காதல் கணம்-15

காதல் கணம் 15

அபிராமி பிரகாஷ் சக்கரவர்த்தியிடம், “என்னவாங்க?” என்று வினவியபோது,

“நம்ம மாப்பிள்ளையோட தங்கச்சிக்கும், அவரோட அத்தைப் பையனுக்கும் கல்யாணம் பண்றது பத்தி பேசிக்கிட்டிருக்காங்க அபி” என்றார் அவர்.

வீசி, மற்றொரு மூலையில் கலங்கிப்போய் நின்றிருந்த சிவனேஸ்வரனைப் பார்த்தான்.

‘தனக்கு கல்யாணம் பேசினதுக்கு சந்தோசப்படாம இவன் ஏன் மிரண்டுப் போயிருக்கான்?’ என்ற யோசனை ஓடியது அவனுக்குள்.

வளைகாப்பு முடிந்தவுடன் குடும்பத்துடன் வெளியே கிளம்பிய வீசியை தன்னுடன் பிடித்து வைத்துக்கொண்ட சிவனேஸ்வரன், “அம்மா, வீசியை நான் என் பைக்ல கொண்டு வந்து இறக்கிவிடுறேன்.” என்று அனுமதி கேட்க, அபிராமியும் சரியென்று கிளம்பிவிட்டார்.

வீசியை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு வேகமாக தெப்பக்குளம் வந்த சிவனேஸ்வரன், பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு, நீராழி மண்டபத்திற்கு அவனை அழைத்துச் சென்றான்.

மதியநேரம் என்பதால் கூட்டம் அவ்வளவு பிரமாதமில்லை. ஆங்காங்கே ஓரிருவர் மட்டும் மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

சற்றுத்தள்ளி ஆளரவமற்ற இடத்திற்கு வீசியை அழைத்துக்கொண்டு சென்றவன், “டேய் வீசி! முடிஞ்சி போச்சிடா. எல்லாம் முடிஞ்சி போச்சி. ஷ்ரதா என் கை நழுவி போய்ட்டாடா.” என்று அரற்றினான்.

‘ஆஹா! அந்த லூசு நம்மளை லவ் பண்றதை இவன்கிட்ட சொல்லிட்டா போலயே?’ என்று திடுக்கிட்டுப் போயிருந்த வீசி உள்ளுக்குள்ளேயே உஷாராகிக் கொண்டவனாக, “டேய்! என்னடா சொல்ற? உனக்கும் ஷ்ரதாவுக்கும் தான் கல்யாண நிச்சயம் பண்ணிட்டாங்களே? அப்புறம் ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?” என்று கேட்க, ஆர்டிஎக்ஸ் பாம் ஒன்றை வீசினான் சிவனேஸ்வரன்.

“வீசி, கல்யாணம் நிச்சயம் பண்ணினது எனக்கும் ஷ்ரதாவுக்கும் இல்லடா. ஷ்ரதாவுக்கும், என் அண்ணன் ஆதீஸ்வரனுக்கும்.” என்று உணர்ச்சிவசப்பட்டான்.

திடுக்கிட்ட வீசி, “ஹே! என்னடா சொல்ற?” என்க,

“ஆமா வீசி, இனி நான் ஷ்ரதாவை மறக்க வேண்டியது தான். ஆனா, அது என்னால முடியுமாடா? எனக்குள்ள முழுசா இறங்கியிருக்கிறவளை எப்படிடா வெளிய எடுக்க முடியும்?” என்று சினிமா வசனம் பேசினான்.

மேலும், “ஷ்ரதாவுக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லடா. அவங்கப் பேசினதை கேட்டவுடனே அவ முகம் பிரதிபலிச்ச அதிர்ச்சியை நீ பார்க்கணுமே. அவளாலயும் என்னை மறக்க முடியாதுடா. எங்க ரெண்டுபேருக்குமே நரகம்டா இந்த வாழ்க்கை.” என்று கூடுதலாய் இரண்டு பிட்டுகளைச் சேர்த்தான்.

சிவனேஸ்வரன் பேசிய கடைசி இரண்டு வரிகள் குபீரென்று சிரிப்பதற்கேற்றவையாக இருந்தாலும், ஷ்ரதா முகம் அதிர்ந்ததாக சொன்னதுமே வீசிக்குள் மெலிதாய் ஒரு பூகம்பம். இயன்றளவு அவன் சிவனேஸ்வரனை சமாதானப்படுத்தி, வீட்டிற்கு அழைத்து வந்தான்.

ஆனால், வீட்டிற்கு வந்த பின்பும், தான் மட்டும் அந்த சிக்கலைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

‘இந்தக் காதல் என்ன பெரிய மாயாஜால வித்தையா? அக்காவ ஒரு ரவுடி வீட்டுலயே போய் தங்குற அளவுக்கு தைரியம் கொடுத்திருக்கு. சிவாவை தேம்பி தேம்பி அழ வச்சிருக்கு. ம்ஹூம், ரொம்ப  ஜாக்கிரதையா இருக்கணும் இதுக்கிட்ட’ என்று நினைத்தபடியே புரண்டு படுத்தான்.  

ஆனால், அதே காதல் உயிரையே போக்கிக்கொள்ளும் அளவிற்கு அசட்டுத் தைரியத்தையும் கொடுக்கும் என்பதை ஷ்ரதாவின் மூலம் தான் அறிந்து கொண்டான் அவன்.

மதுபாலாவின் வளைகாப்பு முடிந்து இரண்டு நாள் கடந்த நிலையில் எப்போதும் போல் மாலை கடையில், தான் மட்டும் தனித்து உட்கார்ந்திருந்தான் வீசி.

அந்த நேரத்தில் உள்ளே விறுவிறுவென நுழைந்த ஷ்ரதா, “கொஞ்சம் உள்ள வாங்க” என்றபடியே நேரே மூன்றாம் கட்டிற்கு சென்றாள்.

‘இவ என்ன பூதத்தை இப்ப கிளப்ப வந்திருக்கா?’ என்று குழம்பியபடியே அவனும் அங்கு வந்து சேர்ந்தபோது, புத்தகங்களைப் பார்த்து திரும்பி நின்றிருந்தாள் ஷ்ரதா.

நைட் ரைடர் போல முகம் ஜிகுஜிகுவென்று தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்த வீசி, “எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் பிடிக்காது. இதுனால பல பேர் நம்பிக்கையை நான் இழக்க வேண்டியிருக்கும்.” என்று கறாராகக் கூறினான்.

“அப்போ உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா?” என்று திரும்பியவளின் கண்களில் நீர்ப்பூக்கள் நிறைந்திருந்தன.

‘கணக்கு நடத்துறப்பவும், அதுலயிருந்து கொஸ்ட்டீன்ஸ் கேட்கிறப்பவும் வாயையே திறக்கிறதில்ல. இப்போ பார் பேசுறதை!’ என்று மானசீகமாக ஆச்சரியப்பட்டவன், “ஆமா, பிடிக்கலை. யாராவது வர்றதுக்குள்ள இங்கயிருந்து கிளம்பு” என்று அவசரப்படுத்தினான்.

அவள் படக்கென்று அவன் காலில் விழுந்து, “நான் விளையாட்டா சொல்லல. உண்மையாவே நான் உங்களை விரும்புறேன். முதல் முதலா அண்ணா கல்யாணத்துல உங்களைப் பார்த்த போதுலயிருந்தே விரும்புறேன். ப்ளீஸ் என்னை பிடிக்கலை மட்டும் சொல்லாதீங்க.” என்று கண்ணீர்விட்டு கெஞ்சினாள்.

“ஹே ஹே எழுந்திரு.” என்று பதறி விலகியவன், ‘இதென்ன வம்பாப்போச்சி. இவளுக்கு அந்த தாரிணியே பெட்டர் போலயே. பிடிக்கலைன்னு சொன்னவுடனே டீசண்டா விலகிட்டா’ என்று இரு பெண்களையும் மனதிற்குள்ளேயே ஒப்பீடு செய்தான்.

ஷ்ரதா தான் எழுந்து நின்ற அடுத்தநொடி அங்கு புத்தகப்பெட்டிகளின் கட்டுகளை அறுக்க வைத்திருந்த இரும்பாலான ரம்ப ஸ்கேலை எடுத்துக்கொண்டு, “நீங்க எனக்கு இல்லைன்னா, நான் இப்பவே சூசைட் பண்ணிக்குவேன்.” என்று தன் இடமணிக்கட்டில் கூர்முனையை வைத்து மிரட்டினாள்.

“ஹேய்! உனக்கென்ன பைத்தியமா? ஸ்கேலை கீழப்போடு” என்று பதறினான் வீசி.

“இல்ல, நான் என் காதலை உங்களுக்கு ப்ரூவ் பண்ணப் போறேன்”

“சுத்த முட்டாள் தனம் இது. ப்ளீஸ், ஸ்கேலை கீழப்போடு”

“இல்ல, இப்போ நான் உங்க மேல வச்சிருக்க காதலை நீங்க பார்க்கப் போறீங்க”

“நான் ஒண்ணும் காட்டேரி இல்ல. உன் ரத்தத்தைப் பார்த்து சந்தோசப்படுறதுக்கு.”

“அறுத்தா ரொம்ப வலிக்குமா?”

“தையல் போடும்போது உயிரே போய்டும்”

“போகட்டும்”

“உன் அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது ஷ்ரதா”

“நிச்சயம் அவருக்கு முத்தம் கொடுக்கிற நிலைமை உங்களுக்கு வராது.” என்று சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் ஷ்ரதா.

அவளின் இந்த மிரட்டலில், “வேணாம்.. வேணாம்” என்றே சொல்லிக் கொண்டிருந்த வீசி ஒரு கட்டத்தில், “ஐ லவ் யூ” என்று வெளியே வாசலில் நின்றிருந்த சிவனேஸ்வரனுக்கு கேட்குமளவிற்கு உரக்கக் கத்தியிருந்தான்.

தன் வாழ்நாளின் மிக மோசமான நாளாக அந்த நாளை சிவனேஸ்வரன் எண்ணிக் கொண்டிருக்க, ஷ்ரதா தன் பிறப்பே பூரணமடைந்த நாளாக அந்த நாளைக் கருதினாள்.

அதன் பலனாகவே தற்போது நிகழ்காலத்தில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு மூளையில் மின்சாரம் பாய்ந்து, தலை மொத்தம் கிறுகிறுத்தது.

மூன்று வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான் ஒருநாள் தன் தலையைப் பிடித்துக்கொண்டே மீனாட்சியிடம், “ம்மா, அண்ணாவும், அண்ணியும் ஸ்டேஜ்ல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தப்போ தாரிணி என் பாவாடையில கூல்ட்ரிங்ஸ் கொட்டிட்டாம்மா” என்று சிணுங்கினாள்.

மீனாட்சி அவள் முகத்தை பரவசமாக அங்குலம் அங்குலமாகப் பார்த்து, “என்னங்க, நம்ம ஷ்ரதா பேசிட்டாங்க. அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.” என்று எல்லோருக்கும் கேட்கும்படியாகக் கத்தினார்.

“ஷ்ரதா பேசிட்டாளாவா? இவ்வளவு நாள் நான் என்ன ஊமையாவா இருந்தேன்? ம்மா, என்னாச்சு உங்களுக்கு?” என்று குழப்பமாகக் கேட்டாள்.

“எனக்கு ஒண்ணுமில்லைடி தங்கம். உனக்கு தான்… இரு, நான் உங்கப்பாக்கிட்ட சொல்றேன். எல்லாரையும் கூட்டிட்டு வர்றேன்” என்று சிறுமி போல் ஓடினார் மீனாட்சி.

அவள் அந்த அறையை சுற்றி முற்றி பார்த்தபோது அனைத்தும் மாறியிருந்தது.

“எங்க என் டெடியைக் காணோம்?” என்று தேடியவளுக்கு சுவரில் வெள்ளி சட்டத்துக்குள் இருந்த புகைப்படங்களைப் பார்த்து பலத்த அதிர்ச்சி.

அனைத்தையும் பார்த்துவிட்டு, வேகமாக கண்ணாடி முன்சென்று நின்றாள். அவள் முகமோ வேறு மாதிரி இருந்தது. தானே தனக்கு அந்நியமாகிவிட்டது போல் திடீர் உணர்வு.

பயத்தில் அறையே அதிரும்படி, “ம்மா! ம்மா!” என்று இரைந்து அழைத்தவள், வீட்டினர் அனைவரும்  ஓடிவந்ததும், “ம்மா, எனக்கு எப்படியோ இருக்கு. எல்லாம் புதுசா தெரியுது. அங்கப் பாருங்கம்மா அண்ணிக் கையில குழந்தை. நேத்து தானே அவங்களுக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம் நடந்தது? எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குதும்மா?” என்று விசித்து விசித்து அழுதாள்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயாதித்தன், “ஷ்ரதாம்மா” என்று தந்திரமாக அவளருகில் வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றார்.

அவளோ, “அப்பா, எனக்கு என்னாச்சு? ஏன் எல்லாம் வித்தியாசமா தெரியுது? பாருங்க தேதியெல்லாம் கூட மாறி, என் முடியெல்லாம் நீளமா..” என்று மீண்டும் தேம்பினாள்.

விஜயாதித்தன் சொல்கிறேன் எனும்படியாகவே தலையாட்டிக் கொண்டிருந்தார்.

அவளோ பொறுமையின்றி வெறிக்கூச்சலாக, “சொல்லுங்கப்பா” என்று அவர் ஜிப்பாவைப் பிடித்து இழுத்தபோது,

வினோதமாக நடந்து கொண்டிருந்தவளை, “ஷ்ரதா!” என்று ஓங்கி அழைத்து அதட்டினான் அருண்மொழி.

அவள் மிரண்டு, “ப்பா..ப்பா..” என்று விஜயாதித்தனின் மார்பிலேயே ஒடுங்கினாள்.

அருண்மொழி தன் தலையிலேயே அறைந்துகொண்டான், “ஹேய், என்னைப் பார்த்து ஏன் பயப்படுற?” என்று.

மதுபாலாவின் காலருகில் நின்றிருந்த நான்கு வயது அனன்யா, மதுபாலாவின் கையை சுரண்டி, “ம்மா, நாம நம்ம அபி பாட்டி வீட்டுக்கே போயிடலாம்மா” என்க, இடுப்பிலிருந்த இரண்டு வயது அஸ்வினோ அழுது ஊரைக் கூட்டினான்.

ஷ்ரதா விழித்து எழுந்தவுடன் தன்னிடம் கேட்டதை நினைவு கூர்ந்த மீனாட்சி, “என்னங்க, இவ இடைப்பட்ட இந்த ஏழு வருசத்தை மறந்துட்டாப் போலங்க. முழிச்சதும் அருண்மொழிக்கு நேத்து தான் கல்யாணம் நடந்தது மாதிரி பேசினா. அருண்மொழி வண்டியை எடுப்பா. பேசாம இவளை டாக்டர்கிட்டயே கூட்டிட்டுப் போயிடலாம்” எனவும்,

இரவு உடையில் நின்றிருந்தவனும், “சரிம்மா” என்று உடைமாற்றச் சென்றான்.

எதுவும் புரியாமல் அலங்க மலங்க விழித்த ஷ்ரதாவை விஜயாதித்தன், “ஒண்ணுமில்லடா” என்று தலை கோதிவிட்டார்.

மருத்துவமனைக்கு சென்றபோது அவளை முழுமையாக பரிசோதித்த மருத்துவர், “நாம கொடுத்த மெடிசின்ஸ் நல்ல பலனளிச்சிருக்கு. ஷ்ரதாவை இப்படியே விட்டுடுங்க. ரொம்ப கேள்விகேட்டு குழப்பாதீங்க. அவ ஏதாவது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லுங்க. ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவ அண்ணா கல்யாணத்துல ஏதோ அவ மறக்க முடியாத சம்பவம் ஒன்னு நடந்திருக்கு. அதான் பாதி நினைவு மட்டும் திரும்பி அந்த நாள்லயே நிற்கிறா. இழந்த நினைவுல பாதி இப்போ கிடைச்ச மாதிரி, திடீருன்னு ஒரு நாள் மொத்தமும் கிடைக்கலாம். அதுவரை அவக்கூட பேசி மெதுமெதுவா பழசைப் ஞாபகப்படுத்தப் பாருங்க” என்று அறிவுரை கூறி, தான் முன்பு கொடுத்த மருந்து பட்டியலை பாதியாக குறைத்து, வழியனுப்பி வைத்தார் அந்த கைராசி மருத்துவர்.

மருத்துவமனைக்கு சென்று வந்த நாளில் அவள் மெதுவாக தலையுயர்த்தி, “எப்படிப்பா எனக்கு எல்லாம் மறந்துபோச்சி?” என்க,

“ஒரு ஆக்சிடென்ட்ல தான்மா போயிடுச்சி. நீ ஸ்கூட்டில கோவிலுக்குப் போனியா? எதுக்க  லோடுவண்டில வந்த படுபாவி தட்டிவிட்டுட்டான். அதுல தான் உனக்கு முழுசா எல்லாம் மறந்து போச்சி. கிட்டத்தட்ட நாலு வருசமா நீ கோமால தான் இருந்த.” என்று பொறுமையாக எடுத்துக் கூறினார்.

அவள் அவர் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.

“எனக்கு எல்லாம் ஞாபகம் வந்திருமாப்பா?” என்றாள்.

“சீக்கிரம் ஞாபகம் வந்துரும்மா” என்று எவ்வித ஆசையுமேயின்றி வெறுப்பாகக் கூறிய விஜயாதித்தனுக்கு, அவளுக்கு எதுவுமே ஞாபகம் வராததே நல்லது என்று தோன்றியது.

அதன் பிறகான நாட்களில் நாள் முழுவதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவளை, தனது அதிகார பலத்தால் மீண்டும் கல்லூரியில் இரண்டாமாண்டிலிருந்து படிக்க சீட் வாங்கிக் கொடுத்தார் விஜயாதித்தன். தினமும் வீட்டிலேயே வந்து சிறப்புவகுப்பு எடுக்கவும் ஆசிரியர்களை ஏற்பாடு செய்தார்.

இந்த இடைபட்ட நாட்களில் வீசி பற்றிய நினைவும் அவளுக்கு எழாமல் இல்லை. ஆனால், யாரிடம் கேட்பதென்று தான் அவளுக்கு தெரியவில்லை.

காதல் கணம் கூடும்…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!