யாரும் எதிர்பாராத விதமாக, அவர்களின் திருமணம் நடந்து முடிந்திட… அவளைப் பத்திரிக்கையாளர்களின் முன்பு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியவன்…
“நாளைக்குப் பத்திரிகையில யார் யாருக்கு இவளைப் பத்தி எழுதணுமோ, தாராளமா எழுதுங்க…
ஆனா, பேர் மட்டும் மிஸ்ஸாக கூடாது…
மகிழிசை ஆதித்த கரிகாலன்… மறந்துராதீங்க.”
அதுவரை தைரியமாக, அங்கு நடந்ததை எப்படி எல்லாம் திரித்து எழுதலாம் என்று யோசித்திருந்தவர்களின் எண்ணம், அந்த நொடியே தவிடுபொடியாகியது…
ஆம்…அதன்பிறகும் அவளைப் பற்றி எழுத, அவர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் அல்லவே…
ஏற்கனவே, அவனின் நெருங்கிய தோழி அவள் என்ற எண்ணமே, அங்கிருந்த சிலருக்கு ஒரு தயக்கத்தை விதைத்திருந்தது…
இப்போது… அவனின் மனைவி என்றானபின்… அந்த எண்ணமே அடியோடு அழிந்தது.
அவன் அவர்களை மிரட்டி, எடுத்த வீடியோ, புகைப்படங்களை அழிக்கச் சொல்லவே இல்லை…
ஆனால்.… அவன் பேசிய அந்த இரண்டு வரிகளே, அதைச் செய்யத் தூண்டுகோலாக இருந்தது.
ஆம், அவனைப் பற்றித் தெரிந்த எவருக்கும், அவனை எதிர்க்கும் எண்ணம் துளியும் வராது…
அதுவும், அவன் வாய்மொழியாக ஏதாவது சொன்னால்… அது எதிரில் இருப்பவர்களுக்கு அவன் தரும் எச்சரிக்கை என்பதைக் அனைவரும் அறிவர்…
பத்திரிக்கையாளர்களிடம் பேசியவன், நேராக அவளை அழைத்துச் சென்றது… அவர்களின் பெற்றோரிடம்தான்…
ஆம்… அவர்களின் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றவன்…
“அங்கிள், ஆன்ட்டி… நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. இசையைப் பற்றி இனிமே எந்த பத்திரிகையிலும் வராது…
அப்படியே வந்தாலும்… அது எங்களோட கல்யாண நியூஸா மட்டும் தான் இருக்கும்.” என்றவன், தனது அம்மாவை நோக்கித் திரும்பி…
“அம்மா… இங்க இருக்குற எல்லாரையும் கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு போயிடுங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்துரேன்…” என்றவனை… தீப்பார்வை பார்த்தார் அவர்.
அந்த பார்வையின் காரணம் புரிந்தவன், பெருமூச்சு விட்டான்…
“அம்மா… உங்களோட ஆதங்கம் எனக்கு நல்லாவே புரியுது. எந்த சடங்கும் செய்யாம, நான் நேரடியாக தாலி மட்டும் கட்டினதுல இங்க இருக்குற யாருக்கும் விருப்பம் இல்லன்னும்…
முக்கியமா, உங்களுக்கு இதுல துளியும் உடன்பாடு இல்லன்னும் எனக்கு தெரியும்…
ஆனா… நீங்களும் சில விஷயங்களை புரிஞ்சுக்கணும்…
அதை என்னால இங்க எல்லாரு முன்னாடியும் சொல்ல முடியாது… வீட்டுல எல்லாத்தையும் பேசிக்கலாம்… ப்ளீஸ் மா…” என்றவன், அங்கிருந்து கிளம்ப தயாரானான்…
“நில்லு ஆதி! நீ போறது எவ்வளவு முக்கியமான வேலையா கூட இருக்கட்டும்…
ஆனா, உன் பொண்டாட்டியை வீட்டுல கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போ!” என்றவரை ஆயாசமாக பார்த்தவன், பேச வாயைத் திறக்க…
அதற்குள், “ஆதி! அம்மா சொல்றதுதான் சரி. இசையை கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டுட்டுப் போ!” என்றவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை அவனால்…
ஆம்… ஏற்கனவே, இசையை திருமணம் செய்யச் சொன்ன அவரின் சொல்லை அவன் தவிர்த்ததற்கே, அவனுக்குள் பல மடங்கு குற்ற உணர்ச்சி…
அப்படி இருக்க… இந்த முறையும் அவரை எதிர்த்து பேச, அவனுக்கு மனம் வரவில்லை…
ஆம், சிறுவயதில் இருந்து தந்தை சொல்லை தட்டாத பிள்ளை.… தவறியது… இசையினால்தான்…
“சரி பா… தேவாவை கரெக்டாக ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகச் சொல்லி மட்டும் சொல்லிட்டு வந்துரேன்…” என்றவன் சொல்லச் செல்லத் திரும்பிய அந்த நேரத்தில்… அவனின் விழிகளில் விழுந்தனர் அந்த இருவர்…
ஏதோ பார்க்கக்கூடாததைப் பார்த்தது போல முகப்பாவனையுடன், அதிர்ச்சியை மறைக்கவே முடியாமல் நின்று கொண்டிருந்தனர். சிந்தனைச் செல்வனும்… ஷாதனாவும்…
அவர்களின் முகத்தைப் பார்த்தவுடனே, காரணம் புரிந்தவனுக்கு… அவனை அறியாமலே ஒரு மென்னகை தோன்றியது…
மெல்ல புன்னகைத்தவனாக, அவர்களின் முன் சென்று நின்று…“செல்வா…” என்று அழைத்தான்…
அதிர்ச்சியில் உறைந்து நின்றவர்களுக்கு அது சென்று சேராததால்… அடுத்த நொடி, அவன் தோளைத் தட்டி உலுக்கினான்…
அவனின் உலுக்கலால் சுயநினைவுக்கு திரும்பியவன்…
இவன் முகத்தை அருகில் பார்த்ததும், மீண்டும் அதிர்ச்சியில் மூழ்கப்போவதை உணர்ந்தாலும், முயன்று தன்னைச் சமன் செய்துக் கொண்டவன்…
“சார்!” என்று வேகமாக சல்யூட் அடித்தான்…
அவனின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றுக் கொண்டவன்… கண் ஜாடையிலே அவன் அருகில் நின்றவளை காட்ட… குழம்பியவன் மெல்ல திரும்பிப் பார்த்தான்…
அதே அதிர்ச்சி மாறாத முகப்பாவனையோடு நின்றுக் கொண்டிருந்தாள் அவள்…
தலையில் அடித்துக் கொண்டவன், மெல்ல அவளை உலுக்கினான்.… “ஷாதனா!”
“கண் மூடும் வேளையிலும் என் காதல் கனவா, பார்த்திபா?!” அசையாமல் சிலைபோல் நின்றிருந்தவள், இப்படிச் சொல்ல…
‘ஆரம்பிச்சுட்டா…’ மனதுக்குள் நினைத்தாலும்,
“என்ன?!” வெளியே புரியாதபடி நடித்தான் அவன்.
“என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு!” எதிரில் நின்றிருந்தவனுக்குள்ளும் அதே கேள்வி தோன்ற, அவனும் அவளை விளங்காத பார்வையோடு பார்த்தான்.
“கண் முன்னே தெரிகின்ற காட்சிகள் அனைத்தும் கனவா, பார்த்திபா?!”
திரும்பிக் கேட்டவள்…திருத்திக் கேட்டாலும் அதே மாடுலேஷனில் மீண்டும் கேட்டவளை…
வெட்டவா? குத்தவா? என்ற ரீதியில் பார்த்தவன்….பக்கத்தில் நின்றவனை நோக்கிப் பார்வையை செலுத்த…
அவனோ… அதே குழப்பமான முகப்பாவனையோடே நின்றிருந்தான்…
“ஏன் மௌனம் சாதிக்கிறாய்? பதில் சொல், பார்த்திபா!…” என்றவளை ஆயாசமாகப் பார்த்தவன், அவனிடம் திரும்ப…
“என்னாச்சு செல்வா? அவங்களுக்கு? ஏன் இவ்வளவு மிஸ்டீரியஸா நடந்துக்குறாங்க?” என்றான்.
அவனின் குரலில் இருந்த கடுமை… இவனுக்கு நன்றாகவே புரிந்தது.
“ம்ம்… எல்லாம் உங்களால தான்!” மனதில் நினைத்தவனால், அதை வாய்விட்டு சொல்ல முடியவில்லை…
“சா…ர், ஒரு நிமிஷம் சார்!” என்றவன் அவளைப் பிடித்து உலுக்கினான்.
“ஷாதனா!” சத்தமான அதட்டல் குரலில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள்…
“ஏன்டா தற்குரி! எதுக்குடா இப்படிப் பயமுறுத்துற?!” என்று நெஞ்சின் மீது கை வைத்து பெருமூச்சு விட்டாள்.
‘நான் உன்னை பயமுறுத்துறனா?… அது சரி…எதுத்தாப்புல இருக்கிறவர பார்த்தா தான் தெரியும் எது உண்மையான பயமுறுத்தல்னு…’ என்று மனதில் நினைத்தவன், மெதுவாக முன்னே நின்றவனை நோக்கிப் பார்த்தான்.
“நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீ எங்கடா பாக்குற?” என்றவள், அவன் பார்வை சென்ற திசையில் திரும்பிப் பார்த்தவுடன்.…உண்மையிலேயே பயத்தின் உச்சியில் வெலவெலத்துப் போனாள்.
“சா…ர்!” உதடுகள் தடுமாற, கைகளை மேலே உயர்த்திச் சல்யூட் அடித்தவள்…
மனதிலோ, “அய்யய்யோ… நான் இவ்வளவு நேரம் பேசினது எல்லாம் கேட்டிருப்பாரோ…? கேட்டிருந்தா… இப்ப எப்படி சமாளிக்கறது?” என்று நினைத்தவள், அவனை நோக்கி அசட்டுப் புன்னகை சிந்தினாள்…
அவளை முற்றிலும் அலட்சியம் செய்தவன்.…
அவர்களிடம் பொதுவாக, “தேவாவை கரெக்டாக ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போயிருங்க. நான் ஒரு ஒன் ஹவர்ல அங்க வந்தறேன். கவனமாக இருங்க… இதுல எந்தத் தப்பும் நடக்கக் கூடாது. புரிஞ்சுதா? போங்க.” என்றான்.
“எஸ் சார்!” மறுபடியும் சல்யூட் அடித்தவர்கள்… அங்கிருந்து கிளம்பினர்…
_ _ _ _ _ _ _ _ _ _ _
நெடுஞ்சாலையில் அந்தக் கார் சீறிப்பாய…
அதன் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தனர்…. மணமக்கள் இருவரும்…
அந்த வீட்டின் டிரைவரால் வாகனம் செலுத்தப்பட, முன் இருக்கையில் முகம் முழுவதும் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் வெண்மதி…
உண்மையில், அவள் அண்ணனுக்குத் திருமணம் ஆனதில் அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி… அதுவும், அவன் இசையையே திருமணம் செய்து கொண்டதில்… அவளுக்குள் அதீத சந்தோஷம்…
அது, அவள் முகத்திலேயே பிரதிபலிக்க… காதில் இயர்போன் வைத்து, வெளியில் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அவள்…
அவன் இடையில் இறங்கி சென்று விடக்கூடாது என்பதற்காக, அவனின் பெற்றோர் செய்த முன்னேற்பாடுதான் அவள்…
ஆம்.…மணமக்கள் இருவரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்ப்பது தான், அவளின் தற்போதைய கடமை…
அந்தக் காரின் பின்பக்க இருக்கையில்…
ஆதியோ, தொலைபேசியில் எதையோ தீவிரமாகப் பேசிக் கொண்டே இருந்தான்… அவன் பேச்சிலேயே தெரிந்தது… அது வேலை தொடர்பானதென்று…
அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவளோ… அந்த இருக்கையில் அமர்ந்தவாக்கிலே, தலை சாய்த்து கண்களை மூடியிருந்தாள்…
ஆனால்… அவள் கருவிழியின் அசைவிலேயே தெரிந்தது… அவள் உறங்கவில்லை என்று…
ஒரே நாளில், அவள் வாழ்க்கையே தலைகீழாய் மாறி இருந்தது…
அப்படி இருக்க… இப்போது அவள் உறங்கினால் தான் அதிசயம்…முகம் முழுவதும் அளவில்லா சோகத்தைத் தாங்கி, இறுகிப் போயிருந்தது…
பேசி முடித்தவன், தொலைபேசியை அணைத்துவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்… அவன் மனதிலோ… பாரம் கூடிக் கொண்டே போனது…
‘சாரி இசை… இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல…
ஆனா, இதை சரி பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு… கூடிய சீக்கிரமே எல்லாத்தையும் சரி பண்ணுறேன்…’ என்று மனதில் நினைத்தவன்…
வீடு வந்ததும், அவளோடு சேர்ந்து கீழே இறங்கினான்… முன் இருக்கையில் இருந்தவளும் அவர்களோடு இறங்க முயன்றாள்…
அந்த நேரத்தில்… அவள் கையை யாரோ வேகமாகப் பிடித்து இழுத்தனர்…
அதிர்ச்சியில் கத்தப் போனவளின் வாயை அவசரமாக மூடினான்… அந்த டிரைவர்.
“ஏய்… நான்தான்… கத்தாதே!”என்று கூறியவுடன், அவளின் கண்கள் அகல விரிந்தன…
“அகிலா?!” என்றவள் அதிர்ச்சியோடு பார்க்க,
அவனோ… புன்னகை மாறாத முகத்தோடு, அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…
“அகி…லா… நீ… நீ இங்க என்ன பண்ற? அதுவும் டிரைவர் காஸ்ட்யூம்ல?” என்றவள் பதிலை எதிர்பார்த்து நிற்க…
“ம்ம்… கபடி விளையாடுறேன்.” என்றவனின் பதில்…
“ச்ச்… விளையாடாத அகிலா! ஒழுங்கா பதில் சொல்லு!” என்றவள் கடுப்புடன் அவனை பார்த்தாள்.
“நான் ஏண்டி விளையாட போறேன்? டிரைவர் காஸ்ட்யூம்ல என்ன பண்ணுவாங்க… டிரைவர் வேலைதான் பாக்குறேன்.”
“வாட்?! அகிலா… ஆர் யூ மேட்?!” என்றவள் அதிர்ச்சியாக பார்க்க…
“எஸ்… ஐ ஆம் மேட் ஆன் யூ.” என்று சின்ன சிரிப்போடு சொன்னவனின் பதிலில்…
“ச்ச்… கடுப்பேத்தாத அகிலா! ஒழுங்கா உண்மையைச் சொல்லு!” என்றாள்.
“ச்ச்… நான் ஏண்டி உன்ன கடுப்பேத்த போறேன்? சத்தியமா…இங்க டிரைவர் வேலைதான் பாக்குறேன்.” என்றவனை வினோதமாகப் பார்த்தவள்..
“ஆனா… எதுக்காக?” என்று கேட்க…
‘இவளுக்காகன்னு சொன்னா எப்படியும் தையதக்கானு குதிப்பா… எதுக்கு வம்பு…’ என்று மனதில் நினைத்தவன்…
“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு, அகிலா!” என்றவள் கத்த…
“இருடி! கத்தாத! திடுதிப்புன்னு கேட்டா யோசிக்க வேணாம்!” என்றவன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க…
“என்ன?” என்றவள் குழப்பமாக அவனை பார்த்தாள்..
“ம்ம்… அது… ஹான்… கைச் செலவுக்குக் காசு இல்லையா… அதான் டெம்பரரியாக இங்க வேலைக்கு சேர்ந்தேன்…” என்றவன் திருத்தித் திருத்தி பேச…
“எது? த கிரேட் பிசினஸ்மேன் ராஜ குணசேகரன் பிள்ளையோட மகன்கிட்ட கைச் செலவுக்குக் காசு இல்ல? அதனால டிரைவர் வேலை பாக்குறாரு? இதை நான் நம்பணுமா?!” என்றவளின் கேலியில்…
“அதான் தெரிஞ்சுதில்ல…த கிரேட் பிசினஸ்மேனோட பிள்ளைன்னு! அப்படின்னா உனக்கே புரியணும் நான் ஏன் இங்க வந்திருக்கன்னு…” என்றவனின் பதிலில்…
அவள் தீப்பார்வை ஒன்று வீச…
“சரி சரி… முறைக்காத… இப்போ என்ன… நான் எதுக்கு இங்க வந்துருக்கேன்னு தெரிஞ்சா போதும் இல்ல? ஆமா… உனக்காகத்தான்… போதுமா?” என்றான்.
“பைத்தியமா அகிலா… எவ்வளவு நாளா இங்க வேலை பாக்குற?”
“ஜஸ்ட் ஒன் வீக்…” என்றவன் அலட்சியமாக தோளை குலுக்க…
“என்ன? அப்போ…?”
“ஆமா… உன்ன இங்க விட்டுட்டு போன அடுத்த நாளே ஜாயின் பண்ணிட்டேன்.” என்றவனின் பதிலில்…
“உஃப்… நீ சத்தியமா பைத்தியம் தான் அகிலா…” என்றவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள்… அவள் செவியைத் தீண்டியது… அவள் தமக்கையின் குரல்…
மணமக்கள் இருவரும் இறங்கிவிட… கையில் ஆரத்தித் தட்டுடன் அவர்களின் முன்னே வந்து நின்றார் அவனின் அன்னை…
ஆம்… மணமக்களை வரவேற்க, அவர்களுக்கு முன்னே காத்திருந்தது மொத்த குடும்பமும்…
ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தவர்… “எங்கடா மதி? உங்க கூடத்தான வந்தா?” என்று கேட்க…
திரும்பிப் பார்த்தவன், அவள் இல்லாததை கவனித்து…“தெரியலம்மா… ஒரு வேலை கார்ல இருந்து இறங்கவே இல்லப்போல…” என்றான்.
“இந்தப் பொண்ணுக்கு இதே வேலையா போச்சு! எப்ப பாரு காருக்குள்ளே தூங்கிக்கிட்டு! ஏய்! நந்தினி…போய் அவளை எழுப்பிக் கூட்டிட்டு வா!” என்றார்.
ஏற்கனவே சடங்குகள் எப்போது முடியும் என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு… இந்த வேலை மேலும் கடுப்பை கிளப்ப… எரிச்சலோடு காரை நோக்கி நடந்தாள்…
“ஏய்! மதி! என்னடி காருக்குள்ளே தூங்குறியா?!”
காரின் கண்ணாடியை உடைப்பது போலத் தட்ட.… உள்ளே இருந்தவள் அதிர்ச்சியில் உறைந்து… பிதற்றத் தொடங்கினாள்…
“அய்யய்யோ! போச்சி… போச்சி… இவ மட்டும் நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்தா அவ்வளவுதான்… என் கதை முடிஞ்சுச்சு!
இப்போ நான் கீழே இறங்கும்போது… நீ உள்ள இருக்கிறத அவ பார்த்துட்டா போதும்… வேற வெனையே வேணாம்!
இனிமே என்னை என் வீட்டுல இருந்து மட்டும் இல்ல… என் ரூம்ல இருந்துகூட வெளியே வர விட மாட்டாங்க… போச்சி… அவ்வளவுதான் போச்சி…” என்றவள் புலம்ப…
தலையில் அடித்துக் கொண்டவன்…அவசரமாகக் கதவை சத்தமில்லாமல்… மெதுவாகத் திறந்து… குனிந்து, மெல்ல நடந்து… காரின் பின்புறம் சென்று நின்றான்…
அவன் நின்ற நேரத்திலேயே… வெளியில் கத்திக் கொண்டிருந்தவள், எரிச்சலோடு டிரைவரைத் தேடி பின்னே வந்தாள்…
அவனைப் பார்த்தவள்… “ஏய்! டிரைவர்… காரோட அந்தப் பக்க கதவை திறந்துவிடு!” என்றாள்.
தலையசைத்தவன்… அந்தப் பக்க கதவைத் திறந்துவிட…
உள்ளே.… நன்றாகத் தூங்குவது போல நடித்துக் கொண்டு கிடந்தாள் அவள்…
பிறகு… நாலைந்து வசைச் சொற்களைச் சொல்லி.…அவளை எழுப்பிக் கூட்டிச்சென்றதெல்லாம்…அது வேறு கதை…
இங்கே இவ்வாறு இருக்க… அந்த வீட்டின் முன் கூடத்தில் அமர்ந்திருந்த சிந்தனைச் செல்வனின் மண்டையில்.… எங்கிருந்தோ வந்த படி ஒன்று விழ… உயிர் போகும் பயத்தில் அலறினான் அவன்…
ஆமாம்… அது எங்கிருந்து வந்தது…?
தொடரும்…
