நினைவு -19

குண்டூசி விழுந்தால் கூட பேரிடியாக கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது அந்த அறை…

பார்ப்பதற்கு ஏதோ ஒரு மீட்டிங் ஹால் போல இருந்த அந்த அறையில், வட்ட வடிவ நீளமான மேசையை சுற்றி நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர் அவர்கள்…

அவர்கள் முகத்தில் இருந்தது பயமா… குழப்பமா… என்று பிரித்தறிய முடியாமல் இருந்தது.

மூச்சு விடக்கூட மறந்து போனவர்கள்போல் உறைந்து அமர்ந்திருந்தவர்களின் உடைதான் சொல்லிக்கொண்டிருந்தது… அவர்கள் அனைவரும் காவலர்கள் என்று…

அவர்கள் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்த ஒரே கேள்வி… “யார்… என்ன தவறு செய்திருப்பார்கள்…?” என்பதே…

மூளைக்குள் இதுவரை அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயமும் நிலைப்படமாய் ஓடிக்கொண்டிருக்க…

“நாம் ஏதேனும் தவறு செய்து விட்டோமா…?” என்று தங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்…

“டக்… டக்… டக்…” சூழல் அதிர, நடந்து வந்தவனின் காலடிச் சத்தம் அந்த அறையையே விழுங்குவது போல இருந்தது…

அனைவரின் மனதிலும் பரபரப்பு வந்து ஒட்டிக்கொள்ள, இதயம் அதிவேகத்தில் அலறித் துடித்தது அங்கிருந்த ஒவ்வொருவருக்கும்…

ஆம்… இதற்கெல்லாம் காரணம் அவன் ஒருவனே…

காலையிலேயே கால் செய்து, சரியாக பத்து மணிக்கு மீட்டிங்குக்கு அனைவரும் தயாராக இருக்கும்படி சொன்னதிலிருந்தே வந்த பதட்டம்தான் இது…

ஆம்… அவன் “மீட்டிங்” என்றாலே… அதில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது என்பதே அர்த்தம்…

அதிலும்… இப்படி அவசரமாக அனைவரையும் கூப்பிட்டிருந்தான் என்றால்… அது சாதாரண விஷயம் இல்லை என்பதையும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர்…

“சார்!..” அங்கிருந்த அனைவரின் குரலும் ஒருசேர ஒலிக்க, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவர்களை தலையசைத்து அமரும்படி சைகை செய்தான்…

“செல்வா!” என்றவன் கம்பீரக் குரலில் அழைக்க…

அவனோ தலை அசைத்தவாறே கையில் இருந்த லேப்டாப்பில் வேகமாக ஏதோ தட்டினான்…

அடுத்த நொடியில்… அவர்களின் முன்னே இருந்த பெரிய திரையில், காட்சிகளாக மாறி மாறி தோன்றின… 

ஆறு இளைஞர்களின் புகைப்படங்கள்…

“ஷாதனா!” என்று அழைத்தவன், அவனுக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொள்ள… அழைப்பின் குரலில் எழுந்து நின்றவள் பேசத் தொடங்கினாள்..

“ஜனவரி 26, 2024, அன்னைக்குதான் இந்த கேஸோட மையப் புள்ளி ஆரம்பிச்சது…”

அவள் சொன்ன அந்த ஒரு வரி… அறையில் இருந்த ஒவ்வொருவரையும் கடந்த காலத்துக்குள் இழுத்துச் சென்றது…

ஜனவரி 26, 2024

“வாட் த ஹெல்!..”

நாற்காலியில் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து, பின்னங்காலால் அமர்ந்திருந்த சேரை உதைக்க, அது சுவற்றில் மோதித் அதே வேகத்தில் கீழே விழுந்தது…

கையில் இருந்த காகிதத்தை சுருட்டி, எதிரில் இருந்தவனின் முகத்தில் வீசியவன், கோபம் கொப்பளிக்க நின்றிருந்தான்…

அவன் கோபத்தின் வெப்பம் அந்த அறையையே சுட்டெரிப்பதுபோல இருக்க, அங்கு நின்றிருந்த அனைவரும் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கினர்.

காலையிலேயே தீர்க்க வேண்டிய கேஸ்களை பிரித்து, இதை இவர் இவர் செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டுக் கொண்டிருந்தவனின் பேருக்கு ஒரு மொட்டை கடிதாசி வந்தது.

அதைப் படித்தவனுக்கு கோபம் உச்சத்தைத் தொட்டிருந்தது…

அந்தக் கடிதத்தில் இருந்ததாவது…

“ஹலோ மிஸ்டர் ஆதித்த கரிகாலன்… எனக்கு சுத்தி வளைச்சி பேசற பழக்கம் இல்ல… நான் டைரக்டா விஷயத்துக்கு வரேன்.

இந்த சிட்டியில் ஒரு கிரைம் கூட நடக்கக் கூடாது கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கியாமே… அதனால உனக்கு ஒரு சாலஞ்ச்…

இன்னையிலிருந்து கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு, அதாவது சரியா பிப்ரவரி 18, 2025… ஒரு கொலை நடக்கப் போகுது. முடிஞ்சா அதை தடுத்து நிறுத்துப் பாக்கலாம்…”

அந்தக் கடிதத்தின் கடைசி வரி அவனை கொலைவெறி ஏற்ற, பற்களை நறநறவென கடித்தவாறு நின்றிருந்தான்…

“செல்வா… இந்த லெட்டர் எந்த ஊர்ல இருந்து வந்துருக்கு… அதோட முழு டீடெயில்ஸும் எனக்கு உடனடியா வேணும்…”

என்று கட்டளையிட்டவன்… வெளியில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.

ஆனால்… அவன் மனதுக்குள்… 

“நீ என்னடா எனக்கு டைம் குடுக்குறது? நான் சொல்றேன்… இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன். அதுக்கப்புறம்… உனக்கு இருக்கு.” என்று நினைத்தவன், தாடை இறுக, விரல்களை மெதுவாக முறுக்கிக் கொண்டான்.

ஆனால்… அவனுக்கு தெரியவில்லை அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று.…

பிப்ரவரி 18, 2025

ஆள் அரவம் இல்லாத அடர்ந்த காட்டின் மையப் பகுதி அது…

வானளவு உயர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில்… ஒரு பகுதி மட்டும் தடுப்பு கயிறுகளால் சுற்றி முடக்கப்பட்டிருந்தது.

அந்த வரம்புக்குள்…

சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த கொலையின் சாட்சியாய்… ஒரு மனிதன் கிடந்த இடத்தை நினைவூட்டும் வகையில், வெள்ளை சால்க் கோடுகள் வரையப்பட்டிருந்தன.

அந்த கோடுகளுக்குள்… உறைந்து காய்ந்திருந்த ரத்தம்… அங்கே நடந்ததை இன்னும் சொல்லிக்கொண்டிருந்தது.

அந்த இடத்தின் மையத்தில்… முகத்தில் மாஸ்க் அணிந்து, கைகளில் கிளவுஸுடன், கண்களில் ஒரு வித கூர்மையுடன் அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் ஆதி.

கால்களை மடக்கி அமர்ந்தபடி… அந்த இடத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் தவறவிடாமல் பார்வையிட்டவன், எந்தவொரு சின்ன தடயத்தையும் விட்டு செல்லும் மனமில்லை அவனுக்கு.

ஆம்… ஒரு சிறிய தடயம் கூட இந்தக் கொலையின் பதிலை சொல்லிவிடும் என்பதால், அவன் ஒவ்வொரு இடத்தையும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தான்.

முழுவதும் ஆராய்ந்து முடித்தவன், அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான். கைகளில் இருந்த கிளவுஸையும், முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கையும் கழற்றிவிட்டு, வேகமாக தனது வாகனத்தை நோக்கிச் சென்றான்.

“செல்வா…” என்று அழைத்துக்கொண்டே அந்த வாகனத்தில் ஏறிக்கொள்ள.. அவனும் ஏற, அந்த வாகனம் வேகமாக புறப்பட்டது.

கண்களை மூடி அந்த இருக்கையில் சாய்ந்திருந்தவனின் புருவம் சுருங்கியிருந்ததிலேயே தெரிந்தது… அவன் ஏதோ ஒன்றை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் என்று.

அவனுக்கு அருகில் அமர்ந்து, வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவன் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

“சார்!” என்று அவன் அழைக்க…

“ம்ம்ம்…” என்று மட்டும் சொன்னான் அவன். ஆனால் அதிலே, என்ன விஷயம் சொல்லு என்ற கட்டளை இருந்தது.

“சார், ஒரு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு மொட்டை கடுதாசில இருந்த அதே தேதியில தான் இந்த கொலையும் நடந்திருக்கு… அப்போ அவன் தான் இந்த கொலையை பண்ணானா சார்?”

அவனின் கேள்வியில் கண்களைத் திறந்தவன் சொன்னான்…

“எனக்கும் அதே சந்தேகம்தான் செல்வா… ஆனா வெறும் ஒரு கடுதாசிய மட்டும் வச்சிக்கிட்டு நாம அவன்தான்னு கன்பார்ம் பண்ண முடியாது.

ஏன்னா, விளையாட்டுக்கு கூட அந்த கடுதாசியை யாராவது நமக்கு அனுப்பி வச்சிருக்கலாம். அதே தேதியில் கொலை நடந்ததால அவனை சந்தேகப்பட்டு, உண்மையான குற்றவாளியை விட்டுடக்கூடாது.

எல்லா கோணத்திலிருந்தும் இந்த கேஸை விசாரிச்சாதான், உண்மையில என்ன நடந்துச்சுனு கண்டு பிடிக்க முடியும்.

முதல்ல ஃபொரென்சிக் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.” என்று சொன்னவன், உடல் கூறாய்வு கூடத்திற்கு முன்பு வண்டியை நிறுத்த… அதிலிருந்து இறங்கினான்.

உடற்கூறு ஆய்வு அறை

“சொல்லுங்க டாக்டர்…” என்றவன், மருத்துவர் முகத்தை நேராகப் பார்த்தான்.

அவரின் முகமோ ஏதோ ஒரு உணர்வில் ஸ்தம்பித்தது போல இருந்தது…

கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை மெதுவாக சரி செய்தவர், ஒரு பெருமூச்சை வெளியிட்டு,

“இது மாதிரி ஒரு போஸ்ட்மோர்டெம்… என் கேரியர்ல இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல சார்!…” என்றவர் ஒரு நொடி அமைதியாக இருந்தார்.

பின்பு…

“அவன் முகத்துல ஆசிட்ட ஊத்தி சிதைச்சு… அவனோட பிறப்புறுப்பை வெட்டி எடுத்திருக்காங்க…

அவனோட ரெண்டு கைகள்லயும் கத்தியால வெட்டி எழுதப்பட்ட மாதிரி எண்கள் இருக்கு… இடது கைல 2W னு… வலது கைல 77 னு போட்ருக்கு… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியல.

அதே நேரம் அவன் வயிற்றோட இடது பக்கத்துல கிழிச்சு… அதுல ஒரு பென் டிரைவ் உள்ள வச்சி… அதை நூலால தைச்சு இருக்காங்க.” என்றவர், அந்த பென் டிரைவை அவனின் கையில் வைத்தார்.

“இது எல்லாமே… அவன் உயிரோட இருந்தப்பவே நடந்திருக்குது…

அதுவும் அவன்… கடைசி துளி உயிர் இருக்குற வரைக்கும்… தாங்க முடியாத வலியில அலறி… கதறி… உயிரை விட்டிருக்கான்.” என்றவரின் குரலில் அந்த அறை முழுக்க ஒரு கனமான நிசப்தம் இறங்கியது.

சொன்னவர் அங்கிருந்து கிளம்பிய சில நொடிகளில், அவர்களும் காவல் நிலையத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.”

காவல் நிலையத்துக்குள்…

கையில் இருந்த பென் டிரைவை மெதுவாக கணினியில் இணைத்தான் அவன்.

திரையில் “2W” என்ற பெயருடன் முதலில் ஒரு போல்டர் தோன்றியது.

கொலை செய்யப்பட்டவனின் கையிலும் இதே எழுத்துதான் இருந்தது என்று யோசித்தவன், அடுத்த நொடியே அதை திறந்தான்…

அந்த போல்டரில் இரண்டு பெண்களின் புகைப்படங்களும், அதோடு ஒரு வீடியோ பதிவும் இருந்தது…

அந்த வீடியோவில் அந்த இரு பெண்களும் கடத்தப்பட்டு இருந்தனர்…

அதை பார்த்தவர்களின் முகங்கள் குழப்பத்தில் சுருங்கின…

கொல்லப்பட்டவனுக்கும் அவன் கைகளில் இருந்த எழுத்துக்கும், இப்போது இந்த பெண்களின் கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற குழப்பம் அவர்களை சூழ்ந்து கொண்டது.

அதேநேரம் அவர்களின் பார்வை அதில் இருந்த இன்னொரு போல்டருக்கு நகர்ந்தது.

“77”

அதையும் திறந்ததும்…

அந்த கொலை செய்யப்பட்ட ஆணின் முழு விவரங்களும் அடங்கிய கோப்பும்… அதோடு அவன் எப்படி கொல்லப்பட்டான் என்பதற்கான வீடியோ பதிவும் அதில் இருந்தது.

கடைசியாக இருந்த அந்த ஒரே ஒரு போல்டரும எதுவும் பெயர் இல்லாமல் வெறும் ஒரு வாய்ஸ் நோட் மட்டுமே இருக்க…

அதை திறந்ததும்…

அந்த அறை முழுவதும் ஒரு ஆழமான அமைதி பரவ… அடுத்த கணமே, அந்த வாய்ஸ் நோட் பிளே ஆகத் தொடங்கியது.

அந்த வாய்ஸ் நோட்டில் இருந்த ஒரு ஆணின் குரல் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்தது…

“மிஸ்டர் ஆதித்த கரிகாலன்… ஒரு வருஷம் முழுசா உனக்கு டைம் குடுத்தும் உன்னால எதையும் கண்டுபிடிக்கவும் முடியல… இன்னைக்கு நடந்த கொலைய தடுத்தும் நிறுத்தவும் முடியல பார்த்தியா…

ச்ச்ச்… ச்ச்… பாவம்… நீயும் என்னதான் பண்ணுவ… என்ன இருந்தாலும் நீ உன் மேல் அதிகாரி சொல்றதத்தான் கேட்கணும் இல்லையா…

சரி விடு… ஆமா, இப்போ நான் எதுக்கு உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்…

ஆன்… ஞாபகம் வந்துடுச்சு…

இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இந்த கொலையும் கடத்தலும் இதோட நின்னுரும்னு நினைக்காத.

உன்னால முடிஞ்சா… அடுத்து நடக்கப்போற கொலையையும் கடத்தலையும் தடுத்து நிறுத்திப் பாக்கலாம்.

ம்ம்ம்… இது என்னோட அடுத்த சவால் தான்… லெட்ஸ் ட்ரை யுவர் பெஸ்ட்.” என்றதோடு அந்த வாய்ஸ் நோட் திடீரென முடிந்தது.

ஒரு நொடி… அந்த அறையில் மீண்டும் அதே ஆழமான அமைதி ஆக்கிரமிக்க… 

அடுத்த கணமே… அந்த திரை கருப்பாக மாறியது.

வேற ஏதேனும் இருக்கிறதா என்று தேட முயற்சித்தவர்களுக்கு, ஏற்கனவே இருந்த அந்த மூன்று போல்டர்களும் இருந்த இடமே தெரியாமல் முற்றிலும் அழிந்திருந்தது…

அந்த கணமே அறையில் ஒரு குழப்பமான சூழ்நிலை பரவியது.

மீண்டும் அந்த பென் டிரைவை எடுத்துக் கணினியில் சொருகினான். ஆனால் திரையில் எதுவும் தோன்றவில்லை…

அந்த பென் டிரைவே மொத்தமும் துடைத்து எடுத்தது போல காலியாக இருந்தது. அந்த நொடி, என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் புரியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

 

 

                                          தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page