அத்தியாயம்- 2
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று வயல்வெளிகள் ஒரு பக்கம். வாழைத்தோட்டம் மறுபக்கம் தென்னை மரங்களும், அடுத்த பக்கம் வண்ண மலர்கள் என கண்ணுக்கு குளிர்ச்சியாக நிரம்பி காணப்பட்டது அந்த ஊர்.
அவ்வூரில் உள்ள கோவில்களும் மிகப் பெருமை மிக்கதாகவும் இருக்கும்.
முருகன் கோவிலில் தான் இப்பொழுது பார்த்திபன் மற்றும் ஜோதிகாவின் நிச்சயதார்த்த விழா அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கோவிலுக்குள் மணப்பெண் மணமகன் உறவினர்கள் நிரம்பிக் காணப்பட்டனர்.
பார்திபனும், ஜோதிகாவும் எதிர்பார்த்ததும் இந்நாளை தான்.
அன்று பெண் பார்க்கும் நாளில், பார்த்திபன் தாய் லட்சுமி கேட்டதும் சிறிது சங்கடப்பட்ட, ஜோதிகாவின் தந்தை ராமு குரலை செறுமிக் கொண்டு,
“நீங்க கேட்டது போல நாங்க செய்திடுறோம் சம்பந்தி. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று வாக்கு கொடுக்க, சட்டென்று தந்தையை சிறு அதிர்வுடன் பார்த்தாள் ஜோதிகா.
அவரும் அந்நேரம் மகளை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
மகளோ ‘என்னப்பா’ என்று கண்களால் கேட்க, அவரோ அமைதியாக இருக்கும்படி விழிகளாலே சைகை செய்தார்.
அப்பொழுது தாரா, “அம்மா சாமான் செட் வாங்கிக் கொடுத்தா மட்டும் போதுமா? ஒரு அம்பது பவுன் நகையும் சேர்த்து போட சொல்லும்மா. பொண்ணுக்கு அம்பது பவுனும் மாப்பிள்ளைக்கு இருபது பவுனும் மொத்தம் எழுபது பவுன் செஞ்சிட சொல்லு” என்று பேசிய தாராவை பெரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் பெண் வீட்டார்.
லட்சுமிக்கே மகள் பேசியது சிறிது அதிகப்படியாக தெரிய, மகளை கண்டிக்கும் விதமாக பார்த்தார்.
தாராவோ தாயின் பார்வையை புறக்கணித்து விட்டு, “ஏன் சொல்றேன்னா, பொண்ணு போட்டோல பார்க்கும் போது மூக்கு கண்ணாடி இல்லாம லட்சணமா இருந்துச்சு. ஆனால் நேர்ல மூக்கு கண்ணாடி போட்டு நிக்குது. நாளை பின்ன கல்யாணத்துக்கு அப்புறம் என் தம்பியை பார்த்து சோடாபுட்டி போட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்னு சொல்ல கூடாது பாருங்க. இதுவே ஒரு எழுபது பவுன் கொண்டு வந்தா, எவனும் ஒருவார்த்தை வாயை திறந்து பேச மாட்டான் பார்த்துக்கோங்க” என்று கூறினாள்.
அதை கேட்ட லட்சுமியின் முகம் யோசனையாக மாற, கணேஷோ தன் மனைவியை பார்த்து சைகையாலே பாராட்டினார்.
இதையெல்லாம் கேட்ட, பார்த்திபனின் முகம் சிடுசிடுவென மாற, நிமிர்ந்து ஜோதிகாவின் முகத்தை பார்த்தான்.
அவளின் முகமே பெரும் அதிர்ச்சயில் இருப்பதை பார்த்தவுடன் உணர்ந்துக் கொண்டான் பார்த்திபன்.
சித்ராவோ “அது எப்படிங்க எழுபது பவுன் செய்ய முடியும். எங்களுக்கு இரண்டாவது ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கும் அடுத்து பார்க்கணும் இல்லையா. இப்போ மூத்த பொண்ணுக்கு எழுபது பவுன் கொடுத்தா, இரண்டாவது பொண்ணுக்கும் அதே போட்டு தான் புகுந்த வீட்டுக்கு அனுப்ப முடியும்”
“அது உங்க பிரச்சனைங்க. அதுக்காக என்ன இரண்டு பொண்ணையும் என் மச்சானுக்கேவா கட்டி வைக்க முடியும்” என்று கணேஷ் எடக்கு மடக்காக பேச, அதில் மேலும் அதிர்ந்து போனார்கள் பெண் வீட்டார்.
ஜோதிகாவோ சட்டென்று பார்த்திபனை கேள்வியாக பார்க்க, ஏற்கனவே கடுப்பாக அமர்ந்து இருந்தான் இப்பொழுது தன் மாமாவின் பேச்சில் கோபம் கொண்டு எழுந்து நின்று விட்டான்.
லட்சுமிக்கும் தாராவுக்குமே கணேஷின் வார்த்தைகள் சற்று அதிகப்படியாக தோன்ற, பார்த்திபன் எழுந்து நின்றதும் அவர்களும் எழுந்துக் கொள்ள,
குரலை செறுமிக் கொண்டு “மன்னிச்சடுங்க மாமா, என்னோட மாமாக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. அவர் பேசினதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க. நீங்க அம்மா சொன்னது போல சாமான் செட் மட்டும் பண்ணா போதும். நகை எல்லாம் உங்களால எவ்வளவு முடியுமோ அதை மட்டும் பண்ணுங்க. வேற எதுவும் அதிகமா வேணாம். நாங்க கிளம்புறோம்” என்று அழுத்தம் திருத்தமாக ஒரே முடிவாக பேசியவனை அதிர்ச்சியாக பார்த்தாள் தாரா.
லட்சுமியோ “என் பையனே சொல்லிட்டான். இதுக்கு அப்புறம் என்ன ஒரு நல்ல முகூர்த்தத்தில் நிச்சயம் வச்சிட்டு அப்படியே கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாம்” என்று சகஜமாக பேச்சை மாற்றினார் அவர்.
தாராவுக்கு அவமானமாக போனது. சபையில் தன் பேச்சுக்கு மதிப்பு இல்லாமல் போனதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிடுசிடுவென அவள் முகம் மாற ஆரம்பிக்க, அதை பார்த்த பார்த்திபனோ,
“அப்போ நாங்க கிளம்புறோம் மாமா, அத்தை. நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து முடிவு பண்ணி சொல்லுங்க. எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கு. அதனால நீங்க மனசை போட்டு குழப்பிக்க வேணாம்” என்று தன் முடிவை தெளிவாக கூறியவனை தன் தாய் மற்றும் அக்கா மாமாவை அழைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு வெளியேறினார்கள்.
மாப்பிள்ளை வீட்டார் போனதும் “என்னங்க இப்படி எல்லாம் பேசிட்டு போறாங்க?” என்று சித்ரா கவலையாக கேட்க,
“கல்யாண பேச்சை ஆரம்பிச்சாவே இப்படியான சில தேவை இல்லாத கேள்வி சண்டை எல்லாம் வர தான் டி செய்யும் அதெல்லாம் பாத்துக்கிட்டு இருந்தா நல்ல காரியம் நடக்குமா? விடு நமக்கு நம்ம பொண்ணு சந்தோசம் தான் முக்கியம்” என்று கூறிய ராமு “நீ என்னமா சொல்ற உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சி இருக்கா?” என்று கேட்டார் மகளிடம்.
ஜோதிகாவுக்கோ என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. பார்த்திபனை போட்டோவில் பார்த்த உடனே பிடித்து விட்டது அல்லவா பெண் அவளுக்கு. அப்படி இருக்க பிடிக்கவில்லை என்று சொல்லிவிட முடியுமா என்ன? ஆனால் இப்பொழுது அவர்கள் கேட்கும் வரதட்சணை பார்த்து செய்வதறியாது போனாள் பேதையவள்.
மகளின் மனகுழப்பத்தை அறிந்துக் கொண்ட ராமு, அவள் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து, “நீ எதுக்கும் கவலைப்படதம்மா. அப்பா இருக்கேன். உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையையே உனக்கு கட்டி வைக்கிறேன். மனசை போட்டு குழப்பிக்காத சரியா?” என்று பேசியவரை கலங்கிய விழியோடு பார்த்தாள் ஜோதிகா.
அவளால் சட்டென்று தன் முடிவை கூறிவிட முடியவில்லை. அவளுக்கே என்ன முடிவு எடுப்பது என்றும் தெரியவில்லை.
பெண் பார்க்க வந்த போதே இப்படி எல்லாம் பேசி விட்டுச் செல்கிறார்களே நாளை திருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு போனால் இன்னும் என்ன என்னவெல்லாம் பேசுவார்களோ என்று அச்சம் வேறு அவள் மனதில் புதியதாக குடிக் கொண்டது.
இதுவரை அமைதியாக இருந்த யாஷ்மிகாவோ தன் பங்குக்கு “இங்க பாருங்கப்பா. இப்போ அக்காவுக்கு என்ன எல்லாம் செய்றீங்களோ அது எல்லாம் என் கல்யாணத்துக்கும் ஒன்னு விடாம செஞ்சுடணும் சொல்லிட்டேன். நாளைபின்ன என் மாமியார் வீட்ல என்னால எல்லாம் பேச்சு வாங்கிட்டு இருக்க முடியாது” என்று பேசியவளின் தலையில் தட்டினார் லட்சுமி.
“அடிவாங்குவ. ஒழுங்கா போய் எல்லாத்தையும் சுத்தம் செய். இன்னும் உங்க அக்கா கல்யாணமே நடக்கல. அதுக்குள்ள இவளோட கல்யாணத்தை பத்தி பேசுறா லூசு” என்று சிறியவளை திட்டி விட்டு பெரு மூச்சை ஒன்றை விட்டபடி விரிப்புகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார் சித்ரா.
ஜோதிகாவோ அமைதியாக தன் அறைக்குச் சென்று அணிந்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தவள் பிம்பம் நிலை கண்ணாடியில் கலங்கிய விழியோடு படிந்து இருந்தது.
தன் அலங்காரத்தை கலைத்து விட்டு மீண்டும் நிலை கண்ணாடியை நோக்கியது.
அனைத்து பெண்கள் போல் அவளும் சாதாரணமாக தான் இருந்தாள்.
அலங்காரம் இல்லாமலே இயற்கையாகவே அவளின் வதனம் மென்மையாக இருந்தது. வதனம் மட்டுமில்லை அவளின் இதயம் கூட மிகவும் மென்மையானது தான். வாய் திறந்து ஒருவார்த்தை யாரையும் எதிர்த்து கேள்வி கேட்க வராது.
தவறு அடுத்தவர்கள் மேல் இருந்தாலும் அந்த இடத்தில் இவள் இருந்தால், பழியை மிக சுலபமாக இவள் மீது சுமத்தி விடுவார்கள். இவளும் வாதம் செய்ய பயம் கொண்டு அமைதியாக இருந்து விடுவாள்.
ஜோதிகா என்று மகளுக்கு ஆசை ஆசையாக பெயர் வைத்தார் ராமு. ஆனால் அந்த பெயருக்கு ஏற்றது போல் துறுதுறுவென்று இல்லாமல் மற்றவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயத்திலே தன் சுபாவத்தை மறைத்துக் கொள்வாள்.
தங்கையிடம் மட்டுமே இவளின் அதிகப்படியான பேச்சுக்கள். அதுவும் கொஞ்சம் தான். அளவுக்கு மீறி போனால் தன் பேச்சுக்களை குறைத்துக் கொள்வாள்.
எங்கே தன் அம்மா எதாவது கூறி தன் மனதை காயப்படுத்தி விடுவாரோ என்ற பயத்திலேயே அமைதியாக வாயை மூடிக் கொள்வாள் ஜோதிகா.
தன் இதயத்தை யாரும் காயப்படுத்தி விட கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பாள் பெண்ணவள், வலிகளை தாங்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில்.
ஆனால் இவளுக்கு நேர் எதிர் யாஷ்மிகா. வாயாடி என்ற பட்ட பெயருடன் பிடிவாதக்காரி என்று பெயருக்கும் சொந்தக்காரி தான் யாஷ்மிகா.
யாருக்காகவும் எதுக்காகவும் பயப்பட மாட்டாள். தன் மீது தவறே இருந்தாலும், இல்லை என்று அடித்து பேசுபவள். ஒரு விஷயம் தனக்கு பிடித்து விட்டால் அதை தன் அக்காவிற்காக கூட விட்டுக் கொடுக்க மாட்டாள்.
அவ்வளவு ஏன் பண்டிகை நல்ல நாள் என்று எது வந்தாலும் ஜோதிகாவை விட தனக்கு அதிகமாகவே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவள் அவள்.
ஒரு சிறிய விஷயம் குறைவாக செய்து விட்டால் அன்று பண்டிகை நாள், மொத்தமாக வீணாவது தான் மிச்சம். அதுக்காகவே யாஷ்மிகாவுக்கு பார்த்து பார்த்து செய்வார்கள் பெற்றோர்கள்.
எதை செய்தாலும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கும் ஜோதிகாவும்,
எதை செய்தாலும் அதில் குறை மட்டுமே கண்டுப்பிடிக்கும் யாஷ்மிகாவிற்கும்,
இருவருக்கும் நடுவில் மிக பெரிய பிரளயத்தை உருவாக்கவே ரெடிமேடாக ஒருவனை ஜோதிகா மற்றும் பார்த்திபன் திருமணத்திற்கு தயார்ப்படுத்தி அனுப்பி வைத்து இருக்கிறார் கடவுள்.
யார் அவன்? இனி வரும் அத்தியாங்களில் காணலாம்.
