நலம் தானா ஊதாப்பூவே!!🪻 – 27

“கொஞ்சித் தீர்த்த நேரங்கள் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றன இன்று “
 

 

….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
 

 

பாகம் -27
 

 

தினமும் இரவுகள் வந்தாலும் திருமணம் ஆனதும் வரும் முதல் இரவு வாழ்வின் மறக்க முடியாத இரவு, அதுவும் காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு இது இன்னும் மறக்க முடியாதது மட்டும் இன்றி அதை எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்று அவளுக்கு இப்போது என்ன தோன்றும் என்று அவனும், அவருடன் இருக்கும் இந்த இரவை எப்படி கழிப்பது, ஏதேதோ சாக்குகள் சொல்லி காக்க வைத்து தவிக்க வைத்து இன்று சிக்கிக் கொண்டோமே என்று ஆசையும், தவிப்பும் கலந்த உணர்வில் அவள் அவனையே நினைத்திருப்பாள்.
 

 

வர்மாவுக்கும், ஆரண்யாவுக்கும் இப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. வீட்டில் இரவு சடங்கினைப் பற்றி சொன்னதும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் இருவரும் வெட்கத்தில் பதில் பேசாது இருப்பதாக நினைத்துக் கொண்டது இரு குடும்பங்களும்.
 

 

முக்கிய ஒருவரைப் பார்த்து விட்டு வருவதாக சொல்லி வீட்டை விட்டு வெளியே வந்தான். விஜய் அந்த நேரத்தில் வெளியே இருந்ததால் வர்மா சென்றது அவனுக்கு தெரியாது. வீட்டிற்கு வந்தவன் வர்மா எங்கே என்று கேட்க, முக்கியமான ஒருவரைப் பார்த்து விட்டு வருவதாக வர்மா சொன்னதை சொல்லவும்,
 

 

‘இந்த நேரத்துல பார்க்குற அளவுக்கு யார் அந்த முக்கியமானவங்க ‘ இவனுக்கு இவர்களின் திருமணப் பேச்சிலிருந்தே மனதில் சந்தேகம் இருந்தது. இருவருக்கும் இடையே இருந்த ஆழமான, அழகான, அழுத்தமான காதல் இவனுக்கு தெரியுமே, ஆனால் இருவரும் எதையோ மறைக்கிறார்கள் என்று மனதில் தோன்றியது,
 

 

இருவரில் ஒருவர் சொல்லுவார்கள் மற்றவரை பார்த்துக் கொள்ளலாம் என்று யோசித்து தான் வைத்திருந்தான். திருமணம் நடக்கும் வரையிலும் இருவரும் எதையும் சொல்லவில்லை. இப்போது அவனுக்கு புரிந்து விட்டது இருவருக்கும் பிரச்சனை என்பது, வர்மாவிற்கு அழைத்தான் 
 

 

“சொல்லுங்க மாப்பிள்ளை ” வர்மாவின் கிண்டல் பேச்சில் அவன் சரி இல்லை என்றே தெரிந்தது. அது வர்மாவின் குரல் போன்றே இல்லை வேறு ஒருவரின் குரல் போல தான் கேட்டது.
 

 

“எங்க மச்சான் இருக்க, சொல்லு நான் வரேன் ” அவன் எங்கு இருப்பான் என்று விஜய்க்கு தெரியாது அவனிடமே கேட்டு விடலாம் என்று தான் கேட்டான்.
 

 

“எதுக்கு என் நிம்மதியை கெடுக்கவா ” வெடுக்கென வந்த பதிலில் அதிர்ச்சி அடைந்த விஜய் 
 

 

“என்ன மச்சான் இப்டி சொல்ற, நீ எங்க இருக்க சொல்லு நான் வெளிய தான் டா இருக்கேன். உனக்கு ஏதாவது வாங்கணுமா கேட்க தான் வீட்டுக்கு போன் பண்ணேன். நீ வெளிய இருக்கேனு தெரிஞ்சது அதான் வரலாம்னு பார்த்தேன் ” 
 

 

“முடியல மச்சான், இத்தனை நாளா உன்கிட்ட கூட சொல்லல ” வர்மா இது போல் பேசியதே இல்லை, அவன் வார்த்தைகளில், பேசும் விதத்திலே புரிகிறது அவன் மனம் படும் வேதனை.
 

 

“நான் வரேன் டா எங்க இருக்க சொல்லு ப்ளீஸ் ” 
 

 

நண்பனின் வார்த்தைகளில் அவன் மனமும் அவனிடம் சொல்லி விட வேண்டும் என்று தோன்ற,அவன் இருக்கும் இடத்தை சொல்ல, வர்மா சொன்னதை நம்ப முடியாமல் தான் அங்கு சென்றான்.
 

 

வர்மாவை முதல் முறை பாரில் பார்க்கிறான். குளிரூட்டப்பட்ட அறையில் வட்ட மேசைகளில் ஆங்காங்கே மது பிரியர்கள் அமர்ந்து தங்களுக்கு தேவையான மதுவினை குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தனர்.
 

 

வர்மா எங்கே இருக்கிறான் விஜய் பார்த்துக் கொண்டே வர தனித்து ஓரமாக இருந்த இருக்கையில் வாயில் மதுக் குவளையை மொத்தமாக சரித்து விட்டு வைத்தவனை நோக்கி சென்றான்.
 

 

அவன் பக்கத்தில் நின்றவன் “என்ன மச்சான் பரம்பரை குடிகாரன் மாதிரி குடிக்குற, நீ இது வரைக்கும் குடிச்சு நான் பார்த்ததே இல்லையே, இப்போ என்னடான்னா இப்டி சாய்ச்சுக்கிற, இதை என்னால நம்பவே முடியலை ” அதிர்ச்சியுடன் பார்த்து பேசிக் கொண்டிருப்பவனை தலை நிமிர்ந்து கொஞ்சம் சரிவாய் பார்த்தவன் சிரித்தான்.
 

 

“மாப்ள வந்துட்டியா, அவ தான் வந்துட்டாளோ நினைச்சிட்டேன் டா, அவளுக்குதான் என்னை பிடிக்கலையே, ஏதேதோ சொல்றா டா, கடுப்பாகுது, இதுக்கு தான் இந்த காதல், கல்யாணம் எதுவுமே வேண்டாம்னு இருந்தேன்.
 

 

அவளாவே வந்தா, ஒனக்கு ஒன்னு தெரியுமா மச்சான் ” பார்வையால் எதிரில் நிற்பவரை பேசாமல் நிறுத்தச் செய்திடும் வர்மா, பார்வை தடுமாறி பேச்சில் குழைந்து இருப்பதை பார்க்கவே வர்மாவிற்கு சிரிப்பு தான் வந்தது. அவன் உள்ளத்தில் ஒளிந்துள்ள உணர்வுகளை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது எப்படி சிரிப்பது,சிரித்தால் கோவப்பட்டு எதையும் சொல்லாமல் விட்டாள் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியாதே. சிரிப்பை கட்டுப்படுத்துக் கொண்டவன் 
 

 

“மச்சான் இரு டா நின்னுட்டே இருக்குறது கால் வலிக்குது, நான் முதல்ல உட்காருறேன் ” இருக்கை இல்லாததால் அங்கிருப்பவரிடம் கேட்டு எடுத்து வர விஜய் சென்றான்.
 

 

இருக்கையை போட்டு அமர்ந்தவன் “இப்போ சொல்லு மச்சான் ஆரண்யா தங்கச்சி என்ன சொல்லுச்சு, எப்போ நடந்தது இது “

 

வர்மா மீண்டும் மதுவை ஆர்டர் கொடுக்க, பதறிய விஜய் “முதல்ல சொல்லு மச்சான் அப்புறம் குடிக்கலாம். உனக்கு ஆரண்யா கூட சந்தோஷமா வாழனுமா இல்லையா சொல்லு ” அவனுக்கு தெரியுமே இவன் மனதில் அவள் இருக்கிறாள் என்பது, அதையே வார்த்தைகளில் பயன்படுத்துகிறான் அவன் மனதை மாற்ற,
 

 

“அவ தான் டா எல்லாம் எனக்கு, அவளுக்கு தான் அது புரியல “
 

 

“இதை அவ கிட்ட சொல்லி இருக்கியா “
 

 

“இல்லை ” தலை அசைத்தான் வர்மா 
 

 

“அப்புறம் எப்படி டா அவளுக்கு உன் காதல் புரியும். அங்க என்ன நடந்தது சொல்லு “
 

 

வர்மாவுக்கு ஜோதா தன் அத்தை என்று சொன்ன பிறகு ஆரண்யாவுடன் பேச வேண்டும் என்று வீட்டில் சொல்லி விட்டு அவளுடன் வெளியே சென்றான். அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அழைத்து சென்றான்.
 

 

நீல நகரம் ராஜஸ்தானின் முக்கிய இடங்களில் ஒன்று ஜோத்பூரின் அருகே இருக்கும் அழகிய நில நிற வீடுகளின் அணிவகுப்பு மலையில் இருந்து பார்க்க அந்த நீல நிறம் கண்களுக்கு குளிர்ச்சியையும் ராஜபுத்திர கட்டிட கலையையும் பழைமையான கலாச்சாரத்தையும் நம் கண் முன் காட்டி நம்மை வியக்க வைக்கும்.
 

 

அவன் காதலை எப்படி சொல்வது என்று வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்க, அவளோ தன் மனதில் உள்ள வலியினால் அவனை குத்தி கிழிக்க துடித்துக் கொண்டிருந்தாள்.
 

 

பாலைவன கூடாரத்தில் அங்கு இருந்த சூழலில் இசையில் அவளுக்குள் இருந்த காதல் வெளி வந்து அவன் தனக்காக தான் வந்திருக்கிறான் என்று மகிழ்வில் இருந்தவள் நேற்று கோவிலில் நடந்த நிகழ்வில் சுக்கு நூறாய் உடைந்து போனாள்.
 

 

அத்தை மகள் என்று தெரிந்த பின் தானே வந்திருக்கிறான். இது எனக்கான காதல் இல்லையே, உறவு என்று தெரிந்து கொண்ட பின் வரும் பாசம் எனக்கு எதற்கு… நான் யார் என்று தெரியாமலே தான் கொண்ட காதலை மட்டுமே புரிந்துக் கொண்டு அவன் வந்திருப்பதாய் நினைத்தவளுக்கு உறவு என்பதால் வரும் பாசம் அவள் மனது ஏற்க மறுத்தது.
 

 

அவனுடன் இருக்கும் தருணங்களில் அவனை ரசித்தாள். அவனின் அருகில் தன் மனம் அவனையே சுற்றி வருவதை இதமாக உணர்ந்தாள். வேலையும் முடியும் நேரம் இன்னும் இப்படியே நீடிக்காதா என்று அவனுக்காக உருகி, அவனிடம் வெளிப்படுத்தாமல் தனக்குள்ளே மறைத்து கொண்டிருந்தது இதற்க்கு என்றுமே அவனிடம் மதிப்பு இல்லையா

வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் என்று சொன்ன போது கூட அவள் மனம் அதை ஏற்கவில்லை. அவன் தனக்கானவன் என்றே காத்திருந்தாள். அவளிடம் அவன் எல்லை மீறும் போது ஏன் தடுக்காமல் இருந்தோம் எல்லாவற்றையும் யோசித்தவளுக்கு அவளின் இதயமே அவளுக்கு பாரமாயாகியது போல் உணர்ந்தாள்.

நீல நிற வீடுகளைப் பார்த்து பரவசப்பட்டவன் தன் நீல நிறத்தழகியை பார்த்தான். இருவருமே நீல நிறத்தில் தான் உடை அணிந்திருந்தனர். சங்கு பூ போன்று மனதை கொள்ளையிட்டு கொண்டிருக்கும் தன்னவளை நெருங்கியவன் அவளை அவன் புறம் நோக்கி திருப்ப,

மையிட்ட விழிகளில் திரண்ட கண்ணீர் அருவி போல் அவள் கண்ணத்தில் வழிந்தோடியது.

“ஆரு என்ன ஆச்சு, ஏன் அழுவுற ” இது மகிழ்வாக இருக்க வேண்டிய தருணம், ஏன் இந்த நேரத்தில் அழ வேண்டும் அவனுக்கு எதுவும் புரியவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு புரியவில்லை அவள் அழுகைக்கு காரணமே அவன் தானே.

“உங்க மனசுல நான் இல்லாதப்போ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க, உங்க கூட இருக்கும் போது என் மேல படாத உங்க பார்வை, என் மனசுல நீங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சும் வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னீங்க,

உங்களுக்கு உடம்பு சரி இல்லாம இருந்தப்போ கையெழுத்து வாங்குற சாக்குல உங்களை பார்க்க தான் வந்தேன் அங்க நீங்க என்ன பண்ணீங்க ” அவளின் இந்த கோவ தாக்குதலில் அவன் அதிர்ச்சியில் உறைந்தான். மென்மையாய் பேசுபவள், அதிர்ந்து ஒரு வார்த்தையும் பேசாதவள் இன்று கோவத்தில் கொந்தளிக்கிறாளே,

அன்றைய நாள் அவனுக்கும் நினைவில் வந்தது. அவள் மீதான உரிமை, அவள் எனக்கானவள் என்ற எண்ணத்தில் தான் அன்று நடந்து கொண்டான். திருமணத்திற்கு சம்மதம் சொன்னது அவனை எந்த அளவிலும் பாதிக்கவில்லை, அது ஒரு நாடகம் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

வர்மா செய்த தவறு அவளிடம் காதலை சொல்லாதது, திருமணத்தை பற்றியும் அது நாடகம் என்பதையும் சொல்லாமல் இருந்து விட்டான். அவன் மனதில் அவன் ஆரு மட்டுமே அதை அவள் உணர்ந்திருப்பாள் என்று தான் நினைத்திருந்தான். இப்போது எப்படி அவளிடம் சொல்வது சொன்னால் நம்பி விடுவாளா, எதற்கும் அஞ்சாதவன் மனதில் பயம் இவள் என்னை விட்டு சென்று விடுவாளா, அவனுக்கு பக்குவமாய் பேச தெரியாது, முதலில் அவள் மனதில் இருப்பதை சொல்லட்டும் பிறகு தன் மனதில் நினைத்து இருந்ததை சொல்லலாம் என்று நினைத்தவன் அவள் பேசுவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்களை தேடி வந்ததால என்னை நீங்க வேற மாதிரி நினைச்சிடீங்கல்ல, அதனால தானே எனக்கு முத்தம் கொடுத்தீங்க, இதுலயே தெரியுது உங்க மனசுல என்னை எந்த இடத்துல வச்சிருக்கீங்கன்னு, என்னை நினச்சா அருவருப்பா இருக்கு “

தரையில் மடங்கி அழுதவளிடம் சென்று ‘நீ தான் டி எப்பவும் எனக்கானவா, என்னை கவர்ந்தவளும், நான் ரசித்தவளும், என் முதல் முத்தமும் உனக்காக மட்டுமே ‘ கத்தி சொல்ல வேண்டும் என்று மனது கடிந்து கொண்டாலும் கல் போல் இறுகி நின்றான் எதுவும் செய்ய முடியாமல்…

வர்மாவின் இந்த நிலை மாறுமா, ஆரண்யா புரிந்து கொள்வாளா இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page