“நீ தொட்ட பூக்கள் எல்லாம் முகமலர்ந்து சிரிக்கிறது என்னிடம் “
….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -25
ராஜஸ்தானியில் வணக்கம் சொன்னவனை விழி விரித்து பார்த்தவளை கண் அடித்து பேச முடியாமல் செய்து விட்டான். இரவு அவன் மேல் இருந்த கோவம் குறைந்து இருந்தது. தனக்காக தான் வந்திருக்கிறான் என்று மனம் குற்றாலச் சாரலில் நனைந்த உணர்வில் இருக்க, அப்பாவின் தொழில் விஷயமாக வந்திருக்கிறார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
அப்டினா அவர் எனக்காக மட்டும் வரலையா, தொழில் தான் முக்கியம் வந்த இடத்தில் என்னை பார்த்ததால் தான் என்னிடம் நெருங்கி வருகிறாரோ, கேள்வியும், பதிலும் அவளே கேட்டு பதில் சொல்லிக் கொண்டாள்.
இவள் யோசனையோடு நின்று கொண்டிருக்க, ஆரண்யாவின் அம்மா அவள் தோளைத் தொட்டு “என்னடி இங்கயே நின்னுட்டு இருக்க “
வர்மாவும், ரத்தோரும் பேசிக் கொண்டிருந்தனர். வர்மாவுக்கு, ரத்தோருடன் தொழில் செய்ய பிடித்திருந்தது. அவருக்கும் அவனின் பேச்சும், தொழிலில் இருந்த ஈடுபாடு பிடித்திருக்க, ராஜஸ்தானில் இருவரும் சேர்ந்து தொழில் செய்ய முடிவெடுத்தனர்.
பேசி முடித்ததும் வர்மாவிற்கு வாழ்த்துக்கள் சொல்ல, வர்மாவும் வாழ்த்துக்கள் சொன்னான். ஜோதா கையால் சமைதிட்ட உணவை ருசி பார்த்தவன். அவ்வப்போது தன்னவளையும் பார்வையால் தீண்டினான்.
விருந்து முடித்து கிளம்பும் நேரம் ஜோதா ராஜஸ்தானிய முறையில் வாழ்த்துக்களுடன் பரிசினையும் கொடுக்க மகிழ்வுடன் பெற்றுக் கொண்டான். தன் பப்புவைப் பார்த்து விட்டாலும் சொந்தம் கொண்டாட முடியாத நிலைமை, கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனை வழி அனுப்பினார்.
மறு நாள் கோவிலில் பூஜை இருப்பதால் கண்டிப்பாக கலந்து கொள்ள சொல்ல, வர்மாவும் வருவதாக சொன்னான். கண்களால் ஆரண்யாவிடம் சென்று வருகிறேன் என்று சொல்ல, அவள் சொல் பேச்சு கேட்காத விழிகளோ அவனுக்கு சம்மதம் சொன்னது.
ஜோத்பூரில் உள்ள பிரம்மாண்டமான மெஹ்ரன்கர் கோட்டையின் தெற்கு முனையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயம் சாமுண்டா மாதாஜி கோயில் ஆகும். இது துர்கா தேவியின் அவதாரமான சாமுண்டா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் ஜோத்பூர் அரச குடும்பத்தின் குலதெய்வமாக வணங்கப்படுகிறது.
இருப்பதைந்து வருடங்களாக சாமுண்டா மாதாவை தானே ஜோதா வழிபட்டு வருகிறாள். அவளின் வேண்டுதலுக்கு பலன் கிடைத்து விட்டது. அவள் யாரை பார்க்க கண்ணீருடன் தினமும் இந்த கோவிலுக்கு வருவாளோ அவனே இங்கு தேடி வந்து விட்டானே,
குர்தா, பைஜாமா, தலையில் தலைபாகை அணிந்து ராஜகுமாரன் போல் வந்த வர்மா, ஜோதா, ரத்தோர் முன் நின்றிருந்தான். ஆரண்யா லேஹாரியா சேலை அணிந்திருந்தாள்.
துர்கா தேவியின் மறு உருவாய் தெரியும் அம்மனை தரிசிக்க, ஜோதா கண்ணீருடன் அவருக்கு நன்றியை தெரிவித்ததோடு அம்மனுக்கு செய்ய வேண்டிய நேர்த்தி கடன் தீர்ப்பதற்காக முட்டியிட்டு ஜோதா அமர,
ஜோதா செய்யப் போவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். பூஜை என்று தான் வர்மாவும் முதலில் நினைத்தான். ஆனால் அங்கு பேசிகொண்டிருந்ததை கேட்ட பின்பே இது தனக்காக என்று தெரிந்தது. தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடுமே, வர்மா வேகமாய் ஜோதாவின் பக்கத்தில் நின்று,
“அத்தை வேணாம் இது செய்யாதீங்க, உங்க பப்பு வந்துட்டேன் உங்க கூட தான் இருப்பேன் “
வர்மாவின் வார்த்தைகளில் உறைந்து போனார்கள். வர்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டதா, ஜோதாவை எழுப்பினான் “அத்தை இப்படி வந்து உட்காருங்க, படிக்கட்டில் அமர வைத்து அடுத்த படியில் அமர்ந்து அவரின் காலினை பிடித்துக் கொண்டு
“போதும் அத்தை எனக்காக நீங்க அழுதது, கஷ்டப்பட்டது எல்லாமே போதும். இப்பவும் எதுக்கு உங்களை வருத்திக்குறீங்க “
அழுது விட்டான். எல்லாரையும் ஒரே சொல்லில் அடக்கி ஆள்பவன் இன்று பாசத்திற்காக அழுவது புதிது தான் என்றாலும் அவனுக்குள்ளும் பாசம் இருக்கிறது. இதோ குழந்தை தாயை காலில் பிடித்து அழுவது போல் அழுது கொண்டிருக்கும் வர்மாவை பார்த்து அங்கு இருப்பவர்களுக்கும் கண்ணீர் வந்தது.
“எப்படி உனக்கு தெரிஞ்சது, நேத்து ஏன் தெரிஞ்சிக்கிட்டும் அமைதியா இருந்த “
நான் ஆரண்யா பத்தி விசாரிக்க டெடேக்ட்டிவ் கிட்ட சொல்லி வச்சிருந்தேன். அவங்க ரிப்போர்ட் அனுப்புனாங்க, எனக்கு அதை முழுசா படிக்க நேரம் இல்லை, இப்போதைக்கு அவ எந்த ஊர்ல இருக்கா மட்டும் கேட்டேன். ஜோத்பூர் சொன்னதை மட்டும் கேட்டுட்டு கிளம்பி வந்துட்டேன். இங்க வந்த அப்புறம் தான் டீடெயில்ஸ் பார்த்தேன்.
அதுல தாத்தா பேர் இருக்கவும் தான் வீட்ல பேசி தெரிஞ்சிகிட்டேன். இங்க வந்து உங்களை பார்த்த அப்புறம் தான் எனக்கு நிறைய விஷயம் புரிஞ்சது. சொல்ல நினச்சேன் நேத்தே முடியல, கோவில்ல வந்து சொல்லலாம்னு இருந்தேன் “
பேசும் போது அவன் கண்கள் கலங்கி இருக்க,வர்மாவின் கண்ணீரை தன் ஈர முந்தானையால் துடைத்து விட்ட ஜோதா, “பப்பு அழாத டா, பாரு எல்லாரும் அழறாங்க, இப்படியா குழந்தை மாதிரி அழுவ “
ஜோதாவும் அழுது கொண்டு தான் சொன்னார். அவரின் கண்களை துடைத்து விட்டவன் “இப்போ இந்த பரிகாரம் செய்யணுமா அத்தை, வேணாமே, நான் வேணா செய்யட்டுமா “
அவனுக்காக தானே ஜோதா வேண்டிக் கொண்டது, அவனே செய்ய முடிவு செய்து கேட்டான்.
“எனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்லை, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ” வர்மாவின் கன்னங்களை இரு பக்கமும் பிடித்து, ஆசையாய் மெதுவாய் தடவி இத்தனை வருட ஏக்கத்தை, ஆசையை கொஞ்சமாய் போக்கிக் கொண்டார்.
“அத்தையும், மருமகனும் கொஞ்சிட்டு இருக்கீங்க, உங்களை பார்த்து எல்லாரும் அழுதுட்டு இருக்கோம். இது கோவில் ” ரத்தோர் சொல்லவும், அடம் பிடித்து அத்தையின் வேண்டுதலை கூடவே இருந்து அவனும் முட்டி போட்டு ஒவ்வொரு படியையும் சுத்தம் செய்து, பூக்கள் கொண்டு அலங்கரித்து பூஜை செய்து முடித்ததும் அங்கு வந்திருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
வர்மா தன் அத்தையுடனும், மாமாவுடனும் நன்றாக பேசினான், சிரித்தான், ஆரண்யாவை பார்க்கவே இல்லை என்பது அவளின் நினைப்பு, அவள் கட்டி இருந்த அடர் ரோஜா நிற லெஹாரியா புடவையும், காதின் அவனை தலை கீழாய் கவிழ்த்துபோடும் ரோஜாவில் முத்தமிட அவன் இதழ்கள் துரிதப்படுத்த, தண்ணீரை சிறிது குடித்து அவற்றிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தான்.
வர்மாவின் கைகளை பிடித்த படி ஜோத்பூர் முழுவதும் வலம் வந்தார் ஜோதா. அங்கு கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் அவனை அறிமுகம் செய்து அகமகிழ்ந்தார்.
வீட்டிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அவனுக்காக சிறு வயதில் இருந்து வாங்கி வைத்த பொருட்களை எல்லாம் காட்டினார்.
“இவ்ளோ பாசம் வச்சிருக்குற நீங்க எப்படி அத்தை எங்களை விட்டு போனீங்க, நீங்க போன அப்புறம் அத்தை எங்கன்னு கேட்டதுக்கு உங்களை பத்தி தப்பா சொன்னாங்க, இனி அவ வர மாட்டா, அவளுக்கு இங்க இருக்க பிடிக்கலையாம் அதான் போய்ட்டா, உன் மேல பாசம் இல்லை, நம்மள வேண்டாம்னு சொன்ன அவ இனிமே நமக்கும் வேண்டாம்.அவளுக்கு பணம் தான் முக்கியம். உங்க அப்பா கிட்ட இருக்குற பணத்தை விட அவன் விரும்புறவன் கிட்ட நிறைய பணம் இருக்காம் அதான் அவன் கூட போய்ட்டா, இந்த காலத்தில பணம் தான் முக்கியம் இந்த அன்பு, பாசம்லாம் முக்கியம் இல்லை.
வர்மாவின் பாட்டி அதாவது அம்மாவின் அம்மா சொன்னது அவருக்கு ஜோதாவை பிடிக்காது. தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க கேட்ட போது, ஜோதா மறுத்து விட, அதை மனதில் வஞ்சமாக வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் அதை பயன்படுத்திக் கொண்டார்.
தினமும் அதையே சொல்லி சொல்லி வர்மாவின் மனதில் பாசத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை பதியச் செய்து, வீட்டில் இருப்பவர்களிடமும் இதே எண்ணத்தை தூவி விட, கரைப்பார் கரைத்தார் கல்லும் கரைவதைப் போல, ஜோதா மேல் எல்லாருக்குமே வெறுப்பு வரும் படி செய்து விட்டார் அந்த பெரிய மனுஷி.
பாசமாக வளர்த்த அத்தை தன்னை விட்டு சென்றதும், அவரின் பேச்சிலும் சிறுவனான வர்மாவின் மென்மை குணம் மாறி வன்மையாக மாறினான். கேள்வி கேட்பது பிடிக்காமல் போனது, தன்னை யாரும் கேள்வி கேட்க கூடாது. தான் செய்வது தான் சரி, அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றாக படித்தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் அவன் விருப்பப் பட்ட படிப்பு படிக்க முடிந்தது. தன்னை எல்லாரும் பெருமையாக பார்ப்பது அவனுக்கு அவன் மீதே கர்வம் கூடியது.
தன்னை யாரும் இனி உதாசினப் படுத்தவோ, விட்டு பிரியவோ முடிவெடுக்க கூடாது. தனக்கு மட்டுமே உரிமை வேண்டும். யார் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதையும் முடிவெடுக்க ஆரம்பித்தான். அவனிடம் இருந்து நாம் கேள்விகளை மட்டுமே பெற முடியும் அவன் நினைக்கும் போது தான் பதில் கிடைக்கும்.
அவனை சுற்றி இருந்த சூழலை சொல்ல , ஜோதாவிற்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
“நான் அப்டி இல்லை பப்பு. நான் அப்போ காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். அண்ணன் அப்போ தான் அப்பாவோட பிசினஸ் பார்க்க போனாரு, அங்க ஒரு பார்ட்டில தான் இவரை பார்த்தேன். அவரும் என்னை பார்த்தாரு, பேசல ஆனால் ரெண்டு பேருக்கும் பார்த்ததும் பிடிச்சிருந்தது.
நம்ம வீட்ல ரெண்டாவது முறை பார்த்தேன்.ரொம்ப அன்பானவர். என்னை ஒரு பிரச்சனைல இருந்து காப்பாத்துனாரு, அதுல தான் இவரை விரும்ப ஆரம்பிச்சேன்.
அவரே வந்து என்கிட்ட காதலை சொன்னாரு. நான் அமைதியா தான் இருந்தேன். அந்த மௌனத்தை சம்மதமா எடுத்துக்கிட்டாரு, வீட்ல வந்து பேசுனாரு. வீட்ல சம்மதம் சொல்லல. இவரும் ஊருக்கு கிளம்பி போய்ட்டாரு.
அண்ணியோட அம்மா வீட்டுக்கு வந்தாங்க, அவங்க பையனுக்கு என்னை பொண்ணு கேட்டாங்க, எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லைனு சொன்னேன். அதை அவங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்க.
அப்பாவுக்கு என் மேல இன்னும் கோவம் அதிகமாகிடுச்சு, அவரோட பிரண்ட் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டோம் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு வற்புறுத்தினாங்க, அவன் ஒரு பொறுக்கி, அவனுக்கு நிறைய பேர் கூட பழக்கம் இருக்கு.
எல்லாம் தெரிஞ்சும் கோவத்துல அப்பா தப்பான முடிவு எடுத்துட்டாரு, அண்ணனும் சொன்னாரு ஆனால் அப்பா நினைச்சதை முடிச்சி காட்றேன்னு நின்னாரு.
இது தெரிஞ்சி தான் ரத்தோர் என்கிட்ட வந்து பேசுனாரு, உங்க வீட்ல தப்பான முடிவு எடுக்குறாங்க, நீ பேசு, வேற யார்னா நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ சொல்லிட்டு இருக்கும் போது தான் அண்ணியோட அம்மா இதை தப்பா புரிஞ்சிகிட்டு பெரிய பிரச்சனை பண்ணிட்டாங்க
ரத்தோர் தான் இங்க உன்னை விட்டுட்டு நான் நிம்மதியா இருக்க முடியாதுன்னு கூட்டிட்டு வந்துட்டாரு. ஜோதா சொல்லவும், வர்மா, ரத்தோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
தனது கைபேசியில் அப்பாவிற்கு அழைத்து அத்தையிடம் கொடுக்க, அதை வாங்கி காதில் வைத்தவர் அண்ணன் ராஜா சொன்னதில் அதிர்ச்சியானார்…
என்ன சொல்லி இருப்பாரு, அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
