கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1

 

வீடு முழுவதும் சொந்த பந்தங்களால் நிரம்பி  வழிந்தது. எங்கெங்கும் சிரிப்பு சத்தமும், பேச்சி சத்தமும்தான். அந்த வீட்டின் கடைசிமகள் அருணாவிற்கு  இன்று நிச்சயதார்த்தம்.

மாப்பிள்ளை வீட்டினர் வர, பெண்ணிண் தகப்பனாரும், உடன் பிறந்தவனும், உள்ளே வரவேற்று அமரவைத்தனர்.

பெண்ணிற்கு நிச்சயதார்த்த புடவை கொடுத்திட, அலங்காரம் ஆரம்பமானது. ஆனால், விழா நாயகியோ, நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்பது போல,செய்து வைத்த சிலையாய் அமர்ந்திருந்தாள்.

நேரம் கடக்க, “நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது. பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ, நிச்சயபத்திரிக்கை வாசிக்கனும்” என ஐயர், கூற…

“ஏத்தா பார்வதி, போய் சின்னவளை அழைச்சிட்டு வா” என்றார் தெய்வானை. மணப்பெண்ணின் தாயார். 

நிறைந்த சபையில், பட்டுப்புடவை சரசரக்க, நடந்து வந்தவளின் சலங்கை ஒலி கேட்டு, நிமிர்ந்து பார்த்தான் மாப்பிள்ளை, கார்த்திகேயன்.

அவன் நிச்சயத்திற்கு வாங்கி கொடுத்த, பச்சை வண்ண பட்டு புடவையில், மயிலாய் வந்து நின்றவளை கண்டு, பார்வையை விலக்க தோன்றவில்லை. அவளின் சிவந்த நிறத்திற்கு புடவை இன்னும் அழகாய் காட்டியது.

 

“என்னம்மா, பொண்ணு நிமிர்ந்து பார்க்காதா..?, தரையே வெறிச்சிட்டு நிற்குறாள்…” என மாப்பிள்ளையின் உறவினர் கூற…

“இத்தனை பேர் இருக்கும்போது கூச்சம் வராதா… நீங்களும் கல்யாணம் ஆகும்போது இப்படித்தானே இருந்துருப்பிங்க” என அந்த பெண்ணின் வாயை அடைந்தார், இன்னொரு பெண்.

“அருணா… அவங்களை நிமிர்ந்து பார்த்து சிரிச்சமாதிரி  வணக்கம் வை‌” என பார்வதி காதோரம் சொன்னதும்… சொன்னதை செய்யும் ரோபோ போல, அனைவருக்கும் வணக்கம் வைத்தவள், அப்போதுதான் தன் முன்னால் அமர்ந்திருந்தவனை பார்த்தாள். அக்கா சொன்னதுபோல்,  நல்ல அழகன்தான். ஆனால், பாவையவளுக்கு, அவரை ரசிக்க தோன்றவில்லை. மனம் முழுவதும், ரணமாய் வலித்தது. பொங்கி வரும் கண்ணீரை கடினபட்டு விழுங்கினாள்.  

“ஏம்மா பொண்ணே..!,  மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா…?” என மாப்பிள்ளையின் தாய்மாமன் மனைவி கேட்க…

“இவ என்னடி… போட்டோவில் பார்த்து பிடிச்சி போய், நிச்சயம் பண்ண வந்தாச்சி, இப்போ போய் புடிச்சிருக்கா, பொண்ணு வளர்ந்துருக்கான்னு கேக்குறவ” என தாய்மாமன் கூற..

 

“பொண்ணு குனிந்த தலையை நிமிரலையே அதான் கேட்டேன். நீங்க வேற சும்மா இருங்க”

“வெட்கத்துல நிற்குது… உன் வாயாடி தனத்தை சின்ன புள்ளகிட்ட காட்டாதே” என்றதும் அமைதியானார் அவர்.

“பொண்ணு தாய்மாமன் சம்சாரம் எங்கே…? பொண்ணை கைபிடித்து பையன் பக்கத்துல உட்கார வைங்க, மாப்பிள்ளை பொண்ணையும், மாலை மாற்ற சொல்லுங்க” என்றதும்‌…., அருணாவின் தாய்மாமன் மனைவி, அவளை அழைத்து வந்து கார்த்திகேயனின் பக்கத்தில் அமரவைத்தாள்.

அவன் முகத்தை கூட அவள் பார்த்ததில்லை.

பார்க்கவும் நினைத்ததில்லை. அவளை பொறுத்தவரை 

விருப்பமில்லாத திருமணம்…

விருப்பமில்லாத நிச்சயதார்த்தம்…

“பொண்ணு நல்ல அம்சமா தான் இருக்கா…மாப்பிள்ளைக்கு ஏத்த ஜோடி தான்!” 

“நம்ம கார்த்தி புடிச்சதுதான் புடிச்சான் நல்ல லட்சணமான புள்ளையதான் புடிச்சிருக்கான்” என அங்கங்கே  பேச்சி சத்தமும் எழுந்தது.

“சரி… நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கலாமா?”

என்று ஐயர் கேட்க, அமைதியானது கூட்டம்.

அந்த வார்த்தை கேட்டதும்,

உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.

எவ்வளோ முயன்றும் வெளியே வர துடித்த கண்ணீரை சிரமப்பட்டு 

 உள்ளுக்குள்ளேயே அடக்கினாள்.

தன் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். தன் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என ஒவ்வொருவர்  முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்.

அவர்களை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவளை கண்டு “உன்  காதல்  அவர்களுக்கு தெரியாதே” என மனமும் ஏளனமாய் சிரித்தது.

இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட “நான் ஒருவனை காதலித்திருக்கிறேன்”என்று சொன்னதில்லை. அவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. காதல் கை கூடாது, என்று தெரிந்த பிறகு, பெற்றோர்களை ஏமாற்றவும் மனம் வரவில்லை. உயிரை விடவும் அவளுக்குச் சக்தி இல்லை. தன்னை

பாராட்டி… சீராட்டி… வளர்த்த தாய் தந்தையரை விட்டுப் போகவும் முடியவில்லை. காதலித்தவன் கிடைக்கவில்லை என்பதற்காக மரணிப்பது ஒரு ரகம் என்றால் . அதைக் கடந்தும் பெற்றோர்களுக்காக வாழ முடிவு செய்வதும் ஒரு ராகம். அந்த ரகத்தில்தான் அவளும் கரைந்தாள். அதுக்காக அவள் பாவி அல்ல. பாவம் செய்தது இருவர்களும் தான்‌. நிறைவேறாத காதல் என தெரிந்தும் உருகி உருகி காதலிக்க யார் சொன்னார்கள்..?, ஆழமென தெரிந்தே விழுந்துவிட்டு, தூக்கிவிட யாருடைய கையையும் எதிர்பார்க்காமல், தானாக எழுந்து வர முயல்வதே சிறந்தது.

 “அவளை காதலித்தவன், ‘எப்போது உறுதியாக தங்கள் காதல் சேராது’ என கூறினானோ அன்றே இறந்து விட்டாள் இல்லை, அவர்கள் காதல் இறந்துவிட்டது.”அவ்வளவுதான்.

தாய் தந்தையருக்காக, வாழ முடிவு செய்தாள். அவர்கள் பார்த்தவரை அவள் பார்க்காமலே  சம்மதித்தாள்.

இன்று அவளின் நிச்சயதார்த்தம்.

உள்ளுக்குள் வேதனையில் மனம் கதறியது.வெளியே இதழ்களில்

புன்னகை பூத்தது. யாருக்கும் தெரியாத அளவுக்கு கணக்கச்சிதமாக நடித்தாள் அருணா.

 

நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க…நிச்சய ஓலை  வாசிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், நல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த

முருகன் ,  தெய்வானை தம்பதியரின்

மகளான திருநிறைச்செல்வி அருணாவிற்கும்… புதுவிளை கிராமத்தை சேர்ந்த, கந்தன் பர்வதத்தின் மகன், திருவளர்செல்வன்  கார்த்திகேயனுக்கும்  நிகழும் மங்களவருடம் விசுவாவசு ஆண்டு மாசி மாதம் 8தேதி வெள்ளிகிழமை காலை 9.30- 10.30க்கு திருமணம் நடத்தப்பட பெரியோர்களால் நிச்சயிக்கபடுகிறது” வாசித்து முடித்தார், ஐயர்.

ஒவ்வொரு வார்த்தையும்

அவளின் இதயம் சுக்குநூறாக  உடைந்தது. நிச்சயதார்த்தம்  முடிந்ததும் “மாப்பிளையும் பொண்ணயும்  மறுபடியும் மாலை மாற்றிவிட்டு மோதிரத்தை மாற்றிக்கோங்க” என ஐயர் கூறியதும்…, மாலை மாற்றப்பட்டு மோதிரத்தை அணிவிக்க, இருவரின் கையிலும் கொடுக்கப்பட்டது.

 

உயிரையே வெறுத்து கைகளை நீட்டினாள் அருணா. கார்த்திகேயன்

முழு விருப்பத்தோடு அவள் விரலில்

மோதிரம் அணிவித்தான்.  அவளும் அவனுக்கு அணிவித்தாள். உடல்  செய்தது, மனம் செய்யவில்லை.

பெரியவர்கள் வந்து சந்தனம்… குங்குமம்… அட்சதை…எல்லாம் தூவி நடந்தது. நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது. 

அருணாவின் உள்ளம் மட்டும்

கதறிகொண்டிருந்தது. தன் உள்ளத்தின் வலியை உரைக்க தெரியவில்லை.  கண்கள் குளமாக நீரை அடக்கிக்கொண்டு

அசையாமல் நின்றிருந்தாள்.

“ஏய் அருணா… அந்த தம்பி உன்னை கூப்பிடுறாங்க பாரு. எட்டி பாக்காம நின்னுட்டு இருக்குறியே.” அக்கா பார்வதி சொன்னதும் நிமிர்ந்து பார்த்தாள்.

முத்துப்பற்கள் தெரிய அவள் முன் 

சிரித்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

தெரியாத ஒருவரை பார்ப்பது போல வெற்று  பார்வை பார்த்தாள்.

“போயிட்டு வரேன்மா…” இந்த ஒரு வார்த்தை தான் அவன் வாயில் இருந்து வந்தது.

அந்த “மா” என்ற அழைப்பு அவளை

உள்ளுக்குள் சிதறடித்தது. கண்கள் கரித்துக் கொண்டு வந்தன.

அதே அழைப்பு. ஆனால்… குரல் மட்டும் வேறு. உலகமே சுற்றுவது போல இருந்தது. கால்கள் தரையில் ஊன்ற முடியாமல் தவித்தன.

‘மாப்பிள்ளையிடம் பேச கூச்சப்படுகிறாள்’ என நினைத்துக் கொண்டனர், அவளை பார்த்தவர்கள்.

 

கார்த்திகேயனிடம் சம்மதமாக தலையசைத்தாள்.. அவருக்கும் ஆசை, கனவுகள் இருக்குமே  அதனால்  காயப்படுத்தவும் தோன்றவில்லை. 

 

எல்லோரும் கிளம்பியதும்

அறைக்குள் நுழைய போனளை, தடுத்தது, அவளின் அம்மா தெய்வானையின் குரல்.

 

“என்னம்மா” என கேட்க…

“எங்கடா போற..?, அங்கே உட்கார். நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாதவங்க… இப்போ வருவாங்க அருணா. அது மட்டும் இல்லாமல், இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு கல்யாணம். அக்கா பசங்க, அண்ணன் பசங்கன்னு வீடே நிறைஞ்சிருக்கு. அவங்க கூட உட்கார்ந்து பேசு, ரூம்குள்ளேயே கிடைக்காதே. கொஞ்ச நாளாவே உன் முகம் சரியில்ல. உன் விருப்பத்தை கேட்டுதானே  கல்யாணம் முடிவு பண்ணி இருக்கேன். ஆனால் ஏன் இப்படி இருக்கன்னு தெரியல” என தெய்வானை புலம்ப…

 

“ம்மா, அவளை ஏன் போட்டு நச்சு நச்சுன்ற, இங்க வாடா..!,” என தன் பக்கத்தில்  அருணாவை அழைத்து அமர வைத்தான் குமரன்.

“என்னடா..?, எங்களை விட்டு போகணும்னு கவலையா இருக்கா. எல்லா பொம்பள பசங்களும் பொறந்த வீட்டுல இருந்து புகுந்த வீட்டுக்கு போற மகாலட்சுமிக்குதான்.  அதே மாதிரி தான் என் தங்கச்சியும். நீ சந்தோஷமா இருக்கணும். பையன் நல்ல பையன்டா, எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை. சொந்தமா சென்னையில டிராவல்ஸ் வச்சிருக்காங்க. நான் நல்ல விசாரிச்சிட்டேன். நீ பயப்படுற  அளவுக்கு உன்னை யாரும் கொடுமையும், படுத்த மாட்டாங்க. நீ எதை நினைத்தும்  கலங்கக்கூடாது. எதுவா இருந்தாலும், அண்ணன் பார்த்துப்பேன் சரியா..  என்றவனை  கட்டிக்கொண்டு கதறி அழுதால் அவள். அவர்களை பிரிந்து செல்வதற்காக அழுகிறார் என்றால் சத்தியமாக இல்லை. அதற்கான நாள் இன்னும் இருக்கிறதே…,  அவள் காதல் வழிகளை எங்கே கொட்டுவது என தெரியாமல் இத்தனை நேரம் அழுத்தி அழுத்தி வைத்ததின் விளைவு வெடித்து சிதற ஆரம்பித்திருந்தது.

 

“பாப்பா ஒண்ணு இல்லடா, அழாதே” என எல்லோரும் சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆவது போல் தெரியவில்லை. அவள் அழுது முடிக்கட்டும் என காத்திருந்தனர்.

 ‘வீட்டின் செல்ல பிள்ளைதான். எந்த வேலையும் செய்யாமல் வேலைக்கு செல்வதும் வீட்டிற்கு வருவதுமாக, மட்டும்தான் இருப்பாள். தந்தையின் இளவரசி, அண்ணனின் ராணி, அம்மாவிற்கு தேவதை, அப்படி வீட்டில் வளம் வந்தவள், திடீரென இன்னொரு வீட்டிற்கு சென்று வாழ வேண்டும் என்றதால் அழுகிறாளோ’ என நினைத்து ஒரு வழியாக அவளை தேற்றி, சமாதானப்படுத்தினார் வீட்டினர். 

தன் அறைக்குச் செல்லாமல், தன் அக்கா பிள்ளைகளிடமும், அண்ணன் பிள்ளைகளிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள். 

நேரம் கடக்க, அவள் எண்ணிற்கு அழைப்பு வந்தது. யார்..?, என பதறியபடி, எழப்போனவளே தடுத்து நிறுத்திய பார்வதி, “இரு நான் பாத்துட்டு வரேன்,  என  போனை கையில் எடுத்துக் கொண்டு வந்தாள்.

“யாருக்கா..?”

“தெரியலடி… பெயர் புதியவை.  புது நம்பரா இருக்கு, இந்தா பேசு” என அவளிடம் நீட்டிவிட்டு, தன் மகள்களுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தால் பார்வதி.

“ஹலோ..!, யாரு..?”

“நான் கார்த்திக் பேசுறேன்”

 

“கார்த்திக்கா என சில நொடி யோசித்தவள் அடுத்த நொடியே, “ஆஹ்… சொல்லுங்க” என்றாள்.

 

“நீங்க இன்னும் பதட்டத்தில் தான் இருக்கீங்களா..?” என சாதாரணமாக கேட்டான், கார்த்தி.

 

 “இல்லங்க, இப்போ நல்லா தான் இருக்கேன்.”

“ரொம்ப கூச்ச சுபாவமா..?, பேசுறதுக்கே உங்களுக்கு காசு கொடுக்கணும் போல…”

“ இல்லைங்க..”

“சரி பயப்படாதீங்க, நான் இன்னைக்கு நைட் சென்னை கிளம்பிடுவேன். கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி தான் வருவேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு போன் பண்ணேன்”.

 

“சரி பார்த்து போயிட்டு வாங்க”

 அந்த வார்த்தையை கேட்டதும் கார்த்திகைக்கு ஜில்லென்று இருந்தது. ஆனால், அருணாவோ இந்த வார்த்தையை பொதுவாகவே உபயோகிப்பவள், யாராவது அவளிடம் ‘போயிட்டு வரேன்’ எனக் கூறினாலே, “பார்த்து போயிட்டு வாங்க” என்ற வார்த்தை அவளை அறியாமலேயே  வரும்.

“சரிங்க, நேரத்துக்கு சாப்பிடுங்க, நான் ஃப்ரீயா இருக்கும்போது உங்களுக்கு போன் பண்றேன்.” என அழைப்பை  துண்டித்தான் கார்த்தி.

“யாரடி மாப்பிள்ளையா?” என பார்வதி கேட்க

“ஆமாக்கா” என்றாள்.

“பார்க்க நல்ல பையனா தெரியுது அருணா.”

சிரித்தவள்… “அப்பா எங்கே..?” என கேட்க… 

“அப்பாவுக்கு தெரிந்தவங்க நிறைய பேர் வந்திருந்தாங்கல்ல, அவங்க கூட வெளியே போய்ருக்காங்க. வருவாங்க”

“சரிக்கா, தலை வலிக்குது, நான்   தூங்கட்டுமா…”

“தூங்குற நேரம் ஆயிடுச்சு…, சாப்பிட்டு போய் படு, பாப்பா உள்ளே தூங்குறாள்.  பக்கத்திலேயே போய் படு” என பார்வதி கூற…

தெய்வானை கையில் சாப்பாட்டு தட்டுடன் வந்தவருக்கும் அருணாவை  நினைத்து கண்கலங்கதான் செய்தது. ‘ஆனால், என்ன செய்வது, பெண்ணாய் பிறந்தால் புகுந்த வீடு சென்று தானே ஆக வேண்டும்’ என மனதை தேற்றிக்கொண்டு மகளுக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தார்.

 

சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்தவளுக்கு,  கத்தி அழுகலாம் போல இருந்தது. “இன்றைக்கே மொத்தமா அழுது தீர்த்து விடலாமா” என்றுதான் நினைத்தாள். தன் அக்கா மகள் தூங்குவதை பார்த்தவள், அவள்  பக்கத்தில் சென்று படுத்ததும், தன் சித்தியை தூக்கத்திலேயே கட்டி அணைத்துக் கொண்டாள், பவிகுட்டி.

அவளை தன்னோடு அணைத்தபடியே தட்டிக் கொடுத்தவள், எண்ணம் முழுவதும் தன் காதல் வாழ்க்கைக்குள்  நுழைந்தது. 

வலியோடு ஒவ்வொரு பக்கங்களும் திறக்கப்பட, அந்த நினைவுகளில் மூழ்கினாள், அருணா.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page