காதல் – 1

​என் அன்பே! எந்தன் ஆருயிரே!

  • அத்தியாயம்- 1 

​அதிகாலை ஆறு மணி ஜாகிங் முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் இன்பராஜா.

​”அம்மா காபி கொடுங்க” என்று சொல்லிவிட்டுச் செய்தித்தாளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

​”என்னப்பா இன்னிக்கு இன்டர்வியூ செய்ய ஏற்பாடு பண்ணியாச்சா?” என்று அவன் தந்தை சுந்தர் கேள்வி கேட்க,

​”ம்ம்ம் ரெடிப்பா” என்றான் ராஜா.

​”கொஞ்சம் கவனமா இன்டர்வியூ பண்ணனும் சரியா? ஏன் சொல்றேன்னா நமக்கு உண்மையா இருக்குறவங்க இந்த உலகத்துல ரொம்ப குறைவுதான். நம்ம சதாசிவம் எவ்வளவு விசுவாசம் தெரியும்ல உனக்கு?” என்றார் கொஞ்சம் கண்டிப்பான குரலில்.

​அவனோ கண்களில் கடுமையைக் காட்டி உதட்டில் சிறு புன்னகையோடு, “தெரியும்பா நான் பார்த்துக்கிறேன். அது என் கம்பெனி, நானாவே சுயமா உருவாக்கினது. எது எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும். நீங்க கவலைப்படத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று எழுந்து தன் ரூமுக்கு போய்விட்டான் இன்பராஜா.

​சுந்தரோ, “இவனுக்கு இன்னும் என் மேல இருக்கிற கோபம் குறையவே இல்லடி. இவனை எப்படி வசந்தா பொண்ணு பார்க்க வரச் சொல்லப் போற? இவன் அங்க வந்து நம்ம மானத்தை வாங்கப் போறான்” என்று தன் மனைவியிடம் புலம்பினார்.

​வசந்தாவோ, “கவலைப்படத் தேவையில்லைங்க. என் அண்ணனுக்கு நம்ம ராஜாவைப் பத்தி நல்லாவே தெரியும். அதனால இன்னிக்கு நம்ம மட்டும் போய் பார்த்துட்டு வரலாம்” என்றாள் நம்பிக்கையோடு.

​”என்னமோ சொல்ற, ஏதாவது தப்பு நடக்காமல் பாத்துக்கோ. அவன் வாழ்க்கையில ஏற்கனவே நம்ம பெரிய தப்பு பண்ணிட்டோம். அவன் அந்த வலியிலிருந்து வெளியே வரவே ஒரு வருஷம் ஆச்சு. அதுக்கப்புறம்தான் இந்த ஐந்து வருஷத்துல சுயமா அவன் சொந்தக் கால்ல நின்னு இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கான். நம்மகிட்ட கடல் போல சொத்து இருந்து என்ன பயன்?” என்று கூறியவர் மனதிற்குள்,

​’நம்ம பையன் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேன். இதுவரைக்கும் அவனுக்குத் தெரியாது, அவன் வாழ்க்கையை நான் தான் அழித்தேனென்று’ என நினைத்து மிகவும் வருந்தினார்.

​தனது அறைக்கு வந்தவன் குளித்து முடித்துவிட்டு, ரெடியாகிக் கீழே வந்தான். அவன் வருவதைப் பார்த்து அங்கிருந்த வேலையாட்கள் எல்லாம் ஒரு நொடி அவனை இமைக்காமல் பார்த்தார்கள்.

​கம்பீரமான நடை, இவனைப் பார்ப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. 

அவன் அணிந்திருக்கும் முழுக்கை சந்தன நிற ஷர்ட், தலைமுடிக்கு ஜெல் தடவி அழகாகப் படியவிட்டு, கையில் விலையுயர்ந்த போனோடு கீழே இறங்கி வந்தான் இன்பராஜா. மொத்தமாகச் சொல்லணும்னா பெண்களைக் கவரும் ஆணழகன் என்றே சொல்லலாம்.

​”அம்மா டிபன் வைங்க, டைமாச்சு. இன்னைக்குச் சீக்கிரம் போகணும்னு நைட்டு சொன்னேன்ல மா” என்று டைனிங் டேபிளில் அமர்ந்து பரபரத்தான் ராஜா.

​”இதோ ரெடிப்பா” என்று அவன் தட்டில் இட்லியை வைத்தாள் அவனின் அன்னை வசந்தா.

​தன் அன்னை வைத்த இட்லியை நான்கு வாய் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து, “சரிமா நான் கிளம்புறேன்.”

​”என்னப்பா அதுக்குள்ள எழுந்துட்ட?”

​”போதும்மா டைமாச்சு, பை” என்று சொல்லிவிட்டுத் தன் காரில் பறந்தான் இன்பராஜா.

​தன் மகன் போவதையே பார்த்தபடி இருந்த அவனது தாயின் மனம், 

‘எப்படிச் சிரித்துப் பேசி வலம் வந்தவனை இப்படி மாத்திட்டாளே. எல்லாம் இந்த வீணாப்போன காதல்தான் காரணம். அவதான் உன்னை வேண்டாம் என்று சொல்லித் தூக்கிப் போட்டுப் போயிட்டாளே. ஆனால் இவன் தான் இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு இப்படி இருக்கான். இதுக்கு ஒரு வழி பண்றேன்’ என்று மனதில் நினைத்து அதற்கான வேலையிலும் இறங்கினாள் வசந்தா.

​மனதில் நினைப்பது நடந்துவிட்டால் அப்புறம் கடவுள் எதற்கு?

​இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். நன்றி.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page