காதல் பூக்கள் – 4
- அத்தியாயம்- 4
பிரபலமான பத்திரிக்கை நிறுவனம் அது. அங்கே தன் எழுத்துக்களின் மூலம், மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிய வேண்டும் என்பதற்காக, நிறைய விசயங்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தவளிடம் வந்து நின்றாள் அவளின் தோழி ஜெயந்தி.
“ஓய் மேடம், கிளம்பலாமா? நேரம் ஆகுது” என்று ஜெயந்தியின் குரல் கேட்டு மை கொண்டு காகிதத்தில் எழுதிக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்து பார்த்து,
“ஜெய் இருடி, இன்னும் இரண்டே பக்கம் தான் முடிச்சுட்டு வந்துடுறேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடி” என காற்றில் அலைகளாகப் பறந்த தன் கூந்தலை செவி ஓரம் நகர்த்தியபடி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“ஏன்டி இதெல்லாம் ஓவரா இல்லை. அவனவன் செய்ற வேலையை, சலிச்சுக்கிட்டு சாயங்காலம் ஐந்து மணி எப்போ வரும், வேலையை அப்படியே போட்டு எப்போ வீட்டுக்கு போகலாம்னு காத்திருப்பாங்க. நீ மட்டும்தான்டி எடுத்த வேலையை முடிச்சே ஆகணும்னு வேலை செய்துகிட்டு இருக்கிற.
இதில் என்னையும் வேற கூட்டு சேர்த்துகிற. உனக்கு மனசாட்சியே இல்லையாடி. கொஞ்சம் வெளியே எட்டி பாருடி, வானம் வேற மழை வர மாதிரி இருட்டாகிட்டு வருது. நீ சீக்கிரம் கிளம்பு. நாளைக்கு வந்து எழுதலாம்” எங்கே மழையில் நனைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஜெயந்தி கூறிக் கொண்டு இருந்தாள்.
அவளின் பார்வையும் கரமும் அந்த காகிதத்தில் எழுதுவதிலே நிலைத்து இருந்தது.
அதைப் பார்த்த ஜெயந்தி, “ஏன்டி, நான் பேசிட்டு இருக்கேன். நீ என்னடானா எழுத்திட்டே இருக்க. அப்படி என்னடி கிறுக்கிட்டு இருக்க?” என்றபடி அவள் பாதி முடித்து வைத்த காகிதத்தை எடுத்துப் படித்தாள். முதல் பக்கம் படித்ததுமே ஜெயந்தியின் அலுப்பு போய் சற்று ஆர்வம் எட்டிப் பார்த்தது.
தன் தோழியைக் கவனித்தபடி எழுதிக் கொண்டு இருந்தவள், “என்ன ஜெய், நேரமாச்சுனு குதிச்சுட்டு இருந்த” என கேட்டாள்.
“அது கிடக்குது விடு, ஆமா எப்படி இந்த மாதிரியெல்லாம் எழுதுற? செமடிஸ உன் விரல்ல ஏதோ ஒரு மாயம் இருக்குடி. படிச்ச ஒரு பக்கத்திற்கே, ஒரு ஆளையே வீழ்த்தக் கூடிய வித்தை உன் எழுத்தில் உள்ளது” என தன் தோழியை வர்ணித்துக் கொண்டு இருந்த ஜெயந்தியின் கையிலிருந்த காகிதத்தைப் பிடுங்கியவள்,
“முடிந்தது வா, கிளம்பலாம்” எனச் சொல்லிக் கொண்டே, தனது மேசையில் இருக்கும் பெட்டகத்தில் அவள் எழுதிய காகிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்தாள்.
பின் தோழிகள் இருவருமே அந்த நிறுவனத்திலிருந்து வாகன நிறுத்துமிடத்தில் வந்து சேர்ந்தனர். தன் ஸ்கூட்டியை எடுத்தபடி ஜெயந்தி ஹெல்மட் அணிந்து கொண்டு இருக்க, அவளின் பின்னால் ஏறப் போனவளின் விழியில், அங்கே தூரத்தில் ஒருவன் பைக்கை எட்டி உதைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, அவள் இதழில் புன்னகையோடு ஜெயந்தியின் பின்னால் அமர்ந்தாள்.
வாசலைத் தாண்டும் போது வாட்ச்மேன் ஓடி வருவதைப் பார்த்தவள், “ஜெய் வண்டியை நிறுத்துடி.”
“ஏன்டி?” எனக் கேட்டபடி சடன் ப்ரேக் போட்டாள்.
அதற்குள் வாட்ச்மேனும் மூச்சு வாங்க வந்து அவர்கள் முன் நின்றார். அதைப் பார்த்தவர்கள், “ஏன் அண்ணா, மெல்ல வரக் கூடாதா? எதற்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வரீங்க?”
“இந்தாம்மா இந்த டிபன் பாக்ஸை கொடுக்கத் தான் ஓடி வந்தேன். ரொம்ப நன்றிம்மா” என்று சொல்லி பின்னால் அமர்ந்து இருந்தவளிடம் சிற்றுண்டி பாக்ஸை நீட்டினார்.
அவளோ, “அண்ணா இதை கொடுக்கவா இப்படி ஓடி வந்தீங்க. இதை திங்கள் கிழமை கூட கொடுத்து இருக்கலாம். என்ன அவசரம்? பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு. முதல்ல போய் உட்காருங்க, கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் குடிங்க.”
“அது இல்லமா, இதுல என் பொஞ்சாதி காரபணியாரம் செய்து கொடுத்தா. அதை வாங்க பக்கத்து தெருக்கு போயிட்டு ஓடி வந்தேன், எங்கே நீங்க இரண்டு பேரும் கிளம்பிடுவீங்களோனு. சூடா இருக்குதுமா நீங்க வீட்டுக்குப் போனதும் சாப்பிடுங்க.”
“அட அண்ணா அதற்கு இப்படியா…” என அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
ஜெயந்தி, “வாவ் நைஸ்! பிரமாதம் அண்ணா. நீங்க தான் தினமும் இப்படி ஏதாவது ஒன்று எடுத்துட்டு வந்து கொடுக்கிறீங்க” என்று அவர் நீட்டிய பாக்ஸை வாங்கி தன் ஸ்கூட்டின் முன் பக்கத்தில் மாட்டி இருந்த கைப்பையில் திணித்தாள்.
“இதுல என்ன ஆத்தா இருக்கு, நீங்க இரண்டு பேரும் எனக்குச் செஞ்ச உதவிக்கு இதெல்லாம் ஒரு கால் தூசி கூட ஈடாகாதுடா” என அவர் தினமும் பாடும் அதே பல்லவியைத் தொடர,
“போதும் அண்ணா, நாங்க செய்தது ஒரே ஒரு முறை சின்ன உதவி. அதை நீங்க தினமும் சொல்றது தான் தாங்க முடியல. நாங்க கிளம்புறோம், திங்கக்கிழமை பார்க்கலாம்.” என்று அவருக்கு விடை கொடுத்துவிட்டுப் பறந்தார்கள்.
இருவரும் போவதைப் பார்த்தவர், ‘இது உங்க பெருந்தன்மை, செய்த உதவியை அன்றே மறந்துடணும்னு பழமொழி கேட்டு இருக்கேன். ஆனா அதை உங்க இருவரிடம் நேரில் பார்க்கறேன். நானும் என் பொஞ்சாதியும், எங்க ஒரே பிள்ளையின் உயிர் காக்க ஆபரேஷனுக்கு பணம் இல்லாமல் தவித்த போது, எதைப் பற்றியும் கவலை இல்லாமல் அம்புட்டு பணத்தைக் கொடுத்து என் புள்ளை உயிரைக் காப்பாற்றிய தெய்வம் நீங்க இரண்டு பேரும்.
உங்கள் இருவருக்கும் உடல், உயிர் தான் வேறு வேறு. ஆனால் எண்ணமும் குணமும் ஒன்று தான். கூட பிறந்தவங்க கூட இப்படி ஒற்றுமையா இருப்பார்களா என்று தெரியாது. ஆனால் நீங்கள் இருவருமே ஒருத்தர் இல்லையென்றாலும் இன்னொருத்தர் இருக்க முடியாமல் தவிப்பீர்கள். உங்களுக்குள் எப்போதும் பிரிவே வந்துவிடக் கூடாது’ என அவர் மனம் உருகி வேண்டிக் கொண்டார்.
அங்கே மழைக்காக தங்கள் ஸ்கூட்டியை ஓரம் கட்டிவிட்டு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அஜய் தன் பைக்கை நிறுத்திவிட்டு பஸ் ஸடாப்பில் நிற்பதற்காக ஓடி வந்து வழுக்கிய நேரம், அவள் தன் கரம் கொண்டு அவனைத் தாங்கிப் பிடிப்பதற்கும், இங்கு இவர் வேண்டுவதற்கும் சரியாக இருந்தது.
“ரொம்ப நன்றிங்க” என அஜய் சொல்ல,
அவன் சரியாக நிற்பதற்கு உதவி செய்தவள், “மெல்ல பார்த்து வரக் கூடாதாங்க. இந்த சகதியில் விழுந்திருந்தா இந்த வைட் சர்ட் நிலைமை என்ன ஆகி இருக்கும்? பாவம் உங்கள் அம்மா தான இதைச் சுத்தம் செய்ய கஷ்டப்பட வேண்டியதா இருக்கும்.”
அவளின் சொல்லில் ஏனோ ஒரு புதுவித உணர்வை உணர்ந்தான். தான் யாரென்றே தெரியாத பட்சத்தில் தன் அன்னையின் நிலையை நினைத்து வருந்துபவளின் பார்வையை, நேருக்கு நேர் பார்த்தவனின் மனம் ஒரு நிமிடம் தடுமாறியதை நன்றாக உணர்ந்தான்.
எவ்வளவு கஷ்டப்பட்டும் அவளிடத்தில் நிலைத்திருந்த பார்வையை நகர்த்த முடியாமல், மழையை ரசிக்கும் அவளின் விழிகளைப் புகைப்படக் கருவி இல்லாமலேயே தன் விழிகளின் வழியே இதயத்தில் படம் பிடித்துக் கொண்டு இருந்தான்.
இதை சற்றுத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தி, இருவருக்கும் நடுவில் வந்து நின்றாள். அவள் நின்ற வேகத்தைப் பார்த்த அஜய்க்கு சற்று சங்கடமாகிப் போனது.
ஜெயந்தி அவனை ஓரப் பார்வை பார்த்து உள்ளுக்குள் சிரித்தபடி, தன் தோழியின் தோளில் கை போட்டுக் கொண்டு நின்றாள். அதைப் பார்த்தவனுக்கு ஜெயந்தியின் மீது காண்டாகியது.
“இவளை யாரு நடுவே வரச் சொன்னது? ஒரு தேவதையை ரசித்துக் கொண்டு இருக்கும் போது சாத்தான் வந்து நிக்குது” எனப் புலம்பியவனைப் பார்த்த ஜெயந்தி,
“ஓய்! யாரைப் பார்த்து சாத்தான்னு சொன்ன?” என அவனிடம் திரும்பி சத்தமாகக் கேட்டாள்.
அவனுக்கோ பயத்தை ஏற்படுத்தியது. “நம்ம மனசுக்குள்ள தானே சொன்னோம், எப்படி வெளியே கேட்டுச்சு?” என வாய் திறந்து தனக்குள்ளே பேசுகிறேன் என நினைத்து சத்தமாகப் பேசினான்.
அங்கே நின்று இருந்த சிலர், “தம்பி, நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க” எனக் கத்த, அவனுக்கோ தர்மசங்கடமாகிப் போனது.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் மழையைக் கூட பொருட்படுத்தாமல் அவர்களிடம், “சாரி! சாரி!” எனத் தடுமாறிச் சொல்லிக் கொண்டே, தன் பைக்கை எடுத்தவனின் மனம் அவளை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது.
அவளோ அவனைப் பார்த்து சிரித்தபடி நின்று இருபதைப் பார்த்தவன், சிரித்துக் கொண்டே தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அஜய் போவதைப் பார்த்த ஜெயந்தி, “மவனே, ஒரு நாள் என் கையில சிக்காமலா போயிட போற, அப்போ இருக்குது உனக்கு” என அவனைப் பார்த்துக் கத்தினாள்.
தன் தோழியைப் பார்த்து, “ஏன்டி, அவன் தான் என்னை அசிங்கப்படுத்துறான், நீயும் அதைக் கேட்டுக்கிட்டு சிரிச்சிட்டு நிற்கிற?” எனக் கடுகடுத்தாள்.
அவளோ, “பின்ன அவனே பாவம், என்னை சைட் அடிச்சுக்கிட்டு இருந்தான். நீ நந்தி மாதிரி வந்து நின்னா அவனுக்கு கோவம் வராதா?” என்று தன் தோழியை வம்புக்கு இழுத்தாள்.
ஜெந்தியோ, “ப்பார்ராரா! மேடம் என்ன நடக்குது இங்க? அவன் என்னடானா கண்ணாலே உன்னை போட்டோ எடுக்கிறான். நீ என்னடானா அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க. என்னடி முதல் பார்வையிலே விழுந்துட்டியா?”
“ச்சீ தப்பா பேசாத, இவனை நம்ம ஆபிஸ் பார்க்கிங் ஏரியாவுல பார்த்தேன்டி. நம்ம ஆஃபிஸ்ல ஓர்க் பண்றானா என்ன?” எனப் பேச்சை மாற்றினாள் அவள்.
ஜெயந்தியோ, “இருக்காதுடி, நம்ம ஆஃபிஸ்ல வேலை பார்த்தா எனக்குத் தெரியாம இருக்குமா? எனக்கு என்னவோ இன்னைக்கு நம்ம ஆஃபிஸ்ல நேர்முகத்தேர்வு நடத்துனாங்கல்ல, அதுக்கு வந்து இருக்கலாம்னு நினைக்கிறேன்” எனச் சொன்னாள்.
பின் இருவரும் அவனைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, தங்கள் வேலையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
இவர்கள் வேலையைப் பற்றி பேசட்டும், நம்ம இவர்கள் மூன்று பேரைப் பற்றி பார்த்து விட்டு வரலாம்.
அஜய் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். அம்மா செல்வி, அப்பா சேகர். அஜய் மூத்தவன் கல்லூரி முடித்து விட்டு வேலைக்காக நிறைய நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்குச் சென்றான். ஆனால் இதுவரை ஒன்றும் அவனுக்குச் சரியாக அமையவில்லை.
இரண்டாவது சரவணன், கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் ஒரு மாதத்தில் அவனுக்குக் கல்லூரி முடிந்து விடும். பிறகு அவனும் வேலைக்கு அலைய வேண்டியது தான் என்ற கவலை அஜய் மனதில் உண்டு. அடுத்து தங்கை லதா, கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அஜய்க்கு எல்லாமே அவனின் குடும்பம் தான். கொஞ்சம் இல்லை நிறையவே பயந்த குணம் உடையவன். அதே சமயம் கொஞ்சம் சுயநலவாதியும். இந்த இரண்டு குணத்தால் இவன் பின்னால் மிகப்பெரிய வேதனையில் வாழப் போகிறான் என்று இப்போது அவனுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. (நம்மக்கே தெரியவில்லை, இவனுக்குத் தெரிந்திடுமா என்ன?)
ஃபஸ்ட் இயர் படிக்கும் போதிலிருந்தே தனக்கு வரப் போகிறவள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருப்பவன். அப்படி அவன் கற்பனையிலிருந்தவளை தான் இன்று நேரில் பார்த்தான்.
(அவள் பெயர் என்னவென்று நம்ம அஜய் எப்படிலாம் கண்டு பிடிக்கிறாருனு பார்க்கலாம். அஜய்க்கு எப்போது அவள் பெயர் தெரிகிறதோ அப்போது உங்களுக்கும் தெரிய வரும். இதற்கு யாரும் என்கூட சண்டை போட கூடாதுப்பா. எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. அஜய் கண்டுபிடித்ததுக்கு அப்பறம் தான் மத்தவங்களுக்கு சொல்லவேண்டுமாம். என்னை மிரட்டிவிட்டுப் போய் இருக்கிறாள் என் கனவில். மீ பாவம்)
***
ஜெயந்தி அவள் பெற்றோர்களுக்கு ஒரே மகள். சின்ன வயதில் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கிறாள் என்று இவளிடம் பாசத்தைக் காட்டாமல் எரிந்து விழுந்து கொண்டே இருப்பார்கள். பணம் பணம் என்று அதன் பின்னாலேயே ஓடியவர்கள் பெற்ற பிள்ளையை விட்டுவிட்டனர்.
ஒரு கட்டத்தில் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஜெயந்தி, தன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் கல்லூரி விடுதியில் சேர்ந்தாள். அங்கே இரண்டு வருடம் தன் படிப்பை நன்றாக முடித்தாள். கல்லூரி விடுதியில் தான் அவளைச் சந்தித்தாள். எப்போதும் யாரிடமும் சேராமல் தனியாக இருந்தவளிடம் தானாக சென்று நட்பை வளர்த்துக் கொண்டாள் ஜெயந்தி.
அவளோ பிறந்ததிலிருந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும், இனி உனக்காகப் படிப்பிற்குத் தேவையானதை நீயே பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி ஆசிரமம் நிர்வாகம் அவளை நிர்கதியில் விட்டது.
அவளுக்குத் துணையாக அந்த கடவுள் மட்டுமே இருக்க, அதே சமயம் ஜெயந்தியை துணைக்கு அனுப்பி வைத்தார். முதல் வருடத்தைத் தாண்டவே பாவம் ரொம்ப சிரமப்பட்டாள். இன்னும் இரண்டு வருடங்களைத் தாக்குப் பிடிக்க முடியாது என தன் படிப்பைக் கைவிட நினைத்தவளுக்குத் தெய்வமாகத் தெரிந்தாள் ஜெயந்தி.
ஜெயந்தி தன் தந்தையிடம் தன் தோழிக்கும் கல்லூரி செலவைப் பார்த்துக் கொள்ளுமாறு மிரட்டல் ஒன்றை விட்டாள். அதைக் கண்டு அவள் பெற்றோர்கள் பயந்து, வேறு வழியின்றி அவளின் படிப்பு முடியும் வரை அனைத்து செலவையும் ஜெயந்தி பெற்றோர்களே பார்த்துக் கொண்டனர்.
பின் படிப்பை முடித்துவிட்டு தமிழின் மீது கொண்ட ஆர்வமும், இன்னும் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருவரையும் ஒரே பத்திரிகை நிறுவனத்தில் வேலைக்குச் சேர வைத்தது.
அதன் பிறகு இருவரும் ஒரு சின்ன வீட்டை வாடகை எடுத்துக் கொண்டு வாழத் தொடங்கினர். இவர்களுக்குள் எப்போதும் பிரிவே வந்து விடக் கூடாது என்று, இருவருக்குமே திருமணம் நடந்தால், அது அண்ணன், தம்பி இருக்கும் இல்லத்தில் மட்டுமே நடக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் வாழ்க்கையில் திருமணமே தேவையில்லை என்ற முடிவோடு இருந்தனர்.
ஆனால், விதி யாரை விட்டு வைக்கும்? காதல் என்னும் விளையாட்டில், அஜயின் மூலம் இருவருக்கும் பிரிவை ஏற்படுத்த காத்திருக்கிறது.
இவர்கள் காதலைக் கடந்து இவர்கள் நட்பு நிலைத்து இருக்குமா? இல்லை காதலால் இவர்கள் நட்பில் பிரிவு உண்டாகுமா? என்று இனி வரும் அத்தியாயத்தில் காணலாம்.
