மாயோன்.- 20
“அப்பா என்ன பேசுறீங்கப்பா நீங்க . உங்க சொத்து எனக்கு வேண்டாம்பா ..ஆனால் எனக்கு என்னோட ஸ்ருதி வேணும். அவளை நீங்க புரிஞ்சுக்கோங்க அப்பா.. அவ கண்டிப்பா நம்ம சொத்துக்காக என்னை விரும்பல..உங்களுக்கு உங்க தங்கச்சி மேல பாசமே கிடையாதா?சின்ன வயதில் பார்த்த எனக்கே அவங்களுடைய ஞாபகமா இருக்கு ஆனால் நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க .அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பா” என்று இவன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ஸ்ருதியிடம் இருந்து இரண்டு முறை அழைப்பு வர அதை எடுக்காமல் இருந்தான்.
“சரிடா உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறேன்.அவள் சொத்துக்காக உன்னை விரும்பலன்னு நிரூபிச்சிக் காட்டுடா .அப்போ நான் நம்பறேன்”என்றதும் ..
புவனேஷ்க்கு மூன்றாம் முறை ஸ்ருதியிடமிருந்து அழைப்பு வர ,”உங்களுக்கு நிரூபிக்கனும் அவ்வளவுதானே? “என்றவன் ஸ்ருதியின் அழைப்பை ஏற்று அப்படிப் பேசினான்.
மணிமாறனுக்கு தன் மகன் அப்படி பேசியதும் உள்ளுக்குள் ஸ்ருதி மீது கொஞ்சம் கருணை வந்தாலும் ,ஆனால் அவரின் வீணாப்போன வரட்டு கௌரவம் அதை தூக்கி எறிய அவன் அழைப்பை துண்டித்ததும், “இப்படி நீ பேசிட்டா என்ன நடக்கப்போகுது சொல்லுடா .எப்படியும் அவள் உன் காலை சுத்தின பாம்பாட்டம் நீ என்ன திட்டினாலும் உன்னையே சுத்தி சுத்தி தான் வருவாள்.காரணம் உன் மீது உள்ள உண்மையான காதல் இல்ல. உங்கிட்ட இருக்கிற சொத்துக்காக வருவா. அப்பன் புத்தி தானே பொண்ணுக்கும் இருக்கும்.
அந்த விக்ரம் என் தங்கச்சிய சொத்துக்காக தானே திருமணம் செஞ்சுகிட்டான். போடா போய் வேலையை பாரு.. உன் வயசு என் அனுபவம் டா .நான் சொன்னது தான் நடக்கும்”என்றான் மணிமாறன்.
“தப்புக்கணக்கு போடாதீங்கப்பா அவ கிட்ட இல்லாத சொத்தா?உங்க சொத்துக்காக அவள் என் பின்னாடி சுத்தி வரல . அவள் நல்ல மனிதர்களை சம்பாதித்து வச்சிருக்கா நாளைக்குள் அதனுடைய பலன் என்னனு உங்களுக்கு தெரியும் பாருங்க. “என்றான் புவனேஷ்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரம் நதியா கோவிலுக்குச் சென்றிருந்தார் .
கார்த்திக் புவனேஷ்க்கு அழைக்க தன் தந்தையிடம் சென்று ,”நேத்து நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?இதோ அவளோட அண்ணன் என் உயிர் நண்பன் போன் பண்ணி இருக்கான் ..
.உங்களுக்குப் பிறந்த பாவத்துக்கு நான் அனுபவிச்சு தானே ஆகனும் .என்ன சொல்ல போறான்னு தெரியல”என்றவன் கார்த்திக்கை பார்க்க கிளம்பினான்.
புவனேஷ் கார்த்திக்கிடம் நடந்த விஷயத்தைக் கூற ,”உங்க அப்பா என்னடா லூசா ?அவரை திருப்திப்படுத்த என் தங்கச்சிய அப்படி பேசினியா?”
“ப்ளீஸ் கார்த்திக் அப்படி சொல்லாத நான் அப்படிப் பேசியும் ஸ்ருதி எப்படி நடந்துக்கிறா அது அவருக்கு புரியனும் .எனக்கு என்னுடைய அப்பாவோட ஆசீர்வாதமும் வேணுண்டா..அப்போதான் நானும் ,ஸ்ருதியும் வாழ்க்கையில் நல்லா இருக்க முடியும் அதனால் தான்டா அப்படி பேசினேன்”
“போடா முட்டாள் செய்றதெல்லாம் செஞ்சிட்டு வியாக்கியானத்தை பாரு சரி என் கூடவா “என்று அவன் நேராக மணிமாறனின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான் .
மணிமாறனுக்கு எப்போதும் கார்த்திக் என்றாலே கொஞ்சம் பயம்தான் .அவனது நடவடிக்கை நேர்மையானதாகவும் ,அதேநேரம் நட்புக்காக எதையும் செய்வான் என்று தெரிந்து கொண்டவர் அவனிடம் பதமாகவே நடந்துகொள்வார்.
மணிமாறன் தன் மகனுடன் கார்த்திக்கை பார்த்ததும் என்ன இவன் வில்லங்கத்தை கூடவே அழைச்சிட்டு வந்து இருக்கானே என்று நினைத்தவர், “வா கார்த்திக் எப்படி இருக்க ,வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.?”
“நல்லா இருக்கேன் அங்கிள் எல்லாரும் நல்லா இருக்காங்க ..நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவன் கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கேட்க உள்ளுக்குள் மணிமாறனுக்கு உதறல் எடுத்தாலும் “நான் நல்லா இருக்கேன் கார்த்திக் என்ன சாப்பிடற”
“நான் எதுவும் சாப்பிட வரல அங்கிள். நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன் சொல்லுங்க உங்களுக்கு ஏன் என் தங்கை ஸ்ருதிய பிடிக்கல”
“என்ன கார்த்திக் சொல்ற ஸ்ருதி உன் தங்கச்சியா? அந்த விக்ரமோட பொண்ணுதானே ஸ்ருதி.நான் அப்படித்தானே கேள்விபட்டேன்” என்று நக்கலாக கூறியவரை கார்த்திக் முறைக்க புவனேஷ்,” அப்பா என்ன பேசுறீங்க நீங்க
“என்றவனை தடுத்த கார்த்திக்
“புவனேஷ் அமைதியா இருடா .அங்கிள் என்கூட விளையாட்றாரு அவரை நான் டீல் பண்ணிக்கிறேன்”
என்றவன் அங்கிள் விக்ரம் சாரோட பொண்ணும் அவள் தான் ,என்னுடைய தங்கச்சியும் அவள்தான் ,சரி விடுங்க இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. உங்களுக்கு உறவுகளை விடவும் பணம் தான் எப்பொழுதும் பெருசா தெரியும்..
ஸ்ருதி உங்க தங்கச்சி பொண்ணுதானே? அவளை மருமகளா ஏத்துக்க உங்களுக்கு ஏன் மனசு வரல அதைச் சொல்லுங்க”
“கார்த்திக் உளராத எனக்கு தங்கச்சி யாரும் கிடையாது அப்படி இருக்கப்போ தங்கச்சி பொண்ணு எங்கிருந்து வந்தாள்”
“அங்கிள் நீங்க என்னுடைய பொறுமையை ரொம்ப சோதிக்கறீங்க என்னை பத்தி உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன்”
“என்ன கார்த்திக் நான் உண்மையத்தான் சொல்றேன். எனக்கு தங்கச்சி யாரும் கிடையாது. என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு உரிமை இல்லையா? .நீ இதில் தலையிடாத.அவங்க அப்பா புது பணக்காரன் இருக்கானே அவனுடைய திமிர் தானே அவளுக்கும் இருக்கும்.. அவனுடைய பொண்ணுக்கு என் வீட்டு மருமகளா வர எந்த தகுதியும் கிடையாது”
“பார்றா விக்ரம் அங்கிள் ஒன்றும் உங்களைப்போல பரம்பரை பணக்காரர் இல்ல .உங்க தங்கச்சிக்காக தனியாளா நின்னு உழைச்சு இந்த அளவுக்கு முன்னுக்கு வந்து இருக்காரு. தன் அதீத உழைப்பால் இன்று சிறந்த வணிகனாய் வியாபார வட்டத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்.உங்க தங்கையை திருமணம் செய்த பிறகு அவர் தன் மனைவி வசதியான வீட்டில் வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக சம்பாதித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார் .அதெல்லாம் உங்களுக்கு புரியாது.காலம் காலமாய் உங்களுக்குத் தேவை பணம் மட்டுமே .அது உங்களுக்கு பரம்பரையா செய்ற வியாபாரத்தால் கிடைச்சது. தானே?”
“என்ன கார்த்திக் அப்போ நான் அப்பன் சொத்துல உட்கார்ந்து சாப்பிடறேன் சொல்றியா?”
“சேச்சே நான் அதை என் வாயில் வேற சொல்லனுமா?இதோ நிற்கிறானே உங்க பையன் பரம்பரைத் தொழில் வேண்டாம் சொல்லி கல்லூரியில் பணிபுரிகிறான் .காரணம் தன் சொந்த காலில் நிற்கனும் என்ற எண்ணம் அவ்வளவுதான்.நீங்களும் திறமைசாலியாக மேலும் மேலும் உங்கள் புத்தி கூர்மையால் வியாபாரத்தை விரிவு படுத்தி இருக்கீங்க. அந்தவிதத்தில் நீங்க சிறந்த வணிகன்ஆனால் உங்களை விடவும் சிறந்த வணிகன் விக்ரம் அங்கிள் தான் இதுக்கு மேல் உங்களுக்கு விளக்கம் கொடுக்க நான் விரும்பல.உங்க வீட்டு மருமக ஸ்ருதி தான்.இதை யாராலும் மாத்த முடியாது. உங்களுக்கு பிடிக்கலன்னா சொல்லுங்க நான் நதியா ஆன்ட்டிகிட்ட பேசிக்கிறேன்”என்றான்.
“கார்த்திக் நதியாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் என்ன செய்யணும் அதை மட்டும் சொல்லு…”
“அப்படி வாங்க வழிக்கு நாளைக்கு காலையில நான் சொல்ற இடத்துக்கு வாங்க “என்றவன் புவனேஷை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
மறுநாள் காலை கார்த்திக் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்தான்.
“என்ன கார்த்திக் ஏன் வர சொன்ன ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்டார் நதியா.
“ஆமாங்க ஆன்ட்டி முக்கியமான விஷயம் தான் ..என்ற கார்த்திக் ஸ்ருதி உங்க வீட்டுக்கு மருமகளாக வர உங்களுக்கு விருப்பம் தானே?”
“இதில் என்னப்பா உனக்கு சந்தேகம் எங்க வீட்டு மருமகள் ஸ்ருதி மட்டும்தான்”
“புவனேஷ் ஸ்ருதியை திருமணம் செய்ய விரும்பறியாடா”
“ஆமாண்டா இந்த ஜென்மத்தில்
ஸ்ருதி தான் என் மனைவி”
“அங்கிள் நீங்க சொல்லுங்க உங்க வீட்டு மருமகளா ஸ்ருதி வர உங்களுக்கு சம்மதமா.?”
நதியா,”கார்த்திக் நீ என்னப்பா ஒவ்வொருத்தரா கேட்டுட்டு இருக்க ,எங்க வீட்டு மருமக ஸ்ருதி தான் என்று நாங்க எப்பவோ முடிவு செய்தட்டோம். அப்படி இருக்கும்போது அங்கிள் மட்டும் மாத்தியா சொல்லப் போறாரு?”
கார்த்திக்,”ஆன்ட்டி ப்ளீஸ் அவசரப்படாதீங்க அவர் சொல்லட்டும்”என்றதும்ம் அனைவரும் மணிமரனை பார்க்க
“நான் சொல்றது இருக்கட்டும் ஸ்ருதியின் முடிவை கேளுங்க .”என்றார் மணிமாறன் .இவரின் எண்ணம் தெரிந்து புவனேஷ் ,கார்த்திக் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இவர்களின் செயல் அங்கிருந்த அனைவருக்கும் குழப்பத்தை கொடுத்தாலும் நதியாவிற்கு தன் கணவன் மீது சந்தேகம் வந்தது..
கார்த்திக்,”இனியா ஸ்ருதியை அழைச்சிட்டு வாடா”என்றதும் இனியா ஸ்ருதியை அழைத்து வந்தாள்.
ஸ்ருதி வெளியே வந்தவள் எதுவும் கூறாமல் நிற்க ,”ஸ்ருதி நீ சொல்லுடா .உனக்கு புவனேஷை திருமணம் செய்துக்க விருப்பமா?”என்று கேட்டான் கார்த்திக்.
அனைவரின் பார்வையும் ஸ்ருதியின் மீது பதிய புவனேஷின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ள தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“கார்த்திக் நீ என்ன பண்ற .எங்களுக்கு எதுவும் புரியல இப்போ நீ எதை நிரூபிக்க பார்க்கிற “என்று கல்பனா சத்தமிட ,
கார்த்திக்,”அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ,இது நம்ம பெண்ணோட வாழ்க்கை” எனவும் சரவணராஜன் கல்பனாவை சாந்தப்படுத்தினார்.
“அண்ணா எனக்கு யாரும் வேண்டாம் யாரையும் திருமணம் செய்ற எண்ணம் எனக்கு இல்ல. எனக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் நடக்கவே நடக்காது .அவங்கள அவங்க அப்பா சொல்ற மாதிரி நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செஞ்சுக்க சொல்லுங்க..நான் நான் அவருக்கு வேண்டாம் “என்று
அனைவரின் தலையிலும் இடியை இறக்கினாள் பெண்ணவள்.
