கண்கள் 6
எதிரெதிரே வந்த பரமனின் வாகனமும், கார்த்திக்கின் வாகனமும் மோதிக்கொண்டதில் கட்டுபாடின்றி ஒரு பள்ளத்தில் உருண்டுவிழுந்தது… பரமனின் வாகனம், மரத்தில் மோதி நின்றது, ஆனால் கார்த்திக்கின் வாகனமோ விழுந்த வேகத்தில் குடைசாய்ந்து கிடந்தது…
முதலில் சுயநினைவு பெற்று காரில் இருந்து வெளியே வந்த பரமன்,விழுந்து கிடந்த கார்த்திக்கின் கார் அருகில் சென்று பார்த்தான்…
அங்கு அனைவரும் விழுந்த வேகத்தில் மயக்கமடைந்து கிடக்க… முதலில் கார்த்திக்கின் தோளில் கை தொட்டு
” ஹெலோ பிரதர்… எழுந்திருங்க ” என்றவன் விரைந்து சென்று தன் காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தான்…
தண்ணீரை கார்த்திக்கின் முகத்தில் தெளிக்க… சிறு முக சுருக்கலுடன் கண்விழித்தான் அவன்.
” ஆர் யூ ஓகே ” என்று பரமன், கார்த்திக்கிடம் கேட்க,
” ஹான், ஐயம் ஓகே , ” என்ற கார்த்திக்
தன் அருகில் இருந்த தேவகியை எழுப்ப முயற்சித்தான் ” தேவா… தேவா… ” என்றவன் அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்தான்.
ஆனால் அவளோ இன்னும் கண்ணை திறக்காமல் இருக்க மீண்டும் தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தவன் ” தேவா ” என்று அழைக்கவும் கண்விழித்து கொண்டாள்.
அப்போது தான் தன் உயிரே திரும்ப கிடைத்தது போன்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் ” உனக்கு ஒன்னும் இல்லை இல்லை ” என்று கேட்க…
அவளுக்கோ இன்னும் அந்த விபத்தின் அதிர்ச்சி கண்முன்னே இருக்க, பதில் பேசமுடியாமல் விக்கித்து அமைதிகாத்தாள்..
” யோவ்… இங்க ஒருத்தி, இருக்காளா? செத்தாளா?ன்னு கொஞ்சமாவது உங்க ரெண்டு பேருக்கும் அக்கறை இருக்கா? ” என்று பின்னால் இருந்து மோகினி குரல் கொடுக்க…
” பின்னாடி ஆளு இருக்கா? ” என்று பதட்டத்துடன் கேட்ட பரமன் பின்னால் சென்று பார்க்க… அங்கே, கால் ஒருபக்கம் கை ஒரு பக்கம் என அஷ்ட கோணத்தில் காரில் அமர்ந்திருந்தாள்.
அவள் இருக்கும் நிலை கண்டு பரமன் உடனே வேறு பக்கம் முகத்தை திருப்பி கொள்ள… பெண்களுக்கே உண்டான வெக்கம், நாணம் எல்லாம் அப்போது தான் மோகினிக்கு எட்டி பார்த்தது… உடனே தன்னை சரி செய்ய முயற்சி செய்தவள் தன்னுடைய கைக்கொண்டு ஆடையை சரி செய்ய முயன்றாள்.
அப்போது காரில் இருந்து வெளியே வந்த கார்த்திக், தேவகியையும், வெளியே அழைத்து வந்தான்…
பின்னர் மூவரும் சேர்ந்து மோகினியை காரில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்,
சிறுசிறு காயங்களுடன் அனைவருமே தப்பிக்கொண்டனர்…
” அய்யோ,அய்யோ என் அம்மா பத்மாவதி உங்களை நம்பி என்னை அனுப்பின பாவத்துக்கு என்னை இப்படி கொல்ல பாக்குறீங்களே பாவிங்களா! ” என்று மோகினி வராத கண்ணீரை துடைக்க… கார்த்திக்கோ சலிப்பாக, தேவகியின் முகம் பார்த்தான்.
” ஏன்டி இருக்க பிரச்சனையில் நீ வேற? ” என்ற தேவகி அவளை அடிக்க கை ஓங்க அதனை தடுத்து பிடித்தான் கார்த்திக்.
” சரி விடு சின்ன பொண்ணு தானே ” என்று அவன் அடக்க…
” அவள் என் தங்கச்சி நான் என்ன வேணாலும் பண்ணுவேன் உனக்கு என்ன? அப்புறம் நான் உன்னைவிட வயசுல பெரியவ சோ கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசு.. புரியுதா? ” என்று அவள் ஆக்ரோசமாக கூற… மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட கார்த்திக்
” சரிங்க மேடம்… இப்போ என்ன பண்ண போறீங்க மேடம்.. நம்ம இனி எப்படி கோவிலுக்கு போறது மேடம்… ” என்று ஒவ்வொரு மேடம் என்ற வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து பேசியவனை கண்டு தேவகிக்கு கொலை வெறி வர… மோகினியோ அவர்களது பேச்சை கேட்டு சத்தமாக சிரித்து விட்டாள்.
கார்த்திக்கோ மோகினியை பார்த்து ‘ இவள் வேற’ என்று முறைக்க, அவளோ தன் தளிர் நாக்கை வெளியே நீட்டி அவனை கேலி செய்தாள்…
இவர்களது விளையாட்டில் அருகில் நின்ற பரமனை யாரும் கவனிக்கவில்லை…
அவனோ அவர்களை பார்த்து தோள்களை உலுக்கியவன், தன் காரின் அருகில் வந்து அதனை உயிர்ப்பிக்க முயற்சித்தான், ஆனால் அது சிறிது கூட அவன் செயலுக்கு ஒத்துழைக்கவில்லை… சலிப்புடன் கீழே இறங்கி நின்றான் பரமன்.
அந்த இருள் பொழுதில் நிலவின் ஒளியில், அப்போது தான் மோகினி, பரமனை நன்றாக பார்த்தவள் ” யாருடா இவன் எருமை மாதிரி ” என்று கூற, அது அங்கு நின்ற பரமனின் காதில் நன்றாக விழுந்தது… உடனே அவன் அவளை அனல் தெறிக்க பார்க்க… அவளோ கார்த்திக்கின் பின்னால் சென்று மறைந்து நின்றபடி ” சாரி மிஸ்டர் லோ பட்ஜட் ஹல்க் ” என்றாள் மெதுவாக…
” தப்பா எடுத்துக்காதீங்க பிரதர், இவள் கொஞ்சம் அப்படி தான் ” என்று கார்த்திக், பரமனிடம் கூற…
அமைதியாக அதை ஏற்றுக்கொண்டான் பரமன்.
” சரி இப்போ இங்க இருந்து எப்படி போறது? எனக்கு ரொம்ப பசிக்குது ” என்ற தேவகியும், மோகினியும் அங்கிருந்த ஒரு கல்லில் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டனர்.
அதை பார்த்து பெருமூச்சு விட்ட கார்த்திக் ” என் மாமன் இவளுங்க ரெண்டு பேரையும் சோத்துக்கு பெத்திருப்பான் போல… எந்நேரமும் சாப்பாடு… சாப்பாடு தான் ” என்றவன் பரமனிடம் திரும்பி பேச ஆரம்பித்தான்.
” சுத்தி இப்படி காடா இருக்கே, இங்கேயிருந்து எப்படி வெளியே போறதுன்னு உங்களுக்கு தெரியுமா? ” என்று கார்த்திக் கேட்க…
” தெரியும் ஆனால் இங்கே இருந்து இப்போ நம்மால வெளியே போக முடியாது, ரொம்ப இருட்டிடுச்சு, காட்டு மிருகங்கள் நடமாட்டம் இப்போ அதிகமா இருக்கும், இனி காலையில தான் என்ன பண்ணுறதுன்னு பார்க்கணும் ” என்று கூறியவன் தன் காரில் சென்று அமர்ந்து கொள்ள… கார்த்திக்கையும் அழைத்தான்…
கார்த்திக்கும், பரமனும் முன்பக்க சீட்டில் அமர்ந்து கொள்ள,பின்னே தேவகியும், மோகினியும் அமர்ந்து கொண்டனர்.
கார்த்திக்கின் கார் கவுந்து கிடந்ததால், அந்த காரை தூக்க முடியாமல் போனது, அதனாலே அனைவரும் பரமனின் காரில் இருக்கும் நிலை உண்டானது…
தேவகிக்கோ பசி வயிற்றை கிள்ளியது… இருந்தும் அமைதியாக இருந்தாள், ஆனால் மோகினியோ ” யோவ் மாமா பசிக்குதுடா ” என்று கார்த்திக்கின் முதுகை சுரண்ட ஆரம்பித்தாள்…
கார்த்திக்கோ ” சரி இரு நம்ம காரில் இருந்து எதையாவது எடுக்க முடியுதா பார்க்குறேன் ” என்றவன் கீழே இறங்க போக அவனை தடுத்த பரமன், தன் காரில் இருந்த பிரட்டையும், பழத்தையும் அவனிடம் கொடுத்தான்..
அதனை கார்த்திக் வாங்கும் முன் பாய்ந்து வந்து வாங்கிய மோகினி ” ரொம்ப நன்றி லோ பட்ஜட் ஹல்க் ” என்றவள் தேவகியுடன் சேர்ந்து அதனை சாப்பிட்டாள்…
சாப்பிட்டு கொண்டிருந்தவள் முன்னே இருந்த பரமனை நோக்கி ” எங்களுக்கு சாப்பாடு எல்லாம் கொடுத்து இருக்கீங்க உங்க பேரு என்ன ? ” என்று கேட்க… தேவகியோ அவளது தலையில் கொட்டி ” சும்மா இருடி ” என்று மிரட்டினாள்.
” உன்கிட்டயா கேட்டேன், எதுக்கு அடிக்கிற ” என்றவள், மீண்டும் பரமனை பார்த்து கை நீட்டியபடி ” ஐயம் மோகினி, வன மோகினி ” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.
சிறு புன்னகையுடன் அதனை ஏற்றவன்
” பரமன்… பரமாத்மா ” என்று தன் முழு பெயரையும் கூறி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
அதனை கேட்ட மோகினி ” ஆத்மா ன்னு கூடவா பேரு வைப்பாங்க? ” என்றவளின் முகம் பிடித்தமின்மையை காட்ட… கார்த்திக்கோ ” செம்ம பேரு பிரதர் ” என்று நிலைமையை தன் வசப்படுத்த, வேறு விஷங்களை பேச தொடங்கினர் அங்கிருந்தவர்கள்… சிறிது நேரம் பேசிக்கொண்டே அனைவரும் காரிலேயே உறங்கிவிட்டனர்…
******
இங்கு அஷ்வினியின் அறைக்குள் வந்தான் தீரன், ” என்னை பார்க்கணும்னு சொன்ன இல்லை ” என்றவன் உணவு தட்டை அங்கிருந்த மேசையில் வைத்தான்…
” உன் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கு… ஆனால் என் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் உனக்கு இருக்கா? ” என்று அவன் கேட்க..
” ம்ம்ம் ” என்றாள். அவன் யார்? என்று அறிந்துகொள்ளும் முனைப்பில்…
“..ம்ம்ம்.. அப்போ சரி ” என்றவன் அறையில் இருந்த மின்விளக்குகளை ஒளிரச்செய்தான்.
வெளிச்சம் வந்த உடனே ஒரு நொடி கண்களை மூடி திறந்தவள். அடுத்து அவனை பார்க்கும் போது அவன் முகத்தை கண்டு அலறினாள்…
” ஆஆஆ” என்று அந்த அறையே அதிரும் படி கத்தியவள்… பிடித்தமின்னையுடன் அவனை விட்டு விலக பார்த்து ஒவ்வொரு அடியாக பின்னே எடுத்து வைத்தவள், அலறியபடியே கண்களை மூடி கீழே சரிந்து அமர்ந்தாள்…
அவளுடைய இந்த விலகல் அவனை வதைத்தாலும், சிறு புன்னகையுடன் அவளை நெருங்கினான்…
பயத்தில் முகத்தை மூடி அழுதுக்கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவன். அவளது தலையை ஆதரவாக வருட… அரண்டு மிரண்டாள் பெண்ணவள்…
” ஆஆ … ஆஆ ” என்று மீண்டும் கத்தியவள் அவனை விட்டு விலகி அறை முழுவதும் ஓட ஆரம்பித்தாள். அவனோ அவளது செயல்களை அறிந்தவன் போல கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தான்…
அஷ்வினியோ கதவை திறக்க முயற்சி செய்ய..விரைந்து வந்து அவளது கரத்தை பற்றி அவளை கதவில் சாய்த்தவன் ” ஆஹான்… நோ வே ” என்றபடி அவளது முகத்திற்கு வெகு அருகில் தன் முகத்தை கொண்டு சென்றான்.அவளோ பயத்தில் அலற, கண்களை மூடி திறந்தவனோ ” என் கண்ணை மட்டும் பாரு ” என்று கூறினான்.
முகம் முழுவதும் சிதைந்து ரத்த நிறத்தில் இருந்த அவனது வதனத்தில், நீல நிற நயனங்களை கண்ட நங்கை அவளுக்கு, அவன் வதனத்தின் மீது கொண்ட அருவருப்பு கூட மறந்து போனது என்ன மாயமோ…
அவன் கண்களை கண்ட அஷ்வினியின் எதிர்ப்பு சற்று குறையவே… அவள் அறியும் முன் கதவை லாக் பண்ணினான்…
அவன் கண்களை தன்னை மறந்து பார்த்துக்கொண்டுருந்தவளின், கரங்கள் தானாக அவனது கன்னம் வருட மேலெழுந்த போது அதனை விசித்திரமாக பார்த்த தீரனின் இதழ்களில் நொடியில் ஒரு வசீகர புன்னகை தோன்றி மறைந்தது…
தன் கன்னம் வருட மேலெழுந்த அவளது கரத்தினை தடுத்து பிடித்தவன், கரத்தினை சுவரில் அழுத்தி பிடிக்க… அதுவரை இருந்த பெண் கொண்ட மாயவலை அறுந்து விழ, அவனை மிரட்சியுடன் பார்த்தாள்…
மீண்டும் அவள் அலறிய படியே கண் மூட… ” நான் தான் சொன்னேன் இல்லை. என் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் உனக்கு இல்லன்னு, இனிமேல் என்னை பார்க்கணும்னு சொல்லி ஆசைப்படுவியா ? லைட்டை ஏன் ஆப் பண்ணுறன்னு கேட்பியா? ” என்று அவளது கையை பிடித்து இழுத்து வந்து மெத்தையில் அமரவைத்தவன்,
” சாப்பிடு ” என்று கூறி அவளது முன்னே சாப்பாட்டு தட்டை நீட்டினான்…
இன்னும் அவள் கண் திறக்காமல் இருக்கவே, ” இப்போ நீ சாப்பிடல ” என்றவன் அவளது தாடையை அழுத்தி பிடிக்க… வலி தாங்க முடியாமல் கண்ணை திறந்துகொண்டாள் அஷ்வினி…
கண்ணீர் நிற்காமல் வழிய, பாவமாக அவனது முகத்தை பார்த்து கொண்டிருத்தாள்.
” என்னை பார்க்க அருவருப்பா இருக்கா? ” என்று அவன் கேட்க… அவளிடமோ எந்த பதிலும் இல்லை
” சொல்லுடி… என்னை பார்க்க பிடிக்கலையா? அருவருப்பாக இருக்கா? ” என்றவனின் கை அவளது கழுத்தை அழுத்தி பிடிக்க… மூச்சு விட முடியாமல் தவித்த அஷ்வினிக்கு கண்ணெல்லாம் இருட்டிகொண்டு வந்தது.
அவள் துடிப்பதை பார்த்து தனது பிடியை தளர்த்தியவன், ” சாப்பிடு ” என்று கூற… அவளோ அமைதியாக இருந்தாள்…
அவன் மீண்டும் அருகில் வர முயற்சிக்க… வேகமாக தட்டை கையில் எடுத்தவள் முழு சாப்பாட்டையும் ஒரே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தாள்.
” குட் ” என்றவன் ” தூங்கு ” என்று கூறியபடியே வெளியே சென்றான்…
மெத்தையில் சுருண்டு படுத்த அஷ்வினிக்கு அவனது கோர முகமே கண் முன் வந்து போனது… கண்களை இறுக மூடியவள் ” முருகா… முருகா… ” என்று கடவுளை வணங்கியபடியே கண் மூடினாள்…
அஷ்வினியின் அறையை விட்டு வெளியே வந்த தீரனது இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது.…
தன் அறைக்குள் வந்து கண்ணாடியில் தன்னுடைய முகத்தை பார்த்தவன் குரூரமாக சிரித்த படியே முகத்தில் ஒட்டியிருந்த அந்த சிதைந்த முக அமைப்பு கொண்ட மாஸ்க்கை கிழித்து எடுத்தான்… பின்னர் அந்த ஒப்பனையை முழுவதும் முகத்தில் இருந்து துடைத்து நீக்கியவன்,
கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான்..
அவனுக்கே ஆன திமிரும், கம்பீரம், அவனை மேலும் அழகாக காட்டியது… சிறு களங்கமும் அல்லாத அழகான தெளிவான முகம் அவனுக்கு, அஷ்வினியின் அழகிற்கு எந்த விதத்திலும் குறையாத,அவளுக்கும் ஒரு படி மேலாகவே அவனுடைய முகம் அழகாகவும் ஆளுமை பொருந்தியதாகவும் இருந்தது…
( இருந்தும் ஏன் இந்த நாடகம்???? விடை தீரனிடமே!)
