காதல் கணம் 20
முதல் நாள் நினைவில் அடுத்த நாள் மாலை ஆறுமணிக்கும் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் வீசி.
ஆனால், இம்முறை நகலாக அல்லாமல் நேரிலேயே வந்திருந்தாள் ஷ்ரதா.
வீசி தன்னைத் தேடி வந்தவளை ஆச்சரியமாய் பார்க்க, அவளோ, “எங்க வீட்டுல ஆதிஸ்வரன் அத்தான்கிட்ட பேசச் சொல்லி ரொம்ப கம்பெல் பண்றாங்க. கோகிலா அத்தை வேற என் போன் நம்பரை ஆதிஸ்வரன் அத்தான் கிட்ட கொடுத்திருப்பாங்கப் போல. அத்தான் அடிக்கடி மெசேஜ் பண்ணி தொந்தரவு பண்றாங்க. பேசாம அவர்கிட்ட நாம லவ் பண்றோம்னு சொல்லிடவா?” என்று ஆலோசனை கேட்டாள்.
‘குடியே முழுகிடும்’ என்று நினைத்துக்கொண்ட வீசி, “இல்ல, இப்போ சொல்ல வேணாம்” என்றான்.
அவளோ, “இல்ல, அவர் மனசுல ஆசையை வளர்க்கிற மாதிரி இருக்கு. இப்போவே சொல்லிடுறது நல்லது இல்லையா?” என்றாள்.
“ம்ஹீம்! உங்கப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகிடும் ஷ்ரதா.” என்றான்.
“இப்போ எனக்கிருக்கற பிரச்சனை உங்களுக்குப் புரியலையா?” என்றதும்,
“உனக்கு நான் இங்க வேலைப் பார்க்கறது பிடிக்கலையா ஷ்ரதா?” என்று ஒரே போடாகப் போட்டான் வீசி.
“இல்லங்க, அது வந்து”
“உன் அப்பா எவ்வளவு மோசமானவருன்னு தெரியாம பேசற. ஆதி அண்ணாவை முடிஞ்சளவு அவாய்ட் பண்ணு. சீக்கிரம் அவரே புரிஞ்சிப்பாரு.”
‘புரிஞ்சிக்கிட்டா நல்லது தான்.’ என்ற யோசனையுடன், “நீங்க நாளைக்கு ஃப்ரீனா நம்ம வெளிய எங்கேயாவது போகலாமா?” என்று தயக்கமாகக் கேட்டாள்.
கண்டிப்பாக அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி அவன் தட்டிக்கழிப்பான் என்றே எதிர்பார்த்தாள். ஆனால், மாறாக வீசி யோசிப்பது போல் இருந்தது.
இதுவரை அவன் வெளியே என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், போனால் நன்றாகயிருக்குமே என்று நினைத்தான்.
“லீவ் போடுறது கஷ்டம் தான். ஆனா, வெளியன்னா எங்கப் போறது?” என்றான் குழப்பமாக.
அவள் ஆர்வமாக, “திருப்பரங்குன்றம் போலாமா? இங்க பக்கத்துல எங்கப்போனாலும் அப்பாவுக்கு தெரிஞ்சிடும்” என்றாள்.
அவனும் போய் பார்க்கலாமே என்று சரியென்றான்.
சொல்லி வைத்தபடி மறுநாள் அவள் அவளது கல்லூரி வாசலில் நகத்தைக் கடித்தபடி காத்திருக்க, வீசி போய் அழைத்துக்கொண்டான்.
திருப்பரங்குன்றம் சென்றடைந்தபோது புதுஉற்சாகம் வந்து தொற்றி, இருவருமே ஆர்வமாக மலையேறத் தொடங்கினார்கள்.
ஷ்ரதா அவனிடம் வளவளவென்று பேசிக்கொண்டே வந்தாள்.
அந்த கல்கட்டியான பாதையில் செல்லச்செல்ல முருகனை தனக்கு எந்தளவு பிடிக்குமென்று விவரித்தபடியே வந்தாள்.
திடீரென ஓரிடத்தில் நின்று, “நமக்கு கல்யாணம் ஒரு முருகன் கோவில்ல தான் நடக்கணும்” என்று தீர்மானமாக சொன்னாள்.
அவன், “ஹப்பா! இவ மனக்கோட்டை கட்டுறதுல வல்லவி தான்” என்று முணுமுணுத்தான்.
வழியில் கண்ட பாறைகளிலெல்லாம் முருகவேல்-கவிதா, ராமசாமி-தங்கலெட்சுமி என்று முன்னாள் காதலர்கள் தங்கள் முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருக்க, ஷ்ரதாவும் அவர்களை பின் பற்றி, ஒரு பாறையில் வருண் சக்கரவர்த்தி-ஷ்ரதாஞ்சலி என்று ஹார்ட்டீன் வரைந்து அம்புவிட்டாள். ஒரு மழையில் அழிந்துவிடும் லட்சணத்தில் தான் அந்த கல் கிறுக்கல் இருந்தது.
அவளருகில் வந்தவன், “கோவில்கிட்ட வந்தாச்சி. வேகமா வா ஷ்ரதா” என்று தனது முதுகில் தொங்கிய பையிலிருந்து தண்ணீர்பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.
குடித்தவள் எதிரே ஆயிரம் அடி பள்ளத்தில் பச்சை பசேல் வயல்வெளிகளோடு தெரிந்த மதுரையை பார்த்துக்கொண்டே, “பசிக்கிற மாதிரி இருக்குல்ல?” என்றாள்.
அவன் தனது பையைத் திறந்து ஒரு செவ்வக வடிவ டிபன் பாக்ஸை எடுத்து நீட்டினான். ஷ்ரதா திறந்துப் பார்த்தவள், இன்பமாக அதிர்ந்தாள். அவளுக்கு பிடித்த பருப்புப்போலிக்கு கீழே அங்காங்கு தீக்காயங்களுடன் இரண்டு சப்பாத்தி ரோல்கள் இருந்தன.
வீசிக்கு அவள் சாப்பிடுவதைப் பார்ப்பதே ஒரு வேடிக்கையாக இருந்தது. சப்பாத்திக்கு வலிக்கும் போல் பிட்டு, குருமாவில் தோய்த்து வாய் கொள்ளாத அளவிற்கு அடக்கினாள் ஷ்ரதா.
முதலிரண்டு மெல்லலில் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை. விழுங்கியப் பின் தான் குருமா தன் வேலையைக் காட்டியது.
“ஹா! உரைக்குது. உரைக்குது.” என்று கத்தி அங்கிருந்த குரங்குகளையெல்லாம் பயமுறுத்திவிட்டாள்.
தங்களுக்கும் சப்பாத்தி தருவாள் என்று பார்த்திருந்தவைகள் எல்லாம் பதறியடித்து ஓடின.
காரத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவள் குடித்து காலி பண்ண, வீசி அதற்காக அவளை கடிந்துகொண்டான். கோபத்தில் முகத்தை தூக்கி வைத்தபடியே எஞ்சிய படிகளையும் கடந்தாள் ஷ்ரதா.
உச்சியை அடைந்தபோது மணி ஒன்றாகியிருந்தது. மனித சஞ்சாரம் எதுவுமின்றி அமைதியாக இருந்த அந்த காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வருவது என்பது காசிக்கே சென்று வருவதற்கு சமம் என்பதால் பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரியன்று மட்டும் தான் கூட்டம் களை கட்டும்.
இளசுகள் இருவரும் லிங்கத்தை வழிபட்டு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு கோவிலின் பின்புறமிருந்த ‘மச்சி முனி’ சித்தரை காணச் சென்றார்கள்.
மச்சி முனி சித்தரைப் பற்றி ஒரு கதை உண்டு. அவர் சிவனை நோக்கி தவமிருந்து மீனாக மாறி அங்குள்ள சுனையில் நீந்துவதாக வட்டாரத்தில் ஒரு புனைவுண்டு.
பெரிய வெள்ளை மீனாக அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து காட்சி தரும் மச்சிமுனியைக் கண்டால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது அந்த பிராந்தியத்தில் உள்ளவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மச்சி முனியைப் பார்க்க வரும் பக்தர்கள் அனைவரும் தயிர் பாக்கெட்டையும், பொறி பாக்கெட்டையும் வாங்கி வந்து மச்சி முனி தீர்த்தத்தில் கொட்டுவார்கள். மச்சி முனியும் யாரேனும் ஓரிருவருக்கு மட்டும் அருள்பாலித்து தன் மதிப்பை தக்க வைத்துக் கொள்வார்.
வீசி தான் ஏற்கனவே கீழே வாங்கி வந்திருந்த தயிர் பாக்கெட்டை உடைத்து நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டினான். ஷ்ரதா முகத்தை மூடிக்கொண்டு நின்றிருந்தாள்.
திடீரென குட்டி மீன்களுக்கிடையே ஒரு பெரிய வெள்ளை மீன் தோன்றி அவனை கலவரப்படுத்திவிட்டுச் சென்றது.
வீசி, “ஹேய் ஷ்ரதா! நீ மச்சிமுனியைப் பார்த்தியா? மச்சிமுனியைப் பார்த்தியா?” என்று ஆரவாரித்தான்.
எங்கேப் பார்க்க? அவள் தான் கண்களை மூடிக்கொண்டு நிற்கிறாளே.
சுனையைவிட்டு விலகி வந்ததும், “லூசு! நீ ஏன் மச்சிமுனியைப் பார்க்காம கண்ணை மூடிக்கிட்ட?” என்று திட்டினான் வீசி.
அவள் தனது சிறுவயது மீன் பயக்கதையை பேய்க்கதை லெவலுக்கு பில்டப் செய்து சொன்னாள். வீசி வாய்விட்டு சிரித்து மீண்டும் அவளுக்கு லூசுப்பட்டம் கட்டினான்.
ஆனால், அதில் அவளுக்கு துளிகூட கோபமில்லை. காற்று களைத்துவிட்ட சிகையில் அழகாய் தெரிந்தவனின் கம்பீரமே ஆட்டுக்குட்டியாய் அவன் காலடியில் அவளைக் கட்டிப்போட்டது.
மனநிறைவுடன் இருவரும் மலையடிவாரத்தை அடைந்தபோது மணி நான்கு.
தரைக்கு வந்ததும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து, “அவங்க எவ்ளோ ஃபாஸ்ட்டா பூ கட்டுறாங்கயில்ல?” என்று பூக்காரப் பெண்மணி ஒருவரைப் பார்த்து வியந்த ஷ்ரதா, “உனக்கும் பூ வேணுமா?” என்று கேட்டவனிடம்,
“இல்ல, மல்லிப்பூ எனக்கு பிடிக்காது” என்று முறுவலித்தாள்.
அந்த சமயம் தன்னை ஒரு ஸ்கார்பியோ கடந்து சென்றதையோ, அதிலிருந்தவர் தன்னை ஆர்வமாக பார்த்ததையோ ஷ்ரதா கவனிக்கவில்லை.
அவளை சரியாக அடையாளம் கண்டுகொண்டவர், முருகனை தரிசிக்க காரில் குடும்பத்தோடு வந்திருந்த விஜயாதித்தனின் பரம எதிரி ராஜமாணிக்கம்.
அவர் ஒரு காரசாரமான விவாதத்தின் போது, “உம்பொண்ணு ஊர் மேயுறதை மொதப்பாரு விஜயாதித்தா. பின்னாடி கட்டப் பஞ்சாயத்துல தோளை நிமிர்த்திட்டு வந்து நிற்கலாம்.” எனவும், விஜயாதித்தன் உக்கிரமாகிவிட்டார்.
உண்மையில் விஜயாதித்தனால் ஷ்ரதாவை அப்படி நினைக்கவே முடியவில்லை. என்னை ஊர் முன்னால் தலை குனிய வைக்கவே இவர்கள் எனக்கு பிள்ளைகளாக பிறந்திருக்கிறார்களா? என்று கொந்தளித்தார்.
விஜயாதித்தன் ஷ்ரதாவின் காதலனாக வீசியை யோசிக்கவில்லை. அவளது கல்லூரி நண்பர்களில் யாரேனும் ஒருவராக இருக்கும் என்றே நினைத்தார்.
மகனிடம் கற்றப் பாடத்தால் அதைப் பற்றி ஷ்ரதாவிடம் தூண்டித் துருவாதவர், பிரச்சனையை சிக்கலாக்கிக் கொள்ளாமல் சுளுவாய் முடிக்க நினைத்தார். ஆதலால், நேரே தன் தங்கை கோகிலாவை சந்தித்து விசயத்தை உடைத்தார்.
பின் அவரிடம், “சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.” என்று தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டுப் போனார்.
கோகிலா விஜயாதித்தன் சொன்னதைச் சொல்லி வெளிநாட்டில் வசிக்கும் ஆதீஸ்வரனை எச்சரித்தார். நீ உடனே மதுரைக்கு வா என்று நடுங்கினார். மகனும் ஒரு மாதத்திற்கு பிறகு மதுரை வந்து சேருமாறு பயணச்சீட்டு பதிவு செய்தான்.
கோகிலா அத்தோடு நில்லாமல் மறுநாளே விஜயாதித்தனின் வீடு தேடி வந்துவிட்டார். ஷ்ரதாவின் அறைக்குச் சென்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், தன் மூத்த மகனின் புஜபல பராக்கிரமங்களை எல்லாம் எடுத்துரைத்தார். ஷ்ரதா சங்கோஜமாக நெளிந்தபடியே அவற்றை கேட்டுக் கொண்டிருந்தாள்.
செல்லும் போது கோகிலா அவளை மிரட்டி விட்டுச் செல்ல, ஷ்ரதா அயற்சியாக அவற்றையெல்லாம் வீசியிடம் வாட்ஸாப் உரையாடலில் சொன்னாள். அவனோ அவசரப்பட வேண்டாமென்றே சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளுக்கு எவ்வளவு நாள் தான் காதலை மறைத்து வைப்பதென்று எரிச்சலாக இருந்தது. ஆனால், அவளால் அதனை அவனிடம் வெளிப்படையாக சொல்லவும் முடியவில்லை.
ஏனெனில், இன்னை வரையிலும் அப்படியொரு உரிமையை வீசி அவளுக்கு அளிக்கவில்லை. உரிமையை எடுத்துக் கொள்ளவும் அவளுக்கு துணிவில்லை.
விஜயாதித்தன் இடையில் அறிவிப்பாக ஷ்ரதாவுக்கு அடுத்த மாதமே திருமணம் செய்யப்போவதாக வீட்டில் சொன்னபோது அருண்மொழியும் மீனாட்சியும் பெரிதாக மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் விஜயாதித்தன் கேட்க மாட்டார் என்று தெரியும். பிறகெதற்கு அதை செய்துகொண்டு என்று விட்டுவிட்டார்கள் அவர்கள்.
ஆனால், ஷ்ரதா தான் மூச்சடைத்துவிட்டாள். உடனே அதைப் பற்றி வீசியிடம் சொல்ல வேண்டும் என்று அவனைத் தேடி புத்தகக்கடைக்கே ஓடி வந்தாள்.
அங்கு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி எதிரெதிரே நின்றிருந்தார்கள்.
அவள் மூன்றாம் கட்டில், அவன் நான்காம் கட்டில். அவர்களுக்கிடையே தடுப்பாக ஒரு பெரிய புத்தக மதில். அதுவே அவர்களின் மனநிலையை குறிப்பால் உணர்த்துவது போல் இருந்தது.
அந்த அறைக்குள் நிற்பது புழுக்கமாக இருக்கவும் மின்விசிறியை இயக்கச் சென்ற வீசி விளையாட்டாக அனைத்து சுவிட்சுகளையும் இயக்க, விபரீத விளையாட்டு வினையில் முடிந்தது.
மின்விசிறி சுற்றத் துவங்கும் ஓசையுடனே நான்காம் கட்டின் சுவற்றோடு ஒட்டிய புத்தக அடுக்கும் சரசரவென்று உள்ளே சென்றது. அச்சத்தத்தில் ஷ்ரதாவும் என்னவென்று ஓடி வந்துப் பார்த்தாள். உள்ளே ஒரு குட்டி அறை இலவச இணைப்பாக விரிந்தது.
ஷ்ரதா கண்களை அகல விரித்துப் பார்க்கும்போதே, அவளை வீட்டிற்கு செல்லும்படி நிர்பந்தித்தான் வீசி. ஷ்ரதாவும் தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமலே வெளியேறினாள்.
அவள் சென்ற பின், வீசி அவனே உள்ளே சென்று பார்வையிட்டான். சுற்றி சுவர் முழுக்க லாக்கராக இருந்தது. தரையில் பார்த்தால் காய்ந்துபோன ரத்தத்துளிகள்.
உள்ளே ஓரத்தில் ஒரு நாற்காலியின் மீது ரத்தத்தில் போட்டு புரட்டியெடுத்தது போல் தாம்பு ஒன்றும் கிடந்ததும் அரண்டுவிட்டான் வீசி. அங்கு அடித்த துர்நாற்றத்தில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு உடனே வெளியேறியும் விட்டான்.
அறையில் அனைத்தையும் சுற்றிப் பார்த்த வீசி, மேலே மூலையில் ஒரு கண்காணிப்பு கேமிரா இருந்ததையும், அது தன் வரவை பதிவு செய்ததையும் கவனிக்கத் தவறிவிட்டான். பின்னால் அதுவே அவன் படப்போகும் பல இன்னல்களுக்கு மூலதனமாக அமைந்தது.
காதல் கணங்கள் கூடும்…
