அரங்கம் திருமண மாளிகை…
பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்யும், பிரம்மாண்டத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த மாளிகை…
ஆடம்பரத்தின் செழுமையே பறைசாற்றியது… பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கட்டப்பட்ட மாளிகையது…
மகிழிசை – தேவமித்ரன் திருமண விழா
திருவிழா போலக் கோலகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்தத் திருமணம்…
உண்மையில் திருமணமா, இல்லை திருவிழாவா என அனைவரும் வியக்கும் வகையில்தான் நடந்து கொண்டிருந்தது அந்தத் திருமணம்…
ஆம், நுழைவுவாயில் முதல் வரவேற்பறை, மணவறை, பந்தி பரிமாறும் இடம், பார்க்கிங் இடம், பார்வையாளர்கள் இடம் என அனைத்தும் கண்ணைக் கவரும் வகையில், அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தன…
பெரிய பெரிய தலைவர்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள், உறவினர்கள் என அனைவரும் ராஜ மரியாதையோடு வரவேற்கப்பட்டு, அவர்களுக்கெனத் தனி இருக்கையில் அமரும் வரையில், பணத்தின் செழுமை நிரம்பி வழிந்தது…
புகைப்படக் கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கெனத் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது…
மணமேடையில் ஆண்மைக்கு இலக்கணமாகக் கம்பீரமாக வீற்றிருந்தான் தேவமித்ரன்.
ஐயர் சொல்லும் மந்திரத்தை திருப்பிச் சொல்லியவாறு அமர்ந்திருந்தவனின் கண்கள், அடிக்கடி மணமகள் அறையைத் தழுவ மறந்ததே இல்லை…
உண்மையில் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் அலை அடித்துக்கொண்டிருந்தது…
அவள் ஒருத்தியைத் தவிர…
ஆம், கண்களில் நிற்காமல் வழியும் கண்ணீரோடு, இயலாமையின் சாயலை முகத்தில் பிரதிபலித்தவாறு, சிலைப் போல அமர்ந்திருந்தாள் இசை.
ஆம், மணமகள் அறையில் அமர்ந்திருந்தவளை சமாளிக்கும் வழி தெரியாமல், அனைவரும் விழி பிதுங்கி நின்றிருந்த அந்த நேரத்தில், ஐயரின் சத்தம் அவர்களின் செவியை நிறைத்தது…
“நாளி ஆகுது… பொண்ண அழைச்சுண்டு வாங்க!”
அவர் அப்படி சொல்லியதும், அங்கிருந்த அனைவரும் அவளைத் தயக்கத்தோடு நோக்கினர்…
அவள் மெல்லிய செப்பி இதழ்களைத் திறந்து சொன்னாள்… அழுத்தமாக… அதே நேரத்தில், இதுதான் என் இறுதி முடிவு என்பதுபோல்…
“இந்த கல்யாணம் நடக்காது… நான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்க மாட்டேன்!”
அவளின் அந்த வார்த்தைகளில், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்…
அவளின் அன்னையோ,
“என்ன விளையாடறியா நீ? நீ வேணும்னா நடத்துறதுக்கும், நீ வேணாம்னா உடனே நிறுத்துறதுக்கும் இது ஒன்னும் பொம்மை கல்யாணம் இல்லை. ஒழுங்கா கிளம்பி மணமேடைக்கு வா!” என்றவர், அடித்துவிடும் மனநிலையிலேயே நின்றிருந்தார்.
‘என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் இந்தப் பெண்…?’ என்ற ஆதங்கம், அவர் மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
“அம்மா… நீங்க என்னை அடிச்சாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என்னால ஆதி வராம கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்றவளின் பிடிவாதம், அவரையும் மௌனமாக்கியது.
“ஆதிக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குடா… நான் கண்டிப்பா ரிசெப்ஷன் முடியறதுக்குள்ள வந்துருவேன். நீங்க எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி கல்யாணத்தை நடத்துங்கனு சொன்னான்…” என்று ஒருவர் பொறுமையாகவும் நிதானமாகவும் எடுத்துச் சொல்ல,
“சத்யாம்மா… என்ன தப்பா எடுத்துக்காதீங்க. உங்க புள்ள வந்தா நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குறேன்… இல்லைனா என்னால முடியாது…” என்றவள், தன் முடிவில் இருந்து சற்றும் மாறுவதாகத் தெரியவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் முன்… இவர்களின் குடும்பத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டு வருவோம்…
ஆதியின் தாத்தா நாராயணச் சேதுபதியும், இசையின் தாத்தா ரத்னவேல் பாண்டியனும்… பால்யகாலச் சிநேகிதர்கள்…
அவர்களைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, அவர்களின் மகன்களான வீரநாராயணனும் சங்கரவேல் பாண்டியனும், அவர்களைப் போலவே நட்பு பாராட்டினர்…
அந்த நட்பு அடுத்த தலைமுறையையும் பிணைத்துக் கொண்டது.
நல்ல காரியமோ கெட்ட காரியமோ… அந்த இரண்டு வீடுகளிலும், ஒரு குடும்பத்தை மட்டும் தனியாகப் பார்ப்பது கடினமான ஒன்று.
அதேபோல, ஒருவர் வீட்டின் விசேஷத்தில், இன்னொரு வீட்டின் ஆதிக்கமும் தலைமையும் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது…
ஆம், இதோ இப்போது கூட… இசையின் திருமணத்தில், வீரநாராயணன்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தார்.
மணமகளின் ஏற்பாடுகளிலிருந்து இன்னும் சில முக்கிய விஷயங்கள் வரை, அவரின் மனைவியான சத்தியவதியின் கண்காணிப்பில்தான் நடந்து கொண்டிருந்தது…
சொந்த மகள் திருமணத்தில், எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக வலம் வந்து கொண்டிருந்தனர் சங்கரவேல் பாண்டியனும், அவரின் மனைவி முத்தமிழும்.
ஒரே ஒரு மகளின் திருமணம் என்ற கவலையே, அவர்களின் முகத்தில் தென்படவில்லை…
அந்தக் கவலையெல்லாம்…. வீரநாராயணனுக்கும் சத்தியவதிக்கும் மட்டுமே…
இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள்களான நந்தினிதேவி, வெண்மதி….என அந்தக் குடும்பமே பறந்து பறந்து வேலை செய்து கொண்டிருக்க…
இத்தனைக்கும், ஐந்து வருடம் காதலித்த ஒருவரை அவள் கரம் பிடிக்கப் போகும் இந்தத் தருணத்தில்…
அவன் ஒருவனின் வருகை இல்லாததால், இந்தக் கல்யாணத்தை நிறுத்த சொல்லி நிற்பது, அவர்களுக்கும் ஆயாசமாகத்தான் இருந்தது…
அதே நேரம், அவர்களின் நட்பின் ஆழத்தை எண்ணி, அவர்களால் வியக்காமலும் இருக்க முடியவில்லை…
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்…
காக்கி உடையில், கம்பீரமாக உள் நுழைந்தான் — ஆதித்த கரிகாலன்.
“அக்கா… ஆதி அண்ணா வந்துட்டாங்க!”
அவனின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஓடிச்சென்று அவளிடம் சொல்லியவுடன்…
அடுத்த நிமிடம்…கண்களில் கண்ணீரோடு, அவன் முன்பு வந்து நின்றாள் அவள்…
ஆனால், அவனோ… இவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. அவனின் முகம் கடுமையாக இறுகி இருந்தது.
இப்படி ஒரு முகத்தை அவனிடம் பார்த்ததே இல்லாதவள், உள்ளுக்குள் உடைந்து நின்றாள்…
அந்த நேரத்தில், மணமேடையில் இருந்த தேவமித்ரனும், அவள் அழுவதைக் கண்டு மெல்ல எழுந்து வந்து அவளின் முன் நின்றான்…
“இசை… என்னம்மா? என்னாச்சு? ஏன் அழறே?” என்று அவன் கேட்க, அவள் பதில் சொல்லும் முன்…
ஒலித்தது ஒரு குரல்…
அங்கும் இங்கும் ஓடி வேலை செய்துக் கொண்டிருந்த வீரநாராயணன், மணமகன் மேடையிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து பதறி, அவர்களின் முன் வந்து நின்றார்.
“ஆதி! என்ன இது? இதுதான் நீ கல்யாணத்துக்கு வர நேரமா? சரி வந்தது தான் வந்த… இந்தக் காக்கி யூனிபார்ம் எல்லாம் கழட்டி வச்சிட்டு வந்திருக்கலாம்ல!
அட்லீஸ்ட் உனக்குத் தான் நேரம் இல்லன்னா, உன் கூட வேலை பார்க்கிறவங்களையாவது டிரஸ் மாத்திட்டு வர சொல்லி இருக்கலாம்ல!” என்று அவர் சொன்னபோது, அவரை அழுத்தமாகப் பார்த்தவன்…
“அப்பா… ஒரு நிமிஷம் இருங்க.” என்றவன், நேராக தேவமித்ரனை நோக்கித் திரும்பி…
“யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மிஸ்டர்.தேவமித்ரன் (You are under arrest, Mr. தேவமித்ரன்.)” என்று சொன்னவனின் கையில் இருந்த விலங்கு, அவன் முகத்திற்கு நேராக நீட்டப்பட்டது.
அந்த ஒரு கணம்… அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அலை பரவியது…
சிறிது நேரத்திற்குப் பிறகு…
அங்கே ஒரு போர்க்களமே நடந்து முடிந்திருக்க, தேவமித்ரன் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அமர்த்தப்பட்டிருந்தான்.
அவனின் பெற்றோரும் உறவினர்களும் சண்டையிட்டு, கோபத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றிருத்தனர்.
சங்கரவேல் பாண்டியனும், முத்தமிழும்…தலையில் கை வைத்து, அங்கேயே அமர்ந்து விட..…
அடுத்து என்ன நடக்கும்…?
அவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை.
நாளை பத்திரிக்கையில்… பெரிய எழுத்தில் தேவமித்ரனின் கைது செய்தியோடு, அவர்களின் மகளின் திருமணம் நின்ற செய்தியும் சேர்ந்து வெளியாகும்…
அதற்குப் பிறகு… தன் மகளை யார் திருமணம் செய்வார்கள்…? அந்தக் கேள்வி, அவர்களின் மனதில் பூதாகரமாக எழுந்தது.
ஆனால்…
அதையும் விட… அவனின் கைது செய்தியை கேட்டதிலிருந்து, திக்பிரமை பிடித்தவள் போல நின்றிருந்த அவளின் நிலைதான்… அவர்களை இன்னும் அதிகமாக பயமுறுத்தியது…
அவனைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றியவன், இவர்களிடம் பேசிவிட்டுச் செல்லலாம் என உள்ளே வர முயன்ற அந்த நேரத்தில்…
அவனின் செவியைத் தீண்டியது சில குரல்கள்…
“நான்தான் சொன்னேன்ல… நீதான் நம்பல. பாரு இப்போ…அவளோட கல்யாணம் நின்னுப்போச்சு. அவ ஒரு ராசி கெட்டவ… அவளோட பேர் இந்த வயசுல எல்லாரு முன்னாடியும் கலங்கப் படணும்னு எழுதியிருக்கு. அதை யார் நினைத்தாலும் மாத்த முடியாது…”
“ஆமாடி… நீ சொன்னப்போ கூட நானும் நம்பல. ஆனா இப்போ பாரு…எல்லாரு முன்னாடியும் அவ கல்யாணம் நின்னது மட்டும் இல்லாம, அவனையும் போலீஸ் பிடிச்சிட்டு போயிருச்சு. நாளைக்குக் காலைல இதுதான் ஹெட்லைன் நியூஸ்… அதுக்கப்புறம் அந்த பொண்ண யாரு கல்யாணம் பண்ணிக்குவா…?”
“ஷட் அப்!” கோபத்தில் அந்த இடமே அதிர கத்தியவன்…
“இன்னொரு தடவை என் இசை பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசுனீங்க… நடக்குறதே வேற.” என்று கைநீட்டி எச்சரித்தவன், வேகமாக உள்ளே சென்றான்.
அவனை உடனே சூழ்ந்துகொண்டனர் அவன் அன்னையும் தந்தையும்…
அவர்களைப் பார்த்தவன்… “அம்மா… இசை, அப்புறம் அங்கிள், ஆண்ட்டி… எல்லாரையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்துறேன். அப்புறமா என்ன நடந்துச்சுனு எஸ்ப்ளெயின் பண்றேன்…”
என்றவன், சிலை போல உறைந்து நின்றவளின் அருகில் சென்று, அவளின் கையை இறுக்கமாகப் பிடித்தான்.
“பயப்படாத இசை… நான் கொஞ்ச நேரத்துல வந்துறேன்.” என்றவன் அங்கிருந்து கிளம்ப தயாரான அந்த நேரத்தில்…
அவனை வழிமறித்து நின்றார் வீரநாராயணன்… இவனோ, அவரைப் புரியாமல் குழப்பத்துடன் பார்க்க…
“போய் மணமேடையில உட்காரு ஆதி… இப்போ உனக்கும் இசைக்கும் கல்யாணம்.” என்றிட, அவன் கண்கள் அகல விரிந்தன…
“வாட்! என்ன விளையாடுறீங்களா? அப்பா… இசையும் நானும் நல்ல பிரண்ட்ஸ். ஒருவாட்டி ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னா, யாரும் அவளை திரும்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு இங்க யாராவது சொல்றத கேட்டு, நீங்களும் தப்பான முடிவு எடுக்காதீங்க. நம்ம இசைக்கு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு.” என்றவனைப் பார்த்தவர் மீண்டும் ஏதோ பேச வர…
அதற்குள்… அவள் பேசினாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ, ஆதி…” காதில் விழுந்த அந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், அதிர்ச்சியில் அவளைப் பார்த்தான் அவன்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ, ஆதி… ப்ளீஸ்…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…
ஒரு நிமிடம்…
கண்களை இறுக்க மூடி திறந்தவன்…
அடுத்த நொடி…
அவளை இழுத்துச் சென்று மணமேடையில் நிறுத்தினான்.
கீழே விழுந்து கிடந்த தாலியை எடுத்தவன்… ஒரு கணம்… தயங்கி நின்றவன்… அவள் கண்களை நோக்கினான்…
கண்ணீரால் நிரம்பி இருந்த அந்த விழிகள்…அவனை ஏதோ கேட்பதுபோல்… ஏதோ வேண்டுவதுபோல்…அவனுக்கு தோன்ற
ஒரு நொடி…
கண்களை இறுக்கமாக மூடியவன், மனதுக்குள் ஏதோ சொல்லிக் கொண்டான்…
அடுத்த கணம்… அதை அவளின் கழுத்தில் கட்டிவிட்டவன்.
அதே வேகத்தில்… பத்திரிகையாளர்களின் முன் அவளை நிறுத்தினான்…
“நாளைக்குப் பத்திரிகையில யார் யாருக்கு இவளைப் பத்தி எழுதணுமோ, தாராளமா எழுதுங்க…
ஆனா பேர் மட்டும் மிஸ்ஸாக கூடாது…
மகிழிசை ஆதித்த கரிகாலன்… மறந்துராதீங்க.” என்றவன்…
அவ்வளவுதான் என்பதுபோல், அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்…
தொடரும்…
