தாரகையின் மாயோன்

மாயோன்-26

மறுநாள் காலை ஸ்ருதி சீக்கிரமாக எழுந்தவள் கார்த்திக்கிடம் நடந்த விஷயத்தைக் கூறினாள் . 

“சரிடா ஸ்ருதி  நீங்க‌ டூருக்கு போயிட்டு வாங்க நான் இதுக்கு முடிவு எடுக்கறேன்”என்றவன் அவர்கள் ஊருக்குச் செல்ல ஏற்பாடுகளை கவனித்தான்.

அனைவரும் ஊட்டி செல்ல தயாரக தன் வீட்டுக்குச் சென்றனர்.

அபிஷேக் ,”டேய் அண்ணா இனியாவை அழைச்சிட்டுப் போறதுக்கு கொஞ்சம் பயமா இருக்குடா.நீயும் கூட வாயேன் நாங்க நான்கு பேரும் பாத்துப்போம் இருந்தாலும் நீ வந்தா நல்லா இருக்கும் னு தோணுது”

கார்த்திக்,”டேய் என்னமோ வீர வசனம் எல்லாம் பேசனீங்க அவளை பாத்துக்க நாங்க இருக்கோம் அப்படி இப்படின்னு 

இப்போ எதுக்கு என்னை கூப்பிடறீங்க. நான் அவளை உங்கிட்ட ஒப்படைக்கறேன் பத்திரமா அவளை அழைச்சுட்டுப் போய் வருவது மட்டும் தான் உன் வேலை கிளம்புடா டேய்”

அபிஷேக்,”என்னடா என்னமோ இப்படி பேசற. மனசுக்கு என்னமோ மாதிரி இருக்குன்னு கேட்டா ஓவரா பிகு பண்றான்.. ரொம்ப ஓவரா தான்  போறடி நீ .போயிட்டு வந்து உன்னை கவனிச்சுக்கறேன்”என்ற தன் தம்பியின் கோபம் கார்த்திக் ராஜனுக்கு சிரிப்பை வரவழைக்க…

“டேய் வாய மூடிட்டு போடா போய் கிளம்பு”என்றவன் இனியாவுக்கு அழைத்தவன் அவளை கண்ணன் கோவிலுக்கு கிளம்பி வரச் சொன்னான்..அவளும் எந்த கேள்வியும் கேட்காமல் அங்கே வர கார்த்திக் அவளின் முகத்தை பார்க்க அவளின் முகத்தில் பல குழப்ப ரேகைகள் வலம் வருவதை கண்டவன் கண்ணனை தரிசித்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பியவன் ஓரிடத்தில் காரை நிறுத்தியவன்,” இனியா”

என்று அழைக்க , இவளோ வேடிக்கை பார்த்துக்கொண்டே வர அவளின் தோளில் கையை வைத்தவன் “இனியா “என்று மீண்டும் அழைக்க அதில் திரும்பி அவனைப் பார்த்தவள் “சொல்லுங்க கார்த்திக்”என்றாள்.

“நான் கூப்பிடுவது கூட தெரியாமல் என்ன சிந்தனை உனக்கு.என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க ,உன் முகமே சரியில்லையே.?”

“அது அது ஒன்னும் இல்ல கார்த்திக்”

.

“ஹே இனியா  என்னாச்சுடா..நீ இப்படி இருந்தா உன்னை அனுப்பிட்டு  நான் எப்படி நிம்மதியா இருப்பேன்”

“அப்போ நீங்க என்னை எதுக்கு தனியா அனுப்பறீங்க. என் கூடவே வர வேண்டியதுதானே?”

“அம்மு  ஏற்கனவே நீங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து நான் எந்த வேலையும் கவனிக்கல டா. நீங்க ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நான் எல்லாத்தையும் முடிச்சிடுவேனாம் . நீ நல்ல பிள்ளையா சமத்தா போயிட்டு வருவியாம் சரியா.?”என்று அவளின் தாடையை பிடித்து கிள்ளி முத்தம் வைத்தான்

“இல்ல கார்த்திக் நான் போகல . இங்கேயே இருக்கேனே .? எனக்கு அம்மா ,அப்பாவையும் உங்களையும் விட்டு போறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு பா”

“செல்லம் இங்க பாரு , நீ என்ன ரொம்ப நாளா அங்கயேவா  தங்க போற ,நாலு நாள் தான் டி போயிட்டு வந்திடு மா”

“அப்போ நீங்க வர மாட்டீங்க அப்படித்தானே?உங்களுக்கு என் மேல அக்கறையே இல்ல போங்க “என்று முகத்தை திருப்பிக் கொண்டவளை தன் புறம் திருப்பியவன் அவனின் முகத்தை தன் கைகளில் ஏந்தி தன் கண்களோடு கண்கள் உறவாட விட்டவன்,

” இங்க பாரு என் கண்ணை பாத்து சொல்லு, எனக்கு உன் மேல அக்கறை கிடையாதா. ?”என்று அதீத காதலுடன் அவளை பார்த்துக் கொண்டே கேட்க

அதில் பெண்ணவள் தடுமாறினாலும் ,”அப்போ நீங்க வாங்க கார்த்திக்.” என்ற கடமையே கண்ணாக இருக்க..

“இனியா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு டா 

.புரிஞ்சுக்கோ “

“அப்படி என்ன முக்கியமான வேலை கார்த்திக்.. என்னை விட உங்களுக்கு வேலை தான் முக்கியமா?”

‘உனக்காக தானடி நான் அதை செய்ய போறேன். நீ எனக்கு ரொம்ப முக்கியம் டி .அதனால் தான் இப்போ  உன் கூட என்னால வர முடியல ‘என்று நினைத்தவன்…

அவளின் நெற்றியில் இதமாக இதழ் பதித்தவன் ,”நான் சொல்றத நீ கேட்பியா மாட்டியா கண்ணம்மா

நீ போயிட்டு வா என் இனியா ‌நல்ல பிள்ளை தானே?”

“ஓகே ஓகே ஆனாலும் கார்த்திக் உங்களுக்கு இவ்ளோ அடம் கூடாது .உங்களை கட்டிக்கிட்டு நான் என்ன அவஸ்தை பட போறேனோ  தெரியல”

“பார்றா அடியே நீ இப்படி எல்லாம் கூட பேசுவியா.. சரி வாடி தங்கம் கட்டிக்கோ “என்று இரண்டு கையையும் நீட்டி அழைத்தவனை வெட்கப்பட்டுக்கொண்டே பார்த்தவள் , “ஆசை தோசை இவரு நான் சொல்றதை கேட்க மாட்டாராம் 

நான் மட்டும் இவர் சொல்றத கேட்கணுமாம். காரை எடுங்க கார்த்திக் மணி ஆகுது”

“செல்லம் எதைக் கேட்கனுமோ  அதை மட்டும் தாண்டி கேட்பேன் உன் மாமா “என்றவன் அவளை இதமாய் அணைக்க  அதில் பெண்ணவள் சுகமாய் அடங்கியவள்,” டேய் மாமு மணி ஆகுது போகலாம்டா .அம்மா தேடுவாங்க”என்று சிணுங்கியவளை

“ஹே  அம்மு என்ன சொன்ன மாமு வா.”

” ஆமா நீங்க எனக்கு மாமு தான் என்றவள் அவனின் தாடையில் இதழ் பதிக்க இவளின்  இச்செயலை எதிர்பாராதவன் “அடியே நீ ரொம்ப தேறிட்டடி “என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து அவளை விடுவித்தவன். அவளின் முகம் பார்க்க அவளோ வெட்கப்பட்டு கீழே குனிய மீண்டும் அவளை அணைத்தவன் அவன் முகம் முழுவதும்  இதழால் ஒற்றி எடுத்தவன் அவளின் இதழோடு இதழ் வைத்து கவிபாடியவன் அவளை விடுவித்தான்.

“நீ வர வரைக்கும் இது உன்னுடைய ஞாபகமா என் உயிர்குள்ள வாசம் செய்யும் டி “என்றவன் காரை எடுத்துக் நேராக இனியா வீட்டிற்கு முன் நிறுத்தினான்.

இனியா கீழே இறங்க இவனும் அவளுடன் இறங்க,” நீங்க என்ன பண்றீங்க கார்த்திக் வீட்டுக்கு போங்க”

“ஏய் என்னடி இப்படி சொல்ற .எங்க மாமியார் வீட்டுக்கு நான் வரக்கூடாதா?”

“அச்சோ  கார்த்திக் ப்ளீஸ் நம்ம இரண்டு பேரும் ஒண்ணு போறத பார்த்தா லட்சுமி என்னை டின்னு கட்டிடுவாங்க”

“ஹே அம்மு அதெல்லாம் அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்க 

நான் பாத்துக்கறேன் வாடி “என்று அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றவன் காலிங் பெல் அடிக்க அங்கே லட்சுமி கதவைத் திறந்தவர் இவர்களிருவரும் கையோடு கைகோர்த்து நின்று இருப்பதைப் பார்த்து அதிர்ந்தவர்

..

“ஏய் இனியா என்ன டி இது.? யார் இந்த பையன் “என்று கேட்டார் லட்சுமி.

“என்னங்க அத்தை எதுக்கு இப்போ டென்ஷன் ஆகறீங்க .உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.?உங்க மருமகன் வந்திருக்கேன் .உள்ள கூப்பிட மாட்டீங்களா? ( ஆமா இவரு கைய கோர்த்துக்கிட்டு வந்து நிப்பாராம் பெத்தவங்க எதுவும் கேட்கக் கூடாதாம்)

அதில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றவர் ,”இனியா என்னடி இது இந்த தம்பி என்ன என்னமோ  சொல்றாரு”

“அச்சோ அம்மா அவர் உளறாரு..இவர் யாரும் இல்ல அபிஷேக்கோட அண்ணன் கார்த்திக் தான் போதுமா கார்த்திக் உள்ள வாங்க.” என்று சத்தமாக பேசி சமாளித்தவள் உள்ளே செல்ல இவனும் சிரித்துக்கொண்டே சென்றவன் ,”அத்தை மாமா இல்லையா?” என்று கேட்டான்.

‘அச்சோ மலை குரங்கே சும்மா இருக்கமாட்டான் போலவே… ஏற்கனவே லட்சுமி கேள்வி மேல கேள்வி கேட்கும்  இவன் வேற எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்தறானே.’ என்று நினைத்த இனியா கார்த்திக் ராஜனை முறைக்க அவனும் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரிக்க அதை கவனித்த லட்சுமிக்கு இதயமே நிற்பது போல் இருந்தது.

லட்சுமி  தன் மகளை முறைக்க இனியா தன் அம்மாவைப் பார்த்தவள் ‘அய்யோ போச்சு போச்சு நான் இன்னைக்கு செத்தேன்.என்று நினைத்தவள்,” அம்மா கார்த்திக்கு காபி எடுத்துட்டு வரீங்களா நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன்”

“ஏய் அத்தையை எதுக்கு வேல வாங்கற.போ நீ போய் காபி எடுத்துட்டு வா .அத்தை நீங்க வந்து உட்காருங்க “என்றான் கார்த்திக்.

இனியா,’ இன்னைக்கு இவன் எனக்கு சங்கு ஊதாம போகமாட்டான் போலவே’ என்று நினைத்தவள் 

“அம்மா நான் நான் உனக்கு புரியும்படி .சொல்றேன்  ப்ளீஸ்”

என்று பேசிக்கொண்டிருக்க சிவகுமார் அப்போது உள்ளே வந்தவர் …

“என்ன இனியா அம்மாகிட்ட கெஞ்சி கிட்டு இருக்க ,என்ன லட்சுமி எப்பவும் போல பிள்ளையை திட்டினியா என்றவர் அங்கே கார்த்திக்கை எதிர்பாராதவர் கார்த்திக் தம்பி நீங்களா எப்போ வந்தீங்க.”என்றார்.

“அங்கிள் வாங்க இப்பதான் வந்தேன் .எப்படி இருக்கீங்க அங்கிள்?”

” நான் நல்லா இருக்கேன் பா .

அம்மா ,அப்பா நல்லா இருக்காங்களா அபி நல்லா இருக்கானா?”

“எல்லாரும் நலமா இருக்காங்க .அங்கிள் நான் உங்க இரண்டு பேர்கிட்டயும்  ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்”

லட்சுமி,”என்ன கார்த்திக் இனியா ஏதாவது ஏடாகூடமா செஞ்சிட்டாளா பா..” என்று கேட்க அப்பாவும் ,மகளும்  அவரை முறைத்தவர்கள்,”  அம்மா உனக்கு இதே வேலையா போச்சு. எப்ப பாரு என்னை குறை சொல்லாட்டி உனக்கு தூக்கம் வராது அப்படித்தானே?”

“ஏன் லட்சுமி பிள்ளைய ஏதாவது சொல்லிட்டே இருக்க ,கொஞ்சம் அமைதியாக இரு “என்று சிவக்குமார் தன் மனைவியை திட்டினார்.

“உண்மைய சொன்னா அப்பாவுக்கும் ,பிள்ளைக்கும் ஏற்காதே .நீங்க சொல்லுங்க கார்த்திக் தம்பி இவங்க இரண்டு பேரும் எப்பவுமே இப்படித்தான்”

“அத்தை நான் இனிமேல் உங்களுக்கு தான் சப்போர்ட் கவலைப்படாதீங்க.”என்றவன் தன் மனதில் உள்ளதை கூற இனியாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!