காதல் பூக்கள் – 5
“கண்ணா, வேலை கிடைச்சுதா?” என அஜயின் தாய் செல்வி, அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்டார்.
அவன் தந்தை சேகரோ, “விவஸ்தை கெட்டவளே, புள்ள மழையில நனஞ்சு கிட்டே வண்டி ஓட்டிட்டு வந்து இருக்கான். போ, போய் முதல்ல துண்டு எடுத்து கொடு. தலையெல்லாம் ஈரமா இருக்கு பாரு” என்று தன் மனைவியை கடிந்து கொண்டார்.
“ஏன்ப்பா, எங்கேயாவது ஓரமா நின்னுட்டு, மழை விட்டதும் வந்து இருக்கலாம்ல. இப்படியா நனைஞ்சுட்டு வருவ?”
“இல்லப்பா, மழை விடுற மாதிரி தெரியல. அதான் அப்படியே வந்துட்டேன்.”
“சரிய்யா, வேலை என்னாச்சு?” என சந்தடி சாக்கில் கேட்க,
அவனோ சற்று பயந்துகொண்டே, “ஒரு ரெண்டு நாள்ல கூப்பிடுறோம்னு சொல்லி இருக்காங்கப்பா” என்று தயங்கிக் கொண்டே கூறினான்.
“இந்த வேலையாவது நல்லபடியா கிடைச்சா பரவாயில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ஆம்பிள பிள்ளை, அதுவும் வீட்டுக்கு மூத்த பிள்ளை இப்படி வேலையில்லாம வீட்ல சும்மா உட்கார்ந்து சாப்பிடுறது? அக்கம் பக்கம் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?” என அவர் பாட்டுக்கு சத்தமாக புலம்பிக் கொண்டே போவதை பார்த்தவனுக்கு, இப்போது தான் மூச்சே வந்தது.
சிறு வயதிலிருந்தே தந்தையின் மீது பயம் கொண்டவன். அது வளர வளர மனதில் அப்படியே படிந்தும் விட்டது. தாயிடம் கூட அவ்வப்போது அவனுக்கு பயம் வரத்தான் செய்யும். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.
செல்வி கொடுத்தத் துண்டை வாங்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றவனின் மனதில், பஸ் ஸ்டாப்பில் பார்த்தவளின் முகம் வந்து சென்றது.
“என்ன ஒரு மென்மையான கரங்கள், முகத்தில் தானாக குடி கொண்டு இருக்கும் புன்னகை, எத்தனை பாரமாக இருந்தாலும் அவளின் முகத்தைப் பார்த்தால் அத்தனை பாரமும் ஒரு நொடியில் பறந்து விடும்.
புன்னகை தேவதையின் தரிசனம் திரும்பக் கிடைக்குமா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன், குளித்து முடித்து தனது அறைக்குள் நுழைந்தும், அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்.
***
மழை விட்டதும், ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு இருவரும் தங்கி இருக்கும் இல்லத்திற்கு வந்தனர். படிப்பு முடிந்த கையோடு வேலை கிடைத்ததும், இருவரும் ஒரு சிறிய அழகான வீட்டை அவர்களின் சிறு சேமிப்பில் வாங்கினர். அவள் எவ்வளவு வற்புறுத்தியும் ஜெயந்தி அந்த வீட்டை அவளின் தோழியின் பெயரிலேயே பதிவு செய்து வாங்கினாள்.
சொத்து, பணம் இருந்தால் தான் சொந்தம் கூட கூடவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மத்தியில், பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், எந்த சுயநலமும் இல்லாமல் இருந்த ஜெயந்தியைப் போல ஒரு தோழி கிடைத்ததற்கு, அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும், ஏன் பெற்ற அப்பா, அம்மா இருந்தால் கூட இவ்வளவு ஆனந்தம் அடைந்திருக்க மாட்டாள். அப்படிப்பட்ட தோழி, அதுவும் அவளைப் புரிந்து கொள்ளும் தோழி கிடைக்க, அவள் கொடுத்து வைத்தவள் தானே. பின் இருவரும் ஒன்றாகவே தங்கி வேலை செய்யத் தொடங்கினர்.
இல்லத்திற்குள் நுழைந்ததும் ஜெயந்தி தொப்பென்று சோபாவில் விழ, அவளோ நேராக குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு கடவுளைத் தரிசனம் செய்துவிட்டு வந்தாள்.
பின் இருவருக்கும் சுடச் சுட காஃபியைக் கலந்து கொண்டு, ஒரு தட்டில் பட்டர் பிஸ்கட்டை வைத்து எடுத்து வந்து கொடுத்தாள்.
காஃபியை பருகியபடி ஜெயந்தி தன் தோழியிடம், “ஏன்டி, இன்னைக்கு பஸ் ஸ்டாப்பில் பார்த்தவனை பத்தி நீ என்ன நினைக்கிற?”
“இப்போ எதுக்குடி ஜெய் அவனைப் பத்தி கேட்கிற?”
“சும்மா தான் சொல்லுடி?”
“நினைக்க என்ன இருக்கு? ஒன்னும் இல்லையே. அவன் யாருன்னு கூட தெரியாது. அப்புறம் எப்படி அவனைப் பத்தி நினைக்க முடியும்?” என அவள் சாதாரணமாகவே கூறினாள்.
ஜெயந்தியோ, “அப்படி இல்லடி, அவன் உன்னைப் பார்த்த பார்வை இருக்கே, யப்பா! ஆளையே முழுங்குற மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்.”
“அவன் என்னைப் பார்த்ததை நான் கவனிக்கவேயில்ல ஜெய். இங்க பாரு ஜெய், நம்ம வாழ்க்கை என்னும் பயணத்தில் எத்தனையோ பேரைக் கடந்து போய் இருக்கிறோம். இனியும் கடந்து போகவேண்டும். எல்லாரையும் நினைவில் வைத்துக் கொண்டே இருக்க முடியுமா?
யாரோ சிலர் மட்டும் தான் நினைவில் இருப்பாங்க. அதுவும் நல்லா பழகின மனிதர்களைத் தான் நினைப்பில் வச்சுக்கணும். இப்படி நடுவில் வந்து போறவங்களை இல்ல” என அவள் தெளிவாக கூறினாள்.
ஜெயந்தியோ, “வசனம் எல்லாம் நல்லாத்தான் பேசுற, பார்க்கலாம் எத்தனை நாளைக்கு இதே வசனம் என்று. ஒருவேளை அவனுக்கு நம்ம ஆஃபிஸிலே வேலை கிடைச்சிட்டா?”
“அதெல்லாம் கிடைக்காது. அப்படிக் கிடைச்சாலும், நம்ம இருக்கிற இடம் கூட அவனுக்குத் தெரிய வாய்ப்பு இருக்காது. அவ்வளவு ஏன் அவனால் நம்ம பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாது” என்று அவள் கூறிக் கொண்டே, இரவு சாப்பாட்டுக்கு தயார் செய்ய ஆரம்பித்தாள்.
ஆனால், ‘எனக்கு என்னவோ அப்படி தோனல. அவனால தான் நமக்குள்ள பிரிவே வர போற மாதிரி சிம்டம்ஸ் காட்டுது’ என்று ஜெயந்தியின் ஆழ் மனதில் தோன்றியது.
***
இரண்டு நாட்களாக அஜய்க்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவன் கடைசியாகச் சென்ற நேர்காணலில் வேலை கிடைத்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தான். நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம் இல்லையென்றாலும், மற்ற செலவு போக கையில் பணம் நிற்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கும். அது மட்டுமா, எந்த ஒரு அழுத்தமும் இல்லாத வேலை. மனநிம்மதியுடன் அவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்யலாம்.
‘இதெல்லாம் நடக்கணும்னா அந்த வேலை கிடைத்தாக வேண்டும்’ என்று அஜய் இன்று வர இருக்கும் வேலைக்கான ஃபோன் காலுக்காகக் காத்திருந்தான்.
“அஜய்ஸ” என்று கூப்பிட்டபடி சரவணன் வந்து நிற்க, அவனோ டென்ஷனோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.
“டேய் அஜய், உன்னய தான்டா கூப்பிடுறேன். உன் காது கேக்குதா இல்லையா?” என்று அஜயின் காதில் சென்று கத்தினான்.
அஜய் தன் காதைத் தேய்த்தபடி, “முட்டா பயலே, இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற, காது வலிக்குதுடா. கொய்னு கேட்குது” என்று தன் தம்பியை மீண்டும் திட்ட ஆரம்பித்தான்.
சரவணனோ, தன் கையில் எடுத்துக் கொண்டு வந்த மொபைலை நீட்டி, “மெண்டல்! வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்த தான, அந்த ஆஃபிஸில் இருந்து ஃபோன் வந்துச்சு, அதான் எடுத்துட்டு வந்தேன். இந்தா பிடி, அவங்க லைன்ல இருக்காங்க” எனச் சொல்லி போனைக் கொடுத்தான்.
அஜயோ பதற்றத்துடன் அவன் கையிலிருந்த போனை பிடுங்கிக் கொண்டே, “அடப்பாவி, அவங்களை லைன்ல வச்சுக்கிட்டு தான் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தியா?” எனக் கோபத்துடன் கேட்டுவிட்டு, எதிர்முனையில் இருப்பவரிடம் பேசத் தொடங்கினான்.
“வணக்கம் சார், மன்னிச்சுடுங்க சார்” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டான் அஜய்.
“எதுக்கு இப்போ மன்னிப்பு கேக்குறீங்க மிஸ்டர் அஜய் சேகர்?” என்று அவன் தந்தையின் பெயரையும் சேர்த்துச் சொன்னாள்.
எதிர்முனையில் ஆண் நபராக இருக்கும் என்று எதிர்பார்த்தவன், பேசியது ஒரு பெண் என்று உணர்ந்து ஆச்சரியமானான்.
“ஐய்யோ சாரி மேடம், நான் பாய்…” என ஆரம்பிக்க,
எதிர் முனையிலிருந்தவள், “மிஸ்டர் அஜய் சேகர், எங்களுக்கு நீங்க கூறும் மன்னிப்பைக் கேட்க நேரம் இல்லை. உங்களுக்கு ஒர்க் கன்ஃபார்ம். ஸோ, நாளை முதல் நீங்கள் வேலைக்கு வரலாம். மத்த டீடெயில்ஸ் ஆஃபீஸ்க்கு வந்ததும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என்று அவள் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு, அவன் அடுத்து பேசுவதற்கு முன் ஃபோனை வைத்து விட்டாள்.
அஜய்க்கோ தலை கால் புரியவில்லை. தனக்கு, தான் எதிர்பார்த்த மாதிரியே அந்த அலுவலகத்தில் வேலை கிடைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான். தன் எதிரில் இருந்த சரவணனைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டான்.
“டேய் சரவணா, எனக்கு நான் எதிர்பார்த்த மாதிரியே அந்த வேலை கிடைச்சிடுச்சுடா.”
“செம! அண்ணா சூப்பர்ண்ணா, நீ ஆசைப்பட்டபடி வேலை கிடைச்சிடுச்சு, இனிமே நீ ஹேப்பி தானே. அம்மா, அப்பா கேட்டாங்கனா இன்னும் சந்தோஷப்படுவாங்க. இரு நான் போய் சொல்லிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு திரும்பிய சரவணனைத் தடுத்து,
“இருடா, நானே சொல்றேன். அப்போ தான் நல்லா இருக்கும்” எனக் கூறிவிட்டு இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
செல்வி டிவியில் சீரியலை பார்த்துக் கொண்டே காய்கறிகளை அரிந்து கொண்டு இருந்தார். தன் இரு பிள்ளைகளும் ஒன்றாக, முகம் முழுவதும் சிரிப்போடு வந்ததைப் பார்த்து, “என்னங்கடா ரெண்டு பேர் முகத்திலையும் சந்தோசம் தாண்டவமாடுது. என்ன விசயம்டா?” எனக் கேட்டார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் தன் தந்தையைத் தேடியவன், லதா மட்டும் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பது கண்ணில் அகப்பட, “அம்மா, அப்பா எங்கமா?” எனச் சரவணன் கேட்க,
“அவரு தூங்கிட்டு இருக்காருடா. பாவம் இவ்ளோ நேரமும் உங்களைப் பத்தி தான் கவலைப்பட்டு புலம்பிட்டே இருந்தார். இன்னும் மூத்தவனுக்கு வேலை கிடைக்கல. இளையவனும் பொறுப்பா இல்லை. லதா பொண்ணு விளையாட்டு பிள்ளையாவே இன்னும் இருக்கானு வேதனைப்பட்டு அப்படியே கவலையோடே தூங்கிட்டாருடா” என்று வராத கண்ணீரை உறிஞ்சியபடி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு கூறினார்.
“ஆமா, ஆமா வேதனையா, கவலையா இருக்கிறவங்க தான் மூணு வேலையும் நல்லா சாப்பிட்டு குறட்டை விட்டு தூங்குவாங்க” எனச் சரவணன் அஜய் காதுக்கு மட்டும் விழும்படி முணுமுணுத்தான்.
அஜயோ அமைதியாக இருக்குமாறு கண் ஜாடை காட்டி விட்டு, “அம்மா, எனக்கு வேலை கிடைச்சிடுச்சும்மா” என அவன் சொன்னதும் செல்விக்குச் சந்தோஷமாகியது.
அதுவரை உள்ளறையில் உறங்கிக் கொண்டிருந்த சேகர், வேலை கிடைத்துவிட்டது என்று அஜய் கூறியது காதில் விழ, தூக்கத்தை விடுத்து எழுந்து, அறையிலிருந்து வெளியே வந்தார்.
“வேலை கிடைச்சிடுச்சா, ரொம்ப சந்தோஷம்ப்பா. ஆமா சம்பளம் எவ்வளவு?” என்று கேட்க, சரவணன் மீண்டும் முணுமுணுக்க ஆரம்பித்தான்.
“ஆமாஸ அங்கங்க பிள்ளைங்களுக்கு வேலை கிடைச்சதுனு கேள்விப்பட்டால், அப்பா அம்மாலாம், எங்கே வேலை? என்ன வேலை? போயிட்டு வர வசதியா இருக்குமானு கேட்டுட்டு, அப்புறம் கடைசியா தான் சம்பளத்தை பத்தியே பேசுவாங்க. ஆனா இங்க பாரு எடுத்த எடுப்பிலே காசை பத்தி பேசுறாங்க. ச்செய்! என்ன வாழ்க்கைடா சரவணா இது?” என்று தனக்கு தானே நொந்து கொண்டான் சரவணன்.
