நினைவு -18

“நான் இசைய டிவோர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்டா!” என்றவனின் பதிலில், அதிர்ச்சியில் உறைந்தான் அவன்…

கண்கள் அகல விரிய, அது அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தது…

‘எப்படி… எப்படி இவனால் இப்படி பேச முடிகிறது?’ அந்த ஒரு கேள்வியே அவன் மனம் முழுக்க பரவியிருந்தது…

கோபம் மூளையை மலுங்கச் செய்ய, அடிக்க பரபரத்த கையை அடக்குவதற்கே பெரும் பாடாய் போனது அவனுக்கு…

“நான் கூட உன்னை செருப்பால் அடிக்கலாம்னு இருக்கேன்டா!” என்றவன் கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டும், சத்தியமாக கோபத்தை அடக்க முடியவில்லை…

கோபத்தை அடக்க அங்கும் இங்கும் அலைந்து திரிந்தவன்…

“இது மட்டும் பொது இடமா இல்லாம இருந்துச்சுன்னா… நீ சொன்ன வார்த்தைக்கே மூஞ்ச பேத்துருப்பேண்டா…” என்றவன் முகபாவனை, ‘நிச்சயமா செய்வேன்’ என்பதுபோலவே இருந்தது…

“கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு நாள் கூட ஆகல… அதுக்குள்ள டிவோர்ஸ் பண்றேன்னு சொல்லிட்டு வந்து நிக்குற… இப்போ உனக்கு என்னதான்டா பிரச்சனை?!” அவன் முன்பு வந்து நின்றவன் பல்லைக் கடித்துக் கேட்க…

“என்னால அவ கஷ்டப்படுறத பாக்க முடியல மச்சான்…” என்றவனின் குரலில் இருந்த வேதனை, கற்பாறையையும் கரைய வைப்பதாய் இருந்தது…

“அதுக்காக… நீ கஷ்டப்படலாம்னு முடிவு பண்ணிட்டியா… டேய், புரிஞ்சுக்கோடா… வாழ்க்கையில சில விஷயங்கள் கற்பனைல கூட நமக்கு கிடைக்காதுனு நினைச்சிட்டிருப்போம்… ஆனா, அது நிஜத்துல கிடைக்கும்போது, அதை எப்படி காப்பாத்தணும்னுதான் யோசிக்கணுமே தவிர… தொலைக்க கூடாதுடா…” என்றவனுக்கு கோபம் இருந்தாலும், அதைவிட நண்பனை நினைத்து அதிகம் கவலைதான் இருந்தது…

“அதுமட்டுமில்ல…” என்றவன் ஏதோ சொல்ல வருவதற்குள்…

“அகிலா!” என்ற குரல் அவர்கள் இருவரையும் ஒருசேர திரும்பிப் பார்க்க வைத்தது…

இரண்டு கைகளிலும் இரண்டு ட்ராலிகளுடன், மூச்சு வாங்க நின்றுக்கொண்டிருந்தாள் அவள்.

அவள் முகமோ செவ்வானமாய் சிவந்திருக்க… அது கோபத்தினால்தான் என்பதை தெளிவாக உணர முடிந்தது…

“மதி… என்னமா, என்னாச்சு? ஆமா, இவ்வளோ நேரம் எங்க இருந்தடா தங்கம்?” அவளை பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்தவன், அவனின் அருகில் இருந்தவனிடம்…

“என்னடா மாமா, உன் தங்கச்சி கண்ணுலயே எரிமலையை கக்கிட்டு நிக்குறா?!” என்றவன், தொண்டைக்குழியில் எச்சிலை கூட்டி விழுங்கினான்.

“எரிமலையோ பனிமழையோ, அத நீதான் மச்சான் பாத்துக்கணும்,” என்றவன் ‘மச்சான்’ என்பதில் மட்டும் அழுத்திக் கூறிவிட்டு…

“சரிடா மதி! அண்ணாக்கு டூட்டிக்கு டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்,” என்றவன், அவனிடம் திரும்பி, “பாத்துக்க மச்சான், நான் கிளம்புறேன்,” என்றவனாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல…

போகும் அவனையே விழி அகல விரிய பார்த்திருந்தவனின் மனதில், ‘துரோகம் துரோகம்’ என்ற சாங் பேக்ரௌண்டில் ஓடிக்கொண்டிருந்தது…

அதே மாடுலேசனில், இவள் புறம் திரும்பியவனை பார்த்து,

“என் பின்னாடி வந்தா செருப்பு பிஞ்சிரும்,” என்றவள் அங்கிருந்து விருவிருவென நடக்கத் தொடங்க…

“பிஞ்சாலும் நான் தச்சு போட்டு விடுறேன், மதிமா,” என்றவன், அவள் பின்னாலே கெஞ்சிக்கொண்டு ஓடினான்…

 

_ _ _ _ _ _ _ _ _ _ _

 

கண்களில் கருமணிகள் உருள, மெதுவாக விழிகளைத் திறந்தாள் அவள்…

நீல வானம் தெரியும் என்று எதிர்பார்த்த அந்த பார்வைக்கு, பதிலாக செவ்வானம் மட்டும் விரிந்திருந்தது.

அடர்ந்த சிகப்பு நிறம்…

யாரோ ரத்தத்தை எடுத்து வானமெங்கும் தெளித்ததுபோல்… அந்த ஆகாயம் முழுவதும் ஒரு அசாதாரண சிவப்பில் மூழ்கியிருந்தது.

அதிர்ச்சியில் அவள் கண்கள் பெரிதாக விரிய, ஒரு நொடிக்கு, “இது நிஜமா?” என்ற கேள்வியுடன் கண்களை இறுக்கமாக மூடி, மீண்டும் திறந்தாள்…

ஆனால்…

மீண்டும் பார்த்தபோதும் அதே சிகப்பு… அதே பயமூட்டும் வானம் மட்டுமே அவள் விழிகளுக்கு தெரிந்தது.

குழப்ப ரேகைகள் முகத்தில் தெளிவாகப் படர, மெதுவாக எழுந்து அமர்ந்தாள் அவள்…

அவள் முகத்தில் அதிர்ச்சியின் அலைகள் அசுரத்தனமாக சுழற்றி அடிக்க, கண் முன்னே விரிந்த காட்சிகள் அவளை வாயடைத்துப் போக வைத்தன…

“எப்படி… எப்படி இது சாத்தியம்…?” என்றவளுக்கு, கண் முன்னே தெரிந்த அந்தக் காட்சிகளை சத்தியமாக நம்பவே முடியவில்லை…

முழுவதும் இருளில் மூழ்கியிருந்த அந்த இடத்தில், நிலவின் ஒளி மட்டுமே மெதுவாக வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது…

ஆனால்… அந்த ஒளியும் சிகப்பு நிறத்தில் இருந்ததுதான் அதிசயம்…

அதே நேரம், ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த நிலவும், இதய வடிவத்தில், அடர் சிகப்பு நிறத்தில் காட்சியளித்தது…

ஆளை அச்சுறுத்தும் அமைதி அங்கே நிலவ, காற்று துளிக்கூட அங்கே வீசவில்லை…

ஆம்… கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெட்ட வெளியாய் விரிந்திருந்த அந்த இடத்தில், ஒரே ஒரு மரம் மட்டும் தனித்து நின்றுக் கொண்டிருந்தது…

“ராட்சச மரம்” என்று கேள்விப்பட்டவர்களுக்கு, அதன் உண்மைத் தன்மையை உணர்த்தும் வகையில் இருந்தது அந்த மரம்…

அந்த ராட்சச மரத்தின் இலைகளும் இதய வடிவத்தில் சிகப்பு நிறத்தில் காட்சியளிக்க, அங்கே அவளையும் அந்த மரத்தையும் தவிர யாருமே இல்லை…

கண்ணுக்கு தெரியும் தொலைவு வரை நிலவிய அந்த ஆழமான அமைதியும், அங்கே தெரிந்த அசாதாரண காட்சிகளும் அவளுக்குள் ஒரு வினோதமான பயத்தை தோற்றுவித்தன…

“இது என்ன இடம்… நான் எப்படி இங்கே வந்தேன்… இதுல இருந்து எப்படி வெளியே போறது…” என்று யோசித்தவள், வெளியேற வழி ஏதேனும் உள்ளதா என்று கண்களை அலைபாய விட,

அவள் முதுகின் பின்…

ஒரு உயிரை உருக்கும் குரல் கேட்டது…

“மகிழ்!…”

திடீரென செவியை தீண்டிய அந்தக் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள்… இன்னும் இன்னும் பயத்தின் உச்சிக்கே சென்றாள்…

ஆம், கண்கள் மரணக் கலையை பிரதிபலிக்க, உடலோ ஆயிரம் மடங்கு நடுங்க, மூச்சோ சீரின்றி வெளியேற…

கை கால்களோ நடுக்கத்தில் நிலை குலைந்து, எந்த நொடியில் வேண்டுமானாலும் கீழே சரிந்து விழும் நிலையில் இருந்தன…

ஆம்… கண் முன்னால் தெரிந்த அந்தக் காட்சி, உண்மையிலே அவளை நிலைகுலையச் செய்ய, விழி அகலாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்…

அந்தக் காட்சி…

வானளவு கொழுந்து விட்டெழுந்து எரிந்துக் கொண்டிருந்த நெருப்பு வளையங்களால் ஆன மாபெரும் இதய வடிவ நுழைவாயில்…

ஆம்… நீங்கள் நினைப்பது சரியே…

அது… காதல் உலகத்தின் நுழைவாயில்தான்…

காதல் உலகத்தின் அந்த நுழைவாயில் அவள் விழிகளில் தெளிவாக விழ, அவள் அந்த காதல் உலகத்தின் உள்ளேதான் இருக்கிறாள் என்று யாரும் சொல்லாமலே தெளிவாக விளங்கியது…

வெளியேறுவதற்கான வழி கிடைத்திருந்தாலும், எரிந்துக் கொண்டிருந்த அக்னி ஜ்வாலைகள் அவளை ஒரு கணம் தயங்க வைத்தன…

என்ன செய்வதென்று புரியாமல், கண்கள் அலைபாய நின்றிருந்தாள் அவள்…

“மகிழ்!…”

மீண்டும் அதே உயிரை உருக்கும் குரல்… அந்த நுழைவாயிலின் திசையிலிருந்து அவள் செவிகளை தீண்டியது…

கண்கள் இரண்டும் தானாக கலங்கிட, நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வலியோடு…மெதுவாக விழிகளை நிமிர்த்தி எதிரே பார்த்தாள்…

அந்த நுழைவாயில்…

ஆம், அதே நுழைவாயில்தான்…

அந்த நுழைவாயிலின் எதிர்ப் பக்கம், ஒரு இளைஞன் அவளை நோக்கி ஒரு கையை நீட்டியவாறு நின்றிருந்தான்…

கண்களில் தண்ணீர் தாரைதாரையாக வழிய, இவளை பார்த்தவாறு நின்றிருந்தவன்…

“உன் யாழாவ எப்படியாவது காப்பாத்து, மகிழ்!…” என்றான்.

அவனின் அந்த வார்த்தை… ஆம், அந்த ஒரு வார்த்தை அவளின் இதயத்தை நேராக தாக்கியது போல இருந்தது…

“எப்படி… எப்படி இதை கையாளுவது?” சத்தியமாக அவளுக்கு விளங்கவில்லை…

எப்படியாவது அவனை காப்பாற்றிவிடச் சொல்லி அவளின் இதயம் பரிதவிக்க… அது எப்படி என்று புரியாமல் விழி பிதுங்க நின்றிருந்தாள் அவள்…

“மகிழ்!…”

மீண்டும் அதே குரல்…

ஆனால் இப்போது ஒரு பயம் கலந்த அலறலாக வெளிப்பட்டது…

கைகளால் காதுகளை இறுக்கிக் கொண்டவள், அப்படியே மடங்கி அமர்ந்தாள்…

கண்களில் தண்ணீர் தன்னிச்சையாக வழிய, அதற்கான காரணம் புரியாமல் தடுமாறியவள்…

மீண்டும் விழிகளை நிமிர்த்தி எதிரே பார்க்க, கண் முன்னே தெரிந்த காட்சியில் வெலவெலத்துப் போனாள்…

ஆம்… அதுவும் அந்தக் காட்சி…

அவள் உயிரின் ஒவ்வொரு அணுவிலும் பயத்தை ஊடுருவச் செய்தது…

“யாழா!… உன் பின்னாடி!”

என்றவள் அவனை நோக்கி எழுந்துக் கொள்ள முயல, அவளால் ஒரு நுனி அளவுக்கூட அசைய முடியவில்லை…

அவளை எழ விடாமல் ஏதோ ஒரு மாய சக்தி கட்டிப்போட்டதுபோல இருக்க, என்ன நடக்கிறது என்று அவள் சுதாரிக்கும் முன்பே அத   நிகழ்ந்துவிட்டது…

“ஆதி…!”

பெரும் அலறலோடு எழுந்து அமர்ந்தாள் இசை…

மூச்சு சீரின்றி பாய்ந்து… இதயமோ நெஞ்சுக்குள்ளே பிளந்தது போல துடித்தது அவளுக்கு…

மீண்டும்…

அதே கனவு…

கண்களில் கண்ணீர் நிரம்ப, அவள் சில நொடிகள் அப்படியே உறைந்தபடி அமர்ந்திருந்தாள்…

ஏன்…? 

ஏன் இந்த ஒரே கனவு திரும்பத் திரும்ப அவளை துரத்துகிறது…? எவ்வளவு யோசித்தும் பதில் தெரியவில்லை…

சிறுவயதில் தொடங்கிய கனவு…

ஆனால் காலம் செல்ல செல்ல அந்த கனவு… மாறிக் கொண்டே வந்தது…

ஆம்… ஆரம்பத்தில் அந்த கனவு வரும்போது வெறும் காதல் உலகம் மட்டும்தான் இருந்தது…

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கனவு நீண்டு கொண்டே போக, அதற்கான காரணம் தெரியாமல் தவித்தாள் அவள்…

அதே நேரம்…

அந்த கனவில் நடக்கும் நிகழ்வுகள் அவளை அதீத குழப்பத்தில் தள்ளிவிட்டன…

ஆம்…

முதலில் காதல் உலகம் மட்டுமே தெரிந்த அந்த கனவில், நாளாக நாளாக ஒரு உருவம் தெளிவாக ஆரம்பித்தது…

அதுவும் அவன்…

யார் அவன்…?

யாழன்… என்பது அவனின் பெயர் என்பதைத் தவிர, வேறு எதுவும் அவனைப் பற்றி தெரியாது…

எவ்வளவு யோசித்தும், எவ்வளவு முயற்சித்தும், அவனைப் பற்றிய நுனி அளவு தகவல்கூட கிடைக்கவில்லை…

ஏதோ ஒரு அந்நியன் என்று அந்த கனவை சாதாரணமாக விட்டொழிக்கவும் முடியவில்லை…

ஆம்… அவனின் அந்த உயிரைத் தொடும் குரல்… அதை சத்தியமாக அந்நியமென்று எண்ணிவிட முடியவில்லை…

நாட்கள் கடந்து போக… அந்த கனவும் நீளத் தொடங்கியது…

அதுவும் சில நாட்கள்,

கண்களில் கண்ணீரோடு, கைகளை அவளை நோக்கி நீட்டியபடி, ஏதோ சொல்ல முயன்றான்…

ஆனால்… ஒவ்வொரு முறையும் அந்த நொடியில் அந்த கனவு அதே நேரத்தில் முடிவை எட்டிவிடும்…

இப்படியே செல்ல, இன்னும் கொஞ்ச நாட்களில் அவனை காப்பாற்றச் சொல்லி இவளிடம் கெஞ்சத் தொடங்கினான்…

ஆனால்…

எதற்காக…?

யாரிடமிருந்து…?

அந்த கேள்விகள் அவளை நாள் தோறும் துரத்த… பதில் எதுவும் இல்லாமல் தத்தளித்தவளுக்கு… அதற்கும் சில நாட்களிலேயே அவளுக்கு விடை கிடைத்தது…

ஆம்…

சில நாட்களுக்கு முன்பு…

அந்த கனவில் ஒரு புதிய நிழல்போலக் கருப்பு உருவம்… அவன் அருகில் தோன்றியது…

முதலில்… அது ஒரு நிழல் மாதிரிதான் இருந்தது…

ஆம்…

உண்மையில், கருப்பை மட்டுமே அடையாளமாக கொண்ட அந்த உருவம், சில நேரங்களில் மனிதனா…? அல்லது… வேறெதுவா…? என்ற சந்தேகத்தை எழுப்பாமல் இல்லை…

ஆனால் ஏதோ ஒரு உந்துதல் அது மனிதன் தான் என்று அவளை நம்பச் செய்வதாய் இருக்க…

அதே நேரம்…

யாழனும்…

அந்த உருவத்தைக் காட்டியே அவளை காப்பாற்றச் சொல்லி கெஞ்ச, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது…

அவன் பயம்… அந்த கருப்பு உருவத்திலிருந்துதான் என்று அவளுக்கு தெளிவாக விளங்கியது…

கடந்த ஆறு மாத காலமாக அந்த ஒரு கனவு மட்டுமே தொடர…

யார் அந்த கருப்பு உருவம் என்ற நீண்டநாள் கேள்விக்கான விடை இன்று கிடைத்துவிட்டது போல்…

இன்று…

மீண்டும் அந்த கனவு அவளுக்கு வந்தது…

ஆம்… அந்த கருப்பு உருவம் துப்பாக்கி முனையில் அவனை நிறுத்தி வைத்திருக்க…

இவ்வளவு நாள் யார் என்று தெரியாமல் தவித்ததே பரவாயில்லை எனும் விதமாக…

அந்த இருளில் மூழ்கியிருந்த முகத்தின் திரை மெல்ல மெல்ல விலக… 

அடுத்த நொடி… இசையவளின் மூச்சு நின்றது…

அது…

ஆதி.

 

 

                          

                                                தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page