள் அகிலா.

என்னங்க அந்த ஜோசியர் சொன்ன மாதிரி நடந்துட்டு இருக்குதோனு தோணுதுங்க என்றார் கௌரி.

மகள் திருமணம் இரண்டு முறை நின்றும் இப்பொழுது மண்டபம் வரை வந்து மூன்றாவது முறையும் திருமணம் நின்று விட்டதே என்று கலக்கத்தோடு   புருவம் முடிச்சுடன் எதையோ யோசித்து கொண்டிருந்த கல்யாண் மனைவியின் வார்த்தைகளில் கோபத்தோடு மனைவியை முறைத்து பார்த்தார்.

கணவனின் கோபத்தில் பயந்து போன கௌரி, அதுக்கு இல்லைங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க. உங்களுக்கே புரியும் என்றார்.

இந்த காலத்துல ஜோசியத்தை நம்பாத கௌரி. அதுவும் நம்ப பொண்ணு விஷயத்துல அவர் சொன்ன விஷயம் எதுவும் நம்புற மாதிரி இல்லை. நீ அதை பற்றி பேசி என்னைய கோபப்படுத்தாத என்று விரல் நீட்டி எச்சரித்தார்.

இல்லைங்க ஒரு முறை அவரை போய் பார்த்து பேசிட்டு வருவோம் என்று பயந்து கொண்டே கூறினார் கௌரி.

மனைவி அழுத்தமாக கூறுவது கல்யாணை யோசிக்க வைத்தது.

சின்னவ ஜாதகம் எடுத்துட்டு போய் பார்க்குற மாதிரி பார்ப்போம்ங்க. அதுக்கு எப்படி அவர் சொல்லுறாருன்னு பாப்போம். அப்பறமும் உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா உங்க இஷ்டப்படி பண்ணுவோம்ங்க என்றார் கௌரி.

ரெண்டு முறையும் என்னோட இஷ்டத்துக்கு எல்லா விஷயமும் செஞ்சு எல்லாம் தட்டி போய் நம்ப பொண்ணு மனசு உடைஞ்சு போனது தான் மிச்சம். இந்த முறை நீ சொல்லுறதை கேட்குறேன் கௌரி என்றார் கல்யாண்.

மகளின் திருமணம் நின்று அவளின் மனதை உடைத்தது அவரை “சரி ” என்று சொல்ல வைத்தது.

அதுவும் இன்று மகள் கேட்ட கேள்வி அவரையே சுக்கு நூறாக உடைத்து விட்டது.

ஏன் கௌரி நம்ப அபிராமிக்கு நான் நல்ல மாப்பிள்ளையா பார்க்கலையா டி என்று கண்களில் இருந்து இறங்கும் நீரோடு கேட்டார் கல்யாண்.

ஏங்க நம்ப அபிராமி அப்படி கேட்டுட்டான்னு உங்க வருத்தம் எனக்கு புரியுது. ரொம்ப நல்லவங்க அவள். உங்க மனசு வருத்தப்படும்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அவள் அப்படி கேட்ருக்க மாட்டாள் என்றார் கௌரி.

நம்ப பொண்ணு மனச கஷ்டப்படுத்திட்டேன் கௌரி என்று குழந்தை போல் கண்ணீர் வடிக்கும் தன் அன்பு கணவரை அவருடைய தோளில் தாங்கினார் கௌரி.

இந்த காலத்து பசங்க படிச்சிருக்காங்களே தவிர, அறிவும் பக்குவமும் அன்பும் சுத்தமா இல்லைங்க. இல்லைனா தன்னை நம்பி மண்டபம் வரை கூட வந்தவளை கை விடணும்னு தோணிருக்குமா.

அம்மா அப்பா பேச்சை கேட்டு மண்டபத்தோடு வேணாம்னு சொல்லி விட்டு போய்ட்டான் அந்த பையன். இதுவே நம்ப அபிராமியோட சேர்ந்து கல்யாணம் பண்ணி அப்பறமா விட்டு போய்ட்டா நம்ப என்ன பண்ணிருப்போம்?  சொல்லு கௌரி.

அந்த பையனுக்கு கோடி நன்றி சொல்லிட்டு நம்ப அபிராமிக்கு நல்ல பையன மறுபடி தேடுவோம்ங்க. நம்ப உடம்புல உயிர் இருக்குறதுக்குள்ள நம்ப பொண்ணுங்க சந்தோசமா வாழறதை பார்த்துட்டு சந்தோசமா கண்ணை மூடனும் அது போதும் நமக்கு என்றார் கௌரி.

சரி கௌரி. நாளைக்கு கிளம்புவோம். அந்த ஜோசியரை போய் பாப்போம் என்றார் கல்யாண்.

அங்க போகுறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போய்ட்டு போவோம்ங்க. பிள்ளைங்களுக்காக வேண்டிக்கலாம். அபி, அகில  ரெண்டு பேர்க்கிட்டேயும் சொல்ல வேணாம் என்றார் கௌரி.

அப்படியே ஆகட்டுங்க எங்க குலசாமி என்று மனைவியின் கன்னங்களில் கிள்ளி வைத்தார் கல்யாண்.

 

தொடரும்.

 

 

 

 

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
884 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page