கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ

 

 

அத்தியாயம் – 1

மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, பார்க்கும் இடமெல்லாம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர்.

மணமேடையில் முகம் முழுவதும் எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்திருக்க அமர்ந்திருந்தாள் அஷ்வினி. அவள் அருகில் அமர்ந்திருந்த கௌதமோ, அவளை வேண்டுமென்றே சீண்டிக் கொண்டிருந்தான்.

“என்ன மேடம், புது பொண்ணு மாதிரி அப்படி ஒரு வெட்கம்?” என்று கேட்டவன், யாரும் தங்களைக் கவனிக்காத நேரம் பார்த்து அஷ்வினியின் இடையைக் கிள்ளினான்.

அவளோ துள்ளி நகர்ந்து, அவனைப் பொய்க் கோபத்துடன் முறைத்தாள். ஆனால் அவனோ எதுவும் நடக்காதது போலப் பார்வையைச் சுற்றிலும் சுழலவிட்டபடி அமர்ந்திருந்தான்.

மங்கள வாத்தியங்கள் முழங்கின. ஐயர் தாலியை எடுத்து கௌதமின் கையில் கொடுத்துவிட்டு,

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்று கூறினார்.

தாலியைக் கையில் வாங்கியவன், அதை அஷ்வினியின் கழுத்தில் கட்டப் போன நேரத்தில், காற்றைக் கிழித்துக்கொண்டு சீறிப் பாய்ந்து வந்த தோட்டா ஒன்று மணமேடையிலிருந்த கலசத்தின் மீது பாய்ந்தது. அடுத்த நொடியே கலசம் சிதறியது.

அந்தச் சத்தத்தில் அதிர்ந்த கௌதம், தாலியைக் கையில் பிடித்தபடியே வாசலை நோக்கித் திரும்பினான்.

அங்கே, வாசல் நிலையில் சாய்ந்தபடி ஒரு கையில் துப்பாக்கியையும், மறுகையில் மதுப் பாட்டிலையும் ஏந்தியவாறு ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

அவனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

கௌதமின் உதடுகளோ அதிர்ச்சியுடன் ஒரு பெயரை உச்சரித்தன.

“தீரா!”

இடது கையில் வைத்திருந்த மதுவை அருந்தியபடியே, அங்கிருந்தவர்களை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான் தீரன்.

அவனைக் கண்டதும் கௌதம் மணமேடையிலிருந்து எழுந்துகொண்டான். அஷ்வினியோ அங்கு நடப்பது எதுவும் புரியாமல் விழி பிதுங்கி நின்றாள்.

அடுத்த நொடி, அமர்ந்திருந்த அஷ்வினியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான் தீரன்.

அவன் அருந்திய மதுவின் வாசனை அவளது நாசியைத் துளைக்க, முகத்தை அருவருப்புடன் சுளித்துக்கொண்டாள் அவள்.

அவளது செயலைக் கண்டு இதழ் பிதுக்கியவன்,

“அதுதான் மாப்பிள்ளையே மணமேடையிலிருந்து எழுந்துட்டானே! நீ இன்னும் ஏன் மேடையில உட்கார்ந்திருக்க? வேற எவனாவது தாலி கட்டுவான்னு எதிர்பார்க்கிறியா?” என்று ஏளனமாகக் கேட்டான்.

அவனது இதழோரத்தில் ஒரு கேலிப் புன்னகை தோன்றி மறைந்தது.

அவன் பேச்சில் அருவருப்படைந்த அஷ்வினி, மணமேடையிலிருந்து எழுந்துகொண்டாள்.

அவனுக்கு அருகில் நின்றிருந்த கௌதமின் தாயார், கையெடுத்துக் கும்பிட்டபடி,

“தம்பி, பிரச்சினை பண்ணாதீங்க. இது என் பையனோட வாழ்க்கை. தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க,” என்றார்.

விரைந்து வந்த கௌதம், தன் தாயின் கைகளைக் கீழிறக்கினான்.

“அம்மா, அவனைப் போய் கையெடுத்து கும்புடுறீங்க… விடுங்க! அவன் என்ன பண்ணுறான்னு நானும் பார்க்கிறேன்,” என்றவன், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தீரனின் முன்னால் நின்றான்.

தன் முன்னே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றவனின் மார்பில், ஒரு நொடியும் தயங்காமல் துப்பாக்கியை வைத்தான் தீரன். மறுகையில் இருந்த மதுவை அருந்தியபடியே அவனை அழுத்தமாகப் பார்த்தான்.

ஆனால் கௌதமோ சிறிதும் பயப்படாமல் நிமிர்ந்து நின்றான்.

“ஊஃப்!” என்று இதழ்களைக் குவித்து ஊதியவன், கௌதமின் நெஞ்சிலிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டான்.

பின்னர், பின்னால் திரும்பித் தலையைக் கோதியவன், அடுத்த நொடியே கௌதமின் புறம் திரும்பி அவனது காலில் சுட்டான்.

காலில் தோட்டா பாய்ந்ததும் கௌதம் வலியால் துடித்து அதே இடத்தில் சுருண்டு விழுந்தான்.

கௌதமின் தாயும் அஷ்வினியும் அவனை நோக்கிச் செல்ல முயன்றனர்.

ஆனால் அஷ்வினியின் சேலை முந்தானையைப் பிடித்து அவளைத் தடுத்து நிறுத்தினான் தீரன்.

அவளோ அவனிடமிருந்து விடுபடவும் முடியாமல், கௌதமிடம் செல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

“பரமா!” என்று தீரன் கர்ஜித்ததும், அவனுடைய ஆட்கள் அனைவரையும் சுற்றி வளைத்தனர்.

தீரனை எதிர்த்துச் செயல்பட அங்கிருந்த யாருக்கும் துணிவில்லை.

தோட்டா பாய்ந்த வலியால் கௌதமால் எழுந்துகொள்ள முடியவில்லை.

அவன் கண் முன்னே, அஷ்வினியின் கரங்களை அவளது முதுகுக்குப் பின்னால் திருப்பிய தீரன், அவளுடைய இரு கைகளையும் சேலை முந்தானையால் கட்டினான்.

அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள் அஷ்வினி.

“உனக்குத் தாலி தானே வேணும்? அது அவன் கட்டினால் என்ன, நான் கட்டினால் என்ன?” என்றான் தீரன்.

அவள் யோசிப்பதற்குக்கூட நேரம் கொடுக்காமல், தான் கொண்டுவந்திருந்த தாலியை எடுத்து அவளது கழுத்தில் கட்டினான்.

கௌதமோ வலியையும் மீறி ஆவேசமாகக் கத்தினான்.

“தீரா… உன்னை விட மாட்டேன்டா!”

அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த தீரன்,

“உன்னால முடிஞ்சா…!” என்றான்.

பின்னர் அஷ்வினியை நோக்கினான்.

தன் கழுத்தில் தொங்கிய தாலியை இயலாமையுடன் பார்த்தவள், அப்படியே மயங்கி தீரனின் மீது சரிந்தாள்.

அவளைத் தன் கைகளில் ஏந்தியவன்,

“பர்ஃபெக்ட்!” என்றபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அவன் செல்வதைப் பார்த்த கௌதம் மீண்டும் கர்ஜித்தான்.

“உன்னை விட மாட்டேன், தீரா!”

அந்தக் குரலில் திரும்பிப் பார்த்த தீரன், மனதிற்குள், அடங்க மாட்டேங்குறானே! என்று நினைத்துக்கொண்டான்.

பின்னர் ஏளனமாகச் சிரித்தபடி,

“அதுக்கு நீ உயிரோட இருக்கணுமேடா!” என்றான்.

அடுத்த நொடி, அவன் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் கௌதமின் உடலைத் துளைத்துச் சென்றன.

கௌதமின் உடலிலிருந்து தெறித்த ரத்தத் துளிகள் அவனது தாயின் முகத்தில் பட்டுச் சிதறின.

“ஆஆஆ!”

என்று அலறியபடி எழுந்தாள் ராதிகா.

முகம் முழுவதும் ரத்தம் படிந்திருப்பதாக எண்ணியவள், பதற்றத்துடன் முகத்தைத் துடைத்தாள்.

ஆனால் அங்கே ரத்தம் இல்லை.

அவளது முகத்தை நனைத்திருந்தது வியர்வை மட்டுமே.

அதை உணர்ந்த அடுத்த நொடியே, தான் கண்டது மாயக் காட்சியா என்று குழம்பியவள், தலையைப் பிடித்துக்கொண்டு வேகமாக மூச்சுவிட்டாள்.

“இறைவா! இது கனவா? ஏன் இப்படி ஒரு கனவு? இது எப்படி சாத்தியம்? அவனால் எப்படி திரும்பி வர முடியும்? இல்லை… இருக்காது! இது நடக்காது!”

தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்ட ராதிகா, அந்த நடுநிசியில் தனது அறையை விட்டு வெளியே வந்தாள்.

நேராகக் கௌதம், அஷ்வினி இருவரும் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

கதவு தாழிடப்படாமல் இருந்ததால், அதைத் திறந்து உள்ளே பார்த்தாள்.

அங்கே கௌதம், அஷ்வினியை ஒரு கையால் அணைத்தபடி குப்புறப் படுத்திருந்தான்.

அந்தக் காட்சியைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் ராதிகா.

இருந்தும் அவளது பதற்றம் குறையவில்லை.

மனதில் தோன்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் நிழற்படங்களாக அவள் கண் முன்னே தோன்றி மறைந்தன.

வேறு வழியின்றி ஒரு முடிவுக்கு வந்தவள், வீட்டின் தோட்டத்திற்குச் சென்று நடக்கத் தொடங்கினாள்.

நிலவின் வெளிச்சத்தை மட்டுமே நம்பி, வேறு யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல் தனியாக நடந்தாள்.

விடியும் வேளையில், அவள் தேடிவந்த இடத்தை அடைந்தாள்.

சுற்றிலும் அடர்ந்த காடு சூழ்ந்திருந்தது. அங்கே ஒரே ஒரு மரம் மட்டும் ராட்சதத் தோற்றத்துடன் வானுயர்ந்து வளர்ந்திருந்தது.

அந்த மரத்தின் இடுக்குகளின் வழியாக உள்ளே சென்ற ராதிகா, அமைதியாக நின்றாள்.

இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் ஒரே ஒரு தீபம் மட்டுமே வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது.

ராதிகாவின் வருகையை உணர்ந்தவள், மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

அவள்தான் விருஷாலி.

அவளது தோற்றம் ஒரு ஆன்மிகவாதியைப் போல இருந்தாலும், வயதில் அவள் ராதிகாவுக்கு இணையானவளாகவே இருந்தாள்.

“சொல்லு ராதிகா… இந்த நேரத்தில் எதுக்கு வந்திருக்க?” என்று விருஷாலி கேட்டாள்.

அவளது குரலைக் கேட்டதும் ராதிகாவின் உடல் நடுங்கியது.

ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள்,

“விருஷாலி… இன்னிக்கு… இன்னிக்கு…” என்றாள்.

ஆனால் தான் கண்ட கனவின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை.

“எனக்கு எல்லாம் தெரியும். ஆனால் நீ பயப்படுற மாதிரி நடக்கவும் வாய்ப்பு இருக்கு,” என்று அதிகாரத் தோரணையில் கூறினாள் விருஷாலி.

“அது எப்படி நடக்கும்? அஷ்வினி கௌதமுடைய மனைவி. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்தக் கனவு… அவன் கண்கள்… என்னால எதையும் மறக்க முடியல! என் கௌதமுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு. இதுக்கு ஏதாவது செய்ய முடியுமா?”

ராதிகாவின் குரலில் இருந்த பயத்தை உணர்ந்துகொண்டாள் விருஷாலி.

“இதுக்கெல்லாம் காரணம் உன் மகன் அஷ்வினியின் கழுத்தில் கட்டிய தாலிதான். அந்தத் தாலி அவள் கழுத்தை வந்தடைந்த நேரம் நல்ல நேரம் இல்லை. அதனால்தான் இத்தனை நிகழ்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டிருக்கின்றன.”

“இப்போ அதுக்கு என்ன பண்ண முடியும், விஷா?”

“ஒரே ஒரு வழிதான் இருக்கு, ராதிகா. மீண்டும் உன் மகன் கையால் அஷ்வினியின் கழுத்தில் தாலி ஏற வேண்டும். அதுவும் நாளை காலை பிரம்ம முகூர்த்தத்தில் அது நிகழ வேண்டும்.”

என்றவள், அதற்கான பல செயல்திட்டங்களையும் ராதிகையிடம் விளக்கினாள்.

“இது சரியா வருமா, விஷா?”

“நான் சொன்னதைச் செய். இனி நல்லது மட்டுமே நடக்கும்.”

விருஷாலியின் இறுதி வார்த்தைகளை நம்பிய ராதிகா, தனது இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

 

காலைப் பொழுது அழகாக விடிய, குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தாள் அஷ்வினி.

தனது ஈரக் கூந்தலைத் துவட்டியவள், கண்ணாடி வழியாகப் படுத்திருந்த கௌதமின் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ மெத்தையில் படுத்தவாறே அவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

அவன் தன்னைக் கவனிப்பதை உணர்ந்தவளின் இதழ்களில் நொடியில் ஒரு வெட்கப் புன்னகை தோன்றியது.

ஆனால் அவன் அதைக் கவனிப்பதற்கு முன்பே அந்தப் புன்னகையைத் தனக்குள் மறைத்துக்கொண்டவள், எதுவும் தெரியாததுபோல மேசையிலிருந்த குங்குமச் சிமிழை எடுத்தாள்.

அதுவரை மெத்தையில் படுத்திருந்தவன் ஒரே தாவலில் அவளை அடைந்திருந்தான்.

அஷ்வினியின் நெற்றியில் குங்குமம் இடுவதற்காக அவளிடமிருந்து குங்குமச் சிமிழை வாங்கியவன், அவளுக்கு அதைத் தானே வைத்துவிட முயன்றான்.

அந்த நேரத்தில் அவர்களது அறைக் கதவு தட்டப்பட்டது.

சத்தத்தில் திடுக்கிட்ட கௌதம், கையிலிருந்த குங்குமச் சிமிழைக் கீழே போட்டான்.

“அச்சச்சோ!” என்று பதறிய அஷ்வினி, அவனை முறைத்துப் பார்த்தபடியே சென்று கதவைத் திறந்தாள்.

வெளியே நின்றிருந்த ராதிகாவைக் கண்டதும்,

“வாங்க, அத்தை!” என்றாள்.

அவளை வாஞ்சையுடன் பார்த்த ராதிகா,

“இன்னிக்கு ராத்திரி ஒரு சடங்கு இருக்கு, மா. அதுக்காக நீ இன்னிக்கு முழுவதும் சாப்பிடக் கூடாது,” என்றார்.

“என்ன சடங்கு, அத்தை?” என்று அஷ்வினி கேட்பதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார் ராதிகா.

“என்ன சடங்குன்னு கூடச் சொல்லாமல் போறாங்களே, கௌதம்!” என்று குழப்பத்துடன் கேட்டாள் அஷ்வினி.

அவளைப் பின்னாலிருந்து அணைத்த கௌதம்,

“அது என்னவா இருந்தா என்ன பேபி? உனக்குப் பிடிச்சிருந்தா செய். இல்லன்னா வேண்டாம்,” என்றவன், அவளது கழுத்து வளைவில் இதழ் பதித்தான்.

அவனைத் தன்னிடமிருந்து பிரித்துத் தள்ளியவள்,

“வர வர நீங்க ரொம்ப மோசம்! எனக்கு உங்களைப் புரிஞ்சுக்கவே முடியல. நம்மளுக்குக் கல்யாணமாகி மூணு மாசம் ஆச்சு. அப்போ இருந்து இப்போ வரைக்கும் எதை எடுத்தாலும் ஏதாவது ஒரு சடங்கு, இல்லன்னா விரதம்! கடவுளே!” என்று சலித்துக்கொண்டவள், மெத்தையில் அமர்ந்தாள்.

அவளைப் பின்தொடர்ந்து வந்த கௌதம், அவளருகில் அமர்ந்தான்.

“கூல், பேபி!” என்றவன், அவளது இதழ்களை நோக்கிக் குனிந்தான்.

அவனைத் தட்டிவிட்ட அஷ்வினி,

“விடுங்க, கௌதம்!” என்றபடி எழ முயன்றாள்.

அவளது கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தியவன், தன்னை நோக்கி இழுத்தான்.

அடுத்த நொடி, அவள் அவனது மடியில் விழுந்திருந்தாள்.

தன் மடியில் கிடந்தவளை நெருக்கமாக அணைத்துக்கொண்டவன், நுனிவிரலால் அவளது முகத்தை வருடினான்.

அவளோ முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“என்னடி, புது பொண்ணு மாதிரி இவ்வளவு வெட்கப்படுற?” என்று கேட்டவன், ஒற்றைக் கையால் அவளது தாடையைப் பிடித்து அவளது இதழ்களை நெருங்கினான்.

அந்த நேரத்தில்,

“சொன்னாலும் சொல்லாட்டியும் நான் புது பொண்ணுதான்!” என்று வெட்கத்துடன் கூறியவள், அவனைத் தன்னிடமிருந்து பிரித்துத் தள்ளிவிட்டு அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள்.

அவளைப் பார்த்துப் திருப்பதியாக புன்னகைத்தான் கௌதம்.

 

மாலை நேரமானதும், அஷ்வினியைத் தனியாக அழைத்துச் சென்ற ராதிகா, தனது மாமியார் பாக்கியத்துடன் சேர்ந்து சில ஏற்பாடுகளைச் செய்தார்.

அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அஷ்வினியை அமரச் சொன்னார் ராதிகா.

என்ன நடக்கிறது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தவள், அவர்கள் சொன்னபடியே நாற்காலியில் அமர்ந்தாள்.

அப்போது அவளருகில் வந்த பெண்ணொருத்தி, அவளது கழுத்திலிருந்த தாலியைக் கழற்ற முயன்றாள்.

உடனே அவளைத் தடுத்த அஷ்வினி, அங்கிருந்த அனைவரையும் குழப்பத்துடன் பார்த்தாள்.

“உனக்குத் தோஷம் இருக்கு, அஷ்வினி. இந்தத் தாலி உன் கழுத்தில் இருக்கக் கூடாது. இப்போ இதைக் கழற்றிவிடுவோம். நாளைக்கு உன் கழுத்தில் கௌதம் வேறொரு தாலியைக் கட்டுவான்,” என்று ராதிகா கூறி முடித்தார்.

அதிர்ச்சியுடன் இருக்கையிலிருந்து எழுந்தாள் அஷ்வினி.

“என்ன சொல்றீங்க, அத்தை?”

அவளது பார்வை அங்கிருந்த அனைவரையும் மிரட்சியுடன் சுற்றியது.

“அவங்க சொல்றபடி செய், அஷ்வினி!” என்று கௌதமின் குரல் அந்த அறையை நிறைத்தது.

அவனது குரலைக் கேட்டவள், இயலாமையுடன் அனைவரையும் பார்த்தாள்.

“நாளைக்கு நான் உன் கழுத்தில் வேறொரு தாலி கட்டப்போறேன். எதுக்கு இந்தப் பயம், அஷு? இந்தத் தாலியைக் கழற்ற விடு,” என்றான் கௌதம்.

அதன்பின் வேறொரு இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

உரியவனே தாலியைக் கழற்றிவிடச் சொல்லும்போது, அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

மனதைக் கல்லாக்கிக்கொண்டவள், வேறு வழியின்றி மீண்டும் அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

ராதிகா, அவளது தலையில் மஞ்சளும் குங்குமமும் கலந்த தண்ணீரை ஊற்றினார்.

பின்னர் அங்கிருந்த பெண்ணொருத்தி, அஷ்வினியின் கழுத்திலிருந்த தாலியைக் கழற்றினாள்.

“நீ போய்க் குளி, அஷ்வினி. ஆனால் நாளை வரை சாப்பிடக் கூடாது,” என்ற ராதிகா, தாலிக் கயிற்றை எடுத்துக்கொண்டு தோட்டத்தை நோக்கிச் சென்றார்.

அங்கே சுற்றிலும் வாழை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் ஒரே ஒரு வேப்ப மரம் நின்றிருந்தது.

அந்த வேப்ப மரத்தின் அருகில் குழி தோண்டிய ராதிகா, தாலிக் கயிற்றை அதற்குள் போட்டுத் தீயிட்டார்.

மஞ்சள் கயிறு தீயில் எரிந்ததும், அதிலிருந்த திருமாங்கல்யத்தை மட்டும் எடுத்தார்.

பின்னர், புதிதாக ஒரு மஞ்சள் கயிற்றில் அந்தத் திருமாங்கல்யத்தை இணைத்தார்.

அதை எடுத்துவந்து பூஜையறையில் வைத்தார்.

 

காலையிலிருந்து உணவு உண்ணாமல் இருந்த அஷ்வினிக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அதனால் அவளால் அறையைவிட்டுக்கூட வெளியே செல்ல முடியவில்லை.

அன்றிரவு கௌதமும் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்ததால், தனிமையில் தவித்துப்போனாள் அஷ்வினி.

காலையிலிருந்து எதுவும் உண்ணாததால் அவளுக்குத் தூக்கமும் வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் வந்தால்தானே!

அப்போது வீட்டின் வேலைக்காரப் பெண்ணான மரகதம், உணவுத் தட்டுடன் அவளது அறைக்குள் நுழைந்தார்.

“சாப்பிடும்மா, அஷ்வினி. காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடலையே!” என்றபடி உணவுத் தட்டை அவளிடம் நீட்டினார்.

“யாரு கொடுத்தாங்க, அக்கா?” என்று கேட்டாள் அஷ்வினி.

“இந்த வீட்டில யாரும்மா கொடுப்பாங்க? நான்தான் உனக்குப் பசிக்குமேன்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன். சாப்பிடும்மா!”

“வேண்டாம், அக்கா. ஏற்கெனவே இங்க இருக்கிற எல்லாரும் ஒரு மாதிரியாக இருக்காங்க! இதுல விரதம் வேற. இப்போ நான் சாப்பிட்டது மட்டும் தெரிஞ்சா, அதுக்கு எத்தனை விரதம் இருக்கச் சொல்லுவாங்களோ? எதுக்கு வம்பு?”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“முதல்ல கௌதம் சரியாகத்தான் இருந்தாரு. ஆனா, இந்த ஒரு வாரமா அவரும் அவங்க வீட்டில் இருக்கிறவங்க மாதிரி புரியாத புதிரா இருக்காரு. எல்லாம் என் நேரம்!”

என்று புலம்பியவள்,

“நீங்க போங்க, அக்கா. நான் தூங்குறேன்,” என்றபடி படுத்துக்கொண்டாள்.

மரகதமும் உணவுத் தட்டுடன் அறையைவிட்டு வெளியேறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அஷ்வினியின் அருகில் ஏதோ நிழல் உருவம் தெரிவதுபோல இருந்தது.

பதறிப்போனவள் சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள்.

அந்த அறையின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன.

இருள் சூழ்ந்த அறையில், அவளுக்கு மிக அருகில் அந்த நிழல் உருவம் நின்றுகொண்டிருந்தது.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!