காதல் கணம் -3

காதல் கணம் 3

அவர்கள் தாமரைக்குளத்தை கடந்தபோது எதிரில் வந்த ஒரு குடும்பத்தைப் பார்த்ததும், “ஷிவாத்தான்” என்று குதூகலித்து ஓடினாள் ஷ்ரதா.

ஓடிச்சென்றதில் கால் பிசகி விழப்போனவளை தாங்கிப் பிடித்தவனைக் கண்டு தூணில் தன் கையைக் குத்திக்கொண்டான் வீசி.

வந்தது விஜயாதித்தனின் தங்கை குடும்பம். தாங்கிப் பிடித்தவன் அவளின் அத்தை மகன் சிவனேஸ்வரன்.

நான்கு வருடங்களுக்கு முன்பே குடும்பப் பிரச்சினையால் பெங்களூரிற்கு குடிபெயர்ந்தவர்கள் எப்போது? எப்படி மதுரை வந்தார்கள்? என்பது அவளுக்கேப் புரியாத புதிர்.

அவர்களைப் பார்த்ததும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை அவளால்.

தன் தோள்களில் ஆடவன் ஒருவனின் கரங்கள் கிடக்கும் சுரணையேயின்றி, “அத்தை, மாமா, எப்படி இருக்கீங்க? எப்போ மதுரை வந்தீங்க? ஹையோ அத்தான்! ஆளே படுஸ்டைலா மாறிட்டீங்க” என்று உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சிவனேஸ்வரனும் அவ்வப்போது வீசியைப் பார்த்தபடியே அவளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தான்.

சிவனேஸ்வரனிடம் பேசிவிட்டு பக்கத்தில் தனது அத்தை மாமாவிடம் திரும்பியவள், அவர்கள் தங்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லவும், முகம் வாடிப்போனாள்.

சமாதானமாக அவளின் தோளில் தட்டிய சிவனேஸ்வரன், “அவங்க அப்படித்தான். விடு ஷ்ரதா. சீக்கிரமே என் கல்யாணப் பத்திரிக்கையோட உன் வீட்டுக்கு வரேன்” என்றதும்,

முகம் மலர்ந்து, “கண்டிப்பா அத்தான். பட், அத்தை மாமாவை நெனச்சாத்தான் பயமா இருக்கு. அவங்க உங்களை வரவிடுவாங்களான்னே தெரியல. என்னாலயும் உங்க மேரேஜ்க்கு வர முடியுமா தெரியல. இந்தாங்க அத்தான், இதை என் கல்யாணப் பரிசா வச்சிக்கங்க.” என்று தன் கையிலிருந்த நிச்சயமோதிரத்தைக் கழற்றி அவன் சுண்டு விரலில் போட்டுவிட்டாள்.

அவளின் அச்செயலில் தீங்கங்குகளுக்கு நிகராக கண்கள் சிவந்தபடி நின்றிருந்தான் வீசி.

சிவனேஸ்வரனின் குடும்பம் தன்னை கடந்து சென்ற பின், “வா வருண்! கற்பகிரகம் போவோம்” என்ற தன் தாயிடம்,

“நான் வரல. நீங்க மட்டும்‌ போங்க” என்று பிடிவாதமாய் தாமரைக்குளத்தின் படிகளிலேயே நின்றுவிட்டான்.

அவன் உறுதியை அறிந்த அபிராமியும் அதன் பின் அவனை வற்புறுத்தி அழைக்கவில்லை.

ஆனால், செல்லும்போது தான் மட்டும் வீசியை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள் ஷ்ரதா. விந்தையாக அவனும் அப்போது அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கோவிலுக்குச் சென்று திரும்பியவர்கள் இரவு உணவு ‌உண்டு கொண்டிருந்தபோது அபிராமிக்கு உதவுகிறேன் பேர்வழியென்று வீசியை கடந்தும் வந்தும் சென்று கொண்டிருந்தாள் ஷ்ரதா.

திடீரென அவளது மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தியவன், டைனிங் டேபிளிலிருந்த குருமாவைப் பார்த்து, “பரிமாறு” என்றான்.

முறைப்படி இப்போது ஷ்ரதா அவனது தட்டில் குருமா பாத்திரத்தையே கவிழ்த்திருக்க வேண்டும். ஆனால், அவளது கைகள் அதைச் செய்ய ஒத்துழைக்கவில்லை.

காரணம், கீழே கால்கள் அவன் ஷுக்கடியில் சிக்குண்டிருக்கும் போது மூளை எப்படி வேறொரு கட்டளையைப் பிறப்பிக்கும்? அவளது காலை முதலில் அப்பிடியிலிருந்து காப்பாற்றச் சொல்லித்தானே உத்தரவுப் பிறப்பிக்கும்!

அப்படியும் மீறி குருமாவை அவன் தட்டில் ஒரு கரண்டி ஊற்றியவள், தன் கண்ணீரையும் ஒரு சொட்டு அவன் தட்டில் விட்டவளாய் குனிந்து அவன் காதருகே, “ப்ளீஸ்ங்க வலிக்குது” என்றாள்.

“கோவில்ல அவனைப் பார்த்ததும் ஷிவா அத்தான்னு இந்த கால் தானே முதல் எட்டு எடுத்து வச்சது?” என்று தட்டிலிருந்த சப்பாத்தியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

“ப்ளீஸ்ங்க! ரொம்ப வலிக்குது.” என்றவள் கெஞ்சியும் பயனில்லை.

“ஷ்ரதா, அஸ்வினுக்கு தண்ணியெடுத்துக் கொடும்மா.” என்று நேரம் தெரியாமல் அவளிடம் வேலை ஏவினார் அபிராமி.

இந்தமுறை “ப்ளீஸ்ங்க” என்றதும், அவளை விட்டான் அவன்.

ஆனால், கால்வலியில் பக்கத்திலிருந்த நாற்காலியிலேயே  உட்கார்ந்துவிட்டாள்.

“என்ன ஷ்ரதா பசிச்சிருச்சா? அதான் உன்னை நான் முன்னாடியே உட்கார சொன்னேன். இரு நான் வர்றேன்” என்று தானே அவளுக்கும் சேர்த்து பரிமாறத் துவங்கினார் அபிராமி.

அவளுக்கு சப்பாத்தி வைத்து குருமா வைக்கச் சென்றவரை, “ம்மா, வேண்டாம். நம்ம வீட்டு குருமா ரொம்பக் காரம். அவளுக்கு ஒத்துக்காது.” என்று கூறித்‌ தடுத்தான் வீசி.

“ஷ்ரதா என்னமோ சின்னக் குழந்தை மாதிரி தான்டா நீ பேசுறது இருக்கு. ஏன்மா ஷ்ரதா ஒரே நாள்ல உன்னைப் பத்தி என்னவெல்லாம் சொல்லி வச்ச இவன்கிட்ட? இப்படி நாடிப் பிடிக்கிறான். ம், நீ கொடுத்து வச்சவ. உன் புருஷன் இப்படி ஒரே நாள்ல புட்டுப்புட்டு வைக்கிறான். எனக்குந்தான் இருக்காரே” என்று சொல்லவும், முயன்று சிரித்தாள் ஷ்ரதா.

சாப்பிட்டு முடித்த வீசி தோட்டத்தில் உலாவச் சென்றுவிட, அவனுக்குப் பின்னால் வந்து நின்ற மதுபாலா, “வருண்” என்றாள்.

திரும்பியவனோ பேசாமல் நின்றான்.

“ப்ளீஸ் வருண். என்கிட்ட முன்ன மாதிரி பேசுடா. என்னால நீ இப்படி இருக்கறதை தாங்கிக்கிற முடியலைடா.” என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தன் மன்றாடலைத் தொடர்ந்தாள் அவள்.

“நாளைக்கு இவங்க அப்பா எங்களை கூட்டிட்டுப்போக வர்றாரு. நீ இப்படி இருந்தா என்னால அங்க நிம்மதியாவே இருக்க முடியாதுடா.” என்று சொல்லி அழுதாள்.

“அக்கா, ஏன் இப்படி அழற? அம்மா பார்த்திரப் போறாங்க.” என்றவன்,

“சாரிடா வருண். என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்குடா. என் சுயநலத்துக்கு உன்னை பலிக்கடாவாக்கிட்டேன்.” என்றவள் விம்மவும்,

“அக்கா, நீ இப்போ வருத்தப்படுற அளவுக்கு எதுவும் நடந்திடல. அதே மாதிரி எனக்கு இப்போ உன் மேல கோபமும் இல்ல. என் கோபமெல்லாம் உன் புருஷன் மேலயும், அவரை ஆட்டி வைக்கிற உன் மாமனார் மேலயும் தான். முன்னாடி உன் மேல நான் கோபப்பட்டதுக்குக்கூட காரணம் நீ உன் புருஷனுக்கு டைவர்ஸ் கொடுக்க மறுத்தது தான்.” என்று தன் மனதைத் திறந்தான் வீசி.

மதுபாலாவோ விரக்தியாக புன்னகைத்தாள்.

“என்ன பண்றது வருண், என்னால அவர் என்ன செஞ்சாலும் வெறுக்க முடியலையே. நான் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் குழந்தை இல்லாம இருந்தப்போ சுத்தியிருந்தவங்க எல்லாம் என்னைப் பத்தி அவர்கிட்ட என்னல்லாம் சொன்னாங்க தெரியுமா? ஆனா அவர் எதையும் கண்டுக்கல. ஒரு ஸ்டேஜ்ல நானே வெறுத்துப்போய் அவர்கிட்ட ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னப்ப, என்னை கைநீட்டி அடிச்சிட்டு ஒரு வாரம் என்கூட பேசல.” என்றாள், தன் வசந்த காலத்தை நினைவு கூர்ந்து.

“அப்படி எல்லாம் இருந்தவர் தான், அவர் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னதுக்கு உனக்கு சூடு போட்டாராமாம்? எனக்கு தெரியும். இவர் வெறும் அம்பு தான். நீ மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதக்கா. மறுபடியும் ஏதாவது செஞ்சாருன்னா, அவர் தங்கச்சி இங்க இருக்கிறதை ஞாபகப்படுத்து.” என்றான் ஆவேசமாக.

“நானும் அதைத் தான் சொல்ல வந்தேன் வருண். ஷ்ரதா இங்க சந்தோசமா இருந்தா தான் நான் அங்க சந்தோசமா இருக்க முடியும். நீ கேட்கலாம். இங்க அவளுக்கென்ன குறைன்னு? டைனிங் டேபிளுக்கு மேல குறையெதுவும் இல்லை தான். ஆனா, டைனிங் டேபிளுக்குக் கீழ தான் குறையெல்லாம் இருக்கு” என்றவள் தன் கையிலிருந்த ஆயின்மெண்ட்டை அவன் உள்ளங்கையில் வைத்துவிட்டுப் போனாள்.

ஸ்தம்பித்துப்போன வீசி சிறிதுநேரம் அங்குமிங்குமாக உலாவியவனாக வீட்டிற்குள் நுழைந்தான்.

அனைவரும் சென்ற பின்னும் தான் மட்டும் எழுந்து செல்ல முடியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தாள் ஷ்ரதா.

அபிராமியும் கைவேலையாக சமையலறைக்குள் இருந்ததால் அவளை கவனிக்கவில்லை.

எழுந்து மெதுமெதுவாக தனது இடக்காலை மட்டுமே ஊன்றி படிக்கட்டு வரை வந்து விட்டவள், அதன் பின் இருபது படிக்கட்டுகளையும் கடந்து எப்படித் தங்களது அறைக்கு செல்வதென்று ஆயாசமாய் பார்த்திருக்க,  சட்டென்று அவளைத் தூக்கி தங்களின் அறைக்கு கொண்டு சென்றான் வீசி.

நேரே அவளை கட்டிலில் இறக்கிவிட்டவன், அவளது வலது கால் விரல்களைப் பார்த்தான். தரையுடன் மல்யுத்தம் நடத்தியிருந்த சுண்டுவிரல் மட்டும் நைந்து தோல் உரிந்து வீரனாய் ஒரு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது.

அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவன் மதுபாலா தந்த ஆயின்மெண்ட்டை அவளது சேதாரமான கால் விரலில் வைத்து அழுத்த, ஒரு நொடி அவ்விரலே துண்டானது போல் துடிதுடித்துப்போன ஷ்ரதா, பெட்ஷீட்டை கசக்கிப் பிடித்து அலறினாள்.

அவளது வாயைப் பொத்தியவன், “ஆமா நிச்சயத்தப்போ நான் உனக்கு போட்ட மோதிரம் எங்க?” என்றான், அதிர்ச்சியில் கத்த மறந்தவளின் வாயிலிருந்த கையை எடுத்தபடியே.

சிறுவயதிலிருந்தே இதுபோல் செயின், மோதிரம், வளையல் என்று மற்றவர்களுக்கு கழற்றிக் கொடுத்தே பழகியவள், இப்போது அவன் இவ்வாறு கேட்டதில் எரிச்சலாகி, “ஷிவா அத்தானுக்கு கழட்டிக் கொடுத்துட்டேன்” என்றாள், தனது கால்விரலை பார்த்துக்கொண்டே.

“பதில் சொல்லும்போது என் முகத்தைப் பார்த்து பேசனும்.” -அவனின் பேச்சிலிருந்த கர்ஜிப்பு அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

மீண்டும் அவள், “ஷிவா அத்தா…” என்று முடிக்கக்கூட இல்லை, அவர்கள் மெத்தைக்கு நேர் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முப்பத்திரண்டு இன்ச் எல்இடி டீவியை தரையில் வீசி  தூள்தூளாக்கினான் வீசி.

சவுண்ட் ஃப்ரூப்புடன் வடிவமைக்கப்பட்ட அந்த அறை அவனது அனைத்து ஆட்டங்களுக்கும் சௌகர்யமாய் இருந்தது.

அவள் பயத்தில் தன் முழங்காலிலேயே முகம் புதைத்திருப்பதைப் பார்த்து, “என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?” என்று கர்ஜித்தான்.

சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிப்போய் அவனைப் பார்த்தவள், திடீரென வெறிப் பிடித்தவன் போல் வேகமாக தன்னை நோக்கி வருபவன், தன்னை அடித்துவிடுவானோ என்று பின்னோக்கி சாய்ந்தாள்.

அவளின் முகத்தை நெருங்கி, முகமோடு முகம் சேர ஒரு இன்ச் இடைவெளியே இருந்த சமயத்தில், “நீ இப்போ ஷ்ரதாஞ்சலி விஜயாதித்தன் இல்ல. ஷ்ரதாஞ்சலி சக்கரவர்த்தி! ஷ்ரதாஞ்சலி வருண் சக்கரவர்த்தி! ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கணும். புரிஞ்சதா?” என்று மேலும் முகத்தால் முன்னேறினான்.

ரொம்ப நேரம் பின்னால் சாய்ந்தபடியே இருக்க முடியவில்லை அவளால். பேலன்ஸ் தவறி தலையணையிலேயே விழுந்தாள்.

பின், வேகமாக மூச்சு வாங்க, “சா.. சாரிங்க. இனி நான் அப்படி பண்ண மாட்டேன்.” என்றாள்.

நீர்பட்ட பால் போல் அடங்கிய வீசி, அவளுக்கருகில் மல்லாந்து படுத்துக்கொள்ள, ‘அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டு கண்களை மூடித் திறந்த ஷ்ரதாவிற்கு மீண்டும் அவன் முகம் நெருக்கத்தில் தெரிந்தது.

“அதென்ன கோவிலுக்குள்ள எல்லாரும் உங்கப்பா எங்கன்னு கேட்கறாங்க? நீயும் அப்பா என்கூட வரலைன்னு பால்வாடி பாப்பா மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க. நான் என் புருஷன் கூட வந்திருக்கேன்னு தைரியமா சொல்லத் தெரியாது?” என்று உறும,

“சா.. சா.. சாரிங்க” என்றவள் மீண்டும் நத்தையாய் சுருங்கினாள்.

“எதைக் கத்து வச்சிருக்கியோ இல்லையோ, சாரி சொல்ல மட்டும் நல்லா கத்து வச்சிருக்க” என்று சலித்துக்கொண்ட வீசி மீண்டும் தன் இடத்திற்கே சென்றுவிட்டான்.

‘ஒரு சமயம் என்னை புரிஞ்சி வச்சிருக்கிற மாதிரி நடந்துக்கிறீங்க. இன்னொரு சமயம் என்னை வெறுக்கிற மாதிரி நடந்துக்கிறீங்க. ரெண்டுல எது நிஜம் வருணத்தான்?’ என்று எப்போதும் போல் தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டு, உறக்கக் கிடங்கிற்குள் இறங்கினாள் ஷ்ரதா.

பாவம்! வேறு அவளால் என்ன செய்ய இயலும்?

காதல் கணம் கூடும்…

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!