காதல் பூக்கள் – 8
அவன் காதலை வெளிப்படுத்திய சந்தோஷத்தில் அஜய் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவனால் வீட்டில் இருக்கவே முடியவில்லை.
அவளை ஒரு தரம் பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற, ‘அவளை எப்படிப் பார்ப்பது? வீட்டில் என்ன காரணம் சொல்லிட்டு வெளியே போக முடியும், அதுவும் இந்த ராத்திரி நேரத்தில். அப்படியும் வெளியே போய் பேய், பிசாசு, நாய்கள் ஏதாவது நம்மளை பிடிச்சுக்கிட்டா, ஐய்யோ வேண்டாம் சாமி. எதுவா இருந்தாலும் நாளை காலையில ஆஃபிசில் போய் பார்த்துக்கலாம்’ என்று பயந்து நடுங்கினான்.
பின் சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்கச் சென்றவனின் மனதில், ‘அவளிடம் காதலைச் சொல்ல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம். ஆனா ஒரு வழியா என் மனதில் இருப்பதைச் சொன்னதும் அவளும் சரியென்று கூறுவாள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்போ அவளும் என்னை விரும்பி கொண்டு தான் இருந்து இருக்கிறாள். இது தெரியாமல் நான் தான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன்’ என்று படுத்துக் கொண்டே தான் அவளிடம் காதலை வெளிப்படுத்தியதை நினைத்துப் பார்த்தான்.
ஆஃபிசில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து ஜெயந்தியிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருந்தான். எது பண்ணாலும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து அவள் முன்னாடியே திட்டிக் கொண்டிருந்தாள்.
‘ப்பா… பொண்ணா அது சரியான பஜாரி. பொண்ணுனா இவளை மாதிரி அழகா, அமைதியா இருக்கணும்’ என எண்ணினான்.
அன்றைக்குத் திட்டு வாங்கி அஜய் சோர்வாக இருந்த போது, அவள் தான் அவனை அழைத்து சமாதானம் செய்தாள் என, அன்று ஒரு நாள் நடந்த சம்பவத்திற்குள் சென்றான்.
“ஹலோ அஜய், என்ன வரைந்து வச்சு இருக்கீங்க? நாங்க சொன்ன காமிக்ஸ்க்கும் இந்த படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா? ஒரு துளி கூட மேட்ச் ஆகல, என்ன நினைப்பில் இருக்கீங்க? வேலையில் கவனம் இருந்தால் தானே, செய்யுற வேலையை ஒழுங்கா செய்ய முடியும். கண்ட கண்ட விஷயத்திலும் கவனம் போனால் இப்படி தான் வேலை தப்பு தப்பா நடக்கும்” என்று மறைமுகமாக அவன் தன் தோழியைப் பார்ப்பதற்கு அஜய்யைத் திட்டினாள் ஜெயந்தி.
அவள் முன் அசிங்கப்பட்டதை நினைத்து வேதனை அடைந்தவன் ஜெயந்தியிடம், “என்னை மன்னிச்சிடுங்க மேம். நான் இப்போவே எல்லாத்தையும் சரி செய்து எடுத்துட்டு வரேன் மேம்” என்று கூறிவிட்டு டேபிளில் இருந்த பேப்பர்களை எடுத்துக் கொண்டே, அவளையும் ஓர விழியால் பார்த்துவிட்டே சென்றான்.
“ஜெய், ஏன்டி அவர்கிட்ட அப்படி முகத்தை காட்டுற? பாவம்டி.”
“என்னது! அவரா? எப்போ இருந்து மேடம் அவன், அவரா மாறினாங்க உங்களுக்கு?”
“ஏய், நான் எப்பவுமே அவரை அவர்னு தானடி சொல்லிட்டு இருக்கேன். என்னவோ இன்னைக்கு தான் புதுசா சொல்ற மாதிரி கேக்குற நீ? பேச்சை மாத்தாத, முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு, இப்ப எதுக்கு அவரை இப்படி திட்டிக்கிட்டு இருக்க?”
“பின்ன, தப்பு செஞ்சா திட்ட தான் செய்வாங்க. இவன் இல்லை, இவனிடத்தில் வேற யார் இருந்தாலும் நான் திட்டி தான் இருப்பேன். செய்ற வேலைய ஒழுங்கா செஞ்சா நான் ஏன் திட்ட போறேன்?” என்று ஜெயந்தி கூறினாள்.
அவளோ, “இருந்தாலும் இது ரொம்ப ஓவர்டி ஜெய்” என அஜய்க்காக சாப்போர்ட் செய்து பேசினாள்.
இது ஜெயந்திக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், அதைத் தன் தோழியின் முன்பு காட்டிக் கொள்ளாமல் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.
பின் அவள் அஜய்யைக் கூப்பிட்டு தன் தோழிக்காக மன்னிப்பு கேட்டவள், “இனிமே இப்படி தவறு செய்யாதீங்க” எனக் கூறி அனுப்பி வைத்தாள்.
இப்படியே நாட்கள் ஓட, அஜய் அவளின் பெயரை அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருந்தான். அப்படி ஒரு நாள் அவன் முயன்ற போது அவளின் ஐடி கார்ட் கீழே விழ, அதைக் கையில் எடுத்தவன், அவளின் பெயரை அறிந்து கொள்ள ஐடி கார்டைத் திருப்பி பார்க்க, “இ…” எனப் படிக்கும்போது, சரியாக அவள் அஜய்யின் கையிலிருந்த தன்னுடைய ஐடி கார்டை பிடுங்கினாள்.
“ஏங்க டக்குனு பிடுங்கிட்டிங்க. நான் முழுசா உங்க பேரை வாசிக்கவேயில்ல. ப்ளீஸ் ஐடி கார்டை ஒரு நிமிஷம் கொடுங்க” என்று அவளிடத்தில் இருக்கும் கார்டை வாங்க அவளை நெருங்கி வர, அவளுக்கோ இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
“அங்கேயே நில்லுங்க, நெருங்கி வராதீங்க” என்று அஜய்யை தடுத்தாள்.
அஜய்யோ மீண்டும் ஓர் அடி அவள் முன் நெருங்கி நின்று, “ஏன் நெருங்கி வந்தா, என்னிடம் உன் இதயத்தைப் பறிகொடுத்து விடுவாய்னு பயமா இருக்குதா?” என்று அவள் செவிகளுக்கு மட்டும் கேட்கும்படி மென்மையாக கூறினான். அவனின் மூச்சுக் காற்று அவளின் இதயத்துடிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிற்க வைத்துவிட்டு, “என் பெயர் கூட தெரியாத ஒரு நபரிடம் எப்படி நான் என் இதயத்தைப் பறி கொடுப்பேன்?” என்று அவளும் கன்னங்கள் சிவக்க வெட்கப்பட்டுக் கொண்டே கூறினாள்.
அஜய் அவளின் வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தவன் பரவசத்தோடு, “அப்போ உன் பெயரைக் கண்டுபிடித்து விட்டால் உன் இதயத்தை என்னிடம் கொடுத்து விடுவாய் தானே?” என்று மென்னகையுடன் கேட்டான்.
அவளோ வெட்கத்தோடு புன்னகையுடன் தலை குனிந்து கொண்டு அங்கே இருந்து விலகி ஓடினாள். அவள் பின்னால் சென்றவன், ஜெயந்தி வருவதைப் பார்த்து அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
தன் கேபினுக்கு வந்தவன், அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கியவன், அவளின் முதல் எழுத்தை ஒரு காகிதத்தில் எழுதி, ‘இ’ என்று ஆரம்பிக்கும் அனைத்து பெயரையும் எழுதத் தொடங்கினான்.
***
“டேய் அண்ணாஸ அண்ணாஸ” என்று அஜய்யின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள் அஜய்யின் தங்கை லதா. அஜய்யோ பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.
லதாவோ, “என்ன அண்ணா இங்க வந்து படுத்து தூங்கிட்டு இருக்கற?” என்று கேள்வி கேட்டாள்.
‘இவ்வளவு நேரமா நடந்து முடிந்ததை நினைத்துக் கொண்டே தூங்கிட்டோமா?’ என்று அப்போது தான் உணர்ந்தான்.
“உன்னைத் தான் கேட்கிறேன். இங்க வந்து ஏன் படுத்துட்டு இருக்கிற?” என்று லதா மீண்டும் அவனிடம் கேள்வி கேட்டாள்.
அஜய்யோ தூக்கக் கலக்கத்தில், “என்னடி உன் பிரச்சனை, நான் என் ரூம்ல தானே படுத்து இருக்கேன். உனக்கு என்ன இந்த டைம்ல என் ரூம்ல வேலை?” என்று அவளிடம் கேட்டான்.
“உன் மூஞ்சி, டேய் லூசு, இது பாத்ரூம் வாசல்டா. கண்ணைத் திறந்து நல்லா பாரு” என்று சொல்லிய பிறகு தான் சுற்றிப் பார்த்தான்.
‘ச்சீ… கருமம் இவ்வளவு நேரமா பாத்ரூமுக்கு வெளியேவா படுத்து இருந்தோம். எப்போ எப்படி இங்க வந்தோம்? நம்ம கடைசியா ரூம்ல தானே படுத்துட்டு இருந்தோம். இங்கே எப்படி?’ என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
தலையைச் சொறிந்தபடி எழுந்தவன், “லதா ப்ளீஸ்டி, இதை காலையில அப்பா, அம்மாகிட்ட சொல்லாத. அதிலயும் முக்கியமா அந்த சரவணன் பையன் கிட்ட போட்டு கொடுத்திடாத லதா. உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். நீ என்ன கேட்டாலும் அண்ணா செய்றேன். ஆனா இதை மட்டும் சொல்லிடாத” என்று தன் தங்கையிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
லதாவோ, “அட ச்சீ நகரு, மனுஷங்க அவசரத்தை புரிஞ்சிக்காம…” என்று அவனைத் தள்ளிவிட்டு பாத்ரூம் சென்றாள்.
அஜய் இது தான் சமயம் என நினைத்து தன் அறைக்குள் வந்து, சத்தமே இல்லாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.
ஆனால் அங்கோ இருவரும் உறக்கத்தை இழந்து நிம்மதி இல்லாமல் தவித்தனர்.
அவளிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ஜெயந்தி வீட்டிற்குள் நுழைந்ததும், நேராக தன் தோழியைக் கூட காணாமல் அறைக்குள் சென்று கதவைச் சாத்தினாள்.
பாவம் அவளால் ஜெயந்தியின் இந்த வெறுப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள். ஜெயந்தியின் அறைக் கதவிற்கு முன் வந்து, கதவைத் தட்டிக் கொண்டே ஜெயந்தியிடம் மன்னிப்பு கேட்டாள். இது எதையும் ஜெயந்தி காதிலே வாங்கிக் கொள்ளாமல், தன்னுடைய துணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
“ஜெய் ப்ளீஸ்டி, நான் சொல்றதை கேளுடி, நான் பண்ணது தப்பு தான். அஜய் என்கிட்ட காதலை சொன்னதும், உன்கிட்ட வந்து சொல்லி இருக்கணும். உன்கிட்ட சொல்லாமல் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டது தப்பு தான்டி. என்னை மன்னிச்சிடுடி, ப்ளீஸ்டி. என் கிட்ட இப்படி முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதடி. என்னால் இதை தாங்கிக்கவே முடியலடி.
இந்த உலகத்தில் யார் என் மேல கோவப்பட்டாலும் தாங்கிப்பேன்டி. ஆனால் உன்னோட கோபத்தை மட்டும் என்னால தாங்கவே முடியாதுடி. தயவுசெய்து கதவைத் திறடி. இனிமேல் எந்த விசயம் என்றாலும் முதலில் உன்கிட்ட சொல்லிட்டு தான்டி முடிவு செய்வேன். இந்த ஒரு தரம் மட்டும் என்னை மன்னிச்சிடுடி. ஜெய்ஸ ஜெய்ஸ ஜெய் கதவைத் திறடி” என்று கண்ணீரோடு தன் தோழியின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அங்கே ஜெயந்தியோ தன்னுடைய துணிமணிகளை எடுத்து வைத்துவிட்டு, தன் பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டு இருந்தாள். அப்போது ஜெயந்தியும் அவளும் சேர்ந்து எடுத்த புகைப்படம் கைக்கு கிடைத்தது.
அதைக் கையில் எடுத்தவள், தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “நான் உன்னை விட்டு விலகி போறேன்டி. ஏனோ உன்னை விட்டுக் கொஞ்ச நாள் தள்ளி இருக்கணும்னு தோனுது. இங்கேயே இருந்தால் எங்கே எனக்குத் தெரியாமல் உன்னை வார்த்தையால காயப்படுத்தி விடுவேனோனு பயமா இருக்குடி. உன்னைக் காயப்படுத்தக் கூடாதுனு தான் நமக்குள்ள இந்த பிரிவு. கொஞ்ச நாள் நீ கஷ்டப்படுவ தான். ஆனால் போகப் போக உன்னுடைய காதல் அந்த கஷ்டத்தை மறக்கடிச்சிடும்.
இது உன்னுடைய வாழ்க்கைடி. இதில் முடிவு எடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் தான் ரொம்ப உன்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டேன். அதான் இப்போ விலகி போறேன். என் கண்ணுக்குத் தப்பா தெரிஞ்ச அஜய், உன் கண்ணுக்கு நல்லவனா தெரிஞ்சு இருக்கலாம். ஏன் நான் அவனை கெட்டவனா கூட தப்பா முடிவு செய்து இருக்கலாம். உண்மையாவே அவன் நல்லவனா இருந்து, என்னால உன் வாழ்க்கைக்கு அது பிரச்சனையாகிடுச்சுனா, என்னால் தாங்க முடியாது. அதனால இந்த கொஞ்சக் காலப் பிரிவு நமக்கு நல்லதுடி. அது மட்டுமில்லை இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதை தெரிஞ்சிக்கவும், இந்த பிரிவு உனக்கு உதவியா இருக்கும்” என்று புகைப்படத்தைப் பார்த்து கண்களில் கண்ணீருடன் பேசினாள்.
வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அந்த புகைப்படத்தையும் தன் துணிப்பையில் வைத்தாள். பாஸ்போர்ட் ஒருவழியாகக் கிடைத்து விட, தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தவளைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ஏய் என்னடி இது, ஜெய் இப்போ எங்கே போற நீ? அதுவும் இந்த நைட் டைம்ல, ஏன் ஜெய் என்னை விட்டு போகலாம்னு நீ முடிவே பண்ணிட்டியா? அப்படி என்னடி நான் தப்பு பண்ணிட்டேன். அவரோட காதலை ஏற்றுக்கொண்டது ஒரு குற்றமா?” என்று தன் தோழியைப் பார்த்துக் கேட்டாள்.
ஜெயந்தியோ அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், ஏற்கனவே தான் வரும்போதே அழைத்து வந்த காரில் தன் பைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
அவளோ, “உன்கிட்ட தான் ஜெய் கேட்கிறேன். இப்போ என்ன நடந்துச்சுனு நீ என்னை விட்டுப் போக முடிவெடுத்திருக்க? சொல்லுடி, நான் பண்ணது தப்பு தான் ஜெய். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை எனக்கு கொடுக்க போறீயா. வேண்டாம் ஜெய், என்னால இதை தாங்கிக்க முடியாது” என்று அவள் மட்டும் பேசிக் கொண்டே இருந்தாள்.
ஜெய்யோ தன் வண்டி சாவியை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு, “நான் எங்க அப்பாவைப் பார்க்க போறேன். அண்ட், கொஞ்ச நாள் அவர் கூட இருந்து கொண்டு ஒர்க் செய்ய போகிறேன் பை” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்று விட்டாள். கார் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
‘இத்தனை வருடம் தன் கூடவே தனக்காகவே இருந்தவள், இன்று என் காதலால் என்னைப் பிரிந்து செல்கிறாள். நான் காதலிப்பது ஒரு குற்றமா?’ என்று அந்த நடு இரவில் யாரும் அற்ற சாலையில், கார் போன திசையைப் பார்த்து, தனக்கு தானே கேட்டுக் கொண்டு நின்றாள் அவள்.
