காதல் கணம் -1

‘டும் டும் டும்’ என்று ஒலித்த மேள தாளச் சத்தங்களுக்கிடையே..

‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’

என்று கேட்ட மந்திரத்தின் பொருள் புரியாமலே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி.

யார் இந்த ஷ்ரதா என்றால்,

அவளின் இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலி
வயது: இருபத்தைந்து
படிப்பு: பி.இ
நிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்
உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம்.

யார் இந்த வீசி என்றால்,

அவனின் இயற்பெயர்: வருண் சக்கரவர்த்தி
வயது: முப்பது
படிப்பு: டிஎம்இ
நிறம்: கோதுமை நிறம்
உயரம்: ஐந்தடி பத்து அங்குலம்.

மணப்பெண்ணாய் அமர்ந்திருந்த ஷ்ரதா தன் மார்பில் புரண்ட தாலிச்சரடையே ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆசைப்பட்ட எல்லோருக்குமே நினைத்தபடி இல்வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. எத்தனை வருட போராட்டங்களுக்குப் பிறகு தனக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

என்றும் தனக்கு துணையாய் நிற்கும் முருகனை மனதில் வேண்டிக்கொண்டு திரும்பி தன்னவனின் முகம் பார்த்தாள்.

அப்பா! எவ்வளவு மாற்றங்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தவனுக்கும் இப்போது பார்ப்பவனுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்?

குழி விழும் அவன் கன்னங்கள் எங்கே? குறும்பு மின்னும் அவன் காந்தவிழிகள் எங்கே? என்று பெருத்த ஏமாற்றமாய் இருந்தது ஷ்ரதாவிற்கு.

எப்படியோ தைரியம் வந்து, “வருண் அத்தான், நீங்க வருண் அத்தான் தானா?” என்று அவனிடமே கேட்டுவிட்டாள் அசடாக.

திரும்பியவன் அவளை உஷ்ணமாய் பார்த்தானே ஒரு பார்வை. அப்பா! கண்ணகிக்கு கசின் பிரதராய் இருப்பான் போலும். அவன் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் மதுரை மீண்டுமொருமுறை தீக்கு இரையாகி இருந்திருக்கும்.

அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை. ‘இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு அத்தான் இப்படி முறைக்கிறாங்க? ஒருவேளை அவங்களுக்கு நம்மளை ஞாபகம் இல்லையோ?’ என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தவள், “எழுந்து ஹோமகுண்டத்தைச் சுத்தி வாங்கோ!” என்ற ஐயரின் தடித்த குரலில் நடப்பிற்கு வந்தாள்.

ஆஜானுபாகுவாய் எழுந்து நின்ற வீசி, தன் அங்கவஸ்திரத்தோடு ஷ்ரதாவின் மங்களப்பட்டு முடியப்பட்ட பின்னும், நகராமல் அப்படியே நின்றிருந்தான்.

வீசியின் அக்கா மதுபாலா, “ம்! நட வருண்” என்க, அவன் அவளையும் முறைத்துப் பார்த்தான்.

அவன் கோபம் என்னவோ தட்டப்பட்ட டேபிள் டென்னிஸ் பந்தாய் ஒவ்வொருவரின் மேலும் திரும்பிக் கொண்டிருந்தது.

“அத்தான், மெதுவாப் போங்க” -அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கெஞ்சத் துவங்கினாள் ஷ்ரதா.

எளிதில் விட்டால் அவன் வீசியல்லவே! தன் வேகத்தை இன்னும் கூட்டினான்.

ஒரு கட்டத்தில் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடத் தொடங்கினாள். அவள் அவன் பின்னான தனது ஓட்டம் அப்போதே துவங்கிவிட்டது என்பதை அறியவில்லை.

ஒருவழியாய் ஷ்ரதாவின் ஓட்டப்பந்தயமும் முடிவிற்கு வர, அவளின் ஓட்டத்திற்கு பரிசாய் அவள் காலில் மெட்டி அணியச் சொன்னார் ஐயர்.

மூச்சு வாங்கியபடி தனது வெண்பஞ்சு பாதத்தை அம்மிக்கல்லின் மீது தூக்கி வைத்த ஷ்ரதா, வெள்ளிமுத்துக்கள் நிறைந்த அந்த மெட்டியை தன் காலில் அவன் அணிவிக்கும் போது, “இஷ்” என்றாள்.

வீசி அவளுக்கு வலியை உண்டாக்கும் எந்த வாய்ப்பினையும் நழுவவிடுவதாய் இல்லை.

வலியில் தனது கீழுதட்டை சிறையிட்ட ஷ்ரதா அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவள் படும் வேதனையை விழிகள் பளபளக்க ரசித்தான்.

அவள் பார்வை அவனிடம் ஏன் என்று கேட்டது.

அக்கேள்விக்கும் ‘வலிக்குதா? இன்னும் வலிக்கட்டும்’ என்றே பதில் சொல்லின அவன் வலக்கை விரல்கள்.

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுத்து. போய் பெரியவா கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கோங்க” என்ற ஐயரின் வழிகாட்டலில் அவளுடன் சென்று தன் பெற்றோரின் காலில் விழுந்தான்.

“நல்லாயிருங்கப்பா” என்ற பிரகாஷ் சக்கரவர்த்தி – அபிராமி தம்பதியினர் தங்கள் கடமை முடிந்த திருப்தியில் பெருமூச்செறிந்தனர்.

அவர்களுக்கடுத்தபடியாக ஷ்ரதா தன் பெற்றோரின் காலில் விழப்போக, அவளை கைப்பிடித்து தடுத்தவன், தனது அக்கா மதுபாலாவின் காலில் சென்று விழச்சொன்னான்.

தன்னை அவன் இப்படி அனைவரின் முன்பும் அவமானப்படுத்தியதில் முகம் கன்றினார் ஷ்ரதாவின் தந்தை விஜயாதித்தன்.

ஷ்ரதாவிற்கு அவனின் இந்த மறுப்புக்கான காரணம் புரியவில்லை. ஆனாலும் அவன் தமக்கையின் காலில் சென்று விழுந்தாள்.

தன் காலில் வந்து விழுந்தவர்களை ஆசிர்வதித்துத் தூக்கிய மதுபாலா, ‘ரொம்ப தான்க்ஸ் வருண்’ என்றாள் பார்வையாலே.

அவன் தமக்கையிடமிருந்து விலகிய ஷ்ரதா மீண்டும் தன் பெற்றோரின் காலில் விழச்சென்ற போது, இம்முறை தன் பிடிவாதம் தளர்த்தி தானும் அவளோடு இணைந்து விழுந்தான் வீசி.

அவன் தன் காலில் விழுந்தது மகிழ்ச்சியாய் இருந்தது விஜயாதித்தனுக்கு.

பாவம்! அந்த மகிழ்ச்சியை ரொம்பநேரம் நீடிக்க விடாதவனாய் அவரது காலிலும் தனது கூர் மோதிரத்தால் கீறிவிட்டான் வீசி.

‘இஷ்ஷ்’ என்று தன் காலை இழுத்தவர் வீசியை முறைத்துப் பார்க்க, குறும்பு மின்ன புன்னகைத்தான் அந்த கர்வன்.

விஜயாதித்தனோ பழிவாங்கும் விதமாய் அவன் காதில் விஷத்தைக் கக்கினார்.

“என் பையன் மூலமா உன் அக்காவுக்கு ஒரு சின்ன மிரட்டல் தான் விட்டேன். பயந்துட்டல்ல வீசி? என் எதிரி ராஜமாணிக்கத்தோட சம்பந்தம் வச்சிக்க நினைச்ச; எப்படி உன் திட்டத்தை தவிடுபுடியாக்கினேன் பார்த்தியா? எல்லாரும் நீ பெரிய இவன்னு உன்னைப் பார்த்து பயப்படலாம் வீசி. ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னாடி நீ எனக்கு எப்படியோ, அப்படி தான் இப்பவும்.” என்று வன்மமாக சிரித்தார்.

சுற்றி நின்றவர்கள் அனைவரும் அவர் வீசியின் காதில் ஏதோ முணுமுணுத்து சிரிப்பதைக் கண்டு, “மாமனாரும் மருமகனும் அப்படி என்ன ரகசியம் பேசிக்கிறீங்க? அடுத்த சம்பிரதாயம் எதுவும் கவனிக்க வேண்டாமா?” எனவும்,

“கவனிக்கலாம்! கவனிக்கலாம்!” என்றே விலகினார் விஜயாதித்தன்.

வீசியோ தீவிர சிந்தனைக்குள் மூழ்கினான். அடுத்தடுத்த நிகழ்வுகளில் அது தனக்குப் பிடித்திருக்கிறதோ? இல்லையோ? இவையெல்லாம் செய்வது என் கடமை என்பது போலவே, தவறாமல் செய்தான்.

பரபரப்பான அக்கோவிலில் அனைத்து நிகழ்வுகளும் முடியப் பெற்று அனைவரும் வீடு திரும்ப மதியமானது.

வீசி முன்பே எதுவும் தடபுடலாக செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், எளிமையாகவே அனைத்தையும் செய்து முடித்திருந்தனர் அவனது குடும்பத்தினர்.

மதுரை ஜெயவிலாஸில் உள்ள அவன் வீட்டை அவர்கள் அடைந்தபோது அவ்வீட்டின் பிரம்மாண்டம் ரொம்பவே மிரட்டியது ஷ்ரதாவை. அனைத்தையும் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில் தேளாகக் கொட்டினான் வீசி.

“ம் சொல்லு! இந்த ஏழையோட குடிசை எப்படியிருக்கு? என் அக்கா மொத மொத உங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சப்போ, என்ன சொன்னாரு உங்கப்பா? உன் கனவுல கூட நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டன்னு தானே?” என்று குத்தலாகக் கேட்டான்.

ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. “நீங்க எதையுமே மறக்கலையா, அத்தான்?” என்றாள் பாவமாக.

“டோன்ட் கால் மீ தட் அத்தான், பொத்தான்.” என்றவன் மேலும் ஏதோ பேச எத்தனிக்க,

“டேய் வருண்! என்னடா சொல்லிக்கிட்டிருக்க அவ காதுல? வந்து உட்காருங்க ரெண்டுபேரும். பால் பழம் கொடுக்கணும் இல்ல?” என்ற அபிராமியின் மிரட்டலில் ஒருவழியாய்‌ அவளை விட்டான்.

துரிதமாய் பால் ஆற்றிக்கொண்டு வந்த மதுபாலா டம்ளரை முதலில் வீசியிடம் கொடுக்க, ஒரே மூச்சில் அதனை குடித்து முடித்தவன், மதுபாலா, “டேய்! டேய்! பாதியை உன் பொண்டாட்டிக்கும் கொடுக்கணும்டா” என்று பதற, சட்டென்று, “என் பொண்டாட்டிக்கு பாலெல்லாம் பிடிக்காது” என்றான்.

அவன் உண்மையை உரக்க உரைத்ததில் மலைத்து நின்றாள் ஷ்ரதா.

‘இவருக்கு எப்படி எனக்குப் பால் பிடிக்காதுன்னு தெரியும்’ என்று தன் குருவி மூளையை கசக்கிப் பிழிந்தபடியே இருந்த ஷ்ரதாவிற்கு சூரியனார் சைனிங் ஆப் செய்ததும் தெரியவில்லை. சந்திரனார் ‘ஹாய்! ஹலோ! வெல்கம்! நான் உங்க அன்பு அம்புலி’ என்று இரவு நிகழ்ச்சியைத் துவங்கியதும் தெரியவில்லை.

ஷ்ரதாவிற்கு பதினைந்து வயதாக இருந்தபோது தான் அவள் அண்ணன் அருண்மொழி ‘நான் கட்டினால் மதுபாலாவைத் தான் கட்டுவேன்’ என்று ஒற்றைக்காலில் நின்று வீசியின் அக்கா மதுபாலாவைத் திருமணம் செய்துகொண்டான்.

ஷ்ரதாவின் வீட்டிலிருந்த யாருக்குமே அப்போது அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. காரணம், மதுபாலாவிற்கு அழகிருந்த அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லாததே.

அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் முதல்நாள் திருமணமாகி வந்த தன் மருமகளிடம் குத்தலாகப்‌ பேசினார் விஜயாதித்தன்.

அப்போது இருபது வயது இளங்காளையாக இருந்த வீசிக்கு ரத்தம் கொதித்தது.

கோபத்தில், “அக்கா, வா நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று உரக்கக் கத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

அப்போது தான் தானும் முதன்முறையாக அவனைப் பார்த்தாள் ஷ்ரதா.

“அக்கா, நம்ம எப்படி நம்ம குடும்பம் எப்படின்னு இவங்களுக்கு தெரியும் தானே? அப்புறம் ஏன் உன்னை குத்திக்காட்டி பேசுறாங்களாம்?” என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தவனை,

“சும்மாயிரு வருண்!” என்று அதட்டினார் அபிராமி.

ஆனால், “ம்மா, நம்ம ஒண்ணும் இவங்க வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வரல. இவங்க தான் நம்ம வீட்டுக்குப் பொண்ணு கேட்டு வந்தாங்க. அப்போ நம்ம வீட்டு வசதி எப்படி என்னன்னு இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் தானே? அப்புறம் ஏன் இப்படி பேசுறாங்க? ஒருவேளை இவங்க இப்படி தான் ஒவ்வொரு விஷயத்துலயும் இவங்களோட பணத்திமிரை காட்டுவாங்கன்னா, நாம நம்ம அக்காவை நம்மளோடயே கூட்டிட்டுப் போயிரலாம்மா” என்று உறுதியாய் நின்றவனை, பருவ மங்கையான ஷ்ரதாவிற்கு ரொம்பவேப் பிடித்திருந்தது.

கிட்டத்தட்ட ஒரு கனவு நாயகன் போலவே அவள் கண்களுக்குத் தென்பட்டான் வீசி.

அன்று அபிராமி அவனை ஒருவாறு பேசி அடக்கி விட்டாலும், அதன் பின்னான நாட்களில் எப்போதெல்லாம் அவன் தன் தமக்கையைக் காணச் சென்றானோ, அப்போதெல்லாம் தன் தமக்கைக்கான உரிமையையும் அவ்வீட்டில் நிலைநாட்டிவிட்டேச் சென்றான்.

அவன் வந்துபோகும் சமயமெல்லாம் அவனை மறைவாக நின்று நோட்டமிடுவதே ஷ்ரதாவின் வேலை.

நாட்கள் செல்லச் செல்ல அவன் மீதான அவளது ஈர்ப்பும், ஆர்வமும் அதிகமானதே தவிர, குறையவில்லை.

ஒரு கட்டத்தில் அவன் மீதான அந்த ஈர்ப்பு காதலாக பரிணாமம் எடுக்க, அவனை நேசிக்கத் தொடங்கிவிட்டாள். ஆனால், அப்போது அதை அவனிடம் சொல்லத் துணியவில்லை அவள்.

இப்போது எப்படியோ அரும்பாடுபட்டு அவன் கரம் பற்றியிருக்க, பழசை நினைவு கூர்ந்து சுழற்றியடிக்கிறான்.

தற்போது தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் புலம்பிக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

“ஏன் அத்தான் இப்படிப் பண்றீங்க? உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தப்பு பண்ணினது அப்பா தானே? என் மேல என்ன கோபம்?” என்று தனியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவ்வேளை அவ்வறைக்குள் நுழைந்த வீசி தனியாகப் பேசிக்கொண்டிருந்தவளை நெருங்கி, “ஹேய் பியூட்டி” என்று கிசுகிசுத்தான்.

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!